::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

மூன்றாவது அணிக்கு பிரதமர் வேட்பாளர் இப்போது தேவையில்லை என்கிறார் ஜெயலலிதா

jayalalitha.jpgஇந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்காக உருவாகியுள்ள மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து தேர்தல் முடிவுகள் எல்லாம் வெளியானபிறகு யோசித்துக்கொள்ளலாம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறி இருக்கிறார்.

இப்போதே முடிவு செய்ய அவசரம் எதுவுமில்லை, அவ்வாறு செய்யாமலிருப்பதால் அணியின் வெற்றி வாய்ப்புகள் பாதிக்கப்படப்போவதுமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் உத்திரப் பிரதேச முதல்வருமான மாயாவதி ஞாயிறன்று அளித்த விருந்து பற்றி சரியான தகவல் கிடைக்காததால்தான் தன் கட்சிப் பிரதிநிதி அதில் கலந்துகொள்ளவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

நிர்வாண ராகிங் செய்த நான்கு மாணவிகள் கைது

ஆந்திராவில் முதலாம் ஆண்டு மாணவியை நிர்வாண நடனம் ஆடச் சொல்லி அவரை தற்கொலைக்கு தூண்டியதற்காக நான்கு மாணவிகள் மற்றும் விடுதி வார்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள அரசு வேளாண்மை பொறியியல் கல்லூரியில் திரிவேணி என்ற 20 வயது மாணவி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரை அந்த கல்லூரியை சேர்ந்த ஸ்ரீவந்தி, சவுஜன்யா, நஷ்மா, வனிதா, சாகிதி ஆகிய ஐந்து சீனியர்  ராகிங் செய்து துன்புறுத்தியுள்ளனர்.

அவரை நிர்வாணமாக நடனமாட சொல்லி வற்புறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த திரிவேணி தலைசாயபொடி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருக்கிறது.

இப்பிரச்சினையில் வழக்கு பதிவு செய்து வரும் ஆந்திர போலீசார் ராகிங் செய்த மாணவிகளில் நான்கு பேரையும், விடுதி வார்டனையும் கைது செய்தனர். மற்றொரு மாணவி விடுதியிலிருந்து வெளியேறிவிட்டதால், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பதவி நீக்கப்பட்ட பாகிஸ்தான் பிரதம நீதியரசர் மீண்டும் சேவையில் – பாகிஸ்தான் பிரதமர் தொலைக்காட்சியில் அறிவிப்பு

ifthikar_pakistan_justis.jpg பதவி நீக்கப்பட்ட பாகிஸ்தானின் பிரதம நீதியரசர் இப்திகார் சௌத்ரியை மீண்டும் அப்பதவியில் அமர்த்த அரசாங்கம் தீர்மாணித்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார்.

இத்தீர்மாணத்தை இன்று பாகிஸ்தான் தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றும்போது உத்தியோகபூர்வமாக அறிவித்த பிரதமர் கிலானி, பிரதம நீதியரசர் இம்மாத இறுதியில் மீண்டும் பதவியில் அமர்த்தப்படுவார் எனக் கூறினார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் ஆட்சியின்போது பிரதம நீதியரசர் இப்திகார் சௌத்ரி உட்பட 60 நீதிபதிகள் சேவையிலிருந்து நீக்கப்பட்டனர். இவர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு வற்புறுத்தி கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் தலைமையில் எதிர்க் கட்சிகள் மற்றும் சட்டத்தரணிகள் ஏற்பாடு செய்திருந்த இந்த எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக நாடு ஸ்திரமற்ற நிலையை நோக்கிச் செல்வதையடுத்தே பாகிஸ்தான் அரசாங்கம் இத்தீர்மாணத்தை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன. 

ஈழத்தமிழருக்காக பா.ம.க. பிரமுகர் தீக்குளிப்பு: நேற்று இடம்பெற்ற சம்பவம்

elam-rajasekar.jpgஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்தும், இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யக் கோரியும் பாமக பிரமுகர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தீக்குளித்தார். அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தை அடுத்த தத்தனூர் கீழ வீதியைச் சேர்ந்த பாமக பிரமுகர் இராஜசேகர். இவருக்கு வயது 30. ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை டி.வி. மற்றும் செய்தித்தாள்களில் படித்து, கடந்த சில நாட்களாகவே வேதனைப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் இராஜசேகர் தனது வீட்டு வாசலில் முன் உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதனால் அவர் உடல் முழுவதும் எரிந்து கருகியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானில் அரசியல் கொந்தளிப்பு உச்சக் கட்டம் நவாஸ் ஷெரீப், இம்ரான்கான் வீட்டுக்காவலில்; தடைகளையும் தாண்டி ஊர்வலம்.

n8_2.jpgபாகிஸ்தானில் அரசியல் கொந்தளிப்பு உச்சகட்டத்தை அடைந்திருக்கும் இந்த நிலையில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபும், முன்னாள் கிரிக்கெட் கப்டன் இம்ரான்கானும் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேநேரம் நவாஸ் ஷெரீபின் சகோதரர் ஷபாஸ் ஷெரீபும், நவாஸ் ஷெரீபின் மகனும் கைதுசெய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களை அடுத்துவரும் மூன்று நாட்களுக்கு வீட்டுக் காவலில் வைப்பதற்கு பொலிஸார் பிடியாணை பெற்றுள்ளனர்.

