அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

ஜனாதிபதித் தேர்தலில் சிவாஜிலிங்கம் போட்டி : இன்று கட்டுப்பணம் செலுத்தினார்

sivajilingam.jpgதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதென தீர்மானித்து தமது கட்டுப்பணமான 75 ஆயிரம் ரூபாவை இன்று செலுத்தியுள்ளார்.
 
இந்த நிலையில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் இறுதிநாளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலில் ஒருவரை நிறுத்துமானால்  தாம் போட்டியில் இருந்து விலகிக்கொள்ளப் போவதாக சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார். இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்னவும் இணைந்தே தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எடுத்துள்ள முடிவானது அவரது தனிப்பட்ட முடிவேயன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்புடையதல்ல என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தள்ளார்

வார்ட் தாழமுக்கம் தணிந்துள்ளதாக அறிவிப்பு

satellite-dec.jpgதிருகோண மலைக்கு அப்பால் கடலில் ஏற்பட்டிருந்த ‘வார்ட்’ தாழமுக்க நிலை தணிந்துள்ளதாக காலநிலை அவதான நிலையம் கூறியது.  இதனால் வடக்கு கிழக்கு வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் ஏற்பட்டிருந்த சூறாவளி அச்சுறுத்தல் தணிந்துள்ளதாகவும் ஆனால் இன்று வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் கடும் மழை பெய்யும் எனவும் வானிலை அவதான நிலையம் கூறியது.

திருகோணமலைக்கு அப்பால் 250 கிலோ மீட்டர் தூரத்தில் கடலில் ஏற்பட்ட தாழமுக்க நிலையால் இலங்கைக்கு அச்சுறுத்தல் உள்ளதாக வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு நேற்று முன்தினம் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று காலை முல்லைத்தீவு கடலில் இருந்து 60-70 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த தாழமுக்க நிலை காணப்பட்டது. இந்த தாழமுக்க நிலை பலவீனமடைந்துள்ளபோதும் தாழமுக்க நிலை கரையை நெருங்குகையில் மீண்டும் பலமடையலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதனால் இன்று நண்பகல் 12.00 மணி வரை அவதானமாக இருக்குமாறு வடக்கு கிழக்கு மக்களுக்கு அறவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடராக பெய்துவரும் மழை காரணமாக அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.  இதேவேளை இடிமின்னல் தாக்கத்தால் நூற்றுக்கணக்கான வீடுகளில் மின்சார உபகரணங்கள் செயலிழந்துள்ளதாகவும் தெவிக்கப்படுகின்றது.

நாட்டையும் படையினரையும் பாதுகாக்கும் பொறுப்பு என்னுடையது – ஜனாதிபதி

mahinda0.jpgசகல துறைகளையும் சார்ந்த பிரதான தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்தனர். இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,

நாட்டின் தொழிலாளி வர்க்கம் எம் முடைனேயே உள்ளது. தொழிலாளர்களின் ஆதரவு இருக்கும் வரை எமது வெற்றி உறுதியே. மஹிந்த சிந்தனை மூலம் தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றியுள்ளோம். ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பிளவுபடுத்தி துண்டாடுவதற்கு உடன்படிக்கை மேற்கொண்டார். நாம் தாய்நாட்டை மீட்டு அதனை ஐக்கியப்படுத்தியுள்ளோம். நாம் இந்நடவடிக்கைகளை நேர்மையானதாக முன்னெடுத்தோம்.

நாட்டை மீட்ட படையினருக்கு எதிராகப் பலர் விமர்சிக்கின்றனர். படையினருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டபோது அதற்கு எதிராக நாம் குரல்கொடுத்தோம். படையினரை அகெளரவப்படுத்துவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். தாய் நாட்டையோ நாட்டை மீட்டுத்தந்த படையிரையோ காட்டிக்கொடுக்க எவராலும் முடியாது. நாட்டின் தலைவர் என்றவகையில் நாட்டையும் படையினரையும் பாதுகாக்கும் பொறுப்பு எனக்குள்ளது. அதேபோன்று சந்தர்ப்பவாதியாகி படையினரைக் காட்டிக்கொடுக்க வேண்டாம் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

