அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

நாட்டுக்கு எதிராக சதியில் ஈடுபடும் தலைவர்களை அடையாளம் கண்டு மக்கள் பாடம் புகட்டுவர் – ஜனாதிபதி

slpr080909.jpgஎதிர்கால சந்ததியினருக்கு சுபிட்சமான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கின்ற பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு மேலும் வலுவூட்டுவது தாய்நாட்டின் மீது பற்றுள்ள அனைவரினதும் கடமையாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தான் பிறந்து வளர்ந்து மரணிக்கின்ற தாய்நாட்டிற்கு எதிராக காட்டிக் கொடுப்புகளையும், சூழ்ச்சிகளையும் செய்வதையும் விடுத்து உலகின் பெருமையுடன் எழுந்து நிற்கக்கூடிய இலக்கை நோக்கி வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கும் எமது பயணத்தில் இணைந்து கொள்ளுமாறும் ஜனாதிபதி அனைத்து எதிர்க் கட்சியினருக்கும் அழைப்பு விடுத்தார்.

காலி மாவட்ட மகா சங்கத்தினர், மற்றும் இளைஞர் அமைப்புகளையும் அலரி மாளிகையில் சந்தித்து பேசிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். நேற்று முன்தினம் 17ஆம் திகதி இச்சந்திப்பு நடைபெற்றது.

எமது நாட்டைப் பற்றி தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்தி வெளிநாட்டினருடன் இணைந்து சூழ்ச்சிகளை செய்ய முற்படும் சகல தலைவர்களையும் அடையாளம் கண்டு தக்க பாடத்தை மக்கள் புகட்டுவார்கள். பயங்கரவாதிகளை காப்பாற்றுவதற்காக அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்துகொண்டு செயற்பட்ட சில தலைவர்கள் இன்று நாட்டில் சுதந்திரம் இல்லை எனக் கூறிக்கொண்டு ஆங்கில பத்திரிகைகளுக்கு பணம் செலுத்தி விளம்பரங்கள் செய்வது நாட்டின் மீதுள்ளபற்றுடன்தானா? எனவும் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

தென்பகுதியில் மட்டுமல்ல வட பகுதியிலுமுள்ள சிறுவர் சிறுமியர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் நோக்குடனேயே அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறேன். 30 வருடங்களின் பின்னர் வடபகுதி சிறுவர், சிறுமியர் ஆயுதங்களைக் கைவிட்டு பாட புத்தகங்களை கையில் எடுத்துள்ளனர். முகாம்களில் தங்கியுள்ள பிள்ளைகளின் கல்விக்காகவும் தேவையான அனைத்து கல்வி வசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம்.

நாட்டுக்காக எந்த சவால்களையும் எந்தவிதமான சேறு பூசுதல்களுக்கும் முகம்கொடுக்க நான் ஆயத்தமாக இருக்கிறேன். ஊடக நிறுவனத்தின் உரிமையாளரான எதிர்க்கட்சித் தலைவரின் மூத்த சகோதரர் கூட எமக்கு ஊடக சுதந்திரம் இங்கு நன்கு பேணப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் என்னிடம் தெரிவித்திருக்கிறார்.

புலிகளின் ஆவணங்கள் தொப்பிகலையில் கண்டுபிடிப்பு

190909lttes-file.jpgதொப்பிகலை பிரதேசத்திலுள்ள நாரக்கமுல்லையில் விடுதலைப் புலிகளின் மாவீரர் குடும்ப விபரங்கள் மற்றும் பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய முக்கிய ஆவணங்கள் விசேட பொலிஸ் குழுவொன்றினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. வவுனியா இடைத் தங்கல் முகாம் ஒன்றில் கைதாகிப் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி உறுப்பினரிடமிருந்து கிடைத்த தகவலையடுத்தே இவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

