கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

புலிகளிடம் பணம் வாங்கினேனா?- பாரதிராஜா ஆவேசம்

bharathiraja.jpgவிடு தலைப் புலிகளிடம் நாங்கள் பணம் வாங்கியதாக எந்த அரசியல்வாதியாவது நிரூபிக்க முடியுமா என சவால் விட்டுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. பாரதிராஜா தலைமையில் ராமேஸ்வரத்தில் இலங்கைத் தமிழர் ஆதரவுப் போராட்டம் தொடங்கிய பிறகு தமிழகத்தில் உணர்ச்சிமயமான பல காட்சிகள் அரங்கேறின. அதுவரை மௌனம் காத்தவர்கள் கூட பாரதிராஜாவுக்குப் பிறகுதான் வெளிப்படையாக இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகப் பேசத் தொடங்கினர்.

ஆனால் இங்குள்ள சில அரசியல்வாதிகள், பாரதிராஜாவும் மற்றவர்களும் புலிகளிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் இப்படி ஆதரவாகப் போராட்டங்கள் நடத்தி வருவதாகக் குற்றம்சாட்டினர். இதனால் கொதித்துப் போன பாரதிராஜா, நான் பணம் வாங்கியதாக எந்த அரசியல் தலைவராவது நிரூபிக்க முடி்யுமா? இதை நான் ஒரு சவாலாகவே விடுகிறேன். முடிந்தால் நிரூபித்துக் காட்டுங்கள் பார்க்கலாம் என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.

தேவையற்ற விதத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பாக். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி நீக்கம்

tajmahal-hotel27112008.jpgபாகிஸ் தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெஹ்மூட் அலி துர்ரானி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மும்பாய் தாக்குதலையடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் பதற்றம் உருவாகியுள்ள நிலையில் இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரலான துர்ரானியை பிரதமர் யூசுப் ராசா ஹிலானி பதவி நீக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான கருத்துகளைத் தெரிவிக்கும் பொழுது உயர்மட்ட அரசியல் தலைவர்களுடன் கலந்தாலோசிக்காமல் கருத்து வெளியிட்டமைக்காகவே மெஹ்மூட் அலியைப் பணி நீக்கம் செய்துள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

மும்பைத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட அஜ்மல் பாகிஸ்தானைச் சேர்ந்தவரென இந்தியா தொடர்ந்தும் குற்றம் சாட்டி வருவதுடன் அதற்கான ஆதாரங்களையும் பாகிஸ்தானிடம் இந்தியா கையளித்துள்ளது.

ஆனால், இந்தியாவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள பாகிஸ்தான், அஜ்மல் பாகிஸ்தானைச் சேர்ந்தவரல்லவெனவும் தெரிவித்து வருகின்றது.  இந்நிலையில், மும்பைத் தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் பாகிஸ்தானைச் சேர்ந்தவரென பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மெஹ்மூட் அலி துர்ரானி தெரிவித்த சில மணித்தியாலங்களின் பின்னர் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, அஜ்மல் பாகிஸ்தானைச் சேர்ந்தவரென்று பாகிஸ்தானின் தகவல் அமைச்சர் செர்றி ரகுமானும் அறிவித்துள்ளார்.  இவ்விடயம் தொடர்பாக பாகிஸ்தானின் பாதுகாப்பு ஆலோசகர் மெஹ்மூட் அலி துர்ரானி தெரிவிக்கையில்;

மும்பைத் தாக்குலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அஜ்மல் பற்றி பாகிஸ்தானின் சட்ட அமுலாக்க அதிகாரிகள் நடத்திய ஆரம்ப கட்ட விசாரணையில் அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் தான் என்பது தெரிய வந்துள்ளது.

அவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் ஒகரா மாவட்டத்திலுள்ள பரித்கோட் கிராமத்தில் பிறந்தவர். அவரது பெற்றோர் அமீர் கசா இலாகி.

