அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

கண்டி மாநகரசபை மேயர் நீக்கப்பட்டதை ஆட்சேபித்து உறுப்பினர்கள் வெளிநடப்பு

கண்டி மாநகர சபை மேயர் எல்.பி.அலுவிகாரவை திடீரென பதவி நீக்கம் செய்தமை மத்திய மாகாண முதலமைச்சரின் நியாயமற்ற செயல் என்பதனை சுட்டிக்காட்டி ஐ.தே.க.உறுப்பினர்களும் ஜே.வி.பி. உறுப்பினர்களும் சபையை விட்டு வெளி நடப்பு செய்ததால் கூட்டம் 15 நிமிடங்களுடன் முடிவடைந்தது.

கண்டி மாநகரசபையின் மாதாந்தக்கூட்டம் நேற்று வியாழக்கிழமை மாலை பதில் மேயர் தலைமையில் கூடியது. இதன்போது ஐ.தே.க.உறுப்பினர்களும் ஜே.வி.பி.உறுப்பினர்கள் சிலருமாக கண்டி மாநகர சபையின் மேயர் எல்.பி.அலுவிகார பதவி நீக்கம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டிக்கும் வகையில் கைகளில் கறுப்புப்பட்டிகளை அணிந்து வந்திருந்தனர்.

கூட்டம் ஆரம்பமானதும் ஜே.வி.பி.உறுப்பினர் ஆனந்த கோணவல, மேயர் பதவி நீக்கப் பட்டமையானது முதலமைச்சரின் நீதி நியாயமற்ற செயலெனச் சுட்டிக்காட்டினார். ஏனைய சில உறுப்பினர்களும் இவ்வாறான கருத்துகளை தெரிவித்து சபையிலிருந்து வெளியேறினர். இதனையடுத்து கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு 18 நிமிடங்களுடன் சபை கலைந்து சென்றுள்ளது.

மட்டு. மாணவிமீது பாலியல் வல்லுறவு : ஒரு சந்தேக நபர் அடையாளம்

மட்டக்களப்பு புலிபாய்ந்த கல் பிரதேசத்தில் 8 வயது பாடசாலை மாணவி ஒருவர் இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான அடையாள அணிவகுப்பு வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.  இதன்போது சந்தேக நபர்களில் ஒருவரைப் பாதிக்கப்பட்ட மாணவி அடையாளம் காட்டியுள்ளார்.

கடந்த 12ஆ ம் திகதி குறிப்பிட்ட மாணவி பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் போது, வழியில் நீராடிக் கொண்டிருந்த இராணுவத்தினரால் வழிமறிக்கப்பட்டார். பின்னர் இவர் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக திகிலிவெட்டை இராணுவ முகாமில் கடமையில் இருந்த இராணுவ சிப்பாய்கள் 6 பேர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைதாகி நீதிமன்ற உத்தரவையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.  இது தொடர்பான அடையாள அணிவகுப்பு நடைபெற்ற போது, அன்றைய தினம் குறித்த முகாமில் கடமையிலிருந்த 49 இராணுவ சிப்பாய்களும் நிறுத்தப்பட்டிருந்ததாக பாதிக்கப்பட்ட மாணவி சார்பில் ஆஜரான சட்டத்தரணி பேரின்பம் பிரேம்நாத் தெரிவித்தார்.

4 சுற்றுக்களில் நடைபெற்ற இந்த அடையாள அணிவகுப்பில் இறுதிச் சுற்றிலேயே சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டதாகக் கூறும் அவர், குறிப்பிட்ட சந்தேக நபர்கள் 6 பேரும் தொடர்ந்தும் எதிர்வரும் 3ஆம் திகதி வரை நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்

ஸ்ரீரங்கா நுவரெலியா மாவட்டத்தில்…

unp-logo.jpgஎதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக் முன்னணி நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது.

கே.கே.பியதாசவை முதன்மை வேட்பாளராகக் கொண்டு, ஸ்ரீரங்கா, திகாம்பரம், உதயகுமார், சதாசிவம், எல்.பாரதிதாஸன் ஆகியோர் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிடவுள்ளனர்.

அரசியல் தேசியம் என்பவற்றுக்கு அப்பால் தமிழ் மக்களுக்குத் தேவைகள் உள்ளன! முன்னாள் எம்.பி. தங்கேஸ்வரி

thangeswari.jpgஅரசியல் தேசியம் என்பவற்றுக்கு அப்பால் தமிழ் மக்களுக்குத் தேவைகள் உள்ளன என்றும் நொந்துபோயுள்ள தமிழ் மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவூம் அரசாங்கத்தை ஆதரிக்கத் தீர்மானித்ததாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டு. மாவட்ட வேட்பாளருமான க. தங்கேஸ்வரி தெரிவித்தார். தேசியம், அரசியல் என்று கூறிக்கொண்டு இனியும் காலத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்த அவர் மக்களுக்கு இப்போது உடனடித் தேவையாக இருக்கும் விடயங்களை நிறைவேற்றுக்கொடுக்க வேண்டியதே அரசியல்வாதிகளின் பொறுப்பாகும் என்று குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்னமும் அந்தத் தவறையே மேற்கொள்கிறது. அவர்களின் செயற்பாட்டை தேர்தல் மேடைகளில் அம்பலப்படுத்துவேன். 30 வருட காலமாகப் பாதிக்கப்பட்டுள்ள படுவான்கரை உள்ளிட்ட பிரதேசங்களின் மக்களுக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொடுக்க ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றும் தங்கேஸ்வரி மேலும் கூறினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல்

 sandanaya.pngஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் இடம்பெறுகின்றவ்களின் பெயர்ப் பட்டியலை கூட்டமைப்பின் செயலாளர்  நாயகம் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தோதல்கள் ஆணையாளர் நாயகத்திடம் இன்று (26) கையளித்தார்.
பட்டியலில் இடம்பெறுகின்றவர்கள்.

ரத்னசிறி விக்கிரமநாயக்க
டி. எம். ஜயரட்ன
டலஸ் அழகப்பெரும
பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ்
டியூ குணசேகர
பேராசிரியர் விஸ்வா வர்ணபால
பேராசிரியர் திஸ்ஸ விதாரன
அச்சல ஜாகொட
எம். எச். முஹம்மட்
கீதாஞ்சன குணவர்தன
விநாயகமூர்த்தி முரளிதரன்
வி. ஜே. மு. லொக்கு பண்டார
சங்கைக்குரிய எல்லாவள மேதானந்த தேரர் சங்கைக்குரிய ஒமல்பே சோபித தேரர்
முத்துசிவலிங்கம்
சண்முகம் ஜெகதீஸ்வரன்
மொகமட் முசம்மில்
அனுருத்த ரத்வத்த
ஏ. ஆர். பீ. சூரியபெரும
ஜானக பிரியந்த பண்டார
பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க
லெஸ்லி தேவேந்திர
சந்திரசேகரன் சண்முகநாதன்
ஏ.எச். எம். அஸ்வர்
டொக்டர் ஹரிச்சந்திர விஜேதுங்க
யூ. எல். சாஹுல் ஹமீத்
கமலா ரணதுங்க
சரத் கோங்காகே
மாலினி பொன்சேகா

இராணுவ பதவிகளின் அந்தஸ்தை தவறாக பயன்படுத்தியதாலேயே பொன்சேகா கைது – பாதுகாப்பு செயலர்

gr.jpgஅரசியலில் நுழையும் நோக்கத்துடன் அரசியல் கட்சிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள இராணுவ தளபதி மற்றும் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஆகிய அதிகார பூர்வ பதவிகளின் அந்தஸ்தை பயன்படுத்தியமை காரணமாகவே ஓய்வு பெற்ற ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்ததாக பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ நேற்று முன்தினம் ஐ.ரீ.என். தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அப்பேட்டியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, அரசியலில் தலையிடாமை மற்றும் பங்கேற்காமை காரணமாக இலங்கை மற்றும் இந்திய இராணுவங்களுக்கு ஆசியாவில் பொறுப்புள்ள படையினர் என்ற நல்ல மதிப்பு உள்ளது.

எனினும் பொன்சேகா அவரது சேவைக்காலத்தில் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆதரவு பெற்றுக் கொள்ளும் நோக்கில் இராணுவ தளபதி மற்றும் கூட்டுப் படைகளின் பிரதானி ஆகிய பதவி அந்தஸ்தை சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளிடம் செல்வாக்கு பெறுவதற்காக பயன்படுத்தியுள்ளதுடன் ஒரு சில அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இராணுவ தளபதியின் அதிகாரபூர்வ வாசஸ்தலத்தையும் பயன்படுத்தியுள்ளார்.

இவ்வாறான அவரது தவறான நடத்தை மற்றும் இராணுவ ஒழுங்கினை மீறியமை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் சேவையில் இருக்கும் போது எவரும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்ற கருத்தை இளம் இராணுவ வீரர்களிடமும் ஏனைய நிலைகளில் உள்ள இராணுவ அதிகாரிகளிடம் ஏற்படுத்திவிடக்கூடும் இதனால் தான் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார்.

சரத் பொன்சேகா அவரது அதிகார பூர்வ இராணுவ பதவிகளின் அந்தஸ்தையும் இராணுவ வளங்களையும் அவரது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள பயன்படுத்தியமைக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

அடுத்த இரு வாரத்தில் பொன்சேகாவுக்கு எதிராக சிவில் நீதிமன்றத்தில் வழக்கு அரசாங்கம் அறிவிப்பு

sarath_fonseka.jpgஇராணு வத்தினால் கைதாகி தடுத்துவைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சிவில் நீதிமன்றத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்கிடையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவிருப்பதாக அறிவித்திருக்கும் அரசாங்கம், குற்றவியல் கோவை நாணயப் பரிமாற்றச் சட்டம் என்பவற்றின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தொடரவிருப்பதாகவும் தெரிவித்தது.

சுமார் 40 வருடங்கள் இராணுவச் சேவையிலிருந்து இராணுவத்தளபதியாக பதவி வகித்து பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததன் பின்னர் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று அரசியலில் பிரவேசித்த ஜெனரல் சரத் பொன்சேகா கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிரணிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்திருந்தார்.

இந்த நிலையில் அவர் மீது தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டு வந்தது. இதனடிப்படையில் ஜெனரல் பொன்சேகா இராணுவத்தினரால் இம்மாதம் 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.அவர் மீதான விசாரணைகளை இராணுவத்தினர் முன்னெடுத்து வரும் நிலையில் சட்டமா அதிபர் சிவில் நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சரவைப் பேச்சாளரும் ஏற்றுமதி அபிவிருத்தி சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்தார். அவர் தொடர்ந்து விளக்கமளிக்கையில் கூறியதாவது; ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் இராணுவம் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. அது முடிவுற்றதன் பின்னர் இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தல் போதுமான சாட்சியங்கள் இருக்குமிடத்து அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம்.

அது அவ்விதமிருக்க அரசாங்கத்துக்குக் கிடைத்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்கமைய அவர்மீது சிவில் நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்வதற்கு சட்டமா அதிபர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.இந்த வழக்கிற்கான குற்றப்பத்திரம் அடுத்த இரண்டு வாரங்களுக்கிடையில் தாக்கல் செய்யப்படவிருக்கின்றது.

சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்படவிருக்கும் குற்றப்பத்திரத்தில் நான்கு குற்றச்சாட்டுகள் உள்ளடக்கப்படவிருக்கின்றன.இராணுவத்துக்கு ஆயுதங்கள் உபகரணங்களை கொள்வனவு செய்த போது இடம்பெற்ற ஊழல் தொடர்பானது இது றைகோப் நிறுவன ஊழல் மோசடியாகும்.அடுத்தது இராணுவத்தை பிளவுபடுத்தி அரசுக்கு எதிராகச் செயற்படத்தூண்டியமை, மூன்றாவது தப்பியோடிய இராணுவத்தினரை அணிதிரட்டி தனது தேர்தல் பிரசாரப்பணிகளுக்குப் பயன்படுத்தியமை. இவற்றுக்கு மேலதிகமாக நாணயப் பரிமாற்றச்சட்ட விதிகளுககு முரணாக பெருந்தொகையான அமெரிக்க டொலர்களை வங்கிப்பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்திருந்தமையும் சேர்க்கப்பட்டுள்ளது.

இவற்றைச் சுட்டிக்காட்டியே சட்டமா அதிபர் குற்றப்பத்திரத்தை தயார்படுத்தி வருகின்றார்.இந்த சிவில் வழக்குக்குப் புறம்பாக ஜெனரல் பொன்சேகா மீதான இராணுவ விசாரணை தொடர்ந்து இடம்பெறும்.அத்துடன், ஒரு உயர் இராணுவ அதிகாரிக்கு வழங்கப்படும் சகல வசதிகளும் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் வழங்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, ஜெனரல் சரத்பொன்சேகா கைது விவகாரத்தை உள்ளூர் அரசியல் சக்திகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் பெரிதுபடுத்திக் காட்டி அரசுக்கு எதிரான விதத்தில் சர்வதேச மயப்படுத்தி அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த முனைந்து வருகின்றன. இவ்வாறான நிலையில் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து போதுமான பதிலாக அமைந்துள்ளது.அவரது கைது நியாயமானது என்பதை நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது எனவும் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார்.

ரணிலுக்கு எதிராக கிண்ணியாவில் ஆர்ப்பாட்டம்

ranil.jpgஐ.தே.க.  தலைவர் ரணில் விக்ரம சிங்கவுக்கு எதிராக ஐ.தே.க. ஆதரவாளர்கள் கிண்ணியாவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்ட முன்னாள் ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினரும், மூதூர்த் தொகுதி ஐ.தே.கட்சி அமைப்பாளரும், கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான எம்.ஏ.எம்.மஹ்ரூப்பிற்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், இதனைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தின் போது நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஐ.தே.கட்சி தலைவருக்கெதிரான கோஷமிட்டு பட்டாசு கொழுத்தி ஆரவாரம் செய்தனர். இதன் போது எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கென பயன்படுத்தப்படவிருந்த சுவரொட்டிகள், பெரிய கட்டவுட்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன. பிரதான வீதியூடாகச் சென்ற இப் பேரணியினர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்டக் காரியாலயத்திற்குள் புகுந்து சேதப்படுத்தினர்.

இந்நிலையில் திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பனர் எம்.ஏ.எம்.மஹ்ரூப் கருத்து தெரிவிக்கையில், நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், ஐ.தே. கட்சி தலைமைப் பீடம் தனக்கு அநீதி இழைத்துள்ளதாகவும் ஐ.தே.க. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் பயனளிக்க வில்லை. இதேவேளை, குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இங்கு ஆதரவாளர்களால் நேற்று காலை ஐ.தே.கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஹுப் ஹக்கீமுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து கொடும்பாவி கட்டி செருப்பு மாலை போட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன

வேட்பு மனுக்களை ஏற்கும் பணி இன்று நண்பகலுடன் நிறைவு.

election_cast_ballots.jpgபொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் பணிகள் இன்று (26) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகின்றன.

இன்றைய தினம் 200 இற்கும் அதிகமான சுயேச்சைக் குழுக்களும், அரசியல் கட்சிகளும் தமது வேட்பாளர் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்து முடிக்கின்றன. இதனால் ஏற்படும் பரபரப்பை சமாளிக்கும் வகையில், மாவட்டச் செயலகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் கடந்த 19ஆம் திகதி ஆரம்பமானதிலிருந்து நேற்று வரை அரசியல் கட்சிகள் ஒரு சில மாவட்டங்களுக்கான வேட்புமனுக்களையே தாக்கல் செய்துள்ளன. அதேநேரம் நேற்று நண்பகல் வரை சுமார் 250 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன் சுமார் 50 சுயேச்சைக் குழுக்கள் மாத்திரமே வேட்பாளர் நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளன.

இந்நிலையில் போட்டியிடவுள்ள அனைத்துக் கட்சிகளும், கட்டுப்பணம் செலுத்தியுள்ள சுயேச்சைக் குழுக்களும் இன்றைய தினத்திலேயே நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்கின்றன. இதன் பிரகாரம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களிடம் இருந்து பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் யாவும் இன்று முடிவடைந்துள்ளன.

சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு தொடர்பான ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான நண்பகல் 12.00 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணி வரை ஒன்றரை மணி நேர கால அவகாசம் வழங்கப்படவுள்ளது என தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கிறது. இதனைத் தொடர்ந்து வேட்பு மனுக்கள் தொடர்பான இறுதித் தீர்மானம் அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களினால் வெளியிடப்படவுள்ளது-

அநுராதபுரம் மாவட்டத்தில் நேற்று பிரதான கட்சிகள் வேட்புமனு தாக்கல்

imagescap42oig.jpgபொதுத் தேர்தலில் அநுராதபுரம் மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஜனநாயக தேசிய கூட்டமைப்புக் கட்சிகளின் வேட்புமனுக்கள் நேற்று வியாழக்கிழமை அநுராதபுர மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி எச்.எம்.கே.ஹேரத்திடம் கையளிக்கப்பட்டன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியல் பின்வருமாறு;

திஸ்ஸ கரல்லியத்த (தலைமை வேட்பாளர்), எஸ்.எம்.சந்திரசேன, துமிந்த திசாநாயக்க, டபிள்யூ.பீ.ஏக்கநாயக்க, வீரகுமார திசாநாயக்க, கமகே வீரசேன, அஸங்க செஹான் சேமசிங்க, எஸ்.சி.முத்துக்குமாரண, பேமசிறி ஹெட்டியாராச்சி, எம்.ஏ.சன்னசுதத் ஜயசுமன, ஜயலத் பண்டார செனவிரத்ன, ஏ.என்.எம்.சஹீட்.

வேட்பு மனுத்தாக்கலின் போது வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திசாநாயக்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் பெருமளவான ஆதரவாளர்கள் பங்குபற்றினர்.

மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஜனநாயக மக்கள் கூட்டமைப்பின் வேட்புமனுவை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த தலைமையில் வந்த குழுவினரால் கையளிக்கப்பட்டது.

இக்கட்சி சார்பான வேட்பாளர் பட்டியல் வருமாறு;

கே.டி.லால்காந்த (முதன்மை வேட்பாளர்), ரணவீர பத்திரண, எச்.எம்.வசந்த சமரசிங்க, அநுர திசாநாயக்க, மஹிந்த ஜயசிங்க, அருண திசாநாயக்க, சமந்த ரூபசிங்க, எஸ்.திலகசிறி, ஏ.டபிள்யூ. அப்துல் சலாம், லயனல் அத்துக்கோரள, எம்.ஜயரத்ன, சுசந்த குமார ஜயரத்ன.

எச்.கே.பந்துல பத்மசிறி தலைமையிலான சுயேச்சைக்குழுவொன்றும் புதன்கிழமை வேட்புமனுத்தாக்கல் செய்தது.