::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

ராகுல் காந்தி பிரதமர் ஆவது உறுதி!: பிரியங்கா பேட்டி

23-priyanka.jpgராகுல் காந்தி பிரதமர் ஆவது உறுதி என்று, பிரியங்கா கூறினார். அமேதி தொகுதியில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்திக்காக அவரது தங்கை பிரியங்கா, பிரசாரம் செய்து வருகிறார். இதுவரை அவர் 18 கூட்டங்களில் பேசி இருக்கிறார். அயோத்யா நகரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றால், மன்மோகன்சிங் தான் பிரதமர். இதில் மாற்றம் இல்லை. அவரது பெயரை காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்து விட்டது. ராகுல் காந்தி சிறந்த உழைப்பாளி. அவருக்கு சிறப்பான திறமை உண்டு. பிரதமராக அவருக்கு அனைத்து தகுதிகளும் இருக்கிறது. எதிர் காலத்தில் ஒருநாள் ராகுல்காந்தி பிரதமர் ஆவது உறுதி.

நான் அரசியலில் ஈடுபடுவேனா? என்ற கேள்விக்கு, எதிர்மறை பதிலை கொடுக்க விரும்பவில்லை. இல்லை என்பது நான் விரும்பாத வார்த்தை. ஆனால் இப்போது நான் அதுபற்றி சிந்திக்க வில்லை. எனது அண்ணன் மற்றும் தாயார் தொகுதிகளில் தேர்தல் நிர்வாகியாக மட்டும் செயல்படுகிறேன். சிறிய பொதுக்கூட்டங்களில் பேசுகிறேன். எனக்கும் வயதாகிக்கொண்டே போகிறது. எனவே அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று கூறிக்கொள்ள விரும்பவில்லை. இவ்வாறு பிரியங்கா கூறினார்.

‘தாய்லாந்தில் நிலைமைகள் கட்டுப்பாட்டில்’

protest_afp.jpgதாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இராணுவத்தினருக்கும் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்ட பின்னணியில், தற்போது அங்கு நிலைமைகள் கட்டுக்குள் இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் அபிஷிட் வெஜஜிவா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் சிலர் கொல்லப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை அபிஷிட் அவர்கள் மறுத்தார். இராணுவத்தினர் வெறும் சத்த வெடிகளை மட்டுமே வெடித்ததாகவும் அவர் கூறினார். தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா அவர்களின் ஆதரவாளர்களுக்கும் படையினருக்கும் இடையில் நடந்த தள்ளுமுள்ளுகளில், போராட்டக்காரர்கள் பலர் காயமடைந்தனர். இந்த போராட்டங்களை தாம் ஏற்பாடு செய்யவில்லை என்று தக்ஷின் தெரிவித்தார்.

சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு எதிராக கூடுதல் நடவடிக்கை வேண்டும் என்று அதிபர் ஒபாமாவிடம் கோரிக்கை

caption.jpgசோமாலிய கடற்கொள்ளையர்களை சமாளிக்க கூடுதலான நடவடிக்கைகளை எடுக்குமாறு, கடந்த வாரம் சோமாலிய நாட்டு கடற்பரப்பில் கடத்தப்பட்டு குறுகிய காலம் பிடித்து வைக்கப்பட்ட அமெரிக்க சரக்கு கப்பலில் இருந்த பணியாளர்கள், அமெரிக்க அதிபர் ஒபாமை வேண்டியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமையன்று உயிர்காக்கும் படகில் இந்தக் கப்பலின் காப்டனை, பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்த கடற்கொள்ளையர்கள் மூவரை அமெரிக்க கடற்படையினர் சுட்டுக் கொன்று கடத்தப்பட்ட கப்பலின் தலைவரான ரிச்சர்ட் பிலிப்ஸஸை மீட்டனர்.

