கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்டனி காயம்: பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங் கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியை கைப்பற்ற ராணுவம் தீவிரமாக சண்டையிட்டு வருகிறது. ராணுவத்தை எதிர்த்து விடுதலைப்புலிகள் கடுமையாக போரிடுகின்றனர். அந்த போர் முனையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் தலைமையேற்று நேரடியாக போரிடுவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
 
புதுக்குடியிருப்பு வடக்குப் பகுதியில் இராணுவத்தினருக்கும் புலிகளுக்குமிடையே அண்மையில் இடம்பெற்ற உக்கிர மோதலின்போது புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனான சார்ள்ஸ் அன்டனி (வயது 24) காயமடைந்ததாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புலிகளுக்கான ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் தயாரிக்கும் பணியின் முக்கிய பொறுப்பாளரான இவர் புலிகளின் விமானங்களுக்கான குண்டுகளைத தயாரிப்பதிலும் பங்களிப்புச் செய்துள்ளார்.

2007 ஆம் ஆண்டில் கட்டுநாயக்க விமானத்தளம் மீதும் கொலன்னாவை எண்ணெய்க் குதம் மற்றும் முத்துராஜவெல எரிவாயு களஞ்சியம் ஆகியவற்றின் மீதும் புலிகள் நடத்திய விமானத் தாக்குதல்களை இவரே  திட்டமிட்டுள்ளார் என அறிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்காக இவர் புலிகளின் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டார் எனவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

போர் நிறுத்தத்தை அறிவிக்க இலங்கை அரசை வலியுறுத்துவோம்: சோனியா

sonia-gandhi.jpgஇலங்கையில் வாடும் அப்பாவித் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க மத்திய அரசு தொடர்ந்து பாடுபட்டு வருவதாகவும், கடந்த 30 வருட காலமாக இலங்கையில் அப்பாவி தமிழர்களுக்காக காங்கிரஸ் கட்சி குரல் கொடுத்து வருவதாகவும், அங்கு போர் நிறுத்தத்தை அறிவிக்க இலங்கை அரசை வலியுறுத்துவோம் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

வவுனியாவுக்கு நேற்று வரை 52 ஆயிரம் பேர் இடம்பெயர்வு – அமைச்சர் றிஷாத் பதியுதீன்

risadbadurudeen.jpgமுல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து நேற்று வரை 52 ஆயிரத்து 208 பேர் வவுனியாவுக்கு வருகை தந்துள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,  விடுவிக்கப்படாத பிரதேசங்களிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி வருகை தந்தவர்களுள் ஆகக்கூடிய தொகையாக 23 ஆயிரத்து 606 பேர் கடந்த மார்ச் மாதத்தில் வந்துள்ளனர்.

இடம்பெயர்ந்தவர்களுக்காக வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களுக்கு வருகை தரும் மக்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அம்மக்களுக்குத் தேவையான குடிநீர், சுகாதாரம், மலசலகூட வசதி, மின்சாரம் மற்றும் கல்வி உட்பட அனைத்து வசதிகளையும் தமது அமைச்சு செய்து கொடுத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

ஏப்ரல் 1 -முட்டாள்களான அறிவாளிகள் தினம் – புன்னியாமீன்

april-fools-day.jpgசர்வதேச ரீதியில் அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், மகளிர் தினம், தொழிளாலர்கள் தினம் என்று மனிதர்களுக்குப் பலவிதமான தினங்கள் இருப்பது போலவே முட்டாள்களுக்கும் என்று ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய தினங்களுக்கு உரிமை கொண்டாடுவதைப் போல இத்தினத்தில் தமக்கும் பங்கிருப்பதாகச் சொல்லிக் கொள்ள எவரும் முன் வருவதில்லை. அதே நேரம் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் அடுத்தவரை முட்டாளாக்க முனையும் முட்டாள்களான அறிவாளிகளின் தினம் என்றாலும் பிழையாகாது. அதுதான் இந்த ஏப்ரல் முதல் தேதியாகும்.

விஷயங்களை அறிந்து கொள்பவன் அறிஞன் ஆகின்றான் என்பார்கள். அதேபோல் ஒரு முட்டாள் ‘தான் ஒரு முட்டாள்’ என்பதை அறிந்து கொள்ளும்போது அவனும் ஒரு ‘அறிஞனாக’ வாய்ப்புக் கிட்டுகிறதா என்று எமக்கும் முட்டாள்தனமாக சிந்திக்க தோன்றுகிறது.

“The first of April is the day we remember what we are the other 364 days of the year ” – Mark Twain என்று நம்மைப்பற்றி முன்பே உரத்துச் சொல்லிவிட்டார். கற்றாரைக் கற்றாரே காமுறுவது போல் ஒரு முட்டாள் அவனை விடப் பெரிய முட்டாள் மெச்சுவான் என்றும் யாரோ ஒருவரும் கூறியுள்ளதாகவும் அறிகிறோம்.

“முட்டாள்கள் தினம்” ஏப்ரல் 1ம் தேதி உலகமெல்லாம் முட்டாள்களாக்கும் முயற்சி நடைபெறுகிற ஒரு முட்டாள் நாள். இது எவ்வாறு ஆரம்பமானது என்ற வினாவும் எம்முள் எழுகின்றது.

புராதன வரலாற்றில் ரோமானிய நாட்காட்டியின்படி ஏப்ரல் 1ம்தேதி தான் வசந்தம் ஆரம்பிக்கும் பொன்னாளாகும். புராதன வரலாற்றில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன. ஹார்வி என்னும் வரலாற்றாய்வாளர் தனது குறிப்பில், ” பிரான்சு தேசத்தின் அரசன் ஒன்பதாம் சார்லஸ் காலத்தில் மார்ச் மாதம் 25ம் தேதியிலிருந்து ஒருவார கால புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக குறிப்பிடுகிறார். திருவிழாவைப்போல் நடைபெறும் இந்தக் கொண்டாட்டங்களின்போது ஒருவருக்கொருவர் பரிசுப் பொருள்களையும், அன்பளிப்புகளையும் வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டதாக குறிப்பிடுகிறார்.

இந்த ஒருவாரக் கொண்டாட்டத்தின் இறுதி நாளான ஏப்ரல் ஒன்றாம் தேதி பெரு விருந்துடன் புத்தாண்டு விழா நிறைவெய்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது. 1562ம் ஆண்டில் போப் கிரகோரி புதிய ஆண்டுத் துவக்கத்தை நடைமுறைப்படுத்தும்படி அறிவித்தார். ஆண்டுத் துவக்க நாளாக ஜனவரி 1ம் தேதியை அறிமுகம் செய்துவைத்தார்.

இனி மேல் பிரான்ஸ் தேசம் முழுமையும் இந்த நாட்காட்டிதான் என்று ஊர்தோறும் அறிவிக்கப்பட்டது. இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அல்லது போப்பின் அறிவிப்பை நம்பாதவர்கள் ஏப்ரல் 1ம் தேதியையே புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடினர்.

இந்தப் “புதிய” புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. அதற்குக் காரணங்கள் பல உண்டு. அன்றைய கால கட்டத்தில் இது போன்ற செய்திகள் அல்லது மாற்றங்கள் சகலரையும் சென்றடைவதற்குரிய தகுந்த சாதனங்கள் இருக்கவில்லை. அத்தோடு பழைய வழக்கத்தைப் புறம் தள்ளி புதிய வழக்கத்தை ஏற்றுக் கொள்வதையும் இம்மக்கள் மறுத்திருக்கலாம். ஆகவே இம் மக்கள் தொடர்ந்தும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியையே தமது புத்தாண்டுத் தினமாகக் கொண்டாடி வந்தார்கள்.

