அருட்சல்வன் வி
அருட்சல்வன் வி
அடுத்த வருடமும் அரசியலமைப்பில் சில திருத்தங்கள் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 13 வது திருத்தத்திலும் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளரும், அமைச் சருமான மைத்திரிபால சிறிசேன கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்துள்ள ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலைய த்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
18 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இன்று பெரும்பான்மையான எம்.பிக்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட உள்ளது. எதிர்பார்க்காத அளவு எதிர்க்கட்சி எம்.பிக்கள் இதற்கு ஆதரவு வழங்க முன் வந்துள்ளனர். இன்றும், நாளையும் (7, 8) மேலும் பலர் யாப்பு திருத்தத்திற்கு ஆதரவு வழங்க உள்ளனர். உத்தேச யாப்புத் திருத்தம் அவசரமாக சமர்ப்பிக்கப்படுவதாகவும் அது குறித்து ஆராய அவகாசம் வழங்கப்படவில்லை எனவும் எதிர்க் கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
ஆனால் 1978 யாப்பு, 13 வது 17 வது திருத்தங்கள் என்பன அவசர அவசரமாகவே நிறைவேற்றப்பட்டன. ஆனால் உத்தேச 18 வது யாப்புத் திருத்தம் குறித்து 3 மாதங்களுக்கு மேலாக பேசப்பட்டது. கட்சிகளின் கருத்துகளும் பெறப்பட்டன. நிறைவேற்று அதிகாரத்தை குறைக்கும் வகையிலே தற்பொழுது திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய திருத்தத்தின் படி ஜனாதிபதி கட்டாயம் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும்.
அரசாங்கத்துடன் இணையும் ஒவ்வொரு வரும் அபிவிருத்தியின் பங்காளர்களாகின்றனர். இலங்கையை பலமான நாடாக கட்டியெழுப்ப வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பை நாம் நிறைவேற்றுவோம். கட்டமைப்பு ரீதியான திருத்தங்கள் இம்முறை செய்யப்படவில்லை. அடுத்த வருடத்திலும் யாப்பில் தேவையான திருத்தங்கள் முன்னெடுக்கப்படும். சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவுக்கு சுயாதீனமாக செயற்படுவதற்காக அதிகாரங்கள் வழங்கப்படும். பொலிஸ் மா அதிபருக்கு எதிராக மக்களுக்கு முறையிட முடியும். சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு தொடர்பில் எதிர்காலத்தில் மேலும் திருத்தங்கள் பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்படும் என்றார்.
நாட்டை சுதந்திரமாக்கிய எமக்கு நாட்டு மக்கள் திருப்திப்படும் வாழ்க்கையைப் பெற்றுக்கொடுப்பது முக்கியமாகவுள்ளது என ஜனாதிபதி தெரிவித்தார். வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் வீட்டு உறுதிப் பத்திர மில்லாத 1300 பேருக்கு வீட்டு உறுதிகளை வழங்கும் வைபவம் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வீட்டுரிமையாளர்களுக்கு உறுதிப் பத்திரத்தைக் கையளித்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:
சிலர் இந்த நாட்டில் ஜனநாயகமில்லை எனவும் சர்வாதிகாரமே ஓங்கியுள்ளதெனவும் கூறி வருகின்றனர். இது பொறாமை மற்றும் வைராக்கியத்தின் வெளிப்பாடாகும். என்னைப் பற்றி மிக மோசமான கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. எனது குடும்பத்தை சீர்குலைக்கும் விதத்திலும் கூற்றுக்களை வெளியிட்டுள்ளனர். நான் கொழும்பு 7ல் பிறந்தவனென்றால் இதன் பிரதிபலிப்பு வேறு விதமாக இருந்திருக்கும். நான் மெதமுலன கிராமத்தில் பிறந்தவன். எனது செயற்பாட்டை சீரழிக்க முயற்சிக்கின்றனர்.