நேற்று அந்தப் பகுதிக்கு சென்றிருந்த பயங்கரவாத தடுப்புப் புலனாய்வுப் பிரிவினர் மறைவிடம் ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த பெருந் தொகையான இந்த ஆவணங்களில், விடுதலைப் புலிகளின் மாவீரர் குடும்ப விபரங்கள், சுமார் 10 ஆயிரம் பயிற்சி பெற்ற அங்கத்தவர் விபரம், வங்கி மற்றும் நிதி தொடர்பான ஆவணங்களுடன் தகவல் கருவிகளும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட லண்டனிலிருந்து வெளியாகும் ‘ ஜேன்ஸ் டிபென்ஸ்’ பிரதியும் காணப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

இந்தியா கைது செய்துள்ள இலங்கை மீனவர்களை மீட்க பேச்சுவார்த்தை

rohithaogollagama.bmpஇந்திய கடற் பிரதேசத்தில் அந்நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை மீட்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. இந்திய கடற்படையினரால் 9 மீனவப்படகுகளும் 51 மீனவர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை மீட்பதற்கு வெளி விவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் ஆலோக் பிசாதுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.

ஆனையிறவு ரயில் நிலைய புனரமைப்பு: சேகரிப்பு நிதி ஒரு கோடியை விஞ்சியது

150909students1.jpgஏ-9 வீதியில் ஆனையிறவு ரயில் நிலையத்தை நவீன மயப்படுத்துவதற்காக ஆசிரியர்கள் மாணவர்களினூடாக சேகரிக்கப்பட்ட நிதியின் தொகை ஒரு கோடி ரூபாவை விஞ்சிவிட்டதாக கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.

‘வடக்கிற்கான நட்புப்பாதையில் பாசத்தின் உறைவிடத்தை ஒற்றுமையாகக் கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளில் கலவி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் பணிப்பிற்கமைய ஆனையிறவு ரயில் நிலைய புனரமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தைத் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள மாணவர்களின் உதவியுடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இலங்கை வங்கியின் இல. 9393439 என்ற கணக்கு இலக்கத்திற்கு நிதியுதவிகளை வைப்பிலிடுமாறு வேண்டப்படுகின்றனர். மாணவர்கள் பங்களிப்புச் செய்ய வேண்டிய ஆகக்குறைந்த தொகை 2 ரூபாவாகும். மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட அனைவரும் இதற்கு பங்களிப்புச் செய்வதற்கு ஆர்வமாக உள்ளனர். ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை இத்திட்டத்திற்கு நிதி வழங்க பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை ‌நிறு‌த்த‌ம் 2வது நாளாக தொட‌ர்‌கிறது

தமிழக மீனவர்கள் மீது இலங்கை நடத்தும் தாக்குதலை தடுக்க வேண்டும், இலங்கை சிறையில் உள்ள 21 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வே‌ண்டு‌ம் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் காலவரைய‌ற்ற வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர். இ‌ந்த வேலை ‌நிறு‌த்த‌ம் 2வது நாளாக இ‌ன்று‌ம் தொட‌ர்‌கிறது.

ராமே‌ஸ்வரத்தில் இருந்து கட‌ந்த 16ஆ‌ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்தனர்.மேலும் 5 படகையும், அதில் இருந்த 21 மீனவர்களையும் பிடித்து தாக்கினர். பின்னர் மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அனுராதாபுரம் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சிறையில் உள்ள 21 மீனவர்களையும் விடுதலை செய்ய கோரியும், இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் விரைவில் நடவடிக்கை எடுக்கக் கோரியும் நே‌ற்று முதல் மீனவர்கள் காலவரையற்ற வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ல் ஈடுபட்டுள்ளனர். இ‌ந்த வேலை ‌நிறு‌த்த‌ம் இ‌ன்று 2வது நாளாக ‌நீடி‌த்து வரு‌‌கிறது.

இது குறித்து தமிழக -பாண்டிச்சேரி மீனவர் கூட்டமைப்பை சேர்ந்த போஸ் கூறுகை‌யி‌ல், ”இலங்கை கடற்படை வேண்டுமென்ற இந்திய கடல்பகுதிக்கு வந்து மீனவர்களை தாக்குகிறது. இதனால் கடலையே நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களது உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். மீனவர்களின் வாழ்க்கைக்கும், உயிருக்கும் உத்தரவாதம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்” என்றார்.

