அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

பயங்கரவாதத்தால் நாம் இழந்தவற்றை மீண்டும் பெற்றுக்கொள்வதே உண்மையான வெற்றி – பாதுகாப்புச் செயலாளர் கருத்து

gothabaya.jpgபுலிப் பயங்கரவாதத்தை தோல்வியடையச் செய்தது மட்டுமே எமக்குக் கிடைத்த உண்மையான வெற்றியென நாம் நினைத்துவிடக் கூடாது. நாம் இழந்தவற்றை மீண்டும் பெற்றுக்கொள்வதே உண்மையான வெற்றியாகும் என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தத்தின் முடிவும் சமாதானத்தின் உதயமும் எம்மத்தியில் சுபமான எண்ணங்களை ஏற்படுத்தவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

‘பிஸ்னஸ் டுடே’ சஞ்சிகை கொழும்பில் நடத்திய “பிஸ்னஸ் டுடே டொப் டென்’ நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னரான சமாதானத்தைப் பாதுகாத்து, நாட்டைக் கட்டியெழுப்ப நாமனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும்.

தம்மைப் பற்றிச் சிந்திப்பதற்கு முன்பதாக நாட்டைப் பற்றிச் சிந்திக்கவேண்டும். அப்போது தான்,  நாட்டுக்கான எமது கடமையைச் செவ்வனே நிறைவேற்ற முடியும். முப்பது வருட கால யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில்,  பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்து,  நிலையான இடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பயங்கரவாதத்தால் எமது நாட்டில் வர்த்தகம் வீழ்ச்சியடைந்தது. வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டார்கள். இதனால்,  எமது தொழிற்றுறைகளில் அபிவிருத்தியைக் காணமுடியவில்லை. புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். எனவே,  அவர்களால் கிடைக்க வேண்டிய நன்மைகள்,  பங்களிப்புக்கள் என்பவற்றை நாடு இழந்தது.

எமது சமூக வியூகம் மாற்றமடைந்து, நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் நின்றுபோய்,  வன்முறைக் கலாசாரம் பயங்கரவாதத்தால் எமது நாட்டில் தோற்றுவிக்கப்பட்டது. இன்று பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது. எனவே,  நாம் இழந்ததை,  மீண்டும் பெற்றுக்கொள்ளும் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதுவே உண்மையான வெற்றியாகும் என்றும் அவர் கூறினார். 

மீள் குடியேற்றத்துக்கு முன்னர் நீதி மன்றங்கள் கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் அமைக்க முடிவு

court222.jpgகிளிநொச்சி மற்றம் முல்லைத்தீவு மாவட்டங்களில் மீள் குடியேற்றம் இடம்பெறமுன்னர் அவ்விரு மாவட்டங்களிலும் நீதிமன்றங்கள் அமைக்கடவுள்ளதாக நீதியமைச்சு அறிவித்துள்ளது. கிளிநொச்சியில் உயர் நீதி மன்றமொன்றும் ஒரு மாஜிஸ்திரேட் நீதி மன்றமும் அமைக்கப்படும் அதேவேளை முல்லைத்தீவில் ஒரு மாஜிஸ்திரேட் நீதி மன்றம் அமைக்கப்படும் எனவும் அமைச்சு அறிவித்துள்ளது.

இப்போது இப்பிரதேசத்தில் எழும் பிணக்குகள் வவுனியாவிலுள்ள நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தீர்ப்ளிக்கப்பட்டு வருகின்றன. இப்பிரதேசங்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்துபோது பொது மக்கள் புலிகளின் நீதி மன்றங்களை நாடிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு செயலாளரை படுகொலை செய்ய தயார் நிலையில் இருந்த தற்கொலை அங்கி மீட்பு

nimal_madiwaka.jpgபாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மீது தற்கொலை தாக்குதல் நடத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த தற்கொலை அங்கி உள்ளிட்ட பெருமளவு வெடி பொருட்கள் நேற்று கொழும்பிலுள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