நாம் மக்களுக்காக நாட்டின் எதிர்கால சந்ததிக்காக சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தை முன்னெடுத்துள்ளோம். அதனை நிறைவேற்றுவோம். அதற்கு சகலரதும் பூரண ஒத்துழைப்பு அவசியம். வீட்டு உறுதிப்பத்திரிமில்லாதவர்களுக்கு வீட்டுரிமைப்பத்திரம் இன்று வழங்கப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். வீடற்றவர்களுக்கு வீடுகளை வழங்குவதே எமது நோக்கம். எனினும் அதனை ஒரே தடவையில் நிறைவேற்ற முடியாது. படிப்படியாக நடைமுறைப்படுத்தி வருகின்றோம். வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சானது மக்களுடன் நெருங்கியதாக இத்திட்டத்தை மேற்கொண்டு வருகிறது.
வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பது சுலப மான காரியமல்ல. எனினும் முடிந்தளவு அதற்குத் தீர்வுகாண செயற் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். எமக்கான காணிகள் அதிகரிக்காது எனினும் வீட்டுத் தேவையும் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. அதனால் நாம் திட்டமிட்ட செயற்பாட்டை முன்னெடுக்கின்றோம்.
நாம் இன்றைய தினத்தை மட்டும் கருத்திற்கொள்ளாது எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டே செயற்படுகிறோம். தற்போது நாடு ஒன்றிணைக்கப்பட்டு அபிவிருத்திப் பயணம் முன்னெ டுக்கப்படுகிறது. எதிர்கால பொருளாதாரம், சூழல், சமூக வளர்ச்சி பற்றி சிந்தித்து செயற்பட வேண்டியுள்ளது. இன்றேல் மோசமான பின்விளைவுகளையே எதிர்கொள்ள நேரும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
அவசரகாலச் சட்டத்துக்கு மட்டு மல்ல அரசியலமைப்பு திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதுடன் நான் இறக்கும் வரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு தெரிவிப் பேன் என கண்டி மாவ ட்ட ஐ. தே. க எம். பி. ஏ. ஆர். எம். ஏ. காதர் சபையில் தெரிவித்தார். இன்று நான் ஆளும் தரப்பு ஆசனங்களில் அமரவு ள்ளேன் என்றும் காதர் எம். பி தெரிவித்தார். ஐ. தே. கவுக்காக எனது வாழ்நாளில் முழுப் பகுதியையும் செலவு செய்தது போல என் பணத்தையும் செலவு செய்தேன். எனினும் கட்சிக்குள் கழுத்தறுப்புகள் நடைபெற்றன.
இன்று ஐ. தே. க வுக்குள் இருந்து கொண்டே அரசுக்கு ஆதரவு வழங்குகிறேன். இன்று (7 ஆம் திகதி) ஆளும் தரப்புக்கு வந்து அமருவதாக இருந்தேன். இருப்பினும் இன்று (8 ஆம் திகதி) மேலும் சில ஐ. தே. க. உறுப்பினர்களுடன் ஆளும் தரப்புக்கு வருவேன் என்றும் கூறினார்.
ஹிஜ்ரி 1431 புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை பார்த்து தீர்மானிக்கும் மாநாடு நாளை (9) வியாழக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மத்ரஸதுல் ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
நோன்புப் பெருநாள் தொடர்பாக தீர்மானிக்கும் வகையில் அன்றைய தினம் மஃரிப் தொழுகை நேரமாகிய 6.14 மணி தொடக்கம் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை பார்க்குமாறு சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக்கொள் கிறது. அவ்வாறு தலைப்பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரிலோ அல்லது 011-5234044, 2432110, 2390783 மற்றும் 0777-366099 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனோ தொடர்புகொண்டு அறியத்தருமாறு கொழும்பு பெரியபள்ளி வாசல் பொதுச் செயலாளர் நதுஷான் ஹஸன் கேட்டுக்கொள்கின்றார்.
உலமாக்கள், கதீப்மார்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள, ஷரீஆ கவுன்ஸில் பிரதிநிதிகள் ஜும்ஆப் பள்ளி வாசல், தக்கியாக்கள், சாவியாக்களின் நிர்வாகிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று அவசரகால சட்டம் வாக்கெடுப்பு இன்றி மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் 18 வது அரசியல் அமைப்பு சீர்திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தாம் உட்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுடன் வெளியேறினார்.
