அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

வவுனியா வடக்கில் 80 வீத மீள் குடியேற்றம் பூர்த்தி

வவுனியா வடக்கு, நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் 80 சதவீதமான மக்கள் மீள்குடியமர்ந்துள்ளனர். இரண்டு கிராமசேவையாளர் பிரிவில் மாத்திரமே மீள்குடியேற்றம் நடைபெறவேண்டியுள்ள தென வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி பி. எம். எஸ். சாள்ஸ் தெரிவித்தார். நெடுங்கேணி அரசினர் வைத்தியசாலை திறக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சேவைகளும் நடைபெறுகின்றன. நெடுங்கேணி பிரதேச செயலகம் உரிய இடத்தில் இயங்கவைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ள தெனவும் அரச அதிபர் தெரிவித்தார்.

10 ஆயிரம் முன்னாள் புலிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதில் முன்னுரிமை -சிறைச்சாலைகளை மறுசீரமைப்பதும் முக்கிய பணி என்கிறார் அமைச்சர் டியூ

gunasekara.jpgபுலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் பத்தாயிரம் பேருக்குப் புனர்வாழ்வு அளிப்பதும் சிறைச்சாலைகளை மறுசீரமைப்பதும் தமது முக்கிய பணியாகுமென்று புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார். சிறைச்சாலை செயற்பாடுகளில் அரசியல் அழுத்தங்கள், பழிவாங்கல்களுக்கு இடமளிக்கப்போவதில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

பொரளையிலுள்ள அமைச்சில் நேற்று (29) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் அமைச்சர் குணசேகர இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். அமைச்சர் குணசேகர நேற்றுக் காலை 10. 45 இற்கு சுபவேளையில் கடமைகளைப் பொறுப்பேற்று ஆவணங்களில் கைச்சாத்திட்டார். இந்நிகழ்வுக்குப் பிரதமர் டி. எம். ஜயரத்ன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். பிரதியமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா மற்றும் நிதிப் பிரதியமைச்சர் சந்திரசிறி கஜதீர, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் ரணசிங்க, சிறைச்சாலைகள் ஆணையாளர் வீ. ஆர். சில்வா, பாராளுமன்றத்தின் முன்னாள் செயலாளர் நாயகம் சாம் விஜேசிங்க, கட்சி முக்கியஸ்தர்கள், அதிகாரிகள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் டியூ மேலும் கூறியதாவது, “நாட்டின் பதில் அரச தலைவராக பிரதமர் விளங்குகின்ற சமயத்தில், அவர் இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வது பெருமையளிக்கிறது. அவருக்கும் எனக்கும் நான்கு தசாப்தகால உறவு உண்டு. அவர் கண்டியில் கல்வி கற்றபோது வகுப்புகளுக்குச் செல்வதை விடுத்து கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்.

1956 இல் 1970 இல், 1994 இல், 2004 இல், 2010 இல் அரசாங்கத்தை அமைப்பதற்குப் பெரும்பங்காற்றி இருக்கிறார். மிகவும் சிரேஷ்ட அரசியல் தலைவர். அவர் பிரதமராக இருப்பதைவிட பதில் அரச தலைவர் என்பது இப்போதுதான் தெரியும். இது ஒரு புதிய அமைச்சு, இதனைப் பொறுப்பேற்றபோது அதன் பொறுப்புகள் புரியவில்லை. பின்னர்தான் தெரிந்துகொண்டேன். 30 வருடகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கவேண்டும்.

இதில் வடக்கு, கிழக்கு மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளார்கள். புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் 10 ஆயிரம் பேருக்குப் புனர் வாழ்வளித்து அவர்களை சமூகத்தில் உள்வாங்கவேண்டும். சிறைச்சாலைகளை மறுசீரமைப்பதுடன், சிறைக்குச் செல்வோரின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும்.

