அருட்சல்வன் வி
அருட்சல்வன் வி
சிலியில் ஏற்பட்ட 8.8 ரிக்ஸ்டர் அளவு பூமி அதிர்ச்சி காரணமாக பூமியில் நாளின் நேரம் 1.26 மைக்ரோ செகண்ட் அளவுக்கு குறையலாம் என்று நாசா விஞ்ஞானிகள் கூறி இருக்கிறார்கள்.
சிலி நாட்டு பூகம்பம் காரண மாக ஏற்பட்ட அதிர்ச்சியால் பூமி யின் அச்சு 8 சென்டிமீட்டர் அல்லது 3 அங்குலத்துக்கு விலகி இருக்கலாம் என்றும், இதன் காரணமாக பூமியில் ஒரு நாளின் நேரம் 1. 26 மைக்ரோ செகண்ட் வரை குறைய வாய்ப்பு உள்ளது என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
டெயிலி நியூஸ் பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தவரும் நாற்பது ஆண்டுகாலம் ஊடகத்துறை அனுபவத்தைக் கொண்டவருமான பி. முத்தையா நேற்று (03) காலமானார். நேற்று முன்தினம் இரவு திடீர் சுகவீனமுற்ற அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இறக்கும்போது அவருக்கு வயது 62.
மலையகத்தின் வட்டவளையில் 1948ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் திகதி பிறந்த முத்தையா, ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் பழைய மாணவராவார். பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் 42 ஆண்டுகளாகப் பணிபுரிந்த அவர், 1967ஆம் ஆண்டு “செய்தி” பத்திரிகை வாயிலாக ஊடகத்துறை வாழ்வை ஆரம்பித்தார். 1975ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள சோவியத் யூனியன் தூதரகத்தின் தகவல் பிரிவில் மொழி பெயர்ப்பாளராகச் சேர்ந்து பதினான்கு ஆண்டுகள் பணியாற்றினார்.
பின்னர் ரூபவாஹினியின் (ஏசியா விஷன்) பிரிவில் ஆங்கிலப் பிரதி எழுதுநராகப் பணியாற்றியதுடன் செய்திப் பிரிவிலும் கடமையாற்றினார். 1989ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் உதவி ஆசிரியராகச் சேர்ந்து பின்னர் செய்தி ஆசிரியரானார். செய்தித்துறையின் உதவிப் பணிப்பாளராகவும் வானொலி மஞ்சரி ஆசிரியராகவும் கூட்டுத்தாபனப் பணிப்பாளர் நாயகத்தின் பிரத்தியேகச் செயலாளராகவும் ஒரே சமயத்தில் பணியாற்றினார்.
தினகரன், வீரகேசரி பத்திரிகைகளில் 1967ஆம் ஆண்டு முதல் எழுதிவந்த முத்தையா, வெளிநாட்டுச் செய்தி விமர்சனக் கட்டுரைகளையும் மரணிக்கும் வரை எழுதிவந்தார். ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலிருந்து ஓய்வு பெற்றபின்னர் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் சண்டே ஒப்சேவர் ஆங்கில வார இதழின் பிரதி செய்தி ஆசிரியராகப் பணியாற்றியதுடன் இறக்கும்வரை டெயிலி நியூஸ் பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.
சர்வதேச ரீதியில் நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டிகளில் ஆங்கில மொழியில் எழுதி முதற்பரிசைப் பெற்றிருக்கிறார். இவரின் வானொலி பங்களிப்புக்காக அகில இலங்கை சபரிமலை ஸ்ரீ சாஸ்தாபீடம் கலைமணி விருது வழங்கி கெளரவித்தது. தவிரவும், மத்திய, ஊவா சாகித்திய விழாக்களில் பாராட்டப்பட்ட முத்தையா, கடந்த வருடம் நடந்த மேல் மாகாண தமிழ் சாகித்திய விழாவில் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
அமரர் முத்தையாவின் பூதவுடல் பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3.30 இற்கு இறுதிக் கிரியைகள் நடைபெற்று பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
பதின்மூன்று இலங்கையர்களுடன் சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான கப்பல் சோமாலிய கடற் கொள்ளை யர்களினால் நேற்று கடத்தப்பட்டுள் ளது.
