அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

யுத்த நிறுத்தம் குறித்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை : ரவி சங்கர் தெரிவிப்பு

sri_sri_ravi_shanka.jpgயுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவது குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதாக வாழும் கலைப் பயிற்சி நிலையத்தின் ஸ்தாபகத் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை மேற்கோள்காட்டி அந்த அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சமாதான முன்னெடுப்புக்களுக்கு ஆதரவளிக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் ஸ்ரீ ரவிசங்கரிடம் விடுத்த வேண்டுகோளை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வன்னியில் அப்பாவிப் பொதுமக்கள் பெரும் அவலங்களை எதிர்நோக்கி வருவதாகவும், உடனடியாக யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் சமாதான முன்னெடுப்புக்களை ஆரம்பிக்க முடியும் எனவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், ஸ்ரீ ரவிசங்கரிடம் தொலைபேசி மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். சமாதான முன்னெடுப்புக்களுக்கு மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என ஸ்ரீ ரவிசங்கர் ஏற்கனவே அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அமைப்பின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இடம்பெயர்ந்து அல்லலுறும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா போதியளவு உதவிகளை வழங்கவில்லை என ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குற்றம் சுமத்தியுள்ளார்.

“கொலையாளிகளிடம் கெஞ்சி மன்றாடிய போதும் தினுஷிகா கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டுள்ளாள்’

thinu.jpg“மாணவி தினுஷிகா கடத்தல்காரர்களின் கால்களில் விழுந்து மன்றாடி கெஞ்சிய போதும் அவர்கள் சிறுமியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்கள் என்பது விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்தக் கொடூரச் சம்பவத்தை ஒருபோதும் மன்னிக்க முடியாது’ என்று கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிசன் குணதிலக தெரிவித்துள்ளார். சிறுமியைக் கொலை செய்த மூவரும் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமான சம்பவத்தையடுத்து கல்வியங்காடு பொதுமயானத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை திரண்டிருந்த பொது மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய பிரதிப் பொலிஸ்மா அதிபர்; கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று மாணவியின் சடலம் மீட்கப்பட்ட அன்றே நான் கூறியிருந்தேன். அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பையும் கோரியிருந்தேன். அன்று உங்களுக்கு தந்த வாக்குறுதியை இன்று நிறைவேற்றியுள்ளோம். உங்கள் முன்பு அவர்களை காட்டியுள்ளோம்.

இந்தச் சிறுமி ஆயுததாரிகளுக்கு என்ன செய்தது. அச்சிறுமி அவர்களிடம் என்ன பரிதாபப்பட்டிருக்கும். சிறுமியின் தாய், உறவினர்கள் எவ்வளவு பரிதாபப்பட்டிருப்பார்கள். அந்தச் சிறுமி என்ன குற்றம் செய்தது. தன்னை ஒன்றும் செய்யாதீர்கள் என்று அச்சிறுமி மன்றாடியுள்ளது. அதனையும் பொருட்படுத்தாமல் ஒன்றுமறியாத சிறுமியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.

ஆயுதம் தரித்தவர்கள் பணம் சம்பாதிக்க இவ்வாறான கொடூரச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். பொதுமக்களாகிய நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள். நாங்கள் உங்களுக்கு பாதுகாப்பு வழங்குவோம் என்றார். பொலிஸார் இக்கொலைக்காரர்களைப் பிடித்ததற்கு பொதுமக்களும் பாராட்டுத் தெரிவித்தனர்.

பாதுகாப்பு வலயப் பகுதியில் மோதல் தொடர்வது குறித்து ஐ.நா. கவலை – உத்தியோகப்பற்றற்ற அமர்வுக்கு மட்டுமே ரஷ்யா இணக்கம்’

Wanni_War_IDPsஐ.நா. இலங்கையின் மோதல் சூன்யப் பகுதியில் 50 ஆயிரம் பொதுமக்கள் வரை சிக்குண்டிருக்கும் நிலையில் அங்கு இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறுவது குறித்து ஐ.நா. தொடர்ந்தும் கவலை தெரிவித்து வரும் நிலையில், இலங்கை விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புச்சபையின் உத்தியோகப்பற்றற்ற அமர்வுகளுக்கு மட்டுமே ரஷ்யா இணங்கியிருப்பதாக ஐ.நா.விலுள்ள ரஷ்யத்தூதுவரும் இந்த மாதம் பாதுகாப்புச் சபையின் தலைவருமான சேர்க்கின் கூறியுள்ளார்.

நியூயோர்க்கிலுள்ள ஐ.நா.தலைமையகத்தில் நிருபர்களை திங்களன்று சந்தித்த ஐ.நா. வின் பேச்சாளர் மேரி ஒசாவே இலங்கை விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்;

மோதல் வலயத்திற்குள் இருப்போரிடமிருந்து கிடைத்த அறிக்கைகளின் பிரகாரம் மோதல் அதிகரித்திருப்பதாகவும் மென்ரக, கனரக ஆயுதங்களும் பயன்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.

