யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளரும், உலக சுகாதார நிறுவனத்தின் வடக்கு இணைப்பாளருமான வைத்தியகலாநிதி என். சிவராஜா கடந்த ஆகஸ்ட் 24ஆம் திகதி சமூக மருத்துவத்துறை அலுவலகத்தில் வேறு இரண்டு மருத்துவபீட மாணவர்களுடன் பரீட்சையில் ஈடுபட்டிருந்த வேளையில் பல்கலைக்கழக மாணவன் ஒருவரின் கத்திக்குத்துக்கு இலக்கானமை தெரிந்ததே.
இந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்த வைத்திய பீட மாணவன் ரிஜி ரஜிவ் என்பவர் கலாநிதியை கத்தியால் குத்திய பின்பும் பல மணி நேரங்கள் பல்கலைக்கழக வளவினுள்ளே சுதந்திரமாக இருந்துள்ளதாகவும் அடுத்தநாளே இவர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறியதாகவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது, ஆகஸ்ட் 24ஆம் திகதி மாலை 4.00 மணியளவில் வைத்தியகலாநிதி என். சிவராஜா யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மருத்துவபீட மாணவர்களின் ஆய்வு தொடர்பாக மாணவர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தார். அத்தினம் 14 மாணவர்கள் வைத்தியகலாநிதியிடம் கலந்துரையாட நேரம் ஒதுக்கியிருந்தனர். சமூக மருத்துவத்துறை அலுவலகத்தில் இவ்விரு மாணவர்களாக அழைத்து பரீட்சையில் ஈடுபட்டிருந்த வேளையில் திடீரென ஒரு மாணவன் வைத்தியகலாநிதியின் அறைக்குள் நுழைந்து தங்களுடன் கதைக்க வேண்டும் என்று கோரியுள்ளார். அச்சந்தர்ப்பத்தில் தான் விரிவுரை நடத்திக் கொண்டிருப்பதாகவும், இந்த மாணவர்கள் ஏற்கனவே நேரம் ஒதுக்கியிருப்பதாகவும் எனவே தற்போது கதைக்க முடியாது நாளைய தினம் கதைப்போம் என வைத்தியகலாநிதி கூறியுள்ளார். அச்சந்தர்ப்பத்தில் பரீட்சையில் ஈடுபட்டிருந்த இரண்டு மாணவிகளையும் வெளியே செல்லும்படி அச்சுறுத்திவிட்டு வைத்தியகலாநிதியை கத்தியால் குத்த பாய்ந்துள்ளார். பேராசிரியர் தனது இருக்கையிலிருந்து எழுந்த நேரத்தில் கத்தி அவரின் வயிற்றில் பாய்ந்துள்ளது. இருக்கையிலிருந்து எழுந்திராவிடின் கத்தி நெஞ்சில் பாய்ந்திருக்குமென கூறப்படுகின்றது. மறுபடியும் வைத்தியகலாநிதியை கத்தியால் குத்த எத்தனித்த நேரத்தில் வைத்தியகலாநிதி மாணவனின் கையைப் பிடித்து தடுத்துள்ளார். கண்ணன் என்ற ஒரு உதவியாளர் கலாநிதி சிவராஜாவின் அவலக்குரல் கேட்டு உள்ளேபாய்ந்து அந்த மாணவனை வெளியேற்றியிருக்கிறார் எனத் தெரியவருகின்றது.
ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கலாநிதி என். சிவராஜா அவர்கள் தீவிர கண்காணிப்புப் பிரிவில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கலாநிதியை கத்தியால் குத்திய மாணவன் ரிஜி ரஜிவ் எனும் பெயரையுடையவன். இவர் 1998ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்துக்கு அனுமதிபெற்றவர். தற்போது 3ம் ஆண்டில் கற்றுவரும் இவர் தொடர்ச்சியாக பல வருடங்கள் பரீட்சையில் சித்தியடைய தவறியுள்ளார். அதேநேரம், இந்த மாணவன் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட ஒருவன் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக வேண்டி வைத்திய சிகிச்சைகள் பெற்றுள்ளதுடன், தனக்கு எந்தவித வியாதியும் இல்லையென மருந்துகள் அருந்துவதை தவிர்த்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது. சம்பவ தினம் இந்த மாணவன் மருத்துவபீட விரிவுரையாளர்களையும் துறைத்தலைவரையும் தேடித்தேடிவந்து கடைசியில் சமூக மருத்துவத்துறை அலுவலகத்தில் இருந்து மாணவர்களுடன் பரீட்சையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கலாநிதி சிவராஜாவிடம் தனது கைவரிசையைக் காட்டியுள்ளான். மருத்துவபீடத்தினை தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் இயங்க வைப்பதற்கு டாக்டர் நந்திபோன்ற பேராசிரியர்களின் வழியையொற்றி கலாநிதி சிவராஜா பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
கலாநிதியை கத்தியால் குத்திய பின்பு சுமார் 1மணிநேரம் சமூக மருத்துவத்துறை அலுவலகத்தினருகே இம்மாணவன் சுதந்திரமாக நடமாடியுள்ளதாகவும் அந்நாள் இரவு அந்த மாணவன் மாணவர் விடுதியில் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கத்தியால் குத்திய மாணவனை பிடித்து பொலிஸில் ஒப்படைக்க ஏனைய மாணவர்களோ அங்குள்ளவர்களோ நிர்வாகத்தினரோ முனையவில்லை எனவும் அந்த மாணவன் மிகவும் சுதந்திரமான முறையிலே நடமாடியதாகவும் மேலும் தெரியவருகின்றது.
இது போன்ற சம்பவம் நிகழுமிடத்து பல்கலைக்கழக நிர்வாகம் உரிய விடயத்தை உடன் பொலிஸிக்கு அறிய கொடுக்க வேண்டிய நிலையுள்ளது. ஆனால், இந்த விடயம் குறித்து உடனடியாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்படவில்லை என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கலாநிதி என். சிவராஜா 72 வயது நிரம்பியவர். தனது 65ஆவது வயதில் ஓய்வுபெற்ற பின்பும் உலக சுகாதார நிறுவனத்தின் வடக்கு இணைப்பாளராக பணியாற்றிவந்தார். அதேநேரம், யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களுக்கு எதுவித ஊதியங்களும் பெறாமல் சேவையடிப்படையில் வருகை விரிவுரையாளராக விரிவுரைகள் நடத்தி வந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் தனது விரிவுரையாளர் தாக்கப்பட்ட நேரத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் அசமந்தப் போக்குடன் நடந்து கொண்டமை அனைவரினதும் விமர்சனங்களுக்கு உட்பட்டுள்ளது. குறித்த மாணவன் மறுதினம் வவுனியா காவலரங்கை பாதுகாப்பாக தாண்டிய பிற்பாடே முறைப்பாடு செய்யதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மறு புறமாக இந்த மாணவன் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற இவ்வளவு விரைவாக எவ்வாறு அனுமதி பெற்றான் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
பொலிஸ் தரப்பில் இது தொடர்பாக உடனடியாக முறைப்பாடு செய்யப்படவில்லை என்றும் கலாநிதி கத்தியால் குத்தப்பட்ட விடயம் குறித்த முறைப்பாட்டினை கடிதம் மூலமாகவே பல்கலைக்கழக நிர்வாகத்தால் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட சிலரினால் மறுதினம் இந்த விடயம் தொடர்பாக கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையக உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளப்பட்டு கொழும்பிலிருந்து யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட பின்பே பொலிஸார் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதுவரை உத்தியோகபூர்வமான முறைப்பாடுகள் பொலிஸாருக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. இது விடயமாக உண்மை நிலை அறிந்து கொள்ள பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தொடர்பு கொண்ட போதிலும்கூட தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை. தற்போது அந்த மாணவன் எங்குள்ளார் என்று தெரியவில்லை. அவரை தேடும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் கூட பல்கலைக்கழக விரிவுரையாளரை கத்தி குத்துக்கு இலக்காக்கிய ஒரு மாணவனுக்கு பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருக்க எவ்வாறு இடம் வழங்கப்பட்டது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இவ்விடயத்தில் நிர்வாகம் ஒத்துழைத்ததா என்ற கேள்வி ஏற்படுகின்றது. மறுபுறமாக இந்த சம்பவங்களை வைத்துப்பார்க்கும் போது மாணவர்கள் எதிர் காலத்தில் விரிவுரையாளர்களை அச்சுருத்தியே தமது சித்தியை அடைந்து கொள்ள முனைவார்கள் என்ற நிலை ஏற்பட மாட்டாது என்பதை உறுதிப்படுத்த முடியுமா? என்ற சந்தேகமும் எழுகின்றது.