‘எம்.டி. அல் நிஸார் அல் சவுதி’ என்ற கப்பல் 5, 136 மெற்றிக் தொன் பொருட்களை எடுத்துச் செல்லும் போதே கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருப்பதாக ஏ.எப்.பி. செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
குறித்த கப்பல் ஜப்பானிலிருந்து சவூதி அரேபியாவின் ஜித்தாவை நோக் கிச் செல்லும் வழியில் ஏடன் வளை குடாவில் வைத்தே சோமாலியர் களால் கடத்தப்பட்டுள்ளது. கப்பல் கடத்தப்படும்வேளை அதில் பதின் னான்கு பேர் இருந்துள்ளனர். கிரேக்க கப்டனைத் தவிர்ந்த ஏனைய 13 பேரும் இலங்கையர்களென கிழக்கு ஆபிரிக்காவில் கடல் விவகாரங்களுக்கான உதவி நிகழ்ச்சித் திட்டத்தின் தலைவர் என்ட்ரூவ் முவன்குர ஏ. எப். பிக்கு தெரிவித்துள்ளார்.
இதனை ஐரோப்பிய ஒன்றியத்தின் கப்பல் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைப் பிரிவின் பேச்சாளர் ஜோன் ஹார்பர் என்பவரும் உறுதிப் படுத்தியுள்ளார்.
தன்னை முன்கூட்டி விடுதலை செய்யக் கோரி ராஜீவ் கொலை வழக்குத் தொடர்பில் வேலூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நளினி தாக்கல் செய்த வழக்கில் தமிழக அரசுக்கு மேற்கொண்டு அவகாசம் வழங்கப்பட மாட்டாது என சென்னை மேன்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில், நளினிக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு, பின் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 16 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருப்பதால், முன்கூட்டி விடுதலை செய்ய அரசிடம் நளினி கோரினார்.
அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை மேன்நீதிமன்றில் நளினி மனு தாக்கல் செய்தார். மனுவை தள்ளுபடி செய்த மேன்நீதிமன்றம், முன்கூட்டி விடுதலை செய்ய கோருபவரின் மனுவை பரிசீலிக்க சட்டப்படி ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும் என அரசுக்கு உத்தர விட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, மேன் நீதிமன்றில் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி மனு தாக்கல் செய்தார். இதற்கிடையில், முறைப்படி ஆலோசனைக் குழுவை தமிழக அரசு நியமித்தது. இந்நிலையில், நளினி மற்றும் சுப்ரமணியசாமி தாக்கல் செய்த மனுக்கள் மேன்நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. ஆலோசனைக் குழுவின் அறிக்கை அரசுக்கு இன்னும் வரவில்லை என, நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கு விசாரணை அவ்வப்போது தள்ளிவைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆலோசனைக் குழுவின் அறிக்கை இதுவரையில் வரவில்லை, என்பதால் இன்னும் அவகாசம் வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணையை 10ஆம் திகதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், மேற்கொண்டு விசாரணையை தள்ளிவைக்க முடியாது என தெரிவித்தனர்.
அமெரிக்க அரசின் இராஜாங்க துறையால் தெரிவு செய்யப்பட்ட அனைத் துலக அளவில் 2010 ஆம் ஆண்டின் துணிச்சல் மிகுந்த பெண்களுக்கான விருதைப் பெறப்போகும் பத்து பேரில் இலங்கையைச் சேர்ந்த பெண் சமூக சேவகி ஜன்சிலா மஜீத்தும் ஒருவர்.
20 வருடங்களாக இடம் பெயர்ந்து வாழும் இவர் உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழ்பவர்களுக்கான சமூக சேவையில் ஈடுபட்டுள்ளார். அமெரிக்க அரசின் இராஜாங்க துறை செயலாளர் ஹிலரி கிளிண்டன் திங்கட்கிழமை அறிவித்த விருது பெறுபவர்களுக்கான பட்டியலில் ஜன்சிலா மஜித்தின் பெயர் இடம் பெற்றுள்ளது.
