அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

13 மாவட்டங்களில் தீவிரம்; 146 பலி; 11,589 பாதிப்பு

dengu_1.gifநாட்டின் 13 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்ப ட்டு வருவதுடன் புதிதாக டெஙகு உற்பத்தியாகும் இடங்கள் இனங்காணப்பட்டு சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அதேவேளை, டெங்குக் காய்ச்சலினால் பலியானோரின் எண்ணிக்கை 146 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 11,589 பேர் பாதி க்கப்பட்டுள்ளதாக சுகாதர அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு உயரதிகாரியொருவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் :-

நாடளாவிய 13 மாவட்டங்களின் கீழுள்ள 68 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்ளூராட்சிச் சபைகளின் பங்களிப்புடன் பிரதேசங்கள் தோறும் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் தொடர்ச்சியாக டெங்கு நுளம்பு உற்பத்தி இடங்களை இனங்கண்டு அழித்து வருகின்றன. இதற்கென அப்பகுதிகளின் பொலிஸாரின் ஒத்துழைப்பும் பெறப்பட்டு இந்நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருவதாகவும் அவ்வதிகாரி தெரிவித்தார்.

டெங்கு ஒழிப்புத் தொடர்பாக நாடளாவிய ரீதியில் பல்வேறு செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் சகல மட்டங்களிலும் டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இந்திய அகதி முகாம்களிலுள்ள இலங்கையர்களை மீள் அழைக்க பா.ம. தெரிவுக்குழு பரிந்துரை

parliament-of-sri-lanka.jpgஇந்திய அகதி முகாம்களில் உள்ள இலங்கையர்களைத் திருப்பி அழைத்து, அவர்களை மூன்று மாத காலத்திற்குள் மீளக் குடியமர்த்த வேண்டுமென- அந்த விடயம் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக் குழு பரிந்துரைத்துள்ளது. திருப்பி அழைக்கப்படுவோரை விரைவாக அவர்களின் சொந்த வாழ் விடங்களில் மீளக்குடியமர்த்தும் வரையில் தற்காலிகமாகத் தங்கவைக்கவென இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்படவேண்டு மென்றும் இந்தக் குழு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அகதி முகாம்களில் உள்ள அகதிகளைத் திருப்பி அழைப்பதற்கும், அவர்களுள் பிரஜாவுரிமை அற்றவர்களுக்கு அதனை வழங்குவதற்குமாக ஆராய்வதற்காக பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலான பாராளுமன்றத் தெரிவுக்குழு அதன் இடைக்கால அறிக்கையை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. குழுவின் தலைவர் சந்திரசேகர் எம்.பி. அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

2008 ஜனவரி மாதம் 8 ஆந் திகதி பாராளுமன்றத்தில் இரண்டு சட்டமூலங்களை நிறைவேற்றியதன் மூலம், அகதி மக்களை மீள அழைத்துக்கொள்வதிலுள்ள சட்டச் சிக்கல் நீங்கியுள்ளதாகவும், முகாம்களிலுள்ள 95 ஆயிரம் பேரில் பிரஜாவுரிமையற்றிருக்கும் 28,500 பேருக்குப் பிரஜாவுரிமை வழங்குவதற்கும் வழியேற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அதுபற்றி பாராளுமன்ற கட்டடத்தில் செய்தியாளர் மாநாடு நடத்தி விளக்கம் அளிக்கப்பட்டது. இதன்படி, திரும்பி வருவோருக்குச் சொந்தமாக நிரந்தர வீடுகளைப் பெற்றுக்கொடுப்பது, தற்காலிகமாகத் தங்குவதற்கு இடைத்தங்கல் முகாம்களை அமைத்தல், கல்வி கற்ற இளைஞர் யுவதிகளுக்குத் தொழில்வாய்ப்பு, தொழில் பயிற்சிகளைப் பெற்றுக்கொடுத்தல், வாழ்வாதாரத்துக்கான ஏற்பாடுகளைச் செய்துகொடுத்தல் போன்ற செயற்பாடுகள் தொடர்பாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவிலிருந்து வருவோருக்குச் சிக்கல் ஏற்படாதவாறு, குடிவரவு, குடியகல்வு சட்டங்களைத் தளர்த்தல், இந்தியாவில் படித்துப் பட்டம் பெற்றவர்களுக்கு உரிய தொழில் வாய்ப்புகளை அளித்தல் உள்ளிட்ட அனைத்துச் செயற்பாடுகளையும் முன்னெடுக்க இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இலங்கையில் பல்வேறு அரச துறைகளையும் சார்ந்த 20 அதிகாரிகளும், இந்தியாவின் 30 அதிகாரிகளும் இணை ந்து அகதிகளின் முகாம்களுக்குச் சென்று நேரடியாகத் தகவல்களைத் திரட்டவேண்டு மென்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் 25 மாவட்டங்களில், 117 அகதி முகாம்களில் 95, 219 இலங்கையர்கள் தங்கியுள்ளனர். இவர்களில் 28, 500 பேர் நாடற்றவர்களாக உள்ளனர். மேலும் ஓர் இலட்சம் இலங்கையர்கள் உறவினர்களின் இல்லங்களில் தங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்குவதற்காக பாராளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில், குழுவின் ஏனைய உறுப்பினர்களான அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, பாராளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் ஜயலத் ஜயவர்தன, பிமல் ரட்னாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நிவாரணக் கிராமங்களுக்கு ஐ.ஓ.எம். உதவி

வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள வர்களின் அடிப்படைத் தேவைகளுக்கு உதவ புலம் பெயர்தலுக்கான சர்வ தேச நிறுவனம் (IOM)  முன்வந்துள்ளது. இதற் காக இந்நிறுவனம் ஐந்து (5) தண்ணீர் பெளசர்களை யும் ஐந்து (5) மலசலம் அகற்றும் பவுசர்களையும் வழங்கியுள்ளது.

இவற்றின் பெறுமதி சுமார் ஒரு இலட்சத்து 26 ஆயிரம் அமெரிக்க டொலர்களாகும். கொழும்பிலுள்ள ஐ. ஓ. எம். நிறுவனத்தில் இவற்றைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (23) நடைபெற்றது. இந்த நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி மொஹமட் அப்திகார் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீனிடம் இவற்றை கையளித்தார்.

சர்வதேச கடற்பரப்பில் கப்டன் அலி கப்பல்

ships000.jpgமோதல் களால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களுடன் வந்த கப்டன் அலி (வணங்கா மண்) கப்பல் இந்திய கடற்பரப்புக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து சர்வதேச கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த கப்டன் அலி கப்பலை இலங்கை கடற்படையினர், நிவாரணப் பொருட்களை இறக்காமலேயே திருப்பி அனுப்பியமை குறிப்பிடத்தக்கது. 

இந்தியா சென்றுள்ள பசில் தலைமையிலான குழு உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை!

basil.jpgஇந்தியா விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகள் குழு இந்திய உயரதிகாரிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தே பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயண், வெளிவிவகார செயலாளர் ஷிவ்சங்கர் மேனன். பாதுகாப்புச் செயலாளர் விஜய் சிங் மற்றும் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோருடன் இலங்கைப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர

சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் காலமானார்

சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அப்துல் மஜீத் மொஹமட் மர்லின் யெமனில் காலமானார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

இவர் சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவராக கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் திகதி நிமிக்கப்பட்டார் 71 வயதான இவர் யெமனில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக அங்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த வேளையிலேயே அங்கு மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஸாஹிராக் கல்லூரியன் பழைய மாணவரான இவர் 1966 ஆம் ஆண்டு சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்தார். இஸ்லாமிய அமைப்புக்களில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம ஆகியோர் தூதுவரின் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர். இலங்கையில் நல்லடக்கம் செய்வதற்காக அவரது ஜனாஸாவை இங்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 8 ஆம் திகதி ஊவா மாகாண சபைத் தேர்தல்

