அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

ஐ.தே.க. எம்.பி., பாலித ரங்கபண்டாரவை விசாரணைக்கு சி.ஐ.டி.அழைப்பு

ஐக்கிய தேசியக்கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கபண்டாரவை விசாரணைக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் அழைத்துள்ளனர்.

அவரை தொலைபேசியில் தொடர்புகொண்ட குற்றப்புலனாய்வு திணைக்கள பொறுப்பதிகாரி எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு வருமாறு கோரியதாக ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீரவை போன்று வாக்கு மூலங்களை பெறுவதற்கே அழைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மங்கள சமரவீர நேற்று முன்தினம் வியாழக்கிழமை வாக்குப்பெறப்பட்ட அதேவேளை,அவரது கட்சியின் செயலாளர் டிரான் அலஸும் விசாரணைக்காக அழைக்கப்பட்டு வாக்குமூலம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புலிகளின் தலைவராக பத்மநாதனின் நியமனம் முக்கியமற்றதொரு விடயம் – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல

rambukella.jpgவிடு தலைப்புலிகளின் தலைவராக செல்வராசா பத்மநாதன் நியமிக்கப்பட்டிருக்கும் விடயம் முக்கியமற்றதொன்று என்று அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகள் சேகரித்திருந்த பெருந்தொகையான பணத்துக்கு உரிமை கோருவதற்காக தலைமைப்பதவியை குமரன் பத்மநாதன் ஏற்பார் என்பது குறித்து தாங்கள் நன்கு அறிந்திருந்ததாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார். ஆனால், இயங்க முடியாத அளவுக்கு புலிகளின் பயங்கரவாதம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ள நிலையில் பத்மநாதனின் நியமனம் தொடர்பாக அச்சுறுத்தல் குறித்து அரசு அச்சம் கொள்ளவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடை தற்போதும் கடுமையான முறையில் அமுலில் இருப்பதாகவும் ஆங்கிலப் பத்திரிகையொன்றின் இணையத்தளச் சேவைக்கு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று வெள்ளிக் கிழமை தெரிவித்துள்ளார்.

புத்தளம் அநுராதபுரம் வீதி புனரமைப்பு இன்று

25sri-lankan-road.jpgபுத்தளத் திலிருந்து அநுராதபுரம் வரையிலான ஏ12 வீதியின் 50 கிலோ மீற்றர் தூரத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்று ஆரம்பமாகிறது. நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் .ஏக்கநாயக்க வீதி அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைக்கின்றார்.

கொழும்பிலிருந்து புத்தளம் வரையிலான ஏ3 வீதியில் நீர்கொழும்பு சிலாபம் புத்தளம் வரையிலான பகுதி முழுமையாக கார்பட் போடப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கு அப்பால் உள்ள அநுராதபுரம் ஹொரவ்பத்தானை திருகோணமலை வரையிலான ஏ12 வீதி புனரமைக்கப்படவில்லை.இவ்வீதி ஊடான  வாகனப் போக்குவரத்து அதிக அளிவில் இடம்பெறுவதுடன் வாகன நெரிசலும் நிலவி  வருகின்றது.

இந்தப் பகுதியை புனரமைப்பதன் மூலம் மேற்கு, வடமத்தி, வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய பிரதேசங்களுக்கான போக்குவரத்துக்கு உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டத்தரணி சிவானந்தன் லண்டனில் காலமானார்

பிரபல சட்டத்தரணியும் சிவானந்தன் அன்ட் அசோசியேட்ஸ் சட்ட நிறுவனத்தின் நிறுவுனருமான கந்தையா சிவானந்தன் அவரது 74 ஆவது வயதில் கடந்த செவ்வாய்க்கிழமை லண்டனில் காலமானார்.  யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட சிவானந்தனின் இறுதிக் கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை லண்டனில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க உதவி அமைச்சர் இன்று இலங்கை வருகிறார்

us_ass_sec.pngஅமெரிக் காவின் சனத்தொகை,  அகதிகள் மற்றும் குடியேற்றம் தொடர்பான உதவி அமைச்சர் எரிக் பி.ஸ்க்வார்ட்ஸ் இன்று இலங்கை வரவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கைக்கு வருகை தரும் அமெரிக்க உதவி அமைச்சர் வடக்கிலுள்ள இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களை நேரில் சென்று பார்வையிடவுள்ளதுடன், அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

இவர் சுனாமி அனர்த்தத்தின் பின்னரான மீள்கட்டுமானப் பணிகளுக்கான ஐ.நா. வின் விசேட பிரதித் தூதுவராக கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

யாழ். ரயில் சேவை விஸ்தரிப்பு பணிகள் துரிதம்

railway_lines.jpgதாண்டிக் குளம் வரையில் விஸ்தரிக்கப்பட்ட வடக்கிற்கான ரயில் சேவையை ஓமந்தை வரையில் விஸ்தரிப்பதற்காக ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள வர்த்தக அத்தியட்சர் விஜய சமரசிங்க தெரிவித்தார். தண்டவாளங்கள்,  ரயில் நிலையம் மற்றும் ரயில் சமிக்ஞை விளக்குகள் என்பன சீரமைக்கப்பட்டவுடன் இன்னும் மூன்று மாதத்தில் இந்தசேவை ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

புலிகளுடனான போர் நடவடிக்கை முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து வடக்கிற்கான ரயில் போக்குவரத்துச் சேவைகள் தாண்டிக்குளம் வரை விஸ்தரிக்கப்பட்டன. அச்சேவையை ஓமந்தைவரை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடக்கின் நண்பன் வேலைத்திட்டத்தின் ஊடாக எதிர்வரும் 2010ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கிற்கான ரயில் போக்குவரத்து சேவைகள் முழுமையாக விஸ்தரிக்கப்படவுள்ளன. இதற்காக 14 பில்லியன் ரூபா செலவாகுமென்று மதிப்பிடப்பட்டுள்ளது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய முகாம் மதுனுஸ்கா படுகொலை விவகாரம்: பெண் வேஷமிட்டு தப்ப முயன்ற குற்றவாளி பொதுமக்களால் அடித்துக் கொலை

mathu.jpgமத்திய முகாம் மதுனுஸ்காவின் கொலையுடன் தொடர்புபட்ட சந்தேக நபர் பொதுமக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். மத்திய முகாம் 4ம் கொலனியைச் சேர்ந்த 12 வயது மாணவியான மோகன் மதுனுஸ்காவின் ஊரைச்சேர்ந்த மேற்படி சந்தேக நபரான ‘பாவா’ என அழைக்கப்படும் கனகரெத்தினம் ஸ்ரீஸ்கந்தராஜா (வயது 29) என்பவரே இவ் விதம் மக்களால் அடித்துக் கொல்லப்பட்டவராவார்.  அவரது மரண விசாரணையும் நேற்று மத்திய முகாம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த புதனன்று மாலை 3ம் கொலனிக்கு முட்டை விற்கச் சென்ற மதுனுஸ்கா குரூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு அருவருப்பான முறையில் கொலைசெய்யப்பட்டமை தெரிந்ததே. அதனையடுத்து பொலிஸாரும் பொதுமக்களும் தேடுதல் நடத்தினர்.

வியாழனன்று காலை அங்கு பொலிஸாரால் கொண்டு வரப்பட்ட மோப்ப நாய் சம்பந்தப்பட்ட கொலையாளியின் அக்காவின் வீட்டிற்குச் சென்று அங்கிருந்து கொலையுண்ட மதுனுஸ்காவின் உடையையும், கொலையாளியின் அடையாள அட்டையையும் சாறனையும் வாயினால் கவ்வி வெளியே கொணர்ந்தது. இதனையடுத்து ஊரார் மத்தியில் கொலையாளி அவர் தான் என்பது ஊர்ஜிதமாயிற்று. இதேவேளை அவர் அங்கிருந்து தலைமறைவாகியிருந்தமையும் சந்தேகத்தை வலுப்படுத்தியது.

இந்நிலையில், அன்று பிற்பகல் அவர் வயலுக்குள் பெண் வேஷத்துடன் கதிர் பொறுக்குவதாக தகவல் கிடைத்ததையடுத்து 3ம் 4ம் கொலனியைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான தமிழ், சிங்கள மக்கள் அங்கு சென்று அவரை சரமாரியாக நையப்புடைத்தனர்.  அவ்வேளை பொலிஸாரும், படையினரும் விரைந்து அவரை கொண்டு செல்ல நேர்ந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதனிடையே மதுனுஸ்காவின் உடல் வியாழனன்று மாலை வீட்டில் ஒப்படைக்கப்பட்டது. அங்கு நேற்றுவரை ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்தினர். தாய், தந்தை, உறவினர்கள் கதறியழுதமை நெஞ்சை நெகிழவைத்தது.

நேற்று வெள்ளிக்கிழமை அவர் கற்ற 4ம் கிராமம் வாணி வித்தியாலயம் வெறிச்சோடிக் காணப்பட்டது. வித்தியாலய அதிபர் ச. சரவணமுத்து, மதுனுஸ் காவின் வகுப்பாசிரியை திருமதி ச. மதிவதனி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் மலர்மாலையுடன் சென்று அஞ்சலி செலுத்திய போது, தாயார் அழுத காட்சி சகலரையும் தேம்பி அழவைத்தது. பொலிஸ் அதிரடிப் படையினர் அவரது வீட்டுக்குப் பாதுகாப்பு வழங்கினர். நீதிவான் விசாரணையும் நேற்று இடம்பெற்றது. மக்கள் சாரிசாரியாகச் சென்று அஞ்சலி செலுத்தினர். பிற்பகல் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சிங்கப்பூரிலிருந்து வந்த இரு இளைஞர்கள் கைது

_arrested.jpgசிங்கப் பூரிலிருந்து நாடு திரும்பிய இரண்டு தமிழ் இளைஞர்கள் சீதுவ பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வீதிச் சோதனைப் பொலிஸார் இவர்களின் பொதிகளைச் சோதனையிட்டனர்.

அதன்போது அவற்றில் 72 கையடக்கத் தொலைபேசிகள், உதிரிப்பாகங்கள், மூன்று டிஜிற்றல் கமெராக்கள், 12 விஸ்கி போத்தல்கள், ஒரு லப்டொப், இரண்டு காட்டுன் சிகரட்டுகள் என்பனவற்றைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைக்காக இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இப்பொருட்களின் பெறுமதி 15 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் பெண்ணுக்கு இரண்டாம் தாரமாக வாழ்வு சலுகையாகக் கருதுகிறாரா மகிந்தானந்த?

mahindanandaaluthgamage.bmpமின்சக்தி எரிசக்தி பிரதியமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையானது தமிழ்ப் பெண்களையும் அவர்களின் பாரம்பரிய கலாசார விழுமியங்களையும் இழிவுபடுத்துகின்ற வகையில் அமைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று வியாழக் கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு தலைமை வகித்த யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது;

பாராளுமன்றத்தில் பிரதியமைச்சர் மஹிந்தானந்த ஆற்றிய உரையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது. அதேநேரம், தமிழ் மக்களும் இந்த கூற்றை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.

போரின் கெடுபிடிகளால் தமிழ் மக்கள் மிகப்பெரும் துயரங்களை அனுபவித்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் அல்லல்பட்டு கொண்டிருக்கும் இவ்வேளையில் பிரதியமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு கூறியிருப்பது வெட்கப்பட வேண்டியதொரு விடயமாகும்.

தனது மனைவியின் சம்மதத்துடன் யாழ்ப்பாணத் தமிழ்ப் பெண்ணொருவரை தான் திருமணம் செய்யவுள்ளதாக கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் மகிந்தானந்த அளுத்கமகே கூறியமையையானது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியதொரு விடயமாகும்.

தமிழ்ப் பெண்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாசாரத்துடன் வாழ்பவர்கள். ஆனால், தனது மனைவிக்கு அடுத்ததாக இரண்டாவது மனைவியாக தான் தமிழ்ப் பெண்ணொருவரைத் திருமணம் செய்யவுள்ளதாக அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார்.

அவரின் கருத்தானது தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளது. தமிழ்ப் பெண்களுக்கு இரண்டாம் தரமாக வாழ்வழிப்பதையும் தமிழர்களுக்கான சலுகையாக அவர் கருதுவதாகவே தெரிகிறது. இக்கருத்தைத் தமிழ் மக்களை ஒரு போதுமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

முதலாம் தர மாணவர்களைச் சேர்க்க ஆகஸ்ட் விடுமுறையில் நேர்முகப் பரீட்சை – கல்வியமைச்சு அறிவிப்பு

school-children.jpgஅரசாங்க பாடசாலைகளில் அடுத்த ஆண்டுக்கான முதலாம் தரத்துக்கு புதிய மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் ஆகஸ்ட் விடுமுறை காலத்தில் நடத்தப்படுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நேர்முகப் பரீட்சைகளை நடத்தும் குழுக்களை நியமிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுக்கள்  நியமிக்கப்பட்ட பின்னர் விண்ணப்பதாரிகள் நேர்முகப் பரீட்சைக்காக அழைக்கப்படவுள்ளனர். இக்குழுக்களுக்கான தலைமை அதிகாரியாக கல்வி நிருவாக சேவை கல்விப் பணிப்பாளர் செயற்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.