மோதரை, மட்டக்குளிய வீடமைப்புத் தொகுதியிலுள்ள இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடியிலிருந்து தேசிய புலனாய்வுப் பிரிவினரால் இவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

தற்கொலை குண்டுதாரி மோட்டார் சைக்கிளில் வந்து தாக்குதல் நடத்தும் விதத்திலேயே புலிகளினால் திட்டம் தீட்டப்பட்டிருந்தது அம்பலத்துக்கு வந்துள்ளதுடன் அதற்கேற்ற வகையில் அதி சக்திவாய்ந்த வெடி பொருட்கள் மற்நும் தற்கொலை அங்கிகளை கொழும்புக்கு கடத்தியிருப்பதாகவும் தேசிய புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாக பொலிஸ் பேச்சாளர் மெதிவக்க சுட்டிக் காட்டினார்.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வாகன அணிவகுப்பை இலக்கு வைத்தே இத்தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தாக்குதலின் போது பாதுகாப்புச் செயலாளர் காயங்களுக்கு உள்ளாகும் பட்சத்தில் அவரை எடுத்துச் செல்வதற்காக தயார் நிலையிலிருக்கும் அம்பியுலன்ஸ் வண்டி மீதும் குண்டுத் தாக்குதலை நடத்தவும் புலிகள் ஏற்பாடுகளை முன்னெடுத் திருந்தமையும் அம்பலமாகியிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். தற்கொலையங்கி உள்ளிட்ட அதி சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்ட தையடுத்து அவ்வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளரை இலக்கு வைத்து தற்கொலை தாக்குதலை நடத்துவதற்கிருந்த பிரதான சந்தேக நபரான தற்கொலை குண்டுதாரியையும் மோட்டார் சைக்கிளையும் தேடி பொலிஸ் வலை விரித்திருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

தேசிய புலனாய்வுப் பிரிவினர் கடந்த ஒரு மாதகாலமாக கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மேற்கொண்டுவரும் தேடுதல்களை அடிப்படையாக வைத்தே பொலிஸாரினால் நேற்று இந்த வீடு முற்றுகையிடப்பட்டு மேற்படி வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐந்து கிலோ நிறைகொண்ட தற்கொலையங்கி, இயந்திரத் துப்பாக்கி, அதற்குப் பயன் படுத்தப்படும் 125 ரவைகள், இரண்டு தோட்டா கேசுகள், 05 கிரனேற் கைக்குண்டுகள், 13 சயனைற் குப்பிகள், தற்கொலையங்கியில் பொருத்தும் 05 பற்றரிகள், ஒரு ரிமோட் கருவி, பல இடங்களுக்கும் கொண்டு செல்லக்கூடிய 02 ரிமோட் கருவிகள், 50 அடி நீளமான வயர் மற்றும் ஒரு டெட்டனேட்டர் ஆகியனவே நேற்று மட்டக் குளியிலுள்ள மேற்படி வீட்டின் அலுமாரிக்குள்ளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக விசேட பொலிஸ் குழு புலனாய்வு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மீது 2006 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி கொழும்பு கொள்ளுப்பிட்டியில் வைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆண் தற்கொலை குண்டுதாரியினால் நடத்தப்பட்ட மேற்படி தாக்குதலில் பாதுகாப்புச் செயலாளர் தெய்வாதீனமாக உயிர் தப்பினார். இதன்போது இருவர் கொல்லப்பட்டதுடன் 12 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு ஈரான் உதவி!

iranflags.jpgவன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களின் பாவனைக்காக ஈரானிய அரசாங்கம் 500 கூடாரங்களையும் 500 பாய்களையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளது. ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் எம்.எம்.ஸ{ஹைர் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையிலேயே இந்தக் கூடாரங்களும் பாய்களும் வழங்கப்பட்டுள்ளன.

