அருட்சல்வன் வி
அருட்சல்வன் வி
திருகோணமலை நகர சபையின் பதில் தலைவராக கே.செல்வராஜா நேற்று திங்கட்கிழமை காலை பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். திருகோணமலை நகரசபையின் உபதலைவராகப் பணியாற்றிவரும் இவரைப் பதில் தலைவராக கிழக்குமாகாண முதலமைச்சரும் உள்ளூராட்சி அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பணித்திருந்தார்.
நகரசபைத் தலைவராகப் பணிபுரிந்த எஸ்.கௌரிமுகுந்தனை அவர் மீது சுமத்தப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பாக பதவி நீக்கம் செய்து விட்டு, அவர் மீதான ஒழுக்காற்று விசாரணை முடியும் வரை பதில் தலைவராகப் பணிபுரியும் படி உபதலைவரான செல்வராஜாவை முதலமைச்சர் நியமித்தார். அதற்கிணங்கவே உபதலைவர் செல்வராஜா, பதில் தலைவராகப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இன்று மதியம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்கட்சி பிரநிதிகளை அலரிமாளிகை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். ஜக்கிய தேசிய கட்சி சார்பில் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, திஸ்ச அத்தநாயக்க, ஜோசப் மைக்கல் பெரேராவும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தலைவர் ரவூப் ஹக்கீமும் கலந்துரையாடியுள்ளனர்.
லண்டனில் வசிக்கும் இலங்கைத் தமிழ் இளைஞன் ஒருவருடன் பேஸ்புக் மூலம் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட வத்தளைத் தமிழ் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. வத்தளைப் பிரதேத்தைச் சேர்ந்த 16 வயதுப் பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வெள்ளவத்தையில் அமைந்துள்ள பிரபல தமிழ்ப் பாடசாலை ஒன்றில் குறித்த மாணவி 11 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்தார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் தற்போது லண்டனில் வசித்து வருபவருமான 19 வயது இளைஞர் ஒருவருடன் இணையம் ஊடாக காதல் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்ட குறித்த மாணவி இறுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். காதல் தோல்வியில் ஏற்பட்ட விரக்தி நிலைமையே இந்தத் தற்கொலைக்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கட்சி ஆதரவாளர் தீக்குளித்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். கட்சித் தலைமையகத்திற்கு முன்னால் றியன்சீ அல்கம என்ற கட்சியின் ஆதரவாளர் தமக்கு தாமே தீ மூட்டி உயிரை மாய்த்துக் கொண்டிருந்தார்.
மிரிஹான பொலிஸார் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தற்கொலைச் சம்பவம் குறித்து சஜித் பிரேமதாஸவிடம் மிரிஹான பொலிஸார் ஒன்றரை மணித்தியாலம் வாக்கு மூலமொன்றை பதிவு செய்துள்ளனர்.
கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு, கிழக்கிலுள்ள 89 ஆயிரம் விதவைகளுக்காக விசேட மீள் எழுச்சி திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
இந்த திட்டத்தின் முதற் கட்டத்திற்கென 250 மில்லியன் ரூபாய் நிதியை நன் கொடையாக வழங்க இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளதாக சிறுவர் மேம்பாட்டு, மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இது தொடர்பாக இலங்கை க்கும், இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப் பட்டதுடன், இரு நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரம் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்திய அரசின் உதவியுடன் முன்னெடுக்கப்பட இருக்கின்ற இந்த மீள் எழுச்சி திட்டத்தின் முதற்கட்ட செயற்பாடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள் ளதாகவும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வடக்கு, கிழக்கில் மொத்தமாக 89 ஆயிரம் விதவைகள் அடையாளங் காணப்பட்டுள்ள னர். இவர்களில் 49 ஆயிரம் விதவைகள் கிழக்கு மாகாணத்தில் உள்ளனர். 40 ஆயிரம் விதவைகள் வட மாகாணத்திலும் உள்ளனர். இவர்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 25 ஆயிரம் விதவைகள் இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் இதனை மையமாகக் கொண்டே முதற்கட்ட செயற்பாடுகளை மட்டக்களப்பி லிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப் படவுள்ள விதவைகளுக்கு தையல், விவ சாய, கணனி போன்ற துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதுடன் சுயதொழில் ஊக்குவிப்பு முயற்சித் திட்டத்தின் கீழ் ஆடு, மாடு, விவசாய உபகரணங்கள், தையல் இயந்திரங்கள் உட்பட தேவையான உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது என்றார். இந்த மீள் எழுச்சித் திட்டத்தை மேலும் விஸ்தரித்து, சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தும் வகையில் ஆராயும் பொருட்டு அடுத்த மாதம் தான் புதுடில்லி பயணமாகவு ள்ளதாகவும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கண்டி எஸல பெரஹரவின் இறுதி ஊர்வலத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பார்வையிடுவார். பெரஹெர இறுதி ஊர்வலம் நாளை நடைபெறுகிறது. கண்டி எஸல பெரஹர ஆரம்ப காலம் தொட்டு பெரஹரவின் இறுதி ரந்தோலி பெரஹர ஊர்வலத்தை நாட்டின் தலைவர் பார்வையிடுவது சம்பிரதாயமாக இருந்து வருகின்றது.
அதற்கமையவே ஜனாதிபதியும் கண்டியில் அமைக்கப்பட்டுள்ள விசேட மேடையிலிருந்து ஊர்வலத்தை பார்வையிடுவார். ஜனாதிபதியுடன் மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ – மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்கா மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டு ரந்தோலி இறுதி பெரஹர ஊர்வலத்தைப் பார்வையிடுவார்கள்.
வவுனியா நிவாரண கிராமங்களிலிருந்து 689 மாணவர்கள் 5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றினார்கள். வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆறு நிலையங்களில் இவர்களுக்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கு மாணவர்கள் பரீட்சை எழுதுவதையே படத்தில் காண்கிறீர்கள். வட மாகாணத்தில் மொத்தம் 18, 237 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர்.
அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முற்பகுதியில் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்க அரசாங்கம் தயாராகி வருவதாக ஆளுந்தரப்பு வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.எனினும் எவ்வாறான திருத்தங்கள் அரசியலமைப்புக்குக் கொண்டுவரப்படப்போகின்றன என்பது பற்றிய விடயங்கள் தெளிவாகத் தெரியவில்லை என்றும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
எவ்வாறிருப்பினும் அரசியலமைப்புத்திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சில சுற்றுப் பேச்சுகளை நடத்தியிருந்தனர்.அது மட்டுமல்லாது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்கி அதற்குப் பதிலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறையை நடைமுறைக்குக் கொண்டுவரப்போவதாகக் கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில்நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆளுங்கட்சி அறிவித்திருந்தது.
அதுவும் எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பு இருந்தால் இதற்கான அரசியலமைப்புத் திருத்தத்தை இந்த வருடத்திற்குள்ளேயே கொண்டு வந்து விட முடியுமென்றும் அங்கு தெரிவிக்கப்பட்டது.எவ்வாறிருப்பினும் பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் ஆட்சி முறையைக் கொண்டு வருவது பற்றிய பேச்சுகள் தற்போது நிறைவடைந்திருக்கின்றன.
அதுமட்டுமல்லாது அண்மையில் எதிரணியில் இருந்து இரு எம்.பி.க்கள் ஆளுந்தரப்பிற்குத் தாவியதால் அரசாங்கம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அண்மித்திருக்கிறது.இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே அடுத்த மாத முற்பகுதியில் அரசியலமைப்புத் திருத்தத்தை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான முஸ்தீபுகளில் அரசாங்கம் இறங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அரசியலமைப்புத் திருத்தம் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படும் போது அதை நிறைவேற்றிக்கொள்ளத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் திரட்டிக்கொள்வதற்கான முயற்சிகளிலும் அரசாங்கம் இறங்கியிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது.அடுத்த பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகவிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.