கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

473 வன்னி குடும்பங்கள் நெல்லியடியில் தங்கவைப்பு

menikfarm.gifவன்னி யிலிருந்து இடம்பெயர்ந்த 473 குடும்பங்களைச் சேர்ந்த 1,250 பேர் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனால் இப்பாடசாலையில் மாணவர்களுக்கு அருகில் உள்ள வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியில் மாலை நேரங்களில் தற்காலிகமாக வகுப்புக்கள் நடைபெறுகின்றன.

நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் தங்கியுள்ள அகதிகளுக்கு யாழ். அரசாங்க அதிபர் உணவை வழங்கிவருகிறார். ஏனைய உதவிகளை யுனிசெப், யூ.என்.எச்.சி.ஆர்., லீட்ஸ் மற்றும் சேவா லங்கா ஆகிய அரசசார்பற்ற நிறுவனங்கள் செய்துவருகின்றன.

இதேவேளை, இங்கு தங்கியுள்ள சிறுவர்கள், குழந்தைகளுக்கு இராணுவத்தினர் உடுபுடவைகள் வழங்கியுள்ளனர். இங்குள்ள அகதிகளை வெளியார் எவரும் பார்வையிட அனுமதி வழங்கப்படவில்லை.

சரணடைபவர்களை குடாநட்டு நீதிமன்றங்களில் ஆஜர் செய்யலாம்

saran.jpgயாழ் குடாநாட்டில் உயிர் அச்சுறுத்தலகள் காரணமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் சரணடைபவர்களை யாழ் மாவட்டத்தில் இயங்கும் நீதிமன்றங்களில் கையளிக்கலாம் என மேல் நிதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சரணடைபவர்களை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வாகனத்தில் நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லாது தனியார் வாகனங்களில் கொண்டு செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யாழ் குடாநாட்டில் சாவகச்சேரி, பருத்தித்துறை, மல்லாகம், ஊர்காவற்துறை , மற்றும் யாழ்ப்பாணம் நீதிமன்றங்களில் ஆஜர் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தடுப்பு முகாம்களில் கொடுமை – பிரித்தானியாவின் ‘சனல் – 4’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்

chenal-04.jpg பிரித்தானியாவின் ‘சனல் – 4’ காணொலிச் செய்தி நிறுவனம் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது. வன்னியில் இருந்து வெளியேறிய மக்கள் வைக்கப்பட்டுள்ள ‘முகாம்’களில் உணவு இல்லை; இறப்போர்களது உடலங்கள் அந்த இடங்களிலேயே கிடக்கின்றன;. குடும்பங்களிடம் இருந்து பெண்கள் பிரிக்கப்படுகின்றார்கள்; பாலியல் கொடுமைகளுக்கு பெண்கள் உள்ளாக்கப்படுகின்றார்கள்.

பக்கச்சார்பற்ற முறையில் – சுதந்திரமாகப் – படமாக்கப்பட்டதாகக் கூறும் காட்சிகளும் முகாம்களுக்கு உள்ளே இருக்கும் தொண்டர் நிறுவன பணியாளர்களுடனான உரையாடல்களும் காட்சிப்படுத்தப் படுத்தப்பட்டுள்ளன.

இரட்டை வாய்க்காலுக்கு தென்பகுதி மும்முனைகளால் சுற்றிவளைப்பு

udaya_nanayakkara_brigediars.jpgபுலிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் பாதுகாப்பு வலயத்தின் எஞ்சியுள்ள பிரதேசத்தை நோக்கி முன்னேறிவரும் பாதுகாப்புப் படையினர் புலிகளின் கடைசி மறைவிடத்தை நெருங்கிய வண்ணம் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொது மக்களை மீட்டெடுக்கும் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முனனெடுக்கப்படும் அதேசமயம், இரட்டை வாய்க்காலுக்கு தெற்காக உள்ள பிரதேசம் மும்முனைகளில் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வலயத்திற்குள் எஞ்சியுள்ள 4.5 கிலோ மீற்றர் நிலப்பரப்புக்குள் புலிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், இதில் மிகவும் வேண்டப்படும் புலிகளின் தலைவர்கள் பலர் அடங்குவதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவிக்கிறது.

ஏ-35 பிரதான வீதிச் சந்தியிலிருந்து தெற்கிலும் முல்லைத்தீவு நந்திக் கடல் கடல் நீரேரியிலிருந்து வடக்கிலும் சுமார் 500 மீற்றர் நீளத்துக்கு அமைக்கப்பட்டிருந்த மண்அணை ஒன்றை கைப்பற்றிய படையினர் அங்கிருந்து மேலும் 250 மீற்றர் நீளமான பிரதேசத்தை முன்னேறி கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புலிகள் மோட்டார், பீரங்கிகளைப் பயன்படுத்தி படையினரின் முன்னேற்றத்தைத் தடுக்கும் வகையில் கடும் தாக்குதல்களைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்ற போதிலும் பொது மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத வண்ணம் படையினர் பதில் தாக்குதல்களை மேற்கொண்டு முன்னேறி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்திலிருந்து வடக்காகவும், மேற்காகவும் முன்னேறிவரும் இராணுவத்தின் 58 வது மற்றும் 53 வது படைப் பிரிவினரை இலக்கு வைத்து புலிகள் நேற்றைய தினமும் கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதேவேளை வட்டுவாக்கல் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளில் நிலை கொண்டிருந்த இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் தற்போது அங்கிருந்து வடக்கு நோக்கி முனனேற ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.

