அறிக்கைகள்

அறிக்கைகள்

கட்சிகள் அமைப்புகள் நிறுவனங்கள் வெளியிடும் அறிக்கைகள்

டென்மார்க்கில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் விநியோகம் : லிற்றில் எய்ட்

Little_Aid_Med_Deliveryபிரித்தானியாவில் பொது அமைப்புகளின் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்ட லிற்றில் எய்ட்1140 கிகி (1.12 தொன்) எடையுள்ள மருந்தப் பொருட்களை வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது. இவ்வளவு தொகையான மருந்துகளும் டென்மார்க்கில் உள்ள மருத்துவ பொது அமைப்பான எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பினரால் அன்பளிப்புச் செய்யப்பட்டு இருந்தது. இம்மருந்துகளின் காலாவதிக் காலம் யூலை 2011. வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இம்மருந்துப் பொருட்கள் பரவலாக உள்ள நோய்களுக்கான 7 வகையான மருந்துகளை உள்ளடக்கி இருந்தது. வலி நிவாரணம், மன அழுத்தம் மன உளைச்சல், இதய எரிவு, வயிற்று அல்சர், உயர் கொலஸ்திரோல் ஆகியவற்றிற்கான மருந்துகள் இந்த மருந்துத்தொகுதியில் உள்ளடங்கி இருந்தது. இம்மருந்துப் பொருட்களின் மதிப்பீடு 16,000 பவுண்கள் (30 லட்சம் ரூபாய்.) டென்மார்க்கில் உள்ள இனிசியேறிவ் 2009 என்ற அமைப்பு எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்புடன் தொடர்புகளை ஏற்படுத்தி இந்த மருந்துப்பொருட்கள் அன்பளிப்புச் செய்யப்படுவதை உறுதிப்படுத்தியது. லிற்றில் எய்ட், இனிசியேற்றிவ் 2009, எல்லைகளற்ற மருத்துவர்கள் குழுவாக ஒரு நோக்குடன் செயற்பட்டு மருந்துப் பொருட்களை வவுனியாவுக்கு கொண்டு சென்று கொடுத்தனர்.

Little_Aid_Med_Deliveryசெப்ரம்பர் 16ல் விமானமூலம் இந்தப் பொருட்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒக்ரோபர் 6ல் வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டது. லிற்றில் எய்ட் சார்பில் டொக்டர் நிமால் காரயவாசம், திரு மார்க் பெர்னான்டோ ஆகியோர் இம்மருந்துத் தொகுதியை வவுனியாவுக்கு எடுத்துச் சென்றனர். வவுனியா மருத்துவமனையின் உயர் அதிகாரியான டொக்டர் பவானி பசுபதிராஜா வவுனியா உதவி அரசாங்க அதிபர் சம்பந்தர் முன்னைலையில் டொக்டர் நிமால் காரியவாசம், திரு மார்க் பெர்னான்டோ ஆகியோரிடம் இருந்து உத்தியோகபூர்வமாக மருந்துப் பொருட்களைக் கையேற்றார்.

இந்த மருத்துவத் திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இனிசியேற்றிவ் 2009, மற்றுமொரு 7000 கி கி எடையுள்ள மருந்துப் பொருட்களை நோர்வேஜிய நிறுவனம் ஒன்றினூடாக பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தி உள்ளது. இம்மருந்துப் பொருட்களை வவுனியா, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்க லிற்றில் எய்ட் விரும்புகின்றது.

லிற்றில் எய்ட் பதிவு செய்யப்பட்ட பொது அமைப்பு. மே 18 2009ல் பிரித்தானிய பொது அமைப்புகள் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்டது. கடந்த 5 மாதங்களில் மரக்கறிகள், குழந்தைகளுக்கான பால்மா, துணிவகைகள் ஆகியவற்றை தம்புல்லவில் இருந்து செட்டிகுளம் முகாம்களுக்கு அனுப்பி வைத்தது. மேலும் அம்பேபுச முகாமில் உள்ள முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வில் அவர்களுக்கு இசைப் பயிற்சி வகுப்புகளை லிற்றில் எய்ட் மேற்கொண்டிருக்கின்றது. இத்திட்டம் தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. இத்திட்டம் சட்ட மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் ஒத்துழைப்புடன் லிற்றில் எய்ட் இனால் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றது.

தமிழ் மக்கள் மத்தியில் பொது அமைப்புகளின் செயற்பாடுகளை வெளிப்படையாகவும் கணக்குகளைத் திறந்த புத்தகமாகவும் வைத்திருக்கும் பழக்கத்தையும் லிற்றில் எய்ட் ஏற்படுத்தி உள்ளது. அதன் இணையத்தளத்தில் சகல விபரங்களையும் காணலாம்.

மேலதிக விபரங்களுக்கு : www.littleaid.org.uk

ரி கொன்ஸ்ரன்ரைன்
தலைவர்
லிற்றில் எய்ட்.

‘தமிழ்த் தேசியத்தை ஐரோப்பிய மண்ணில் சிதைப்பதற்காக சிங்கள அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குகநாதன்’ என்பது ”தவறான பிரச்சாரம்” : எஸ் எஸ் குகநாதன் (டான் தமிழ்ஒளி)

Dan_Tamilடான் தமிழ்ஒளி தொலைக்காட்சி தொடர்பாக அண்மைக் காலங்களில் புலிகளின் ஊடகங்களாலும், புலிகளின் ஊதுகுழல்களாக செயற்பட்டுவரும் சில தனிநபர்களாலும் தவறான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும் போது அதுவே மக்கள் மனதில் பதிந்து விடுகின்றது. அதனாலேயே அதனை பொய் என்று தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகின்றது.

டான் தமிழ்ஒளி 2007ம் ஆண்டு முதல் தனது ஒளிபரப்பை கொழும்பிலிருந்து நடாத்திவருகின்றது. அதனை கொழும்பில் நடாத்திவரும் ஆஸ்க் மீடியா என்ற நிறுவனம் முழுக்க முழுக்க 100 வீதமும் குகநாதன் என்ற தனி நபருக்கும் அவரது குடும்பத்திற்கும் சொந்தமானது.  அதில் வேறு எவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதே உண்மையானது.

‘தமிழ்த் தேசியத்தை ஐரோப்பிய மண்ணில் சிதைப்பதற்காக சிங்கள அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குகநாதன்’ என்று சில அனாமதேயங்கள் தொடர்ந்து துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு வருகின்றன.

தமிழ்த் தேசியத்தை தமிழ் மண்ணில் சிதைத்தவர்கள் யார் என்பது தமிழ் மக்கள் அனைவரும் நன்கு அறிந்த விடயம். தமிழ்த் தேசயத்தை தமிழ் மண்ணில் அழித்தவர்களாலேயே ஐரோப்பிய மண்ணிலும் சிதைக்க முடியும். அதற்கெல்லாம் குகநாதன் போன்றவர்கள் தேவையே இல்லை. இப்போது தமிழ்த் தேசியத்தை காப்பாற்றப் போகின்றோம் என்று புறப்பட்டிருக்கும் சில புல்லுரிவிகளே போதும்.

நல்லூரில் குண்டு வெடித்தால், யாழ்.நகரத்தில் இருப்பவனுக்கே நல்லூரில் என்ன நடந்தது என்பது சரியாகத் தெரிவதில்லை. இப்படியிருக்கையில் தாயகத்தில் என்ன நடக்கின்றது என்பதை 13 ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து கூறிக் கொண்டிருப்பதை விடுத்து, நேரே நல்லூரிலிருந்தே கூறுவோம் என்று டான் தமிழ்ஒளி தொலைக்காட்சி தாயகத்தை நோக்கி வந்தது. அது உண்மையைக் கூறுவது சிலருக்கு கசப்பானதாக இருக்கலாம். அதற்காக உண்மையைக் கூறுவதற்கு பெயர் துரோகத் தனம் என்றால் அந்த துரோகத்தனத்தை செய்வதற்கு டான் தமிழ்ஒளி தயங்கப் போவதில்லை.

முதல் முதலில் நமது மண்ணில் நடந்த படுகொலை அல்பிரட் துரையப்பா வினுடையது. அப்போது, துரோகிகளுக்கு மரண தண்டனைதான் சரியான தீர்வு என்று அதனை நியாயப்படுத்தியவர் மறைந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள். பின்னர் அதே தண்டயையை அவரும் பெறவேண்டிவந்தது.  இன்னுமொரு வரைப் பார்த்து துரோகி என்று கை நீட்டியவ்hகள் பலர் பின்னர் துரோகிகளாக அறிவிக்கப்பட்ட வரலாறுகள் அதிகம். எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லியே தீரும்.

எஸ்.எஸ். குகநாதன்
தலைவர், டான் தொலைக்காட்சி   

வன்னி முகாம் GCE(O/L) மாணவர்களுக்கான கல்வி நிவாரணத் திட்டம்‏

அன்புடன் நண்பர்களுக்கு,

வன்னி முகாம்களில் உள்ள மக்களின் நிலை நீங்கள் அறியாதது அல்ல. அங்குள்ள 280 000 மக்கள் தொகையில் 60 000 பேர் மாணவர்கள். இளமையில் கல்வி சிலையில் எழுத்தென்பது பெரியோர் வாக்கு. துரதிஸ்டவசமாக அம்மாணவர்கள் மோசமான சூழலில் தங்கள் கல்வியைத் தொடர நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு எம்மாலான உதவியை வழங்குவது புலம்பெயர்ந்து வாழும் எங்களின் பொறுப்பும் கடைமையும் கூட.

அந்த வகையில் 5ம்தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 4872 மாணவர்களுக்கும் 15 000 பவுண் செலவில் 4 வழிகாட்டிப் புத்தகங்களையும் 30 மாதிரி வினாத்தாள்களையும் வழங்கி அவர்களது பரீட்சைக்கு எம்மாலான உதவியை வழங்கி இருந்தோம்.

அத்திட்டத்தை வெற்றிகரமாக முடித்ததை அடுத்து வரும் டிசம்பரில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கும் எமது உதவியை வன்னி முகாம்களில் உள்ள மாணவர்களின் கல்விக்குப் பொறுப்பாக உள்ள அதிகாரி த மேகநாதன் கேட்டுள்ளார். அத்திட்டம் பற்றிய விபரங்கள் 2 – 4 பக்கங்களில் உள்ளது.

பரீட்சைகள் டிசம்பரில் நடைபெற இருப்பதால் மிகத் துரிதமாக இவற்றை செய்ய வேண்டிய நிலையுள்ளது. நாம் பலரிடம் தொடர்பு கொண்ட போதும் மிகச்சிலரே உதவ முன்வந்துள்ளதால் இத்திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும் எனக் கருதவில்லை. அதனால் கிடைக்கும் நிதிக்கு ஏற்ப ஒவ்வவொரு பாடத்திற்கும் மாதிரி வினாத்தாள்களை 6200 மாணவர்களுக்கும் வழங்குவதென முடிவெடுத்துள்ளோம். இக்கல்வித் திட்டத்திற்கு உங்களது உதவியையும் எதிர்பார்க்கின்றோம்.

நிதிப்பங்களிப்புச் செய்பவர்களின் விபரங்கள் ஒவ்வொரு வினாத்தாளின் முடிவிலும் அச்சிடப்படுவதுடன் முழுமையான கணக்கறிக்கை பொதுத் தளத்தில் வெளியிடப்படும். ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட கல்வித்திட்டத்தின் அறிக்கை அதனை உறுதிப்படுத்தியும் உள்ளது.

உங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.

த ஜெயபாலன் (தேசம்நெற்)
._._._._._.

தரம் 5 – புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு தேசம்நெற் – சிந்தனை வட்டம் மேற்கொண்ட கல்வி நிவாரணப் பணிகளுக்கு வன்னி முகாம் மாணவர்களின் கல்விக்குப் பொறுப்பாகவுள்ள அதிகாரி த மேகநாதன் அனுப்பி வைத்த கடிதம்:

விசேட கல்வி அலுவலகம்
செட்டிகுளம் ம வி
செட்டிகுளம்

2009 – 08 – 24

எம்மால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிற்கு வருகை தந்து நிவாரணக் கிராமங்களில் தங்கி கற்றுவரும் மாணவர்களுக்காக தங்களால் மேற்கொள்ளப்பட்ட மேற்படி செயற் திட்டம் காரணமாக நேற்றைய நாளில் நடைபெற்று முடிந்துள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரிட்சைக்குத் தோற்றியுள்ள மாணவர்களிற்கு பெரிதும் பயன் தந்துள்ளது. ஆசிரியர்க்கான கற்பித்தலை இலகுபடுத்தி உள்ளது. கையேடுகள் மாணவர்கள் சுயமாகக் கற்ற உதவின. தங்கள் பயிற்சி மாதிரி வினாப்பத்திரங்களில் காணப்பட்ட வினாக்களை ஒத்ததாகக் வினாக்கள் காணப்பட்டதாகவும் ஆசிரியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 30 வினாப் பத்திரங்களைச் செய்து பழகியதன் காரணமாக பரீட்சைப் பயமின்றி மாணவர்கள் விடைஎழுதி உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கற்றலுக்கு எவ்வித உதவியும் இன்றி முகாமை வந்தடைந்த மாணவர்களுக்கு தங்கள் வினாப்பத்திரங்களும் கையேடுகளும் பரீட்சைக்குத் தயார்படுத்தலுக்கு உதவியுள்ளன. இச்செயற்திட்டம் மூலம் வன்னி மாணவர்களுக்கு நீங்கள் ஆற்றிய கல்விப் பணிக்காக எல்லோர் சார்பாகவும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

த மேகநாதன்

._._._._._.

5ம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் கல்வி நிவாரணப் பணிகளுக்கு உதவியவர்கள்:

சிந்தனை வட்டம் : 925 680 ரூபாய்
மத்திய இலங்கை முஸ்லீம் பட்டதாரிகள் ஒன்றியம் : 700 000 ரூபாய்
அகிலன் பவுண்டேசன் : 564 000 ரூபாய்
தேசம்நெற் : 200 000 ரூபாய்
லிற்றில் எய்ட் : 188 000 ரூபாய்

லண்டன் நண்பர்கள் :

பி சோமசுந்தரம் : 56 000 ரூபாய்
பொன் சிவகுமார் : 30 000 ரூபாய்
ஆர் சுகேந்திரன் : 28 000 ரூபாய்
எஸ் தீபன் : 28 000 ரூபாய்
ஆர் தர்மராஜ் : 18 000 ரூபாய்
எஸ் செல்வகுமார் : 18 000 ரூபாய்
எஸ் ரவீந்திரகுமார் :  9 000 ரூபாய்
பி விஜி :  9 000 ரூபாய்

ஒத்துழைப்பு வழங்கிய அனைவரிற்கும் மனமார்ந்த நன்றிகள்!!!

._._._._._.

தேசம் நெற் – சிந்தனை வட்டம் செயற்படுத்தத் திட்டமிட்டுள்ள வன்னி முகாம் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான கல்வி நிவாரண செயற்றிட்டம் – 2009

செயற்றிட்ட அறிக்கை:
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள  நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் தரம் 11 இல் கல்வி பயிலும் 6290  மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்காக வேண்டி தேசம் நெற் – சிந்தனை வட்டம்  இணைந்து செயற்படுத்தத் திட்டமிட்டுள்ள க.பொ.த சாதாரண தர  மாணவர்களுக்கான கல்வி நிவாரண செயற்றிட்டம் – 2009 பற்றிய விரிவான அறிக்கை.

மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் வவுனியா நலன்புரி நிலையப் பாடசாலைகளின் இணைப்பாளரும் துணுக்காய் கல்வி வலையப் பணிப்பாளருமான திருவாளர் த. மேகநாதன் 2009.08.17 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தில் இதற்கான வேண்டுகோளை விடுத்து உதவி கோரி இருந்தார்.

நோக்கம்:
வன்னியில் நடைபெற்று முடிந்த யுத்தத்தினால் பாடசாலைக் கல்வியை இழந்து நிவாரண கிராமங்களில் குடியேறியுள்ள கிளிநொச்சி முல்லைத்தீவு உட்பட வடபகுதி மாணவர்களின் கல்வி நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடல். நீண்ட காலங்களாக பாடசாலை முறைசார் கல்வியைப் பெற்றுக்கொள்ள முடியாதிருந்த இம் மாணவர்கள் கற்றவற்றை மறக்காமலிருப்பதற்கும் பாடசாலைக்குச் செல்லாத காலங்களில் கற்பிக்கப்பட்ட விடயங்களை சுருக்கமாக மீட்டுவதற்கும் இவர்கள் எதிர்நோக்கும் அரசாங்கப் பரீட்சைகளை நாடளாவிய ரீதியிலுள்ள ஏனைய மாணவர்களைப் போல நம்பிக்கையுடனும் அச்சமின்றியும் எதிர்நோக்கக் கூடிய ஆயத்த நிலையை உருவாக்குதல்.

திட்டம்:
நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்து 2009 ஆம் ஆண்டில் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு நேரடி பாடப்பரப்புக்கு உட்பட்ட வகையில் கல்வி நிவாரண உதவிகளை வழங்குவதினூடாக பரீட்சைக்கு ஆயத்தப்படுத்தல்.

இலக்கு:
கடந்த காலங்களில் அரசாங்கப் பரீட்சையை எதிர்நோக்கிய வடமாகாண மாணவர்கள் பெற்ற சித்தி வீதத்தை பாதுகாத்தல். குறிப்பாக 2009 ஆம் ஆண்டில் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் நலன்புரி நிலைய மாணவர்களுள் 35 சதவீதத்துக்கு மேலான மாணவர்களை க.பொ.த உயர்தர வகுப்புக்கான அனுமதியைப் பெறக்கூடிய வகையில் சித்தியடையச் செய்தல்.

மாணவர்களுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள கல்வி நிவாரண உதவிகள்:
1 மாதிரி வினாத்தாள்கள்
2. கையேடுகள்

1 மாதிரி வினாத்தாள்கள்:
புதிய பாடப்பரப்பை உள்ளக்கிய பல்தேர்வு வினாக்கள், கட்டுரை வினாக்கள் அமைப்பு வினாக்களைக் கொண்ட ஆறு மாதிரி வினாத்தாள்கள் ஐந்து பிரதான பாடங்களுக்கும் தனித்தனியே வழங்கப்படும். மொத்தமாக வழங்கப்பட உத்தேசிக்கப்பட்ட மாதிரி வினாத்தாள்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் 6 மாதிரி வினாத்தள்கள்படி 5 பாடங்களுக்கும் 30 மாதிரி வினாத்தாள்களாகும்.

இந்த மாதிரிவினாத்தாள்கள நலன்புரி நிலைய பாடசாலைகளில் உள்ள  ஆசிரியர்களினதும் அம்முகாம்களுக்குச் சென்று கற்பிக்க உள்ள பல்கலைக்கழக மாணவர்களின் துணையுடனும் பரீட்சைகளாக நடத்தப்பட்டு மதிப்பீடு செய்யப்படும்.

இந்த மாதிரி வினாத்தாள்கள் அரசாங்க வினாப்பத்திரங்கள் மதிப்பீடு செய்யும். ஆசிரியர்களாலும்,  வினாப்பத்திர உருப்படிகளை தயாரிப்பதில் அனுபவம் மிக்க ஆசிரியர்களாலும் ஆசிரிய ஆலோசகர்களாலும் நலன்புரி நிலைய மாணவர்களின் கல்வி நிலையைக்கருத்தில் கொண்டு தயாரிக்கப்படும்.

2008 அரசாங்கப் பரீட்சை வினாத்தாள்கள்:
ஐந்து பிரதான பாடங்களுக்கும் தனித்தனியே வழங்கப்படும். மொத்தமாக வழங்கப்பட உத்தேசிக்கப்பட்ட அரசாங்கப் பரீட்சை வினாத்தாளகள் 05 ஆகும்.

3 கையேடுகள்:
நலன் புரி நிலைய மாணவர்களின் கல்வி நிலையைக்கருத்தில் கொண்டு புதிய பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கையேடுகள் ஒவ்வொரு பாடத்திற்கும் சுமார் 10 வரை கையேடுகள் வழங்கப்படும். இக்கையேடுகள் வழிகாட்டிக் குறிப்புக்களைக் கொண்டதாகவும் பயிற்சிகளைக் கொண்டதாகவும் அமைந்திருக்கும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதான பாடங்கள்:
1.விஞ்ஞானம்
2.தமிழ்
3.கணிதம்
4.ஆங்கிலம்
5.வரலாறு

உதவி வழங்கப்பட வேண்டிய மாணவர் எண்ணிக்கை:
வடபுலத்து மண்ணில் தமிழர்கள் செறிவாக வாழ்ந்து வந்த கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பூநகரி, கண்டாவலை ஆகிய கல்விக் கோட்டங்களைச் சேர்ந்த அனைத்துப் பாடசாலை மாணவர்களும், அதேபோல முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும்,  துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த துணுக்காய்,  ஒட்டிசுட்டான்,  மாந்தை கிழக்கு ஆகிய கோட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் தற்போது அகதிகளாக நலன் புரிநிலையங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

2009.07.31ஆம் திகதி அறிக்கைப் பிரகாரம் வவுனியா நலன்புரி நிலையங்களில் சுமார் 60,000 மாணவர்கள்  மொத்தமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைப்படி 2009 ஆம் ஆண்டில் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர் எண்ணிக்கை வருமாறு:

வலயம் 0 – 535 மாணவர்கள்
வலயம் 01 – 1261 மாணவர்கள் 
வலயம் 02 – 1401 மாணவர்கள்
வலயம் 03 – 912 மாணவர்கள்
வலயம் 04 – 907 மாணவர்கள்
வலயம் 05 – 99 மாணவர்கள்
சுமதிபுரம் நிவாரண முகாம் – 156 மாணவர்கள்
வீரபுரம் நிவாரண முகாம் – 116 மாணவர்கள்
தர்மபுரம் நிவாரண முகாம் – 136 மாணவர்கள்
IDP பாடசாலைகள் – 583 மாணவர்கள்
புல்மோட்டை நலன்புரி நிலையம் – 184 மாணவர்கள்

மொத்தம் – 6290 மாணவர்கள்

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செலவீனம்:
ஒரு மாணவனுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் 10 அல்லது 8 (5 பாடத்திற்கும் 42) வழிகாட்டிக் குறிப்பேடுகளையும் 6 (5 பாடத்திற்கும் 30) மாதிரி வினாப்பத்திரங்களையும் ஒரு (5 பாடத்திற்கும் 5) அரசாங்க வினாப்பத்திரத்தையும் வழங்குவதற்கு 900 ரூபாய் ஆகின்றது. (அண்ணளவாக 5 பவுண்கள்)

6200 மாணவர்களிற்கும் ஒவ்வொருவருக்கும் 42 கையேடுகளையும் 30 மாதிரி வினாத்தாள்களையும் 5 அரசாங்க வினாப்பத்திரங்களையும் வழங்குவதற்கு  5 661 000 ரூபாய் செலவாகின்றது. (அண்ணளவாக 30 000 பவுண்கள்)

மாணவனுக்கு 5 பாடத்திற்கும் 5 வினாத்தாள்களை வழங்க ஏற்படும் செலவு:
ஒரு பாடத்திற்கு ஒரு வினாத்தாள் வழங்க ஏற்படும் செலவு 15 ரூபாய்
5 பாடத்திற்கும் 5 வினாத்தாள்கள் வழங்க ஏற்படும் செலவு  75 ரூபாய்
6290 மாணவர்களுக்கு 5 பாடத்திற்கும் 5 வினாத்தாள்கள் வழங்க ஏற்படும் செலவு 471 750 ரூபாய்
(அண்ணளவாக 2500 பவுண்கள்)

ஒரு மாணவனுக்கான வழிகாட்டிக் குறிப்பேடுகளுக்கு ஏற்படும் செலவு:
விஞ்ஞானம் பாடத்திற்கான 10 வழிகாட்டிக் குறிப்பேடுகள் 100 ரூபாய்
கணித பாடத்திற்கான 8 வழிகாட்டிக் குறிப்பேடுகள் 80 ரூபாய்
வரலாறுப் பாடத்திற்கான 8 வழிகாட்டிக் குறிப்பேடுகள் 80 ரூபாய்
தமிழப் பாடத்திற்கான 8 வழிகாட்டிக் குறிப்பேடுகள் 80 ரூபாய்
ஆங்கிலப் பாடத்திற்கான 8 வழிகாட்டிக் குறிப்பேடுகள் 56 ரூபாய்
 
6290 மாணவர்களுக்கான வழிகாட்டிக் குறிப்பேடுகளுக்கு ஏற்படும் செலவு:
விஞ்ஞானம் பாடத்திற்கான 10 வழிகாட்டிக் குறிப்பேடுகள் 629 000 ரூபாய்
(அண்ணளவாக 3400 பவுண்கள்)
கணித பாடத்திற்கான 8 வழிகாட்டிக் குறிப்பேடுகள் 503 200 ரூபாய்
(அண்ணளவாக 2700 பவுண்கள்)
வரலாறுப் பாடத்திற்கான 8 வழிகாட்டிக் குறிப்பேடுகள் 303 200 ரூபாய்
(அண்ணளவாக 2700 பவுண்கள்)
தமிழப் பாடத்திற்கான 8 வழிகாட்டிக் குறிப்பேடுகள்  503 200 ரூபாய்
(அண்ணளவாக 2700 பவுண்கள்)
ஆங்கிலப் பாடத்திற்கான 8 வழிகாட்டிக் குறிப்பேடுகள்  352 200 ரூபாய்
(அண்ணளவாக 1900 பவுண்கள்)

தொடர்பு விபரங்கள்:

பிரித்தானியாவில்:

த ஜெயபாலன் : 0044 208 279 0354 அல்லது 0044 7800 596 786 அல்லது thesam97@hotmail.com

ரி சோதிலிங்கம் : 0044 7846 322 369 அல்லது sothi@btinternet.com

இலங்கையில்:
பி எம் புன்னியாமின் : 0094 812 493 892 அல்லது pmpuniyameen@yahoo.com

சமூக வளர்ச்சியின் அடிப்படை கல்வி! இளமையில் கல்வி சமூகத்தின் அஸ்திவாரம்!

நலன்புரி முகாம்களிலுள்ள தமிழ் மக்களை விடுவிப்பதுடன் இடம்பெயர்ந்த முஸ்லிம்களை மீளக் குடியேற்ற வேண்டும்

120909tnalogo.jpgஇடம் பெயர்ந்து முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை விடுதலை செய்வது குறித்தும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு உரிய தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் கூட்டாக அறிக்கையொன்றை விடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் தலைவரும் சிரேஷ்ட உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இதேவேளை, தமிழ், முஸ்லிம் கட்சிகள் 5 ஒன்றிணைந்து கூட்டாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன. அதில் நாட்டில் இடம்பெயர்ந்துள்ள இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் அரசமைப்புக்கு முரணாக சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறி பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் ஆர். சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழர் விடுதலை கூட்டணியின் சார்பில் வீ.ஆனந்தசங்கரி, ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் மனோ கணேசன், அகில இலங்கை தமிழ் ஐக்கிய முன்னணி சார்பில் கே.விக்னேஸ்வரன் ஆகியோர்  ஒன்றிணைந்து கூட்டாக அறிக்கையொன்றை விடுத்துள்ளனர். இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கை சுதந்திரமடைந்த நாளிலிருந்து தமிழ் பேசும் மக்கள் பல தசாப்த காலமாக கொடுந் துயரை அனுபவித்து வருகிறார்கள். அவர்கள் இனப்பாகுபாட்டையும், வன்முறையையும், இனச் சுத்திகரிப்பையும் எதிர்கொள்கின்றனர். 1983 இல் இடம்பெற்ற இனப் படுகொலையின்போது, அரசாங்கத்தின் ஒரு பகுதியினரும் அதில் ஈடுபட்டிருந்தனர். இனப்படுகொலைகளாலும் கடந்த 34 வருட கால இலங்கை இனரீதியான உள்நாட்டு யுத்தத்தாலும் வடக்கு கிழக்கில் வாழ்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களும் ஏனையோரும் இன்னும் நாட்டின் ஏனைய பகுதி மக்களும் கூட பலியெடுக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தமிழ் மக்கள் இத்தகைய துன்பங்களால் பெருமளவு சலிப்படைந்துள்ளனர். போரின் இறுதிக் கட்டத்தில் வன்னி மக்கள் எல்லையற்ற துன்பத்தை அனுபவித்துள்ளனர். போர் முடிவடைந்துள்ள இந்த நிலையிலும்கூட அவர்களுடைய துன்பம் இன்னும் தீர வில்லை. நாட்டில் எங்கும் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் மரண அச்சுறுத்தல்கள், பொது மக்கள் படுகொலைகள், ஊடகவியலாளர்களும் ஏனையோரும் காணமற் போதல் என்பவற்றுக்கு மத்தியிலும் நாம் இந்த இடம்பெயர்ந்து முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பாக உடனடியாகவும் கூட்டாகவும், முன்னுரிமை கொடுத்து செயற்பட வேண்டுமென கருதுகின்றோம்.

இதன் கீழ் ஒப்பமிட்டுள்ள நாம் அனைவரும் சகித்துக் கொள்ள முடியாத இந்நிலைமையினை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம். நாட்டிலுள்ள இடம்பெயர்ந்த இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் அரசியலமைப்புக்கு முரணாக சர்வதேச சட்டங்களை மீறி பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என்று சுட்டுக் காட்ட விரும்புகின்றோம். இம்மக்கள் உடனடியாக அம்முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டு அவர்களது வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். அத்தோடு அவர்கள் தங்களது பாரம்பரிய தொழில்களான விவசாயம் மற்றும் மீன்பிடி போன்றவற்றில் ஈடுபட எத்தகைய தடையுமின்றி அனுமதிக்க வேண்டும். அல்லது அவர்கள் தமது உறவினர் நண்பர்களது வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும், அல்லது அவர்கள் தமது சட்டபூர்வமான உரிமையைப் பயன்படுத்தி தாங்கள் விரும்பிய இடத்துக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். இவர்களில் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதான குற்றச்சாட்டை எதிர்நோக்குபவர்கள் எதுவித தாமதமுமின்றி நீதிமன்றம் முன் நிறுத்தப்பட வேண்டும். இடம்பெயர்ந்த மக்கள் நீண்ட நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த முகாம்களுக்கு உறவினர்கள், மதகுருமார், பாராளுமன்ற உறுப்பினர்கள் , மாகாண சபை உறுப்பினர்கள், சிவில் சமூகத்தினர், ஐ.நா. நிறுவன பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென நாம் வலியுறுத்துகிறோம்.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு கடந்த இரண்டு தசாப்தங்களாக கடும் துன்பங்களை எதிர்கொண்டுவரும் முஸ்லிம் மக்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படுவதோடு, அங்கு அவர்கள் தமது பொருளாதார, சமூக வாழ்வை எவ்வித இடையூறுமின்றி வாழ வழி செய்ய வேண்டும்.அதேபோன்று கிழக்கிலும் இடம்பெயர்ந்து கடும் துயரை அனுபவிக்கும் மக்களையும் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வடக்கிற்கும் கிழக்கின் சிலபகுதிகளுக்கும் நடைமுறைப்படுத்தப்படும் நடமாடும் சுதந்திரத்துக்கான கட்டுப்பாடு தளர்த்தப்படல் வேண்டும். குறிப்பாக, வட மாகாணத்தில் அடிப்படை உரிமை மீறல் நடவடிக்கைகள் விலக்கப்படல் வேண்டும்.

வட மாகாணத்தில் பல பகுதிகளிலும் ஊரடங்குச் சட்டமும் பல்வேறு கட்டுப்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்படுவது நியாயப்படுத்தப்பட முடியாதவைகளாகும். இதனால், அங்கு எவ்வித தாமதமுமின்றி உடனடியாக இயல்பு வாழ்க்கை ஏற்படுத்தப்படல் வேண்டும். நாட்டில் சில பகுதிகளில் வாழும் மக்கள் இன்னமும் அச்சத்துடனேயே உள்ளார்கள். அவசரமான விடயங்களுக்குக்கூட அவர்கள் செல்வதில்லை. இதனால், சமூக செயற்பாடுகள் தொடர்பான பணிகள் தடைப்பட்டுள்ளன. மேலும் இராணுவ நிர்வாகம் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், தளர்த்தப்பட வேண்டும். சமூக, பொருளாதார, இயல்புவாழ்வு மீளத் திரும்பும் வகையில் சிவில் நிர்வாகம் சீரமைக்கப்படல் வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முகாம் மக்கள் கௌரவமாக நடத்தப்பட வேண்டும் : வோல்டர் கெலின்