விசாரணை அதிகாரிகளிடம் அஜ்மலின் பெற்றோர் கூறும் போது, தங்கள் மகன் அஜ்மல் 4 வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டுச் சென்று விட்டதாகவும் அதற்குப் பிறகு இடைப்பட்ட காலங்களில் சில தடவைகள் அவர் தங்களுடன் தொடர்பு கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், மும்பைத் தாக்குதலின் போது ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் மூலம் அவரைத் தங்கள் மகன்தான் என்று அடையாளம் கண்டுகொண்டதாகவும் அஜ்மலின் பெற்றோர் கூறியிருக்கிறார்கள்.

இந்த விசாரணை அறிக்கையின் நகல்கள் உள்துறை அமைச்சகத்திடமும் பிரதமர் கிலானியிடமும் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. இது பற்றிய முறைப்படியான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஆரம்ப கட்ட விசாரணையில் மும்பையில் தீவிரவாதிகள் தங்களாகவே தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள் எனவும் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்புக்கும் அவர்களுக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை என்றும் தெரியவந்துள்ளதென தெரிவித்தார்.

இதேவேளை, அஜ்மல்கஸாப் பாகிஸ்தானை சேர்ந்தவர் தான் என்பதை பாதுகாப்பு அமைப்புகள் தனக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக துர்ரானி தெரிவித்துள்ளார்.

சென்னை மாநாட்டில் இலங்கைப் பிரச்சினை குறித்து இந்தியப் பிரதமரும் கலைஞரும் மௌனம்

singh.jpgசென் னையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலினால் அப்பாவிப்பொதுமக்கள் கொல்லப்படுவது குறித்து கவலைதெரிவித்தபோதும் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து அவர் எதுவும் பேசாமல் மௌனம் காத்தார்.  இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் கருணாநிதியும் இலங்கை பிரச்சினை பற்றி மௌனம் சாதித்தார்.

நந்தம்பாக்கத்தில் நடைபெறும் வெளிநாட்டுவாழ் இந்தியர் விழாவை முறைப்படி ஆரம்பித்துவைத்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங், காஸா பகுதியில் பாலஸ்தீன அப்பாவிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து கவலை தெரிவித்தார். பாலஸ்தீன பிரச்சினையில் இந்தியா பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பகுதியில் அமைதி திரும்ப வேண்டும் என்றும் அவர் கூறினார். எனினும் இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி எதுவும் அவர் குறிப்பிடவில்லை. அதே போல முன்னதாக உரையாற்றிய தமிழக முதல்வர் கருணாநிதியும் இலங்கை பிரச்சினை பற்றி குறிப்பிடவில்லை.

கிளேமோர் குண்டுத் தாக்குதல் 7 பேர் பலி

morawawa_.jpg
திருகோணமலை மாவட்டத்திலுள்ள மொரவேவா நெலுவ பிரதேசத்தில் கிளேமோர் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இத்தாக்குதலில் மூன்று விமானப்படை அதிகாரிகளும் 4 பொதுமக்களும் பலியாகியுள்ளனர் எனவும் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும்  விமானப்படையின் டிரக் வண்டி ஒன்றை இலக்குவைத்தே இக்கிளேமோர் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பளை வீழ்ந்தது

_army.jpgபுலிகளின் மற்றுமொரு முக்கிய பிரதேசமான பளை பிரதேசத்தை பாதுகாப்பு படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