uwa_provinces_and_districts.pngஊவா மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் செயலகம் இன்று அறிவித்தது. இத்தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் இறுதித் தினம் இன்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைந்தது. வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கைகள் கடந்த 17ஆம் திகதி ஆரம்பமானது. இதேவேளை,  ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பதுளை மாவட்டத்தில் ஐ.ம.சு.முன்னணி,  ஐ.தே.கட்சி,  ஜே.வி.பி., ஐக்கிய சோசலிஷக் கட்சி,  மலையக மக்கள் முன்னணி,  ஜனசக்தி முன்னணி மற்றும் தேசிய அபிவிருத்தி முன்னணி ஆகிய கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

மொனராகலை மாவட்டத்தில் ஐ.ம.சு.முன்னணி,  ஐ.தே.கட்சி,  ஜே.வி.பி.,  ஐக்கிய சோசலிஷக் கட்சி, சிங்களே மஹா சம்பத பூமிபுத்ர கட்சி, எக்சத் லங்கா மஹா சபாவ,  தேசப்பற்றுள்ள மக்கள் முன்னணி,  இலங்கை முற்போக்கு முன்னணி மற்றும் ஜனசக்தி முன்னணி ஆகிய கட்சிகளும் 5 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

இங்கிலாந்து செல்லும் பாகிஸ்தானியர்களில் மூன்றில் ஒருவரிடம் போலி விசாக்கள்

பாகிஸ் தானில் இருந்து ஆண்டுதோறும் 10 ஆயிரம் பேர் மாணவர் விசாவிலும் ஆயிரக்கணக்கானவர்கள் சுற்றுலா விசாவிலும் பிசினெஸ் விசாவிலும் இங்கிலாந்து செல்கின்றனர். அவர்களில் 3ல் ஒருவர் போலி விசா வைத்து இருக்கிறார்கள் என்று இங்கிலாந்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானியர்களின் விசா விண்ணப்பங்களில் பெரும்பாலானவை நம்பகத்தன்மை இல்லாதவை என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி அனுப்பப்பட்ட அறிக்கை அலட்சியப்படுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

இதை தடுப்பதற்காக அதிக அளவில் சோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. ஊழல் காரணமாக தான் இப்படி மோசடி நடக்கிறது. இதில் ஈடுபடும் அதிகாரிகளை அடையாளம் கண்டு இருக்கிறோம். அவர்களை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என் றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை அமெரிக்க அரசாங்கம் நீடித்துள்ளது.

lttelogo.jpgதமிழீழ விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக பட்டியல் படுத்துவதாக இராஜாங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அமைதி வழிப் போராட்டங்களின் மூலம் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முயற்சி மேற்கொள்வதாக விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள கருத்து பாராட்டுக்குரியதென இராஜாங்கத் திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரி கிரேஜ் சுவில்லியன் தெரிவித்துள்ளார்.
 
எனினும், பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் கண்டிக்கப்பட வேண்டியவை என அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரவேசத்தை உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், புலிகளுக்கு அரசியல் அங்கீகாரம் வழங்குவதற்கு இன்னும் சில காலம் தேவைப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.சீ.சீ. ருவன்டி-20 தொடரில் பங்கேற்ற இலங்கை கிரிக்கெட் அணி நாடு திரும்பியது!

_dilshan_.jpgஐ.சீ.சீ.  ருவன்டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்குபற்றுவதற்காக இங்கிலாந்துக்குச் சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சற்று நேரத்துக்கு முன்னர் நாடு திரும்பினர்.

கட்டுநாயக்க, விமானநிலையத்தில் வந்திறங்கிய குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கை அணி வீரர்களை இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் வரவேற்றனர். ருவன்டி-20தொடரின் இறுதிப் போட்டியில் கடந்த 21ஆம் தகதி பாகிஸ்தானை எதிர்த்தாடிய இலங்கை அணி சம்பியனாகும் வாய்ப்பை இழந்து ரண்ணர்அப் எனும் 2ஆவது ஸ்தானத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.