அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

அம்பாந்தோட்டை எண்ணெய் குதம், கட்டுநாயக்க நெடுஞ்சாலை நிர்மாணத்துக்கு உடன்படிக்கை

நெடுஞ்சாலைகள் மற்றும் எண்ணெய் குதவசதிகளை அமைத்தல் என்பவை தொடர்பாக சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் 350 மில்லியன் டொலர் பெறுமதியான இரு உடன்படிக்கைகளில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.

இந்த இரு உடன்படிக்கைகளும் அதிகளவு தேவைப்படும் உள்சார்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் நாட்டின் எதிர்கால சமூக, பொருளாதார அபிவிருத்திக்கும் பங்களிப்பினை வழங்கும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருக்கிறது.

எண்ணெய் குதங்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளன. சீன நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் முதற்கட்டப் பணிகளுக்கு 360 மில்லியன் டொலர்களை வழங்குவதாக ஏற்கெனவே எக்ஸிம் வங்கி உறுதியளித்திருக்கிறது.

கொழும்புகட்டுநாயக்க விமான நிலைய நெடுஞ்சாலையை அமைப்பதற்கு நிதி வழங்குவது இரண்டாவது உடன்படிக்கையாகும். 30 கி.மீ. தூரத்தில் இந்த நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது.

யாழ் போதனா வைத்தியசாலை குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை

mahindanandaaluthgamage.bmpயாழ்ப் பாணம் போதனா வைத்தியசாலையில் தற்போதுள்ள  குறை பாடுகளை நிவர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமென மின்சக்தி பிரதியமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

யாழ். வைத்தியசாலையை தான் நேரடியாகப்  பார்வையிட்ட போது பல குறைபாடுகள் இருப்பதை அவதானித்ததாகவும் இக்குறைபாடுகளை உடனடியாக நீக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என  சுகாதார அமைச்சரிடம் தான் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

யாழ்.போதனா வைத்தியசாலையின் சகல பிரிவுகளையும்  வர்ணம்தீட்டி அழகுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்

மனித உரிமை மீறல் மோசமடைவதுடன் பொலிஸ் அடாவடித்தனமும் அதிகரிப்பு – ஐ.தே.க.

நாட்டில் இன்று பொலிஸ் அடக்குமுறை தலைவிரித்தாடத் தொடங்கியிருப்பதாக கடும் கண்டனத்தை வெளியிட்டிருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, அடுத்தடுத்து மாணவர்களும், இளைஞர்களும் பொலிஸ் அடாவடித் தனத்துக்குள்ளாக்கப் பட்டுவருவதாகவும் விசனம் தெரிவித்தது. பொலிஸ் தலைமையகமும் பிராந்திய பொலிஸ் உயரதிகாரிகளும் முன்னுக்குப்பின் முரணான அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அவர் செய்தியாளர் மாநாட்டில் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

பயங்கரவாதம் நாட்டில் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் அமைதியும் சுமுக நிலையும் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் உள்நாட்டிலும் சர்வதேசமட்டத்திலும் பிரசாரம் செய்துவரும் அரசாங்கம், மறுபுறத்தில் தமக்கு எதிரானவர்களை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளை மறைமுகமாக முன்னெடுத்துள்ளதை காணமுடிகிறது. மிகமோசமாக மனித உரிமை மீறப்படும் நாடாக இலங்கை மாறிவருகிறது.  மன்னாரிலிருந்து குண்டு நிரப்பிய வாகனம் வந்ததாகவும் அதனை ஒரு உயர் பொலிஸ் அதிகாரி கண்டுபிடித்ததாகவும் பொலிஸ் தலைமையகமும் பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகரவும் தெரிவித்துள்ளனர். மறுபுறத்தில் வட பிராந்திய பொலிஸ் அத்தியட்சர் நிமல் லெவ்கே அப்படியொரு வாகனம் வந்தமைக்கான ஆதாரமெதுவுமே கிடையாதென பகிரங்கமாகவே அறிவித்துள்ளார். இதுவொரு நாடகமாகவே இன்று காணப்படுகிறது.