அடுத்து வரும் சில தினங்களில் விமானமூலம் இந்த உதவிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2006 ஒக்டோபர் 18 ம் திகதி: காலி துறைமுக தற்கொலைத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட டோலர் படகு, லொறி மீட்பு

nimal_madiwaka.jpg2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் 18 ஆம் திகதி காலி துறைமுகத்தின் மீதான தற்கொலைத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட டோலர் படகு ஒன்றையும் லொறி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேற்படி தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையிலே இவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க கூறினார்.

கடந்த 2006 ஒக்டோபர் 18 ஆம் திகதி காலி துறைமுகம் மற்றும் தக்ஷின கடற் படை தளத்தின் மீது புலிகள் தற்கொலை தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கடந்த ஜுலை 24 ஆம் திகதி வவுனியாவில் வைத்து கைதானார். மத்திய மாகாண புலனாய்வுப் பிரிவின் விசேட குழுவொன்றே இவரை கைது செய்தது.

மேற்படி சந்தேக நபரை தடுத்து வைத்து மேற்கொண்ட விசாரணையின் போது தாக்குதல் தொடர்பான பல தகவல்கள் வெளியானதாக பொலிஸ் ஊடகப் பேச் சாளர் கூறினார். இதன்படி 32 அடி நீளமான டோலர் படகு ஒன்று அம்பாந்தோட்டை மீன்பிடித்துறை முகத்தில் வைத்து மீட்கப்பட்டது. இதில் ராடார் உபகரணங்களும் காணப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

இதேவேளை இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய லொறியொன்று அக்கரைப்பற்று பகுதியில் வைத்து மீட்கப்பட்டதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கூறினார்.

மேற்படி சந்தேக நபரை தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்னவின் கண்காணிப்பின் கீழ் பொவெல்ல பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி மேலதிக விசாரணை நடத்தி வருகிறார்.

5 இயந்திரப் படகுகளில் வந்த தற்கொலை புலி உறுப்பினர்கள் காலி துறைமுகத்தின் மீது மேற்கொண்ட தற்கொலை தாக்குதல் கடற்படையினரால் முறியடிக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு வந்த அனைத்து புலி உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் ஒரு மாலுமி இறந்ததோடு மேலும் 24 பேர் காயமடைந்தனர்.

கொழும்பு வந்துள்ளோரின் விபரங்களடங்கிய பதிவு ஆவணமொன்றை தயாரிக்க திட்டம்

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் வந்து கொழும்பில் தங்கியிருப்போரின் விபரங்களடங்கிய பதிவு ஆவணமொன்றை தயாரிக்கவும் அத்தகையோருக்கு உதவுவதற்குமான திட்டமொன்றை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடைமுறைப்படுத்தவுள்ளது.

இதன் மூலம் அவ்வாறு தங்கியிருப்போருக்கு தேவையான சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.

அவ்வாறு தங்கியிருப்போரில் 16 வயதிற்கு மேற்பட்டோர் தமது தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளும் வகையில் அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப் படுவதுடன் அது தொடர்பில் அவர்களுக்குத் தபாலட்டை மூலம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்; நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் பல்வேறு தேவைகளுக்காக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கொழும்புக்கு வந்து பல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தங்கியுள்ளனர். இவர்கள் தொடர்பான விபரங்கள் முறைப்படி பதிவு செய்யப்படவில்லை.

ஏற்கனவே கொழும்பில் குடியிருப்போர் சம்பந்தமான விபரங்கள் திரட்டப்பட்டுள்ள போதிலும் மாதாந்தம் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கொழும்புக்கு வந்து தங்குவதுடன் அவ்வாறே கொழும்பிலிருந்தும் வெளிப் பிரதேசங்களுக்குச் செல்கின்றனர்.