எதிர்வரும் 10 திகதியன்று அமெரிக்க அரசின் இராஜாங்க துறை சார்பில் நடைபெறும் விழாவில் அறிவிக்கப்பட்ட பத்து பேருக்கும் ஹிலரி கிளிண்டன் விருது அளித்து கெளரவிப்பார். அரசு துறையால் வெளியிடப்பட்டுள்ள விபரங்களில் மஜீத் புத்தளம் பகுதியில் உள்ள சமுதாய சேவைகள் மையத்தின் நிர்வாக காப்பாளர் என்றும் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியைச் சார்ந்தவர்களுக்கு தன் சொந்த செலவில் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றார். மஜீத்தின் முக்கிய நோக்கம் அவர் வசிக்கும் பகுதியில் உள்ள முஸ்லிம் மற்றும் தமிழ் சமுதாயத்தினரிடையே நல்லுறவை ஏற்படுத்துவதாகும்.
பொதுத் தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தவென 75 வெளிநாட்டுப் பிரதிநிதிகளை பெப்ரல் அமைப்பும், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையமும் வரவழைக்க விருக்கின்றது.
இந்த இரு நிறுவனங்களும் இம் மாத பிற்பகுதியில் இவர்களை இலங்கைக்கு வரவழைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.
எதிர்வரும் 8 ம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளை வரவழைத்து ஈடுபடுத்த மேற்படி இரு நிறுவனங்களுக்கும் தேர்தல் ஆணையாளர் அனுமதி வழங்கியுள்ளார்.
எதிர்வரும் 25 ஆம் திகதிக்குப் பின்னர் இவர்கள் இலங்கைக்கு வருகை தருவார்கள். பெப்ரல் அமைப்பின் இணைப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார். இதன்படி, பெப்ரல் அமைப்பு 50 கண் காணிப்பாளர்களையும் தேர்தல் வன்முறையைக் கண்காணிக்கும் மத்திய நிலையம் 25 கண்காணிப்பாளர்களையும் வர வழைக்கவுள்ளது.
பெப்ரல் அமைப்பானது ஜப்பான், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேஷியா உட்பட ஆசிய நாடகளிலிருந்தே கண்காணி ப்பாளர்களை வரவழைப்பதாகத் தெரிவித் ததுடன் தேர்தல் வன்முறையைக் கண் காணிக்கும் மத்திய நிலையமானது ஆசிய – ஐரோப்பிய நாடுகளிலிருந்து கண்காணிப்பாளர்களை வரவழைக்கவுள்ளதாகவும் தெரிவித்தது.
இதேவேளை, தேர்தல் காலங்களில் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடபடுவோர் தொடர்பில் கவனஞ் செலுத்துவதுடன் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்சித் தலைவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் பெப்ரல் அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது.
தமக்கு உயிராபத்து அச்சுறுத்தல் இருப் பதாகக் குறிப்பிட்டு பாதுகாப்புக் கோரும் கட்சிகளின் தலைவர்களுக்கும், செயலாளர்களுக்கும் பாதுகாப்பு வழங்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது விடயமாக பொலிஸ் மா அதிபருக்கு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையப் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல நேற்றுத் தெரிவித்தார்.
தமக்கு உயிராபத்து அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிட்டு கட்சிகளின் தலைவர்களும், செயலாளர்களும் பொலிஸ மா அதிபரிடம் பாதுகாப்பு கோரும் பட்சத்தில் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இப்படியானவர்கள் முன்வைக்கும் காரணங்களில் விசேட கவனம் செலுத்தப்படும் என்றும் அதனடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
எதிரணியைச் சேர்ந்த முன்னாள் எம். பிக்கள் சிலர் தமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கும்படி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பென்தெரா டைக்ரிஸ் டைகர்ஸ் (Panthera Tigris Tigers) எனப்படும் இவ்வெள்ளைப் புலிகள் சியங் ஜிவ் சவாரி பூங்காவிலிருந்து தெஹிவளை மிருகக் காட்சிச்சாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளன.
உலகில் மிக அரிதாகக் காணப்படும் இந்த இனப் புலிகள் முதல் முறையாக நம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பொதுமக்கள் நேற்று முதல் புலிகளை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
வெள்ளைப் புலிகள் கோலாலம்பூரினூடாக இலங்கைக்கு கடந்த 27ஆம் திகதி கொண்டுவரப்பட்டதாக விலங்கியல் பூங்காவுக்கான பணிப்பாளர் அனந்த லொக்குரன முக்க தெரிவித்தார்.