இந்த விவகாரத்தோடு சம்பந்தப்பட்ட பொலிஸ் உயரதிகாரியும் அவரது மனைவியும் மகனும் மாலபேயிலுள்ள தகவல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் நிபுண ராமநாயக்க மீது மேற்கொண்ட அடாவடித்தனமான செயல்கள் தொடர்பில் அரசாங்கமோ பொலிஸ் தலைமையகமோ இன்று வரையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனை மூடி மறைப்பதற்காகவே இந்த குண்டு வாகன விவகாரத்தை பெரிதுபடுத்திக்காட்ட முனைகின்றனர்

இதற்கிடையில் கம்பஹா மாவட்டத்தில் சேவைபுரியும் பொலிஸ் அத்தியட்சர் ஒருவர் புலிகளுடன் தொடர்பிருந்ததாகவும் புலிகளிடமிருந்து அவருக்குப் பெரும் தொகை நிதி கைமாறப்பட்டிருப்பதாகவும் தெரியவந்ததையடுத்து அந்த அத்தியட்சர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டம் ஒழுங்கை பேணவேண்டிய பாதுகாப்புத் தரப்பினரே அவை மீறப்படுவதற்கு துணை போயிருப்பது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.

இது இவ்விதமிருக்க, அங்குலானையில் இரு இளைஞர்கள் பொலிஸ் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்ததையடுத்து அப்பகுதி யுத்தகளமாக மாறியுள்ளது. மாலையில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை பெற்றோர்கள் பார்க்கச் சென்றபோது காலையில் வருமாறு அங்குலான பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலையில் போனபோது மொரட்டுவ, அல்லது கல்கிஸை பொலிஸில் போய்ப்பார்க்கும் படி கூறியுள்ளனர். இதற்கிடையில் அந்த இளைஞர்கள் இருவரும் லுனாவை பாலத்திற்கருகில் சடலங்களாக போடப்பட்டிருப்பது தெரியவந்ததையடுத்தே பிரதேச மக்கள் ஆத்திரமடைந்து பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுபோன்ற மோசமான, கண்டிக்கத்தக்க வெறியாட்டத்தை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். இதன் பின்னணியில் பெரும் அரசியல் சக்தி ஒன்று காணப்படுவதாக பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.  நாட்டில் இன்று ஜனநாயகம் காணப்படவில்லை. பொலிஸ் அதிகார இராஜ்ஜியமொன்று படிப்படியாக உருவாகிவருகிறது. இந்த நிலை தொடருமானால் நாட்டில் அராஜகமும் படுகொலைகளும் வீதிக்கு வீதி இடம்பெறலாம் என்ற அச்சம் தலைதூக்கியுள்ளது.

இத்தகைய வெறியாட்டங்களை அரசு கண்டுகொள்ளாமல் இருக்கின்றது. ஜனநாயகமும் மனித உரிமைகளும் சுதந்திரமும் முற்று முழுதாகக் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

2002 இல் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவை அமைத்ததன் மூலம் சட்டம், ஒழுங்கு சீராகப் பேணப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு பதவிக்கு வந்த பின்னர் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு நியமிக்கப்படவில்லை. சுயாதீன ஆணைக்குழு இருந்தால் இன்று நடக்கும் எத்தகைய அடாவடித்தனமும் இடம்பெற்றிருக்காது.  அரசாங்கம் தொடர்ந்தும் இவ்விடயத்தில் மௌனப் போக்கைக் கடைப்பிடித்தால் நாடு மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடலாம். தவறிழைத்தவர்களை, குற்றவாளிகளை உடனடியாகச் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் சட்டத்தைக் கையிலெடுக்கும் நிலைமை உருவாவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது போகலாம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது.

யாழ். மாவட்டத்தில் மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைகள் துரிதம் – வடமாகாண ஆளுநர் அறிவிப்பு

north-governor.jpgமோதல் கள் காரணமாக இடம் பெயர்ந்தவர்களை யாழ்.  மாவட்டத்தில்  மீளக் குடியமர்த்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். திருமலை மற்றும் யாழ்.மாவட்டத்தில் பணியாற்றும் செயற்திட்ட அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆளுநர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத்திட்டம் வடமாகாணம் முழுவதும் வெற்றிகரமான முறையில் மேற்கொள்ளப்படுகின்றது.  இதுதவிர யாழ் மாவட்ட மீனவர்கள் மற்றும்  பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகாணும் பொருட்டு பாதுகாப்புதரப்புடன் தான் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கலாபூஷண விருதுக்கு தெரிவானவருக்கு இன்னமும் பணம், சான்றிதழ் இல்லை

கடந்த வருடம் (2008) கலாபூஷணம் விருதுக்கென கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட சமய,சமூக சேவையாளரான நாகலிங்கம் வியாக்கிரத பாதர் என்பவருக்கு விருதுக்குரிய பணமும் சான்றிதழும் வழங்கப்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் நடத்திய கலாபூஷணம் விருது வழங்கும் நிகழ்வில் யுத்த நிலைமை காரணமாக அவரால் கலந்து கொள்ள முடியாது போய்விட்டது. இவ்வருடம் ஜனவரி 6 ஆம் திகதி கிளிநொச்சி செயலகத்தில் இவ்விருது வழங்கப்படுமென அரச அதிபர் அறிவித்திருந்த போதும் இடம்பெயர்வு காரணமாக அவ்வேளையிலும் அவரால் விருதைப்பெற்றுக்கொள்ள முடியவில்லை.

