அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

சரத் பொன்சேகாவின் பிணை மனு உயர் நீதிமன்றத்தினால் நிராகரிப்பு

law-01.jpgமுன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை மனுவை இன்று இலங்கையின் உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நிபந்தனையின் அடிப்படையிலோ நிபந்தனையற்ற அடிப்படையிலோ பிணையை வழங்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
எனினும் குடும்ப உறுப்பினர்களும் சட்டத்தரணிகளும் பொன்சேகாவை பார்வையிடுவதற்கும், தான் விரும்பிய ஒரு வைத்தியரை பொன்சேகாவுக்கு சிகிச்சை  வழங்குவதற்கும் உடனடியான அனுமதியை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இவ்வழக்கு உயர்நீதி மன்ற நீதியரசர்களான ஷிரானி பண்டாரநாயக்க, பாலபட்டபெந்தி,ஸ்ரீபவன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்குஎடுத்துக்கொள்ளப்பட்டது. இந்தநிலையில், வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது. சரத் பொன்சேகா தொடர்ந்தும் கொழும்பின் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்

புனர்வாழ்வளிக்கப்பட்ட சிறுவர் படையைச் சேர்ந்தவர்கள் மீள்குடியேற்றம் -மீள்குடியேற்றத்துக்கு சமூக கிராமங்கள்

child_soldiers.jpgபுலிகளின் சிறுவர் படையைச் சேர்ந்தவர்களுல்; புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களை  மீள்குடியேற்றும் விஷேட திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

இவ்வாறு புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களை  சமூகங்களாக மீள்குடியேற்றுவதற்கு சமூக கிராமங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 18 புனர்வாழ்வு முகாம்களில் தற்போது புலிகளின் சிறுவர் படையைச் சேர்ந்தவர்களுக்கு  புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகின்றது. 

ஐ.தே.முன்னணியில் இணைய பொன்சேகா 3 நிபந்தனைகள் – நிராகரித்தது ஐ.தே. முன்னணி

sarath.jpgஎதிர்வரும் பொதுத் தேர்தலில் கூட்டணியாக போட்டியிடுவது தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகா தரப்பு முன்வைத்த கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமையப்பெறவில்லை என ஐக்கிய தேசிய முன்னணி அறிவித்துள்ளது.

பிரதமர் பதவி,  கட்சித் தலைமைத்துவம் மற்றும் அமைச்சுப் பதவிகள் தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகா தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இந்தக் கோரிக்கைகளுக்கு உரிய பதில் அளிக்கப்படாத காரணத்தினால் வெற்றிக் கோப்பை சின்னத்தில் ஜனநாயக தேசிய கூட்டமைப்பில் போட்டியிட ஜெனரல் சரத் பொன்சேகா தீர்மானித்துள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் கோரிக்கைள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கே பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டுமென கட்சி அறிவித்துள்ளது.

பொதுத் தேர்தலில் போட்டியிடும் த. தே. கூ. முன்னாள் எம்.பிக்கள் ஐ. ம. சு. முன்னணியில் போட்டி

thangeswary.jpgஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் ஐ. ம. சு. முன்னணியில் இணைந்து போட்டியிட உள்ளதாக அமைச்சர் டளஸ் அழஹப்பெரும தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் எம்.பி. செல்வி தங்கேஸ்வரியும் வன்னி மாவட்டத்தில் முன்னாள் எம்.பிகளான சிவநாதன் கிஷோர், கனகரத்னம் ஆகியோரும் போட்டியிட உள்ளனர்.

தங்கேஷ்வரி வேட்பு மனுப்பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ளதோடு ஏனையவர்கள் நேற்று (22) கையொப்பமிட ஏற்பாடாகியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்

வடக்குக்கு கடந்த வாரம் 550,000 சுற்றுலா பயணிகள்

jaffna.jpgவட பகுதிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 5 இலட்சத்து 50 ஆயிரம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் கடந்த வாரம் ஏ9 வீதி ஊடாக யாழ்ப்பாணம் சென்றுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

நாக விகாரையில் கடந்தவாரம் 2 இலட்சத்து 50 ஆயிரம் யாத்திரிகர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டதாகவும், இவர்களில் பெரும்பகுதியினர் தென் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் என்றும் யாழ்ப்பாணத்துக்கும் அதனைச் சுற்றியுள்ள ஏனைய முக்கிய இடங்களுக்கும் இவர்கள் விஜயம் செய்துள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் அச்சல ஜாகொட தெரிவித்தார்.

மூன்று தசாப்தங்களாக வடக்கில் இடம்பெற்று வந்த மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள தையடுத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையை உலகத்தில் பாதுகாப்பான இடங்களில் ஒன்றாக கருதி இங்கு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

வட பகுதிக்கான நீர் விநியோகத்தை சீர்செய்ய ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய வசதிகளை சீர்செய்யும் நடவடிக்கைகள் படிப்படியே எடுக்கப்படுமென்றும் அமைச்சர் மேலும் கூறினார்

ஹெல உருமய வேட்பாளர்களுக்கு மகாநாயக்கர்களின் ஆசீர்வாதம்

பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அபேட்சகர் பட்டியலில் போட்டியிடும் ஜாதிக ஹெல உருமய கட்சி உறுப்பினர்கள் மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளிடம் நேற்று ஆசீ பெற்றனர். இவர்கள் கண்டி தலதா மாளிகையிலும் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது கட்சிப் பிரதிநிதிகள் ஐ. ம. சு. மு.வில் போட்டியிட முடிவெடித்திருப்பதாகவும் மகா நாயக்கர்களுக்கு ஹெல உருமய பிரதிநிதிகள் எடுத்துக் கூறினர்.

ஜாதிக ஹெல உருமய கட்சியின் தலைவர் வண. எல்லாவல மேதானந்த தேரர், அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரண வக்க, துசார சுவர்ணா திலக்க, எம். சீ. ஜயரத்ன, சன்ன ஜயதிலக்க ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

பதில் பிரதம நீதியரசராக கலாநிதி சிறாணி பண்டாரநாயக்க

shirani_bandaranayake.jpgபதில் பிரதம நீதியரசராக கலாநிதி சிறாணி பண்டாரநாயக்க நேற்று அலறி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

பிரதம நீதியரசர் அசோக டி சில்வா உத்தியோக பூர்வ வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள தருணத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது

ஐ.ம.சு.கூ.வின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் அநுராதபுரத்தில்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 27ஆம் திகதி பிற்பகல் 4.00 மணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அநுராதபுரத்தில் நடைபெற உள்ளதாக ஐ.ம.சு. முன்ன ணி செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்தார்.

ஐ. ம. சு. முன்னணி ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது.  இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்த மறுதினம் ஐ.ம.சு. முன்னணி சார்பாக போட்டியிடும் சகல வேட்பாளர்களும் அநுராதபுரத்தில் ஒன்று கூடி ஜனாதிபதி முன்னிலையில் வாக்குறுதி அளிக்க உள்ளனர்.

மத அனுஷ்டானங்களின் பின்னர் கூட்டம் நடைபெறும்.

ஜ.தே.கூ.வின் வெற்றிக் கிண்ணத்தில் களம் இறங்குகிறார் ஜெனரல் சரத் பொன்சேகா

sarath.jpgஜனநாயக தேசியக் கூட்டணியின் வெற்றிக் கிண்ணம் சின்னத்தில் ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.தனது தீர்மானத்தை அவரின் சட்டத்தரணியும் முன்னாள் எம்.பி.யுமான விஜேதாச ராஜபக்ஷ மூலம் எதிரணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் அறிவித்திருக்கிறார். இதனை விஜேதாச ராஜபக்ஷ நேற்று உறுதிப்படுத்தினார்.