இதற்குப் பொலிஸ், நீதித்துறையினர் ஒத்துழைப்பு அவசியம். இன்று சிறுவர், முதியோர், பெண்கள் எனப் பல பிரிவினரும் சிறையில் உள்ளனர். இவர்களைக் குறைக்க வேண்டும். நான் நீர்கொழும்பு சிறையில் மூன்று மாதம் இருந்தேன். எமக்கு வெளியில் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. விஜேகுமாரதுங்கவும், சந்திரிகாவும் காலை ஆறு மணிக்கே வந்துவிடுவார்கள். எனக்காக சரத் முத்தெட்டுவேகம பாராளுமன்றத்தில் ஒரு மாதம் போராடினார். அதன் பின்னர் தான் வீட்டிலிருந்து எமக்கு உணவு வந்தது.

ஆகவே, சிறைச்சாலைகளில் அரசியல் அழுத்தம், பழிவாங்கல்களுக்கு இடமளிக்கமாட்டேன். சமூகத் தேவைகளின் அடிப்படையில்தான் சிறை வைக்கின்றோம். அவர்களை சிறந்த பிரஜைகளாக்கி மீண்டும் வீடுகளுக்கு அனுப்பவேண்டும். குற்றச் செயல்கள் உருவாக வறுமையும் காரணம். சிறைச்சாலை உத்தியோகத்தர்களை சமூகம் ஏற்றுக்கொள்ளும் நிலைக்குக் கொண்டு வருவேன். அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி பயிற்சியளிக்க வேண்டும். அப்போதுதான் பாதாள உலகத்திற்கும் சிறைக்குமான உறவைத் தடுக்க முடியும். இதுவிடயத்தை உளவியல் நோக்கில் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்றார் அமைச்சர் டியூ.

சர்வதேச மேடைகளில் சார்க் நாடுகள் ஒருமித்து குரலெழுப்ப வேண்டும் – ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

m-r.jpgசர்வதேச மற்றும் பல் தரப்பு அமைப்புகளுடன் செயற்படும் போது எமது வலயத்தின் பொதுவான நன்மை கருதி ஒரே குரலில் பேச வேண்டும். வெளியில் பெறப்படும் தீர்வுகள் எமக்கு ஏற்றவைதானா என்பதை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். எமது வலயத்துக்குள் நாமே மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகள் பற்றி கண்டறிய வேண்டும்.

சர்வதேச மேடைகளில் குறிப்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன் எமது வலயத்தின் பொதுப் பிரச்சினைகள் பற்றி ஒருமித்த குரலில் பேசும் செயற்பாட்டை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பூட்டானில் நேற்று ஆரம்பமான 16வது சார்க் உச்சி மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரையின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சார்க் நாடுகளுக்கிடையே வலய தொடர்களின் தசாப்தம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பத்தாண்டு காலத்தில் எமது நாடுகள் மற்றும் மக்களிடையிலான தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். அதேவேளை பயங்கரவாதத்துக்கு எதிராக சார்க் கோவையின் விதிமுறைகள் முழுமையாக செயற்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் கண்டறியப்பட வேண்டும்.

வலய அமைப்பு என்ற ரீதியில் சார்க் அமைப்பு தனித்து முன்னேற்றம் காண முடியாது. எனவே நாம் இனங்கண்டுள்ள சில நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புக ளுடன் செயற்பாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தெற்காசிய உலகின் பழைமையான மற்றும் சீரிய உரிமைகளின் இருப்பிடமாகும் உலகின் சிறந்த சாஸ்திரவாதிகள், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், கலைஞர்கள், கவிஞர்கள் ஆகியோர் இந்த வலயத்தில் இருந்து உருவாகியுள்ளனர்.

சார்க் வலயம் அபிவிருத்தியடைந்துள்ள போதிலும் தெற்காசியாவின் ஒன்றிணைந்த பலத்தை சில சமயங்களில் நாம் குறைத்தே மதிப்பிடுகிறோம். எமது தொழில்நுட்ப திறனையும் எமது வளங்களின் மூலம் அபிவிருத்தி சவால்களுக்கு முகங்கொடுக்கவும், சமூக மற்றும் பாதுகாப்பு நிலையை ஸ்திரப்படுத்தவும் எமக்கு திறமை இருப்பதை சில சமயங்களில் நாம் நினைப்பதில்லை. அதற்கு பதில், வலயத்துக்கு புறம்பாக உள்ள சக்திகளுக்கு முன்னுரிமை வழங்குகிறோம். நாம் செய்ய வேண்டியது அதுவல்ல. எமது வலயத்துக்குள் இருக்கும் அபிவிருத்தி மற்றும் தொடர்புகளை நாம் முதலில் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சார்க் அமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ள இந்த 18 மாத காலத்தில் முக்கியமான பல துறைகளில் வலய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். மின்சாரம், உயர் கல்வி, சிறுவர், போக்குவரத்து, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான ஆறு அமைச்சு மட்ட கூட்டங்கள் எமது நாட்டில் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 2009 பெப்ரவரியில் இடம்பெற்ற சார்க் வெளிநாட்டமைச்சர்கள் கூட்டத்தில் உலகளாவிய பொருளாதார சீர்கேடு தொடர்பாக வலயத்தின் ஒன்றிணைந்த கூட்டத் தொடர் பற்றி இணை அறிக்கை விடுக்கப்பட்டது.