இவ்வாறு அவர் மீட்கப்பட்டது இன்னமும் கடற்கொள்ளையர்களின் பிடியில் இருக்கும் கடத்தப்பட்ட மற்ற கப்பல்களின் குழுவினர் குறித்த கரிசனையை அதிகரித்துள்ளது என்றும், வன்முறை சம்பவங்கள் மேலோங்கக் கூடும் என்று அஞ்சப்படுவதாக மொம்பாசாவில் இருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.

இதனிடையே கென்ய நாட்டு துறைமுகமான மொம்பாசாவில் செய்தியாளர்களை சந்தித்த கடத்தபட்ட மெர்ஸ்க் அலபாமா என்கிற கப்பலின் குழுவினர், எவவாறு கப்பல் மீட்கப்பட்டு என்பது தொடர்பான விபரங்களை வெளியிட மறுத்துவிட்டனர்.

சீனாவில் மனித உரிமைகள் தொடர்பான தேசிய செயற்திட்டம்

சீனாவில் முதல் முறையாக அந்நாட்டின் அமைச்சரவை மனித உரிமைகள் தொடர்பான தேசிய செயற்திட்டத்துக்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.

தற்போது இருக்கும் அரசியல், சமூக மற்றும் பொருளாதார உரிமைகளை வலுப்படுத்தி மேலும் விரிவுபடுத்தவும், இனரீதியான் சிறுபான்மையினர் மற்றும் உடல் குறைபாடுகள் உடையவர்களுக்கான இவ்வகையான உரிமைகள் கூடுதலாக கிடைக்கவும், இந்த இரண்டு ஆண்டு கால செயற்திட்டம் உறுதி பூண்டுள்ளது.

இந்த தேசிய செயற்திட்டத்தின்படி, அரசின் தாக்குதலுக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்கிற பயமில்லாமல், உள்ளளூர் அரச அமைப்புகளை விமர்சிக்க மேலோங்கிய உரிமைகள் வழங்கப்படுகின்றன. மேலும் காவல்துறையின் சித்திரவதை மற்றும் அடக்கு முறையை முடிவுக்கு கொண்டு வரவும் இந்த செயற்திட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாகவே சீனாவின் கம்யூனிஸ அரசு அடிப்படை மனித உரிமைகளை விட, பொருளாதார சீர்திருத்தத்தையே முக்கியமாக கருதி முன்னெடுத்து வந்துள்ளது என்று சீனாவின் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டு வந்துள்ளனர்.

சோனியா மன்னிப்பு கேட்க வேண்டும்: அத்வானி

advanil000.jpgகேரளாவில் பிரசாரம் செய்த பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் அத்வானி காங்கிரஸ் தலைவர் சோனியா ‌தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார். அத்வானி சோனியாவின் விமர்சனங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

முன்னதாக ஜார்கண்டில் ‌பேசிய சோனியா, வெளியில் இருந்து வரும் பயங்கரவாதிகளை விட, உள்நாட்டில் இருக்கும் சில மதவாத சக்திகள் மிகவும் அபாயகரமானவை என கூறியிருந்தார்.

சோனியா யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றாலும் , அது பா.ஜ., வை குறிவைத்து பேசப்பட்டது என அத்வானி குற்றம் சாட்டினார். சோனியா தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை என்றால் அவரது கருத்து குறித்து பொது விவாதத்துக்கு தயாராக வேண்டும் என கூறினார் அத்வானி . நான்காவது அணி குறித்து பேசிய அத்வானி அது சந்தர்ப்பவாத கூட்டணி என சாடினார்.

வைகோவை நாடு கடத்த வேண்டும்: நடிகர் கார்த்திக் ஆவேசம்

india-election.jpgதேனியில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் பேசினார். அப்போது, ’’ இலங்கை பிரச்னையை மையமாக வைத்து பேசிய தலைவர் ஒருவர் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்கிறார். இலங்கையில் நடக்கும் பிரச்னைக்கு தமிழகத்தில் ஏன் ரத்த ஆறு ஓட வேண்டும்.

நான் தமிழன் தான், இந்தியன் என்ற எண்ணம் இல்லை என்கிறார். அதுபோன்றவரின் குடியுரிமையை ரத்து செய்து இலங்கைக்கே அனுப்பிவிட வேண்டும்.  அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளும்கட்சியினருக்கும் தைரியம் இல்லை’’ என்று ஆவேசப்பட்டார்.

மேடை சரிந்தது. கீழே விழுந்து அடிபட்டும் ஜோக் அடித்த லாலு

laluprasat.jpgரெயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், சாப்ராவை அடுத்துள்ள டெக்னவாஸ் பஜார் என்ற இடத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது, திடீரென மேடை சரிந்தது. மேடையில் அமர்ந்திருந்த லாலு பிரசாத் உட்பட அனைவரும் கீழே சாய்ந்தனர்.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் காயம் இன்றி தப்பிய லாலுபிரசாத் எந்தவித பதற்றமும் இன்றி காணப்பட்டார். அத்துடன் தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் `ஜோக்’ அடித்து அனைவரையும் கலகலக்க வைத்தார்.

தாய்லாந்தில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம்

protest_afp.jpgதாய்லாந்து அரசாங்கம் அவசரகால சட்டத்தை பிறப்பித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பாங்காங்கின் பிரதான வீதிகளில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டகாரர்கள் குவிந்து வருகின்றனர்.

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் ஆதரவாளர்களான இவர்கள், உள்துறை அமைச்சகத்திற்குள் உட்புகுந்ததோடு, தற்போதைய பிரதமர் பயணித்ததாக கருதப்படும் வாகனம் மீது கற்கள் மற்றும் இதர பொருட்களை வீசி எறிந்தனர். வீதிகளில் இராணுவம் குவிக்கப்பட்டு இருந்தாலும், இது வரையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஒரிசாவில் நக்ஸலைட் தாக்குதல்: 11 காவலர்கள் பலி

ஒரிசா மாநிலத்தில் நாட்டின் மிகப்பெரிய அலுமினியத் தாது சுரங்கத்தில் நக்ஸலைட் தீவிரவாதிகள் நேற்று நடத்தியத் தாக்குதலில், மத்திய தொழில்பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) காவலர்கள் 11 பேர் உயிரிழந்தனர். 4 நக்ஸலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

கோரபுட் மாவட்டம் பஞ்ச்பட்மாலி என்ற இடத்தில் தேசிய அலுமினியம் கம்பெனிக்கு (நால்கோ) சொந்தமான பாக்ஸைட் சுரங்கம் உள்ளது. தலைநகர் புவனேஸ்வரில் இருந்து 370 கி.மீ. தொலைவில் உள்ள இந்த சுரங்கத்தில் நேற்று ஆயுதம் தாங்கிய நக்ஸலைட்டுகள் 100 பேர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது பணியில் இருந்து 80 தொழிலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்திய அவர்கள், பணயக் கைதிகளாகப் பிடித்துக் கொண்டதாக காவல்துறை தலைவர் எம்.எம். ப்ரராஜ் தெரிவித்தார்.

சுமார் 10 மணி நேரம் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் சண்டை நீடித்தது. இன்று அதிகாலையில் தீவிரவாதிகள் அனைவரும் சுரங்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டு தப்பியோடி விட்டதாகவும், இந்த மோதலில் சிஐஎஸ்எஃப் காவலர்கள் 11 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நக்ஸலைட்டுகள் 4 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி கூறினார். 

