அறிக்கைகள்

அறிக்கைகள்

கட்சிகள் அமைப்புகள் நிறுவனங்கள் வெளியிடும் அறிக்கைகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் செல்வராஜா பத்மநாதன்

tamil-elam-flag.gifவரலாற்றின் தேவை கருதி – பிறந்திருக்கும் புதிய சூழலுக்கு ஏற்ப – புதிய வழிமுறைகளுக்கு ஊடாகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் -எமது இயக்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பு மீள்-ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
நீண்ட – விரிவான – ஆழமான கருத்துப் பரிமாற்றங்களின் இறுதியாக எமது நிர்வாகச் செயற்குழுவால் எடுக்கப்பட்ட கூட்டு முடிவுக்கு அமைய எமது இயக்கத்தின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளரான செல்வராஜா பத்மநாதன் அவர்கள் – இனிவரும் காலத்தில் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைகளுக்கு அமைவாக போராட்ட நகர்வுளை வழிநடாத்திச் செல்வார் என்பதை எமது அன்புக்குரிய மக்களுக்கும், இந்த உலக சமூகத்திற்கும் அதிகாரபூர்வமாக அறியத்தருகின்றோம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்

21 ஜூலை 2009

உலகத் தமிழ் மக்களுக்கும் அனைத்துலக சமூகத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிறைவேற்றுச் செயற்குழுவின் அறிவிப்பு

எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழ் பேசும் மக்களே,

எமது தமிழீழ தேசத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் நெருக்கடி மிகுந்த, துயர்படிந்த காலகட்டம் ஒன்றினுள் ஈழத் தமிழினம் இப்போது நிலைகுலைந்து நிற்கின்றது. ஈடுசெய்ய முடியாத – கனவில் கூட நாம் ஏற்றுக்கொள்ள விரும்பாத – மிகப்பெரிய இழப்புக்களை, எம் இனம் சந்தித்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்துவிட்டதாகவும், முற்றாக ஒடுக்கிவிட்டதாகவும், சிறிலங்கா நாடு பரப்புரை செய்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் – தமிழீழ விடுதலைக்காக நாம் வீறுகொண்டு எழுந்து போராடவேண்டியது எமது வரலாற்றுக்கடமை – ஒப்பற்ற எங்கள் தேசியத் தலைவர் அவர்களினாலும், எங்கள் மண்ணுக்காக விதையாகிப் போன மாவீரர்களினாலும், தமது உயிர்களைத் தந்துவிட்ட மக்களினாலும் எங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில் – வரலாற்றின் தேவை கருதி – பிறந்திருக்கும் புதிய சூழலுக்கு ஏற்ப – புதிய வழிமுறைகளுக்கு ஊடாகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் – தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பை நாம் மீள் ஒழுங்கமைப்புச் செய்துள்ளோம் என்பதை எமது அன்புக்குரிய மக்களுக்கு எமது இயக்கம் பணிவோடு அறியத்தருகின்றது.

போராட்ட வடிவங்களும் அதற்கான உத்திகளும் பாதைகளும், காலத்திற்கு ஏற்பவும் தேவைக்கு ஏற்பவும் மாற்றமடையலாம். எமது இறுதி இலட்சியமான தமிழீழம் என்பது என்றும் மாறாதது.

எனவே, தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் எம்முடைய மக்களுடன் ஒன்றிணைந்து விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வை மேற்கொள்ளவேண்டிய தருணத்தில் இருக்கின்றோம். அன்றும் இன்றும் இனி என்றும் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே தமிழ்த் தேசியத்தின் தலைவர்.

எமக்கு முன்னால் உள்ள தடைகளை உடைத்து எறிந்து எமது செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள எமது ஒருங்கிணைப்பாளர்கள், தாயகத்தின் களத்தில் இருந்து எதிரியின் முற்றுகையை உடைத்துக்கொண்டு வெளிவந்த போராளிகள், பொறுப்பாளர்கள் என எமது உறுப்பினர்கள் பலரையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட்ட – நீண்ட – விரிவான – ஆழமான கருத்துப் பரிமாற்றங்களின் விளைவாக இறுதியான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கூட்டு முடிவுக்கு அமைய – தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த திரு.செல்வராஜா பத்மநாதன் அவர்கள் – இனிவரும் காலத்தில் எமது தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைகளுக்கு அமைவாக எமது போராட்ட நகர்வுளை வழிநடாத்திச் செல்வார் என்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிறைவேற்றுச் செயற்குழுவினராகிய நாங்கள் எமது அன்புக்குரிய மக்களுக்கும், இந்த உலக சமூகத்திற்கும் அதிகாரபூர்வமாக அறியத்தருகின்றோம்.

எமது போராட்டத்தை முனைப்புடன் முன்நகர்த்தும் நோக்கில் எமது இயக்கத்திற்கான ஒரு தலைமைச் செயலகமும், பல்வேறு துறைசார் வேலைத் திட்டப் பிரிவுகளும், நிறைவேற்றுச் செயற்குழுவும் உருவாக்கப்பட்டுள்ளன. இவை பற்றிய விபரங்களை நாம் விரைவில் அறியத்தருவோம். எமது எதிர்கால செயற்பாடுகளை வலுப்படுத்தும் முகமாக தமிழ் மக்களாகிய உங்களின் மலையாய ஆதரவையும் அறிவார்ந்த கருத்துகளும் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

தமிழ் மக்களின் நிலங்களை கையகப்படுத்தியதாலும் பல்லாயிரம் தமிழ் மக்களைக் கொன்று குவித்ததாலும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தோற்றுவிட்டது என்று சிங்கள தேசமும் அதனுடன் கூட்டுச்சேர்ந்த நாடுகளும் நினைக்குமாயின் அந்த மாயையை நாம் உடைத்தெறிவோம்.

எமது பெருந் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் வளர்த்துவிட்ட விடுதலைத் தாகம் என்ற பெருநெருப்பு, உணர்வுள்ள ஒவ்வொரு தமிழர்களின் நெஞ்சிலும் கனன்று கொண்டிருப்பதையும் தேச விடுதலை ஒன்று மட்டுமே அந்தப் பெருநெருப்பை அணைக்கும் சக்தி உள்ளது என்ற உண்மையையும் நாம் எமது அடுத்தகட்ட போராட்ட நகர்வுகளின் ஊடாக உலகிற்கு உணர வைப்போம்.

நன்றி.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

இவ்வண்ணம்,
நிறைவேற்றுச் செயற்குழு சார்பாக,
திரு.சுரேஸ் (அமுதன்), திரு.ராம்.
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

அரசியல் இராஜதந்திர வழிமுறை ஊடான முன்னெடுப்பு ஏன்?: செ.பத்மநாதன் விளக்கம்

அண்மையில் நமது விடுதலைப் போராட்டம் எதிர்கொண்ட பெரும் பின்னடைவினைக் கருத்தில் கொண்டும், சமகால அனைத்துலக சூழல், பிராந்திய நெருக்குவாரம், தமிழீழ சமூகத்தினுள் நிலவும் அகப்புற சூழல்கள் என்பனவற்றினை கவனத்தில் எடுத்தும் அடுத்துவரும் காலங்களில் தமிழீழ மக்களின் தேசிய விடுதலைக்கான போரினை பிரதானமாக அரசியல், இராஜதந்திர வழிமுறை ஊடான அழுத்தங்களுடன் முன்னெடுப்பதே சாத்தியமானதும், வலுவானதுமாகும் என நாம் கருதுவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் இணையத்தளத்தில் இன்று சனிக்கிழமை அவர் எழுதியுள்ள வலைப்பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தற்போதைய சிக்கல் நிறைந்த காலகட்டத்தினை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்பதனை இந்த வாரம் நோக்கலாம் எனக் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தேன். இக் காலகட்டத்தினை எவ்வாறு எதிர் கொள்ளப்போகிறோம் என்பது தொடர்பாக சிந்திப்பதற்கு தாயகத்தின் தற்போதைய நிலைமை குறித்த தகவல்களும் விபரங்களும் முக்கியமானவை.

தற்போது தமிழர் தாயகத்தின் பல்வேறு பகுதிகளில் இராணுவ ஆக்கிரமிப்பு மிகவும் மூர்க்கமான முறையில் சிங்கள தேசியவாத அரசினால் முன்னெடுக்கப்படுகின்றது. வன்னி மண்ணிலிருந்து சுமார் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அவர்களின் பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து பிய்த்தெடுக்கப்பட்டு அனைத்துலகத்தின் கண்காணிப்புக்கு அப்பால் சிங்கள இராணுவத்தின் தடுப்பு முகாம்களுக்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முள்ளு வேலிக்குள் மக்கள்

இதனை விட மேலும் மூன்று லட்சம் மக்கள் ஏனைய தமிழர் பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்களாக வாழ்ந்து வருகின்றனர். ஒட்டுமொத்தமாக ஆறு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தமது வாழ்விடங்களை இழந்து மிகுந்த துயருடன் அல்லலுற்று வாழ்கின்றனர்.

மேலும், 10 ஆயிரத்துக்கும் அதிகமான விடுதலைப் போராளிகள் அனைத்துலக சட்டங்களுக்கு முரணாக இலங்கை அரசினால் தடுத்து வைக்கப்பட்டும், தனிமைப்படுத்தப்பட்டும், சித்திரவதைகளுக்கு உட்பட்டும் வருகின்றனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளில் மக்களின் ஜனநாயக உரிமைகளும், மனித உரிமைகளும் மறுக்கப்பட்டு வருகின்றது. கொல்லப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் எதுவித நீதி கோரும் உரிமைகளும் அற்று அநாதரவாகவுள்ளனர்.

வறுமையும், மோசமான வாழ்க்கைச் சூழலும்

மக்களின் பொருளாதார, கல்வி மற்றும் பிற வாய்ப்புக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உடனடி நிவாரணங்கள், மத்திய கால மற்றும் நீண்டகால திட்டங்கள் எதுவுமற்ற சூழல் நிலவுகின்றது. இது வறுமையையும், மோசமான வாழ்க்கைச் சூழலையும் தமிழ் மக்களிற்கு ஏற்படுத்துகின்றது.

இதேவேளையில் தமிழீழ மக்கள் அடைந்துள்ள மனிதப் பேரவலத்தினையும் எதிர்கொண்டுள்ள மனிதாபிமான நெருக்கடிகளினையும் முன்வைத்து அனைத்துலகத்திடம் பெருமளவில் வெளிநாட்டு வளங்களினையும் உதவிகளினையும் திரட்டுவதில் இலங்கை அரசு கொள்கையளவில் வெற்றி பெற்று வருகிறது.

அந்த வளத்தினைக் கொண்டு புனர்வாழ்வு புனரமைப்பு செயற்பாடுகளினை முன்னெடுப்பதாக கூறுவதன் மூலம் தமிழ்மக்களின் நலன்களில் சிங்கள அரசு மிகுந்த அக்கறை கொண்டிருப்பது போல் காட்டித்தான் மேற்கொண்ட தமிழின அழிப்பு பழியிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் வழிதேடுகின்றது.

தனது இராணுவ ஆளணியினரால் கட்டுப்படுத்தப்படும் சிவில் நிர்வாக இயந்திரத்தின் கீழ் மீள்கட்டமைப்பும் அபிவிருத்தியும் என்ற பெயரில் தமிழ்மக்களின் பாரம்பரிய தாயகத்தின் இனத்துவ சமநிலையினை சிங்கள மக்களின் பெரும்பான்மைக்கு சார்பாக மாற்ற சிங்கள அரசு முனைகிறது.

தமிழ் மக்களின் சமூக பொருளாதாரக் கட்டமைப்பினை தற்சார்பு நிலையற்றதும் இலங்கையின் தென்பகுதியினால் கட்டுப்படுத்தக்கூடியதுமான தங்கி வாழும் பொருளாதாரமாக மாற்றுவதற்குரிய திட்டங்களினையும் சிங்கள அரசு முன்நகர்த்தியுள்ளது.

தமிழ்மக்களின் அரசியல் சமூக பொருளாதார இருப்பினையும் தற்சார்பு நிலையினையும் நிர்மூலமாக்குவதில் சிங்கள அரசு குறியாகவுள்ளது.

இது மட்டுமன்றி இலங்கை அரசு தமிழ்த் தேசிய இனத்தின் தனித்துவத்தினை நிராகரித்து ஒரு நாடு, ஒரு மக்கள் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தமிழீழ மக்களை சிங்கள ஆதிக்கத்துக்குள் சிறைப்பிடிக்கவும் பார்க்கிறது.

தமிழ்த் தேசிய இனம் தனது தேசிய இன பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாத்து, தேசிய தனித்துவத்தினைப் பேணிக் கொள்வதற்கே போராட வேண்டிய நிலை உருவாகி வருகிறது.

இத்தகைய ஒரு சூழலில், நாம் எவற்றையும் நமது தாயகத்தின், நமது தாயக மக்களின் இன்றைய யதார்த்த நிலையிலிருந்து சிந்திக்க தொடங்குவதுதான் நேர்மையானதும் சரியானதுமாகும்.

தாயகத்தின் தற்போதைய நிலையில், இலங்கை அரசின் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்கள் போராளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், அவர்களது நலன்களைப் பேணுதல், மக்களைத் தத்தமது வாழ்விடங்ககளில் இயன்றளவு விரைவாக குடியமரச் செய்தல், மக்கள் தமது இயல்பு வாழ்விற்குத் திருப்புவதற்கு ஆதரவாகவும் ஆதாரமாகவும் செயற்படுதல், போரில் தமது அவயங்களை இழந்து அங்கவீனமாகி நிற்கும் நமது மக்களுக்கும் போராளிகளுக்கும் புதுவாழ்வளித்தல் போன்ற அடிப்படை புனர்வாழ்வு வேலைத்திட்டங்களை தமிழர் நலன் என்ற நோக்கு நிலையிலிருந்து எவ்வாறு கையாளப் போகிறோம் என்கின்ற மனிதாபிமான விடயங்கள் முதற்கொண்டு தமிழர் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் என்ற அடிப்படைக் கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழீழ மக்களின் அரசியல் வேட்கைகளை வென்றெடுத்தல் என்பது வரையாக நாம் கடந்து செல்ல வேண்டிய பாதை மிக நீண்டதும் சவால்கள் நிறைந்ததுமாகும்.

இத்தகைய ஒரு சிக்கலான ஒரு காலகட்டத்தில், மக்களின் தற்போதைய கடினமான வாழ்க்கை நிலையை முன்னிறுத்தியும், அண்மையில் நமது விடுதலைப் போராட்டம் எதிர்கொண்ட பெரும் பின்னடைவினைக் கருத்தில் கொண்டும், சமகால அனைத்துலக சூழல், பிராந்திய நெருக்குவாரம், தமிழீழ சமூகத்தினுள் நிலவும் அகப்புற சூழல்கள் என்பனவற்றினை கவனத்தில் எடுத்தும் அடுத்துவரும் காலங்களில் தமிழீழ மக்களின் தேசிய விடுதலைக்கான போரினை பிரதானமாக அரசியல், இராஜதந்திர வழிமுறை ஊடான அழுத்தங்களுடன் முன்னெடுப்பதே சாத்தியமானதும், வலுவானதுமாகும் என நாம் கருதுகிறோம்.

இந்த அடிப்படையில், முள்ளிவாய்க்காலில் வைத்து நமது தலைவர் எடுத்த தீர்மானத்திற்கு அமைய ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு, நமது விடுதலை இலட்சியத்தினை வென்றெடுப்பதற்கான அடுத்தகட்டப் பயணம் அரசியல், இராஜதந்திர வழிமுறைகளுக்கூடாகத் தொடரும் என்கின்ற நிலைப்பாட்டினை விடுதலைப் புலிகள் இயக்கம் எடுத்துள்ளது.

இது நமது அடுத்தகட்டப் போராட்டம் குறித்த முக்கியமான ஒரு அரசியல் நிலைப்பாடு.

ஏனைய விடயங்கள் குறித்து நாம் அடுத்த வாரம் (25.07.2009) நோக்குவோம்.

என்னுடன் நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் கருத்துக்களை கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

இவற்றில் பொருத்தமானவற்றைப் இப்பகுதியில் பிரசுரிக்கவும் நான் விரும்புகிறேன். உங்கள் கருத்துக்கள் பிரசுரிக்கப்படுவதனைத் தாங்கள் விரும்பாவிடின் அதனையும் குறிப்பிடுங்கள்.

உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ltte.ir@gmail.com

நன்றி. மீண்டும் நாம் அடுத்த வாரம் சந்திப்போம்.

என்றும் அன்புடன்
கே.பி.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசம்நெற் வன்னி முகாம்களில் மேற்கொள்ளும் கல்வித் திட்டம் – கேள்வியும் பதிலும் & தேசம்நெற் வாசகர்களிடம் ஒரு விண்ணப்பமும்

students.jpgவன்னி முகாம்களில் தங்கியுள்ள 5ம் தர மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்ட நூல் விநியோகத்திட்டத்திற்கு இன்னமும் 3 65 000 ரூபாய் (2000 பவுண்) தேவைப்படுகின்றது. மேற்படி தொகையை தேசம்நெற் வாசகர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம். இத்திட்டத்திற்கு பங்களிக்க விரும்புபவர்கள் தேசம்நெற்றுடன் தொடர்பு கொள்ளவும். தங்களை நேரடியாக இனம்காட்டிக் கொள்ள விரும்பாதவர்கள் மின்அஞ்சலூடாக தொடர்பு கொள்ள முடியும்.

தொடர்பு விபரங்கள்:
தொடர்புகளுக்கு: த ஜெயபாலன் – ரி சோதிலிங்கம்
தொலைபேசி இல – 0044 208 279 0354
கைத் தொலைபேசி இல – 0044 7800 596 786 – 0044 7846 322 369
மின்அஞ்சல் : thesam97@hotmail.com

வன்னி முகாம்களில் தமது புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்நோக்கி இருக்கும் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு உதவுமுகமாக 28 இலட்சம் (27 77 000) ரூபாய் செலவில் நூல் வழங்கும் திட்டம் ஒன்றை தேசம்நெற் முன்னெடுத்தது அனைவரும் அறிந்ததே. தற்போது இத்திட்டத்தின் இறுதிப் பகுதியில் நாங்கள் உள்ளோம். மேலும் ஓகஸ்ட் நடுப்பகுதியில் பரீட்சைகள் நடக்க இருக்கின்றது. அதனால் இன்னும் சில தினங்களுக்குள் மாணவர்களுக்கான நூல்கள் அனைத்தும் விநியோகிக்கப்பட வேண்டியுள்ளது.

இத்திட்டத்திற்கு இதுவரை பங்களித்தவர்கள் விபரம் வருமாறு:
9 25 000 ரூபாய் : சிந்தனை வட்டம்
7 00 000 ரூபாய் : மத்திய இலங்கை முஸ்லீம் பட்டதாரிகள் ஒன்றியம் (இலங்கை)
5 50 000 ரூபாய் (3000 பவுண்) : அகிலன் பவுண்டேசன் (லண்டன்)
2 00 000 ரூபாய் : தேசம்நெற்    
   37 000 ரூபாய் (200 பவுண்) : பி சோமசுந்தரம் (லண்டன்)
      
24 12 000 ரூபாய் : மொத்தமாக இதுவரை உறுதியளிக்கப்பட்ட தொகை

இவற்றைக் கருத்தில்கொண்டு தேசம்நெற் அதன் வாசகர்களிடம் இந்த உதவி விண்ணப்பத்தை முன் வைக்கின்றது. இத்திட்டம் பற்றிய முழுமையான விபரங்களை கேள்வி பதில் வடிவில் வழங்கி உள்ளோம். மேலதிக விபரங்களுக்கு மேலுள்ள தொடர்பு இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும். இக்கல்வித்திட்டம் தொடர்பாக பரிமாறப்பட்ட கடிதங்களைப் பார்க்க அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்.

தேசம்நெற் முன்னெடுக்கும் 5ம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கான கல்வித் திட்டம் – கேள்வியும் பதிலும்

புலமைப் பரிசில் பரீட்சை என்றால் என்ன:
இலங்கையில் அரசாங்கப் பரீட்சை என்ற அடிப்படையில் 03 பிரதான பரீட்சைகள் நடைபெறுகின்றன.
1. தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை
2. க.பொ.த சாதாரணதர பரீட்சை
3. க.பொ.த உயர்தர பரீட்சை

இப்பரீட்சைகளுள் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை பாடசாலை மாணவனொருவன் எதிர்நோக்கும் முதலாவது பரீட்சையாகும்.

இதனை லண்டனில் நடைபெறும் 11 பிளஸ் பரீட்சைக்கு ஒப்பிடமுடியும்.

இப் பரீட்சையில் சித்தியடைவதால் மாணவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன:
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையானது மாணவர்களை உயர்தர பாடசாலைகளுக்குத் தேர்ந்தெடுப்பதற்கும், மாணவர்களுக்கு உதவிப் பணம் வழங்குவதற்குமான பரீட்சையாக அமைந்துள்ளது. இப்பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெறும் மாணவர்கள் இலங்கையிலுள்ள மிகவும் பிரபல்யமான பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவர்.