மோதல் வலயத்திலிருந்து 1 இலட்சத்து 88 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர். 1,8600 பேர் முகாம்களில் உள்ளனர் .காயமடைந்த 1700 பேரும் அவர்களை பராமரிப்போரும் ஆஸ்பத்திரிகளில் உள்ளனர். ஏப்ரல் 27 இற்குப் பின்னர் இடம்பெயர்ந்தவர்கள் முகாம்களுக்கு வந்துகொண்டிருப்பதாக அறிக்கை இல்லை. எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதில் தாமதம் ஏற்படுவது கள நிலை யதார்த்தமாக இருக்கலாம் என்றும் மேரி ஒகாபே கூறியுள்ளார்.

இதேவேளை, இன்னர் சிற்றி பிரஸ் ஐ.நா.வின் இந்த மாதத்திற்கான பாதுகாப்புச் சபைத் தலைவர் சேர்க்கினிடம் ஐ.நா. வின் மாதாந்த நிகழ்ச்சி நிரலில் ஏன் இலங்கையின் யுத்தம் குறித்து சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளது. இலங்கை தொடர்பான கூட்டத்தை சபையின் மண்டபத்தில் அல்லது ஆலோசனை அறையில் நடத்துவதற்கு ரஷ்யா ஏன் தடையாக இருக்கின்றது என்பது குறித்து விளக்கமளிக்குமாறு பாதுகாப்பு சபைத் தலைவர் சேர்க்கினிடம் இன்னர் சிற்றி பிரஸ் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த சேர்க்கின், ஐ.நா.வின் அடித்தளத்தில் உத்தியோகப்பற்றற்ற கூட்டங்களுக்கு ரஷ்யா இணங்கியிருந்ததாக அவர் கூறியுள்ளார்.

இலங்கை அரசு கடுமையானதும் கடினமானதுமான பகைவருடன் சண்டையிடுவதாகவும், (அந்த எதிரி) பயங்கரவாத அமைப்பென பல தரப்புகளால் உத்தியோக பூர்வமாக வகைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார். மத்திய கிழக்கிலும் சிலர் இவ்வாறு வர்ணிக்கப்படுகிறார்களே அது எவ்வாறு? என்று இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இருளினைத் துடைத்தெழுந்த உதயதாரகை போல உங்களின் தனித் தமிழீழ அறிவிப்பு: – ஜெயலலிதாவுக்கு வாழ்த்து

j-j-j.jpgஈழத் தமிழினத்தின் இழவு நிலை கண்டு உலகத் தமிழினம் கையறு நிலையில் பரிதவித்தவேளை இருளினைத் துடைத்தெழுந்த உதயதாரகை போல உங்களின் தனித்தமிழீழ அறிவிப்பு வெளிவந்தது எம்மையெல்லாம் மெய்சிலிர்க்க வைத்தது என்று ஜெலலிதாவுக்கு அமெரிக்காவில் இருந்து வடகரலைனா மக்களின் அமைதிகாண் அமைப்பு தெரிவித்துள்ளது.

புலிகளின் சிங்கள கலாசார மொழிப் பயிற்சி நிலையம் படையினரால் கண்டுபிடிப்பு

sinhala_class_vauniya.jpg புலிகளினால் நிர்வகிக்கப்பட்டுவந்த சிங்கள காலாச்சார மற்றும் மொழி பயிற்சி நிலையம் புதுக்குடியிருப்பின் கிழக்கே அடர்ந்த காட்டுப் பகுதியினுள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. 57 ஆம் படையணியினர் மேற்கொண்ட தேடுதலின் போது இந்த மொழிப் பயிற்சி நிலையம் தொடர்பான பல விடயங்கள் வெளிவந்துள்ளன.

புலிகளின் தற்கொலைதாரிகள் மற்றும் புலனாய்வுத் துறையினருக்கு மொழி மற்றும் சிங்கள மக்களது காலாச்சாரங்கள் தொடர்பான பயிற்சிகளை வழங்குவதற்கு இந்நிலையம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

பங்களாதேஷ் உருவான வரலாறு ஜெயலலிதாவுக்குத் தெரியாது – பி. சிதம்பரம்

chitambaram.jpg
பங்களாதேஷ் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்ற வரலாறு ஜெயலலிதாவுக்குத் தெரியாது. 1971 ஆம் ஆண்டு   பங்களாதேஷ் உருவாக்கப்படுவதற்கு வழிவகுத்த சூழ்நிலைபற்றி ஜெயலலிதா படித்துப்பார்க்க வேண்டும் என இந்திய உள்துறை அமைச்சர் பி. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
   
பங்களாதேஷ் உருவாக்கத்தின் போது இந்தியா வழங்கிய பங்களிப்பைப் போன்று இலங்கைக்கு படைகளை அனுப்பி தமிழர்களுக்கு மிக நீண்டகாலமாக இருந்துவரும் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் ஒரு தனி ஈழத்தை உருவாக்க வேண்டும் என ஜெயலலிதா குறிப்பிட்டிருப்பது தொடர்பாக வினவப்பட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஜெயலலிதாவுடைய இக்கூற்று முற்றிலும் பொறுப்புணர்வற்றதாகும் என காங்கிரஸ் தெரிவித்திருப்பதாகவும்  அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.