இலங்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட அந்த நடவடிக்கை வலய அபிவிருத்திக்கான முதல் நடவடிக்கையாகும். காலநிலை மாற்றம் இந்த மாநாட்டின் தொனிப் பொருளாக இருப்பது காலேசிதமானதாகும்.  தெற்காசிய பிராந்தியத்தின் பனி யால் சூழப்பட்டுள்ள நேபாளம் மற்றும் பூட்டானியிலிருந்து மாலை தீவு வரையிலான பிராந்தியம் சகல ருக்கும் சம்பந்தப்பட்ட பிரச்சினை யாகும்.

இது தொடர்பான எமது பிராந்தியத்தின் நிலை சர்வதேச மேடைகளில் வலுவாக எழுப்ப வேண்டியது நம் அனைவருக்கும் உள்ள பொறுப்பாகும். ஜனநாயக நிர்வாகத்திற்கான எமது முழுமையான அர்ப்பணிப்பு இப்போது எமது முழுப் பிராந்தியத்திற்கும் பொதுவான நடைமுறையாகும்.

இந்தியாவின் பரந்த அபிவிருத்தியுடன் வளர்ச்சி கண்ட எமது பொருளாதாரம், உலகப் பொருளாதார நெருக்கடிக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்தது. உலகப் பொருளாதாரத்தின் பாதிப்பு இருந்த போதிலும் இலங்கையில் எமக்கு 6% பொருளாதார வளர்ச்சியை எட்ட முடிந்தது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு 1060 டொலராகவிருந்த தனிநபர் வருமானம் இன்று 2050 டொலர் வரை உயர்வடைந்துள்ளது.

பொருளாதார மேம்பாட்டுக்காக நகரத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லையென்ற நம்பிக்கையின் அடிப்படையில் நாம் முன்னெடுத்த கொள்கை வெற்றியளித்தது. எனது அரசாங்கம் குடியிருப்பு, குடிநீர் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை நகரத்தில் மாத்திரமன்றிக் கிராமத்தில் மேற்கொண்டது. அதனால்தான் எமது அரசாங்கத்திற்குக் கிராம மக்கள் கூடுதலாக வாக்களித்தனர்.

அரசியல் மறுசீரமைப்பை மேற்கொள்ள எனது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. அதற்கு முன்னதாக நெருக்கடி நிலவிய பகுதிகளில் மக்களுக்குப் புனர்வாழ்வளித்து அவர்களுக்கு ஜீவனோபாயத்தைப் பெற்றுக் கொடுத்து அந்தப் பிரதேசங்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வளங்களைப் பெற்றுக் கொடுக்க எமது அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது.

சார்க் அமைப்பு அதன் வெள்ளி விழா வருடத்தில் கால் பதிக்கின்றது. பூட்டான் பிரதமர் தின்வே இம்முறை இவ்வமைப்பின் தலைவராகியுள்ளார். அவர் தலைமைப்பதவியை வகிக்கும் காலத்தில் அவருக்கு எனது பூரண ஆதரவை வழங்குவேன் என உறுதியளிக்கின்றேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் 15வது சார்க் மாநாடு கொழும்பில் நடைபெற்றது. அச்சமயம் எமது நாடு பயங்கரவாதத்துக்கெதிரான சவாலை எதிர்கொண்டிருந்தது.

பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தை தோற்கடித்துள்ள நாம் தற்போது துப்பாக்கிகளின் சவால்களில்லாத வெளிப்படையான விவாதங்களில் ஈடுபடவும் இணக்கப்பாட்டை காணவும் வாய்ப்புக் கிட்டியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் அமோக மக்கள் ஆணை எமக்குக் கிடைத்துள்ளது. இதனூடாக எமது நாடு, மக்கள் மற்றும் இளைய சந்ததிக்கான எதிர்காலத்தை கட்டியெழுப்ப எமது அயல் நாடுகள் எமக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கும் என்ற நம்பிக்கையுண்டு.

சார்க் அமைப்பானது எமது பிராந்திய நாடுகளின் மக்களினது நலன், சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான அமைப்பாக விளங்குகிறது. கடந்த இரண்டரை தசாப்தங்களாக நாம் கட்டியெழுப்பியுள்ள இணக்கப்பாடுகளே பெரும். இதன் மூலம் எமது நாடுகள், மக்களுக்கிடையில் நெருங்கிய நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வது முக்கியமானதாகும்.

1985ம் ஆண்டிலிருந்து படிப்படி யான செயற்பாடுகளுடன் ‘சார்க்’ 25 ஆண்டுகளை எட்டியிருப்பது நாம் பெருமைப்படக் கூடிய தொன்றாகும். தற்போது எமது எதிர்கால சந்ததி க்காக எமக்கிடையிலான ஒத்துழைப் புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது அவசியம்.

சார்க்கில் சீனா இணைவதற்கு சந்தர்ப்பம் எதுவும் இல்லை

ஆசியாவின் வல்லரசாக மாறிக்கொண்டிருக்கும் சீனாவானது 16ஆவது சார்க் உச்சி மகாநாட்டில் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாவ் குயங்கியா “அவதானி” என்ற அந்தஸ்துடன் கலந்துகொண்டிருக்கின்ற போதிலும் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தில் உள்வாங்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்று அதிகாரி ஒருவர்  கூறியுள்ளார்.

சார்க் அமைப்பில் தற்போது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மாலைதீவு, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்நிலையில் பிராந்தியத்துக்கு வெளியேயுள்ள நாடொன்று (சீனா) அங்கத்துவம் பெறுவது கற்பனைக்கு அப்பாற்பட்டது என்று அதிகாரி ஒருவர் ரான் ஒஸ் செய்திச் சேவைக்கு கூறியுள்ளார்.

அத்துடன் சார்க் அமைப்பினை விரிவுபடுத்தும் யோசனை எதுவும்
முன்வைக்கப்படவில்லை என்றும் அத்துடன் புதிய நாடொன்றை உறுப்பினராக சேர்த்துக்கொள்வதாயின் சகல உறுப்பினர்களும் ஏகமனதாக இணங்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

எனது சொந்த தேவைக்கு பிரதமர் பதவியை பயன்படுத்த மாட்டேன் – கடமைகளை பொறுப்பேற்று பிரதமர் தி. மு. உரை

pm.jpgநாட்டுக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களின் போது சகல கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென பிரதமர் டி. எம். ஜயரத்ன தெரிவித்தார். நாட்டு மக்களும் அரசியல் கட்சிகளும் நாட்டின் நலன், பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு செயற்பட்டால் பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் உலகின் சிறந்த நாடாக இலங்கையைக் கட்டியெழுப்ப முடியுமெனவும் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று தமது பொறுப்புகளை பிரதமர் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக கையேற்றார். இந்நிகழ்வு நேற்றுக் காலை கொழும்பு பிளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. சர்வ மதத் தலைவர்களின் ஆசியுடன் நேற்றுக் காலை 7.30 மணி சுபவேளையில் பிரதமர் தமது பொறுப்புக்களைக் கையேற்றதுடன், அமைச்சர் ஜோன் செனவிரத்ன, பிரிதியமைச்சர் துமிந்த திசாநாயக்க, வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிரதமர் டி. எம். ஜயரத்ன இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அரசியலில் 60 வருட கால மக்கள் சேவையின் பின்னர் நாட்டின் பிரதமர் என்ற உன்னதமான பதவி எனக்குக் கிடைத்துள்ளது. இது எனது மக்களுக்குக் கிடைத்த மாபெரும் கெளரவமென நான் கருதுகிறேன். இப்பதவியினூடாக நான் எனது மக்களுக்கு சேவை செய்வதில் பின்நிற்க மாட்டேன். ஒருபோதும் எனது சொந்தத் தேவைகளுக்கு இப்பதவியைப் பயன்படுத்த மாட்டேன் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

நாட்டு மக்களுக்கான சேவையின் போது நான் பல தடைகளையும் அசெளகரியங்களையும் சந்திக்க நேர்ந்தது. அப்போதெல்லாம் எனது மக்கள் என்னுடனிருந்தனர். அதனால் எனது சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் உரிமையுடையவர்கள் அவர்கள். பயம் சந்தேகமின்றி சகல இன, மத மக்களும் சமத்துவமாக வாழும் இலங்கையைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் அவருடன் இணைந்து செயற்படுவேன்.

ஒரேவிதமான நாணய புழக்கத்திற்கு தெற்காசியா இன்னமும் தயார் இல்லை

saarc-logo.jpgதெற்காசிய நாடுகள் யாவும் ஒரேவிதமான நாணயத்தை பாவனையில் விடுவது தொடர்பான யோசனைகள் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இன்னரும் உறுப்பு நாடுகள் இதற்கு ஆயத்தமான நிலையில் இல்லை என்று பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

பிராந்தியத்தில் ஒரேவிதமான பணத்தைப் புழக்கத்தில் விடுவது தொடர்பாக ஆராய்வது முன்முதிர்ச்சியற்றது என்று சார்க் அமைப்பின் செயலாளர் நாயகம் ஷீல் காந்த் சர்மா கூறியதாக பேர்னாமா செய்திச் சேவை நேற்று புதன்கிழமை தெரிவித்தது.

புதுடில்லியில் 2007 இல் சார்க்கின் 14 ஆவது உச்சிமாநாடு இடம்பெற்ற வேளை சார்க்நாடுகளின் மத்தியில் பொதுவான நாணயத்தைப் புழக்கத்தில் விடும் யோசனையை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முதலாவதாக வெளியிட்டிருந்தார். இதன் மூலம் பிராந்தியத்தின் பொருளாதார, அரசியல் ரீதியான ஒருங்கிணைப்பை மேம்படுத்த முடியும் என்று அவர் கூறியிருந்தார்.

ஆனால், இந்தத் தெற்காசிய நாடுகள் மத்தியில் தாழ்ந்த மட்டத்தில் வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெறுவதும் நிதிப்பாய்ச்சல் குறைவாக இருப்பதும் ஒரேவிதமான பணத்தைப் புழக்கத்தில் விடுவதற்குரிய சாதகமான தன்மையை கொண்டிருக்கவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பொருளாதார அபிவிருத்தியில் முன்னேற்றகரமான கட்டத்தை எட்டும் போதே பொதுவான நாணயம் புழக்கத்தில் விடப்படுவது வழமையான நடைமுறையாகும். எமது வழக்கங்களை உகந்தவகையில் மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. எமது பொருளாதாரத்தைத் தாராளவாதப் போக்கிற்கு மாற்ற வேண்டிய தேவை காணப்படுகிறது. இத்தகைய நிலைமையிலேயே உரிய வகையில் முதலீடுகள் அதிகரிக்கும் என்று ஷீல் காந்த் சர்மா கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலும் கூட பிரிட்டனின் “ஸ்ரேலிங்”  இன்னரும் யூரோ வலயத்திற்கு வெளியிலேயே இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 150 கோடி மக்களைக் கொண்ட தெற்காசியாவில் நாடுகளுக்கிடையிலான வர்த்தகமானது 11 பில்லியன் டொலராகவே இருக்கின்றது

வடமராட்சி கிழக்கில் விரைவில் 4000 குடும்பங்கள் மீள் குடியேற்றம் – யாழ். அரச அதிபர்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் நாளாயிரம் குடும்பங்கள் விரைவில் மீள் குடியமர்த்தப்படவுள்ளதாக யாழ். அரச அதிபர் கே. கணேஷ் தெரிவித்தார்.

