அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

சுதந்திர ஊடக இயக்கத்தின் செயலாளர் போத்தல கடத்தப்பட்டுத் தாக்குதல்

33222.jpgஊடகவிய லாளரும், சுதந்திர ஊடக இயக்கத்தின் செயலாளருமான போத்தல ஜெயந்த இனந்தெரியாதவர்களினால் நேற்று கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளை வானில் வந்த சிலரே இவரைக் கடத்திச்சென்று அவரது தலைமுடி, தாடியை வெட்டி கடுமையாகத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலில் கடும் காயங்களுக்கு இலக்கான இவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவரச சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடமையை முடித்துக்கொண்டு நுகேகொடைக்குச் சென்றுகொண்டிருந்த போதே, வெள்ளை வானில் வந்த அறுவர் அவரைக் கடத்தி கண்களை கறுப்புத் துணியினால் கட்டியதுடன் அவரது தலை முடி, தாடியை வெட்டி கடுமையாகத் தாக்கியுள்ளனர். வெட்டப்பட்ட முடிகளை அவரது காற்சட்டைப் பைக்குள் திணித்து நீண்ட தூரத்திற்கு அப்பால் அவரை இறக்கிவிட்டுச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மார்பு, தலை, கால்களில் காயங்களுக்கு இலக்கான இவர் சுயநினைவுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆறு பேர் கொண்ட குழுவினரே தன்னைக் கடத்திச் சென்று தாக்கியதாகவும், பின்னர் கோத்தட்டுவைப் பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டதாகவும் அவர் வைத்தியசாலையின் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவரை அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதித்த வைத்தியர்கள், மேலதிக சிகிச்சைகளை அளித்து வருவதாகவும், அவருக்கு உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய அல்லது நினைவை இழக்கும் வகையிலான எவ்விதமான தாக்குதல்களுக்கும் அவர் இலக்காகவில்லை என்றும், கால்களில் பலத்த காயங்கள் இருப்பதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர். 

காணாமல் போன விமானத்தை தேடும் நடவடிக்கைகள் தொடருகின்றன

01-air-france.jpgகாணாமல் போன  ஏர் பிரான்ஸ் விமானத்தை தேடும் பணியில் பிரேசில் நாட்டு விமானப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.  நாட்டின் தலைநகருக்கு வடகிழக்கே சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஃபெர்ணாண்டோ டெ நொரானோ எனும் தீவிலிருந்து பிரேசிலின் வான்படை விமானங்கள் இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இந்த விமானம் அட்லாண்டிக் பெருங்கடலை பெருமளவில் கடந்த நிலையில் காணாமல் போயுள்ளதால், இந்தத் தேடுதல் பெரும் பகுதியை உள்ளடக்கியதாக இருக்கும் என்று பிரேசிலிலுள்ள பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார். காணாமல் போன விமானத்ததை தேடும் நடவடிக்கையில் செனிகல் நாட்டிலிருந்து பிரெஞ்சு இராணுவத்தின் வேவு பார்க்கும் விமானம் ஒன்று ஈடுபட்டுள்ளது.

வடபகுதி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் கையளிப்பு

students1.jpg‘வடக்கு வசந்தம்’ திட்டத்தின் கீழ் இடம்பெயர்ந்த வடபகுதி மாணவர்களுக்கு 46 மில்லியன் ரூபா பெறுமதியான பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் உத்தியோகபூர்வ வைபவம் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தலைமையில் இன்று (2) கல்வி அமைச்சில் நடைபெறவிருக்கிறது. இதன் போது வவுனியாவில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்காக சேகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள்,

மேலதிக புத்தகங்கள், சீருடைகள், கல்வி உபகரணங்கள், மேசை, கதிரை மற்றும் உணவு வகைகள் என்பவற்றை கல்வி அதிகாரிகள் அமைச்சரிடம் கையளிக்க உள்ளனர். மேற்படி பொருட்கள் 25 லொறிகளில் வவுனியா நலன்புரி கிராமங்களுக்கு அனுப்பப்பட உள்ளதோடு அவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நலன்புரிக் கிராமங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு கையளிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு கூறியது.

இதனையொட்டி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த அடங்கலான குழுவினர் வவுனியாவுக்கு விஜயம் செய்ய உள்ளனர். இடம்பெயர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தேவைகள் குறித்து ஆராய கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார இருவாரங்களுக்கு முன் வவுனியா சென்றிருந்தார். இதன் போது மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க உடனடியாக தேவைப்படும் உபகரணங்கள் குறித்து ஆராயப்பட்டது. இதன்படி 25 ஆயிரம் சீருடைகள், 500 மேசைகள், 1500 கதிரைகள், 5 இலட்சம் பாடநூல்கள் உள்ளிட்ட உபகரணங்கள் 5 ஆம் திகதி பகிர்ந்தளிக்கப்பட உள்ளன.

இதேவேளை 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தரப்பரீட்சை என்பவற்றுக்கு தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சைக்கு தயாராவதற்கான விசேட வகுப்புகளும் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளன. பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் இதற்காக நியமிக்கப்பட உள்ளனர்.

வவுனியா – யாழ் ரயில் பாதை நிர்மாண பணியை 2010 இல் பூர்த்தி செய்ய திட்டம்

sri-lankan-railway.jpgவவுனி யாவில் இருந்து யாழ்ப்பாணம் வரையான 159 கிலோ மீட்டர் ரயில் பாதையை நிர்மாணிக்கும் பணிகள் 2010 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. இதற்கு 14 பில்லியன் ரூபா செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

வடக்கிற்கான ரயில் பாதையையும் ரயில் நிலையங்களையும் அமைக்க நிதியமொன்று அமைக்கப்பட்டுள்ளதோடு இதற்கு சகல மக்களும் தமது பங்களிப்பை வழங்குமாறு அமைச்சர் டளஸ் அலஹப்பெரும கோரியுள்ளார். வடக்கு வசந்தம் திட்டத்தின் ஆரம்பிக்கப்பட்டுள்ள உதுருமிதுரு திட்டத்தினூடாக வடபகுதிக்கான ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்பட உள்ளது. இதன் முதற்கட்டமாக எதிர்வரும் 6 ஆம் திகதி வவுனியாவில் இருந்து தாண்டிக்குளம் வரை ரயில் சேவை இடம்பெற உள்ளது.

வடக்கிலுள்ள உறவினர் வீடுகளுக்கு ரயிலில் பயணம் செய்ய கனவுகானும் மக்களின் கனவு அடுத்த வருடம் நனவாகும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டளஸ் அலஹப்பெரும 2010ல் ரயில் பாதை நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்ய உத்தேசித்துள்ளதாகக் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து யாழ்தேவி ரயிலில் கொழும்பு வர எதிர்பார்க்கும் தமிழ் மக்களின் கனவும் விரைவில் நிறைவடையும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். வவுனியாவில் இருந்து வடக்கு வரையான ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்களில் சிலவற்றை நிர்மாணிக்கும் பொறுப்பை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மக்கள் ஏற்றுள்ளதோடு வேறு சில அரச நிறுவனங்கள் கட்சிகள் என்பனவும் இந்தப் பணிக்கு தமது பங்களிப்பை வழங்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தப்பிச்செல்ல முற்பட்ட கைதிகள் மீது சூடு

Gun 01நீதிமன்றத் திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற மூன்று கைதிகள் மீது சிறைச்சாலை காவலர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின் போது மூன்றாவது நபர் மடக்கிப் பிடிக்கப்பட்டார். என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர நேற்றுத் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை, மோசடி சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகைச் சேர்ந்த மூவரே இவ்வாறு தப்பிச் செல்ல முயன்றவர்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

விசாரணைகள் முடிந்து மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்வதற்காக சிறைச்சாலை பஸ் வண்டியை அண்மித்த போது காவலர்களை தள்ளிவிட்டுத் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். உடனடியாக அவர்களை தடுத்த சிறைக்காவலர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் மோதரை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய கே. டபிள்யூ. சிசிரகுமார என்பவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். காலில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எஸ். எஸ். பி. மேலும் தெரிவித்தார்.

பொட்டம்மான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பரவிவரும் `செய்தி` உண்மையில்லை : இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்கா

fonseka-000.jpgபுலிகளின் புலனாய்வு பிரிவு பொறுப்பாளர் பொட்டம்மான், அதன் இரண்டாம் நிலை பொறுப்பாளர் கபில் அம்மான் ஆகியோர் இராணுவப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பரவிவரும் `செய்திகளில்` எந்த உண்மையில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பணியாற்றிய போருட் தொண்டு நிறுவன தலைவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்

01forut.jpgஇலங் கையில் பணியாற்றிய நோர்வேயைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான ‘போரூட்’ என்ற நிறுவனத்தின் தலைவர் ரான்வி டிவிட்டின்ஸ் நாடு கடத்தப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்ததன் மூலம் இலங்கையில் இறைமைக்கு குந்தகம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ரான்வி வெட்டேனஸ் என்ற இந்த நோர்வே பிரஜை நாடு கடத்தப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கிடைக்கப் பெற்ற யுத்த வெற்றியை கொண்டாடும் வகையில் குறித்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பறக்க விடப்பட்டிருந்த தேசிய கொடியை அகற்றுமாறு ரான்வி கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன். இலங்கை ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்ட இராணுவ வெற்றியை குறிக்கும் விடுமுறை தினத்தில் போருட் நிறுவன பணியாளர்களுக்கு விடுமுறை வழங்க ரான்வி வெட்டேனஸ் மறுப்பு தெரிவித்தார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

வன்முறையற்ற வழியில் போராட விடுதலைப் புலிகள் உறுதி : செ.பத்மநாதன்

Selvarasa_Pathmanathan_LTTEகள யதார்த்தத்தின் அடிப்படையிலும், மாற்றமடைந்து வரும் உலக அரசியல் ஒழுங்கினை கருத்திற்கொண்டும் துப்பாக்கிகளை மௌனிக்கச் செய்து வன்முறையற்ற வழிகள் ஊடாக போராட தமிழீழ விடுதலைப் புலிகள் உறுதி பூண்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “சிறிலங்கா அரசாங்கமும் அதன் சிங்கள இராணுவ இயந்திரமும் தமிழீழ மக்கள் மீது ஏற்படுத்தியுள்ள மனிதப் பேரவலம் சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்களை அவர்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் இருந்து நிர்க்கதியாக்கி இடம்பெயர்த்து அனைத்துலகத்தின் கண்காணிப்புக்கு அப்பால் சிங்கள இராணுவத்தின் தடுப்பு முகாம்களுக்குள் தனிமைப்படுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை (27.05.09) நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணைக்குழு வன்னியில் இடம்பெற்ற தமிழ் மக்கள் மீதான படுகொலைகளுக்கு நியாயம் வழங்கத் தவறியமை குறித்து எமது விசனத்தையும் கண்டனத்தையும் தெரிவிக்கின்றோம். இராணுவ மேலாதிக்க நிலையின் ஊடாக தாயகத்து மக்களின் வாழ்வு உரிமையினைப் பறித்த சிறிலங்கா அரசாங்கம், தற்போது இராஜதந்திர வழிமுறைகளைக் கொண்டு உலக அரங்கில் நமது மக்கள்மீது போர்ப் பிரகடனம் செய்துள்ளது.

தனக்கு துணையாக அனைத்துலக சக்திகளுடன் இணைந்து இராஜதந்திர செயற்பாடுகளின் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தகர்த்து எறிவதில் முனைப்பு கொண்டுள்ளது.  அதேவேளையில் தமிழீழ மக்கள் அடைந்துள்ள மனிதப் பேரவலத்தினையும், எதிர்கொண்டுள்ள மனிதாபிமான நெருக்கடிகளையும் முன்வைத்து அனைத்துலகத்திடம் பெருமளவில் வெளிநாட்டு வளங்களையும், உதவிகளையும் திரட்டுவதில் சிறிலங்கா கொள்கையளவில் வெற்றி பெற்றுள்ளது.

அந்த வளங்களைக்கொண்டு புனர்வாழ்வு, புனரமைப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் தமிழ் மக்களின் நலனில் சிங்கள அரசாங்கம் மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாக காட்டி தான் மேற்கொண்ட தமிழ் இன அழிப்பு பழியில் இருந்து தப்பித்துக்கொள்ளவும் வழி தேடுகின்றது. 

மலேசிய இளவரசர் மீது பாலியல் சித்ரவதை புகார்

மலேசிய இளவரசரை மணம் புரிந்த இந்தோனேஷிய மாடல் அழகி, தம்மை இளவரசர் பாலியல் சித்ரவதை செய்ததாக புகார் கூறியுள்ளார். இந்தோனேஷியாவில் பிரபல மாடல் அழகியாக இருந்தவர் மனோகரா ஓடிலியா. அமெரிக்க-இந்தோனேஷிய அழகியான இவரை, மலேசியாவின் கேலன்டான் மாநிலத்தின் இளவரசர் முகமத் பக்ரி, அவரது அழகில் மயங்கி திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், தம்மை திருமணம் செய்ததிலிருந்து தம்மை ஒரு பாலியல் அடிமையாக நடத்தி, சித்ரவதை செய்ததாக தமது கண்வரும், மலேசிய இளவரசருமான பக்ரி மீது ஓடிலியா பரபரப்பான குற்றச்சாற்றை கூறியுள்ளார். திருமணம் ஆன நாளிலிருந்து தம்மை அரண்மனையில் உள்ள படுக்கை அறையில் ஒரு கைதியை போன்று அடைத்து வைத்து, இளவரசர் தம்மை தினம் தோறும் பாலியல் சித்ரவதை செய்து வந்ததாக ஓடிலியா புகார் கூறியுள்ளார்.

தினமும் தம்மை அவதூறாக பேசி, கட்டாய பாலுறவுக்கு உட்படுத்தியதோடு, உடலில் பல இடங்களில் பிளேடை வைத்து கீறி சித்ரவதை செய்து வந்ததாகவும், அத்துடன் தினமும் போதை மருந்து ஊசியையும் போட்டு தம்மை ஒரு பாலியல் அடிமை போன்று நடத்தி வந்ததாகவும் இந்தோனேஷியா தப்பி வந்த ஓடிலியா,ஜகர்த்தாவில் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

தமது கணவரும், அவரது குடும்பத்தினரும் சிங்கப்பூருக்கு சுற்றுலா வந்தபோது தம்மையும் அழைத்து வந்ததாகவும், அப்போது ரகசியமாக சிங்கப்பூர் காவல் துறையினரை தொடர்பு கொண்டு அவர்களது உதவியுடன் தாம் ஜகர்த்தா தப்பி வந்ததாகவும் ஓடிலியா மேலும் கூறினார்.

தாம் இது தொடர்பாக இந்தோனேஷியா தூதரகத்தில் புகார் அளித்தும், அவர்கள் அதில் அலட்சியமாக இருந்ததாகவும் ஓடிலியா குற்றம்சாற்றினார். தமது கணவரிடமிருந்து விவகாரத்துக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக சிங்கப்பூர் காவல் துறையிடம் புகார் அளிக்கப்போவதாகவும் ஓடிலியா மேலும் தெரிவித்தார்.

400 விடுதலைப் புலிகள் ஊடுருவல்-சோனியா, ராகுல் தமிழகம் வர வேண்டாம் என எச்சரிக்கை

01-sonia-rahul.jpgஅகதிகள் என்ற போர்வையில் 300 முதல் 400 விடுதலைப் புலிகள் வரை தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், எனவே சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தமிழகத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறும் மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த கடை நிலைப் போராளிகளே இவ்வாறு ஊடுறுவியிருக்கலாம் எனவும், அகதிகள் முகாம்களில் இவர்கள் அகதிகள் போல தங்கியிருக்கலாம் எனவும் உளவுப் பிரிவு தகவல்கள் கூறுகின்றன. இந்தத் தகவலைத் தொடர்ந்து தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக மாநில கடலோரப் பகுதிகளில் தீவிர உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அகதிகள் போர்வையில் புலிகள் ஊடுறுவியிருப்பதாக கூறப்படுவதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அகதிகள் முகாம்களில் போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். முகாம்களில் சந்தேகத்திற்கு இடமான வகையில் யாரேனும் நடமாடுகிறார்களா என்பதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சந்தேகப்படும்படியான நடவடிக்கைகளைக் கொண்டவர்கள் பலத்த பாதுகாப்புடன் உள்ள முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர். மற்றவர்கள் மட்டுமே திறந்த வெளி முகாம்களில் தங்க அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையற்ற நிலை காரணமாக, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் இப்போதைக்கு தமிழகத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறும் உளவுப் பிரிவு அதிகாரிகள் அவர்களை எச்சரித்துள்ளனராம்.