போர் நிறுத்தம்: இலங்கையை அழுத்தி வருகிறோம்- ப.சிதம்பரம்

chidambaram1.jpgபிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், நான் ஆகியோர் சேர்ந்து ஆலோசனை செய்து போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என இலங்கை அரசிடம் அழுத்தமான கோரிக்கை வைத்துள்ளோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். நேற்று இலங்கையில் 2 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று காரைக்குடி அருகே வடகுடியில் நிருபர்களிடம் சிதம்பரம் பேசுகையி்ல்,

இலங்கைப் பிரச்சனை குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கெதிராக மற்றொருவர் பேசியும், அறிக்கைகள் விடுத்தும் வருகின்றனர். இதிலே சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

மத்திய அரசைப் பொறுத்தவரை 83ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வந்த வேறு வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அரசுகள் இந்த பிரச்சனையில் ஒரே கொள்கையினையே கடைப்பிடித்து வந்துள்ளன. நம்மைப் பொறுத்தவரை இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சம உரிமைகளை அளிக்கும் குடியுரிமை கிடைக்க வேண்டும். ஒருங்கிணைந்த இலங்கையிலே தமிழர்கள் வாழும் பகுதியிலே ஒரு மாநிலம் அமைய வேண்டும். தேவையெனில் மேலும் ஒரு மாநிலம் அமையலாம்.

இது நமது கொள்கை இந்த கொள்கையில் முன்னேற்றம் கொண்ட காலமும் உண்டு, பின்னடைவு ஏற்பட்டதும் உண்டு. தற்போதைய பின்னடைவு நமக்கு மிகுந்த வருத்தத்தையும் கவலையினையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக போர் நிறுத்தத்தினை பல மாதங்களாக வலியுறுத்தி வருகிறோம். இந்தியாவின் குரல் ஓங்கி ஒலித்ததன் காரணமாகத் தான் இன்று இந்தியாவோடு சேர்ந்து உலக நாடுகளும், ஐநாவும் சேர்ந்து போர் நிறுத்தத்தினை வலியுறுத்துகின்றன. நேற்று முன்தினம் கூட ஐநா. சபையின் செயலாளர் பான்-கி-மூன் போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், நான் ஆகியோர் சேர்ந்து ஆலோசனை செய்து சில அழுத்தமான கோரிக்கைகளை இலங்கை அரசிடம் தெரிவித்திருக்கிறோம். மிகுந்த அழுத்தத்தோடு வற்புறுத்தி தெரிவித்திருக்கிறோம். போர் நிறுத்தத்தினை கோரிக்கை, வேண்டுகோளாக இல்லாமல் அதற்கும் மேலான தேவையாகவே கூறியுள்ளோம்.

அதே நேரத்தில் விடுதலைப் புலிகள் தரப்பினரையும் போர் நிறுத்தத்திற்காக வற்புறுத்தி வருகிறோம். இதற்கு பலன் கிடைக்கும் என நம்புகிறேன். இதற்கு பலன் கிடைக்காவிட்டால் இலங்கை அரசுக்கு, இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் பெரிய பாதிப்பு ஏற்படும். தமிழக மக்கள் மத்திய அரசின் நடவடிக்கைகளை நம்ப வேண்டும், ஆதரிக்க வேண்டும். மத்திய அரசில் 4 ஆண்டுகள் 11 மாதம் அங்கம் வகித்து விட்டு அந்த அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்துக்கும் சம்மதம் தெரிவித்து விட்டு, அதன்பின் அந்த அரசை விட்டு வெளியே வந்து இந்த அரசு இலங்கை பிரச்சினையில் எதுவுமே செய்யவில்லை என்று சிலர் (பாமக) கூறுவது அபத்தமான விநோதம்.

அமைச்சரவையில் நடைபெறும் விவாதங்கள் முடிவுகளை அனைத்து அமைச்சர்களும் அறிவார்கள். மாற்று கருத்து இருந்தால் அப்போது தெரிவித்து இருக்க வேண்டும். மத்திய அரசு இந்த நிமிடம் வரை போர் நிறுத்தத்திற்கான தேவையை வலியுறுத்தி வருகிறது. இலங்கையில் இரு தரப்பினரும் போர் நிறுத்தத்திற்கு முன் வருவார்கள் என நம்புகிறேன் என்றார்.