210909walter-kalin.jpg“மிகுந்த கஷ்டத்துடனும் ஆபத்துடனும் நெருக்கடி மிகுந்த முகாம்களுக்குள் வாழ்ந்துவரும் மக்களுக்கான சகல வசதிகளையும் உடனடியாக பூர்த்தி செய்வது இயலாத செயல்தான். என்றாலும் அவர்களை முகாம்களிலிருந்து சுதந்திரமாகவும் பாதுகாப்புடனும் கௌரவத்துடனும் வெளியேறுவதற்கும் இஷ்டம் போல சொந்த வீடுகளுக்குச் செல்வதற்கும் அனுமதிக்க வேண்டும் “என்று இடம்பெயர் மக்களுக்கான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதிநிதி வோல்டர் கெலின் தெரிவித்துள்ளார். இந்த மக்களை விடுவிக்கும் நடவடிக்கைகள் மிகவும் மந்தகதியில் இடம்பெறுவது குறித்து தான் கவலையடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வோல்டர் கெலின் தனது விஜயம் குறித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“அரசியல் விவகாரங்களுக்கான ஐக்கியநாடுகள் உதவிச் செயலாளர் நாயகம் லின் பாஸ்கோ இங்கு வந்த போது இடம்பெயர்ந்தவர்களின் மனித உரிமைகளின் பாதுகாப்பை எவ்வாறு பலப்படுத்தலாம் என்பது பற்றியும் மீள குடியமர்த்துவதில் இடம்பெறும் தாமதங்களை நீக்குவது பற்றியும் அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளை அடிப்படையாக வைத்து நான் அவதானம் செலுத்தினேன். இடம்பெயர்ந்தவர்களில் 70, 80 சதவீதத்தினரை இந்த வருட முடிவில் மீள குடியமர்த்துவது என்ற அரசாங்கத்தின் வாக்குறுதி வரவேற்கத்தக்கது. மன்னாரில் அரசாங்கம் கண்ணிவெடிகளை அகற்றவதிலும் புனர்நிர்மாணப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.

மிகுந்த கஷ்டத்துடனும் ஆபத்துடனும் நெருக்கடி மிகுந்த முகாம்களுக்குள் வாழ்ந்துவரும் மக்களுக்கான சகல வசதிகளையும் உடனடியாக பூர்த்தி செய்வது இயலாத செயலாக இருந்த போதிலும், அவர்களை முகாம்களிலிருந்து சுதந்திரமாகவும் பாதுகாப்புடனும் கௌரவத்துடனும் வெளியேறுவதற்கும் இஷ்டம் போல சொந்த வீடுகளுக்கு செல்வதற்கும் அனுமதிக்க வேண்டும்.

விரைவில் இதனைச் செய்ய முடியாவிட்டால் இந்த மக்களை வரவேற்று அரவணைக்க விரும்பும் உறவினர், நண்பர்களுடன் சென்று வாழ்வதற்கும் திறந்த இடைத் தங்கல் முகாம்களில் வசிப்பதற்கும் அனுமதிக்க வேண்டும். பருவப்பெயர்ச்சி மழைக் காலம் நெருங்குவதால் இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது.

உடனடி அவசரத்தின் பேரில் அமைக்கப்பட்ட தற்போதைய முகாம்கள் பலத்த மழையைத் தாங்கும் சக்தியற்றவை. எதிர்வரும் வாரங்களில் எதிர்பார்க்கப்படும் வெள்ளப் பெருக்கினால் தாழ்ந்த பகுதிகளிலுள்ள முகாம்களில் வசிப்பவர்களின் சுகாதாரத்திற்கும் உயிருக்கும் பேராபத்து ஏற்படலாம்.

அரசாங்கத்தின் சார்பில் என்னுடன் பேசியவர்கள் மேற்கண்ட தேவைகளின் அவசியத்தை தம்முடன் பகிர்ந்து கொண்ட போதிலும் அரசாங்கம் அதன் வாக்குறுதிகளை செயல்படுத்த மேலும் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம்

தமிழ் சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கும் நிரந்தர சமாதானத்தை நிலைநாட்டுவதற்கும் நடமாடும் சுதந்திரத்தை வழங்குவது அவசியமாகும். இந்த விடயம் தொடர்பாக, அண்மையில் இடம் பெற்ற ஒரு சம்பவம் பற்றி கடந்த 26ஆம் திகதி இராணுவத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.  ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு மாறிச் செல்ல முயன்றவர்களைக் கட்டுப்படுத்துவதற்குத் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக இருவர் காயமடைந்தமை பாரதூரமான மனித உரிமை மீறலாகும்.

கட்டாயத் தடுப்புக் காவலில் பெருந்தொகையான மக்களை நீண்ட நாட்களுக்கு தடுத்து வைக்கும் போது, முகாம்களின் இடவசதிகள் பற்றி கவனம் செலுத்தாதிருப்பது அவர்களது பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். மேலும் கட்டாயத் தடுப்புக்காவலில் வைக்கப்படுவது பற்றிய தீர்மானம் கூட்டாக அன்றி தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரின் வசதியையும் கருத்திற் கொண்டு எடுக்கப்பட வேண்டும். அத்துடன், எடுக்கப்பட்ட தீர்மானங்களை பாதுகாப்பு, தராதரம் ஆகியவற்றை மனதிற் கொண்டு சுயாதீன குழு ஒன்று அவ்வப்போது மதிப்பீடு செய்ய வேண்டும்.

20 வருடங்களுக்கு முன்னரே இடம் பெயர்ந்த முஸ்லிம் மக்கள் உட்பட அகதிகளாக இருப்போரையும் புனர்வாழ்வுத் திட்டங்களில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண பள்ளிவாயல் சம்மேளனம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கு கண்டனம்

ramadan-mosque.jpgகிழக்கு மாகாண பள்ளி வாயல்கள் சம்மேளனம் என்ற பெயரில், சம்பந்தப்பட்ட பள்ளிவாயல்களுக்கோ, பள்ளி வாயல்களின் தலைமைகளுக்கோ தெரியாதவாறு அறிக்கைகளும், செய்திகளும் அடிக்கடி வெளிவந்து கொண்டிருப்பதனை அவதானித்து வருகின்றோம்.

குறிப்பாக, கடந்த வருடம் பாராளுமன்ற பஜட் விவாதத்தின் போது கிழக்கு மாகாண பள்ளிவாயல்கள் சம்மேளனம் என்ற கடிதத் தலைப்பில் அரசாங்கத்தின் பஜட்டுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம் என்ற பெக்ஸ் செய்தியின் மூலம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டு கோள் விடுக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த 22.09.2009ம் திகதி தமிழ் தினசரி பத்திரிகை ஒன்றில் கிழக்கு மாகாண பள்ளிவாயல்கள் சம்மேளனத் தலைவர் ஹனீபா கடத்தப்பட்டு விடுவிப்பு என்று செய்தி வந்திருந்தது. இச் செய்தியில் பள்ளிவாயல் ஒன்றின் தலைவராகவே இல்லாத ஹனிபாவை கிழக்கு மாகாண பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் தலைவர் என்று அடையாளப்படுத் தப்பட்டிருக்கின்றது. இவ் அடையாளப்படுத்துகையானது பள்ளிவாயல்களின் பேரில் சுயலாபம் தேடுவதற்கோ அல்லது அரசியல் இலாபங்களைப் பெறுவதற்காகவோ எடுக்கப்படும் முயற்சியென நாம் திடமாக நம்புகின்றோம்.

மெளலவி ஹனிபா என்பவர் அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாயலின் தலைவராக இருந்த போது அதன் பதவி வழியாக அம்பாறை மாவட்ட பள்ளிவாயல் சம்மேளனத்திலும், கிழக்கு மாகாண பள்ளிவாயல் சம்மேளனத்திலும் சில பதவிகளில் இருந்திருக்கிறார்., அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாயல் தலைமைப் பதவியில் இருந்து அவர் நீங்கிக் கொண்டது 2007.09.12ம் திகதியாகும்.

இதன்படி பள்ளவாயலின் புதிய தலைவரே மேற்படி சபைகள் கூடுகின்றபோதோ அல்லது உருவாக்கப்படுகின்றபோதோ அங்கம் வகிப்பதுவும் பதவி வகிப்பதுவும் நடைமுறை வழக்கமாகும். ஆகவே, கடந்த 02 வருட காலங்களுக்கு மேலாக பள்ளிவாயலின் தலைவராகவே இல்லாத மெளலவி ஹனீபா கிழக்கு மாகாண பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் தலைவர் என்றும், இயங்காத அச்சபையின் பெயரை பாவிப்பதிலிருந்தும், தவிர்ந்து கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இத்தால் வேண்டுகோள் விடுத்துக் கொள்கின்றோம்.

