அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

2/3 பெரும்பான்மை பலத்தில் ஐ.ம.சு.மு. நம்பிக்கை கூட்டரசாங்கம் அமைக்கும்

2/3 பெரும்பான்மை பலத்தில் ஐ.ம.சு.மு. நம்பிக்கை கூட்டரசாங்கம் அமைக்கும் எதிர்பார்ப்பில் எதிரணி பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தமக்கு இலகுவாகக் கிடைக்குமென ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுதியாகத் தெரிவித்துவரும் நிலையில், அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள முடியாவிடினும் எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய கூட்டரசாங்கமொன்றை அமைக்க முடியுமென்ற உறுதியான நம்பிக்கையை ஐக்கிய தேசிய முன்னணி வெளிப்படுத்தி வருகின்றது.

தேர்தலுக்கு மூன்று நாட்களே முழுமையாக இருக்கின்ற நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரங்கள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இந்தத் தேர்தல் மேடைகளில் கடந்த இரண்டொரு தினங்களாகப் பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வெற்றி தம்பக்கமே சாதகமாகக் காணப்படுவதாகத் தெரிவித்து வருகின்றனர்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உட்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்குமென்று நம்பிக்கை தொனிக்கும் வகையில் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தென்பகுதியில் கடந்த வாரத்தில் நடைபெற்ற பல்வேறு கூட்டங்களிலும் கலந்துகொண்ட ஜனாதிபதி ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்கள் என்மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியதாகவும் பாராளுமன்றத் தேர்தலில் அந்த நம்பிக்கை மேலும் பலப்படுத்தக்கூடியதாக அமையுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார். அரசு முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள பணிகளைச் சீராக மேற்கொள்வதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை மிக அவசியமானது. அதனை நாட்டு மக்கள் தருவார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.

இதேபோன்று பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் கூட மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்கும் என்று உறுதிபடத் தெரிவித்திருக்கின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலில் ஆளுந்தரப்பு பின்னடைவு கண்ட தொகுதிகளில் இம்முறை அதிகூடிய பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளுமெனவும் இதனூடாக மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வது இலகுவாகிவிடுமெனவும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மை பலம் தமது கட்சிக்குக் கிடைக்குமெனவும் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் கூட்டரசாங்கத்தை தம்மால் அமைக்க முடியுமெனவும் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றார். ஜே.ஆர்.ஜயவர்தன அறிமுகப்படுத்திய விகிதாசாரத் தேர்தல் முறையால் ஒருபோதும் எந்தவொரு கட்சியாலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற முடியாது எனவும் அது ஒருபோதும் நடக்கப்போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

விகிதாசாரத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் நாட்டில் மூன்று பாராளுமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் இரண்டில் ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரத்துக்கு வந்தது. ஒரு தேர்தலில் சந்திரிகா பண்டாரநாயக்க தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிபீடமேறியுள்ளது. இந்தத் தேர்தல்கள் எதிலுமே மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆணை வழங்கப்படவில்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு 85 ஆசனங்கள் கிடைக்கும் என்று நம்புகின்றோம். ஐக்கிய தேசியக் கட்சி கஷ்டமான காலத்தில் கூட 80 ஆசனங்களுக்குக் குறையாமல் பெற்றுக்கொள்ள முடிந்தது. இம்முறை நாம் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாது போனாலும் கூட கூடுதல் ஆசனங்களைப் பெற்றுக்கொள்வோம். அதனையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,ஜனநாயக தேசியக் கூட்டணி ஆகியவற்றின் ஆதரவுடன் கூட்டரசாங்கத்தை அமைத்து நாங்களே ஆட்சியை நிறுவுவோம் எனவும் ரணில் விக்கிரமசிங்க உறுதிபடத் தெரிவித்தார்.

இதேபோன்று வரக்கூடிய தேர்தலில் ஜனநாயக தேசியக் கூட்டணி கணிசமான ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளுமெனவும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து கூட்டரசாங்கத்தை அமைக்குமெனவும் தெரிவித்த ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமாரதிஸாநாயக்க கூட்டரசாங்கம் அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் பிரசாரம் நாளையுடன் முடிவு – ஊர்வலங்கள், பேரணிகளுக்கு 7 தினங்களுக்கு தடை

2010 பொதுத் தேர்தலுக்கான சகல பிரசார நடவடிக்கைகளும் நாளை 5ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு பெறுகின்றன. இன்று 4ஆம் திகதி நள்ளிரவு முதல் தேர் தல் பிரசாரங்களுக்கென பயன் படுத்தப்பட்டுவரும் பெனர்கள், கட்அவுட்டுகள், போஸ்டர்கள், கொடிகளை அகற்றும் நடவடிக் கைகளை கடுமையாகச் செயற்படு த்துமாறு பொலிஸாருக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் தேர்தல் முடிவடைந்து ஏழு நாட்களுக்கு ஊர்வலங்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும் தடைசெய்யப் பட்டுள்ளதாக தேர்தல்களுக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார்.