இத்தகையோரின் விபரங்களை அப்பகுதிக்குப் பொறுப்பான கிராம சேவகர்கள் திரட்டி வருகின்றனர். அவ்விபரங்கள் பிரதேச செயலகங்களுக்குக் கையளிக்கப்பட்டு ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப தினந்தோறும் அதில் திருத்தங்கள் செய்யப்படும். இதனைக் கொண்டே கொழும்புக்கு வந்து தங்கியிருப்போர் மற்றும் வெளிச் செல்வோரின் விபரங்களடங்கிய பதிவு ஆவணமொன்று ஏற்படுத்தப்படவுள்ளது.

இவர்களில் அடையாள அட்டைகளைப் பெறுவோர் ஓய்வூதியம் பெறுவோர் உட்பட அரசாங்கத்தின் சேவை களை எதிர்பார்ப்போருக்கு உதவுவதற்கும் இந்நடவடிக்கை மூலம் வழிவகை செய்யப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

லாக்கர்பீ: ஸ்காட்லாந்து சட்டங்களுக்கு உட்பட்டே மெக்ராஹிக்கு விடுதலை வழங்கப்பட்டதாக கூறுகிறார் நீதியமைச்சர்

megrahifora.jpgலாக்கர் பியில் 1988 இல் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியான லிபிய நபரை விடுதலை செய்வதற்கான தனது முடிவு ஸ்காட்டிஸ் சட்டங்கள் மற்றும் பெறுமானங்களின் அடிப்படியிலானது என்றும், இராஜதந்திர, அரசியல் மற்றும் பொருளாதார அம்சங்களுக்கு அதில் இடம் கிடையாது என்றும் ஸ்காட்டிஷ் நீதியமைச்சர் கென்னி மக் அஸ்கில் கூறியுள்ளார். அப்தல் பஸத் மெக்ராஹி என்னும் அந்த நபர் விடுதலை செய்யப்பட்டமை மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட வெற்றிவீரருக்கான வரவேற்பு ஆகியவை குறித்து சர்வதேச கண்டனம் எழுந்துள்ளது.

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், அந்த வரவேற்பு பொருத்தமற்றது என்று கூறிய மக் அஸ்கில் அவர்கள், வரவேற்பு குறைந்த அளவிலேயே நடக்கும் என்று தமக்கு உறுதி வழங்கப்பட்டிருந்ததாகவும் கூறினார். குணப்படுத்த முடியாத புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தினால், மனிதாபிமான அடிப்படையில் மெக்ராஹி விடுதலை செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் வைத்தியசாலைகள் ரூ. 460 மில். செலவில் அபிவிருத்தி

north-governor.jpgவடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் 460 மில்லியன் ரூபா செலவில் யாழ். குடா விலுள்ள ஆஸ்பத்திரிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்ரசிறி தெரிவித்தார்.

ஆளுநர் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அடங்கலான குழுவினர் சாவகச்சேரி தள வைத்திய சாலை உட்பட்ட அங்குள்ள ஏனைய ஆஸ்பத்திரிகளை நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டனர். இதன் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்படி யாழ். போதனா வைத்திய சாலை, சாவகச்சேரி தள வைத்தியசாலை, மானிப்பாய் பிரசவ விடுதி, கரவெட்டி ஆஸ்பத்திரி, இளவாலை மருத்துவ நிலையம் என்பன அபிவிருத்தி செய்யப்பட்டு வருவ தோடு மண்டைதீவு, புங்குடுதீவு, ஊர்காவற் றுறை பகுதிகளில் மருத்துவ வசதிகளை மேம் படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது.

சாவகச்சேரி தள வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவு நிர்மாணப் பணிகள் 80 வீதம் பூர்த்தி அடைந்துள்ளன. இதற்காக 40.2 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நீர் விநியோகம் மற்றும் மருத்துவ களஞ் சியம் என்பவற்றுக்காக 10 மில்லியன் ஒது க்கப்பட்டுள்ளதாகவும் வட மாகாண ஆளு நர் கூறினார்.