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக விரைவாகத் தீர்மானம் எடுக்குமாறு ஜெனரல் சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசியக் கட்சி கேட்டுள்ள நிலையில் ஜெனரல் சரத் பொன்சேகாவிடமிருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐ.தே.க.விலோ அல்லது ஜே.வி.பி.யிலோ இணைந்து போட்டியிடுவதில்லை என ஜெனரல் பொன்சேகா முன்னர் கூறியிருந்தார். இதனடிப்படையிலேயே தனது கட்சியின் மணிச்சின்னத்தை கைவிட்டு ஜனநாயக தேசிய கூட்டணியின் சின்னமான வெற்றிக்கிண்ணத்தை ஜே.வி.பி. நேற்று தேர்ந்தெடுத்துள்ளது. ஜெனரல் சரத்பொன்சேகாவின் அணியும் இச் சின்னத்திலேயே போட்டியிடப் போவதாக ஜே.வி.பி. கூறியுள்ளது. இதனை அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று திங்கட்கிழமை ராஜகீய மாவத்தையிலுள்ள ஜெனரலின் அலுவலகத்தில் செய்தியாளர் மாநாடு இடம்பெறுமென ஜே.வி.பி. கூறியுள்ளது.இன்று ஜெனரலின் அலுவலகத்தில் இடம்பெறும் செய்தியாளர் மாநாட்டில் பொன்சேகாவின் பாரியார் அனோமா கலந்து கொள்வாரென தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிக் கிண்ணத்தில் போட்டியிடுவதென பொன்சேகா தெரிவித்துள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தலைப் போன்று எதிரணிக் கட்சிகள் பொதுத் தேர்தலில் ஒன்றிணைவது சாத்தியமற்றது என்பது ஊர்ஜிதமாகியுள்ளது.

நுவரெலியா மாவட்ட தேர்தல் களத்தில்…

parliament.jpgநுவரெலியா மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக தேசியத் தொழிலாளர் சங்கம், தொழிலாளர் விடுதலை முன்னணி ஆகிய தொழிற்சங்க அரசியல் கட்சிகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து 5 சிறுபான்மையினரும் 5 பெரும்பான்மையினரும் போட்டியிடுகின்றனர்.

தொழிலாளர் தேசிய சங்கம் , தொழிலாளர் ஐக்கிய முன்னணி, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகிய தொழிற்சங்க அரசியல் கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து 5 சிறுபான்மையினரும் 5 பெரும்பான்மையினரும் போட்டியிடுகின்றனர்.

7 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் இம்மாவட்டத்தில் கடந்த 6 ஆவது பொதுத் தேர்தலில் 4 சிறுபான்மையினரும் 3 பெரும்பான்மையினரும் தெரிவானார்கள். கடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் ஆறுமுகன் தொண்டமானும் சீ.பீ.இரட்ணாயக்க மாத்திரம் மீண்டும் இம்முறை தேர்தலில் இம்மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகளாக அதன் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நுவரெலியா ரோட்டரிக் கழகத் தலைவரும் சட்டத்தரணியுமான பி.இராஜதுரை , தொழிலாளர் விடுதலை முன்னணிப் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.அருள்சாமி , மலையகத் தேசியத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் முன்னாள் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சருமான வீ.புத்திரசிகாமணி ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடுகின்றனர். இவர்களுடன் முன்னாள் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் சீ.பீ.இரட்ணாயக்க, முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்புப் பிரதியமைச்சர் நவீன் திஸாநாயக்க, மத்திய மாகாணசபை உறுப்பினர்களான நிமால் பியதிஸ்ஸ , குமார் திஸநாயக்க மற்றும் ஜே.எம்.சி.குணசேகர ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.திகாம்பரம், இச்சங்கத்தின் பிரதித் தலைவரும் மாகாணசபை உறுப்பினருமான உதயகுமார், தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் தலவாக்கலை லிந்துலை நகர சபை உபதலைவர் எல்.பாரதிதாசன் , இ.தொ.கா. முன்னாள் அமைப்பாளர் ஆர்.யோகராஜன் ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர். இவர்களுடன் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த நுவரெலியா மாநகர முதல்வரும் ஐக்கிய தேசியக்கட்சி நுவரெலியா அமைப்பாளருமான சந்தனலால் கருணாரட்ன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய மத்திய மாகாணசபை உறுப்பினருமான கே.கே.பியதாஸ , முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் ஜி.எம்.எம்.பியசிறி, முன்னாள் நுவரெலியா மாநகர முதல்வரும் ஐக்கிய தேசியக் கட்சி வலப்பனை அமைப்பாளருமான சட்டத்தரணி திருமதி நளின் திலக ஹேரத் மற்றும் முத்துபண்டா ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

மலையக மக்கள் முன்னணி அதன் தலைவி திருமதி சாந்தனிதேவி சந்திரசேகரன் தலைமையில் தனித்து மண்வெட்டி சின்னத்தில் போட்டியிடவுள்ளது.