நாளை நள்ளிரவு முதல் பாதுகாப்பு மற்றும் தீவிர கண்காணி ப்புப் பணிகளுக்கென நியமிக்கப் பட்டுள்ள 2584 நடமாடும் பாதுகாப்பு பிரிவுகளும் செயற்பட ஆரம்பிக்கவுள்ளன. இதேவேளை தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தும் இதுவரை வாக்களிக்காதவர்கள் இருப்பின் தவறாது உடனடியாக வாக்களிக்குமாறும், எதிர்வரும் எட்டாம் திகதி மாலை 4.00 மணி க்கு வாக்குச் சீட்டுகள் யாவும் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படவேண்டும் என்றும் தேர்தல் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

19,500 முப்படையினரும், 58,700 பொலிஸ் மற்றும் விசேட அதிர டிப் படையினரும் இன்று முதல் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத் தப்படவுள்ளனர். இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் வேட்பாளர்கள் அனைவரும் தமது பிரதான தேர்தல் பிரசார அலுவலகத்தைத் தவிர்ந்த ஏனைய அலுவலகங்களை மூடிவிட வேண்டுமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிகள், வாக்கெண்ணும் நிலையங்கள், வாக்குப்பெட் டிகள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் என்பவற்றுக்கும் பாதுகா ப்பு வழங்கப்படுகிறது. வாக்காளர் அட்டைகள் இதுவரை கிடை க்காதவர்கள் தபாலகங்களில் வாக்காளர் அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தேர்தல் திணைக்களம் அறிவிக்கிறது.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலைவிட பொதுத் தேர்த லுக்கு பாதுகாப்பு நடவடிக்கை கள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் நாட்டிலுள்ள 413 பொலிஸ் பிரி வுகளும் உஷார் நிலையில் வைக் கப்பட்டுள்ளன.

வேட்பாளர்கள் தாம் வாக்களிக்கும் வாக்குச்சாவடியைத் தவிர வேறு வாக்குச் சாவடிக்கு செல்வதாயின் வேட்பாளருக்குரிய ஆளடையாள அட்டையுடன் மட்டுமே செல்லமுடியும் என்றும் தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஓட்டமாவடி பாலம் நேற்று திறந்து வைப்பு

ஸ்பெயின் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 770 மில்லியன் ரூபா செலவில் ஓட்டமாவடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பாலம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மஹிந்த சிந்தனைக் கொள்கைத் திட்டத்தின் கீழ் கிழக்கின் வசந்தம் கருத்திட்டத்தினூடாக அமைக்கப்பட்டுள்ள இப்பாலம் 250 மீற்றர் நீளத்தையும் 10.5 மீற்றர் அகலத்தையும் கொண்டது.

பொலனறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள இப்பாலத்திற்கான நிர்மாண பணிகள் 2007 நவம்பர் 17ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் பெருந்தெருக்கள் அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியன இணைந்து நிர்மாணப் பணிகளை மேற்கொண்டிருந்தன. பெருந்தெருக்கள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவைக்குச் சமர்ப் பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைய இப்பாலத்திற்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஓட்டமாவடி பாலம் பிரமாண்டமான முறையில் நிர்மாணிக்கப்பட்டு நேற்று மக்கள் உபயோகத்துக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்றைய இந்நிகழ்வில் ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் அமீர்அலி, முரளிதரன், வேட்பாளர்களான அலி சாஹிர் மெளலானா, எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், மாகாண சபை உறுப்பினர் எம். எஸ். சுபைர் மற் றும் ஐ. ம. சு. மு. முக்கிய ஸ்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.

கொலை அச்சுறுத்தல்; ஆயுதம் வைத்திருந்தமை – ஐ. தே. மு. வேட்பாளர் கிதெலபிட்டிய கைது

பெண் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார் மற்றும் ஆயுதம் வைத்திருந்தார் ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சுசில் கிதெலபிட்டிய நேற்றுக் காலை கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பெலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய வெலிக்கடை பொலிஸார் நேற்று மேற் கொண்ட சுற்றி வளைப்புக்கமையவே ஐ.தே.மு வேட்பாளரும் அவரது வேன் சாரதியும் கைது செய்யப்பட்டதுடன் அவரது வாகனத்திலிருந்த 7.62 மில்லிமீற்றர் கைத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட் டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் பேச்சாளர் கூறியதாவது:- மிரிஹானை பொலிஸ் நிலையம் வந்த பெண் ஒருவர் தனக்கும் ஐ. தே மு. வேட்பாளரான சுசில் கிதெலபிட்டயவுக்குமிடையில் தொடர்பு இருந்து வந்ததாகவும் தற்போது அவர் தனக்கு அசீட் வீசி கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தல் விடுத்ததாகவும் முறைப்பாடு செய்துள்ளார். இதேவேளை தன்னைத் தவிர அவருக்கு மேலும் 20 பெண்களுடன் தொடர்பு இருந்து வருவதா கவும் அப்பெண் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து தேடுதல் நடத்திய பொலிஸார் அவரது வாகனத்திலிருந்து 7.62 மில்லி மீற்றர் ரக துப்பாக்கியொன்றை கைப்பற்றியுள்ளனர். அத்துடன் அவர் பயணம் செய்து கொண்டிருந்த வான் சாரதி கடற்படையிலிருந்து தப்பியோடியவர் என்ற உண்மை தெரியவந்ததையடுத்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளாரென பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

தேர்தல் முறையை மாற்றியமைக்க ஐ.ம.சு.முவிலுள்ள கட்சிகள் ஏகதீர்மானம்

2010 பொதுத் தேர்தல் முடிவடைந்த வுடன் பெரும்பான்மை பலத்துடன் அமைக்கப்படும் பாராளுமன்றத்தில் தேர்தல் முறையை மாற்றும் நடவ டிக்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ன ணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் இதனை ஏகமனதாக ஏற்றுக் கொண்டுள்ளதுடன் தீர்மானமும் செய்து கொண்டுள்ளன.

விருப்பு வாக்குகள் முறையிலான விகிதாசார தேர்தல் முறையின் கீழ் நட த்தப்படும் இறுதியான தேர்தல் இதுவாகத் தான் இருக்கப் போகிறது என அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரிவித்தார். நாட்டிற்கு பெரும் கேடாக இருக்கின்ற இந்த விருப்பு வாக்கு தேர்தல் முறையை மாற்றித் தாருங்கள் என்றும் மக்கள் உங்களிடம் கேட்கின்றனர்.

தொகுதிவாரியான தேர்தல் முறையில் நிச்சயமாக ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு உறுப்பினர் இருப்பார். அவர் அந்த தொகுதிக்கு பொறுப்பு கூறக்கூடியவராக, பொறுப்பு கூற வேண்டியவராக இருப்பார். குறிப்பாக அவர் கண் ணாடி வீட்டிற்குள் இருப்பவர் போன்று இருக்க வேண்டியவராக இருப்பார்.

எமது நாட்டிற்கு ஒரு தொல்லை யாக இருந்த பயங்கரவாத ஒழிக் கப்பட்டு விட்டது. அதே போன்று மிகப் பயங்கர விளைவுகளை தந்து கொண்டிருக்கும் விகிதாசார தேர்தல் முறையிலும் விரைவில் மாற்றம் கொண்டுவரப்படும் என்றார். தேர்தல் மறுசீரமைப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவு க்குழுவின் தலைவரான அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் முதற்கட்டமாக தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வரப்படும் என்பதை உறுதி செய்தார்.

வெற்று வாக்கு பெட்டிகளுக்குள் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு அனுமதி

வெற்று வாக்குப் பெட்டிகளை சீல் வைக்கும் போது அதன் உட்பகுதியில் பாதுகாப்பு ஸ்டிக்கர்களை ஒட்டுவதற்கு கட்சிகள்/ சுயேச்சைகளுக்கு தேர்தல் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. வாக்களிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படும் வெற்று வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைக்கப்படும் போது, கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்களின் தேர்தல் முகவர்கள் தாங்கள் விரும்பிய பாதுகாப்பு ஸ்டிக்கர்களை உட்பகுதியில் ஒட்ட முடியும்.

வாக்குப் பெட்டிகளில் மோசடிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளதாக தேர்தல் திணைக்கள உயர் அதிகாரியொருவர் கூறினார். வாக்கு எண்ணும் நிலையங்களில் தேர்தல் முகவர்கள் இதனைப் பரிசோதித்து அறிந்துகொள்வதற்கு அனுமதிக்கப் படுவார்கள்.