மிருகங்களை பரிமாறிக்கொள்ளும் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கும் இப்புலிகளுக்கு விரைவில் இலங்கைப் பெயர்கள் வழங்கப்படவுள்ளன. இதில் ஆண்புலி மூன்றரை வயதினையும் பெண் புலி மூன்று வயதும் இரண்டு மாதங்களும் நிறைந்தன.
இவை ‘பெங்கல்’ புலிகள் எனவும் அழைக்கப்படும். இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வெள்ளைப் புலிகளின் வாசஸ்தலமாக கருதப்படுகின்றன.
புலிகளின் பரம்பரையலகில் ஏற்ப ட்ட மாறுபட்ட தன்மையே இவை வெள்ளை நிறமாக தோன்றுவதற்கு காரணமாகியுள்ளது. இரண்டு மீற்றர் நீளம் கொண்ட இப்புலிகள் சுமார் 180-285 கிலோ கிராம் வரை நிறைகொண்டவையாக இருக்கின்றன.
உலகில் மூவாயிரம் வெள்ளைப் புலிகளே இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை மூன்று கிலோ கிராம் நிறைகொண்ட இறைச்சியினை ஒரு வேளை உணவாக உட்கொள்ளும் என தெஹிவளை மிருகக்காட்சிச்சாலை அதிகாரியொருவர் கூறினார்.
ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரட்னவின் தாயாரான அசோக திலகரட்னவின் தனியார் வங்கி பெட்டகங்களில் காணப்பட்ட 7 1/2 கோடி ரூபா உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் இரகசிய பொலிஸார், குறிப்பிட்ட பணத்தை வங்கிக்கு எடுத்து வந்ததாக கூறப்படும் கறுப்பு நிற டிபென்டர் வாகனமொன்றை கைப்பற்றியுள்ளனர்.
இந்த கறுப்பு நிற டிபென்டர் வாகனம் தனுன திலகரட்னவினால் அவரது நெருங்கிய நண்பரொருவரின் பெயரில் 2008 பெப்ரவரி 14 ஆம் திகதி இராணுவ ஏல விற்பனையின் போது வாங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. வாகனம் வாங்கப்பட்ட அந்த தினத்தில் ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ தளபதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இராணுவ ஏல விற்பனையின் போது இந்த கறுப்பு டிபென்டர் வாகனம் எவ்வாறு வாங்கப்பட்டது என்பது தொடர்பாக விசேட ரகசிய பொலிஸ் குழுவொன்று விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
இதேவேளை 7 1/2 கோடி ரூபா நிதி தொடர்பாக தனுன திலகரட்னவின் தாயாரான அசோக திலகரட்ன கல்கிசை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது அவரை பிணையில் செல்ல மேலதிக மாவட்ட நீதிபதி அனுமதி வழங்கினார்.
அத்துடன் குறிப்பிட்ட பணம் வைக்கப்பட்டிருந்த வங்கிப் பெட்டகங்கள் இருந்த தனியார் வங்கியின் முகாமையாளர் தற்போது நடைபெற்றுவரும் விசாரணைகளில் இரகசிய பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ரகசிய பொலிஸார் அனுமதி கோரினர். நீதிபதி அதற்கு அனுமதி வழங்கினார்.
தனியார் வங்கியின் பெட்டகங்களில் இருந்து கைப்பற்றபட்ட மேற்படி பணம் தொடர்பாக அந்நிய செலாவணி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் விசாரணைகள் நடைபெறுவதாகவும் இந்த பணம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதா என்பது பற்றியும் விசாரிக்கப்படுவதாக ரகசிய பொலிஸாரின் சார்பாக வாதாடிய இன்ஸ்பெக்டர் மொஹான் மாசிம்புலா தெரிவித்தார்.
வங்கிப் பெட்டகங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் சம்பந்தமான பல போலி ஆவணங்கள் பற்றி விசாரிக்கப்பட்டு வரும் அதேவேளை இந்த பணம் தேர்தலுக்கு செலவிடப்பட்ட பணத்தில் மீதான பணம் என்பது பற்றி விசாரிக்கப் படுவதாகவும் ரகசிய பொலிஸார் நீதிமன்றத்தில் கூறினர்.