அதேநேரம், இப்பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு க.பொ.த. உயர்தரம் சித்தியடையும் வரை மாதந்தோறும் (தற்போது) ரூபாய் 500 உதவிப் பணமாக அரசாங்கத்தால் வழங்கப்படும். உரிய மாணவன் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு செய்யப்பட்டாலும் இத்தொகை அதிகரிக்கப்பட்டு வழங்கப்படும்.

எத்தனை மாணவர்கள் இப்பரீட்சையில் தோற்றுகின்றனர்:
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையானது ஒரு போட்டிப் பரீட்சையாகும். சராசரியாக ஆண்டொன்றுக்கு 70 000 மாணவர்கள் மட்டில் அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழி மூலமாக தோற்றுவர். இவர்களுள் சுமார் 3500 மாணவர்கள் மட்டில் சித்தியடைவர்.

தற்போது இப்பரீட்சையில் தோற்றவுள்ள எத்தனை மாணவர்கள் இடப்பெயர்வு முகாம்களில் உள்ளனர்:
இடப்பெயர்வு முகாம்களில் உள்ள 4872 மாணவர்கள் இப்பரீட்சையில் தோற்ற உள்ளனர்.

இலங்கை இலவசக் கல்வி வழங்கும் நாடாக இருக்கையில் எதற்காக அம்மாணவர்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட வேண்டி உள்ளது:
அண்மைய வருடங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தால் கடந்த ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை வன்னிப் பகுதியில் உள்ள பாடசாலைகள் இயங்கவில்லை. அதனால் அந்த மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களும் விநியோகிக்கப்படவில்லை. தற்போது அவர்கள் அனைத்தையும் இழந்து இடம்பெயர்ந்துள்ள நிலையில் அவர்கள் பாடப் புத்தகங்களைப் பெற்று படிப்பதற்கான வாய்ப்பான சூழல் இடம்பெயர்வு முகாம்களில் இல்லை.

மேலும் இந்நிலைக்கு முன்னதாகவே புலமைப் பரிசில் பரீட்சைக்கான துரித வழிகாட்டல் நூல்களை அரசின் இலவச கல்வித் திட்டத்தின் கீழ் வழங்குவதில்லை. அதனால் மாணவர்கள் அதனை தனிப்பட்ட முறையில் வாங்கியே தமது கற்கைகளை மேற்கொள்கின்றனர்.

ஏற்கனவே கல்வி பாதிக்கப்பட்ட நிலையில் பரீட்சைக்குத் தோற்றும் இம்மாணவர்களுக்கு துரித மீட்டல் செய்வதற்கான வினா விடைத் தொகுப்புகளும் அதற்கான வழிகாட்டி நூல்களும் மிகவும் அவசியம்.

எதற்காச் சிந்தனை வட்டத்தின் வெளியீடுகள் தெரிவு செய்யப்பட்டது:
சிந்தனை வட்டம் கடந்த 15 வருடங்களாக புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான நூல்களை வெளியிட்டு வருகின்றது. இலங்கை பூராவும் உள்ள 700க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு சிந்தனைவட்டம் இந்நூல்களை விநியோகித்து உள்ளது. சிந்தனை வட்டத்தின் நூல்களின் தரம் இத்துறையில் நீண்டகாலம் நிலை பெற்ற காரணங்களினால் விசேட கல்விப் பணிப்பாளர் தனது உதவிக் கோரிக்கையை சிந்தனை வட்டத்திடம் வைத்தார்.

இந்நூல் திட்டத்திற்கு ஏற்படும் செலவு என்ன:
ஒவ்வொரு மாணவருக்கும்
30 வினாத்தாள்கள் கொண்ட வினாத் தொகுப்பு (148 பக்கங்கள்) 180.00 ரூபாய்
வழிகாட்டி நூல் 1 97.50 ரூபாய்
வழிகாட்டி நூல் 2 97.50 ரூபாய்
வழிகாட்டி நூல் 3 97.50 ரூபாய்
வழிகாட்டி நூல் 4 97.50 ரூபாய்

570.00 ரூபாய் : ஒரு மாணவருக்கு இந்நூல் தொகுப்பை வழங்க ஏற்படும் செலவு 
(வழிகாட்டி நூல்கள் இல்லாது 100 பக்கம் கொண்ட வினாத் தொகுப்பின் சந்தை மதிப்பு 200 முதல் 225 ரூபாய்)

27 77 000.00 ரூபாய் : 4872 மாணவர்களுக்கும் தொகுப்பை வழங்க ஏற்படும் செலவு

வெளியீட்டாளர்களான சிந்தனை வட்டம் செலவு தொகையின் மூன்றிலொரு பகுதியைப் பொறுப்பேற்பதுடன் விநியோகத்தையும் மேற்கொள்கின்றனர்.
9 25 000.00 ரூபாய் : சிந்தனை வட்டம் பொறுப்பேற்றசெலவுத் தொகை.

18 52 000.00 ரூபாய் : சிந்தனை வட்டம் பொறுப்பேற்ற பின் நூல்தொகுப்பை வழங்க ஏற்படும் செலவு.

இந்நூல் திட்டத்திற்கான செலவை எவ்வாறு பெற்றுக்கொள்வது:
ஆரம்பித்தில் தேசம்நெற் இம்முயற்சியை முன்னெடுத்திருந்தது. தற்போது மாணவர்களின் தொகை அதிகரித்துள்ள நிலையில் தேசம்நெற் தனித்து இத்திட்டத்தை நிறைவேற்றும் பொருளாதாரப் பலத்தை கொண்டிருக்காததால் வெவ்வேறு உதவி நிறுவனங்கள் தனிநபர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன் மூலம் பெறப்பட்ட உதவிகள் வருமாறு

7 00 000 ரூபாய் : மத்திய இலங்கை முஸ்லீம் பட்டதாரிகள் ஒன்றியம் (இலங்கை)
5 50 000 ரூபாய் (3000 பவுண்) : அகிலன் பவுண்டேசன் (லண்டன்)
2 00 000 ரூபாய் : தேசம்நெற்    
   37 000 ரூபாய் (200 பவுண்) : பி சோமசுந்தரம் (லண்டன்)

14 87 000 ரூபாய் : மொத்தமாக இதுவரை உறுதியளிக்கப்பட்ட தொகை.

3 65 000 ரூபாய் (2000 பவுண்) : இத்திட்டத்தினை நிறைவேற்ற இன்னமும் தேவையான நிதி.

இதன் நம்பகத் தன்மையை எவ்வாறு உறுதிப்படுத்துவது:
இந்நூல் திட்டத்திற்கு பங்களிப்பு செய்யதவர்களின் முழுமையான விபரங்கள் செலவீனங்களுக்கான கணக்கு விபரங்கள் நூல்கள் விநியோகிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் அனைத்தும் தேசம்நெற் இணையத்திலும் லண்டன் குரல் பத்திரிகையிலும் வெளியிடப்படும்.

இத்திட்டத்திற்கு உதவ விரும்புபவர்கள் எவ்வாறு உதவலாம்:
இந்நூல் திட்டத்திற்கு உதவ விரும்புபவர்கள் தேசம்நெற்றுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு தங்கள் உதவியை வழங்கலாம். உதவி வழங்குபவரின் பெயரும் உதவித்தொகையும் முழுமையான கணக்கு விபரமும் தேசம்நெற் இணையத் தளத்திலும் லண்டன் குரல் பத்திரிகையிலும் பிரசுரிக்கப்படும்.

எப்படித் தொடர்பு கொள்வது:
தொடர்புகளுக்கு: த ஜெயபாலன் – ரி சோதிலிங்கம்
தொலைபேசி இல – 0044 208 279 0354
கைத் தொலைபேசி இல – 0044 7800 596 786 – 0044 7846 322 369
மின்அஞ்சல் : thesam97@hotmail.com

இந்நூல் திட்டத்தின் பயனை எவ்வாறு மதிப்பிட முடியும்:
சூழல் இடம்கொடுத்தால் இம்மாணவர்கள் மாதிரிப் பரீட்சைகளுக்கு அமர்த்தப்பட்டு அவற்றின் மதிப்பீடுகள் உதவி வழங்குபவர்களுக்கு தெரியப்படுத்தப்படும். மேலும் இம்மாணவர்கள் ஓகஸ்ட் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள புலமைப் பரிசில் பரீட்சைகளில் தோற்றிப் பெறும் பெறுபேறுகள் உதவி வழங்கியவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

சமூக வளர்ச்சியின் அடிப்படை கல்வி!
இளமையில் கல்வி சமூகத்தின் அஸ்திவாரம்!

அன்பென்று கொட்டு முரசே!!! – தோழர் சிவம் நினைவு நிகழ்வு : தேடகம்

Comrade_Siva_Meetingதோழர் சிவம் அவர்களின் நினைவு நிகழ்வு ரொறன்ரோவில் நிகழ்கிறது. தேடகம் அமைப்பினரால் யூலை 4ல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் இலங்கையில் இருந்து சி சிவசேகரம் கலந்துகொள்கிறார். இவரே தோழர் சிவம் பற்றிய நினைவுப் பேருரையை ஆற்றுகிறார். சமூக ஒடுக்குமுறைக்கு எதிராய் போராளியாய் எழுந்து தன் வாழ்நாய் முழுவதும் மானிடத்திற்காய் உழைத்தவர் தோழர் சிவம் என்ற தோழர் கணேசமூர்த்தி சிவகுமாரன் என தேடகம் அவரை கௌரவித்து உள்ளது. அன்பென்று கொட்டுமுரசே என்ற தலைப்பில் இந்நிகழ்வை தேடகம் குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

Further Details : Comrade_Siva_Meeting

Related Articles:

கம்யூனிஸ்ட் ஆர்வலர் சிவம் கனடாவில் மரணம்

கொம்யூனிஸ்ட் சிவா காலமானார்! : தேடகம் (செய்திக் குறிப்பு)

“தமிழினத் தாகம் தணியாது”: பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை

சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளும் வகையில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவையின் அடிப்படையில் பிரான்சில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் கட்டமைப்பாக நாம்”பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை” என்ற அமைப்பை உருவாக்குகின்றோம். அறிக்கையின் முழுவடிவம்:-

அன்பார்ந்த தமிழீழ மக்களே!

உலக சமூகம் கைகட்டி வாய்பொத்தி மௌனிகளாக பார்த்துக் கொண்டிருக்க மிகப் பெரும் மனிதப் படுகொலையை இலங்கைத் தீவிலுள்ள சிங்கள பௌத்த பேரினவாத அரசு எமது இனத்தின் மீது அரங்கேற்றியுள்ளது. மனித குலம் வெட்கித் தலைகுனியும் விதத்திலான இனப்படுகொலை 21 ம் நூற்றாண்டில் எமது மண்ணிலேயே அரங்கேறியுள்ளது. நீதிக்கான எமது போராட்டம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

கடந்த ஒன்றரை தசாப்தகாலமாக தமிழர் தயாகத்தில் இயங்கிவந்த தமிழீழ நடைமுறை அரச கட்டமைப்புக்கள் அழிக்கப்பட்டு, மக்களின் வாழ்வும் வளமும் சீரழிக்கப்பட்டுள்ளது. வாழ்விடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, அடிப்படை மனித உரிமைகள், ஐனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு மக்கள் அகதி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது குரல்வளைகள் நசுக்கப்பட்டுள்ளன.

வன்னிப் பெருநிலப்பரப்பில் வாழந்த மக்களில் 3 இலட்சம் வரையிலான மக்கள் தடுப்பு முகாமில் வெயிலுக்கு நிற்க கூட நிழலின்றி, மழைக்கு ஒதுங்க கூட இடமின்றி கம்பி வேலிகளுக்குள் மனஅழுத்தங்களுடன் சொல்ல முடியாத துன்பச்சுமையுடன் காலத்தை கழித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் உறவுகளோ தினமும் தமது உறவினைத்தேடி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கின்றனர்.

தமது தாய் மண்ணுக்காக போராடிய போராளிகள், கைதிகளாக வதை முகாம்களில் வதைக்கப்படுகின்றார்கள். இந் நிலையில் தமிழ் மக்களின் அவலங்களைப் போக்கவும், உரிமைகளை மீட்டெடுக்கவும் தொடர்ந்து ஒன்றிணைந்து போராட வேண்டிய பாரிய பொறுப்பும், கடமையும் புலம் பெயர்ந்து வாழும் இலட்சக்கணக்கான எங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தலையாய கடமையில் நாம் உள்ளோம். இந்த வரலாற்றுக் கடமையை செய்வதற்கு நாம் எல்லோரும் ஒன்றிணைந்து சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளும் வகையில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவையின் அடிப்படையில் பிரான்சில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் கட்டமைப்பு ஒன்றினை உருவாக்க வேண்டிய அவசியமான காலகட்டத்தில் நிற்கின்றோம்.

எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் நாம் தொடர்ந்து உறுதியுடன் இலக்கு நோக்கி பயணிப்போம். உலக சரித்திரத்திலேயே யூத மக்களும் எமது இனத்தினைப்போன்று அதற்கு மேலான கொடுமை நிறைந்த சூழ்நிலையிலேயே இருந்திருந்தார்கள். புலம் பெயர் நாடுகளில் அவர்களிடம் இருந்த ஒற்றுமையான மிகப்பெரிய கட்டமைப்பு இருந்ததால். அந்த கட்டமைப்புக்கும் அதன் செயற்பாட்டுக்கும் முன்னால் குற்றவாளிகளை நிறுத்தினார்கள். தாம் தமது நாட்டுக்கு செல்ல வேண்டும் என்று கனவு கண்டார்கள் இன்று அந்த கனவை நனவாக்கினார்கள்.

அதே போலவே நாமும் இந்த யூத இனத்தவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல எம்மாலும் எல்லாவற்றையும் சாதிக்க முடியும் இன்று எம்மிடம் மிக முக்கிய அவசர கடமைகள் காத்திருக்கின்றன. எமது தேசியத்தை வலியுறுத்தவும், நியாயங்களை எடுத்துக்கூறவும், எமது போராட்டத்தின் அடுத்த வடிவமாக நாம்”பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை” என்ற அமைப்பை உருவாக்குகின்றோம்.

பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவையானது

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள வட்டுக்கோட்டை என்னும் இடத்தில் 1976 ம் ஆண்டு அனைத்துத் தமிழ்க்கட்சிகளாலும் பிரகடனப்படுத்தப்பட்டு, 1977 ல் இலங்கைத்தீவில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தமிழ் மக்களின் பெருமித்த ஆணையைப் பெற்ற வட்டுக்கோட்டைத்தீர்மானத்தில் வெளிப்படுத்தப்பட்டு கடந்த மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற தேசிய விடுதலைப் போரில் ஒப்பற்ற அர்ப்பணிப்புகளுடாக வலுப் பெற்று, சர்வதேச மயப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த சித்திரை 18 ம் திகதி 2009 அன்று வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீள வலியுறுத்தும் வகையில் பிரான்சில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரான்சில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களால் வாக்களிக்கப்பட்டு ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்,

இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் தனித்துவமான தேசியமும் பாரம்பரியத் தாயகமும் சுயநிர்ணய உரிமையும் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் அத் தீவின் வடக்கு, கிழக்கு நிலப்பரப்பில் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழ அரசு உருவாக்கப்படுவதற்காக பாடுபடும்.

தாயகத்திலுள்ள தமிழ் மக்களின் மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும்.

பிரான்ஸ் நாட்டில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்கள் தமது இனத்தின் தனித்துவங்களையும், இனத்துவ அடையாளங்களையும் பேணிப்பாதுகாக்கவும், பிரான்ஸ் மக்களுடன் நல்லிணக்கம், புரிந்துணர்வு என்பவற்றினை ஏற்படுத்தவும் பாடுபடும்.

இது தமிழ் மக்களின் அரசியல் ஒருமைப்பாட்டுச்சபையாக, எமது உரிமைகளை இந்நாட்டினருக்கும், உலகிற்கும் எடுத்துச் செல்லும் அமைப்பாக, தமிழீழ மக்களின் அரசியல் குரலாக அமையப்போகின்றது.

பிரான்சில் பரந்து வாழும் தமிழ் மக்களுடனும் அதற்காக உழைக்கும் அமைப்புகளுடனும், மனிதநேய தொண்டர் அமைப்புகளுடனும், ஸ்தாபனங்களுடன் தொடர்ந்து செயலாற்றவுள்ளோம்.

இந்த தமிழீழ மக்கள் பேரவையில் இங்கு வாழும் புத்திஜீவிகளும், மூத்த கல்விமான்களும், பிரெஞ்சு, தமிழ் சட்டவாளர்கள்,அரசியல்வாதிகள், தமிழினப் பற்றாளர்கள், தாயக விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் இதுவரை தொண்டாற்றி வருபவர்கள் எல்லோரினதும் ஆலோசனைகளோடு, பங்களிப்போடும் உருவாக்கம் பெறவுள்ளது.

இந்த பேரவையினால் முன்னெடுக்கப்படும், செயற்பாட்டிற்கும், தமிழ் மக்கள் அனைவரையும் ஓரணியாய் தன்மான உணர்வுள்ள தமிழராய், ஒருமித்த குரலினால் ஓங்கி வளர்த்திட உங்கள் எல்லோரினதும் அன்பையும், ஆசியையும் பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் ஆலோசனைகளையும், இன்னும் பிற வள உதவிகளையும் தந்து உதவுவீர்கள் என்ற நம்பிக்கை கொள்கின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

அடுத்த நகர்வை நோக்கிய பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல் : தேசம்

Thesam Logoஅண்மையில் தாயகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் ஓர் வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.  தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தில் அக்கறையுடைய ஒவ்வொருவரையும் இந்த சடுதியான அரசியல் இராணுவச் சுனாமி பாதித்துள்ளது. பல்வேறு கசப்புணர்வுகளையும் வலிகளையும் கடந்து அடுத்த கட்டம் நோக்கி நாம் பயணிக்க  வேண்டியுள்ளோம். நாம் கடந்து வந்த பாதைகள் மிகக் கரடுமுரடானதாகவும் மிக மோசமானதாகவும் இருந்தள்ளது. ஆதலால் எமது அடுத்த நகர்வு பற்றி மிகவும் கவனமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டியுள்ளது.

அந்த வகையில் பன்மைத்துவ அரசியல் பின்னணியுடைய புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தனது அடுத்தகட்ட நகர்வை ஏற்படுத்தவதற்கு முன் தங்களிடையே ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்தவது அவசியமாகும். பரஸ்பரம் புரிந்துணர்வுடன் இக்கலந்துரையாடலை மேற்கொள்வதற்கு உங்களை அழைக்கின்றோம். இக்கலந்துரையாடலில் பங்கேற்று நிகழ்வை ஆரோக்கியம் உள்ளதாக்குவீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

தேசம் சஞ்சிகை ஒரு பொது ஊடகம் என்ற வகையில், இன்றைய காலத்துடன் தொடர்புபட்ட விடயங்களை விவாதிப்பதற்கான ஒரு தளமாக இருக்கின்றது. அந்த வகையில் இன்றைய காலகட்டத்தில் இக்கலந்துரையாடலை மேற்கொள்ளுமாறு  பலரும் வலியுறுத்தியதால்  இந்த உரையாடலுக்கான தளத்தை ஏற்படுத்தித் தருவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம்.

நீங்கள் குறித்த நேரத்தில் கலந்து கொள்வதன் மூலம் கலந்துரையாடப்படும் விடயங்களை தவறவிடாது தொடர முடியும். மேலும் கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்களை மீண்டும் மீண்டும் பேசுவதையும் தவிர்க்க முடியும்.

இக்கலந்டதுரையாடல் ஆக்கபூர்வமானதாக அமைய உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம்.

இக்கலந்துரையாடல் ஒரு பொதுக் கூட்டம் அல்ல. அழைக்கப்படுபவர்களுக்கு மட்டுமாக மட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அழைப்பிதல் கிடைக்காதவர்கள் கலந்துகொள்ள விரும்பினால் கீழுள்ள தொடர்பிலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

காலம் :
21 யூன் 2009,  ஞாயிறு மாலை

தொடர்பு :
த ஜெயபாலன்: 07800 596 786     ரி கொன்ஸ்ரன்ரைன்:  0208 905 0452   ரி சோதிலிங்கம்  07846 322 369

இங்ஙனம்
தேசம்.

தவிபு தலைவர் பிரபாகரன் உண்மையிலேயே வீர மரணம் எய்தி விட்டார். : விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை

Pirabakaran V LTTEதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உண்மையிலேயே வீரமரணம் அடைந்துவிட்டதாக அவ்வமைப்பின் வெளியகப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள அறிக்கையில் தலைவர் வே பிரபாகரன் சரணடையவோ கைது செய்யப்படவோ இல்லை என்றும் சிறிலங்காப் படையினருடனான மோதலிலே வீரச்சாவு அடைந்ததாகவும் வெளியகப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் அறிவழகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளர் குமரன் பத்மநாதன் தலைவர் வே பிரபாகரன் வீரமரணமடைந்தாக வெளியிட்ட அறிக்கைக்கு மாறாக இவர் மே 22ல் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் ‘தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடனும் நலமாகவும் இருக்கிறார்’ என்று தெரிவித்திருந்தார். ஆனால் அதற்காக வெளியகப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் தற்போது மன்னிப்புக் கேட்டு உள்ளார்.

பிரபாவின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ள வெளியகப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் க அறிவழகன் அவருடைய மரணம் என்று நிகழ்ந்தது என்பதை குறிப்பிட்டு இருக்கவில்லை. மே 18 காலையே இவர் மரணமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மரணச் செய்தியை தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளர் கெ பத்மநாதன் ஆரம்பத்தில் மறுத்தாலும் அதனை பின்னர் உறுதிப்படுத்தி இருந்தார்.

இதுதொடர்பாக கெ பத்மநாதன் தேசம்நெற்ற்குத் தெரிவிக்கையில் விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவில் இருந்த சிலர் தலைவரின் மரணத்தை உடனடியாக அறிவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகக் கூறினார். யூன் 14ல் தேசம்நெற்றுக்குத் அவர் மேலும் தெரிவிக்கையில் அவர்கள் ஒவ்வொரு திகதிகளைக் கூறி இழுத்தடித்ததாகவும் ஆனால் தாயகத்தில் உள்ள போராளிகளும் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து உடனடியாக தலைவரின் வீர மரணச் செய்தியை அறிவித்தாகத் தெரிவித்தார்.

இச்செய்தியை ஜிரிவி வெளியிட்டதற்காக அதன் நிர்வாகிகளுக்கு பல கொலைப் பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அச்செய்தி நீக்கப்பட்டது. அச்செய்தியை வெளியிட்ட போது கெ பத்மநாதன் ஒருவாரத்தை தேசிய நினைவஞ்சலியாகக் கடைப்பிடிக்கும்படியும் கேட்டிருந்தார். அவ்வஞ்சலியும் நடைபெற்றிருக்கவில்லை.

30 வருட போராட்டத்தை முன்னெடுத்த உலகின் பலபாகங்களிலும் வியாபித்திருந்த ஒரு செல்வந்த இயக்கத்தின் தலைவர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்துவதற்குள்ளேயே இவ்வியக்கத்தின் உட்பூசல்களும் அதிகாரப் போட்டிகளும் வெளிப்பட்டு உள்ளது. வெளியகப் புலனாய்வுத்துறையும் சர்வதேச இணைப்பாளரும் புலிகளின் தலைவர் வீரமரணம் அடைந்ததை உறுதிப்படுத்திய போதிலும் சர்வதேசப் பிரிவிற்குப் பொறுப்பாக இருக்கும் நெடியவன் என்றழைக்கப்படும் பேரின்பநாயகம் சிவபரன் பிரிவு இது பற்றி இன்னமும் மெளனமாகவே உள்ளனர். இவர்களிடமே சர்வதேச ரீதியில் திரட்டப்பட்ட நிதியும் ஊடகங்களும் கைவசமுள்ளதாகத் தெரியவருகிறது.

Pirabhakaran_Jothidamஇந்த சர்வதேசப் பிரிவு பிரபாவின் மரணத்தை உறுதிப்படுத்தும் போது அவர்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள அசையும் அசையாச் சொத்துக்கள் மற்றும் நிதி பற்றிய சர்ச்சைகள் ஏற்படும் என்பதால் அவர்கள் பிரபா இன்னமும் உயிருடன் உள்ளார் என இந்திய அரசியல்வாதிகளுடாக தெரிவித்து வருகின்றனர். இந்த தமிழகத் தலைவர்களே பிரபாவின் மரணத்தை உறுதிப்படுத்திய, இறுதிவரை பிரபாவுடன் தொடர்பில் இருந்த கெ பத்மநாதனை தேசியத் துரோகி எனப் பட்டம் சூட்டினர். தற்போது பிரபாகரனின் சாதகப்படி அவர் 80 வயதுவரை நலமுடன் இருப்பார் என்றும் செய்தி வெளியிட்டுக் கொண்டு உள்ளனர். 2010 பிரபாவிற்குப் பொற்காலம் என்றும் இந்த ஜோதிடச் செய்தி தெரிவிக்கிறது.

பல்வேறு அரசியல் முரண்பாடுகள் விமர்சனங்களுக்கு உட்பட்டிருந்த போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை வழிநடத்தி அதில் தனக்கிருந்த நம்பிக்கையில் தன்னையும் தனது மனைவி பிள்ளைகளையும் முழுவதுமாக இழந்த ஒரு போராளிக் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச கெளரவத்தைக்கூட தமிழீழ விடுதலைப் புலிகள் செய்ய மறுத்துள்ளனர்.

இன்னமும் பிரபாவின் மரணம் ஒரு கேலிக் கூத்தாக ஆக்கபட்டதற்குரிய பெரும்பான்மைப் பொறுப்பு நெடியவனின் தலைமையில் உள்ள சர்வதேச பிரிவையே சார்ந்துள்ளதாக முன்னாள் போராளிகள் பலரும் குற்றம்சாட்டுகின்றனர். நெடியவன் சர்வதேச விவகாரங்களைக் கவனிப்பதற்காக காலம்சென்ற புலிகளின் தலைவர் வே பிரபாகரனால் அனுப்பி வைக்கபட்டதாகவும் அப்போராளிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் பிரபாவின் இறுதி நாட்களில் அவருடன் ‘கெ பி அண்ணரே’ தொடர்பில் இருந்ததாகவும் அவருடைய தகவல்களே சரியானது என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அப்போராளிகள் தேசம்நெற்றுக்குத் தெரிவிக்கின்றனர்.

தற்போது இவ்வறிக்கையை வெளியிட்டுள்ள வெளியக புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் லண்டனில் வாழ்வதாக தேசம்நெற்றுக்கு தெரியவருகிறது.

._._._._._.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கீழே:

வெளியகப் பணிப் பிரிவு
புலனாய்வுத்துறை
18. 06. 2009

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு வீரவணக்கம்

எம் பாசத்துக்குரிய தமிழ் பேசும் மக்களே!

எமது இயக்கத்தின் தலைவரும் பிரதம இராணுவத் தளபதியுமான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்பதனை விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை இப்போது உறுதிப்படுத்தியிருக்கின்றது.

தேசியத் தலைவர் அவர்களைப் பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்த்தும் முயற்சிகள் தொடர்பான இறுதி நேரச் சம்பவங்கள் பற்றிய தகவல்கள் அறிந்த – தற்போது பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ள – எமது புலனாய்வுப் போராளிகள் வேறு துறைப் போராளிகள் மற்றும் சிறிலங்கா படைத் துறையின் உயர் பீடத்துடன் தொடர்புடைய எமது தகவலாளர்கள் ஆகியோர் தலைவர் அவர்களது வீரச்சாவினை இப்போது உறுதிப்படுத்துகின்றனர்.

கடந்த மே மாதத்தின் நடுப் பகுதியில் – 15 (வெள்ளிகிழமை) முதல் 19 ஆம் திகதி (செவ்வாய்கிழமை) வரையான காலப் பகுதியில் வன்னி – முள்ளிவாய்க்கால் களப் பிரதேசத்திலிருந்து முரண்பட்ட பல தகவல்கள் வெளிவந்தபடி இருந்தன. சீரான தகவல் பரிமாற்ற வசதிகள் இருக்காமையாலும் அங்கிருந்து வெளியேறிய எமது புலனாய்வுப் பேராளிகள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று சேர முடியாமல் இருந்தமையாலும் அவர்களால் அனுப்பப்பட்ட பல தகவல்கள் சிதைவடைந்த நிலையிலேயே வெளியில் கிடைத்திருந்தன. அதனால் – அப்போது கிடைத்த தகவல்களைச் சீர்ப்படுத்தி எடுத்ததன் அடிப்படையில் – எமது அன்புக்குரிய தலைவர் அவர்கள் நலமாக இருப்பதாகக் கருதியே அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட நாம் மே மாதம் 22 ஆம் நாள் தீர்மானித்தோம்.

இதே வேளை – தலைவர் அவர்களது பாதுகாப்பான இருப்பு மற்றும் நகர்வுகள் தொடர்பாக – இறுதிவரை அவருடன் கூட இருந்த தளபதிகளால் பல தகவல்கள் வழங்கப்பட்டு வந்தன. இவற்றின் அடிப்படையிலேயே – எமது இயக்கத்தின் அனைத்துலக உறவுத் துறையின் இயக்குனர் திரு. செல்வராசா பத்மநாதன் அவர்களும் – ஆரம்பத்தில் – இரு வேறு முரண்பட்ட செய்திகளைத் தரும் சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தார் என்பதையும் எம்மால் உணர முடிகின்றது.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது அந்த மாபெரும் தியாகம் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தியை 22 ஆம் திகதி வெளியிட்டமைக்காக வருத்தப்படுகின்ற அதே வேளையில் அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட்டு குழப்பகரமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியதற்காக எமது அன்புக்குரிய மக்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை மன்னிப்புக் கோருகின்றது.

எமது தேசியத் தலைவரின் வீரச்சாவு தொடர்பாக பல்வேறு தரப்பினர் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்தனர். அவர் கைது செய்யப்பட்டதாகவும் சரண் அடைந்ததாகவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின் கொல்லப்பட்டதாகவும் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் பல்வேறு மாறுபட்ட செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் – எந்த செய்தியினையும் தகவலையும் முழுமையாக உறுதிப்படுத்தி வெளியிட வேண்டிய கடமை புலனாய்வுத்துறையினர் ஆகிய எமக்கு உண்டு. அதனடிப்படையில் – தேசியத் தலைவர் அவர்கள் சரணடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை என்பதையும் அவர் சிறிலங்கா படையினருடன் போரிட்டே வீரகாவியம் ஆகினார் என்பதையும் நாம் மிகத் திடமாக உறுதிப்படுத்துகின்றோம்.

இப்போது தோன்றியுள்ள மிக உச்ச நெருக்கடியான கால கட்டத்தில் – எம் பெருந் தலைவர் அவர்கள் உருவாக்கி வளர்த்தெடுத்து நமது கைகளில் தந்து விட்டுச் சென்றுள்ள எமது விடுதலைப் போராட்டத்தை – அதே உறுதிப்பாட்டுடனும் அதே கட்டுக்கோப்புடனும் அதே ஒருங்கிணைவுடனும் நாங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் எமது இறுதி இலட்சியத்தை நோக்கிய எமது போராட்டத்தின் அடுத்த படிநிலையாக – தற்போது உருவாக்கப்படவுள்ள ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ அமைவதற்கு நாம் எல்லோரும் சேர்ந்து பணியாற்றுவதே எம் முன்னால் உள்ள கடமையாகும்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கும் அவருடன் வீரச்சாவடைந்த எமது இயக்கத்தின் போராளிகள் தளபதிகளுக்கும் வீரவணக்கத்தைச் செலுத்துவதுடன் இந்தப் போரில் படுகொலை செய்யப்பட்ட எமது பாசத்துக்குரிய மக்களுக்கு விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை தனது அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றது.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

கதிர்காமத்தம்பி அறிவழகன்
பொறுப்பாளர்
வெளியகப் பணிப் பிரிவு
புலனாய்வுத்துறை

நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான முன்னேற்பாட்டுச் செயற்குழு: வி. உருத்திரகுமாரன்

tamilnational_.jpgநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவது அவசியம் என தாயகத்திலும், வெளிநாடுகளிலும் வாழும் ஈழத் தமிழர்கள் கருதுகின்றனர் என நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழுவின் ஒருங்கிணைப்பாளர் விசுவநாதன் ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ருத்திரகுமாரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மானிடம் பேணும் சட்ட நெறிகளையும் மனித நாகரீகத்தின் அனைத்துப் பண்புகளையும் முற்றுமுழுதாக மீறி, கொடூரமிக்க, அதீத இராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் சிங்கள அரசு, தமிழ் மக்களின் நியாய பூர்வமான தன்னாட்சித் தீர்மான முன்னெடுப்புக்களை நசுக்கிச் சிதைத்துள்ளது. வன்னிப் பிராந்தியத்தில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொலைக்களரியானது முழு உலகையுமே பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த வேதனையிலும் அமிழ்த்தியுள்ளது.

குறிப்பாகப் பாவனைக்குத் தடைசெய்யப்பட்ட கனரகப் போராயுதங்களினாலும் அறாத்தொடர்ச்சியான எறிகணைகளாலும், பீரங்கிக்குண்டுகளினாலும் 30,000 க்கு மேற்பட்ட தமிழர்கள் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் கொன்று குவிக்கப்பட்டனர்.

இன்று சிங்கள இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்ட சிறை முகாம்களில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் வன்னடைப்புச் செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடு சார்ந்த நிறுவனங்களும், பன்னாட்டு அரச நிறுவனங்களும், செய்தியாளர்களும் இந்த முகாம்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முகாம்களுக்கு வெளியேயுள்ள தமிழர்களும் நடைப்பிணங்களாகவே வாழ்கின்றனர். யாழ் தீபகற்பம் ஒரு திறந்தவெளி மறியற்சாலையாகவே உள்ளது. கிழக்கு மாகாணம் இராணுவ ஆட்சி நிலவும் நிலமாகவுள்ளது.

ஸ்ரீலங்காவின் தெற்குப்பகுதியில் சிங்களப் பேராதிக்கக் கட்டுப்பாட்டில் தமிழ் மக்கள் பாதுகாப்பற்று, பயமுறுத்தப்பட்டு, பல்வேறு இம்சைகளுக்கு உள்ளாக்கப்படுதல் நாளாந்;த நிகழ்வாயுள்ளது. தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காவே இவர்கள் குறிவைக்கப்படுகின்றனர். நன்கு திட்டமிட்ட கொலைகள், கடத்தல், காணமல் போதல், வன்மையான அடையாள அழிப்பு, தமிழீழ நிலப்பறிப்பு, இனச்சுத்திகரிப்பு போன்றவற்றினால் தமிழ் மக்களின் தேசிய இனத்துவ முழுமை சிதைக்கப்பட்டுவருகின்றது.

இலங்கைத தீவில் தமிழ் மக்களின் உயிர் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது மட்டுமல்லாமல் அவர்களது நியாய பூர்வமான அரசியல் அபிலாசைகளை எடுத்துரைக்கும் அரசுரிமைவெளியும் அழிந்துபோயுள்ளது.

மக்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் உயிராபத்தின் விளிம்பில் வாழ்கின்றனர். திரு யோசப் பரராசசிங்கம் (2005), திரு நடராசா ரவிராஜ் (2006), திரு க. ந. சிவநேசன் (2008) ஆகிய தமிழ்க்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் உயிர் ஆபத்தை எதிர் கொண்ட போதும் அசாத்தியத் துணிவுடன் பணியாற்றுகின்றனர்.

இவை தவிர இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு, தேர்தல்; தொகுதிகளின் எல்லைகளைக் கபடமாக மாற்றியமைத்தல் போன்றவற்றினாலும், புதிய வாக்காளர்களைப் பதியாமல் விட்டமை, மற்றும் தொடர்ந்து போரினால் பாரிய அளவில் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் ஆகியனவும் பாராளுமன்றத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை எண்ணுக்கணக்கில் குறுகச் செய்துள்ளது. இவை அனைத்துமே இலங்கைத் தீவின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவதை சாத்தியமற்றதாக்கியுள்ளது.

இந்நிலையில் ஸ்ரீலங்காவின் அரச அமைப்பிலும் அதன் யாப்பு முறையிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஆக்கபூர்வமான, பயன்தருவகையில் முன்னெடுப்பதற்கான எத்தகைய அரசியல்வெளியும் இல்லை. இத்தீவில் தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வழி எதுவுமேயில்லை. எனவே இலங்கைத் தீவுக்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலை நிறுத்துவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தொடரமுடியும்.

ஆகவே தமிழீழத்தில் வாழும் மக்களும் வெளிநாடுகளில் பரவி வாழும் தமிழீழத்தவர்களும் தற்பொழுதிற்கான நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (Provisional Transnational Government of Tamil Eelam) ஒன்றினை உருவாக்குதல் அத்தியாவசியமான மிகமுக்கிய பணியெனக் கருதுகின்றார்கள்.

சட்டபூர்வமற்ற முறையில் இராணுவ பலத்தைப் பிரயோகிப்பதும், சித்திரவதைக்காக மக்களைக் கடத்துவதும் திட்டமிட்டு இன அழிப்பில் ஈடுபடுவதும் இவை போன்ற போர்க்குற்றங்களும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும்; குழந்தைகளைக் கடத்துவதுமாகிய கொடூரங்களும் இவற்றினூடாக அரசியற் தலைவர்களை புறந்தள்ளலும் ius cogens அடிப்படை சட்டநெறித் தத்துவங்களுக்கு முற்றிலும் முரணானதாகும். இத்தகைய சூழலில் நாடு கடந்த நிலையில் சட்ட பூர்வமான அரசாட்சியை நிறுவுதற்கான தேவையினை செயற்படுத்துவதற்கு சர்வதேச சட்டமரபுநெறிகள் இடம் தருகின்றன.

இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை தற்பொழுதிற்கு அமைப்பதற்கான திட்டம் ஒன்றினை முன்வைக்க விரும்புகின்றோம். எமது செயற்பாடுகளும் திட்ட முறைமைகளும் ஜனநாயக அடிப்படையிலமைந்தவையாகும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை உருவாக்குவதற்கான கட்டமைப்புக்களை, பின்வரும் விடயங்களைக் கருத்திற் கொண்டு பணியாற்ற செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

1. 1976ல் வரையறுக்கப்பட்ட வட்டுக்கோட்டைப் பிரகடனத்தினதும், 1977ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்களால் ஒரு மனதாக வாக்களித்து வரவேற்கப்பட்டதும், பின்பு 1985ல் திம்புப் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டதும், 2003ல் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரப்பகிர்வின் தளமாக அமைந்ததுமாகிய

தமிழர் ஓர் தேசிய இனம்

வடக்கு- கிழக்கு தமிழர் தாயக நிலம்

ஈழத்தமிழரின் தன்னாட்சி உரிமை

போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசைகளின் ஆதார சுருதியாக ஏற்றுக் கொள்ளும் அனைத்துத் தமிழ் மக்களையும் ஓன்றிணைப்பது

2. 2001ம் ஆண்டு, 2004ம் ஆண்டு பொதுத் தேர்தல்களின்போது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் அரசியல் கட்சியாகத் தமிழ் மக்களினால் ஏற்று உறுதி செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் ஈழத்தமிழரின் தன்னாட்சிக் கோட்பாட்டினை ஏந்தி ஆதரிக்கும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடனும் இணைந்து செயற்படுதல்.

3.  சிங்கள தேசத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கான தமிழர் தேசத்தின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தல்.

4.  உலகனைத்தும் பரவி வாழும் ஈழத்தமிழர் மத்தியில் பன்னாட்டு மதிப்பினைப்பெற்ற நிறுவனம் ஒன்றினுடன் இணைந்து வாக்காளர் பட்டியல் ஒன்றினைத் தயாரித்;தல். இவ்வாறு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் வாக்களிப்பை நடத்தி தமிழ்த் தேசியப் பேரவையினை தெரிவு செய்து இப் பேரவையினூடாக தமிழீழ அரசியல் யாப்பினை வடிவமைத்தலும்; தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காணும் நோக்குக்கு வழிகோலும் வகையில் பொது வாக்கெடுப்பினை பன்னாட்டு மேற்பார்வையில் நடத்த வழிசெய்தலும்.

5.  ஈழத்தமிழர் உலகப்பேரவை ஒன்றினையும், நிறைவேற்று அதிகாரக் குழு ஒன்றினையும் தெரிவு செய்யும் முறைநெறிகளை வரையறை செய்தல்.

6.  அரசுகளுடனும், பல்அரசுகள்சார்ந்த நிறுவனங்களுடனும் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துதல்.

7.  உலகெங்கும் பரவிவாழும் ஈழத்தமிழரின் சமூக, பொருண்மிய, பண்பாட்டு மேம்பாடுகளைத் துரிதப்படுத்தல்.

8.  தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுக்கிடையிலான வேறுபாடுகளை தமிழர் தன்னாட்சி உரிமைக்கெதிரான பயத்தை தோற்றுவிக்கும் கருவியாகக் கொள்ளாமல், முஸ்லீம் மக்களுடன் இணைந்து இரு சமூகத்தினரும் ஒருமித்து பங்குபெறும் அரசியல் வழிமுறைகளை இனம் காணுதல்.

9.  வடக்கு- கிழக்கில் வாழும் ஈழத் தமிழர்களினதும், உலகெங்கும் வாழும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களினதும் நலன் பேணும் வகையிலான செயற்பாடுகளை ஊக்குவித்தல்.

இலங்கையில் தொடர்ந்து நிகழும் இனப்படுகொலையினை நிறுத்துமுகமாக பன்னாட்டு அரசு சார் நிறுவனங்களுடனும், அரச சார்பற்ற பன்னாட்டு நிறுவனங்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்திச் செயற்டுவதனையும் இக்குழு தனது பணியாகக் கொண்டுள்ளது.