தமது ஆட்சிக் காலத்தில் பதவியிலிருந்த உச்ச நீதிமன்ற நீதியரசர் உள்ளிட்ட நீதியரசர்களை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும், பஞ்சாப் மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை இரத்துச் செய்துவிட்டு மீண்டும் தமது சகோதரரை முதலமைச்சராக பதவியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீபின் முஸ்லிம் லீக் கட்சியினர் இன்று 16ம் திகதி பாராளுமன்ற முற்றுகைப் போராட்டத்தை நடத்துவதற்கு ஏற்கனவே திட்டமிட்டிருந்தனர். இந்தப் போராட்டத்திற்கு பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் கப்டன் இம்ரான்கானின் தெரீக் இன்ஸாப் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக நவாஸ் ஷெரீப் கட்சியினர் இஸ்லாமாபாத் நோக்கி ஊர்வலமாகச் செல்லத் தொடங்கியுள்ளனர்.  இதற்கு இம்ரான்கான் கட்சியினரும், நீதிபதிகளும், சட்டத்தரணிகளும் ஒத்துழைப்பு நல்கியுள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் செய்யத் யூஸ¤ப் ராஸா கிலானி இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர ஜனாதிபதிக்கு 24 மணி நேர அவகாசம் வழங்கினார். அந்நாட்டு இராணுவ தளபதி கியானியும் இப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியைக் கோரினார்.

இதேநேரம் இந்நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில் அமெரிக்காவும், பிரித்தானியாவும் கூட்டாக சமரசத் திட்டமொன்றை முன்வைத்துள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் கிலாரி கிளிங்டன் பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரியுடனும், நவாஸ் ஷெரீபுடனும் தொலைபேசி ஊடாகத் தனித் தனியாகத் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். பிரச்சினையைப் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பாகிஸ்தான் ஜனாதிபதியையும் நவாஸ் ஷெரீபையும் கேட்டுள்ளார்.

இந்த நிலையில் ஜனாதிபதி சர்தாரி, நவாஸ் ஷெரீப் கட்சியினரின் போராட்டத்திற்குத் தடை விதித்த தோடு, போராட்டத்தையும், ஊர்வலத்தையும் கட்டுப்படுத்துவதற்கும் இராணுவத்திற்கும், பொலிஸாருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனடிப்படையில் இஸ்லாமாபாத் நோக்கி ஊர்வலமாக வந்தவர்கள் மீது தடியடிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பலர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப் பட்டுள்ளனர். நேற்று நண்பகல் வரையும் 1200 தொண்டர்களும் 30 க்கு மேற்பட்ட சட்டத்தரணிகளும் கைது செய்யப்பட்டி ருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதையும் மீறி நவாஸ் ஷெரீப் கட்சி ஆதரவாளர்களும், தொண்டர்களும், சட்டத்தரணிகளும் பல்வேறு நகரங்களிலிருந்து இஸ்லாமாபாத் வந்து சேர்ந்துள்ளனர். நவாஸ் ஷெரீபின் சகோதரர் தனது ஆதரவாளர்களுடன் ஏற்கனவே இஸ்லாமாபாத் வந்து சேர்ந்துள்ளார். இம்ரான்கானும் ஏற்கனவே இஸ்லாமாபாத் வீட்டிலேயே தங்கி இருக்கிறார்.

இதேநேரம் நவாஸ் ஷெரீப் தனது ஆதரவாளர்களுடன் இஸ்லாமாபாத் நோக்கி லாஹரிலிருந்து நேற்று ஊர்வலமாகச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார். இவ்வாறான சூழ்நிலையில் நவாஸ் ஷெரீபை இராணுவத்தினரும், அவரது சகோதரரையும், மகனையும், இம்ரான்கானையும் பொலிஸார் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.

தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், கட்சித் தொண்டர்களும், ஆதரவாளர்களும் சட்டத்தரணிகளும் பல்வேறு நகர்களிலிருந்தும் இஸ்லாமாபாத் நோக்கி ஊர்வலமாகச் செல்லுவதாகவும் அவர்கள் பொலிஸாராலும், இராணுவத்தினராலும் தடுத்து நிறுத்தப்படுவதாகவும் கைது செய்யப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் இஸ்லாமாபாத் நகருக்குள் எவருமே நுழைய முடியாதபடி சகல வீதிகளிலும் கொள்கலன்கள் குறுக்காக நிறுத்தப்பட்டு சீல் வைத்து மூடப்பட்டுள்ளன. அவற்றையும் மீறி அனேநகர் நகருக்குள் நுழைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பாராளுமன்றத்திற்கு அருகே எவரும் வர முடியாதபடி ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தடுப்பு வேலிகள் அமைக்கப் பட்டிருப்பதோடு அங்கு இராணுவத்தினரும், பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் பெண் மந்திரி ஷெர்ரி “திடீர்” ராஜினாமா

sherry_rehman.jpgபாகிஸ்தான் மந்திரி சபையில் மூத்த மந்திரியாக இருந்தவர் ஷெர்ரி ரகுமான் தகவல் தொடர்பு இலாகாவை கவனித்து வந்தார். இவருக்கும் பாகிஸ்தான் மக்கள் கட்சியில் மூத்த தலைவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் ரகுமான் திடீரென்று மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.ராஜினாமா கடிதத்தை உடனடியாக பிரதமர் யூசுப் ரசா கிலானிக்கு அனுப்பி வைத்தார். ஆனால் ராஜினாமாவை பிரதமர் ஏற்றுக்கொள்ளவில்லை.

பாகிஸ்தான் அரசின் தகவல் ஒலிபரப்பு கொள்கை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையே ராஜினாமாவுக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. நவாஸ்செரீப் நடத்திய வக்கீல்கள் பேரணியை அரசு அடக்க நினைத்தது. ஆனால் அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடியால் பின் வாங்கியது.

இது தொடர்பாக அதிபர் சர்தாரி,பிரதமர் கிலானி ஆகியோரது சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது.அப்போது எதிர்க்கட்சிகளின் போராட்டங்களை ஒளிபரப்புவது தொடர்பாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.எதிர்க்கட்சிகள் போராட்டம், வக்கீல்கள் போராட்டம் ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவதால் அதிபர் சர்தாரி அதிருப்தி அடைந்தார்.இதையடுத்து ரகுமான் ராஜினாமா செய்தார்.

பத்திரிகையாளரான ரகுமான் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை தமிழர்களை பாதுகாக்கக் கோரி சரத் 1 கோடி கையெழுத்து இயக்கம்

sarathkumar.jpgஇலங்கை தமிழர்களை பாதுகாக்கக் கோரி ஐ.நாவுக்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஒரு கோடி கையெழுத்துகளை அனுப்பும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதை கட்சியின் தலைவர் சரத்குமார் தொடங்கி வைத்தார். சென்னை மைலாப்பூரில் நடந்த நிகழ்ச்சியி்ல் முதல் கையெழுத்தை சரத்குமார் போட்டார்.

இதைத் தொடர்ந்து அப் பகுதி பொது மக்கள், கடைக்காரர்களிடம் கையெழுத்துகள் பெறப்பட்டன. அப்போது சரத்குமார் கூறுகையில், இலங்கையில் வாழும் தமிழர்கள், தங்களுக்கு உரிமை கோரி 60 ஆண்டு காலமாக தொடர்ந்து போராடி வருகிறார்கள். உடனே, இந்த பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வுகாண இலங்கை அரசு விடுதலைப் புலிகளுடன் அமைதி வழியில் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.

இலங்கை தமிழர்களை பாதுகாக்கக் கோரி ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி ஐ.நாவுக்கு அனுப்ப உள்ளோம். இந்தியாவில் உள்ள அனைத்து முதல்வர்கள், மத்திய அமைச்சர்களிடம் கையெழுத்து வாங்கப்படும். தேர்தல் கூட்டணி குறித்து ஒரு வாரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். மக்கள் விரும்பும் தொகுதியில் நான் போட்டியிடுவேன். சேவை மனப்பான்மை, தொலைநோக்கு பார்வையுடன் உழைக்கும் கட்சி பிரதிநிதிகளுக்கு போட்டியிட முன்னுரிமை அளிக்கப்படும். ஏப்ரல் 2ம் தேதி முதல் எங்கள் கட்சியின் பிரச்சாரம் தொடங்கும் என்றார்.

வட இந்தியாவில் “ஹோலி” மோதல்:8-பேர் பலி;250-பேர் காயம்

holi.jpgஉத்தரப் பிரதேசம்,பிகார் மற்றும் தில்லியில் ஹோலி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மோதல்களில் 8-பேர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உத்தரப் பிரதேச மாநிலம்,வாராணசியில் புதன்கிழமை இரவு ஹோலி கொண்டாட்டத்தின்போது மசூதி சுற்றுச்சுவர் மீது வண்ணப்பொடியை தூவியதால் ஏற்பட்ட மோதல் வகுப்பு கலவரமாக மாறியது. கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதில் இருவர் கொல்லப்பட்டனர்.இதே மாநிலத்தில் பஹ்ரைச் மாவட்டத்தில் ஹோலி கொண்டாட்டத்தின்போது தீவைப்பு சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து ஏற்பட்ட வகுப்பு மோதலில் 6-பேர் காயமடைந்தனர்.