மரத்தில் தொங்கிய நிலையில் இரு எலும்புக் கூடுகள் மீட்பு – துன்ஹிந்த நீர் வீழ்ச்சி காட்டுப் பகுதியில் பரபரப்பு…

rope-0000.jpgதுன்ஹிந்த நீர் வீழ்ச்சிக்கு மேல் காட்டுப் பகுதியில் மரமொன்றில் தொங்கிக் கொண்டிருந்த இரண்டு எலும்புக் கூடுகளை பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர்.

இவை கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இருவரது சடலங்கள் என பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். துன்கிந்த காட்டிற்குச் சென்ற இளைஞர் ஒருவரினால் பதுளை பொலிஸாருக்கு வழங்கிய தகவலொன்றின் அடிப்படையிலேயே பொலிஸார் விரைந்து இவ்விரு எலும்புக்கூடுகளையும் மீட்டுள்ளனர்.

பதுளை-சிரிமல்கொட கிராமத்தில் வசித்து வந்த இருபத்தொன்பது வயது நிரம்பிய டி. எம். சமந்த கெலும் என்ற இராணுவ சிப்பாயினதும் ஆலி-எலைப் பகுதியில் ரோக்கத்தன்னை தோட்டத்தில் வசித்து வந்த இருபத்தி நாலு வயதினையுடைய முத்துக்குமார் கீதா என்ற தமிழ் யுவதியுமே கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர்களென இனம் காணப்பட்டுள்ளது. இத் தற்கொலைகள் ஒரு மாதத்திற்கு முன் இடம்பெற்றிருக்கலாமென்று பொலிஸார் தெரிவித்தனர்.

நைலோன் நூலினால் கழுத்துக்கள் சுருக்கிடப்பட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்ப பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. சடலங்கள் அருகே இருந்த உடைப்பைகள் இரண்டையும் பொலிஸார் மீட்டுள்ளனர். இவ்விருவரின் தற்கொலைகள் என்ன காரணத்தினால் ஏற்பட்டதென்பது குறித்து பதுளைப் பொலிஸார் தீவிரப் புலன் விசா ரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தோட்டங்கள் வழமைக்குத் திரும்பின – 90வீதம் வரவு

080909teawomen.jpgமலையகப் பெருந்தோட்டங்களில் கடந்த இரு வார காலமாக இடம்பெற்று வந்த பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டங்கள் நிறைவடைந்து நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளது. தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் பிரச்சினை முற்றுப் பெற்றுள்ளதையடுத்து தோட்டங்களில் 90% மக்கள் வழமையான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

நுவரெலியா மாவட்டத்தின் அனைத்துத் தோட்டங்களிலும் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பியுள்ளனர். தீபாவளிப் பண்டிகை வருவதனாலும், சம்பள நிலுவையைப் பெறவிருப்பதனாலும் தொழிலாளர்கள் மும்முரமாகத் தொழிலுக்குச் செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. வேலை நாட்கள் குறையுமானால் தீபாவளிப் பண்டிகை காலத்தில் தொழிலாளர்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும். இதனால் தோட்ட நிர்வாகத்துடன் ஒத்துழைத்து நன்மைகளைப் பெறும் நோக்கில் தொழிலாளர்கள் செயற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹட்டன், பொகவந்தலாவை, புளியாவத்தை பகுதிகளில் சில தோட்டங்களில் இன்னமும் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத சில தொழிற்சங்கங்களைச் சார்ந்த தொழிலாளர்கள், பொகவந்தலாவை, பொகவான, செல்வகந்தை உள்ளிட்ட தோட்டங்களில் தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பு, ஒத்துழையாமை போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்

சூரிய மண்டலத்துக்கு வெளியே பாறையிலான முதல் கிரகம் கண்டுபிடிப்பு

சூரிய மண்டலத்துக்கு வெளியே பாறையிலான முதல் கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சூரிய மண்டலத்தில் பூமியில் மட்டும் தான் மனிதர்கள் வாழ்கிறார்கள். ஆனால் மற்ற கிரகங்களிலும் உயிரினங்கள் இருக்கலாம் என்ற எண்ணம் விஞ்ஞானி களுக்கு இருக்கிறது- இதனால் வேறு கிரகங்களில் உயிரினம் இருக்கிறதா என்பதை கண்டு பிடிப்பதற்கான தேடும் படலத்தை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.