எமது இராணுவத்தினர் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவர்கள் இரட்சணிய சேனையில் பணிபுரியக்கூட தகுதியில்லாதவர்களென்றும் ஆணையிறவு என்று பாமன் கடைக்கும், கிளிநொச்சி என்று மதவாச்சிக்கும் சென்றதாகவும் பலர் பரிகாசம் செய்ததை யாரும் மறந்து விடமுடியாது. சமாதானம் மூலம் அபிவிருத்தியையும் அபிவிருத்தியின் மூலம் சமாதானத்தையும் ஈட்ட முடியும் என்பதில் நம்பிக்கையுள்ளவன் நான். அந்த நோக்கத்தில் செயற்பட்டே சகல மக்களும் இணைந்து வாழும் தாய்நாட்டைக் கட்டியெழுப்பியுள்ளோம். இதில் நாம் பெருமையடைய முடிகிறது.

யுத்தத்திற்கு முகங்கொடுத்து நாட்டைப் பாதுகாத்ததுடன் நாட்டில் பாரிய அபிவிருத்திகளையும் எம்மால் மேற்கொள்ள முடிந்துள்ளது. ஒரே சமயத்தில் ஐந்து துறைமுகங்களின் நிர்மாணம், மின் உற்பத்தித் திட்டங்கள், விமான நிலையம், நீர்ப்பாசனத்திட்டங்கள் என பல்வேறு அபிவிருத்திகளை எம்மால் மேற்கொள்ள முடிந்துள்ளது.

கிராமிய அபிவிருத்தித் திட்டமான ‘கமநெகும’ மற்றும் ‘மகநெகும’ பாதை அபிவிருத்தித்திட்டங்களையும் எம்மால் வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்துள்ளது. அத்துடன் தொழிலாளர் வர்க்கத்தினரின் உரிமைகளை நாம் ஒருபோதும் நிராகரித்ததில்லை.

இந்த வகையில் அரச ஊழியர்களின் தொகையை 6 இலட்சத்திலிருந்து 12 இலட்சமாக எம்மால் அதிகரிக்க முடிந்துள்ளதுடன் நட்புறவு நாடுகளுடன் மேற்கொண்ட நடிவடிக்கைகளுக்கமைய எமது பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப முடிந்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் எமக்கு அச்சுறுத்தல் விடுக்கும் போதும், எரிபொருளின் விலை 145 டொலராகி நாணயத்தின் பெறுமதி அதிகரித்த போதும் நாம் அவற்றை முறையாக நிர்வகித்தோம். நாம் மத்திய கிழக்கோடு தொடர்பு கொண்டு மேற்கொண்ட நடவடிக்கைகளினால் எமது பொருளாதாரத்தைப் பாதுகாக்க முடிந்தது.

நாம் தொழிலாளர்கள் உரிமைகளைத் தொடர்ந்தும் பாதுகாத்து வருகிறோம். வங்கிகள் வீழ்ச்சியடைந்து கைத்தொழில் பேட்டைகள் மூடப்படும் நிலை வந்தபோதும் நாம் எமது தொழிலாளர்களைப் பாதுகாத்தோம். அவதூறுகள், பொய்ப்பிரசாரங்கள் சேறுபூசுதல்கள் இடம்பெறுகின்ற போதும் எமது கைகள் சுத்தமானவை. நாம் உங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்.

மாகாண சபைத் தேர்தலில் தொழிலாளிவர்க்கம் வழங்கிய ஆதரவினைப் போல் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் பூரண ஆதரவினை வழங்குவீர்களென்ற நம்பிக்கை எனக்குண்டு எனவும் தெரிவித்தார்.

ஆயுதங்களுடன் தாய்லாந்தில் தடுத்து வைக்கப்பட்ட விமானம் இலங்கையை நோக்கி வந்தது அல்ல அரசு நிராகரிப்பு

flight_.jpgவட கொரியாவிலிருந்து பெருந்தொகையான ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு வந்தபோது தாய்லாந்தில் தடுத்து வைக்கப்பட்ட விமானமானது இலங்கையை நோக்கிப் பயணம் செய்த விமானமெனத் தெரிவிக்கப்பட்டதை இலங்கை நிராகரித்துள்ளது.அந்த விமானம் இலங்கைக்கு வரவிருந்தது அல்ல என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் குலுகல்லவை மேற்கோள்காட்டி அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்தது.