எவ்வாராயினும் பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும் ஸ்காட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நார்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.

புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்ரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள். இதிலிருந்து ஏப்ரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

என்றாலும் 1582ம் ஆண்டுக்கு முன்னரேயே 1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதேபோல் டச்சு மொழியிலும் 1539ம் ஆண்டுக் காலப் பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.

1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.

ரோமாபுரியில் கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வந்தபோது, நடைமுறைகளை மாற்றினார்கள். தற்போதுள்ள ஈஸ்ட்டர் பண்டிகையினையும் மாற்றி அறிவித்தார்கள். பழமையான கொண்டாட்டங்களை மாற்றியதோடு அவற்றில் ஒரு சிலவற்றை வேடிக்கை, வினோத கொண்டாட்டங்களுக்குரிய நாளாக மாற்றினர்.
இந்த மாற்றங்களில் நம்பிக்கை இல்லாமலிருந்த இவர்களை கேலியும் கிண்டலும் செய்து விளையாட்டாக முட்டாளாக்கி ஏமாற்றும் போக்கில் ஈடுபட்டனர்.

இதுவே நாம் இன்றைக்கு வேடிக்கையாய் முட்டாள்களாக்கி மகிழ்கிற நாளாக தொடர்ந்திடுகிறது எனலாம். ஜனவரி மாதம் 1ம் தேதியை புத்தாண்டாக ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் அல்லது மறந்தவர்களுக்கு முட்டாள்தனமான பரிசுகளை அனுப்பினர். பெரிய பரிசுக்கூடைகள் போன்று வடிவமைத்து உள்ளே குதிரை முடி, பழைய குப்பை என்று நிரப்பிக் கொடுத்து ஏமாற்றுதல் போன்ற ஏமாற்று வேலைகளைச் செய்து ஏமாற வைத்தனர்.

இதை நம்பும்படியான ஆனால் நகைக்கும்படியான செயலாக செய்து மகிழ்ந்தனர். நெப்போலியன் 1 ஆஸ்திரியாவைச் சேர்ந்த மேரி லூயிஸை 1810ல் திருமணம் செய்துகொண்டார். அந்த மாதம், நாள் ஏப்ரல் 1 என்பதால் மணமகளை கேலி செய்து இருக்கின்றனர். நெப்போலியன் உண்மையாகத் திருமணம் செய்யவில்லை. உன்னை முட்டாளாக்கவே திருமணம் செய்திருக்கிறார் என்று எள்ளி நகையாடியதாகக் கூறப்படுகிறது.

ஏப்ரல் முதல் நாளை, “Poission d’avril ” என்று அழைத்துள்ளனர். இத்தகைய கேலிக்கூத்துக்கள் சுற்றிச் சுழன்று பிரான்சிலிருந்து இங்கிலாந்துக்கும் அங்கிருந்து அமெரிக்காவுக்கும் ஏப்ரல் ‘பூல் விரிந்து பரவி இருக்கிறது. இது குறித்து சிகாகோவில் உள்ள இலினாய்ஸ் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் ஸ்டீவன் பேன்னிங் ஐரோப்பாவில் எப்படி எல்லாம் நடந்தது என்று விலாவாரியாகக் குறிப்பிட்டுள்ளார்.

கிரகோரியன் காலண்டரை ஏற்றுக்கொண்ட முதல் நாடாக பிரான்சு இருந்தாலும் இத்தகைய கேளிக்கைகளின் ஆணிவேரைக் கண்டுபிடிக்கப் போதுமான ஆதாரக் குறிப்புகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்காட்லாந்தில் April Fool’s Dayயை April Gawk என்று கடைப்பிடித்ததாக பேராசிரியர் ஸ்டீவன் தெரிவித்துள்ளார். அதாவது ஏப்ரல் 1ம் தேதி வினோதமாக உடையுடுத்தி ரெண்டுங்கெட்டானாக நடந்து கொண்டு ஸ்காட்டிஷ் மக்கள் அந்த நாளை நகர்த்தியதாக மேலும் தெரிவிக்கிறார்.