சூரிய மண்டலத்துக்கு வெளியே 300க்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். ஆனால் அவை உறுதியில்லாதவை. உயிரினம் உயிர் வாழ வேண்டுமானால் உறுதியான தரைப்பகுதி இருந்தால்தான் முடியும். 300க்கும் மேற்பட்ட கிரகங்களும் வெறும் வாயுவால் ஆனவை.

சமீபத்தில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் உறுதியான பாறை வடிவிலான ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது. இது சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள முதல் பாறை கிரகம் ஆகும். பாறை வடிவிலான கிரகம் கண்டுபிடித்து இருப்பது முக்கியமானதாக கருதப்படுகிறது.

இதற்கு கோரோட் – 7 டி என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. நாம் கண்டுபிடித்த கிரகங்களிலேயே பூமி மாதிரி இருப்பது இந்த கிரகம் தான் என்று ஜெர்மனியில் உள்ள துரிங்கர் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் டைரக்டர் ஆர்ட்டி ஹார்ட்செஸ் தெரிவித்தார்.

மஸ்கெலிய யுவதிகளின் தாயாரை நீதிமன்றில் சாட்சியமளிக்க உத்தரவு

கொழும்பு பெளத்தாலோக மாவத்தையில் சடலமாக மீட்கப்பட்ட இரு யுவதிகளின் தாயாரை கொழும்பு மஜிஸ்திரேட் முன்னிலையில் அஜர்செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக மஜிஸ்திரேட் ஆயிஷா ஆப்தீன், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு இதற்கான உத்தரவை விடுத்துள்ளார். ஒக்டோபர் 29ம் திகதிக்கு முன் தாயாரை ஆஜர் செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.

மஸ்கெலியாவைச் சேர்ந்த இரு தமிழ் யுவதிகள், கொழும்பு பெளத்தாலோக மாவத்தையிலுள்ள கால்வாயொன்றினுள் சடலமாக மீட்கப்பட்டனர். இருவரும் வீடொன்றில் பணியாளர்களாகப் பணியாற்றினர். பணிபுரிந்த வீட்டுக்காரரால் இரு யுவதிகளும் துன்புறுத்தப்பட்டனரா என்பது பற்றி நீதிமன்றம் மேற்படி தாயாரிடம் விசாரணைகளை நடத்தும்.

உலகின் மிக நீள தொலைக்காட்சி நெடுந்தொடர் முடிவுக்கு வருகிறது

guidinglightsoapopera.jpgஉலகி லேயே மிக நீளமான தொலைக்காட்சித் தொடரான ‘கைடிங் லைட்’ எனும் அமெரிக்க நெடுந்தொடர் 72 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது முடிவுக்கு வருகிறது.

1937ஆம் ஆண்டு என்.பி.சி. வானொலியில் தினந்தோறும் 15 நிமிடங்கள் என்று ஆரம்பித்த இத்தொடர் மக்களின் பேராதரவுடன் 1952ஆம் வருடம் தொலைக்காட்சித் தொடராக உருமாற்றம் பெற்றிருந்தது.

ஸ்பிரிங்ஃபீல்ட் என்ற கற்பனையான நகரத்தில் நடக்கும் காதல், கல்யாணம், கள்ளக் காதல், விவாகரத்து, அவ்வப்போதைய மர்மக் கொலை என்பதாக இந்த தொடர் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல் சென்றது.  ஆனால் பலவித தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெருகிவிட்ட தற்போதைய சூழலில் இந்நிகழ்ச்சியின் பார்வையாளர் எண்ணிக்கை குறைந்துவந்தது.