கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக பராக் ஒபாமா இன்று பதவியேற்பு

obama-2001.jpg
அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக பராக் ஒபாமா இன்று பதவியேற்கின்றார். தலைநகர் வாஷிங்டனில் இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி பராக் ஒபாமா என்பதால் என்றுமில்லாதளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் ஏராளமான கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்படவுள்ளன.

கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளையொட்டி வைபவத்தில் கலந்துகொள்வோர் அனைவரையும் இரண்டரை மணி நேரத்திற்கு முன்னரே வந்து சேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அனைவரதும் ஆடைகள், உடல்கள் சோதனை செய்யப்படவுள்ளன. வெளிநாட்டு தூதுவர்கள், அரச, மதப் பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தூதுவர்களுக்கான அழைப்பை பதவி விலகிச் செல்லும் வெளிநாட்டமைச்சர் கொண்டலிசா ரைஸ் எழுத்து மூலம் அனுப்பி வைத்திருந்தார். எனினும் ஈரான், வெனிசூலா, வடகொரியா, பொலிவியா போன்ற நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால் தான் பதவியேற்ற பின்னர் மத்திய கிழக்குப் பிரச்சினைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதுடன் பகைமை நாடுகளுடன் உறவுகளை வளர்ப்பதில் அக்கறை செலுத்தப்போவதாக முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதவியேற்பு வைபவங்களில் பங்கேற்கும் பொருட்டு விசேட ஆடைகள் ஒபாமாவுக்கு தயார் செய்யப்பட்டுள்ளன. இன்றைய தினம் இவ்வைபவத்தைப் பார்வையிட பெருந்தொகையானோர் நேரில் வருவர். மற்றும் தொலைக் காட்சிகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன. உலகெங்கிலுமிருந்து ஏராளமான ஊடகவியலாளர்கள் வாஷிங்டனுக்கு வந்துள்ளனர். வெள்ளை மாளிகையில் குடியேறும் பொருட்டு பராக் ஒபாமா கடந்த வாரம் வாஷிங்டன் வந்தார்.  இவரது புதல்விகள் இருவரது கற்றல் நடவடிக்கைகள் வாஷிங்டனில் தொடரவுள்ளன.

அமெரிக்கவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி பராக் ஒபாமா பதவியேற்ற பின்னர் உலக அரசியல் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுமென பெருமளவிலானோர் எதிர் பார்க்கின்றனர்.  இவ் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பராக் ஒபாமா இன்று பதவியேற்கின்றார். ஜனாதிபதி புஷ் பதவி விலகிச் செல்கின்றார்.

இலங்கை பிரச்சினைக்கு தீர்வுகாண இருதரப்பும் பேசவேண்டும் – இல.கணேசன் கூறுகிறார்

eela-ganash.jpgஇலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றும் அதன் முடிவுகள் அமுல்படுத்தப்படுவதை இந்திய அரசு கண்காணிக்க வேண்டுமென்றும் தமிழக பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.  இது குறித்து அவர் கோவையில் (18) செய்தியாளர்களிடம் கூறியதாவது;

இலங்கையில் இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். எனவே, இதனை அந்நாட்டின் உள்நாட்டு பிரச்சினையாகக் கருதாமல் இந்திய அரசு இதில் நேரடியாகத் தலையிட வேண்டும். இந்தச் சண்டையின் மூலம் பிரபாகரனைப் பிடிக்க முடியாது. ஆகையால், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வுகாண முயல வேண்டும். ராஜீவ்காந்தி ஜெயவர்தன ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்த இலங்கை அரசு முன்வர வேண்டும். தற்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசு இலங்கைப் பிரச்சினையில் போதிய அக்கறை காட்டவில்லை. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் 6 மாதங்களுக்குள் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