இதன் பின்னர் அவசரகால சட்டம் தொடர்பில் வாக்களிப்பு நடத்துவதற்கு எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றில் இல்லைமை காரணமாக வாக்கெடுப்பு இன்றி அவசரகால சட்டம் நிறைவேற்றப்பட்டது.
புனித குர்ஆன் பிரதிகளை எரிக்கும் அமெரிக்க தேவாலயத்தின் தீர்மானத்தைக் கண்டித்து ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பெருந்தொகையான மாணவர்களும் கலந்து கொண்டனர். அமெரிக்கா ஒழிக, ஏகாதிபதியம் அழிக, மதக் குரோதத்தை வளர்க்காதே எனப் பலவகையாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.
இந்நிலை ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கப் படைகளை மேலும் ஆபத்துக்கள்ளாக்கும் என அங்குள்ள நேட்டோ படைத்தளபதி எச்சரித்துள்ளார். அத்துடன் குர்ஆன் பிரதிகளை எரிக்கும் தீர்மானத்தை அமெரிக்க தேவாலயம் கைவிட வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்ட தினம் செப்டம்பர் 11 இல் நினைவு கூரப்படவுள்ளது. இது 2001 செப்டம்பர் 11 இல் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இத் தாக்குதலைக் கண்டித்தும் இதற்குத் தூபமிட்டதாக தேவாலயம் கருதும் புனித குர்ஆன் வசனங்களை எரிக்கவும் அமெரிக்காவிலுள்ள தேவாலயம் எண்ணியுள்ளது.
இதைக் கண்டித்தே ஆப்கானில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. இதன் எதிரொலிகள் ஏனைய இஸ்லாமிய நாடுகளுக்கும் பரவும் அபாயத்தையும் சுட்டிக்காட்டிய நேட்டோ தளபதி அரபுலகிலும், இஸ்லாமிய நாடுகளிலும் சமாதானத்தைக் கொண்டுவர அமெரிக்கா எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் இது தவிடு பொடியாக்கும் என்றும் கூறினார். உலகிலுள்ள 1.5 பில்லியன் முஸ்லிம்களின் மனங்களையும் புண்படச் செய்யும் இவ்வாறான வேலைகளால் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நீண்ட கால சமாதானக் கனவு சிதைக்கப்படும் ஆபத்துக்களையும் விளக்கினார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களைத் தோற்கடிக்க பொது மக்களின் ஆதரவு அமெரிக்க இராணுவத்துக்குத் தேவைப் படுகின்றது. தலிபான்களையும், ஆப்கான் பொதுமக்களையும் வேறுபடுத்தி தலிபான், அல் கைதாக்களை தனிமைப்படுத்த மேற்குலக நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளை குர்ஆன் பிரதிகளை எரிக்கும் இச்செயல் சீரழிக்கும் என்றும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. மற்றும் தலிபான், அல் கைதா அமைப்புகள் தேவாலயத்தின் இத் தீர்மானத்தை சாதகமாகப் பயன்படுத்தவும் வாய்ப்புகள் ஏற்படலாமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர்க் கந்தன் ஆலய தேர்த்திருவிழா நேற்று 7ம் திகதி நடைபெற்ற போது பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டனர். தேர்த்திருவிழா நேற்று அதிகாலை ஆரம்பமானது. தேர்த்திருவிழாவினைக் காண யாழ். குடாநாட்டில் இருந்தும் தென் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் பெருந்தொகையான மக்கள் வருகை தந்திருந்தனர். இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வோரும் பெருமளவில் வருகை தந்திருந்தனர்.
ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்தக்கூடிய உத்தேச அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு எதிராக பாராளுமன்றத்திற்கு வெளிப்புறத்தே பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க., ஜே.வி.பி.கட்சிகள் நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தன.
இன்று புதன்கிழமை உத்தேச திருத்தப் பிரேரணை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு இன்று மாலை இடம்பெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தமது எதிர்ப்புப் போராட்டங்களைத் தீவிரப்படுத்தி உள்ளன. இந்த அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு கடந்த வாரம் அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் எத்தனை தடவையேனும் போட்டியிடுவதற்கு வழிசெய்யும் வகையிலான இந்தத் திருத்தங்களை ஐ.தே.க., ஜே.வி.பி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன.