அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இன்று உலக ஊடக சுதந்திர தினம்; உலகில் 97 ஊடகவியலாளர் 2009ல் பலி

secretary-general.jpgஉலக ஊடக சுதந்திர தினம் இன்றாகும். இத்தினத்தையொட்டி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்- கீ- மூன் விடுத்துள்ள செய்தியில் ஊடகங்களில் பணிபுரியும் அனைவரையும், பாதுகாக்கவேண்டியது அனைத்து அரசாங்கங்களினதும் கடமையாகும்.

அத்துடன் ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை புரிவோர் விசாரிக்கப்பட்டு கைது செய்யப்படுவதும் இந்த பாதுகாப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, பேச்சு சுந்திரம் ஒரு அடிப்படை மனித உரிமையாகும். உலகளாவிய மனித உரிமைகள் பிரகடணத்தின் 19 ஆவது ஷரத்தில் இது உள்ளடக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் 97 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொலை களுக்கு நான் பலத்த கண்டனம் தெரிவிக்கி ன்றேன். இந்த கொலைகளுக்கு காரண மானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று பான். கீ மூன் தனது செய்தியில் கூறியுள்ளார்.

தற்போதைய சூழலுக்கேற்ப அவசரகால சட்டத்தில் திருத்தம் – சபையில் நாளை சமர்ப்பிக்க அரசு தீர்மானம்;

pr-mahi.jpgதற்போதைய சூழ்நிலைக்கேற்ப அவசரகால சட்டத்திலுள்ள சில சரத்துக்களில் திருத்தங்களைச் செய்து நாளை 4ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஆளுங்கட்சி பாராளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதம், ஆயுத விடயங்கள் மற்றும் காலத்துக்குத் தேவையான சில ஷரத்துக்களுடன் மட்டுமே இம்முறை அவரசரகால சட்டம் விவாதத்திற்கு உட்படுத்தவுள்ளது. நாளையும் நாளை மறுதினமும் இதன் மீதான விவாதம் இடம்பெற்று வாக்களிப்புக்கு விடப்படு மென அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கி ன்றன. பாராளுமன்றம் நாளை 4ம் திகதி கூடுவதை முன்னிட்டு ஆளும் கட்சி பாராளுமன்றக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

பிரதமர் டி. எம். ஜயரட்ன உட்பட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், எம்.பிக்கள், கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் அவசரகாலச் சட்டம் உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டன.

பாராளுமன்றத்தில் வாய் மூல விடைக்களுக்கான வினாக்கள் வேளையின் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களே பதிலளிக்க வேண்டுமென்ற பணிப்புரையை ஜனாதிபதி இங்கு விடுத்துள்ளார். இதன்கென அமைச்சர்கள் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகும் நாட்களில் 9.30 மணிக்கு சபைக்கு சமுகமளிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். நேற்றைய இந்த ஆளுங் கட்சிப் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது அமைச்சுக்களின் வாகனங்களை ஒப்படைத்தல் சம்பந்தமாகவும் கவனத்தில் கொள்ளப்பட்டன.

முன்பிருந்த அமைச்சுக்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சுக்களுக்குப் பாரமளிக்க வேண்டிய வாகனங்களை இதுவரை ஒப்படைக்காமலுள்ளன. இவற்றை விரைவாக ஒப்படைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். வாகனங்களை ஒப்படைக்கும் பட்சத்தில் புதிய அமைச்சுக்க ளுக்குத் தேவைப்படும் வாகனங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் ஜனாதிபதி தெரிவித் துள்ளார். இதற்கிணங்க வாகனங்களை ஒப்படைப்பதற்கு அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். நேற்றைய இக் கூட்டத்தின் போது பாராளுமன்றத்திற்கான புதிய சபைத் தலைவர் மற்றும் ஆளுங் கட்சியின் பிரதம கொறடா ஆகியோர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சபை முதல்வர் நிமல்;பிரதம கொறடா தினேஷ்

parliament.jpgஏழாவது பாராளுமன்றத்தின் சபை முதல்வராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும், ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று நடைபெற்ற ஆளும் கட்சி கூட்டத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்நியமனங்களை மேற்கொண்டார்.

ஆளும் கட்சியின் முதலாவது பாராளுமன்றக் குழு கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே பாராளுமன்ற சபை முதல்வராக நீர்ப்பாசன நீர்முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும், ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய இக்கூட்டத்தில் பிரதமர் டி.எம். ஜயரட்ன உட்பட ஆளும் கட்சியின் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பான பல்வேறு விடயங்களும் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யும் செயற்பாடுகளை முன்னெடுப்போம்

mervyn2.jpgஊடக சுதந்திரத்தை மேலும் உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் அதேவேளை ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி வசதிகளை மேம் படுத்துதல், பயிற்சி நிறுவனங்களை அமைத்தல், வீடமைப்பு திட்டங்களை ஆரம்பித்தல், ஓய்வூதிய திட்ட மொன்றை நடைமுறைப் படுத்துதல் ஆகிய தேவைகள் பூரணப்படுத்தப்படும் அதேவேளை, ஊடக சுதந்திரத்தைப் போல் நாட்டின் ஒழுக்கவிழுமியங்களை பாதுகாக்க வேண்டும் என்பதையும் மறந்துவிடக் கூடாது என்று ஊடக த்துறைக்கான பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா இன்றைய உலக ஊடக சுதந்திர தின செய்தி யில் குறிப்பிட்டுள்ளார். அச் செய்தியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது :-

1991 மே மாதம் 3ஆம் திகதி நமீபியாவில் ஆபிரிக்க அச்சு ஊடக மாநாட்டில் ‘விண்டோக்’ பிரகடனம் நிறைவேற்றப் பட்டது. அப்பிரகடனத்தின் மூலம் ஜனநாயக மற்றும் அடிப்படை மனித உரிமை சுதந்திர ஊடகமொன்றின் தேவை உணரப்பட்டதுடன், சர்வதேச மட்டத்தில் சுதந்திர, சுயாதீன மற்றும் பல்தர ஊடகமொன்றை நடத்திச் செல்வதற்கு தேவையான அக்கறை உணரப்பட்டது.

யுனெஸ்கோ அமைப்பின் 26ஆவது உச்சி மாநாட்டில் விண்டோக் பிரகடனம் நிறைவேற்றப்பட்டதுடன், அப்பிரகடனம் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் ஏற்றுக்கொள்ளப் பட்டதையடுத்து சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்பட ஆரம்பித்தது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் உலகளாவிய மனித உரிமை பிரகடனத்தின் 19ஆவது சரத்தின் மூலம் அனைத்து மக்கள் பிரிவினருக்கும் பேச்சு சுதந்திர உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை கடந்த காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த போதும் அந்த உரிமையை உறுதிப்படுத்த முயற்சித்தே வந்துள்ளது.

30 வருட கால யுத்தத்தை முடித்து நாட்டின் சமாதானம் ஏற்படுத்தப்பட்ட பின் முதல்முறையாக இப்போதே நாம் உலக சுதந்திர தினத்தை அனுஷ்டிக்கிறோம். எனவே புதிய ஊடக கலாசாரத்தை ஆரம்பிப்பதற்கு உதவும் வகையில் ஊடகத் துறையுடன் தொடர்புபட்ட அனைவரும் இந்த தினத்தை உபயோகப்படுத்த உதவ வேண்டும் என்றும் பிரதி ஊடக அமைச்சர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் அபிவிருத்தி பணிகளை துரிதமாக்க விசேட செயலணி – 7ம் திகதி முதல் நடைமுறை

canderasri1.jpgவட மாகாணத்தின் கைத்தொழில் கூட்டுறவுத் துறை மற்றும் கிராமிய அபிவிருத்திப் பணிகளைத் துரிதமாக்கும் வகையில் நான்கு பேர் கொண்ட விசேட செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.

தன்னால் நியமிக்கப்பட்டுள்ள இந்த செயலணி, எதிர்வரும் 7ம் திகதி தொடக்கம் தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வட மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (மாகாண பொது நிர்வாக) இராசநாயகம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த செயலணியில் மாகாண கைத்தொழில் பணிப்பாளர், கிராமிய அபிவிருத்தி பணிப்பாளர், கூட்டுறவு பணிப்பாளர் ஆகியோர் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வட மாகாணத்தில் கைத்தொழில் கூட்டுறவுத் துறை மற்றும் கிராமிய அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் அடிப்படையில் இந்த செயலணி தமது திட்ட அறிக்கையை எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் தன்னிடம் சமர்ப்பிக்கவுள்ளதென்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இந்த செயலணி இம்மாதம் 7ம் திகதி தொடக்கம் மாவட்ட ரீதியில் கூட்டுறவு கிராமிய அபிவிருத்தி மற்றும் கைத்தொழில் துறைசார்ந்த அதிகாரிகளை சந்தித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தீர்மானித்துள்ளது என்றார்.

இந்த செயலணி தமது அடுத்த கட்ட நடவடிக்கையாக யாழ். மாவட்டத்திலுள்ள கைத்தொழில், கிராமிய மற்றும் கூட்டுறவு ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களுக்கென விசேட செயலமர்வு ஒன்றை எதிர்வரும் 16ம் திகதி யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தவுள்ளது.

இந்தச் செயலமர்வின் போது மூன்று துறைகளைச் சார்ந்தவர்களுக்குத் தெளிவு படுத்தப்படவுள்ளதுடன் அவர்களது குறைநிறைகளும் கேட்டறியப்படும். மேற்படி மூன்று துறைகளையும் துரிதமாக மேம்படுத்துவதற்கான சில ஆலோசனை களையும் இந்த செயலணி வழங்கவுள்ளது. இந்த செயலணி, வழங்கும் ஆலோசனைக்கு அமையவும், வேண்டுகோளுக்கமையவும் வட மாகாண சபையின் ஊடாக மேற்படி மூன்று துறைகளின் மேம்பாட்டுக்காக நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் தெரிவித்தார்.

ஒட்டுசுட்டானில் ஓட்டுத் தொழிற்சாலை உட்பட பல்வேறு தொழிற்சாலைகள் சில தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மீன்பிடித் துறை மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த செயலணியின் மூலம் செயற்பாடுகள் மேலும் துரிதப்படுத்தப்படவுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

வடக்கில் மீளக்குடியமர்வோருக்கு புலம்பெயர்ந்தோர் உதவ முன்வர வேண்டும் – பிரதியமைச்சர் முரளிதரன்

karuna.jpgவடக்கில் மீளக்குடியமர்த்தப்படும் மக்களுக்கு நிரந்தர வீடுகளை அமைக்கவும் வாழ்வாதார உதவிகள், விவசாய ஊக்குவிப்புகளைப் பெற்றுக் கொடுக்கவும் புலம்பெயர்ந்துள்ள மக்கள் முன்வர வேண்டும் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வேண்டுகோள் விடுத்தார்.

2003 ஆம் ஆண்டு சமாதானப் பேச்சுக்கள் முறிவடைந்த காலகட்டத்தில் இறுதியாக பிரபாகரனுக்குத் தெரியாமல் கிளிநொச்சியை விட்டுவந்த பின்னர் முதல் முறையாக கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி நகருக்கு பிரதியமைச்சராக விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) சென்றிருந்தார்.

குறிப்பாக மீளக்குடியமர்த்தப்படும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நேரடியாக பார்வையிடுவதற் காகவே அவர் இந்த விஜயத்தை மேற் கொண்டார். மீளக்குடியமர்த்தப்பட்ட 10 குடும்பங்களுள் ஏழு குடும்பத்தில் குடும்பத்தலைவன் இல்லாத அவல நிலைக்கு இந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கணவனை இழந்து பிள்ளைகளுடன் நிற்கும் இவ்வாறான குடும்பங்களுக்கு நிரந்தர வருவாயை ஈட்டித்தரும் விதத்தில் வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

விவசாயம் செய்பவர்களாயின் அதற்கான உதவிகளைப் பெற்றுக்கொடுக்கவும் பிள் ளைகளின் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவிகள் பெற்றுக்கொடுக் கப்படல் வேண்டும். முதலில் இவர்களுக்கு நிரந்தர வீடுகளைக் கட்டிக்கொடுக்க வேண்டும். இதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொள்வதே எனது அடுத்தகட்ட நடவடிக்கை என்றும் தெரிவித்தார்.

கிளிநொச்சியை விட்டு தான் இறுதியாக வரும் போது கண்ட வளமுள்ள நவீன கட்டடங்கள் நிறைந்த நகராக மீண்டும் மாற்றப்பட வேண்டும். இப்போது சோபை இழந்து போன கட்டடங்களைக் காணும் போது வேதனையாக இருக்கிறது என்றும் தெரிவித்தார். புலம்பெயர்ந்துள்ள மக்கள் இனியாவது உண்மை நிலையை உணர்ந்து அந்த மக்களின் துயர்துடைக்க முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் சளைக்காது நாட்டை கட்டியெழுப்புவோம் – ஜனாதிபதி

president.jpgஎத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் அவற்றுக்கு சளைக்காது ஈடுகொடுத்து நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்லுவோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார். இந்த நாட்டை கட்டியெழுப்பவும், அபிவிருத்தி செய்யவுமென எதிர்க்கட்சிகள் பேதங்களை மறந்து அரசாங்கத்துடன் கைகோர்த்து செயற்பட முன்வரவேண்டும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டம் ‘வேலைத் தளத்திற்குச் சக்தி, தொழிற்சாலைக்குப் பலம், தாய் மண்ணுக்கு சமாதானம்’ என்ற தொனிப் பொருளில் கொழும்பு மாநகர சபை மைதானத்தில் நேற்று பின்னேரம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், இன்று தொழிலாளர் தினத்தை நாம் பெருமையுடனும், கெளரவமாகவும் கொண்டாடுகின்றோம். முப்பது வருட காலப் பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டதன் பலனே இது. யுத்தம் நிலவிய காலத்தில் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இதனை நாமறிவோம்.

பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து இந்தப் பாரிய வெற்றியைப் பெற அடித்தளமிட்டவர்கள் தொழிலாளர்கள் தான். மனிதாபிமான இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட சமயத்தில் வேலைத் தளத்தில் என்ன தான் பிரச்சினைகள் இருந்த போதிலும் அவற்றைப் பேசித் தீர்த்துக்கொள்வதற்குத் தொழிலாளர்கள் பெரிதும் ஒத்துழைப்பு நல்கினார்கள். அரசாங்கம் அவர்களுக்கு உரிய சந்தர்ப்பங்களில் சம்பள உயர்வுகளையும் வழங்கியது.

கடந்த கால ஆட்சியாளர்கள் அரசாங்க நிறுவனங்களில் தொழிலாளர்களை குறைப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திற்கு உடன்படிக்கை மூலம் இணங்கி இருந்தார்கள். அப்படி இருந்தும் நாம் பதவிக்கு வந்ததும் அதனைச் செய்யவில்லை. அரசாங்கத் துறைக்கு ஆட்சேர்ப்பு செய்து அரச துறையை வலுப்படுத்தினோம். அரச சொத்துக்கள் எதனையும் நாம் தனியார் மயப்படுத்தவில்லை.

உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் லட்சக் கணக்கானோர் தொழில்களை இழந்தனர். வங்கிகள் வீழ்ச்சி அடைந்தன. இருந்தும், எமது எந்தவொரு வங்கியும் வீழ்ச்சி அடையவோ, எவரும் தொழில் இழக்கவோ இடமளிக்கவில்லை. நிதி நெருக்கடிகளிலிருந்தும், பொருளாதார வீழ்ச்சியிலிருந்தும் நிறுவனங்களையும் வங்கிகளையும் நாம் பாதுகாத்தோம். நாம் நீண்ட காலம் தொழிலாளர்களுடன் இணைந்து செயற்பட்டு வந்ததன் பயனாகவே இதனைச் செய்துகொள்ள முடிந்தது.

பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்து ஐக்கியப்படுத்துவதற்கு பங்களிப்பு செய்தது போல் பிரிந்துள்ள உள்ளங்களை மீண்டும் ஐக்கியப்படுத்தவும் தொழிலாளர்கள் பங்களிப்பு செய்ய வேண்டும். நாட்டைப் பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்வதற்கு தொழிலாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. அதனை நான் எதிர்பார்க்கின்றேன். பொருளாதார அபிவிருத்திப் போராட்டத்தின் வீரர்கள் தொழிலாளர்கள் தான். இதற்கு நீங்கள் முழுமையாக ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

தொழிலாளர்கள் பலம் மிக்க சக்தி கொண்டவர்கள். அவர்களால் எந்தச் சக்தியையும் இறங்கி வரச் செய்ய முடியும். அதனால் தொழிலாளர்கள் தங்கள் பலத்தை பிழையான வழியில் பயன்படுத்தி அதனை வீணடித்து விடாது பாதுகாக்க வேண்டியது தொழிற்சங்க தலைவர்களின் பொறுப்பாகும்.

நாம் ஒரே நேரத்தில் ஐந்து துறைமுகங்களை அபிவிருத்தி செய்கின்றோம். இதேபோல், உட்கட்டமைப்பு துறைகளையும் மேம்படுத்தி வருகின்றோம். இந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான பின்புலத்தை ஏற்படுத்த நாம் ஒருபோதும் பின்நிற்க மாட்டோம். இந்நாட்டில் அச்சம், பீதியின்றி வாழக் கூடிய சூழலை ஏற்படுத்துவது எமது பொறுப்பு. அமைச்சர்கள் தம்மை விடவும் நாட்டையும், நாட்டு மக்களையும் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.

நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்பதை எதிரணியினருக்கு சொல்லி வைக்க விரும்புகின்றேன். நாட்டைக் கேலி செய்யாதீர்கள் என்றும் அவர்களைக் கேட்டுக்கொள்ளுகின்றேன். இந்நாட்டின் அபிவிருத்திக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தாதீர்கள் என்றும் அவர்களுக்குக் கூறுகிறேன். நாட்டு மக்கள் எமக்கு தெளிவான ஆணையை வழங்கியுள்ளார்கள். இதனை எதிரணியினர் புரிந்துகொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக எம்முடன் கைகோர்த்து செயற்பட முன்வர வேண்டும்.

இம்மேதினக் கூட்டத்தில் ஐந்து யோசனைகளும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் பிரதமர் டி. எம். ஜயரட்ன, அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, டக்ளஸ் தேவானந்தா, சுசில் பிரேம ஜயந்த, டளஸ் அழகப்பெரும, பசில் ராஜபக்ஷ, தினேஷ் குணவர்த்தன, மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

இ.தொ.கா. மேதின கூட்டத்தில் இரு முக்கிய பிரகடனங்கள் – மலையக பிரதிநிதித்துவம் பாதிக்காத தேர்தல் முறை

arumugam.jpgஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நேற்று தலவாக்கலையில் நடத்திய மேதினக் கூட்டத்தில் இரண்டு முக்கிய தீர்மானங்களைப் பிரகடனமாக வெளியிட்டுள்ளது.

அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்கிற போது தேர்தல் முறையை மாற்றியமைப்பதாக இருந்தால், மலையகப் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாத வகையில் தொகுதிகளைப் பகிர்ந்தளிக்க வேண்டு மென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்த வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளது. இதற்கமைவாக நுவரெலியாவில் நான்கு தொகுதிகளும் பதுளை, கண்டி, கொழும்பு மாவட்டங்களில் தலா 2 ஆசனங்களும், இரத்தினபுரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளதாகக் காங்கிரஸின் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

இதேவேளை, இரண்டாவது முக்கிய தீர்மானமாக, பெருந்தோட்டங்களை சீரற்ற நிர்வாகப் போக்கிலிருந்து பாதுகாத் துப் பராமரித்து நிர்வகிக்கும் பொறுப்பைத் தமக்கு வழங்க வேண்டு மெனவும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

காங்கிரஸின் மேதினக் கூட்டம் அதன் செயலாளர் நாயகம் ஆறுமுகன் தொண்டமான் எம். பீ. தலைமையில் தலவாக்கலையில் நேற்று நடைபெற்றது. காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் எனப் பெருந்திரளானோர் இதில் கலந்துகொண்டனர்.

இடி, மின்னல் தாக்கம்; 12 பேர் உயிரிழப்பு

lightning-01.jpgஇடி,  மின்னல் தாக்கம் காரணமாக ஒரு மாத காலத்தில் பன்னி ரெண்டு (12) பேர் உயிரிழந்திருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் தமயந்தி இந்திஹெட்டிஹேவகே நேற்றுத் தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் 14ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30ம் திகதிக்குட்பட்ட காலப் பகுதியில் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் இம் மரணங்கள் இடம்பெற்றிருக்கின்றன. நேற்று முன்தினம் நொச்சியாகமவிலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

ஆகவே இடி, மின்னல் பாதிப்புக்களி லிருந்து தவிர்ந்து கொள்ளுவதில் ஒவ் வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை மாற்ற உழைக்கும் மக்களின் பங்களிப்பு அவசியம் – மே தினச் செய்தியில் ஜனாதிபதி

president.jpgசர்வதேச தொழிலாளர் தினமான இன்று உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்களோடு பெருமையோடு இணைந்து கொள்ளும் எமது நாட்டு உழைக்கும் மக்களுக்கு நான் இவ்வாழ்த்துச் செய்தியை விடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எமது நாட்டுக்கும் அதன் உழைக்கும் மக்களுக்கும் மிகப் பெரும் சவாலாக இருந்து வந்த பயங்கரவாதத்தை நாம் தற்போது வெற்றி கொண்டுள்ளோம். இச்சவாலை வெற்றிகொள்வதில் எமது நாட்டின் உழைக்கும் மக்கள் பாரியதொரு பக்கபலமாக இருந்தார்கள் என்பதை பெருமையோடு குறிப்பிட வேண்டும்.

ஜனாதிபதி தனது வாழ்த்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது : பயங்கர வாதத்தினால் தடை செய்யப்பட்டிருந்த சகல அபிவிருத்தி மார்க்கங்களும் இன்று எமது நாட்டு மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் உழைக்கும் மக்கள் இவ்வருட சர்வதேச தொழிலாளர் தினத்தை நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான சூழ்நிலை குறித்த மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்றனர்.

உழைக்கும் மக்களின் தாராளமான உதவியோடு தலைமைத்துவத்தை அடைந்துகொண்ட ஒரு தலைவன் என்ற வகையில் உழைக்கும் மக்களின் அபிலாஷைகளைப் பாதுகாப்பதற்கு முடிந்தமை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது.

அதேபோன்று உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக எப்போதும் அவர்களோடு மிக நெருக்கமாக இருந்து அவர்களது கஷ்ட நஷ்டங்களை அறிந்துகொள்ள முடிந்தமை எமது வெற்றியின் இரகசியம் என நான் கருதுகின்றேன்.

நாட்டின் தேசிய வளங்களைப் பாதுகாப்பதற்காக இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் எம்மீது வைத்திருக்கும் நம்பிக்கை எம்மை மென்மேலும் பலப்படுத்தியுள்ளது.

அரசாங்கம் பொருளாதார அபிவிருத்தியில் உழைக்கும் மக்களின் பங்குபற்றுகையை உறுதிசெய்யும் வகையில் எதிர்வரும் காலங்களில் அவர்களுக்கு மென்மேலும் நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

எமது முன்னேற்றப் பாதையில் தடையாகவிருக்கும் எல்லா சவால்களையும் வெற்றிகொள்வதற்கு உழைக்கும் மக்களின் ஒத்துழைப்பு அரசாங்கத்திற்குக் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.

உழைக்கும் மக்களின் பங்குபற்றுகையுடன் அடையப்பெறும் தேசிய அபிவிருத்தியின் மூலம் இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றியமைக்க முடியும் என இந்த சர்வதேச தொழிலாளர் தினத்தில் நாம் உறுதிகொள்கின்றோம்.

உழைக்கும் மக்களுக்கு வெற்றி கிட்டுமாகுக.