சிதைவடைந்த நிலையில் புலிகளின் விமானப் பாகங்கள் கண்டுபிடிப்பு

1801.jpgசிதைவடைந்த நிலையிலுள்ள புலிகளின் விமானம் ஒன்றை இரணைமடுவுக்கு வடக்குப் பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். முல்லைத்தீவு, காட்டுப் பகுதிக்குள் படை நடவடிக்கைளை மேற்கொண்டுள்ள இராணுவத்தின் 57வது படைப் பிரிவினர் அங்கிருந்து முன்னேறி மேற்கொண்ட தேடுதலின் போதே படையினர் அந்த விமானத்தை கண்டுபிடித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இரணைமடு குளக்கட்டையும் அதனை அண்மித்த பிரதேசங்களையும் கைப்பற்றிய இராணுவத்தினர் இரணைமடு குளத்திற்கு தென் கிழக்கு பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் ஆறாவது விமான ஓடுபாதை ஒன்றை கடந்த வெள்ளிக்கிழமை படையினர் கைப்பற்றினர். அந்தப் பிரதேசத்தில் முன்னேறி தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதே சிதைந்த விமானம் ஒன்றை படையினர் கண்டு பிடித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகள் இந்த விமானத்தை தமது பயிற்சி நடவடிக்கைகளுக்கு பாவித்திருக்கலாம் என படையினர் சந்தேகிப்பதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர், இந்த விமானம் தொடர்பாக விரிவாக ஆராயும் பொருட்டு விமானப் படையின் நிபுணத்துவம் பெற்ற விசேட குழுவொன்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

விமானப் படையினரின் பூரண ஆராய்ச்சிக்குப் பின்னரே மேலதிக தகவல்களை வெளியிட முடியும் என்றும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம்,  கண்டுபிடிக்கப்பட்ட பழுதடைந்த விமான உறுதிப்பாகங்கள் இலங்கை இராணுவத்தின் விமான உறுதிப்பாகங்களாக இருக்கலாம் என்றும் சில இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபாகரன் பதுங்கு குழியை கைப்பற்றியது ராணுவம்

ltte-bangar.jpgமுல்லைத் தீவை கைப்பற்ற கடும் போரில் இறங்கியுள்ள இலங்கை ராணுவம், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்ததாகக் கருதப்படும் சொகுசு பதுங்கு குழிகளில் ஒன்றை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளின் வசமிருந்த பெரும்பாலான பகுதிகளை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியுள்ளது. புலிகள் வசமிருக்கும் எஞ்சியிருக்கும் முல்லைத் தீவைக் கைப்பற்ற தற்போது கடும் போரில் அது இறங்கியுள்ளது.

இதற்காக, இதுவரையில்லாத அளவில் பெருமளவு ராணுவத்தைக் குவித்து, இறுதிக் கட்டத் தாக்குதலை இலங்கை ராணுவம் மேற்கொண்டுள்ளது. மேலும், படிப்படியாக முல்லைத் தீவை நோக்கி அது முன்னேறி வருகிறது. இந்நிலையில், முல்லைத் தீவில் உள்ள தர்மாபுரம் வனப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகளை இலங்கை ராணுவம் கைப்பற்றியிருப்பதாக,ராணுவம் தெரிவித்துள்ளது. இதில் ஒரு பதுங்கு குழி குளிர்சாதன வசதி செய்யப்பட்டு, நவீன வசதிகள் கொண்டதாக இருந்ததாகவும், குண்டுகளால் பாதிப்பு ஏற்படாதவகையில் அது அமைக்கப்பட்டு இருந்ததாகவும் ராணுவ தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏழை மக்கள் குடியிருக்கும் பகுதியில் குடிசைப் பகுதியில் இந்த பதுங்கு குழி உள்ளது.இதன் நுழைவாயில் ஒரு குடிசை வீடு போல உள்ளது.

நுழைவாயில் அருகே ஒரு கன்டெய்னர் உள்ளது. அந்த கன்டெய்னரில் குளிர்சாதன வசதியும் உள்ளது. பதுங்கு குழியிலிருந்து வெளியே வரும்போது இந்த கன்டெய்னரில்தான் பிரபாகரன் தங்கியிருக்கக்கூடும்.உள்ளே செல்வதற்கு படிக்கட்டுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.அறைகளில் மின்வசதி செய்யப்பட்டுள்ளது என்று ராணுவம் கூறுகிறது.பதுங்கு குழியில் இருந்த பாதுகாப்பு அரண்கள் வலுவானதாகவும், தேக்குகளாலான கதவாலும், உட்புறம் வண்ணம் தீட்டப்பட்டும் இருந்ததாக, செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, இந்த பதுங்கு குழியில் இதற்கு முன் பிரபாகரன் தங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதற்கிடையே முல்லைத் தீவில் நடைபெற்று வரும் கடும் சண்டையில் புலிகள் தரப்பில் ஏராளமான உயிர்ச்சேதம் ஏற்பட்டதாகவும், ஆயுதங்களை ராணுவம் கைப்பற்றி உள்ளதாகவும் வேறு சில செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை தமிழர் பிரச்சனையை திருமாவளவன் காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் பிரச்சனையாக்கிவிட்டார் – கருணாநிதி

karunanithi.jpgஇலங்கை தமிழர் பிரச்சனையை திருமாவளவன் காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் பிரச்சனையாக்கிவிட்டதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். ‘முரசொலி’ யில் அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

50 ஆண்டு கால வேதனை வரலாறு கொண்ட இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழ்நாட்டில் ஒட்டு மொத்தக் கருத்து என்றும், அதே நேரத்தில் தனித்தனி கட்சிகளின் அணுகுமுறை என்றும், பல்வேறு கோணங்களில் மக்களுக்கு திசைகள் அறிவிக்கப்பட்டு, அவர்களைத் திண்டாட்டத்திலும், திகைப்பிலும் தள்ளி விடப்படுகிற செயல்கள் பஞ்சமில்லாமலே நடைபெற்று வருகின்றன.

அனைத்துக் கட்சிகளை ஒருங்கிணைத்து அறவழியில் எத்தனை எழுச்சியைத் தமிழ் மக்கள் வாயிலாக உணர்த்த வேண்டுமோ, அந்த வழிகளில் எல்லாம் உணர்த்தி விட்டு, பிரதமரையே சந்தித்து, வெளியுறவுத் துறை அமைச்சர், இலங்கை சென்று முயற்சி மேற்கொள்வது என்ற திட்டத்துடன் இந்த அறப்போரில் ஒரு அத்தியாயம் முடிவுற்றது.

ஆனால் அந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படாததற்கான காரணங்களை முழுமையாக அறிந்து கொள்ளாத நிலையில், தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகளின் நடவடிக்கைகள் காரணமாக, இது ஏதோ இலங்கைத் தமிழரைப் பாதுகாக்கும் பிரச்சினை என்றில்லாமல், காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் பிரச்சனை என்ற கோணத்தில் திருப்பி விடப்பட்டுள்ளது.

தேர்தல் கூட்டணி, வெற்றி தோல்வி, ஆட்சி மாற்றம் என்பன போன்ற அரசியல் கட்சி தத்துவப் பிரச்சனைகளில் இலங்கைத் தமிழர் பிரச்சனையையும் ஒரு சில தலைவர்கள் இணைத்துக் குழப்புவது, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பிரச்சினையை விட்டு, வெகு தொலைவு போய் விட்டதாகவே தெரிகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை சென்று வருவதற்கு இயலாத காரணம் எதுவும் இருந்தாலும் அதனையும் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கலாம். அல்லது எது தக்க காலம், நேரம் என்பதையாவது எடுத்துரைத்திருக்கலாம். அப்படியெதுவும் நடைபெறாதது, மாநில அரசைப் பொறுத்தவரையில் வேதனையான நிலையாக உணரக் கூடியதுதான்.

இப்போது வெளியுறவுத் துறைச் செயலாளர் இலங்கை சென்று ராஜபக்சேவை சந்தித்துப்பேசி விட்டு வந்துள்ளார். அதன் விபரங்களும் சரியாக வெளிவரவில்லை. ஒருவேளை பிறகு வரக்கூடும். கடந்த காலத்து ஜெயவர்த்தனே-ராஜீவ் ஒப்பந்தம் பரிசீலிக்கப்படலாம் என்பது போன்ற செய்திகள் உள்ளனவே தவிர, அது வரையில் போர் நிறுத்தம் என்று கூட அறிவிக்கப்படவில்லை. போர் சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் என்ற பெயரால் அப்பாவித் தமிழர்கள் அன்றாடம் அங்கே உயிர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஜெயவர்த்தனே-ராஜீவ் காந்தி உடன்பாடு பற்றிப் பேசி முடிக்கிற வரையில் போர் நிறுத்தப்படுகிற முயற்சியை மேற்கொள்வதில் பெரிய தவறு ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை.

அந்த ஒப்பந்தம் பற்றிய கருத்துக்களையும், உடன்பாடு பற்றிய எண்ணங்களையும், ஒப்புதலையும் இலங்கைத் தமிழர்கள் மீது இங்கிருந்து நாம் திணித்திட முனைவதில்லை என்ற நிபந்தனையுடன் அணுகுவதே ஆரோக்யமானது மட்டுமல்ல, அமைதி வழியும், அமைதி நிலையும் இலங்கையில் “மறு பிறவி” எடுப்பதற்கு ஏற்றதுமாகும். இது எப்படி உருவாகும், எப்படித் தீர்வாகும் என்ற வினாக்களுக்கு விடை கிடைப்பதற்கு முன்னர் இப்போது நம்மைப் பொறுத்தவரையில், நமது தமிழ் மாநில அரசைப் பொறுத்த வரையில் இதனை மையமாக வைத்து ஏதேனும் விஷப் பரிசோதனைகளில் இறங்கி இதனை வீழ்த்தி விட்டுத் தாங்கள் ஆட்சிக்கு வந்து விடலாமா என்றும் அவர்களோடு சேர்ந்து நாமும் பலன் பெற முடியுமா என்றும் சில மூளைகள் யோசனையில் ஈடுபட்டிருக்கின்றன.

அம்மையார் ஜெயலலிதாவின் அறிக்கைகளில் இந்த ஆண்டு முடிவதற்குள் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி மலரும் என்றும், சட்டமன்றத்துக்கும் எப்படியாவது தேர்தல் வரவழைக்க வேண்டும் என்பது தான் அவரது விருப்பம் என்றும், விரைவில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வருவதற்கும் அவர் எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருப்பதாக தனது தொண்டர்களுக்கு உறுதி அளிப்பது எதற்காக என்று எல்லோர்க்கும் புரியுமென நம்புகிறேன்.

மாநிலத்தில் இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை நீடித்திட வேண்டிய கழக ஆட்சியை, இது போன்ற பிரச்சினைகளில் வன்முறை அராஜகம் போன்ற கிளர்ச்சிகளை உசுப்பி விட்டு, கலைத்து விடலாம் என்று அவர் கருதுகிறார். அப்படிக் கலைத்தால் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக, நாம் மூன்றாவது முறையாக ஆட்சியை இழக்க நேரிடலாம்.

திட்டமிட்டு, இந்த அம்மையார் நடத்திட முனையும் `அரக்கு மாளிகை சதி’யை நாம் புரிந்து கொண்டு தானிருக்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக நாம் மீண்டும் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஜனவரி 12ம் நாள் என்னிடம் விவரித்து முடிவெடுக்க வேண்டுமென்று என் வீட்டுக்கு வந்த டாக்டர். ராமதாஸ், கி.வீரமணி, தொல். திருமாவளவன் ஆகிய மூவரும், `முதல்வர் எடுக்கிற முடிவை ஏற்று அவ்வாறு திட்டம் வகுப்போம்’ என்று தான் உறுதி அளித்தனர்.

உடனடியாக டெல்லியுடன் பேசுமாறு வேண்டினர். நானும் அன்று திருமங்கலம் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையைக் கூட கவனிக்க நேரமில்லை. அந்த மூவருடனும் அந்தச் சமயத்திலும் ஒரு மணி நேரம் என்கிற அளவுக்கு பேசி, அனுப்பி வைத்தேன்.

ஆனால் என்னைக் கலந்தே எதுவும் நடவடிக்கை என்று சென்றவர்கள், என்னைக் கலந்து பேசாமலே அந்த மூவரில் ஒருவர், நண்பர் தொல்.திருமாவளவன் தன்னிச்சையாக உண்ணாவிரதம் என அறிவிக்கப்பட்ட நிலையில், உண்ணாவிரதப் பந்தலில், சிங்கள அரசை விட இங்குள்ள காங்கிரஸ் கட்சியுடன் தான் தமக்குப் போராட்டம் என்பது போல விரிவுரைகள் ஆற்றிக் கொண்டிருந்தனர்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையின் உயிரோட்டத்தை எப்படி அங்கே போராளிகளுக்குள் நடந்த சகோதர யுத்தம் பலவீனப்படுத்தியதோ, அதைப் போலவே, இலங்கைத் தமிழர்களுக்காக வாதாடிடும் நமக்குள்ளேயும் `சகோதர யுத்தங்கள்’ எல்லாம் மொத்தப் பிரச்சினையை மூளியாக்கி விடுகிற கதை நடப்பதற்குத் தான் காரணமாகி வருகின்றன.

எப்படியோ, மூவர் கூடி முதல்வருடன் பேசினோமே, அடுத்த நாளே, இப்போது உண்ணா நோன்பு அறிவிக்கிறோமே என்று கூட எண்ணாது, அரசு பேருந்துகள் பல எரிக்கப்பட்டனவே இத் துணை அவசரத்துடன், இப்போது நிறுத்திக் கொண்டிருக்கிறோமே என்பதை சற்றுக் கூட சிந்திக்காமல் `இலங்கை தேசியக் கொடி எரிப்பு’ என்று திருமாவளவன் அறிவித்திருப்பது ஏன் என்று நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால் அவருக்குப் புரிகிறதோ இல்லையோ, இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டுமென்று திட்டமிட்டு செயல்படுகிறவர்களுக்கு ஒன்று புரிகிறது.

தமிழ்நாட்டையே ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டத்தை கருணாநிதி நடத்த வேண்டும் என்பதையும், காங்கிரஸ் ஆட்சிக்கு இனி இங்கே இடமே இல்லை என்று சபதம் செய்வதையும், அப்படியொரு ஒட்டு மொத்தமான அராஜகப் புரட்சி மூலமாகவாவது, கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பி விட முடியாதா என்ற கவலை மிகுந்த ஆவலால் தானே தவிர வேறல்ல.

உடன் பிறப்பே கேரளத்து மாவலி மன்னனை வீழ்த்தியோர் கதையை மறந்து விட முடியுமா?

கருணாநிதி வீட்டுக்குப் போகவும் தயார், தமிழர்களின் ஒட்டுமொத்த நல் வாழ்வுக்காக காட்டுக்குப் போகவும் தயார். அது இலை தழை நிறைக் காடாகவும் இருக்கலாம், அல்லால் இடு காடாகவும் இருக்கலாம், எதுவாயினும் ஏற்பதில் எனக்கொரு மகிழ்ச்சியே! அதுவும் என் நாட்டுக்காக-நண்பர்களினால் கிடைத்தால், இரட்டிப்பு மகிழ்ச்சியே!

முதலில் மூவரும் கலந்து யோசிப்போம்-அதில் ஒரு முடிவெடுப்போம் என்பது பின்னர் தனித்தனியே முடிவெடுத்து அறிவித்து அதற்கேற்ப செயல்படுவது, என்னையே இறுதியாகப் பழி கூறத்திட்டமிடுவது நல்ல அரசியல் தந்திரங்களாக இருக்கலாம். அதற்கு நான் ஒருவன் மயங்கி பலிக்கடா ஆகத் தயாராக இருக்கலாம். ஆனால் அறிஞர் அண்ணா அவர்கள் வளர்த்து எம்மிடம் அளித்து விட்டுப் போன இந்த இயக்கத்தை ஆம், ஒரு கோடி உறுப்பினர் கொண்ட இந்த இயக்கத்தை பலியிட முனைவோருக்குத் துணை போக நான் தயாராக இல்லை. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

இலங்கைப் பிரச்னையில் கருணாநிதியுடன் சேர்ந்து திருமாவளவன் நாடகம்: ஜெயலலிதா

jayalalitha-1701.jpgஇலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து தமிழக முதல்வர் கருணாநிதியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலர் திருமாவளவனும் சேர்ந்து நாடகமாடுவதாக அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் தற்போது நிலவும் முக்கியப் பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக முதல்வர் கருணாநிதியும் திருமாவளவனும் சேர்ந்து நடத்திய நாடகம்தான் உண்ணாவிரதப் போராட்டம்.இதனால்,இலங்கையில் போர் நிறுத்தமும் ஏற்படவில்லை இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு எந்தத் தீர்வும் காணப்படவில்லை. தமிழகத்தில் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் ஏற்படுத்தியதும் தமிழகத்தில் உள்ள மக்களை அச்சுறுத்திக் காயப்படுத்தியதும்தான் இந்தப் போராட்டத்தின் பலன்கள்.

நான்கு நாள்களாக பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.உண்ணாவிரதப் போராட்டம் முடிந்த பிறகு, “தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும்” என்று காவல்துறை அறிவித்தது.இதிலிருந்தே இதற்குப் பின்னணியில் திமுக இருப்பது தெளிவாகியுள்ளது.

ஐந்து லட்சம் இலங்கைத் தமிழர்கள் மரணத்தின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும்போது,குடும்பத்துடன் மகிழ்ச்சியாக புத்தாண்டு கொண்டாடினார் முதல்வர் கருணாநிதி.இதுபோன்ற கண்துடைப்பு நாடகங்களைக் கண்டு தமிழக மக்கள் இனியும் ஏமாறக்கூடாது. இவ்வாறு ஜெயலலிதா தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகமே ஸ்தம்பித்துப் போகும் அளவுக்கு 10 நாட்களுக்கு போராட்டம் நடத்தப்படும் – டாக்டர் ராமதாஸ்

இலங் கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகமே ஸ்தம்பித்துப் போகும் அளவுக்கு 10 நாட்களுக்கு போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

நேற்று மாலை பழச்சாறு கொடுத்து திருமாவளவனின் உண்ணாவிரதப் போராட்டத்தை டாக்டர் ராமதாஸ் முடித்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்துக்கொள்ளும்படி, நான் நேற்று இதே மேடையில் கேட்டுக்கொண்டேன். அதற்கு திருமாவளவன், இன்று போய் நாளை வா என்று கூறிவிட்டார். ஆகையால் இன்று வந்து இருக்கிறேன். இன்று வெறுமனே போகமாட்டேன். பழச்சாறு கொடுத்து உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்து வைத்து விட்டுத்தான் செல்வேன்.

இலங்கை பிரச்சினை தொடர்பாக திருமாவளவன் மற்றும் அரசியல் கட்சிகளுடன் பேசி, அடுத்த கட்ட போராட்டம் தொடர்பாக நல்ல முடிவை எடுப்போம். அடுத்த கட்ட போராட்டம் என்பது ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் நடக்க வேண்டும். உலகையே உலுக்க வேண்டும்:

இந்த போராட்டத்தால் தமிழகமே செயலிழக்க வேண்டும். பேருந்து, தொடருந்து எதுவும் ஓடக்கூடாது. மருந்து, பால் விநியோகம் மட்டுமே நடக்க வேண்டும். இந்த போராட்டம் உலகையே உலுக்க வேண்டும். இதை பார்த்துவிட்டு, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்.

இது எனது தனிப்பட்ட முடிவு. திருமாவளவனுக்கு கூட நான் இப்படி ஒரு போராட்டத்தை கூறுவேன் என்பது தெரியாது. இதைவிட வேறு விதமான நல்ல போராட்டத்தை முதலமைச்சர் கூறினால், இதனை விட்டு விட்டு, முதல்வர் கூறும்படி போராட்டம் நடத்தலாம். முதல்வரை முன்நிறுத்தி, அவரது வழிகாட்டுதலின் பேரில் ஒரு நல்ல போராட்ட முடிவை எடுக்க வேண்டும்.

தமிழக முதல்வர், கோட்டை மற்றும் அறிவாலயத்தில் கூட்டம் போடாமல், பொதுவான இடத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் போட்டு, அதில் நாங்கள் முன்மொழிய, மற்ற கட்சிகள் வழி மொழிய செய்தால் சிறப்பாக இருக்கும்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் புலிகளின் பாரிய படகு தயாரிப்பு தொழிற்சாலை படையினர் வசம்

_army.jpgமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்த புலிகளின் பாரிய முகாம் ஒன்றினையும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய படகு உற்பத்தி தொழிற்சாலை ஒன்றினையும் இராணுவத்தினர் நேற்று முன்தினம் கைப்பற்றியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார்.

புதுக்குடியிருப்புக்குக் கிழக்கே படையினருக்கும் புலிகளுக்குமிடையில் கடந்த 42 மணித்தியாலங்களாக இடம்பெற்ற கடும் மோதல்களையடுத்து அப் பகுதியிலிருந்து எட்டு புலிகளின் சடலங்களை படையினர் மீட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.  புலிகளின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய படகுகள் தயாரிக்கும் தொழிற்சாலையினை படையினர் நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் முற்றுகையிட்டனர். இதில் பதினொரு படகுகள் இருந்துள்ளன. இரண்டு டோரா படகுகளும் இரண்டு வோட்டர் ஜெட்களும் ஏழு சிறிய படகுகளுமே இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருப்பதாக ஊடக மத்திய நிலையம் கூறியது. இராணுவத்தின் 59 ஆம் படைப்பிரிவே இதனைக் கைப்பற்றியுள்ளது.

இதேவேளை நேற்று முன்தினம் (17) மாலை 5.30 மணியளவில் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் இடம்பெற்ற கடும் மோதலைத் தொடர்ந்து புதுக்குடியிருப்பு கிழக்கில் அமைந்திருந்த புலிகளின் பாரிய முகாமொன்று படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பாரிய கட்டடங்களைக் கொண்டிருந்த இம்முகாமில் சாதாரண பதுங்குகுழி ஒன்றுடன் கூரைகளுடன் கூடிய பதுங்கு குழிகள் பல இருந்ததாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் கூறியது.

இம்முகாமுக்குள் 40 x 20 அடி கொண்ட இரண்டு கட்டடங்களும் 20 x 30 அடி கொண்ட ஆறு கட்டடங்களும் கூரைகளுடன் கூடிய ஆறு பதுங்கு குழிகளும் காணப்பட்டதாகவும் இராணுவத்தினர் கூறினர். புதுக்குடியிருப்புக்கு கிழக்கே படையினருக்கும் புலிகளுக்குமிடையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கடும் மோதலில் புலிகளுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டிருப்பதுடன் படையினருக்கு சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் ஊடக மத்திய நிலையம் சுட்டிக் காட்டியது.

அடுத்த தளபதிக்கு இந்த யுத்தத்தை விட்டு வைக்கமாட்டேன் – இராணுவத் தளபதி

sarath-finseka.jpgசித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்கென அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் உள்ள இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் ஒன்று கூடலின் போதே லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா இந்த கருத்தை வெளியிட்டார். கடந்த வருடம் இதே போன்றதொரு ஒன்று கூடலின் போது, எனது பதவிக் காலத்துக்குள் இந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்படும் எனவும் அடுத்த இராணுவத் தளபதிக்கு இதை விட்டு வைக்கப்போவதில்லை எனவும் நான் தெரிவித்திருந்தேன். எனினும் சிலர் அதை 2008 ஆம் வருடத்துக்குள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரப்போவதாக தெரிவித்தேன் என செய்தி வெளியிட்டிருந்தனர். எனினும், எனது பதவிக்காலம் முடிவடைவதற்குள்ளேயே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவேன் என நான் கூறியதை மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதன் பிரகாரம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர இன்னும் ஒருவருடம் இருக்கிறது.

எவ்வாறு இருப்பினும் யுத்தம் மிக விரைவாக முடிவடைந்து வருகிறது. எனினும் காலஎல்லையொன்றை கூறமுடியாது. இருந்தபோதிலும் அடுத்த தளபதிக்கு இந்த யுத்தத்தை விட்டு வைக்கமாட்டேன் என்பதை நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றேன். நான் அளித்த உறுதியை நான் எப்படியும் காப்பாற்றுவேன். இந்த வருடம் யுத்தம் எப்படியாவது முடிவுக்குக் கொண்டு வரப்படும். கடந்த 17 நாட்களில் படையினர் முல்லைத்தீவை நோக்கி 17 கிலோ மீற்றர் தூரம் முன்னேறியுள்ளனர். இதில் இருந்து படையினர் மிக வேகமாக முன்னேறி வருவது புலனாகிறது. 2 வருடங்களுக்கு முன்னர் 50 வரைபடங்களை வைத்து நான் யுத்த நடவடிக்கை திட்டங்களை மேற்கொண்டு வந்தேன். ஆனால், தற்போது ஒரேயொரு வரைபடத்தை மட்டுமேவைத்து யுத்த திட்டங்களை வகுத்து வருகின்றேன். அவ்வளவு தூரம் எமது படையினர் முன்னேறியுள்ளனர். யுத்தத்தின் பிரதிபலன்களை மிக விரைவில் பார்க்க முடியும்.

2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எனது பதவிக்காலம் முடிவடையும் அதேநேரம் அதற்கு முன்னதாக யுத்தம் முடிவுக்கு வரும் என நம்புகின்றேன். சித்திரைப் புத்தாண்டிற்குள் யுத்தம் முடிவடைவதை நான் விரும்புகின்றேன். அதற்கு அனைவருக்கும் அதிர்ஷ்டம் வேண்டும். சித்திரைப் புத்தாண்டுக்குள் யுத்தம் முடிவடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம் எனவும் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் பொன்சேகா இதன் போது கூறினார். இதேநேரம், இராட்சதவிலங்கு (ட்ரகன்) புலி ஒன்றை சுழற்றிப் பிடித்து விழுங்க பார்த்துக் கொண்டு இருப்பது போல் படம் ஒன்றைப் பொறித்த மேற் சட்டை ஒன்றை தான் அணிந்திருப்பதை சுட்டிக்காட்டிய இராணுவத் தளபதி இந்த மேற்சட்டையை இந்த நிகழ்வுடன் இரண்டாவது முறையாக அணிவதாகவும் அடுத்த நிகழ்வின் போது இதை அணிய வேண்டிய அவசியம் இருக்காது என தெரிவித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

முல்லையில் புலிகளின் மோட்டார் தளம், முன்னரங்குகள் மீது விமான தாக்குதல்

mi24-1301.jpgமுல்லைத்தீவு பிரதேசத்திலுள்ள புலிகளின் மோட்டார் தளம் மற்றும் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளை இலக்கு வைத்து விமானப் படையினர் நேற்று கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். விமானப் படைக்குச் சொந்தமான எம்.ஐ. – 24 ரக விமானங்கள் நடத்திய இந்தத் தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் விங்கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். முல்லைத்தீவை நோக்கி முன்னேறி வரும் இராணுவத்தின் 57வது மற்றும் 59வது படைப் பிரிவுகளுக்கு உதவியாகவே இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு நகருக்கு தென்பகுதியில் 4 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள புலிகளின் பாதுகாப்பு முன்னரங்குகளை இலக்கு வைத்து நேற்றுக் காலை 10.55 மணியளவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இரணைமடு குளத்திற்கு கிழக்கே எட்டு கிலோ மீற்றர் தொலைவில் அமைக்கப்பட்டிருந்த மோட்டார் தளம் ஒன்றை இலக்கு வைத்து விமானப் படையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

நேற்றுப் பிற்பகல் 1.55 மணியளவில் இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்த மோட்டார் தளத்திலிருந்தே படையினரை இலக்குவைத்து புலிகள் தாக்குதல் நடத்தி வந்துள்ளதாக தெரிவித்த விமானப் படைப் பேச்சாளர், இந்தத் தாக்குதலில் அந்த தளம் பாரிய சேதங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தமிழர் விரோத நடவடிக்கைகளை சோனியாகாந்தி தடுத்துநிறுத்த வேண்டும்

vmani.jpgகாங் கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை கருதியாவது இலங்கையில் போரை தடுத்து நிறுத்த இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “இலங்கையில் போரை நிறுத்தவும் இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் இழப்பை தடுக்கவும் மத்திய அரசு இனியாவது தனது மௌனத்தை கலைக்கவேண்டும்’ என்றும் கூறியுள்ளார்.

தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு வரும் நிலையில் இலங்கைக்கு கிரிக்கெட் அணியை அனுப்புவது நீரோ மன்னனின் செயல் போன்றது என்று தெரிவித்துள்ள வீரமணி, பாகிஸ்தானுக்கு அனுப்பமாட்டோம் என்று அறிவித்த இந்திய அரசு இலங்கைக்கு மட்டும் கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை கருதியாவது தமிழர் விரோத நடவடிக்கைகளை அதன் தலைவர் சோனியா காந்தி தடுத்து நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.

காஸாவில் இஸ்ரேல் போர் நிறுத்தம்

gaza_war02.jpg
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் கடந்த 22 நாட்களாக நடத்தி வந்த படுகொலைத் தாக்குதலை நிறுத்திக் கொள்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேல் நடத்திய பயங்கர ஏவுகணை, விமானப் படை, டாங்கிப் படை தாக்குதலில் 1,200க்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். காஸா பகுதியின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் நொறுக்கப்பட்டுவிட்டன. மின்சாரம், குடிநீர் சப்ளை கட்டமைப்பையும் இஸ்ரேல் தகர்த்துவிட்டது. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பாலங்கள், சாலைகள் ஆகியவற்றையும் இஸ்ரேல் சிதறடித்துள்ளது.

காஸாவில் தாக்குதலை நிறுத்துமாறு உலக நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தினாலும் அதை அந்த நாடு காதில் போட்டுக் கொள்ளவில்லை. இஸ்ரேலை நெருக்குவது போல அமெரிக்கா வழக்கம் போல நடித்தாலும் தாக்குதலை நிறுத்த உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் போதி அளவுக்கு காஸாவை உருக்குலைத்துவிட்டதையடுத்து போர் நிறுத்தம் செய்வதாக இஸ்ரேல் பிரதமர் எகுட் ஓல்மார்ட் இன்று அறிவித்தார். அதே நேரத்தில் படைகள் தொடர்ந்து காஸா பகுதியில் நிலை கொண்டிருக்கும் என்றார்.

காஸாவில் இயங்கி வரும் ஹமாஸ் தீவிரவாத அமைப்பு மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுவிட்டதால் தற்போது இந்தப் போரை நிறுத்திக் கொள்வதாக அவர் கூறியுள்ளார். ஆனால், இஸ்ரேல் மீதான தங்களது தாக்குதல் தொடரும் என்று ஹமாஸ் அறிவித்துள்ளது.