கண்ணி வெடிகள் அகற்றும் பணி இங்கு நிறைவடைந்துவிட்டதாகவும், மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பில் கட்டளைத் தளபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்தார். மீள்குடியேற்றம் செய்வதற்கான திகதி விரைவில் நிர்ணயம் செய்து அறிவிக்கப்படுமென்றும் யாழ். அரச அதிபர் கணேஷ் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் இதுவரை 80 ஆயிரம் பேர் மீளக் குடியம ர்த்தப்பட்டுள்ளதாகக் கூறிய அரச அதிபர் பெரும்பாலும் மீள்குடியேற்றம் நிறைவுறும் தறுவாயை எட்டியுள்ளதாகவும் தெரிவித்தார். மீளக்குடியேறுவோருக்கு விசேட கொடுப்பனவு வழங்கப்படுவதுடன் வீடுகளைத் திருத்திக்கொள்ளவும் ஒத்துழைப்பு நல்கப்படுகிறது.

யாழ். பொது நூலகத்தை முழுமையாக கணனி மயப்படுத்த அரசு நடவடிக்கை

computer.jpgயாழ். பொது நூலகம் முழுமையாக கணனி மயப்படுத்தப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி நேற்று தெரிவித்தார்.

நாட்டிலுள்ள ஏனைய பொது நூலகங் களுடன் தகவல்களை பரிமாற்றங்களை இலகுவாக மேற்கொள்ளும் வகையில் யாழ். நூலகம் தொடர்புபடுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்திற்கு அமைய யாழ். பொது நூலகம் முழுமையாக கணனி மயப்படுத்தவும் மேலும் நவீன மயப்படுத்தவும் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இந்த நூலகம் 2003ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ம் திகதி மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. கூடிய தகவல்களை பெற்றுக் கொள்ளும் வகையில் கணனி மயப்படுத்தப்படவுள்ளதுடன் சிறுவர் பகுதியும் அவர்களுக்கு ஏற்றவகையில் கணனி மயப்படுத்தப்ப டவுள்ளது என்றார்.

மனோகணேசன் – ரணில் முரண்பாடு தொடர்கின்றது

ஐ.தே.க தலைவருக்கும் ஜனநாயக மக்கள் முன்னணிக்குமிடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித மான முடிவும் எட்டப்படவில்லையென பிரபாகணேசன் எம்.பி தெரிவித்தார்.

இதனால் இன்று (29) மாலை 5 மணிக்கு ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்களை ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்து முடிவெடுக்கவுள்ளதாக பிரபா கணேசன் எம்.பீ. தெரிவித்தார். பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இன்னமும் கட்சியின் தலைவர் மனோ கணேசன் ஐ.தே.க. தலைவரைச் சந்திக்கவில்லையெனக் கூறிய அவர், இன்றைய தினமே நேரடிச் சந்திப்பு இடம் பெறுவதாகக் கூறினார்.

நேற்று முடிவு எட்டப்படாததால் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத்தலைவர் மங்கள சமரவீர எம்.பி. ஆகியோரை ரணில் விக்கிரமசிங்க இன்று சந்திக்கிறார்.

மக்களுக்கு நன்மை பயக்கும் அரசின் யோசனைகளுக்கு ஐ.தே.க. ஆதரவளிக்கும் – கரு ஜயசூரிய எம்.பி

unp_logo_.jpgஅரசாங்கம் பாராளுமன்றத்தில் முன்வைக்கும் மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய யோசனைகளுக்கு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி முழுமையான ஆதரவு நல்கும் என்று அக்கட்சியின் உபதலைவரும், கம்பஹா மாவட்ட எம்.பி.யுமான கரு ஜயசூரிய நேற்றுத் தெரிவித்தார்.

மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய அரசாங்கத்தின் யோசனைகளுக்கு ஆதரவு அளிப்பது என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார். அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகளிடம் நேற்று ஆசி பெற்றுக்கொண்ட கரு ஜயசூரிய எம்.பி ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடு சிறந்த ஜனநாயகக் குடியரசாக விளங்குவதற்கு நாம் முழுமையான பங்களிப்பை அளிப்போம். இதற்காக அரசாங்கம் முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு நன்குவோம். பாராளுமன்ற தெரிவுக்குழுக்களினதும், பாராளுமன்ற ஆலோசனைக் குழுக்களினதும் செயற்பாடுகளுக்கும் முழுமையாக ஆதரவு அளிப்போம்.