செட்டிக்குளம் முகாமில் தங்கியிருந்த இவர் தற்போது வவுனியா தோணிக்கல்லில் தங்கியிருக்கும் நிலையில் வவுனியாவில் இயங்கும் கிளிநொச்சி அரச அதிபர் அலுவலகத்தில் விருதைக் கோரியபோது அதற்குரிய ஆவணங்கள் தம்மிடம் இல்லையென்றும் அவற்றை கிளிநொச்சி தர்மபுரத்தில் விட்டுவிட்டு வந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் மற்றும் இடம்பெயர்வு காரணமாக மிகவும் வறுமை நிலையில் இருக்கும் இம்முதியவர் தன் நிலை கருதி தனது விருதையும் பணத்தையும் சான்றிதழையும் வழங்கி உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் 62வது சுதந்திர தின விழா கோலாகலம்

15-flag-india.jpgஇந்தி யாவின் 62வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் நடந்த வண்ணமயமான விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், தேசிய கொடியை ஏற்றி வைத்து முப்படையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டையை சுற்றிலும் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. டெல்லி முழுவதுமே மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

விழா நடந்த 90 நிமிடங்களும் அப் பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. விமானப் படை ஹெலிகாப்டர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தன. முன்னதாக மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் சமாதிகளிலும் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.

அதே போல சென்னை கோட்டையில் முதல்வர் கருணாநிதி காலை 8.30 மணி அளவில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக முப்படையினரின் கம்பீர அணிவகுப்பை அவர் பார்வையிட்டார். சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதுமே மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மனைவியால் பாதிக்கப்பட்ட கணவர்கள் மாநாடு

மனைவிகளின் கொடுமையால் பாதிக்கப்பட்ட இந்திய கணவர்களின் மாநாடு சுதந்திர தினமான இன்று சிம்லாவில் நடக்கிறது. இந்தியாவில் கடந்த நூற்றாண்டு வரை பெண்கள் வீட்டு அடிமைகளாக நடத்தப்பட்டனர். திருமணத்துக்கு தந்தைக்கும், திருமணத்துக்கு பின் கணவருக்கும், வயதான காலத்தில் மகனுக்கும் அடிமைகளாக இருந்தனர்.

மேலும், ஒவ்வொருவரின் வாழ்க்கையின் முக்கிய கட்டமான திருமணத்தின் போது பெண்கள் வரதட்சனை என்ற பெயரில் பெரும் கொடுமைகளை அனுபவித்து வந்தனர். இதையடுத்து இந்தியாவில் வரதட்சனை ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், தற்போது 21ம் நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பம், பொறியியல், வி்ஞ்ஞானம் என அனைத்து துறைகளிலும் பெண்கள் நன்றாக முன்னேற்றம் கண்டுள்ள நிலையில் சிலர் இந்த வரதட்சணை ஒழிப்பு சட்டம் போன்றவற்றை தங்களது சொந்த லாபத்துக்காக பயன்படுத்தி வருகின்றனர். கணவன்மார்களை தங்களது கைக்குள் வைத்துள்ளவும், பிடிக்காத கணவரை கழட்டிவிடவும் வரதட்சணை வழக்கு தொடருவேன் என மிரட்டும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்துக்கு போனால் மானம் போய்விடும், 3 ஆண்டுகள் வரை சிறை  தண்டனை கிடைக்கம் என்பதால் பல ஆண்கள் அஞ்சி பேசாமல் இருந்துவிடுகின்றனர்.

மேலும், இது போன்ற வழக்குகளில் குழந்தைகள் தாயாரிடம் இருக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்படுவதால் குழந்தைகளை பிரிய விரும்பாத நல்ல தந்தையாக இருக்க நினைக்கும் ஆண்களும் பெரும் துன்பத்துக்கு ஆளாகி வருகிறார்கள். ஆண்கள் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருவதை ஒரிசா பெண்கள் கமிஷனும் ஒத்துகொண்டுள்ளது. கணவனை கொடுமைப்படுத்த வரதட்சணை கேட்கபதாக பெண்கள் பொய்புகார் கொடுப்பது அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது போன்ற பெண்களால் பாதிக்கப்பட்ட கணவர்கள் ஒன்றிணைந்து, ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் மாநாடு ஒன்றை இன்று துவக்கியுள்ளனர். இது குறித்து இந்திய குடும்ப அடிப்படைகளை காப்பாற்றுங்கள் என்ற பெங்களூர் அமைப்பின் உறுப்பினர் விரக் துலியா என்பவர் கூறுகையில்,

எங்கள் மாநாட்டை சுதந்திர தினத்தின் போது நடத்த திட்டமிட்டோம். இதன் மூலம் எங்கள் பிரச்சனையை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வரலாம் என நம்புகிறோம். மூன்று நாள் நடக்கும் இந்த மாநாட்டில் சென்னை, டெல்லி, மும்பை  உள்ளிட்ட பல்வேறு நகரங்களை சேர்ந்த 100 ஆண்கள் உரிமை அமைப்பிகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். அவர்கள் மனைவிகளால் பாதிக்கப்பட்ட சுமார் 30 ஆயிரம் கணவர்களின் பிரதிநிதிகளாக பங்கேற்கின்றனர்.

முகாம்களில் இடம்பெயர்ந்த தமிழர்கள், போர்க் குற்றவாளிகள் போலவே நடத்தப்படுகின்றனர்: மனித உரிமைகள் பணியாளர் நிமால்கா பெர்னாண்டோ

nirmala_lawyer_.jpgஇலங்கை அகதி முகாம்களின் நிலைமை வரலாற்றிலேயே மோசமானவையாக இருப்பதாகவும், போரினால் பாதிக்கப்பட்டவர்கள் போன்று நடத்தப்படாமல் போர்க்குற்றவாளிகள் போன்றே தமிழர்கள்  நடத்தப்படுவதாகவும் மனித உரிமைகள் பணியாளரும் சட்டத்தரணியுமான நிமால்கா பெர்னாண்டோ கூறியுள்ளார்.  எக்ஸ்பிரஸ் செய்திச் சேவைக்கு அளித்துள்ள பிரத்தியேகப் பேட்டியிலேயே நிமால்கா பெர்னாண்டோ  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், முகாம்களிலுள்ள மக்களுக்கு பற்தூரிகையும், சவர்க்காரமும் ஆடம்பரப் பொருட்களாக உள்ளதாகவும், முகாம்களுக்கு வரும்போது கொண்டு வந்த ஆடைகளையே தொடர்ந்தும் அணிந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்டவர்கள் போன்று தமிழர்கள் நடத்தப்படவில்லை. மாறாக போர்க்குற்றவாளிகள் போன்றே அவர்கள் நடத்தப்படுவதாகவும், பொதுமக்களே இந்த மாதிரியாக நடத்தப்படுவதென்றால் புலி உறுப்பினர்கள் மற்றும் அங்கவீனர்களின் நிலைமையைத் தன்னால் கற்பனை செய்து பார்க்க முடியாதுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலி உறுப்பினர்கள் விசேட தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். நிலக்கண்ணிவெடி ஆபத்தை எதிர்கொள்வதாலேயே இடம்பெயர்ந்த மக்களைப் பலவந்தமாகத் தங்கியிருக்கச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்திருப்பது குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் நிமால்கா, கண்ணிவெடிகளில் சிக்காமல் தமிழ் மக்கள் முகாம்களுக்கு வரமுடியுமென்றால் அதே பாதையால் அவர்களால் ஏன் திரும்பிச் செல்ல முடியாது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் பகுதிகள் மீது ஷெல் வீச்சு அதிகரித்தமையும் பட்டினி நிலைமையுமே அகதி முகாம்களுக்கு அவர்கள் வருவதற்கான நிர்ப்பந்தமாக அமைந்ததாகவும் நிமால்கா குறிப்பிட்டுள்ளார்.  மதுரை கூடல் நகரிலுள்ள அகதி முகாம்களுக்குச் சென்றிருந்த நிமால்கா இலங்கையிலுள்ள அகதி முகாம்களையும் கூடல் நகர் முகாமையும் ஒப்பிட்டுக் கூறுகையில்;  கூடல் நகர் முகாமில் சுதந்திரமான நடமாட்டத்திற்கான காற்றைச் சுவாசிப்பதை உணர முடிவதாகவும் அது இலங்கையில் இல்லையென்றும் தெரிவித்துள்ளார்.

அகதிகள் தமது வாழ்வை மீளக்கட்டியெழுப்புவது கடினமானதென்றும் தமது படகுகள், விவசாய உபகரணங்கள், நிலங்கள் என்பனவற்றை மீளப் பெற்றுக்கொள்வது கடினமான விடயம் என்றும் நிமால்கா கூறியுள்ளார்.  அரசாங்கம் பலவந்தமாக அவை எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டதாகத் தெரிவித்த அவர் புனர்வாழ்வுக்காக வெளிநாடுகள் கொடுத்த நிதியும் யுத்தத்தால் ஏற்பட்ட கடனுக்கு நஷ்ட ஈடாக வழங்குவதற்காக திசை திருப்பப்படக்கூடும் என்றும் இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன் கிடைக்காமல் போகும் என்றும் நிமால்கா பெர்னாண்டோ கூறியுள்ளார்.

அத்துடன், அவர் இந்தியாவில் இருந்து வெளிவரும்  குமுதம் இதழுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் தெரிவித்த சில முக்கியமான கருத்துக்கள்:-

சிறுபான்மை சமூகத்தின் அடையாளங்களை அழிப்பதற்காகவே, தமிழ் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களை அரசாங்கம் மேற்கொள்ள முனைவதாக இலங்கை மனித உரிமைகள் செயற்பாட்டாளர் நிமல்கா பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இந்த முன்னெடுப்புகள் மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள பொது மக்கள், பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வரும் நிலையில், மகிந்த ராஜபக்ஷ தமிழர்களுக்கு உணவை வழங்குவாரே தவிர தீர்வை வழங்க மாட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் இருந்து கிடைக்கின்ற பாரிய அழுத்தங்களே, இலங்கை தமிழர்களின் தலையெழுத்தை மாற்றும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை தமிழர்களுக்கு 13ம் திருத்த சட்ட அமுலாக்கம் ஒன்றே சிறந்த தீர்வாக அமையும் என தெரிவித்த அவர், எனினும் அதனை அரசாங்கம் அமுல்படுத்தும் என்ற நம்பிக்கை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் இடம்பெயர்ந்துள்ள மக்களை விடுதலைப் புலி தொடர்பாளர்கள் என விசாரணை செய்துவரும் அரசாங்கம், இந்த விசாரணைகளில் குற்றமற்றவர்கள் என்று நிரூபணமானவர்களை விடுவித்துவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம் குறித்து எழுந்துள்ள சந்தேகங்கள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது, தொலைக்காட்சிகளில் இராணுவத்தினர் காட்டிய சடலம் மற்றும் அடையாள அட்டை என்பன பிரபாகரனுடையது இல்லை என குறிப்பிட்டுள்ளார். பிரபாகரன் இறந்து விட்டமை உண்மை என இராணுவம் அறிவித்த போதும், அவர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது குறித்த மாறுபட்ட கருத்துக்கள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மலேசியத் தூதரகம் முன் யேர்மன் தமிழர்கள் போராட்டம்

மலேசியா அரசு இலங்கை அரசுடன் இணைந்து மேற்கொண்ட ஐனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையைக் கண்டித்தும். வவுனியாத் தடுப்பு முகாம்களில் உள்ள தமிழ் மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரியும் யேர்மனி பேர்லின் நகரில் அமைந்துள்ள மலேசியத் தூதரகம் மற்றும் பிராங்போட் நகரில் அமைந்துள்ள மலேசியத் துணைத் தூதரகம் என்பவற்றை நோக்கி யேர்மனி வாழ் தமிழ் மக்களால் கண்டன ஊர்வலங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது

பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இவ் ஊர்வலங்களில் மலேசிய நாட்டின் நடவடிக்கையைக் கண்டித்து பாதாதைகள் தமிழ்மக்களால் தாங்கிச் செல்லப்பட்டது.

வன்னிப் பகுதியில் கையடக்கத் தொலைபேசி வலையமைப்பு

teli00000.jpgஇலங் கையின் மிகப்பெரிய கையடக்கத் தொலைபேசி வலையமைப்பாளர்களான டயலொக் நிறுவனத்தினர், முதன்முறையாக வன்னி நிலப்பரப்பில் தமது வலையமைப்பை ஆரம்பித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.  இவர்கள் கூற்றுப்படி, கிட்டத்தட்ட 10 மில்லியன் டொலர்கள் செலவில் 60 நிலையங்கள் வன்னி நிலப்பரப்பில் அமைக்கப்படவுள்ளன. ஆனால், அங்குள்ள ராணுவத்தினரில் நூற்றுக்கணக்கானவர்களுக்குத் தான் முதலில் இணைப்புகள் வழங்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்ட பின்னர் மேலதிக தொலைத்தொடர்பு கோபுரங்கள் கட்டுவதற்கு அரசு அனுமதியளிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது கிளிநொச்சி, ஆனையிறவு, பூநகிரி, மாங்குளம், துணுக்காய் ஆகிய இடங்களில் டயலொக் கோபுரங்கள் வந்துள்ளன.