கோயம்புத்தூரில் இடம்பெற்ற இராணுவ தொடரணி மீதான தாக்குதல் சம்பவம் தெடர்பில் அவர் கருத்து வெளியிட்டபோது, இது மிகவும் பாரதூரமான ஒரு செயலாகும். மாநிலத்தில் கடந்த 20 வருடங்களாக தணிந்திருந்த நக்ஸலைட்டுகள் போன்ற வன்முறைக்குழுக்கள் மீண்டும் அவர்களது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். இது ஒரு பாரதூரமான செயல் என்பதை பொதுமக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்; மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் இந்நிகழ்வை மிகுந்த எச்சரிக்கையோடு பார்க்க வேண்டும் என்றார்.

பெரியார் திராவிடக்கழகம் போன்ற அமைப்புகளைத் தடைசெய்ய வேண்டுமா? என கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதில் அளித்த அவர்,  நான் உள்துறை அமைச்சர் என்றவகையில் அது தொடர்பாக கருத்துக்கூற விரும்பவில்லை. என்றாலும் ஒரு பொறுப்புணர்வுள்ள குடிமகன் என்றவகையிலும் ஒரு அரசியல் கட்சியின் உறுப்ப்னர் என்றவகையிலும் இது ஒரு பாரதூரமான விடயம் என மக்களை எச்சரிக்கின்றேன் என்றார்.

இலங்கையில் யுத்தநிறுத்தமொன்றை ஏற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசாங்கம் தவறிவிட்டது என எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் விமர்சனம் குறித்து வினவப்பட்டபோது, ஒரு நாடு அதன் அயல் நாட்டில் ஒரு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக எடுக்க முடியுமான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பணிப்பாளர் கொழும்பு செல்ல தடை

அமெரிக்காவின் நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு செயற்படும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் (Human Rights Watch) ஆசிய பசிபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் கலாநிதி அனா நெய்ஸ்டற் (Anna Neistat ) சிறிலங்கா செல்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்திருப்பதாக கொழும்பில் இருந்து வெளியாகும் பிரபல சிங்கள நாளேடான ‘திவயின’ இன்று புதன்கிழமை செய்தி வெளியிட்டிருக்கின்றது.

குளவி கொட்டி 72 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில்

sri-lankan-schools.jpgரத்தெல்ல பொதுகுள் விகாரையில் குளவி கொட்டி காயமடைந்த இரத்மலானை புனித அலோசியஸ் கல்லூரியின் மாணவர்கள் 72 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை வருமாறு ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்துக்கு ஜனாதிபதி அழைப்பு

ban_ki-moon_.jpgஅரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்து சேர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ள வசதிகளை நேரில் கண்டுகொள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்யவேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். இருவருக்கும் இடையில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்

அவ்வாறு விஜயம் செய்தால் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொது மக்களின் உண்மை நிலையையும் நன்கு புரிந்துகொள்ள முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். 

473 வன்னி குடும்பங்கள் நெல்லியடியில் தங்கவைப்பு

menikfarm.gifவன்னி யிலிருந்து இடம்பெயர்ந்த 473 குடும்பங்களைச் சேர்ந்த 1,250 பேர் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனால் இப்பாடசாலையில் மாணவர்களுக்கு அருகில் உள்ள வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியில் மாலை நேரங்களில் தற்காலிகமாக வகுப்புக்கள் நடைபெறுகின்றன.

நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் தங்கியுள்ள அகதிகளுக்கு யாழ். அரசாங்க அதிபர் உணவை வழங்கிவருகிறார். ஏனைய உதவிகளை யுனிசெப், யூ.என்.எச்.சி.ஆர்., லீட்ஸ் மற்றும் சேவா லங்கா ஆகிய அரசசார்பற்ற நிறுவனங்கள் செய்துவருகின்றன.

இதேவேளை, இங்கு தங்கியுள்ள சிறுவர்கள், குழந்தைகளுக்கு இராணுவத்தினர் உடுபுடவைகள் வழங்கியுள்ளனர். இங்குள்ள அகதிகளை வெளியார் எவரும் பார்வையிட அனுமதி வழங்கப்படவில்லை.