முகமாலை மற்றும் கிளாலி பிரதேசங்களிலிருந்து முன்னேறி வந்த இராணுவத்தின் 53 வது மற்றும் 55 வது படைப்பிரிவினர் பளை பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இராணுவத்தின் 53 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் கமல் குணவர்தன தலைமையிலான படையினரும், 55 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா தலைமையிலான படையினருமே பளை நகரையும் அதன் சுற்றுப்புறத்தையும் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முகமாலைக்கும் ஆனையிறவுக்கும் மத்தியில் அமைந்துள்ள பளை பிரதேசம் ஒரு பாரிய நகரமாகும். முகமாலை மற்றும் கிளாலி பகுதிகளிலுள்ள புலிகளுக்கான பிரதான விநியோக பாதையாகவும், புலிகளின் ஆட்டிலறி தளமாகவும் பளை விளங்கியதாக தெரிவித்த பிரிகேடியர், தற்பொழுது அந்தப் பிரதேசம் கைப்பற்றப்பட்டுள்ளதன் மூலம் படையினருக்கு இருந்த அச்சுறுத்தல் நீங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

படையினரின் கடுமையான தாக்குதல்களை அடுத்து புலிகள் தொடர்ந்தும் பின்வாங்கி வருவதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பளையிலிருந்து ஆனையிறவை நோக்கிய படை முன்னகர்வுக்கு 14 கிலோ மீற்றர் தூரமே எஞ்சியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலிருந்து 280 வது கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பளை, முகமாலைக்கும், ஆனையிறவுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு முக்கிய பிரதேசமாகும். தென்னை செய்கைக்கு பெயர்போன பிரதேசமாகவும் இது விளங்கியுள்ளது. ஏ-9 யாழ். – கண்டி பிரதான வீதிக்கு அண்மித்த பகுதியிலுள்ள பளை பிரதேசத்தில் ஆனையிறவுக்கும் கொடிகாமத்திற்கும் இடையிலான ரயில் நிலையம் ஏற்கனவே இருந்தது. பளை பிரதேசத்தில் தமது நிலைகளை பலப்படுத்தி வரும் பாதுகாப்பு படையினர் சோரண்பற்று பிரதேசத்தை நோக்கி முன்னேறி வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.

இதேவேளை, யாழ். – கண்டி ஏ-9 பிரதான வீதி எந்தவேளையிலும் படையினரின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் வரும் நிலையில் உள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். யாழ். – கண்டி ஏ-9 பிரதான வீதியின் ஒவ்வொரு பகுதிகள் மாத்திரம் இதுவரை காலமும் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்தது. முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வரவுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
 

‘காஸா தாக்குதல்’ பதவியேற்கமுன் ஒபாமா இஸ்ரேலுக்கு அளித்துள்ள பரிசு. – சவாஹிரி

israeli-aircraft.jpgஅமெ ரிக்காவின் புதிய ஜனாதிபதி பராக் ஒபாமா இஸ்ரேலின் நண்பரென்றும் காஸா மீதான தாக்குதலை நிறுத்த முயற்சிக்கமாட்டாரெனவும் அல்-கைதாவின் இரண்டாம் மட்டத்தலைவர் அய்மன் அல்ஸவாஹிரி தெரிவித்துள்ளார். இவரின் உரையடங்கிய ஒலிநாடா அல் கைதாவின் இணையத்தளத்தில் வெளியானது. காஸா மீதான தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் அல்-கைதாவால் வெளியிடப்பட்ட முதல் ஒலி நாடா இதுவாகும்.

அல்-கைதாவின் இரண்டாம் மட்டத் தலைவர் அய்மன் ஸவாஹிரி இதில் அமெரிக்கா இஸ்ரேல் மற்றும் எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் ஆகியோரைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த ஒலி நாடாவில் தெரிவிக்கப்பட்டதாவது :- பராக் ஒபாமா அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகளை மாற்றுவார். முஸ்லிம்களுக்கு சாதகமாக நடந்துகொள்வார் என்ற எதிர்பார்ப்பெல்லாம் போலியானது. ஒபாமா எப்போதும் இஸ்ரேலின் நண்பர். காஸா தாக்குதல் அவர் இஸ்ரேலுக்குக் வழங்கியுள்ள பரிசு.