வடகொரியாவிலிருந்து இலங்கைக்குச் செல்லும் வழியில் எரிபொருள் நிரப்புவதற்காக தாய்லாந்தில் தரையிறங்கிய விமானம் தடுத்து வைக்கப்பட்டதாகவும் சந்தேகத்தில் அந்த விமானத்தில் தேடுதல் நடத்தப்பட்டபோது பெருந்தொகையான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்ததாகவும் தாய்லாந்து அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. தடுத்து வைக்கப்பட்ட விமானத்தின் விமானிகள் தாங்கள் இலங்கையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகக் கூறியிருக்க கூடும் எனவும் தாங்கள் உண்மையில் செல்லும் இடத்தை மறைப்பதற்காக அவ்வாறு கூறியிருக்கக்கூடும் எனவும் சிலர் நம்புகின்றனர்.

இதேவேளை, இந்த விமானத்தின் பணியாளர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை தாய்லாந்து அதிகாரிகள் தாக்கல் செய்வார்கள் என்று அந்நாட்டு அரசாங்கப் பேச்சாளர் கூறியதாக ராய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்தது. அதேசமயம், விமானம் எங்கு நோக்கிப் பயணம் செய்தது என்பது பற்றி இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை என்று அந்தப் பேச்சாளர் கூறியுள்ளார்.

35 தொன் ஆயுதங்களுடன் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த விமானம் தொடர்பான தகவல்களை தாய்லாந்து அதிகாரிகளுக்கு அமெரிக்காவே வழங்கியதாக பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ, பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த விமானத்தின் 5 பணியாளர்களில் 4 பேர் கஸகஸ்தானையும் ஒருவர் பெலாரஸையும் சேர்ந்தவர்களாகும்.

யாழ்ப்பாண நூலகத்தை எரித்தவர்கள் இன்று நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு செல்கின்றனர் – இ. ஒ. கூ. தலைவர் தெரிவிப்பு

srilanka_ranil.jpg1982களில் யாழ். நூலகத்தை எரிப்பதற்கு தெற்கில் இருந்து தீப்பந்தத்தை விமானம் மூலம் எடுத்துச் சென்றவர்கள் இன்று நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு சென்று வழிபடுகின்றனர். என இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க தெரிவித்தார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்கவை கெளரவித்து கூட்டுத்தாபன தமிழ்ச் சேவை ஊழியர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடத்திய சேவை நலன் பாராட்டு விழாவில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு ஹட்சன் சமரசிங்க தெரிவித்தார். தொடர்ந்து அங்கு உரையாற்றிய ஹட்சன் சமரசிங்க,

தெற்காசியாவிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற நூலகமாக யாழ். நூலகம் விளங்கியது. இது ரணில் விக்கிரமசிங்கவின் மாமாவான ஜே. ஆர். ஆட்சிக் காலத்திலேயே எரிக்கப்பட்டது. அப்போது ஐ. தே. கட்சியின் இளைஞர் அணிக்கு பொறுப்பாக இருந்தவரும் ரணில் விக்கிரமசிங்க, இவர்கள்தான் அன்று வடக்கினை நாசப்படுத்துவதற்கு திட்டம் தீட்டியவர்கள்.

இவர்கள் நாட்டுப் பற்றற்றவர்கள். இவர்கள் கதைப்பது, தூங்குவது சாப்பிடுவதெல்லாம் ஆங்கிலத்தில்தான். இவர்களிடம் மேலைத்தேய நாட்டுப்பற்றே உள்ளது. தமது தாய்நாட்டைப் பற்றி இவர்களுக்கு சிறிதளவேனும் அக்கறை இல்லை. 1983 ஜுலைக் கலவரம் நடைபெற்றபோது எனது தமிழ் நண்பர்களையெல்லாம் காடையர்களைக் கொண்டு கொலை செய்தார்கள்.

நான் ஜே. ஆர்., ஆர். பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகிய நான்கு ஜனாதிபதியிடமும் சேவை செய்துள்ளேன். நான்கு முறை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் சேவையாற்றியுள்ளேன். அதில் மஹிந்த ராஜபக்ஷதான் ஒரு சிறந்த தலைவர் எனவும் ஹட்சன் சமரசிங்க வேண்டிக்கொண்டார்.

தேசிய பாதுகாப்பு இரகசியத் தகவல்கள்: ஓய்வுபெற்ற அல்லது சேவையிலுள்ள இராணுவ வீரரொருவர் வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றம்

தேசத்தின் பாதுகாப்பு மற்றும் அதன் அக்கறையுடன் கூடிய செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான இரகசிய தகவல்களை ஓய்வுபெற்ற அல்லது சேவையிலிருக்கும் இராணுவ வீரர் ஒருவர் வெளியிடுவது சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகுமென சிரேஷ்ட வழக்கறிஞர் காலிங்க இந்ததிஸ்ஸ கூறினார்.

தகவல் ஊடகத்துறையமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று சிரேஷ்ட வழக்கறிஞர்கள் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அந்தவகையில் சரத் பொன்சேக்கா நாட்டு மக்களுக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் களங்கம் ஏற்படும் வகையில் வார இறுதி ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியிருக்கும் செவ்வி சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகுமெனவும் சிரேஷ்ட வழக்கறிஞர் காலிங்க இந்ததிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.

உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தின்படி சரத்து 6, 1 (இ) மற்றும் சரத்து 7 ஆகியவற்றின் படி சரத்பொன்சேக்கா ஊடகத்துக்கு வழங்கியிருக்கும் தகவல் சட்டப்படி குற்றமாகுமென கணிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த வழக்கறிஞர் காலிங்க, குற்றச் செயல் சட்டத்தின்படி நிரூபிக்கப்படும் பட்சத்தில் சரத்து 6, 1 (இ) யின்படி 14 வருட சிறைத் தண்டனையும் சரத்து 7 இன்படி இரண்டு வருட சிறைத் தண்டனையும் வழங்கப்பட முடியுமெனவும் தெரிவித்தார்.  இருப்பினும் சரத் பொன்சேக்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு அரசாங்கம் மற்றும் சட்டமா அதிபர் கைக ளிலேயே தங்கியுள்ளதெனவும் அவர் கூறினார். பத்திரிகையில் பிரசுரமாகியிரு க்கும் அவரது செவ்வி நாட்டுக்கும் அதன் பாதுகாப்புக்கும் அச்சுறுத் தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

அவ்வாறாயின் பொன்சேக்கா அதே பத்திரிகையில் தனது மறுப்பு அறிக்கையை வெளியிட முடியும் அல்லது செய்தியாளர் மாநாடொ ன்றின் மூலம் தனது செவ்வி எந்த இடத்தில் திரிவடைந்திருக்கிறது என் பதனையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

அதற்கேற்பவே சட்ட நடவடிக் கைகள் எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

வழக்கறிஞர் அலி சப்றி இதுபற்றி கருத்துத் தெரிவிக்கையில், கடந்த சில காலமாகவே குறித்த ஆங்கிலப் பத்திரிகையில் அரசாங்க த்துக்கு எதிரான கருத்துக்களே வெளிவருகின்றன. அந்த வகையில் பத்திரிகை பிரசாரத்தில் ஏதாவது தவறு நடந்தி ருக்கும் என்ற கருத்தை இலகுவில் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.

சிரேஷ்ட வழக்கறிஞர் கோமின் தயாசிறி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள் நாட்டு க்கும் முப்படையின ருக்கும் அப கீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிடாது நாட் டின் வெற்றியை மாத்திரமே கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் கூற்றுக்கு இராணுவத் தளபதி கண்டனம்

jagath_jayasuriya.jpgபுலிப் பயங்கரவாதிகளைத் தோற்கடித்து படையினர் அடைந்த வெற்றியை காட்டிக்கொடுக்கும் வகையில் இராணுவத்துக்கு எதிராக ஜெனரல் சரத் பொன்சேகா சுமத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்களை தான் வன்மையாகக் கண்டிப்பதாக இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய கூறினார்.