காஸிபூரில் நடந்த வகுப்பு மோதலில் 16-வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.முஸாஃபர்நகர் மாவட்டத்தில் லிசாத் கிராமத்தில்,ஹோலி கொண்டாட்டத்தின்போது இரு பிரிவினர் குடித்துவிட்டு பரஸ்பரம் துப்பாக்கியால் சுட்டனர்.இதில் 6-வயது சிறுவன் கொல்லப்பட்டான்.

பிகாரிலும் “ஹோலி” கலவரங்கள் நடைபெற்றன. மோதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். தில்லியில் தையல் வேலை செய்துவந்த இளைஞர் உறவுப் பெண்ணுடன் சென்றுகொண்டிருந்தபோது சிலர் அவர்கள் மீது வண்ணப்பொடியை வீசினர்.இதற்கு அவர் ஆட்சேபம் தெரிவித்தார்.இதனால் ஏற்பட்ட மோதலில் அந்த இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு இறந்தார்.

ஜெய்ப்பூரில் குடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஹோலி கொண்டாடிய மூன்று இளைஞர்கள் கீழே விழுந்து இறந்தனர். மாநிலம் முழுவதும் ஹோலி மோதல்களில் 200-பேர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.மகாராஷ்டிர மாநிலம் தாணே அருகே ரயில் மீது தண்ணீர் பலூனை வீசியெறிந்ததில் பயணி ஒருவருக்கு கண் பார்வை பறிபோனது.

அக்குரஸ்ஸ தாக்குதல் சம்பவம் 10 தமிழ் இளைஞர்கள் கைது

akkurassa-02.jpgஅக்கு ரஸ்ஸ கொடபிட்டியவில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்ற குற்றப்புலனாய்வு பொலிஸார் (சி.ஐ.டி.) பத்து தமிழ் இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை கைது செய்துள்ளனர். இத்தகவலை தென்பிராந்திய பிரதிப்பொலிஸ் மா அதிபர் டீ. டபிள்யூ. பிரதாப்சிங்க தெரிவித்துள்ளார்.கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் அக்குரஸ்ஸ பகுதி தோட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு பொலிஸார் பலரிடம் இருந்து வாக்கு மூலங்களைப்பெற்று வருகின்றனர். இந்த பத்து தமிழ் இளைஞர்களும் மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

லாகூர் தாக்குதலுக்கு லஸ்கர் இ தொய்பாவை குற்றஞ்சாட்டும் அமெரிக்க செனட்டர்

crc-04032009.jpgலாகூரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு லஸ்கர் இ தொய்பா அமைப்பின் மீது அமெரிக்க செனட்டர் கிளயர் மக் காஸ்சில் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். அத்துடன், மும்பையில் நவம்பர் 26 இல் இடம்பெற்ற தாக்குதலுக்கும் லண்டனில் இடம்பெற்ற கொலைகளுக்கும் இந்த அமைப்பின் மீதே குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனை டோன் பத்திரிகை தெரிவித்திருக்கிறது. லஸ்கர் அமைப்பு இந்தப் பாரிய தாக்குதல் சம்பவங்களில் சம்பந்தப்பட்டிருக்கையில் அது தொடர்பாக அமெரிக்கா விசாரணை மேற்கொள்வதற்கு உதவ பாகிஸ்தான் மறுப்பதுடன் அக்குழுவை பாதுகாப்பதாகவும் மிஸோரியின் செனட்டர் கிளயர் குற்றஞ்சாட்டியிருக்கிறார். ஆனால், அவர் (கிளயர்) கூறுவது போன்று பாகிஸ்தானின் ஒத்துழைப்பு முழுமையாக இல்லையென தான் கருதவில்லையென்று அட்மிரல் பிளயர் கூறியுள்ளார்.

மும்பைத் தாக்குதலையடுத்து லஸ்கர் அமைப்பின் தலைவர்களை பாகிஸ்தான் கைதுசெய்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பிளயர் தெரிவித்திருக்கிறார். ஆனால், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுமுள்ள பாகிஸ்தானியர் மத்தியில் லஸ்கர் அமைப்புக்கு ஆதரவாளர்கள் பலர் இருப்பதாகவும் அவர்களை தமது தாக்குதல்களுக்கு லஷ்கர் இ தொய்பா பயன்படுத்துவதாகவும் செனட்டர் கிளயர் மக் காஸ்சில் கூறியுள்ளார்.