காஸா மக்களையும், குழந்தைகளையும் இஸ்ரேலின் தாக்குதலிலிருந்து காப்பாற்ற அவர் முன்வரமாட்டார். இஹ்வால் முஸ்லிம்களை அடக்கியாள நினைக்கும் எகிப்திய ஜனாதிபதி முஸ்லிம்களின் ஒட்டு மொத்த துரோகி இஸ்ரேலின் கொலைகளுக்கான விளைவுகளை டெல்அவிவ் விரைவில் எதிர்கொள்ளுமெனவும் அவ்வுரை யிலே ஸவாஹிரி கூறியுள்ளார். அரபு ஆட்சியாளர்களையும் அல்-கைதா சாடியுள்ளது. பலஸ்தீனச் சிறுவர்கள், குழந்தைகள் முதியோர்கள் கொல்லப்படுவதானது உலகெங்குமுள்ள யூதர்களைக் கொலை செய்யப்படவுள்ளதை நியாயப்படுத்தியுள்ளதாக காஸாவை ஆளும் ஹமாஸ் தெரிவித்துள்ளதும் தெரிந்தது.

பளையை நோக்கி படையினர் தொடர்ந்தும் முன்னேற்றம் -தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம்

army.jpgமுகமாலையில் புலிகளின் முன்னரங்கு பாதுகாப்பு நிலைகளைக் கைப்பற்றியுள்ள படையினர் தொடர்ந்தும் தெற்குநோக்கி கடும் தாக்குதல்களைத் தொடுத்தவாறு முன்னேறி வருவதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. முகமாலையில் 600 மீற்றர் தூரத்தைக் கைப்பற்றிய படையினர் பளையை நோக்கி தொடர்ந்தும் முன்னேறி வருகின்றனர்.

யாழ் – கண்டி ஏ – 9 வீதியில் தெற்கு நோக்கி முன்னேறும் படையினர் இந்த வீதியை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு இன்னமும் 20 கிலோமீற்றர் தூர பிரதேசத்தைக் கைப்பற்ற வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா ஓமந்தையிலிருந்து கிளி நொச்சி ஆனையிறவு தெற்குப் பிரதேசம் வரை ஏ-9 வீதி படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

இந்நிலையில் வடமுனையிலிருந்து ஆனையிறவு நோக்கி இராணுவத்தின் 53 ஆம், 58ஆம் படைப்பிரிவினர் முன்னேறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலையும், மாலையும் இடம்பெற்ற மோதல்களில் புலிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் அவர்களின் மூன்று சடலங்களையும் கைப்பற்றியதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார். இதில் இராணுவத்திற்குச் சிறு சேதம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.  

புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவதென்பது வெறும் பகல்கனவாகவே இருக்கும் – இராணுவத் தளபதி கூறுகிறார்

sarath-fonseka.jpg
பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவார்கள் என்பது வெறும் பகல் கனவாகவே இருக்குமென இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி வெற்றி தொடர்பாக தொலைக்காட்சிகளுக்கு ஒரே நேரத்தில் செவ்வாய்க்கிழமை வழங்கிய விஷேட பேட்டியியொன்றிலேயே ஜெனரல் சரத் பொன்சேகா இவ்வாறு கூறியிருக்கிறார்.

அதில் அவர் மேலும் கூறுகையில்; “புலிகளிடமிருந்து கிழக்கு வீழ்ந்த போது தற்காலிக பின்னடைவு என்றார்கள். துணுக்காய், மல்லாவி படையினர் வசமானபோதும் தற்காலிக பின்னடைவு என்றனர். கிளிநொச்சியை படையினர் நெருங்கும் போது, அது “மரணத்தின் முத்தம்’ என வர்ணித்தார்கள். கிளிநொச்சியை பிடிப்பது என்பது ஜனாதிபதியன் பகல் கனவென புலிகள் கூறினர். எனினும், நாம் கிளிநொச்சியையும் பிடித்திருக்கிறோம். எனவே, இவை அனைத்தையும் தற்காலிக பின்னடைவு என்று கூற முடியாது. கட்டுப்பாட்டில் இருந்த நிலப் பிரதேசத்தில் 90 சதவீதமான பகுதிகள் இழக்கப்படுமானால் அதை தற்காலிக பின்னடைவென்றோ அல்லது தந்திரோபாய பின்வாங்கலென்றோ கூற முடியாது. இது 10 அல்லது 20 சதவீதமாக இருந்திருந்தால் தந்திரோபாய பின்வாங்லென கூற முடியும்.

பிரபாகரன் மீண்டும் எழுச்சி பெறுவாரென்பது சிலரது கனவாக இருக்கிறது. அது தான் பகல் கனவாக இருக்குமென நான் நம்புகிறேன். இதேநேரம், கடந்த இரண்டரை வருட கால யுத்தத்தில் 15 ஆயிரம் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் கிழக்கில் 2 ஆயிரம் புலிகளும் யாழ்.குடாநாட்டில் யுத்தத்தில் 1,500 புலிகளும் வடக்கில் ஏனைய 11 ஆயிரத்து 500 புலிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த காலப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் படையினர் உயிரிழந்திருக்கின்றனர். பெரியதொரு கெரிலா இயக்கத்துடன் யுத்தம் புரியும்போது உயிரிழப்புகளும் காயங்களும் இன்றி யுத்தம் செய்ய முடியாது. யுத்தத்தின்போது கெரில்லா ஒருவரைக் கொல்ல படையினரில் 10 பேர் உயிரிழக்க வேண்டி வரும் என்பதே உலகில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்றாகும். எனினும், எமது நடவடிக்கைகளை பொறுத்தவரையில் 5 கெரில்லாக்கள் சாகும்போது படையில் ஒருவரே உயிரிழக்கிறார் என்பது எமக்கு வெற்றியாகும் என்று கூறினார்.

தீவிரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான்: பிரதமர் மன்மோகன் சிங்

singh.jpgமும்பையில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகளின் தொடர்பு நிச்சயம் உள்ளது. அவர்களின் உதவி இல்லாமல் தீவிரவாதிகளால் இந்த செயலை செய்திருக்க முடியாது. தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

டெல்லியில் (06) உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான மாநில முதலமைச்சர்கள் மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார். இதில் பிரதமர் பேசுகையில், சில பாகிஸ்தான் அமைப்புகள், அதிகாரிகளின் உதவி இல்லாமல் மும்பைத் தாக்குதல் நடந்திருக்க முடியாது. மும்பைத் தாக்குதல் நடந்த விதம், அதில் ஈடுபட்டோர் செயல்பட்ட விதம் ஆகியவற்றைப் பார்க்கும்போது, நிச்சயம் சில பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு அதில் தொடர்பு இருப்பது நிரூபணமாகிகிறது.

தீவிரவாதத்தை ஒரு கொள்கையாகவே பாகிஸ்தான் வைத்துள்ளது. தீவிரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளது பாகிஸ்தான். அதேபோல வடகிழக்கில் ஊடுறுவும் தீவிரவாதிகள் நமக்கு அருகாமையில் உள்ள இன்னொரு நாட்டிலிருந்துதான் (வங்கதேசம்) வருகின்றனர். அந்த நாடு, தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து புகலிடமாக திகழ்கிறது.

நமது அண்டை நாடுகளில் தீவிரவாதத்திற்கு ஆதரவான நிலை நிலவுகிறது. சில நாடுகளில் நிலைமை சரியில்லை. தீவிரவாதிகளை அவர்கள் கட்டுப்படுத்துவதில்லை. மும்பை போன்ற தீவிரவாத செயல்களை தடுப்பதற்கு நிரந்தரமான நெருக்கடி நிலை நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. நமது புலனாய்வு அமைப்புகளுக்கிடையே தகவல் பரிமாற்றம் அவசியமானது, முக்கியமானதாகும் என்றார் மன்மோகன் சிங்.

புலிகளுக்கு தடை – பேச்சுகளுக்கான கதவை ஒருபோதும் மூடவில்லை -அரசாங்கம் அறிவிப்பு.

pre-con.jpgவிடுதலைப் புலிகள் இயக்கம் (எல்.ரி.ரி.ஈ.) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்றிரவு (07) முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (07) இது தொடர்பில் சமர்ப்பித்துள்ள அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை ஏகமனதான அங்கீகாரத்தை வழங்கியதையடுத்து உடனடியாக அவ்வியக்கம் தடை செய்யப்பட்டதாக அரசாங்கம் நேற்றிரவு அறிவித்தது.

இத்தடை அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டுப் புலிகள் இயக்கம் பேச்சுக்கு வரமுடியுமென அறிவித்துள்ள அரசாங்கம் மீதான இத்தடை அரசியல் ரீதியான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு எவ்விதத்திலும் தடையாக அமையாதெனவும் தெரிவித்தது. அமைச்சரவையின் மேற்படி தீர்மானத்தை ஊடகவியலாளர்களுக்கு அறிவிககும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றிரவு தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இம்மாநாட்டில் அமைச்சர்கள் மைத்திரி பாலசிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, ரோஹித போகொல்லாகம, ஏ. எல். எம். அதாவுல்லா, கெஹெலிய ரம்புக்வெல்ல, மஹிந்த சமரசிங்க ஆகியோர் கலந்து கொண்டு விளக்கம் அளித்தனர். இதன் போது கருத்துத் தெரிவித்த அமைச்சர்கள், விடுதலைப் புலிகளை இலங்கையில் ஒழித்து விடலாம். எனினும் சர்வதேச ரீதியில் அவ்வமைப்பின் சகல செயற்பாடுகளையும் முழுமையாகக் கட்டுப்படுத்த இத்தடை உறுதுணையாக அமையுமென தெரிவித்தனர்.

உலக நாடுகள் பயங்கரவாதத்துக்கெதிராக மும்முரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுடன் 24 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐரோப்பிய யூனியனும் புலிகளைத் தடை செய்துள்ளது. பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்நாடுகளோடு இணைத்து செயற்படவும் இந்தடை பெரும் வாய்ப்பாக அமையும் எனவும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 40வது அத்தியாயத்தின் 2009/1 ஆம் இலக்க சரத்துக் கிணங்கவே புலிகள் மீதான இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

maithiri-pala.jpgவிடுதலைப் புலிகளை தடை செய்வதற்கான பிரதான காரணம் குறித்து அமைச்சரவையின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான மைத்திரிபால சிறிசேன  கூறுகையில்;  இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் அப்பாவிப் பொதுமக்களை வரையறுக்கப்பட்டதொரு பிரதேசத்திற்குள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி பலவந்தமாக பிடித்து வைத்துக் கொண்டு அம் மக்களின் உயிர்களையும் சுதந்திரத்தையும் ஆபத்துக்குள்ளாக்க வேண்டாமென்றும் பொதுமக்களுக்கு வழங்கும் அவசர நிவாரணங்களுக்கும் மனிதாபிமான உதவிகளுக்கும் தடங்கல்களை விளைவிக்க வேண்டாமென்றும் இலங்கை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் விடுதலைப் புலிகளிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருந்தன.

விடுதலைப் புலிகளால் சட்ட விரோதமாக நிர்வகிக்கப்படும் பிரதேசத்தினுள் சிறை பிடித்தோ அல்லது ஏதாவது இடத்திற்குள் மட்டுப்படுத்தியோ வைத்திருக்கும் பொது மக்களை, அப்பிரதேசத்திலிருந்து பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிலிருக்கும் பிரதேசங்களுக்கு செல்ல இடமளிக்குமாறும் இலங்கை அரசாங்கத்தினால் புலிகளிடம் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதும் அவர்கள் அதனை அலட்சியம் செய்துள்ளனர்.

அத்துடன், விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட சாதாரண மக்களை சட்ட விரோதமாக சட்ட விரோதமான முறையில் அந்த அமைப்பின் போராளிகளாக பலவந்தமாக இணைத்துக் கொண்டதன் மூலம் அம் மக்களின் உயிர்களுக்கும் சுதந்திரத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளனர். இவற்றின் அடிப்படையிலேயே இந்த தடை குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் இன்று (நேற்று) முதல் புலிகள் தடை செய்யப்பட்டதாக பிரகடனப்படுத்தப்படுகிறது’ என்றும் அமைச்சர் சிறிசேன சுட்டிக்காட்டினார்.

anura-priyatharsana.jpgஇதேநேரம், இங்கு விளக்கமளித்த ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான அநுரபிரியதர்சன யாப்பா தெரிவிக்கையில்; “இந்த ஒழுங்கு விதியானது 2009 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க அவசர கால (தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்யும்) ஒழுங்கு விதியென அடையாளம் காட்டப்படும். இதன் மூலம் “தமிழீழ விடுதலைப் புலிகள்’ என்ற பெயரும் அதனைப் பெயராகக் கொண்டிருக்கும் அமைப்பும் தடைசெய்யப்படுகிறது. எனவே, இலங்கையிலோ அல்லது அதற்கு வெளியிலோ எவராவது ஒருவர் விடுதலைப் புலிகளுக்காகவோ அல்லது அந்த அமைப்புக்காக செயற்படும் நிறுவனத்திலோ உறுப்பினர் அல்லது சிப்பாயாவது அல்லது தலைமைத்துவம் வழங்குவது, சீருடை, அடையாளம், இலட்சினை, கொடி போன்றவற்றை அணிதல், காட்சிப்படுத்தல், உயர்த்துதல் அல்லது தன்வசம் வைத்திருத்தல்; கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்வது, கூட்டம் கூட்டுவது அல்லது அதில் கலந்துகொள்வது; அங்கத்துவம் பெறுவது அல்லது இணைவது; உறுப்பினருக்கோ, சிப்பாய்க்கோ அல்லது வேறு நெருங்கியவருக்கோ புகலிடம் வழங்குதல், அவரை பாதுகாத்து வைத்திருத்தல், அவருக்கு உதவியளித்தல்; ஊக்குவித்தல், மேம்படுத்தல், உதவியளித்தல், ஆலோசனை வழங்குதல் மற்றும் அதற்காக செயற்படுதல் போன்ற ஏதாவதொரு செயற்பாட்டையோ அல்லது நிகழ்வை ஏற்பாடு செய்தல் அல்லது அதில் கலந்து கொள்ளல்; பணம் அல்லது பொருள் அன்பளிப்பு செய்தல் அல்லது அதற்கு பங்களிப்பு செய்தல்; பொருட்களை விநியோகித்தல், களஞ்சியப்படுத்தல், போக்குவரத்தில் ஈடுபடுத்தல் அல்லது பகிர்ந்தளித்தல்; ஆதாரத்துக்கோ அல்லது பிரதிநிதித்துவத்துக்கோ உதவியளித்தல் போன்ற ஏதாவதொரு கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுதல்; அதற்காக தகவல்களை பிரசாரப்படுத்தக்கூடாது.