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிய படைவீரர்களை கௌரவிக்கும் வைபவம் இன்று கொழும்பில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், உறுதிமிக்க தலைமைத்துவம் கிடைக்காதிருந்தால் இந்த வெற்றியை இராணுவத்தினரால் அடைந்திருக்க முடியாது.  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ஆகியோரின் வழிகாட்டல் காரணமாகவே இந்த வெற்றி படையினருக்குக் கிடைத்தது என்றும் இராணுவத் தளபதி மேலும் கூறினார். 

முல்லை, கிளிநொச்சி மாவட்டங்களில் இதுவரை 22,000 பேர் மீள்குடியமர்வு – உறவினர்களுடன் வசிப்போர் 17, 18இல் மீள்குடியேற்றம்

lankaidsleavingcamp.jpgமுல் லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் இதுவரையில் 22 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோரை மீளக்குடியமர்த்தும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தங்கியிருப்போரை மீளக்குடியமர்த்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர்கள் தெரிவித்தனர்.

வவுனியாவில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வசித்து வருபவர்கள் எதிர்வரும் 17 ஆம், 18 ஆம் திகதிகளில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி மற்றும் பூநகரி செயலாளர் பிரிவுகளில் மீளக் குடியமர்த்தப்படவிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களை விடுத்து வவுனியாவின் வெளியிடங்களில் தங்கியிருப்பவர்கள் தமது மீள்குடியேற்றத்தை உறுதி செய்து கொள்வதற்காக வவுனியா – குருமண்காட்டில் அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மீள்குடியமர்வு க்கான விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அரச அதிபர் கேட்டுக் கொண்டார். ஏற்கனவே, பதிவுகளை மேற்கொண்டோரே 17ம், 18ம் திகதிகளில் விசேட பஸ்கள் மூலம் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். தமக்கு அறிவிக்கப்பட்டுள்ள திகதியன்று நகர சபை மைதானத்திற்கு காலை 8 மணிக்கு வருகை தருமாறும் இதன் போது பாரிய பொதிகளை தம்முடன் எடுத்து வரவேண்டாமென்றும் அரச அதிபர் மேலும் கேட்டுக் கொண்டார்.

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உருத்திரபுரம் கிழக்கு, ஜெயந்திநகர், பெரிய பரத்தன், உதய நகர் மேற்கு ஆகிய இடங்களிலும் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் முழங்காவில், இரணைதீவு, நாச்சிக்குடா, ஜெயபுரம் வடக்கு, ஜெயபுரம் தெற்கு, கிராஞ்சி, பல்லவராயன்கட்டு, பொன்னாவெளி, நல்லூர், கரியாலை நாகபடுவான் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்களே 17ம், 18ம் திகதிகளில் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்.

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தங்கிருக்கும் முல்லைதீவு துணுக்காய், மாந்தை கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் மீளக்குடியமர்த்தப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

பல்கலைக்கழகக் கல்வியை முடக்கும் ரணிலின் வெள்ளை அறிக்கை யுகத்தை மாற்ற அரசுக்கு முடிந்துள்ளது – ஜனாதிபதி

mahinda0.jpgபல் கலைக்கழகக் கல்வியை முடக்கும் வகையில் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட வெள்ளையறிக்கை யுகத்தை மாற்றி உயர்கல்வித்துறையை சர்வதேசத்துக்கு நிகரானதாக முன்னெடுக்க அரசாங்கத்துக்கு முடிந்துள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாத்து கல்விமான்களின் சுதந்திரத்தையும் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு கல்விமான்களின் பங்களிப்பு பெரும்பலமாக அமையுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.நாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள், விரிவுரையாளர்கள், கல்வி மற்றும் கல்வி சாரா அதிகாரிகள் கலந்து கொண்ட நிகழ்வு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.

அமைச்சர்களான பேராசிரியர் விஷ்வா வர்ணபால, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், பந்துல குணவர்தன, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்த தாவது:- பூரண சுதந்திரமடைந்துள்ள நாட்டில் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதே இன்றைய முக்கிய தேவையாகவுள்ளது. அத்துடன் கல்விமான்கள் அச்சுறுத்தப்பட்ட காலங்கள் போலல்லாது கல்விமான்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.