1365 பேர் ஒப்படைப்பு: பெற்றோருக்கு உதவும் வகையில் பம்பைமடுவில் விசேட கருமபீடம்

புனர்வாழ்வு நிலையங்களிலிருந்து கடந்த முதலாம் திகதி தமது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்ட 1365 பேரினதும் பெற்றோர் மற்றம் உறவினர்களுக்கு உதவும் வகையில் வவுனியா பம்பைமடுவில் இன்றும் நாளையும் விசேடமாக இரண்டு கருமபீடங்கள் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாக புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

வவுனியா பம்பைமடு பெண்கள் விடுதி மற்றும் பம்பைமடு தொழில்நுட்ப கல்லூரி ஆகிய இரு இடங்களிலுமே இவ் விசேட கருமபீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்றும் நாளையும் இயங்கவுள்ள இக் கருமபீடங்களுக்கென தனித்தனி அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதில் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்கள் கலந்துகொள்வரெனவும் அவர் கூறினார்.

குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் ஒவ்வொருவருக்கும் தமது தேவைகளை இலகுவாக்கும் வகையில் கையேடுகள் அடங்கப்பெற்ற கோப்பும் அவர்கள் முழுமையான புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் ஏனைய பிரஜைகளைப் போல் வாழ தகுதி பெற்றவர்கள் என்பதற்கான சான்றிதழும் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் வழங்கப்படும் கோப்பில் மருத்துவர்களால் பரித்துரைக்கப்பட்ட மருந்துகள், சிகிச்சை முறைகள், கலந்தாலோசிக்கப்பட வேண்டிய வைத்திய நிபுணர்கள் பற்றிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் இவர்கள் நாட்டின் எந்தவொரு வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற முடியும்.

தமிழ் மக்கள் இழந்த அனைத்தையும் விரைவில் மீளப் பெற்றுக் கொடுப்போம் – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

president.jpgதமிழ் மக்கள் கடந்த 30 வருடகாலங்களில் இழந்த அனைத்தையும் நாம் விரைவாக மீளப்பெற்றுக்கொடுப்போமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டர ங்கில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்குத் தலைமை வகித்து உரையாற்றிய ஜனாதிபதி;

வடக்கை வளமாக்கும் திட்டம் எம்மிடமுண்டு. பயம், சந்தேகம், அடக்குமுறையற்ற நாட்டைக் கட்டியெழுப்ப நாம் இன, மத, குல, பிரதேச பேதமின்றி இணைந்து செயற்படுவோ மெனவும் தெரிவித்தார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்து எனது வெற்றிக்குப் பங்களிப்புச் செய்தவர்களுக்கும், வேறு எந்தக் கட்சிக்கு வாக்களித்தாயினும் வாக்களிக்கும் உரிமையைப் பெற்று ஜனநாய கத்தை நிலை நிறுத்தியமைக்காகவும் அவர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். விடுதலைப் புலிகளினால் வடக்கு, கிழக்கு மக்களின் வாக்களிக்கும் உரிமை தடுக்கப்பட்டிருந்தது. அந்த ஜனநாயக உரிமையை மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது முக்கிய நோக்கமாக இருந்தது. அதனைச் செயற்படுத்திய மக்களுக்கு மீண்டுமொரு முறை பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 30 வருடகாலம் வடக்கு மக்களுக்குக் கிட்டாத அபிவிருத்தியினை மீளப் பெற்றுக்கொடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே எமது முக்கிய நோக்கமாகும்.

வடக்கு மக்களின் விவசாயம், ஏனைய தொழில்துறைகளை மேம்படுத்தி அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை நாம் இப்போதே ஆரம்பித்துவிட்டோம் என்பதை நான் குறிப்பிடவிரும்புகின்றேன். தெற்கிலிருந்து வாய்க்கால்கள் மூலம் யாழ்ப்பாணத்திற்கு நீரைப்பெற்றுக்கொள் வதற்கான திட்டமொன்றை நாம் விரைவில் நடைமுறைப்படுத்தத் தீர்மா னித்துள்ளோம். மக்களுக்கு குடி நீரும் விவசாயத்திற்கான நீரும் இதன் மூலம் கிட்டுவது உறுதி.

இரணை மடுக் குளத்தினூடாக இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளதுடன் மகாவலி கங்கை நீரை யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு வருவதற்கான மற்றுமொரு திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. சகல இன, மத, குல மாகாண மக்களையும் நாம் ஒன்றாகவே பார்க்கிறோம். எம்மிடம் எவ்வித வேறுபாடும் ஒருபோதுமில்லை. சகலருக்கும் ஒரே அகப்பையிலேயே அளக்கிறோம் என்பதை தமிழ் மக்கள் மறந்துவிடக்கூடாது.

இந்நாட்டினைப் பீடித்திருந்த 30 வருட பயங்கரவாதம் இன்றில்லை. சகல மக்க ளும் பயம் சந்தேகமின்றி சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ வழிவகுக்கப்பட்டுள் ளது. மக்கள் வழிபாட்டுத் தலங்களுக்கும், பாடசாலை, சந்தை என சகல இடங்க ளுக்கும் அச்சமின்றி போய்வரமுடியும். எம்மிடம் தமிழ், சிங்கள இனம் மற்றும் மாகாண பேதங்கள் இல்லை.

நாம் ஒரு தாய் மக்கள். இன ரீதியான அரசி யல் நோக்கங்கள் இனியும் இருக்கக்கூடாது. நாம் எதிர்காலத்தில் கிராம சபைகள் மற்றும் மக்கள் சபைகள் மூலம் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளோம். இவற்றில் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் பிரதிநிதிகளே உள்ளனர். அவர்கள் உங்கள் தேவைகளை நிறைவேற்றுவார்கள். வடக்கில் பல வருடகாலம் பின்னடைவு கண்டிருந்த அபிவிருத்தி இப்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது. கல்வி, விவசாயம், சுகாதாரம், மீன்பிடி, நீர், போக்குவரத்து வசதிகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளன.

புலிகளும் ஐக்கிய தேசியக் கட்சியினரும் என்ன செய்தனர் என்பது மக்களுக்குத் தெரியும். ஆசியாவின் பிரபல நூலகமான யாழ் நூலகத்தை எரித்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினரே. இது இந்நாட்டின் எதிர்கால சந்ததிக்குச் செய்யப்பட்ட பெருந்துரோகமாகும். இன்னும் பலர் புலிகளின் வலையில் சிக்கி செயற்படுகின்றனர்.

30 வருட துயர வாழ்க்கை இனியும் வேண்டுமா என நான் கேட்க விரும்புகிறேன். நாட்டி னதும் உங்கள் பிள்ளைகளினதும் எதிர்காலம் பற்றி சிந்தித்து புத்தியுடன் தீர்மானம் எடுப்பீர்கள் என நான் நினைக்கின்றேன். எமது முன்னணியில் தமிழ், முஸ்லிம் மக்களும் உள்ளனர். உங்கள் பிரதேசம் இன்னும் வளமாக மாறும். குறுகிய எண் ணம் வேண்டாம். ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையை மாற்றும் நோக்கில் நீங்களும் பங்காளர்களாகுங்கள். பயம், சந்தேகம், அடக்குமுறையற்ற நாட்டை நாம் இணைந்து கட்டியெழுப்புவோம். தவறான பொய்ப்பிரசாரங்களுக்கு துணைபோக வேண்டாம். வெற்றிலைச் சின்னம் உங்களினதும், உங்கள் பிள்ளைகளினதும் நாட்டினதும் வெற்றியாகுமெனவும் தெரிவித்தார்.

‘தோல்வியுறுவோருக்கு தேசிய பட்டியல் ஊடாக இடமில்லை’

பொதுத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்படும் எவரும் தேசியப்பட்டியலூ டாக மீண்டும் உள்வாங்கப்படமாட்டார்கள் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே தேசியப் பட்டியல் உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படு வார்கள். எமது கட்சி இந்த கொள்கையின் அடிப்படையிலேயே செயற்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 44 சட்டத்தரணிகள், ஐந்து வைத்திய கலாநிதிகள், ஊடகவியலாளர்கள், தொழிலதிபர்கள், தொழிற் சங்கவாதிகள், வர்த்தகர்கள் என அனைத்து துறைகளையும் சார்ந்த இளம் வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர். அவர்களுக்கு எமது கட்சி சந்தர்ப்பம் வழங்கியிருக்கிறது என்றும் கூறினார்.

பிரிட்டன் மேலும் ஒரு மில்லியன் பவுண் மனிதாபிமான உதவி

மனிதாபிமான உதவியாக மேலும் ஒரு மில்லியன் பவுண் நிதியை இலங்கைக்கு வழங்குவதாக பிரிட்டன் நேற்று அறிவித்தது. ஏற்கனவே கடந்த 18 மாத காலத்தில் பிரிட்டன் மொத்தம் 12.5 மில்லியன் பவுண் நிதியை மோதலினால் இடம்பெயர்ந்த மக்களின் ஆதரவுக்காக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் வன்னியில் நிலக்கண்ணி அகழ்வு நடவடிக்கைகளுக்கும் பிரிட்டன் உதவியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட மேலதிக ஒரு மில்லியன் பவுண் நிதி நலிவடைந்த குடும்பங்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் மீளப் பெறுவதற்கான தொழில் நுட்ப நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாக பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் பீட்டர் ஹெய்ன்ஸ் தெரிவித்தார்.