இந்த விதிகளை மீறி செயற்படுவோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் கொழும்பில் செயற்படும் மேல் மாகாண மேல் நீதி மன்றத்தினால் குற்றவாளியாக அடையாளம் காணப்படும் பட்சத்தில் 20 வருடங்களுக்கும் மேற்படாத சிறைத் தண்டனை வழங்கப்படும்’ என்று கூறினார். இதேநேரம், இந்த விதிகளுக்கு அமைய தவறிழைத்தல், தவறிழைக்க முயற்சித்தல், அதற்கான உதவி உபகாரங்களை வழங்குதல் அல்லது அதற்கான சூழ்ச்சியில் ஈடுபடுவோர் குற்றவாளியாக அடையாளம் காணப்படும் பட்சத்தில் அவர்களுக்கு 10 வருடங்களுக்கும் மேற்படாத சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எவராவது ஒருவர் இந்த விதிகளின் கீழ் ஏதேனும் தவறிழைக்கும் பட்சத்தில் அதன்போது தவறை இழைக்க நேரடியாக பொறுப்பு கூற வேண்டியவருக்கு அப்பால் சம்பந்தப்பட்ட நடவடிக்கையுடன் தொடர்புடைய அனைவரும் குறித்த தவறுக்கான குற்றவாளிகளாகவே கருதப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. அது மட்டுமல்லாது தடை செய்யப்பட்ட அமைப்பின் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் அல்லது பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கும் ஏதாவது நிதியோ, வைப்போ அல்லது கிடைக்க வேண்டிய கடனோ எவரது பொறுப்பிலும் இருக்கும் பட்சத்தில் அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் அமைச்சரின் எழுத்துமூல நியமத்தினூடாக அவரது பொறுப்பிலுள்ள மற்றும் நியமத்தின் பின்னர் பொறுப்பின் கீழ் வரவிருக்கும் நிதியோ, வைப்போ அல்லது கிடைக்க வேண்டிய கடனோ மற்றும் அந்த அமைப்பிற்குரிய வேறு ஏதேனும் அசையும் மற்றும் அசையா சொத்துகளும் அரச உடமையாக்கப்பட வேண்டும் என்றும் இந்த விதிகள் மூலம் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

இதேநேரம், சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளிக்கையில்; புலிகள் சமாதான பேச்சுகளுக்கு வருவதற்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன. ஆயுதங்களை கீழே வைத்து விட்டு வருமாறு ஜனாதிபதி புலிகளுக்கு பல தடவைகள் அழைப்பு விடுத்தார். எனினும், அவர்கள் அதைப் புறக்கணித்து செயற்பட்டமையாலேயே இந்தத் தீர்மானத்தை எடுக்க வேண்டி நேர்ந்தது. புலிகளுக்கு வாய்ப்புகள் பல வழங்கியும் அவர்கள் அதற்கு செவிமடுக்காததாலேயே வேறு மாற்று வழியின்றி அரசாங்கம் இந்த கடுமையான நடவடிக்கைக்குள் சென்றது.

மனிதாபிமான உதவிகளுக்கு பாதிப்பில்லை

இதேநேரம், அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்தினால் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. அவசர வைத்திய சிகிச்சை வசதிகள், அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட மனிதாபிமான உதவி நடவடிக்கைகளுக்கு எந்தப் பாதிப்பும் இதனால் ஏற்படாது.

பேச்சுகளுக்கான கதவை அரசாங்கம் ஒருபோதும் மூடவில்லை

எவ்வாறிருப்பினும் பேச்சுகளுக்கான கதவை அரசாங்கம் ஒருபோதும் மூடவில்லை. பேச்சுகளுக்கு புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு வர வேண்டும். ஜனாதிபதியும் ஏற்கனவே பேச்சுகள் பற்றிய நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார். எனவே, இப்போதும் எந்த தாமதமும் இல்லை. புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு பேச்சுகளுக்கு வரலாம்’ என்று கூறினார்.

0301-ltte.jpgவிடுதலைப் புலிகள் 1998 ஆம் ஆண்டு கண்டி தலதா மாளிகை மீது மேற்கொண்ட வாகனக் குண்டுத் தாக்குதலையடுத்து இலங்கை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டதுடன், 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆட்சிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் பின்னர் 2002 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 6 வருடங்களின் பின்னர் மீண்டும் விடுதலைப் புலிகளை இலங்கை அரசாங்கம் நேற்று நள்ளிரவு முதல் தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.