தேசிய உணர்வை இல்லாதொழிக்க சில சக்திகள் முற்பட்ட போது, அதற்கெதி ராக நாம் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம். அதேபோன்று உயர் கல்வியென்பது ஒரு சாராருக்கு மட்டுமே உரித்தானது என்ற நோக்கில் நாம் ஒருபோதும் செயற்படவில்லை. சிலர் இக்காலகட்டத்தில் தார்மீக சமுதாயம் பற்றிப் பேசியபோதும் நாடு பற்றிய சிந்தனை அவர்களுக்கு இருக்கவில்லை. நாட்டின் இன்றைய சூழலை கருத்திற் கொண்டு கல்விமான்கள் மிகுந்த தெளிவோடு செயற்படுவது முக்கியம். கல்விமான்களுக்கு விலங்கிட்டு அவர்களின் கருத்துக்களை அடக்க ஒருபோதும் எவருக்கும் இடமளிக்க முடியாது.

புலிகள் பெருமளவிலான கல்விமான்களை அச்சுறுத்தியும் படுகொலை செய்துமுள்ளனர். வடக்கு, கிழக்கு கல்விமான்களுக்கு புலிகளே பெரும் அச்சுறுத்தலாக விளங்கினர். அதனைப் பற்றி நான் மேலும் விபரிக்க வேண்டிய அவசியமில்லை. கல்விமான்கள் பல்வேறு நிலைப்பாட்டைக் கொண்டவர்கள். எனினும் நாடு என்று வரும்போது சகலரும் ஒன்றித்த கருத்துடன் செயற்படுவது அவசியம். நாட்டின் உயர் கல்வித்துறையை மேம்படுத்துவதில் நாம் எப்போதும் முன்னின்று செயற்பட்டுள்ளோம். அதேபோன்று இலவசக் கல்விக்கும் நாம் முக்கியத்துவமளித்துள்ளோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர் மழை: மக்கள் இடம்பெயரும் அபாயம்

front.jpgஅம்பாறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இருந்து வந்த வெள்ள அச்சுறுத்தல் நீங்கியுள்ளது. நேற்று முதல் மழை ஓய்ந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் தேங்கியிருந்த வெள்ளநீர் படிப்படியாக குறைந்து வருகின்றது. இதேவேளை கல்முனை, கல்முனைக்குடி, பாண்டிருப்பு தாழ்ந்த பகுதிகளில் தேங்கியிருக்கும் வெள்ள நீரை அகற்ற கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

கிட்டங்கி வாவி நீர் மட்டம் குறைந்துள்ள போதிலும் கிட்டங்கி பாலத்தின் நீரோட்டத்தை சல்வீனியா தாவரம் தடுத்துள்ளதனால் வீதிக்குக் குறுக்காக வெள்ள நீர் ஓடிக் கொண்டிருக்கிறது. எனினும் போக்குவரத்து தடை ஓரளவு நீங்கியுள்ளது நீரோட்டத்தை தடை செய்யும் சல்வீனியா தாவரத்தை உடன் அகற்ற வீதி அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளத்தினால் சேமடைந்து இருக்கும் கிட்டங்கி வீதியை திருத்தம் செய்து மக்கள் பாவனைக்கு வழங்குமாறு கிழக்கு மாகாண உறுப்பினர் எஸ். புஸ்பராசா சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மக்கள் இடம் பெயரும் நிலை ஏற்படலாம் என மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

வெள்ளத்தின் காரணமாக செங்கலடி, பெருமாவெளிப் பிரதேசம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் 25 ஆம் கிராமம், வேத்துச்சேனை, ஆணைக்கட்டியவெளி, சின்னவத்தைக் கிராமங்கள் பாதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்த அரச அதிபர், இக் கிராமங்களின் பாலத்தின் ஊடான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஈரலக்குளம் பாதை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் படகுச்சேவை நடாத்தப்படுவதாகவும் தெரிவித்தார். ஐயங்கேணி, பலாச்சேலை, சித்தாண்டி கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவித்த அரச அதிபர் முள்ளாமுனை வயல் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது என்றார். கடந்த 81 மணித்தியாலயத்தில் 144.7 மில்லி மீற்றர் மழை மட்டக்களப்பில் பெய்துள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ். வசந்தகுமார் தெரிவித்தார். ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இன்று (12) பிற்பகல் 5.30 வரை 1534.6 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.