இவ் வேண்டுகோளினை அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாயல்கள் சார்பில் அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாயல், அக்கரைப்பற்று பட்டின ஜும்ஆ பள்ளி வாயல், அக்கரைப்பற்று ஜும்ஆ புதுப்பள்ளி வாயல் ஆகிய வற்றின் தலைவர்கள் கூட்டாக இணைந்து வெளியிடுகின்றோம்.  தவறும் பட்சத்தில் இவ்விடயத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியை நாடவேண்டியதையும் தவிர்க்க முடியாமலாகும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இதேவேளை அக்கரைப்பற்று ஜம்இய்யத்துல் உலமா சபை விடுத்துள்ள அறிக்கையில்,

கடந்த 16.09.2009ம் திகதி மெளலவி ஹனிபாவிற்கு நடந்தாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உண்மைத்தன்மையை ஆராய்ந்து அறியவேண்டியிருக்கிறது என நமது உலமாக்கள் கருதுகின்றனர்.

நமது பிராந்தியம் தொடர்பிலும் சமுதாய நலன்கள் தொடர்பிலும் மெளலவி ஹனிபாவைப் பற்றிய கருத்துக்கள் வித்தியாசமாகப் பேசப்படுகின்றது. அவருக்குப் பின்னால் அரசியல் பின்னணிகள் இருப்பதாகவும் அறியக்கிடைக்கின்ற காரணத்தினால் உலமா சபையினையும் அவ்வரசியல் தேவைகளுக்காக பயன்படுத்துவதனை தடுக் குமாறு நமது உலமாக்கள் கேட்டுக் கொள்கின் றார்கள்.

எனவே 23.09.2009ம் திகதி நடைபெற்ற அக்கரைப்பற்று ஜம்இய்யத்துல் உலமாக சபைக் கூட்டத்தில் மெளலவி ஹனிபா பேசிக் கொண்ட ஒருதலைப்பட்ச விடயம் தொடர்பாக நாம் எவ்வித தீர்மானத்திற்கும் வரக்கூடாது என உலமாக்கள் எழுத்து மூலம் கேட்டிருக்கின்றனர்.

எனவே, அவர் ஒரு தலைப்பட்சமாக பேசிய விடயம் தொடர்பில் எவ்விதமான கருத்துக்களையும் ஊடகங்களுக்கோ நமது உயர் சபைகளுக்கோ, தீர்மானங்கள் என்றோ அறிக்கைகள் என்றோ வெளியிடக்கூடாது எனவும் உலமாக்கள் மேலும் கேட்டுக் கொள்கிறார்கள்.

இன்னும் இவற்றையெல்லாம் மீறி இது தொடர்பில் ஏதாவது அறிக்கைகள் வெளியிடப்படுமானால் அவற்றிற்கு அக்கரைப்பற்று ஜம்இய்யத்துல் உலமா சபையினர் பொறுப்பல்ல என்றும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

இலங்கை சென்ற புலம்பெயர் குழுவினுள்ளே ஒரு குறுகிய பயணம் : எஸ் மனோரஞ்சனின் மெல்லக் கசிந்த மின் அஞ்சல்

புலம்பெயர் நாடுகளில் இருந்து இலங்கைக்கு சென்று திரும்பிய 21 பேரைக் கொண்ட குழு பல்வேறு விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளாகி வருவது ஒன்றும் புதிய விடயமல்ல. 27 – 29 மார்ச் 2009ல் இலங்கை சென்று திரும்பிய பின்னர் தனியாகவும் ஒரு சிலர் இணைந்த குழுவாகவும் இவர்களில் சிலர் அதன் பின்னரும் சென்று திரும்பி உள்ளனர். இவர்களது செயற்பாடுகள் பற்றி ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் உள்ளன. தற்போது இக்குழுவின் நடவடிக்கைகள் அரையாண்டைப் பூர்த்தி செய்துள்ள நிலையில் இக்குழு பற்றியதும் அவர்களது செயற்பாடுகள் பற்றியதுமான மதிப்பீடு ஒன்று அவசியமாகின்றது.

இந்நிலையில் புலம்பெயர் குழுவில் சென்று திரும்பிய எஸ் மனோரஞ்சன் தான் இலங்கை சென்று இக்குழுவின் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக இக்குழு உறுப்பினர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதி உள்ளார். அக்கடிதம் தேசம் வாசகர் ஒருவருக்குச் சென்று தேசம்நெற்க்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இக்கடிதம் இலங்கை சென்ற புலம்பெயர் குழுவின் உள்ளே உள்ள அரசியலைப் புரிந்து கொள்வதற்கு உதவும் எனக் கருதுவதால் அக்கடிதத்திற்கான இணைப்பை வழங்குகிறோம். Letter_from_SManoranjan_to_Diaspora_Group

புலிகளாகவே இருந்தாலும் இப்படியா..?-ஜெயலலிதா

22-jayalalitha.jpgவிடுதலைப் புலிகளாகவே இருந்தாலும், வழக்கு விசாரணையே இல்லாமல் அனைவரையும் சுட்டுக் கொல்வது என்ற இலங்கை ராணுவத்தின் செயல் காட்டுமிராண்டித்தனமானது, மனிதத்தன்மையற்றது, நாகரீக கோட்பாடுகளுக்கு எதிரானது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கைத் தமிழர்கள் இலங்கை ராணுவத்தினரால் கொடூரமான முறையில் நடத்தப்படுவது தொடர்பாக இந்தியா மற்றும் வெளி நாடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளன.

இளைஞர்களின் ஆடைகளை அகற்றி நிர்வாணமாக்கி அவர்களுடைய கைகளாலேயே கண்களை மூடி விட்டு கால்களை இழுத்துக்கட்டி, ஈவு இரக்கமின்றி சீருடை அணிந்த இலங்கை ராணுவத்தினர் அவர்களை காலால் உதைத்து, பின்னிருந்து தலை வழியாக துப்பாக்கிகளால் சுடுகின்ற காட்சிகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன. கைபேசியின் மூலம் ராணுவ வீரரால் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த கோரமான வீடியோ படக்காட்சி, இலங்கையில் மக்களுக்கான விடுதலையுரிமை இல்லை என்பதும் அங்குள்ள தமிழ் மக்கள் இலங்கை ராணுவத்தினரின் காட்டுமிராண்டித்தனமாக கொடுமைகளுக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள் என்ற என்னுடைய கருத்திற்கு மேலும் வலு சேர்ப்பதாக உள்ளது.

இந்த ரத்தம் உறைந்த காட்சிகள் இந்தியத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியும், சில புகைப்படங்கள் பெரும்பாலான பத்திரிகைகளில் வெளியிடப்படடும் இலங்கை அரசுக்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்திய அரசுக்கோ அல்லது தமிழக அரசுக்கோ ஏற்படாதது வியப்பை அளிக்கிறது. இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்றும், அங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாகவும் இலங்கை அரசு தெரிவிக்கிறது. மனிதத்தன்மையை வேண்டுமென்றே காலால் போட்டு மிதிக்கக்கூடிய இது போன்ற ஒட்டுமொத்த கொடுமையை எந்த ஜனநாயகமும் அனுமதிக்கவில்லை.

தீவிரவாதத்திற்கோ அல்லது தீவிரவாத அமைப்புகளுக்கோ ஆதரவாக அதிமுக ஒரு போதும் இருந்ததில்லை. தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுவது என்ற பாதையிலிருந்து விலகி தமிழ் மக்களுக்காக போராடுகிறோம் என்று கூறி தனது அரசியல் எதிரிகளை அழித்து தனக்கு ஒத்துவராதவர்களை கொலை செய்து வருகின்ற தீவிரவாத இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் என்றைக்கு மாறியதோ, அன்றிலிருந்து இந்த இயக்கத்தை நான் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறேன்.

இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஒளிபரப்பப்படும் காட்சிகளில் வருபவர்கள் விடுதலைப் புலிகளாக இருந்தாலும், வழக்கு விசாரணையே இல்லாமல் அனைவரையும் சுட்டுக் கொல்வது என்பது காட்டுமிராண்டித்தனமானது, மனிதத்தன்மையற்றது, நாகரீக கோட்பாடுகளுக்கு எதிரானது. இது, போரின்போது சிறைபிடிக்கப்பட்டவர்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்ற சர்வதேச சட்டத்தை மீறுவதாக அமைந்துள்ளது.

வழக்குகள் விசாரணைக்கு வந்தால் அதில் உள்ள அரசியல் தொடர்பு வெளிப்பட்டு விடக் கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில், காவல் துறையின் கண்காணிப்பில் இருப்பவர்களை கொலை செய்வது, தற்போது தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் 25 மைல் தொலைவில் உள்ள இலங்கைத் தீவில் நிகழ்த்தப்படும் தமிழ் மக்கள் மீதான தாக்குதல் குறித்து திமுக அரசு சிறிய அளவிலாவது குரல் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிமுகவுக்கு இல்லை.

இருப்பினும் அதிமுகவும், தமிழக மக்களும் இலங்கையில் நடைபெறும் தமிழர்கள் மீதான கொடுமையை இந்திய அரசு தட்டிக் கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அருவருக்கத்தக்க சூழ்நிலையில் மறுவாழ்வு முகாம்களில் வாடிக் கொண்டிருக்கின்ற அப்பாவி இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை மற்றும் மதிப்பை புதுடெல்லியில் உள்ள இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

இலங்கை அரசின் தமிழர்கள் மீதான மனித உரிமை மீறலை சர்வதேச அமைப்புகளில் எழுப்பி, இலங்கை அரசாங்கம் அங்குள்ள தமிழர்களை கௌரவத்துடன் நடத்த வேண்டும். இல்லையெனில் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அனைத்து நாடுகளும் நிர்ப்பந்திக்கும் வகையில் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்திய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இலங்கையில் நடைபெறும் கொடூரமான சமூக தன்னுரிமை மீறல்களுக்கு எதிராக அதிமுக ஒத்த கட்சிகளுடன் இணைந்து மாபெரும் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

இடம்பெயர் மக்களின் நடமாட்ட சுதந்திரத்துக்காக நாம் தொடர்ந்தும் பாடுபடுவோம் : அமெ. புதிய தூதுவர்

170909us_ambassado.jpgஇலங் கையின் வடக்கில், உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரின் நடமாட்ட சுதந்திரத்துக்காக நாம் தொடர்ந்து பாடுபடுவோம் என்று இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக பொறுப்பேற்றுள்ள பற்றீசியா ஏ. பியூடெனிஸ் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர். தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது :

ஜனாதிபதி ஒபாமாவின், அறிமுக நற்சான்றுக் கடிதத்தை ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் கையளிக்கும் பெருமையும் ஐக்கிய அமெரிக்காவின் இலங்கைத் தூதுவராக எனது பணிக்காலத்தை ஆரம்பிக்கும் பெருமையும் கடந்த வியாழக்கிழமை எனக்குக் கிட்டியது.

இலங்கை நாட்டைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், அதன் கலாசாரப் பொக்கிஷங்கள் பலவற்றையும் இயற்கைப் பொக்கிஷங்களையும் பற்றி அறிந்து கொள்வதற்கும் ஐக்கிய அமெரிக்காவைப் பற்றிய உங்களுடைய தகவு நோக்குகள், எண்ணக் கருத்துக்கள் பற்றியும் இவ்விரு நாடுகளுக்கிடையில் நிலவும் தொடர்புகள் பற்றியும், கேட்டறிந்து கொள்வதற்கும் நான் ஆர்வத்துடன் காத்திருக்கின்றேன்.

ராஜதந்திர சேவையில் கடந்த 30 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள நான், முப்பதாண்டு காலத்தில் ஏறத்தாழ அரைப்பகுதியை தென் ஆசியாவில் கழித்திருக்கிறேன் என்ற வகையில், தென் ஆசியாவுக்கு மீண்டும் திரும்புவதையிட்டு தனிப்பட்ட முறையில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நமது நாடுகள் முதன் முதலாக இராஜதந்திர உறவுகளை நிறுவிய கடந்த ஆறு தசாப்தங்களில், நமது உறவுகள், பல கூறுகளைக் கொண்டனவாகவும் பரஸ்பரம், நன்மை பயக்கும் தோழமையுடன் கூடியனவாகவும் இருந்து வந்துள்ளன. சர்வதேச அரங்கில், பெருந்தொகையில் மக்கள் அழிவை ஏற்படுத்தும் ஆயுதப் பரவல் சம்பந்தப்பட்ட அச்சுறுத்தல் பற்றியும் கடல் மார்க்கங்களைப் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருத்தல் பற்றியும் நம் இரு நாடுகளும் அக்கறை கொண்டுள்ளன. வணிகத்திலும் வர்த்தகத்திலும் இலங்கைப் பொருட்களுக்கு, ஐக்கிய அமெரிக்காவே முன்னணி வகிக்கும் ஏற்றுமதிச் சந்தையாகத் திகழ்கின்றது.

அதேவேளை, அமெரிக்கப் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் இலங்கை, ஒரு பிரதான சேரிடமாக அமைந்துள்ளது. இராணுவக் கூட்டுறவைப் பொறுத்தளவில், இலங்கை இராணுவத்தின் நூற்றுக்கணக்கான அங்கத்தவர்கள், ஐக்கிய அமெரிக்கப் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களிலும் மாநாடுகளிலும் கல்விப் பரிமாற்ற நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றியுள்ளனர். அபிவிருத்திக்கான உதவியை நோக்கும் போது, 1956 ஆம் ஆண்டு முதல், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டங்களுக்காக, இரண்டு பில்லியனுக்கும் அதிகமான ஐக்கிய அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

இவ்வருடத்தில் மட்டும், இலங்கையின் வடக்கில், உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஏழு பில்லியன் உணவுப் பொட்டலங்களை வழங்குவதற்கு உதவியாகக் கொடுக்கப்பட்ட நிதியும் இதிலடங்கும். கல்வித்துறையை எடுத்துக்கொண்டால், ஐக்கிய அமெரிக்கக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கற்பதற்கு, வருடாந்தம் 2000இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பதிவு செய்து கொள்கிறார்கள்.

அமெரிக்க அறிஞர்கள் பலரும் அமெரிக்க மாணவர்கள் பலரும், இலங்கையின் கலாசாரத்தைப் பற்றியும் மரபுகளைப் பற்றியும் கற்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்கிறார்கள்.

கலாசாரத்தையும் கலைகளையும் எடுத்துக் கொண்டால், இடைவிடாது, அமெரிக்க, இலங்கைச் சமயத் தலைவர்களும் புலமை சார்ந்த சிறப்பறிஞர்களும் கலைஞர்களும், நம் இரு நாடுகளினதும் மரபுரிமைக்குப் பங்களிப்புச் செய்துள்ளனர்.

உதாரணமாக, இலங்கைக்கு வந்த ஹென்றி ஸ்டீல் ஒல்கொட், இத்தீவில் பல பௌத்த பாடசாலைகளை நிறுவினார். இவற்றுட் பல இன்னமும் இயங்கி வருகின்றன. இவ்வுறவுகளை விரிவுபடுத்தி ஆழமாக்குவதற்காக உழைப்பதே என் கடமையும் விருப்பமுமாகும்.

வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த நேரத்திலும் பெரும் சந்தர்ப்பம் நிலவும் நேரத்திலும், நான் உங்கள் நாட்டிற்கு வந்திருக்கிறேன். ஏறத்தாழ மூன்று தசாப்தங்களாகப் போர் இலங்கையை அழித்தது. இந்நாட்டில் வாழும் மக்களுள் ஏறத்தாழ அரைவாசிப்பேர், இம் மோதலுக்கு முற்பட்ட காலத்தை நினைவுபடுத்திக் கொள்ள முடியாத அளவிற்கு இளையோராக இருக்கிறார்கள். மோதலின் முடிவை, ஐக்கிய அமெரிக்கா வரவேற்கின்றது.

1997 ஆம் ஆண்டு முதல், ஐக்கிய அமெரிக்கா, பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்த்துக் கொண்டது. அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பொருள் உதவி வழங்கியோரைப் பற்றிப் புலனாய்வு செய்து, வெற்றிகரமாக தண்டனை வழங்கியுள்ளது.

இராணுவ மோதல் முடிவுக்கு வந்த பின்னர், நீண்ட செயன்முறையாகிய இணக்கப்பாடு ஆரம்பமாகின்றது. நாடு முழுவதிலும், மக்களுக்கிடையிலும் எவ்வாறு நம்பிக்கையையும் சகிப்புத்தன்மையையும் ஏற்படுத்தலாம் என்பதை இலங்கை மக்கள் முடிவு செய்ய வேண்டும். அதற்கான வழியை வேறு எவரும் அமைத்துக் கொடுக்க முடியாது.