ஒரு பொய்யை உண்மை என்று நம்ப வைப்பது, ஒரு கடிதத்தில் அவசரம் என்று மேலே எழுதி உள்ளே முட்டாள், “இன்று ஏப்ரல் ·பூல் தினம் தெரியுமா? அது வேறு யாருமில்லை நீதான்”, இப்படி எழுதி அனுப்புவதை வழக்கமாகச் செய்திருக்கின்றனர்.

பிரெஞ்சுக் குழந்தைகள்கூட காகிதத்தில் மீன் போன்று செய்து தனது சினேகிதர்களின் முதுகில் ஒட்டி அனுப்பிக் கேலி செய்திருக்கின்றனர். இப்படி முதுகில் மீனோடு திரிகிற குழந்தைகளைப் பார்க்கும் குழந்தைகள் “ஏப்ரல் மீன்” என்று அழைத்துக் கேலி செய்திருந்திருக்கின்றனர்.

1986ல் ப்ரெட் வால்டன் இயக்கிய, “ஏப்ரல் பூல்ஸ் டே” திரைப்படம் மிகப் பிரபலமானது. டெபோரா போர்மேன், ஜேய் பேக்கர், டெபோரா குட்ரிச் நடித்திருந்தனர். பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தார் பிரம்மாண்டமாக தயாரித்திருந்த இப்படம் ஒளி நாடாக்களிலும் வீர நடை போட்டு வந்ததை குறிப்பாகச் சொல்லலாம்..

ஏப்ரல் முதல் தேதி பல வேடிக்கைகள் மட்டுமல்லாது பல வினைகளும் வந்துள்ளன. அத்தோடு பல மூட நம்பிக்கைகளையும் இந்த ஏப்ரல் முதல் தேதி மக்களுக்கு வழங்கியிருக்கின்றது.

அல்லது மக்களே தங்களுக்கு வழங்கி இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்!.

ஓர் ஆலோசனை

மூன்றாம் உலக நாடுகளில் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல் நாளை முட்டாள் தினமாக பிரகடனப்படுத்தினால் எப்படி இருக்கும்?  .

உண்மையான ஜனநாயக நாள் அல்லவா அது.?

தேசம் நெட் வாசகர்களே உங்கள் கருத்து என்ன?

விடுதலைப் புலிகளின் முதன்மை ஒலி-ஒளிபரப்புத் தொழில்நுட்பவியலாளர் மரணம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்மை ஒலிபரப்புத் தொழில்நுட்பவியலாரும் அறிவிப்பாளரும் ஊடகவியலாருமான மதி என்று அழைக்கப்படும் லெப்.கேணல் மதியழகன் மரணமடைந்துள்ளார். லெப். கேணல் மதியழகன் மின்னியல் நுண் தொழில்நுட்பத்தில் மிகவும் திறமையானவராகச் செயற்பட்டார்.

புலிகளின் குரலில் முதன்மை ஒலிபரப்பு மையத்தின் ஒலிபரப்புத் தொழில்நுட்பத்தையும் தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் ஒளிபரப்புத் தொழில்நுட்பத்தையும் திறம்படச்செய்தவர் இவர் என்றும் அத்துடன் செய்மதி தொடர்புகள், செய்மதி வழியிலான ஒலி, ஒளிபரப்புத் தொழில்நுட்பத்தையும் திறம்பட நெறிப்படுத்தியவர் என்றும் கூறப்படுகிறது.

ஊடகத்துறையில் மிக நுட்பமான தொழில்நுட்பவியலாளரான லெப். கேணல் மதியழகன்,  இலங்கைப் படையினருக்கு எதிரான களத்தில் மரணமடைந்துள்ளார். யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகவும் திருகோணமலையை வாழ்விடமாகவும் கொண்ட இவரின் இயற்பெயர் ச.கிருபாகரன் என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகளின் 130 மி.மீ. ஆட்லெறி தாக்கியழிப்பு

srilanka_army1.jpgபுலிகளின் 130 மி.மீ ரக கனரக ஆட்லெறி ஒன்றை விமானப் படையினர் கிபீர் விமானங்கள் நேற்று முற்பகல் தாக்கியழித்துளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். புதுக்குடியிருப்புக்கு வடகிழக்கே புலிகளால் பொருத்தப் பட்டுக்கொண்டிருந்த இந்த பீரங்கியை இலக்கு வைத்து தரைவழியாக இராணுவத்தினர் தாக்குதல் நடத்திய அதே சமயம், விமானப் படையினர் நடத்திய தாக்குதலில் புலிகளின் கனரக ஆட்லெறி முற்றாக நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 இந்தச் சம்பவம் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்புக்கு வடகிழக்கே அதாவது, அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயத்திற்கு வெளிப்பகுதியில் செயற்பட்ட புலிகள் 130 மி.மீ. ரக கனரக பீரங்கியை பொருத்தி படையினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் உள்ள பிரதேசத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிலேயே புலிகள் இந்த கனரக பீரங்கியை பொறுத்த முற்பட்டுள்ளனர்.

விமானப் படையினர் உரிய இலக்கு மீது தாக்குதல் நடத்தியதில் புலிகளின் 130 மி.மீ. ரக பீரங்கி முற்றாக நிர்மூலமாக்கப்பட்டதை விமான ஓட்டிகளும், களமுனை வீரர்களும் உறுதி செய்துள்ளதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். படையினரை இலக்கு வைத்து புலிகள் மேற்கொள்ளவிருந்த இந்த தாக்குதல் முயற்சியும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் தயாரான “ரோபோ” சர்வதேச கண்காட்சியில் முதலிடம் மொறட்டுவ பல்கலை மாணவர்கள் சாதனை

இந்தியாவின் மும்பை நகரில் அண்மையில் நடந்த “ரோபோ” போட்டியில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட ரோபோவிற்கு முதலிடம் கிடைத்துள்ளது. மொறட்டுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியியல் பிரிவே இந்த ரோபோவைத் தயாரித்தது.

இந்த ரோபோவின் வேகம் மற்றும் தடை அறிந்து வழியைமாற்றிக்கொள்ளும் சக்தி போன்ற சிறப்பம்சங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த ரோபோவிற்கு முதலிடம் வழங்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோ போட்டியில் பல நாடுகளைச் சேர்ந்த ரோபோக்கள் பங்கேற்றன என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்திய தொழில் நுட்ப நிறுவனமே இந்தப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. இப்போட்டி வருடந்தோறும் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தனக்கு அபூர்வ ஆற்றல் இருப்பதாக கூறி அழகான பக்தைகளை கவர்ந்திழுத்து பாலியல் வல்லுறவு! லண்டன் போலிச் சாமியார் கைது

mohana-sing.jpgதனக்கு அபூர்வ மந்திர ஆற்றல் இருப்பதாகக் கூறி பெருந்தொகையான பெண் பக்தைகளை தன் பக்கம் கவர்ந்திழுத்து, அவர்களில் அழகிய யுவதிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் போலிச் சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் வட லண்டனில் இடம்பெற்றது.

மோகன்சிங் என தன்னைக் கூறிக் கொண்ட மைக்கல் லயன்ஸ் (51 வயது) என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டு, லண்டனிலுள்ள வூட் கிறீன் கிறவுண் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

மேற்படி நபர் தனக்கு திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய்லாமாவுடன் தொடர்பிருப்பதாகவும் அதீத ஆற்றல்கள் தனக்கு கிடைத்துள்ளதாகவும் கூறி, பெண் பக்தைகளை தன் பக்கம் கவர்ந்திழுத்துள்ளார். அவர்களில் 7 பேரை கடந்த 10 வருட காலமாக அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மேற்படி பெண்களில் ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில், தனக்கு ஆன்மிக சக்தியை வழங்குவதாகக் கூறி சாமியார் தன்னை நிர்வாணமாக்கி தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறினார்.