இதேவேளை மானிப்பாய் பிரசவ விடுதி 11 மில்லியன் ரூபா செலவில் அமைக்க ப்பட்டு வருகிறது. கரவெட்டி ஆஸ்பத்திரி யின் வெளிநோயாளர் பிரிவு 15 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.  50 வீத பணிகள் பூர்த்தியடைந்துள் ளன. இளவாலை மருத்துவ நிலையம் 9 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப் பட்டு வருகிறது. இதில் 45 வீத பணிகள் பூர்த்தி பூர்த்தியடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. ஊர்காவற்றுறை, மண்டைதீவு, புங்குடுதீவு மற்றும் வேலணை ஆஸ்பத்திரிகள் 41 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காரை நகரில் மருத்துவர்களுக்கான விடுதி 10 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது. தென்மராட்சி, கொடிகாமம் ஆஸ்பத்திரிகளில் 10 மில்லியன் செலவில் பிரசவ விடுதிகள் அமைக்கப்படவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோப்பாய், அச்சுவேலி, ஆயுர்வேத ஆஸ்பத்திரிகள் 8.2 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருவதோடு இவற்றுக்கான நிர்மாணப் பணிகள் பூர்த்தியடையும் நிலையில் உள்ளதாகவும் ஆளுநர் கூறினார்.

இதேவேளை வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் தென்மராட்சி, வடமராட்சி, கோப்பாய், வலிகாமம், சண்டிலிப்பாய் ஆஸ்பத்திரிகளின் சுகதார வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆளுநர் சந்ரசிறி குறிப்பிட்டார். ஆஸ்பத்திரிகளின் நிர்மாணப் பணிகளை நேரில் பார்வையிட்ட ஆளுநர் மேற்படி நிர்மாணப் பணிகளை துரிதமாக பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கிழக்கில் 149 அரச ஊழியர்களுக்கு அமெரிக்க உதவியில் மொழிப்பயிற்சி

tri0000.jpgகிழக்கு மாகாணத்திலுள்ள, பதினோரு உள்ளூராட்சி மன்றங்களில் தெரிவு செய்யப்பட்ட 149 அரசாங்க அலுவலர்களுக்கும் பதவியாளர்களுக்கும், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி தமிழ் மொழி, சிங்கள மொழிப் பயிற்சிகளை வழங்குகின்றது.

பிராந்திய ஆட்சிக்கு ஆதரவளிக்கும் இத்திட்டத்துக்குமூன்று வருடங்களுக்குத் தேவையான  நிதி வழங்கப்பட்டுள்ளது. ஐந்து நாட்களை உள்ளடக்கிய இந்நிகழ்ச்சியில் நவீன மொழிப் பயிற்சி நுட்பங்கள்,  அரசாங்க மொழிகள் கொள்கை, மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் இடையிலுள்ள தொடர்பு என்பவை பங்குபற்றுநர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றது.

இலங்கை வாழ் மக்கள் அனைவரினதும் நன்மைக்காக, 1956 ஆம் ஆண்டு முதல், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி இலங்கையில் ஏறத்தாழ இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளமை குறிப்பிட்டத்தகக்தாகும். 

புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது ஆயுதங்களை வழங்குமாறு இலங்கையின் கோரிக்கையை பிரித்தானியா நிராகரித்தது

britain.jpgதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது சில வகை ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை அரசாங்கம் கோரிய போதிலும், பிரித்தானியா கோரிக்கையை நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக 30மி.மி துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் துப்பாக்கி ரவைகளைக் கூட வழங்க பிரித்தானியா மறுத்துள்ளது. ஆரம்பத்தில் 30மிமி துப்பாக்கிகளையும், அதற்கான ரவைகளையும் பிரித்தானியா வழங்கியதாகவும், பின்னர் ஆயுத விநியோகத்தை நிறுத்திக் கொண்டதாக இந்திய இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது