கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

606 பேர் அரச பகுதிக்கு வருகை

_mullai_1.jpgபாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து 173 பெண்கள், மற்றும் 242 குழந்தைகள் உட்பட 606 பேர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நேற்று முன்தினம் மாலை வந்துள்ளதாக ஊடக மத்திய நிலையம் நேற்று தெரிவித்தது. 173 பெண்களும், 193 ஆண்களும், 112 சிறுவர்களும், 130 சிறுமிகளும் இதில் அடங்குவதாகவும் ஊடக மத்திய நிலையம் தெரிவிக்கிறது.

முல்லைத்தீவு இராமநாதபுரம் பகுதியில் படையினர் தொடர்ந்தும் மேற்கொண்டு வரும் தேடுதலின் போது பெருந்தொகையான ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர். 60 எம்.எம். மோட்டார் குண்டுகள், எம்.பி.எம்.ஜி. குண்டுகள், 6 லைனர்கள், 4 கிரேன்டுகள், 55 வரை படங்கள், புலிகளின் சீருடை ஒன்று, புலிகளின் தொப்பிகள் 25 என்பவற்றையும் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தவர்களுள் எவரும் காயமடைந்திருக்கவில்லை எனவும் ஊடக மத்திய நிலையம் தெரிவிக்கிறது.

கடத்தலை தொடரும் சோமாலிய கடற்கொள்ளையர்கள்

caption.jpgஅமெரிக்க கடற்படை கப்பல்களுக்கும், அமெரிக்கர் ஒருவரை பணயமாக பிடித்து வைத்துள்ள சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கும் இடையிலான இழுபறிகள் தொடருகின்ற நிலையில், ஏடன் வளைகுடாவில் மேலும் இரு சம்பவங்கள் இடம்பெற்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

16 அமெரிக்க சிப்பந்திகளுடனான அமெரிக்க இழுவைப் படகு ஒன்று கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக மரிடைம் அமைப்பு கூறுகின்றது. பிறிதொரு சம்பவத்தில், கடற்கொள்ளையர்கள்,  இருபத்தாறாயிரம் தொன்கள் எடையுள்ள கடற்கலன் ஒன்றின் மீது சுட்டதாக கூறப்படுகின்றது.

அந்த கப்பலின் தலைமை மாலுமியின் அறையை நோக்கி அவர்கள் கைக்குண்டை ஏவியதாகவும், ஆனாலும், அது வெடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. கப்பல் சிப்பந்திகள் கடற்கொள்ளையர்களை தண்ணீர் குழாய்கள் மூலம் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக வேட்பாளர்கள் மாற்றம் – தேமுதிகவிலும் ஒருவர் மாற்றப்பட்டார்

jaya.jpgதிருவள்ளூர் (தனி), பெரம்பலூர் தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் மீது புகார்கள் வந்ததால் இந்த முடிவை ஜெயலலிதா எடுத்ததாக தெரிகிறது. அதிமுக கூட்டணியில் பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு 17 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, 23 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.

இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த 9ம் தேதி வெளியிட்டார். இதையடுத்து, தேர்தல் பணிகளை அதிமுக வேட்பாளர்கள் தொடங்கிவிட்டனர். இந்நிலையில், சில வேட்பாளர்கள் மீது கட்சித் தலைமைக்கு ஏராளமான புகார்கள் சென்றன. இதுகுறித்து, கட்சி நிர்வாகிகள் மூலம் விசாரிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில்  திருவள்ளூர் (தனி) மற்றும் பெரம்பலூர் தொகுதிகளின் வேட்பாளர்களை ஜெயலலிதா அதிரடியாக நேற்று மாற்றினார். அதனால், 2 வேட்பாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

earth_indo.jpg
இந்தோனேஷியாவில் நேற்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் கடும் பீதியடைந்தனர்.

இந்தோனேஷியாவில் வடக்கு சுமத்ரா தீவின் தென்மேற்கு பகுதியில் உள்ள குனாங் சிடொலி பகுதியில் நேற்று காலை 8.59 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.சுமார் 20 அடி ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியிருந்தது.

இதனால், வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் கடும் பீதியடைந்தனர்.எனினும் இதனால் ஏற்பட்ட சேதவிபரம் உடனடியாக தெரியவில்லை.

ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு ஒத்திவைப்பு

protest_afp.jpgதாய்லாந்தில் நேற்று சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2009   தொடங்குவதாக இருந்த இந்தியா – தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு, பாதுகாப்பு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தியா – தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு தாய்லாந்தில் உள்ள பட்டாயா நகரில் நேற்று தொடங்குவதாக இருந்தது. இதில் பங்கேற்பத்ற்காக இந்திய பிரதமர் மன்மோகன்சிங் சார்பாக மத்திய வர்த்தக துறை அமைச்சர் கமல்நாத் ஏற்கனவே தாய்லாந்து வந்துள்ளார்.

இந்நிலையில், தாய்லாந்தில் பிரதமர் அபிசித் விஜ்ஜாஜிவாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.அவர் பதவி விலகும்படி வலியுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2009   மாநாடு நடைபெறவிருந்த இடத்துக்கு முன்பு திரண்ட ஆயிரத்துக்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள், மாநாட்டு அரங்கத்தின் கண்ணாடி கதவுகளை அடித்து நொறுக்கினர். இதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக மாநாடு ரத்து செய்யப்படுவதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.

கட்டுப்பாட்டு விலையிலும் குறைவாக சந்தையில் பாவனைப் பொருட்கள்- அமைச்சர் பந்துல

bandula_gunawardena.jpgபருப்பு, சீனி உட்பட முக்கிய பாவனைப் பொருட்களுக்கு அரசு கட்டுப்பாட்டு உச்ச விலையை அறிவித்தபோதும் அக்கட்டுப்பாட்டு விலைகளுக்கும் குறைவாகவே சந்தையில் அப்பொருட்கள் விற்கப்படுகின்றன என வர்த்தக, சந்தை  அபிவிருத்தி,  கூட்டுறவு, மற்றும் பாவனையாளர் சேவைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் தொடாந்தும் கூறுகையில்,

கடந்த வருட புதுவருடத்தை விட இவ்வருடம் பாவனைப் பொருட்கள் மிகவும் குறைந்த விலையில் பாவனையாளர்களுக்கு கிடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேங்காய் எண்ணெய் ஒரு போத்தல் 100 ரூபாவாக நேற்று முதல் குறைக்கப்பட்டுள்ளது. தேங்காய் மற்றும் முட்டை என்பன விலை குறைந்துள்ளன.; போட்டி வர்த்தகத்துக்கு இடமளிக்கப்பட்டதே இதற்கான காரணமாகும்.

பாவனைப் பொருட்களின்  விலை அதிகம் வீழ்ச்சியடைவதால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பும் அரசாங்கத்து உண்டு. கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்ட பொருட்கள் பெக்கட்டுக்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்போது அவற்றுக்கு கட்டுப்பாட்டு விலை செல்லுபடியாகாது என நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வைத்து சில் வர்த்தகர்கள் அப்பொருட்களை கூடுதல் விலைக்கு விற்கின்றனர் என முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. தனியார் திறந்த பொருளாதாரக் கொள்கையை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன முதன்முதலாக அமுல்படுத்தினார். ஆனால் நாட்டுக்குப் பொருத்தமான  உண்மையான திறந்த பொருளாதாரக் கொள்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிமுகப்படுத்தியுள்ளார்

இதன் மூலம் அரசாங்கமும்  தனியார் துறையினரும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையமும் பொதுவான நன்மைகளை அடைந்துகொள்ள வழி ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

மேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக இதுவரை 81 வன்முறைச் சம்பவங்கள் பதிவு

election_ballot_cast.jpgமேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக இதுவரை 81 வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 4 மணிவரையான காலப்பகுதியிலேயே இவ் எண்ணிக்கையான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இவ்விடயம் தொடர்பாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; மேல்மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக இதுவரை 28 பாரியளவிலான வன்முறைச் சம்பவங்களும் 53 சிறுவன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. அத்துடன், கடுவெல தேர்தல் தொகுதியிலேயே அதிகளவான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதுவரை நடைபெற்ற வன்முறைகளில் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதுடன் ஒருகொலை முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை, 6 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. மாவட்ட அடிப்படையில் கொழும்பில் 33 வன்முறைச் சம்பவங்களும் கம்பஹாவில் 25 வன்முறைச்சம்பவங்களும் களுத்துறையில் 23 வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், கட்சி அடிப்படையில் ஐ.ம.சு. முன்னணிக்கு எதிராக 21 சம்பவங்களும், ஐ.தே.க.வுக்கு எதிராக 07 சம்பவங்களும் ஜே.வி.பி.க்கு எதிராக 01 சம்பவமும் ஏனைய கட்சிகளுக்கு எதிராக 52 சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

68, 863 மக்கள் விடுவிக்கப்பட்ட பகுதிக்கு வருகை

udaya_nanayakkara_brigediars.jpgபுலிகளின் கட்டுப்பாட்டை மீறி பாதுகாப்பு வலயத்தில் இருந்து மேலும் 200 பொது மக்கள் இன்று (ஏப். 11) காலை இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர். புலிகளிடமிருந்து தப்பித்து இதுவரையில் 68, 863 பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுக்கு வந்து சேர்ந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேறி மக்கள் பாதுகாப்பாக  அரச கட்டுப்பாட்டிற்கு வருவதற்கான வழிகளை படையினர் அடையாளப்படுத்தி காட்டியுள்ளதாகவும் இதற்கென ஒலி பெருக்கிகள் மூலம் அறிவித்தல்களை தொடர்ந்து ஒலிக்க விட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடரும் கடும் மழையினால் இடம்பெயர்ந்து பாதுகாப்பு வலயத்திலுள்ளோர் பெரும் அவலம்

rain-wanne.jpgதற்போது தொடரும் கடும் மழையினால் இடம்பெயர்ந்து பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்கள் மேலும் கஷ்ட நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் பா. பார்த்தீபன் தெரிவித்துள்ளதுடன், சிறுவர்களே இதனால் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இடைநிலை காலநிலையினால் முல்லைத்தீவிலுள்ள புதுமாத்தளன், அம்பலவன் பொக்கணையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை பிற்பகல் மழை பெய்தது.

அதேவேளை, நேற்று வெள்ளிக்கிழமை பரவலாக தொடராக மழை பெய்துவருகின்றது. இதனால் இடம்பெயர்ந்து கூடாரங்களில் உள்ள மக்கள் மேலும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள கூடாரங்களிலுள்ள துவாரங்கள் காரணமாக ஒழுக்கு ஏற்பட்டு சிறுவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது உணவுப் பற்றாக்குறை காணப்படுகின்ற நிலையில் கடந்தவாரம் கப்பலில் வந்த 110 மெற்றிக்தொன் உணவுப் பொருட்களை விநியோகித்து வருகின்றோம். மேலும், உணவுப் பொருட்கள் தேவையாகவுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சீரற்ற காலநிலையால் கப்பல் திருமலை திரும்பியது

புதுமாத்தளன் பகுதியிலுள்ள அவசரமாக சிகிச்சை பெற வேண்டிய நோயாளர்கள் மற்றும் காயப்பட்டவர்களை புல்மோட்டைக்கு அழைத்துவரும் நோக்கில் புறப்பட்ட சேருவில கப்பல் சீரற்ற காலநிலை காரணமாக திரும்பிவிட்டது. நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு திருகோணமலையிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்க வழித்துணையுடன் சேருவில கப்பல் சென்றது. இக்கப்பல் நேற்று காலை 7 மணியளவில் புதுமாத்தளன் கரையை அடைந்ததாக முல்லைத்தீவு மாவட்ட சுகாதார பணிப்பாளர் டாக்டர் ரி. வரதராஜா தெரிவித்தார்.

எனினும், காலநிலை சீரின்மையால் கடல்கொந்தளிப்பையடுத்து நோயாளர்களையும் காயப்பட்டவர்களையும் கப்பலில் ஏற்றுவது சிரமமானதென்பதால் அக்கப்பல் பிற்பகல் 2 மணிக்கு திருமலை நோக்கி புறப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, புதிதாக நேற்று வெள்ளிக்கிழமை மாலை இக்கப்பலில் கொண்டுவரப்படும் அவசர மேலதிக சிகிச்சைக்காக அழைத்துவரப்படுவோருக்கென புல்மோட்டை கள வைத்தியசாலை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.