மற்றொரு பெண் சாட்சியமளிக்கையில், மேற்படி சாமியார் மாடிக்குடியிருப்பில் இருந்த அவரது இல்லத்திற்கு தன்னை அழைத்து சென்றதாகவும் தன் மீது நறுமண தெளிப்பான் ஒன்றைத் தெளித்து புரியாத வார்த்தைகளைக் கூறி முணுமுணுத்தபடி தனது கழுத்தை நெரித்துப் பிடித்து குற்றச் செயலை புரிந்ததாகவும் தெரிவித்தார்.

வட லண்டனில் பெல்சைஸ் பார்க் எனும் இடத்தில் வசிக்கும் மைக்கல் லையன்ஸ் என்ற இந்த போலிச் சாமியார், தன்மீது சுமத்தப்பட்ட பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

இந்நிலையில், அவர் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சட்டத்தரணியான பிலிப் சாட்ஸ் தெரிவித்தார்.

புதுமாத்தளனிலிருந்து மேலும் 540 பொதுமக்கள் புல்மோட்டை வருகை

green-ocean.jpgமுல் லைத்தீவு, புதுமாத்தளன் பகுதியிலிருந்து மேலும் 540 பொதுமக்கள் கப்பல் மூலம் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். கடற்படையினரின் வழித்துணையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ‘கிரீன் ஓஷன்’ கப்பல் மூலம் இதுவரை 16 தடவைகள் பொது மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படையின் பதில் பேச்சாளர் கொமாண்டர் மஹேஷ் கருணாரட்ன தெரிவித்தார்.

நேற்று முன்தினம் இரவு இந்தக் கப்பல் புல்மோட்டையை வந்தடைந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். கடற்படையினரால் அழைத்து வரப்பட்ட 540 பொதுமக்களில் 229 பெண்கள், 167 ஆண்கள் மற்றும் 144 சிறுவர்களும் அடங்கு வதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அழைத்துவரப்பட்டவர்களில் நோய்வாய்ப் பட்டவர்களுக்கு கடற்படையினர் அவசர முதலுதவி வழங்கிய பின்னர் புல்மோட்டை யிலுள்ள இந்திய மருத்துவக் குழுவினரிடம் சிகிச்சைக்காக ஒப்படைத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் பாதுகாப்பு அதிகரிப்பு

army-refg.jpgமுல் லைத்தீவு மாவட்டத்தில் உக்கிரமாக மோதல்கள் நடைபெறுகின்ற போர்ப்பிரதேசத்தில் இருந்து கடந்த சில தினங்களாக மீண்டும் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு வந்துள்ளதாக இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

இதுவரையில் இவ்வாறு 61 ஆயிரம் பேர் வந்துள்ளதாகவும், இவர்களில் பெரும்பான்மையானவர்கள் வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் நலன்புரி நிலையங்களிலும், நிவாரண கிராமங்களிலும் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது.

வவுனியா பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளில் இடம்பெயர்ந்து வந்துள்ளவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் அதேவேளை, வவுனியா நகரம் உள்ளிட்ட முக்கிய பிரதேசங்கள் பலத்த பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

வீதிச் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இடம்பெயர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் நலன்புரி நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, இதற்கிடையில் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்தி்ற்குச் செல்லும் முக்கிய வீதியான ஏ9 வீதியில் படையினரும், யாழ்ப்பாணத்திற்கான அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோக நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதனால், இராணுவ வாகனத் தொடரணிகள் செல்லும் போது, இந்த வீதியின் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது