கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

ஏப்ரல் 27ஆம் திகதி. சர்வதேச கிரபிக்ஸ் வடிவமைப்பு தினம் (World Graphic Design Day) – புன்னியாமீன்

world-graphic-design-day.jpgஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 27ஆம் திகதி சர்வதேச கிரபிக்ஸ் வடிவமைப்பு தினம் (World Graphic Design Day  சர்வதேச ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. 1995ஆம் ஆண்டிலிருந்து வரைபட அலங்காரத்திற்கான உலக அமைப்பு இத்தினத்தை ஏப்ரல் 27ஆம் திகதி கொண்டாடி வருகின்றது.

ஆரம்ப காலங்களில் வரைபடக் கலையென்பது தற்போதைய காலகட்டத்தில் பிரபல்யம் பெற்றிருக்கவில்லை. குறிப்பாக Graphic Design  வளர்ச்சியானது அண்மைக்காலத்திலேயே மிகவும் துரித வளர்ச்சி கண்டு வருகின்றது. Graphic Design  எனும்போது இது ஒரு கலை. நவீன தொலைதொடர்பு சாதன வளர்ச்சியுடன் இக்கலையானது வேறு கோணத்தில் வளர்ச்சியடைந்து இன்று நவீன தொழில்நுட்பத்துடன் கணனித்துறையில் இணைந்து முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது. ஆரம்ப கட்டங்களில் Graphic என்பது வரைபடத்துடன் சுருங்கிக் காணப்பட்டாலும்கூட, எதிர்காலத்தில் இத்துறையானது ஒரு இன்றியமையாத் துறையாக விளங்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

Graphic தினம் எனும்போது இத்துறையில் ஈடுபடக்கூடியவர்களில் கௌரவித்து, மதிப்பளிக்கும் அதேநேரத்தில் இத்துறையின் தொழில் ரீதியான முக்கியத்துவத்தை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்துவதையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இத்தினத்தின் முக்கியத்துவம் வளர்ச்சியடைந்த நாடுகளில் காணப்படுவதைப்போல இலங்கை இந்திய போன்ற வளர்முக நாடுகளில் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுவதில்லை. 1990களில் இணையத்தள அறிமுகத்துடன் Graphic  என்பது ஒரு அத்தியாவசியமான துறையாக பரிணமித்துள்ளது. குறிப்பாக இணையத்தள வடிவமைப்புகள் வெப் பேஜ் வடிவமைப்புகள் Graphic உடன் இணைந்தவை. இத்தினத்தின் முக்கியத்துவதை உணர்ந்து இத்தினத்தை அனுஸ்டித்துக் கொண்டாடுமிடத்து Graphic வடிவமைப்புத்துறையில் ஏற்பட்டு வரும் அபிவிருத்திகள் மக்கள் மத்தியில் உணர்த்தப்படக் கூடியதாக அமையலாம். குறிப்பாக இத்தினத்தன்று Graphic   வடிவமைப்பு தொடர்பான பல்வேறுபட்ட கருத்தரங்குகள் மேலும் போட்டி நிகழ்ச்சிகள் ஈடுபட்டோருக்கான கௌரவிப்பு நிகழ்வுகள் என்பன முக்கியத்துவப்படுத்தப்படுகின்றன. எதிர்காலத்தில் இத்துறையின் முக்கியத்துவத்தினூடாக இத்தினம் பற்றிய கெண்டாட்டங்கள் இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலும் அதிகளவுக்கு முக்கியத்துவம் பெறுமென எதிர்பார்க்கலாம்.

pmpuniyameen@yahoo.com

வன்னியிலிருந்து வந்தவர்கள் தங்க வவுனியாவில் மேலும் 5 பாடசாலைகள்

Wanni_War_Welfare_Camp
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை தங்கவைப்பதற்கு புதிதாக ஐந்து பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டு மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தாண்டிக்குளம் அரசினர் தமிழ்க்கலவன்பாடசாலை, கந்தபுரம் வாணி வித்தியாலயம், பூவரசன்குளம் மகாவித்தியாலயம், ஆண்டியாபுளியங்குளம் வித்தியாலயம், முதலியார்குளம் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே நலன்புரி நிலையங்களாக இயங்கத் தொடங்கியுள்ளன.

ஓமந்தைக்கு இராணுவத்தினரால் கூட்டிவரப்படும் இடம்பெயர்ந்த மக்கள் மேற்படி பாடசாலைகளிலுள்ள நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஏற்கனவே 15 தற்காலிக நலன்புரி நிலையங்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மெனிக்பாம் வலயம் இரண்டு ஆனந்தகுமாரசாமி நிவாரண கிராமத்திற்கு வியாழக்கிழமை மட்டும் ஒன்பதாயிரம் பேர் கூட்டிச் செல்லப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமையும் ஆயிரக்கணக்கானோர் வந்து சேர்ந்துள்ளனர்.

பாதுகாப்பு வலயத்தை மீட்டெடுக்க இன்னும் 4 நாட்கள்

images-army.jpgதற்பொழுது இடம்பெற்றுவரும் மனிதாபிமான இராணுவ நடவடிக்கைகள் இன்னும் நான்கு நாட்களுக்குள் முடிவுக்கு வரும் என பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். பொதுமக்களை மீட்கும் பணியினை படையினர் மிகவும் அவதானத்துடன் மேற்கொண்டு வருகின்றனர். எந்தவொரு கனரக ஆயுதங்களையும் பயன்படுத்தாது துப்பாக்கிகளை மட்டும் பயன்படுத்தி முன்னேறி வருகின்றனர் என கூறினார்.

இராணுவத் தளபதி வன்னிக்கு விஜயம்

sarath-fonseka.jpg வவுனியாவுக்கு நேற்று சனிக்கிழமை காலை இராணுத் தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகா விஜயமொன்றை மேற்கொண்டார்.  முல்லைத்தீவு, புதுமாத்தளன் மோதல் தவிர்ப்பு வலயத்தில் இடம் பெறும் படை நடவடிக்கை குறித்து ஆராயும் நோக்கிலேயே சிரேஷ்ட அதிகாரிகள் சிலர் சகிதம் இராணுவத் தளபதி இந்த விஜயத்தை மேற்கொண்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அங்கு இடம்பெற்ற முக்கிய சந்திப்பில் கலந்து கொண்ட வன்னிக்கான கட்டளைத்தளபதிகள், வன்னியில் புலிகள் எஞ்சியிருக்கும் பகுதியின் நிலைமைகள் குறித்து இராணுவத் தளபதிக்கு விளக்கம் கூறினார். எதிர்வரும் நாட்களில் அந்தப்பகுதிகளில் மேற்கொள்ளவுள்ள படை நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளித்த இராணுவத்தளபதி அதற்கான உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

28 சடலங்கள் வவுனியாவில் அடக்கம்

வவுனியா பொதுவைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 28 சடலங்கள் மாவட்ட நீதிவானின் அனுமதியுடன் பூந்தோட்டம் பொதுமயானத்தில் கடந்த புதன்கிழமை இரவு அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அடையாளம் காணப்பட்டு உறவினர்களினால் எடுத்து செல்லப்படாததும், அடையாளம் காணப்படாததுமான சடலங்கள் சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்தன. இடநெருக்கடியும் சடலங்கள் பழுதடைந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியதனைத் தொடர்ந்து இவை அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டன.

ஒரே குழியில் 28 சடலங்களும் போடப்பட்டே அடக்கம் செய்யப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இடம்பெயர்ந்தோருக்கு உடனடியாக 155 மில்லியன் டொலர் நிதி தேவை – அரசு, ஐ.நா., 40 நிவாரண அமைப்புகள் கோரிக்கை

cvili.jpgமோதல் பகுதியிலிருந்து வெளியேறி முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்போருக்கு உடனடி நிவாரண உதவி வழங்க நிதி உதவி தேவைப்படுவதாக உதவி வழங்கும் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்திருக்கும் அதேசமயம், ஐ.நா.வும் அரசாங்கமும் 40 நிவாரண முகவரமைப்புகளும் 155 மில்லியன் டொலர் தேவையென கோரிக்கை விடுத்துள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மோதல் பகுதியிலிருந்து வெளியேறி நிராதரவாகவிருக்கும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு உதவியளிக்குமாறு வேண்டுகோளை விடுத்துவரும் உதவிவழங்கும் அமைப்புகள் பல மில்லியன் டொலர்களை திரட்டுவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இடம்பெயர்ந்தோரை தங்கவைக்கும் முகாம்கள் நிரம்பி வழிகின்றன. நாற்காலி வைக்கும் இடத்தின் அளவுடைய பகுதியில் சில குடும்பங்கள் இருப்பதாக நிவாரணப் பணியாளர்கள் கூறுவதாக “ரிலீவ்வெப்’ இணையத்தளம் தெரிவித்தது.

மருத்துவமனைகளும் காயப்பட்டடோராலும் நோயாளர்களாலும் நிரம்பியுள்ளன. மோசமான காயங்களுடன் மோதல் பகுதியிலிருந்து கொண்டுவந்து அனுமதிக்கப்படுவோருக்கு மருத்துவர்கள் இரவுபகலாக சிகிச்சையளித்து வருகின்றனர். இந்த மக்களுக்கு அடிப்படை நிவாரண உதவிகளை வழங்குவதற்கு நிதியுதவி அதிகளவு தேவைப்படுவதாக இலங்கைக்கான ஐ.நா.வின் வதிவிடப்பிரதிநிதி நீல்புனே கூறியுள்ளார்.

குழந்தைகள் வயிற்றோட்டத்தாலும் சிறுவர்கள்,பெண்கள் போஷாக்கின்றியும் காயமடைந்தவர்களையும் நான் பார்க்கின்றேன். மோதல்பகுதியிலிருந்து மாதக்கணக்காக உடுத்தியிருந்த ஆடையுடன் ஆட்கள் வந்துள்ளதையும் பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார். வவுனியாவுக்கு சென்று முகாம்களின் நிலைமையை பார்வையிட்டு திரும்பியிருந்த நீல்புனே இந்த மக்களில் பலர் ஒருவருடத்துக்கு முன்பே தமது வீடுகளிலிருந்து யுத்தம் காரணமாக வெளியேற பலவந்தமாக நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் என்றும் அந்த மாதிரியான மோசமான சூழ்நிலையிலிருந்தும் இவர்கள் உயிர்தப்பி வாழ்வது ஏதோவொரு அற்புதம் எனவும் புனே கூறியுள்ளார்.

இலங்கைக்கு உதவி வழங்க ஐ.நா. வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இந்த இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு, புகலிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க உதவும் முகவரமைப்புகள் நிதிப்பற்றாக்குறையினால் திண்டாடுகின்றன. 196,000 பேர் வெளியேறியிருப்பதாக அரசு கூறுகிறது. இவர்களில் அநேகமானோர் வவுனியாவிலுள்ள முகாம்களில் தங்கியுள்ளனர். முதலில் இடம்பெயர்ந்தவர்கள் மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் தங்கியுள்ளனர். விரைவில் இவர்களுக்கு முகாம்களை அமைப்பதற்கான இடங்களை தயாராக்குமாறு ஐ.நா. அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

பொருத்தமான நிலத்தை வழங்குவதில் அரசு தாமதம் காட்டுவதாகவும் தற்காலிக முகாம்களுக்கான உள்சார் கட்டமைப்பு வசதிகளுக்கு செலவிட உதவி வழங்கும் குழுக்களால் எவ்வளவு தொகையை. செலவிட முடியும் என்பதில் யதார்த்தபூர்வமற்ற எதிர்பார்ப்புகளை அதிகாரிகள் கொண்டிருப்பதாகவும் நிவாரணப் பணியாளர் ஒருவர் தெரிவித்ததாக ரிலீவ் வெப் கூறியுள்ளது. பலர் உடுத்த ஆடையுடனேயே எதுவுமின்றி வந்துள்ளனர். பசியுடனும் தாகத்துடனும் இருக்கும் அவர்களுக்கு சிறியளவு உணவும் நீருமே கிடைக்கிறது. அன்புக்குரியவர்கள் கண் முன்னால் கொல்லப்படுவதைக் கண்ட பலர் நினைவாற்றல் இல்லாதவர்களாக பிரமை பிடித்தவர்களாக உள்ளனர்.

இடம்பெயர்ந்தவர்களுக்கான அவசரப் புகலிடங்கள் , மலசல கூடங்களை அமைக்கவும் 9 மில்லியன் டொலர் நிதியுதவி தேவையென செயலர் அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  உணவு , ஆடைகள், படுக்கைகள், சுகாதார வசதிகள் என்பவற்றை வழங்கிவரும் சேவ்த சில்ரன் அமைப்பு 3.65 மில்லியன் டொலர் தேவையென வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தக் குடும்பங்கள் சகலவற்றையும் இழந்துவிட்டன. சிறுவர்கள் உளரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சேவ்த சில்ரன் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் பிரசாத் நாயக் தெரிவித்துள்ளார்.  நிதி மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருப்பதாகவும் பொதுமக்கள் அதிக அளவில் உதவவேண்டும் என்றும் ?கிறிஸ்ரியன் எய்ட், அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. புகலிடம், உணவு, நீர், சுகாதார வசதி, ஆடை, படுக்கை, நுளம்பு வலைகள் மற்றும் உளவியல் ரீதியான ஆதரவு உடனடியாக தேவைப்படுவதாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா.வும் அரசாங்கமும் சுமார் 40 உதவி வழங்கும் அமைப்புகளும் 2 இலட்சம் பேருக்கு உதவுவதாகவும் 155 மில்லியன் டொலர் தேவையென வேண்டுகோள் விடுத்துள்ளன. அதேசமயம், தேவைப்படும் தொகையில் 31 சதவீதமே அதாவது 48 மில்லியன் டொலரே கிடைத்திருப்பதாக ஐ.நா. பேச்சாளர் கோர்டொன் வைஸ் கூறியுள்ளார்.

உணவுக்கான உதவி 60 சதவீதம் கிடைத்திருப்பதாகவும் ஆனால் தங்குமிடத்திற்கு 18 சதவீதமே கிடைத்திருப்பதாகவும் நீர், சுகாதார வசதிகளுக்கு 16 சதவீதமும் சுகாதார வசதிகளுக்கு 15 சதவீதமும் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்ததுடன் இது மிகவும் பற்றாக்குறையாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். உடனடி மனிதாபிமான உதவிகள் வழங்க உதவி வழங்குவோர் விரும்புவதாகவும் ஆனால் நீண்டகாலத்துக்கு இடைத்தங்கல் முகாம்களுக்கு நிதியுதவி வழங்க தயங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இன்று மன்மோகன் சிங்கை நோக்கி ஷூவை வீச முயற்சி – குஜராத்தில் பரபரப்பு

manmohan1.jpgகுஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங்கை நோக்கி ஒரு நபர் ஷூவை வீச முயன்றார். ஆனால் போலீஸார் பாய்ந்து சென்று அந்த ஷூவை மடக்கிப் பிடித்து விட்டனர். அந்த நபரும் கைது செய்யப்பட்டார். அகமதாபாத்தில் இன்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டார். அவர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு நபர் ஷூவை எடுத்து அவரை நோக்கி வீச முயன்றார்.

ஆனால் இதைப் பார்த்து விட்ட போலீஸார் பாய்ந்து சென்று அந்த நபரை மடக்கினர். இதனால் ஷூ பாதியிலேயே விழுந்து விட்டது. பின்னர் அந்த நபரை குண்டுக்கட்டாக அங்கிருந்து கொண்டு சென்றனர். ஷூ வீசிய நபருக்கு 25 வயதுக்குள் இருக்கலாம். அவர் யார், எந்த ஊர், என்ன பெயர், எந்த அமைப்பைச் சேர்ந்தவர் என்பது குறித்துத் தெரியவில்லை. இந்த சம்பவத்தால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

இந்த மாதத் தொடக்கத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது சீக்கிய பத்திரிக்கையாளர் ஷூ வீசினார். இதுதான் இந்தியாவில் சமீப காலத்தில் நடந்த முதல் பரபரப்பு ஷூ வீச்சு சம்பவம். இதையடுத்து காங்கிரஸ் எம்.பி. நவீன் ஜின்டால், அன்வர் உசேன் ஆகியோர் மீதும், அத்வானி மீது செருப்பும் வீசப்பட்டது. இந்த நிலையில் பிரதமரை நோக்கி ஷூ வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார் – லாரி மோதல் – அதிர்ஷ்டவசமாக நெடுமாறன் உயிர் தப்பினார்

neduma2.jpg இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் சென்ற கார் மீது டேங்கர் லாரி மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக நெடுமாறன் உயிர் தப்பினார்.பழ.நெடுமாறன் நேற்று மாலை மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.

அவர் பயணித்த கார் சேந்தன்குடி என்ற இடத்தில் வந்தபோது, எதிரே காஸ் நிரப்பிக் கொண்டு வந்த டேங்கர் லாரி பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. இருப்பினும் நெடுமாறன் உள்பட காரில் இருந்த யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

விரைந்து வந்த சீர்காழி போலீஸார், லாரியை ஓட்டி வந்த முசிறியைச் சேர்ந்த கணபதி என்பவரைக் கைது செய்தனர்.

கூடாரங்கள், அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு அவசரமாக அனுப்புகிறது யூ.என்.எச்.சி.ஆர்.

new_welfare.png
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வரும் மக்களின் அவசர தேவைகளுக்காக கூடாரங்கள் மற்றும் பொருட்களை இலங்கைக்கு அனுப்பும் அவசர பணிகளைத் தாங்கள் ஆரம்பித்துள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகராலயம் (யு.என்.எச்.சி.ஆர்) தெரிவித்துள்ளது. வன்னியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகளையடுத்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்களுக்கு வந்துள்ளனர்.

வவுனியா, மன்னார், யாழ்.குடாவில் இந்த மக்கள் பாடசாலைகளிலும் பொட்டல் வெளிகளில் கூடாரங்கள் அமைக்கப்பட்டும் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். எனினும் இந்த மக்களுக்கான தங்குமிட வசதிகள் மிகவும் குறைவாயுள்ள நிலையில் யு.என்.எச்.சி. ஆர் தனது அவசர உதவிப் பணிகளை ஆரம்பித்துள்ளது. இதன் முதல்கட்டமாக கூடாரங்கள் மற்றும் பொருட்களை விமான மூலம் கொழும்புக்கு அனுப்பும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தேவையான. ஐயாயிரம் கூடாரங்களும் வேறுபொருட்களும் அடுத்த ஓரிரு தினங்களில் விமானங்கள் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்படவுள்ளன. அந்தக் கூடாரங்கள் தற்போது வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் 38 முகாம்களிலுள்ளவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.

பிரபாகரனுக்கு இன்னும் 20வருடம் போராடக்கூடிய சக்தி இருக்கிறது: ராமதாஸ்

india-election.jpg பிரபாகரனை யாராலும் பிடிக்க முடியாது. பிரபாகரனுக்கு இப்போது வயது 54. இன்னும் 20 ஆண்டுகாலம் போராடக்கூடிய சக்தி அவருக்கு இருக்கிறது. சைதாப்பேட்டை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசினார்.  அப்போது அவர், தெர்டர்ந்து பேசியதாவது:-

’’இலங்கையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி, வெளியுறத்துறை செயலாளர் சிவ்சங்கர் மேனன், தேசிய ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் இலங்கை அரசிடம் போர் நிறுத்தத்தை வலியுறுத்தவில்லை.  ஈழத்தமிழர்களுக்கு இந்திய அரசு சவப்பெட்டிகளை செய்து அனுப்புகிறது. அங்கே கொத்து கொத்தாக குண்டுகளை போட்டு இலங்கை தமிழர்களை கொல்கிறார்கள்.

தமிழர்களை வேகமாக கொல்லுங்கள் என்று சொல்வதற்காக தான் இந்திய மந்திரியும், அதிகாரிகளும் இலங்கைக்கு சென்றிருக்கின்றனர். ஏழைகளை ஒழித்து விட்டால் வறுமை இருக்காது என்று சொல்லும் கூட்டத்தை போல தமிழர்களை ஒழித்து விட்டால் பிரச்சினை இருக்காது என்று கருதுகிறார்கள். அமெரிக்கா கூட இன்றும், போரை நிறுத்து என்று இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. ஆனால் இனவெறி ஆட்சியை நடத்தி வரும் ராஜபக்சே யாருடைய பேச்சையும் கேட்க தயாராக இல்லை.

பிரபாகரனை பிடித்து விடுவார்கள், பிரபாகரனை கொன்று விடுவார்கள் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது போல் பல முறை சொல்லி பிரபாகரனை சாகடித்து இருக்கின்றனர். பிரபாகரனை யாராலும் பிடிக்க முடியாது. பிரபாகரனுக்கு இப்போது வயது 54. இன்னும் 20 ஆண்டுகாலம் போராடக்கூடிய சக்தி அவருக்கு இருக்கிறது.

பிரபாகரனை தீவிரவாதி என்றும், விடுதலைப்புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கம் என்றும் சொல்லி வருகின்றனர். பகத்சிங்கை கூட அப்படித்தான் சொன்னார்கள். சுபாஸ் சந்திரபோசை அப்படித்தான் சொன்னார்கள். விடுதலைக்காக போராடக்கூடியவர்களை அப்படித்தான் சொல்வார்கள்’’ என்று பேசினார்.