கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

காயமடைந்த நோயாளர்கள் கப்பல் மூலம் திருமலைக்கு கொண்டு வருகை

ship-10022009.jpgவன்னியில் இருந்து நேற்று ஒரு தொகுதி நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாத்தளன் கடற்பரப்பில் நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் கப்பல் தரித்துநின்று நோயாளர்களை ஏற்றிச் சென்றுள்ளது.

நோயாளர்கள் படகுகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு கப்பலில் ஏற்றப்பட்டுள்ளனர்.  ‘ஓசின்’ எனும் கப்பலே மாத்தளன் கடற்பரப்புக்கு வந்து நோயாளர்களை ஏற்றிச் சென்றுள்ளது. நோயாளர்களுடன் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் வெளியேறியுள்ளனர்.கப்பலில் நோயாளர்கள் ஏற்றப்படுகின்றனர்.

கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்ட நோயாளர்கள் திருமலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் தஸநாயக்க கூறினார்.

இந்திய பொதுத் தேர்தலுக்கு முந்தைய கடைசி கூட்டம் – மக்களவை நாளை கூடுகிறது

lok-saba.jpgஇந்திய பொதுத் தேர்தலுக்கு முந்தைய மக்களவையின் கடைசி கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இதய அறுவை சிகிச்சைக்குப் பின் ஓய்வெடுத்து வருவதால் இந்த கூட்டத் தொடரில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளமாட்டார் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவையின் பதவிக் காலம் மே மாதம் முடிகிறது. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், 14வது மக்களவையின் கடைசி கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் உரையாற்றுகிறார்.

வழக்கமாக பிப்ரவரி இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். தேர்தல் நடக்க உள்ளதால், புதிய அரசு அமைந்த பிறகே முழுமையான பட்ஜெட்  தாக்கல் செய்யப்படும். அது வரை அரசின் செலவுக்காக 16ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 14வது மக்களவையின் கடைசிக் கூட்டம் என்பதாலும் தேர்தலுக்கு முந்தைய கூட்டத் தொடர் என்பதாலும் மக்களின் கவனத்தை கவர, முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்தக் கூட்டத் தொடரில் இலங்கைப் பிரச்சினையும் எடுத்துக் கொள்ளப்படலாமென கருத்துக்கள் தெரிவிக்கின்றன. 

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் 26ம் தேதி வரை நடக்கிறது. இதில் விடுமுறை போக, 10 நாட்களுக்கு நாடாளுமன்றம் செயல்படும்.

இப்போதைய மக்களவையின் கடைசிக் கூட்டத் தொடர் என்பதால் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பற்றிய மதிப்பீடுகளையும் கூற  உறுப்பினர்களுக்கு போதிய வாய்ப்பு அளிக்கப்படும். கூட்டத்  தொடரை அமைதியாக நடத்த எல்லா எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு அல்-கய்டா எச்சரிக்கை

al-qaeda-yazid.jpgபாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இந்தியாவை பின் லேடன் தலைமை‌யிலான அல்-கய்டா பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் ம‌ற்று‌ம் பாகிஸ்தானில் செயல்படும் அல்-கய்டா பயங்கரவாத அமைப்பின் முஸ்தஃபா அபு யாஸீத் இவ்வாறு விடுத்துள்ள எச்சரிக்கை அடங்கிய வீடியோவை பி.பி.சி. தொலைக்காட்சி வெளியிட்டது.

இந்த 20 நிமிட வீடியோவில் யாஸீத் அரபு மொழியில் கூறியது: “நாங்கள் முஸ்லிம் நாடுகள் எங்கும் உள்ள முஜாஹிதீனையும், தற்கொலைத் தாக்குதல் பயங்கரவாதிகளையும் உங்களை எதிர்கொள்ள அழைத்து வருவோம். உங்கள் பொருளாதார மையங்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தி அவற்றை மண்ணோடு மண்ணாக்குவர்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் அதில் அவர் கூறிய போது, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவை கொலை செய்ய அல்-கய்டா தலைவர் ஐமான் அல்-ஸவாஹிரி என்பவர் முடிவெடுத்தார் என்றார்.

பாகிஸ்தான் அரசு மற்றும் அதன் ராணுவத்திற்கு‌ம் யாஸீத் கடும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளார்.

இந்த வீடியோ ஒளிபரப்பினால் பாகிஸ்தான் முன்பு வெ‌ளி‌யி‌ட்ட செய்தி ஒன்றும் பொய் என்று தெரியவந்துள்ளது. அதாவது தற்போது இந்த மிரட்டலை வெளியிட்டுள்ள அபு யாஸீத் என்பவர் 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று பாகிஸ்தான் வெளியுலகிற்கு அனுப்பிய செய்தி பொய்யாகியுள்ளது.

அல் – காய்தா மிரட்டலை சந்திக்க தயார் : ஏ.கே.அந்தோணி

மும்பையில் நடத்தப்பட்டதை போன்ற தாக்குதல் மீண்டும் நடத்தப்படும் என இந்தியாவுக்கு அல் – காய்தா மிரட்டல் விடுத்துள்ள நிலையில், எத்தகைய மிரட்டலையும் சந்திக்க இந்தியா தயாராக இருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் மும்பையில் நடத்தப்பட்டதை போன்ற தாக்குதல் மீண்டும் நடத்தப்படும் என இந்தியாவுக்கு என இந்தியாவிற்கு ஆப்கானிஸ்தான் ம‌ற்று‌ம் பாகிஸ்தானில் செயல்படும் அல் – காய்தா பயங்கரவாத அமைப்பின் முஸ்தஃபா அபு யாஸீத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில்  செய்தியாளர்களை சந்தித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியிதம் இந்த மிரட்டல் குறித்து கேட்டபோது,” அல் – காய்தா அமைப்பு இந்தியாவுக்கு விடுத்துள்ள மிரட்டல் குறித்து நான் முழுமையாக பார்க்கவில்லை.இருப்பினும் எந்தப் பகுதியிலிருந்தும் நாட்டுக்கு விடுக்கப்படும் பாதுகாப்பு மிரட்டலை சந்திக்க இந்தியா சந்திக்க தயாராக இருப்பதாகவும், அதை சமாளிக்கும் திறமையும் நம்மிடம் உண்டு ” என்று பதிலளித்தார்.

தேசிய பிரச்சினைக்கு தீர்வின்றேல் புதிய பிரபாகரன் உருவாகுவார்: அமைச்சர் திஸ்ஸ வித்தாரண

Minister Tissa Vitharanaதேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றை வைக்காவிட்டால் பிரபாகரன் அழிக்கப்பட்ட பின்னர் வேறொரு பிரபாகரன் உருவாகிவிடுவார் என சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர், அமைச்சர் திஸ்ஸ வித்தாரண கூறினார்.  பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைப்பது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அரசாங்கத்தால் தயாரிக்கப்படும் தீர்வுத்திட்டமானது ஐக்கிய தேசியக் கட்சியின் இணக்கத்தையும் பெறுவது அவசியமானது. பிரதான இரண்டு கட்சிகளால் இணங்கப்படாத தீர்வுதிட்டமானது தமிழர்களாலும், சர்வதேச சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாது” என அமைச்சர் கூறினார். அதேநேரம், ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகள் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் வித்தியாசமான கொள்கையையே கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர், அனைத்துக் கட்சிகளும் இணைந்து இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான இணக்கப்பாடொன்றுக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகக் கூறினார்.

ஜனாதிபதிக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்குமிடையிலான இறுக்கமான உறவினால் இலங்கையும் செல்வந்த நாடாகும் – அமைச்சர் பௌஸி

ahm-fawze.jpgபல வருடங்களாக மன்னாரில் தேங்கிக் கிடந்த பெற்றோலிய வள ஆராய்ச்சிகள் ஜனாதிபதியின் நடவடிக்கை காரணமாக வெகு விரைவில் முன்னெடுக்கப்பட உள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்பளை ஆண்டியா கடவத்தை என்ற இடத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

மத்திய கிழக்கு நாடுகளுக்கும் எமது ஜனாதிபதிக்கும் இடையே உள்ள இறுக்கமான உறவு காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று ஆட்சியில் உள்ள அரசு முஸ்லிம்களுக்கு அதிக சேவை செய்கிறது. காரணம் அதிகளவு முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளனர். கிழக்கைப் போன்றே ஏனைய பகுதிகளுக்கும் பரவலாக சேவைகள் இடம்பெறுகின்றன. இதே அடிப்படையில் மத்திய மாகாணத்திற்கும் பாரிய சேவை நடைபெற ஜனாதிபதியின் கரத்தை பலப்படுத்த வேண்டும்.

ஜனாதிபதிக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே காணப்படும் நெருக்கம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் எமக்கு உதவ முன்வந்துள்ளன. இதில் ஒரு அங்கமாகவே மன்னார் பகுதியில் பெற்றோலிய அகழ்வு நடவடிக்கைகளுக்கும் உதவ முன்வந்துள்ளன. இதன் காரணமாக நாமும் செல்வந்த நாடாக முடியும்.  பல வருடங்களாக மன்னார் பெற்றோலிய ஆராய்ச்சி தேங்கிக் கிடந்தன. ஜனாதிபதியின் முயற்சியும், மத்திய கிழக்கு நாடுகளின் ஒத்துழைப்பும் இன்று எமக்கு சாதகமாகியுள்ளன. எனவே, நாம் அனைவரும் ஜனாதிபதி தலைமையிலான ஐ.ம.சு.கூட்டணிக்கு வாக்களித்து அதனை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார்.

ஐ.தே.க.வுக்கு எதிரான பிரசாரங்களை அரச ஊடகங்கள் நிறுத்தவேண்டும்- கருஜயசூரியா

karu_jayasuriya.jpgஅரச அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக மேற்கொள்ளும் பிரசாரத்தை நிறுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவரும் எம்.பி.யுமான கருஜயசூரியா வலியுறுத்தியுள்ளார். கம்பளை நகரில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்யின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய இவர் மேலும் கூறியதாவது;

ஐக்கிய தேசியக்கட்சி நாட்டை துண்டாட ஒரு போதும் துணைபோகாது. இலங்கையின் 61 ஆவது சுதந்திர தினத்தை சுதந்திரமாகக் கொண்டாடும் வாய்ப்பு ஏற்பட்டது. இதற்குப் பின்னணியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் பெரும் தியாகங்களைப் புரிந்துள்ளனர். தேர்தல் ஜனநாயகத்தின் பிரதான அடையாளம். மக்கள் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் வாக்களிப்பர். மக்களில் 51 சதவீதமானோர் ஆளும் கட்சிக்கு வாக்களிக்கும் போது அம்மக்களை மட்டுமன்றி, எஞ்சிய 49 சதவீத மக்களின் நலனிலும் அரசு அக்கறை செலுத்தவேண்டும்.

நாட்டில் இனிமேல் தேர்தல்கள் அவசியமில்லை. தலைவர்கள் தேவையில்லை என்று சில அரசியல்வாதிகள் அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தனர். ஜனநாயக நாட்டில் எவரும் கருத்துகளைத் தெரிவிக்க முடியும். எனினும் மேற்படி கருத்து வேதனையளிக்கின்றது. நாடு 99 சதவீதம் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதியும் மீட்கப்படவேண்டும். நாடு யுத்தத்தில் பல உயிரிழப்புகளைக் கண்டுள்ளது. ஐக்கியதேசியக்கட்சிக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரசாரத்திற்கு பதிலளிக்கும் வாய்ப்புகளை அரசு ஊடகங்கள் வழங்க வேண்டும். தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்படவும் அரசதுறைக்கு தகுதியானவர்கள் நியமனம் பெறவும் அரசியலமைப்பு சட்டத்தின் 17 ஆம் பிரிவு அமுல் செய்யப்படவேண்டும்.

சிறுபான்மையினருக்கு எதிராக அநியாயங்களை கட்டவிழ்த்துள்ள அரசை நீடிக்க விடமாட்டோம் – ரவூப் ஹக்கீம்

rauf_hakeem.jpgசிறு பான்மை மக்களுக்கெதிராக அநியாயங்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசை நீடிக்க விட மாட்டோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் சூளுரைத்தார்.

மத்திய மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு நியு எல்பிடியவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; சிறுபான்மை சமூகங்கள் நிம்மதியாக வாழும் ஆட்சியொன்றை ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தே ஏற்படுத்த முடியும். தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அநியாயம் புரியும் ஆட்சியைத் தொடர விடமாட்டோம். நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவு கண்டுள்ளது. நாட்டில் இரு வாரங்களுக்கான இறக்குமதியை மேற்கொள்வதற்கான வெளிநாட்டுச் சொத்துகள் மட்டுமேயுள்ளன.

நாடு 61 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் சந்தர்ப்பத்தில் சிறுபான்மை சமூகங்கள் அச்சம், பீதியுடன் வாழ்கின்றனர். நாட்டில் தேசப்பற்று என்பது அரசியல்வாதிகளின் மலிவான விற்பனைப் பொருளாகியுள்ளது. இதனை மூலதனமாக வைத்து அரசியல் புரியும் நிலை தோன்றியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் அச்சமின்றி சிறுபான்மை மக்களுக்காகப் பேசுகின்றது. இதற்குக் காரணம் இத் தலைமைத்துவம் ஓர் இயக்கத்தின் தலைமைத்துவமாக இருப்பதாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதித்துவம் மாகாண சபைத் தேர்தலில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். எந்தக் கட்சியும் முஸ்லிம் காங்கிரஸை பலவீனப்படுத்த இடமளிக்க மாட்டோம

ரஷ்யாவுடன் ஆக்கபூர்வமானதொரு உறவை தொடர விரும்புவதாக ஹிலாரி தெரிவிப்பு

world-news.jpgரஷ்யா வுடன் ஆக்கபூர்வமானதொரு உறவைத் தொடர விரும்புவதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிங்டன் தெரிவித்துள்ளார். ஈரானின் அணு நிகழ்ச்சித் திட்டம் போன்ற விவகாரங்களில் மொஸ்கோவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக ஹிலாரி குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஈரானின் முதலாவது அணுசக்தி ஆலையை 2009 இற்குள் அமைக்கும் நடவடிக்கைகளைத் தான் ஆரம்பிக்கப் போவதாக ரஷ்யா அறிவித்துள்ளமை குறித்து ஹிலாரி எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இதே வெளியுறவு அமைச்சராக ஹிலாரியின் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் ஆசியாவுக்கானதாக இருக்குமெனத் தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ஜப்பான், இந்தோனேசியா, தென்கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அவர் விஜயம் மேற்கொள்வாரெனத் தெரிவித்துள்ளது. மத்திய ஐரோப்பாவில் ஏவுகணைப் பாதுகாப்புக் கவசத்தை அமைக்கும் அமெரிக்காவின் திட்டம் மற்றும் ஜோர்ஜியா மீதான ரஷ்யாவின் படை நடவடிக்கை போன்ற விவகாரங்கள் தொடர்பில் அண்மைய வருடங்களாக அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான உறவு விரிசலடைந்திருந்தது.

பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னருடனான சந்திப்பைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஹலாரி; ஈரானின் அணுவாயுத விவகாரம் தொடர்பில் எமது பரஸ்பர அக்கறையின் அடிப்படையில் சர்வதேச சமூகத்துடன் ஒரு சிறந்த இராஜதந்திர அணுகுமுறையை நாம் கடைப்பிடிக்கிறோம். இதனால் ரஷ்யாவுடன் ஆக்கபூர்வமான உறவினைத் தொடர விரும்புவதன் மூலம் இவ் விடயத்தில் ரஷ்யாவையும் ஒரு கூட்டாளியாக இணைக்க விரும்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் 15 ஆம் திகதியளவில் ஆசியாவுக்கான தனது முதலாவது சுற்றுப்பயணத்தை ஹிலாரிஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடமேல், மத்திய மாகாணங்களில் 79 வன்முறைச் சம்பவங்கள் பதிவு

election_.jpgவடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத்தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்கள் 79 இடம் பெற்றுள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.  இதில் மத்திய மாகாணத்திலேயே அதிகளவாக 52 சம்பவங்கள் பதியப்பட்டுள்ளதுடன், வடமேல் மாகாணத்தில் 27 சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக அவ் இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; இரு மாகாணங்களின் கீழ் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் 49 பாரிய தாக்குதல் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. வடமேல் மாகாணத்தில் 17 சம்பவங்களும் மத்திய மாகாணத்தில் 32 சம்பவங்களும் இந்தப் பாரிய தாக்குதல் சம்பவத்தில் அடங்குகின்றன. மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் முறையே 11 சம்பவங்களும் கண்டியில் 10 ம் குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் 8 ம் 9 ம் இடம் பெற்றுள்ளன.

அச்சுறுத்தல் தொடர்பில் 9 முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. இதில் அதிகளவான சம்பவங்களாக கண்டி மாவட்டத்தில் நான்கு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. நுவரெலியா மற்றும் குருநாகல் மாவட்டத்தில் இதற்கு அடுத்த படியாக முறையே இரு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. இதேவேளை, அரச வளங்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் 9 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதேபோல் தேர்தல் சட்ட விதிகளை மீறிய சம்பவங்கள் 12 ஐயும் பதிவு செய்துள்ளோம். ஒட்டு மொத்தத்தில் பார்த்தால் கண்டி மாவட்டத்திலே அதிகூடிய சம்பவமாக 23 சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஓர் இனத்தை அழித்துவிட்டு இன்னொரு இனம் நிம்மதியாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை – அமைச்சர் ஜயரட்ன தெரிவிப்பு

election_.jpgஅரசாங்கம் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து நாட்டை மீட்க யுத்தத்தை முன்னெடுக்கின்றதே தவிர, தமிழ் மக்களை அழிப்பதற்கல்ல என்று பெருந்தோட்ட கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டி.எம்.ஜயரட்ன குறிப்பிட்டார். கம்பளை, தெல்பிடியில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

ஓர் இனத்தை அழித்து விட்டு மற்றுமோர் இனம் நிம்மதியுடன் வாழ்ந்ததாக சரித்திரத்தில் கிடையாது. அரசு தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் புரியவில்லை. நாட்டைப் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து காப்பாற்றவே யுத்தம் செய்கின்றது. மாகாண சபைத் தேர்தலில் சிறுபான்மை மக்கள் வழங்கும் ஆதரவு அரசின் சக்தியை உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேசத்திலும் பலப்படுத்தும். எனவே சிறுபான்மை மக்கள் அரசை பலப்படுத்த முன்வர வேண்டும்.  இலங்கை சகல இன மக்களும் வாழும் நாடாகும். எனவே சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பேதம் இன்றி இந்நாடு சகல இனங்களுக்கும் சொந்தமானதாகும்.