இவ்வாறு தொடர்புகளைப் பேணிக் கொள்வதன் மூலம் ஈழத்தழிழரின் உயிர் இருப்பை உறுதி செய்தல் மற்றும் தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளையும், தமிழ்ச் சிறுவர்கள்  மீதான வன்முறை சித்திர வதைகளையும் சிங்கள அரசும் அதன் இராணுவமும் மேற் கொள்ளாதபடி தடுத்து நிறுத்துதல், பிரிந்த குடும்பங்களை விரைவாக ஒன்று சேர்த்து இன்று கொடுமை முகாம்களில் வதைபடும் மூன்று இலட்சம் தமிழ் மக்களையும் அவர்களின் சொந்த வீடுகள், ஊர்களில் குடியமரும்படியான வழிவகைகளை இனம் காணுதல், தமிழ் இன அழிப்பில் ஈடுபட்டவர்களையும் மனித நேயத்திற்கு எதிரான போர்க்குற்றங்களைத் திட்டமிட்டுப் புரிந்தவர்களையும் நீதியின்படியாக விசாரணைக்கு உள்ளாக்குதல் போன்ற விடயங்களில் உரிய நடவடிக்கை எடுக்கத் தூண்டுவதில் இக்குழு கவனம் செலுத்தும்.

தனக்குரிய கடமைகளை நிறைவேற்ற உலகெங்கும் பரவி வாழும் தமிழ்மக்கள் மத்தியிலுள்ள அமைப்புகளுடனும் குறிப்பாக புதிய இளைய தலைமுறையினருடன் இணைந்து செயற்படுதலில் இக்குழு கூடுதல் கவனம் செலுத்தும். மேற்குறிப்பிடப்பட்ட இச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அமைக்கப்படும் இச் செயற்பாட்டுக்குழு நாடுகள் தழுவியரீதியிலும் துறைகள் சார்ந்த வகையிலும் பல உபகுழுக்களை கொண்டியங்கும். இச் செயற்பாட்டுக்குழுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் நாம் தற்போது ஈடுபட்டிருக்கிறோம்.

இச் செயற்பாட்டுக்குழுவுக்கு உரிய ஆலோசனைகளை வழங்குவதற்காக பல்துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் சொர்ணராஜா (பிரித்தானியா) பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் (அமெரிக்கா) பேராசிரியர் பி. இராமசாமி (மலேசியா) பேராசிரியர் நடராசா சிறிஸ்கந்தராசா (சுவீடன்) கலாநிதி முருகர் குணசிங்கம் (அவுஸ்திரேலியா) வைத்தியக்கலாநிதி சிவனேந்திரன் சீவநாயகம் (அவுஸ்திரேலியா) கலாநிதி வசந்தகுமார் (பிரித்தானியா) சட்ட அறிஞர் கரன் பார்க்கர்(அமெரிக்கா) திரு செல்வா சிவராசா(அவுஸ்திரேலியா) திரு போல் வில்லியம்ஸ் (நெதர்லாந்து) பேராசிரியர் பீற்றர் சால்க் (சுவீடன்) ஆகியோர் இவ் ஆலோசனைக்குழுவில் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளனர்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் இச் செயற்திட்டத்திற்குரிய குழுக்களில் இணைந்து பணியாற்ற முன்வருமாறு ஆர்வமுள்ள அனைவரையும் வேண்டிக்கொள்கிறோம்.

இக்குழு 2009ம் ஆணடு  மார்கழி மாதம் 31ம்; திகதி வரை செயற்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இத் திகதி வரையிலான செயற்பாடுகளை இக் குழு அறிக்கையாகச் சமர்ப்பிக்கும். இத் திட்டம் தொடர்பாக தமிழ் மக்களினது ஆக்கபூர்வமான கருத்துக்களை வரவேற்கிறோம். மக்கள் தொடர்புக்குரிய மின்னஞ்சல் முகவரி:  info@govtamileelam.org

விசுவநாதன் உருத்திரகுமாரன்
இணைப்பாளர்
16.06.2009

புலம்பெயர் தேசத்தில் தமிழீழ அரசாங்கம் அமைக்க சட்ட அறிஞர் உருத்திரகுமார் தலைமையில் செயற்குழு : தவிபு அனைத்துலக இணைப்பாளர் பத்மநாதன்

தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கான விடுதலைப் போராட்டம் இன்று புதியதோர் கட்டத்தை எட்டியுள்ளது.

தாயகத்தின் யதார்த்த நிலையினைப் புரிந்து கொண்டு, நமது விடுதலை இலட்சியத்தினை முன்னோக்கி நகர்த்துவதற்குத் தேவையான அரசியல் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய காலகட்டம் இது.

இதற்காக பொதுக்கொள்கையின் அடிப்படையிலான ஒரு சீரிய வேலைத் திட்டத்தின் முக்கியத்துவத்தினை உய்த்துணர்ந்து, அதற்குரிய ஆலோசனைகளையும் நமது மக்களிடமிருந்து கோரியிருந்தோம்.

நமது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற கருத்துக்களையும், புலமைசார் அறிஞர்களது ஆலோசனைகளையும் கவனத்திற் கொண்டு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை அமைப்பது (Provisional Transnational Government of Tamil Eelam) எமது அடுத்த கட்டப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு அவசியமானது என உணர்கிறோம்.

இத்தகைய அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கான சகல முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஒரு செயற்குழு, சட்ட அறிஞர் விசுவநாதன் உருத்திரகுமார் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்குழுவிற்கு முழுமையான ஆதரவினையும் ஒத்துழைப்பினயும் வழங்குமாறு அனைத்துத் தமிழ் மக்களையும் தமிழர் அமைப்புக்களையும் வேண்டிக் கொள்கிறோம்.

தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகள் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து கட்டப்பட்டவை.

1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம், 1985 ஆம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தை, 2003 ஆம் ஆண்டு இடைக்கால நிர்வாக அதிகாரசபைத் திட்டம் ஆகியன ஊடாக வெளிப்படுத்தப்பட்டவை.

இந்த அரசியல் அபிலாசைகள் உயிர்ப்பாகப் பேணப்பட்டு பலப்படுத்தப்பட வேண்டியவை.

இதேவேளையில் இன்றைய தாயகச் சூழலில் சிறிலங்காவின் இராணுவ ஆதிக்கப்பிடிக்குள் சிக்கியுள்ள நமது மக்களால் இந்த அரசியல் அபிலாசைகளை ஓங்கி ஒலிப்பது நடைமுறைச் சாத்தியமாகாது.

இந்த யதார்த்த நிலையைப் புரிந்து கொண்டு செயற்படுவது மிகவும் அவசியமானது.

இந்நிலையில் பொதுநோக்குடன் பொது உடன்பாட்டின் அடிப்படையில் தாயகத்திலும் புலத்திலும் இரு சமாந்திரமான செயற்திட்டங்களை தமிழர் தேசம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஜனநாயக முறையில் புலத்தில் அமைக்கப்படவிருக்கும் தமிழீழ அரசாங்கம் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளையும் உரிமைக்குரலையும் பிரதிநிதித்துவப்படுத்தி அனைத்துலக அரங்கில் இயங்க வேண்டும்.

அதேவேளையில் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாஷைகளை தமது அரசியல் அடிப்படைகளாகக் கொண்டிருக்கக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் தாயக நிலைமைகளை பவித்திரமாகப் புரிந்து கொண்டு இயங்கும் வகையிலான தாயகச் செயற்திட்டம் அமைய வேண்டும்.

இந்த இரு செயற்திட்டங்களுக்கிடையில் ஓர் இணைவு இருக்க வேண்டும்.

இப்போது அமைக்கப்பட்டிருக்கும் செயற்குழு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அதேவேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை ஆகிய அரசியல் கோட்பாடுளை அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடிய ஏனைய அரசியல் அமைப்புக்களுடனும் பேச்சுக்கள் நடத்தி ஒரு பொது உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகளையும் மேற் கொள்ளும்.

தனது செயற்பாடுகளை ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டு சுயாதீனமாக முன்னெடுக்கவிருக்கும் இந்த செயற்குழு தனது செயற்பாட்டுத்திட்ட விபரங்களை மக்களுக்கு அறியத்தந்து மக்களுடன் தொடர்ச்சியாகத் தொடர்புகளைப் பேணிக் கொள்ளும்.

இந்த செயற்குழு தனது முயற்சியில் முழுமையான வெற்றி பெற நாம் அனைவரும் இன ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து செயற்படுவோம்.

”பத்மநாதன் அண்ணரின் கரங்களைப் பலப்படுத்துவோம்.” – தயா மோகன் விடுதலைப் புலிகள் மட்டு அம்பாறை அரசியற் துறை.

lttelogo.jpgஅன்பிற்கினிய புலம் பெயர் தமிழ் மக்களே! மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் நான் உங்களுடன் தொடர்பு கொள்கின்றேன் என்பதனால் இம்மடல் வழியாக வெளிப்படுத்தப்படுகின்ற விடயங்கள் மட்டில் கூடிய கரிசனை செலுத்துவீர்கள் என நான் திடமாகவே நம்புகின்றேன்.

இலங்கைத்தீவில் சுதந்திரத்திற்கு பின்னதான காலப்பகுதியில் பெரும்பான்மை இன மக்களால் தமிழ் மக்கள் பல வேளைகளில் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். தமிழ் மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் அகிம்சைப்போராட்டங்கள் தோற்கடிக்கப்பட்ட காரணத்தினால் ஏறக்குறைய சுதந்திரமடைந்து முப்பது வருடங்களின் பின்னர் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தவேண்டிய தேவை ஏற்பட்டது.

கடந்த 30 வடங்களுக்கு மேலான காலப்பகுதியில் சிறிது சிறிதாக நமது தேசம் வளர்ந்து இறுதியில் ஒரு தேசத்திற்கு வேண்டிய பெரும்பாலான கட்டமைப்புகளோடு தலைநிமிர்ந்து நின்றது. எந்த ஒரு விடுதலைப் போராட்டத்திலும் இல்லாத அளவுக்கு நமது விடுதலைப்போராட்டம் பல சாதனைகளை செய்தது. சரித்திரங்களையும் படைத்தது. இதற்கு நமது தேசியத்தலைவர் முதன்மைக்காரணியாக இருந்தார். அவரது உறுதி தளராத கொள்கைக்கும் அயராத உழைப்பிற்கும் சர்வதேசமெங்கிலும் இருந்து எம்மக்கள் பலம் சேர்;த்தார்கள்.