இப்பதவியில் முன்னர் இருந்தவர்களைப் போல, நமது ஒத்துழைப்பை விரிவாக்குவதற்கு நான் செயலார்வத்துடன் முயற்சி செய்வேன். அவர்களைப் போலவே, ஐக்கிய அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையின் மூலமாக எப்பொழுதுமே அமைந்திருந்த சில அடிப்படைத் தத்துவங்களை நானும் கடைப்பிடித்து நடப்பேன்.

மனித உரிமைகளை முன்னேற்றுதல் நமது முக்கியமான, உலகளாவிய அக்கறைகளுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்கா உட்பட, எந்தவொரு நாடுமே, மனித உரிமைகளைக் காத்தல் தொடர்பாக முழுமையான பதிவைக் கொண்டதாக இல்லை. நாங்களும் விமர்சிக்கப்பட்டிருக்கிறோம் எனினும் நமது சொந்தக் குறைபாடுகளை அணுகுவதற்கு முயலும் அதேவேளை, உலகம் முழுவதிலும் வாழும் மக்களின் உரிமைகளுக்காகவும் சுதந்திரங்களுக்காகவும் செயற்பட வேண்டியது நமது பொறுப்பென்று நாம் நம்புகின்றோம்.

எனவே, இலங்கையில், வடக்கில், உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரின் நடமாட்டச் சுதந்திரத்திற்காக நாம் தொடர்ந்தும் பாடுபடுவோம் என்பதே இதன் கருத்தாகும். இந்த இலங்கைப் பிரஜைகள், பல தசாப்தங்களாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடுங்கோன்மையின் கீழ் இன்னல்பட்டுள்ளார்கள்.  புதிய இலங்கையில் தமது வாழ்வை மீள ஆரம்பிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை. அவர்கள், அவ்வாறு செய்வதற்கு அவர்களை அனுமதிக்க வேண்டுமென்று நாம் தூண்டுகின்றோம்.

ஊக்கமும் ஆக்கமும் உள்ளதும் சுதந்திரமானதுமான ஊடகம், ஜனநாயகத்தின் அத்தியாவசியமான அம்சங்களுள் ஒன்றாகும். மாறுபட்ட கருத்துக்கள் செவிமடுக்கப்பட வேண்டும். சகித்துக் கொள்ளப்பட வேண்டும். ஊடகங்களை அடக்குபவர்கள் அல்லது அச்சுறுத்துபவர்கள் முழு நாட்டிற்கும் கேடு விளைவிப்போராவர். நீண்ட வரலாற்றுடன் கூடிய நமது தொடர்பு, வளர்வதற்கும் விரிவடைவதற்கும் உள்ளார்ந்த பெரும் சாத்தியப்பாடு உண்டு. இதை யதார்த்தமாக்குவதற்காக எனது பதவிக்காலத்தில் மக்களோடும் அரசாங்கத்தோடும் சேர்ந்து உழைப்பதற்கும் நான் காத்திருக்கின்றேன்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்

10 ஆண்டு கடந்தவர்களை விடுவிக்க வேண்டும்: மணியரசன் கோரிக்கை

தமிழக சிறைகளில் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகளைக் கழித்துவிட்ட அனைவரையும் விடுதலை செய்வதே அறவழிப்பட்ட, நேர்மையான பொது மன்னிப்பாகும் என்று தமிழ்த் தேச பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலர் பெ. மணியரசன் கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 18 ஆண்டுகளாக வேலூர் சிறையில் இருந்துவரும் ராபர்ட் பயஸ், ஜெயக் குமார்,  இரவிச்சந்திரன்,  நளினி ஆகியோர் உட்பட தமிழக சிறைகளில் 14 ஆண்டுகளைக் (ஆயுள் தண்டனையைக்) கழித்த பலர் இன்னும் சிறையில் இருப்பதை கண்டித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள மணியரசன், இவர்களை விடுவிப்பது தொடர்பாக தகுதி ஆய்வு மன்றம் அமைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டே உத்தரவிட்ட பின்னரும் அதனை செயல்படுத்தாமல் காலம் தாழ்த்திவரும் தமிழக அரசைக் கண்டித்துள்ளார்.

தங்களை விடுவிக்க தகுதி ஆய்வு மன்றம் அமைக்குமாறு கோரி வேலூர் சிறையில் உள்ள ஆயுள் கைதிகளில் ஒருவரான இராபர்ட் பயஸ் காலவரம்பற்ற பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் அளித்த உறுதிமொழிக்கேற்ப, 10 ஆண்டுகளைக் கடந்த சிறைக் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யாமல், கோவை குண்டு வெடிப்பில் தண்டனையளிக்கப்பட்ட 10 பேரை மட்டும் தமிழக அரசு விடுவித்துள்ளது ஏமாற்று வேலை என்று சாடியுள்ள பெ.மணியரசன், சிறப்பு நாட்களுக்காகப் பொது மன்னிப்பு வழங்கும்போது, எத்தகைய குற்றச்சாட்டுகளின் கீழ் தண்டனை பெற்றிருந்தாலும் அவர்களிடையே வேறுபாடு காட்டாமல் பத்தாண்டுகள் தண்டனைக் கழித்த அனைவரையும் விடுதலை செய்வதே ஞாயம் என்று கூறியுள்ளார்.

“இராஜீவ்காந்தி கொலை வழக்கில் வாழ்நாள் சிறைத் தண்டனை பெற்ற இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் 18 ஆண்டுகளாகச் சிறையில் உள்ளனர். கடந்த ஆண்டு விடுதலை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்குத் தொடுத்தார். அப்போது, புதிதாகத் தகுதி ஆய்வு மன்றம் அமைத்து அவரது விடுதலை குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி ஆணையிட்டார். ஆனால் இதுவரை தமிழக அரசு அம்மன்றத்தை அமைக்கவில்லை.

இப்பொழுது அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் கழித்த சிறையாளிகளை விடுதலை செய்யப் போவதாகத் தமிழக முதல்வர் அறிவித்து, தமிழகம் முழுவதற்கும் பத்துப் பேரை மட்டுமே விடுவித்தார். இது ஒரு கண்துடைப்பு நாடகமாகவே முடிந்தது.  பத்தாண்டுகள் சிறையில் கழித்த அனைத்துச் சிறையாளிகளையும் விடுதலை செய்வதே அறவழிப்பட்ட, நேர்மையான பொது மன்னிப்பாகும். அவ்வாறு செய்யாமல் சுமை தாங்காமல் திணறும் ஒட்டகத்தின் முதுகிலிருந்து ஒரு துரும்பை எடுத்துக் கீழே போட்டு ஒட்டகத்தை ஏமாற்றுவது போல் பத்துப் பேரை மட்டும் விடுதலை செய்த நிகழ்வு அமைந்துள்ளது.

சிறப்பு நாட்களல்லாத போதும், வழக்கமாக 14 ஆண்டுகள் தண்டனை கழித்த அனைவர்க்கும் விடுதலை குறித்து முடிவு செய்ய ஆய்வுமன்றம் நிறுவுவதே மனித உரிமையை மதிக்கும் செயலாகும். ராபர்ட் பயாஸ் தொடங்கியுள்ள காலம் வரம்பற்ற உண்ணாப் போராட்டம் அவர்களுக்கு மட்டுமின்றித் தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் 14 ஆண்டுகள் தண்டனை கழித்த அனைவர்க்கும் நீதி கோரும் போராட்டமாகும். எனவே மனித உரிமை அமைப்புகளும், ஆர்வலர்களும், மனித உரிமையில் அக்கறை உள்ள கட்சிகளும் இப்போராட்டக் கோரிக்கையை ஆதரித்துத் தமிழக முதல்வர் கவனத்தை இதன்பால் ஈர்க்க வேண்டும்.

தமிழகச் சிறைகளில் 14 ஆண்டுகள் கழித்த அனைத்துச் சிறையாளிகளையும், குற்றப்பிரிவு விதிவிலக்கு எதுவுமின்றி, விடுதலை செய்ய வேண்டும் என்றும், குறைந்த அளவாக அவர்கள் விடுதலை குறித்து ஆய்வு செய்ய உடனடியாக மன்றம் அமைக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழக முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று அந்த அறிக்கையில் மணியரசன் கூறியுள்ளார்.