ஆனால் இன்று யாருமே எதிர்பார்த்திராத அளவுக்கு நாம் சிங்களத்தினதும் சர்வதேசத்தினதும் சதியில் சிக்குண்டு சிதைந்து கிடக்கின்றோம். தலைமைகளை இழந்து தாங்க முடியாத வேதனையில் நாம் இன்று நிற்கின்றோம். சரித்திர நாயகர்களை இழந்தும் ஆயிரக்கணக்கிலான மக்களின் உயிர்களை இழந்த நிலையிலும் தான் சர்வதேசத்தின் பார்வை நமது பக்கம் திரும்பியுள்ளது. ஆயுத ரீதியிலான வரலாற்று வெற்றிகளை நாம் கண்டபோது நடந்திராத சில சம்பவங்கள் எம்மக்கள் இரத்தம் சிந்தியபோது நடந்துள்ளது என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றோம். ஆயுதப்போர் ஒன்று மட்டுமே விடுதலையைப் பெற்றுத்தரும் என்கின்ற வரலாற்றுக்காலத்தை கடந்த நிலையில் இன்று நாம் வாழ்கின்றோம். உலகமும் அந்த நிலைக்கு வந்துவிட்டது.

வரலாற்றில் இப்படியான ஒரு நெருக்கடியை நாம் சந்தித்து நிற்பதற்கு பல காரணங்கள் பேசப்படுகின்றது. விமர்சனங்கள் பல எழுகின்றன. வரலாறு நமக்கு வழங்காத சில சாதகமான நிலைமைகள் நமக்குள் ஏற்பட்ட துரோகத்தனங்கள் எனப்பலவற்றை நாம் கூறிக்கொண்டு போகலாம். இவகைளைப்பற்றி இவ்வேளையிலே நாம் ஆராய்வதனை விடுத்து நமது அடுத்த கட்ட நகர்வுகள் எவ்வாறு அமையவேண்டும் அடுத்து நாம் என்ன செய்யவேண்டும் அதனை எப்படிச் செய்யப்போகின்றோம் என்பதே நம் முன் இன்று எழுந்துள்ள பெரிய கேள்விகளாக இருக்கின்றன.

நம் மக்களின் பிரச்சினை இன்று சர்வதேச அளவில் பேசப்படுகின்ற நிலைக்கு தற்போதூன் வந்துள்ளது எனலாம். அதற்கு நமக்கு முப்பது வருடங்கள் தேவைப்பட்டுள்ளன. அந்தளவுக்கு இராஜதந்திர ரீதியில் நாம் பலவீனப்பட்டு இருந்துள்ளோம்.

நமது வீர மறவர்களின் கனவை நாம் நனவாக்க வேண்டும். எம்மக்களுக்கான உரிமையை நாம் எம் தலைமையின் விருப்பப்படி பெற்றுக்கொடுக்கவேண்டும். அதற்கான ஏதுவான சில வழிமுறைகள் சிலவற்றை இன்று காணமுடிகின்றது. அதற்கு ஆயுதப்போர் மட்டும் தான் ஒரே வழி என்ற கருத்தினை நாம் மீண்டும் ஒருதடவை மீள்பார்வை செய்யவேண்டிய நிலையில் இருகின்றோம். அதாவது எம்மக்களின் உரிமையை மீட்டெடுக்க ஆயுதவழி ஒரு உந்துதலை ஏற்படுத்தும் என்பதோடு அதனை விடவேகமாக ராஜதந்நிதர ரீதியிலான நகர்வுகள் அமையவேண்டும். இன்றுள்ள உலக நிலைமைகளையும் ஒருதடவை கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஐ.நா.மனித உரிமை கவுன்சிலின் வாக்கெடுப்பு நமக்கு சாதகமாக இல்லை தான். இதில் வெற்றிதோல்வி என்பதனை விடுத்து நமது பிரச்சினை ஜ.நா. வரைக்கும் வந்துள்ளது என்பதில் மகிழ்ச்சி கொள்ளவேண்டும். அத்தோடு மட்டுமல்ல சிறிலங்கா அரசுக்கு எதிராக வாக்களித்த நாடுகளையும் ஆதரவாக வாக்களித்த நாடுகளையும் நாம் பார்க்கவேண்டும்.

உலகின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கக்கூடிய அமெரிக்கா தலைமையிலான அணி இன்று தமிழர்களின் பக்கம் ஓரளவு இருக்கின்றது என்பதனையிட்டு நாம் ஆறுதலடையவேண்டும். இன்றுள்ள நிலையில் இவைதான் நமக்கு சாதகமான நிலை. போரை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக சிங்களம் மார்தட்டி வெற்றிக்கழிப்பில் இருக்கி;ன்ற நிலையில் சிங்கள தேசத்தின் அடுத்த கட்ட நகர்வையே இன்று சர்வதேசம் எதிர்பார்த்துள்ளது. சிங்களம் எம் மக்களுக்கு கௌரவமான ஒரு தீர்வை முன்வைக்காது என்பது நம்க்குத்தெரியாத ஒன்றல்ல. ஆனால் அது சர்வதேசத்திற்கு தெரியும் காலம் வரும் வரையில் நாம் உறுதி தளராத மனவுறுதியுடன் பணிகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

இவைகள் ஒருபுறமிருக்க அதற்கு முன்னதாக நாம் சிங்களத்தின் சிறைக்குள் அகப்பட்டுக்கிடக்கும் எம் மக்களைப்பற்றியும் எம் போராளிகள் பற்றியும் உடனடியாக கரிசனை செய்யவேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம். போதிய உணவு இன்றியும் சரியான மருத்துவ வசதிகள் இன்றி மக்களும் போராளிகளும் சிங்களத்தின் சிறையில் அகப்பட்டு கிடக்கின்றார்கள். விடுதலைத்தாகத்தோடு களமாடிய நம் உறவுகள் இன்று சிங்களப்படையினரின் கூட்டிற்குள் அகப்பட்டு தினம் தோறும் அவலப்படுகின்றார்கள். காயப்பட்டிருந்த அவர்களின் நிலை என்ன? வேறு வழியின்றி சரணடைந்த போராளிகள் பற்றி எந்த தகவல்களும் இல்லாத நிலையில் நாம் வெட்டிப்பேச்சு பேசி காலத்தை கடத்துவதனைவிடுத்து ஆக்கபூர்வமான செயற்படுகளை இன்னும் காலம் தாழ்த்தாது செய்யவேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்தப்பணிகளில் தளத்திலுள்ள எங்களைவிட புலத்திலுள்ள உங்களால் செய்யப்படவேண்டிய பணிகள் நிறையவே இருக்கின்றன. இவ்வேளையில் நாம் நமக்குள் இருக்கும் கருத்துவேறுபாடுகளையும் விமர்சனங்களையும் புறந்தள்ளி ஒன்றுபட்டு உழைக்கவேண்டும். அப்போதுதான் சாவின் விளிம்பிலுள்ள நம் உறவுகளை காப்பாற்றமுடியும். இதற்கு சர்வதேசத்தின் உதவிகளைப்பெறக்கூடிய வழிகளை ஆராய்ந்து செயற்படவேண்டும்.

இங்கு படையினருடன் போராடி அவர்களுக்கு உயிர் இழப்புக்களை ஏற்படுத்துவது பெரியகாரியமல்ல. அதனால் எதுவுமே இப்போதைக்கு நடக்காது. கடந்த இரு தசாப்தகாலத்தில் படையினருக்கு எல்லாவழிகளிலும் நாம் இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தோம். அதனால் என்ன நடந்தது?

இன்றுள்ள நிலையில் முதலில் பாதிக்கப்பட்டுள்ள நாம் உறவுகளை பாதுகாக்கவேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். தற்போதுள்ள நிலையில் பத்மநாதன் அண்ணர் சில முக்கியமான செயற்பாடுகளிலும் ராஜதந்திர நகர்வுகளையும் மேற்கொண்டுள்ளதாக அறிகின்றேன். தற்போதுள்ள நிலையில் அவரின் கரங்களைப் பலப்படுத்துவோம். வெளியுறவுத்துறைக்கு பொறுப்பாக தேசியத்தலைவர் அவர்கள் பத்மநாதன் அண்ணர் அவர்களை நியமித்து அவர் செயற்பட்டு வந்தநிலையில் தொடர்ந்தும் அவரது பணிகளை சிறப்பான முறையில் முன்னெடுக்க நாம் ஒத்துழைப்பது தவறல்ல. எனவே அவரின் செயற்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவோம். அதற்கு பின்னர் முதலில் என்ன செய்யவேண்டும் என்று அடையாளம் கண்டுகொண்டு அடுத்த கட்டம் பற்றி சிந்திப்போம். அதனால் நாம் தலைவரின் பாதையிலிருந்து விலகிவிட்டதாக நீங்கள் நினைக்காதீர்கள். அவரின் வழியில் தொடர்ந்து பயணிக்க என்றும் நாம் தயாராகவே உள்ளோம். எந்த மக்களுக்காக நாம் களமாடினோமோ அந்த மக்கள் இன்று நம்மீது சிலவிடயங்களில் வெறுப்புணர்வுகளையும் காட்ட முற்படுகின்றார்கள். காரணமறிந்து செயற்பட நாம் முன்வரவேண்டும். அவ்வாறான ஒரு நிலை ஏற்படும் போது நாங்களும் எங்கள் முடிவுகளை மாற்றி ஒன்று சேர்ந்து புலத்திலுள்ள உங்களுக்கு களமாடி பலம் சேர்ப்போம் என்பதனை தெளிவாக எடுத்துக்கூற விரும்புகின்றேன். அத்தோடு களத்திலுள்ள மக்களின் தியாகங்களினால்த்தான் புலத்திலுள்ள மக்களை ஒன்றுசேர்க்கமுடியும் எழுச்சி கொள்ளச் செய்யமுடியுமென்றால் அதற்கு எம்மக்கள் தயாராகவே உள்ளார்கள்.

இறுதியாக ஒன்றை ஆணித்தரமாக கூற விரும்புகின்றேன். மிகவும் முக்கியமான ஒரு காலகட்டத்தில் நாம் முரண்பட்டு தற்போதுள்ள கட்டமைப்புக்களை சிதைத்து மக்கள் மனங்களிலிருந்து புறக்கணிக்கப்படுவோமாக இருந்தால் அது நாம் எமது தலைமைக்கும் எம் மக்களுக்கும் செய்யும் வரலாற்றுத்துரோகமாகவே இருக்கும். பொறுப்புணர்வுடன் முடிவுகளை எடுத்து நமது தலைமை காட்டிய பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம். நம் தலைமையை நாம் உண்மையாகவே நேசிப்பவர்களாக இருந்தால் ஒன்றுபட்டு எம்மக்களுக்கான உரிமையை மீட்டெடுப்போம்.

என்றும் அன்புடன்…
தயா மோகன்
விடுதலைப்புலிகள் மட்டு அம்பாறை அரசியற் துறை.