பிரிட்டிஷ் எம்.பிக்கள் குழு நிவாரண கிராமங்களுக்கு விஜயம்

Wanni_War_IDPs
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு நேற்று (செவ்வாய்) பகல் 2 மணியளவில் செட்டிகுளத்திற்கு விஜயம் செய்தது.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து செட்டிகுளம் மெனிக்பாம் நிவாரணக் கிராமத்தில் தங்கியுள்ள மக்களை சந்தித்த இவர்கள் அங்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளை அவதானித்ததுடன் மக்களிடம் கேட்டறிந்து கொண்டனரென அதிகாரிகள் தெரிவித்தனர்.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வந்த மக்களின் பெரும்பாலானவர்கள் செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக இருப்பிடங்களில் தங்கவைக்கப்பட்டு ள்ளனர். இவர்களுக்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட செயலகம் தெரிவிக்கின்றது.

வவுனியாவில் பாடசாலைகள் உட்பட 24 இடங்களில் இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவில் அருவிதோட்டம், ஆனந்தகுமாரசாமி வலயம் 1, கதிர்காமர், அருணாசலம் வலயம் 3, செட்டிகுளம் மகா வித்தியாலயம், ஆண்டியாபுளியங்குளம் பாடசாலை, இராமநாதன் வலயம் 2 ஆகிய பகுதிகளில் 13 ஆயிரத்து 428 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 785 பேர் தங்கியுள்ளதாக மாவட்ட செயலக புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. ஏனைய 39 ஆயிரத்து 182 பேரும் வவுனியாவில் உள்ள 17 பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

புதுமாத்தளன் – பாதுகாப்பு வலயம்: போதியளவு உணவு அனுப்பிவைப்பு – தட்டுப்பாடில்லை என்கிறது உலக உணவுத்திட்டம்

taking-to-green-ocean.jpgபுதுமாத்தளன் பகுதியில் எஞ்சியுள்ள மக்கள் சீரான முறையில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதில்லை யென்ற புலிகள் இயக்கத்தின் குற்றச்சாட்டை உலக உணவுத் திட்டம் நிராகரித்துள்ளது. அங்கு சீரான முறையில் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் கடந்த பெப்ரவரி 19ம் திகதி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை 3,328 மெற்றிக்தொன் உணவுப் பொருட்கள் அங்கு அனுப்பப்பட்டதாகவும் உலக உணவுத் திட்டத்தின் இலங்கை காரியாலயம் தெரிவித்தது.

புதுமாத்தளனில் உள்ள மக்களுக்கு சீரான முறையில் உணவு அனுப்பப்படுவ தில்லையெனவும், இதனால் அங்குள்ள மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளதாகவும் புலிகள் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள உலக உணவுத் திட்டத்தின் பிரதிப் பணிப்பாளர் அசேட் அஸ்ரத், புதுமாத்தளனுக்கு சீராக உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதில்லையென்ற குற்றச்சாட்டு தவறானது என்று கூறினார். அரசாங்கத்தின் உதவியுடன் புதுமாத்தளனுக்கு கப்பல் மூலம் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் எதுவித தடங்கலும் செய்யவில்லை.

புதுமாத்தளனுக்கு உணவுப் பொருட்களை சேமித்து வைப்பதில் சிக்கல் உள்ளது. அதனால் பெருமளவு உணவுப் பொருட்களை அங்கு அனுப்ப முடியாதுள்ளது. உணவுப் பொருட்கள் பெரிய கப்பலில் எடுத்துச் சென்று அவை சிறிய மீன்பிடிப் படகுகளுக்கு மாற்றப்பட்டு கரைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. சிறிய படகுகளில் 30 தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இவ்வாறு அனுப்பப்படுகின்றன.

புதுமாத்தளனுக்கு உணவுப் பொருட்கள் கிரமமாக எடுத்துச் செல்லப்பட்டு தடையின்றி விநியோகிக்கப்பட்டு வருகிறது. அங்கு உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை எதுவும் கிடையாது எனவும் பிரதிப் பணிப்பாளர் கூறியுள்ளார்.

இது வரை 674 மெற்றிக்தொன் அரிசி, 1074 மெற்றிக் தொன் கோதுமை மா, 29 மெற்றிக்தொன் மரக்கறி மற்றும் சீனி, பருப்பு, எண்ணெய், சோயா கலன், சோளம் என்பன அனுப்பப்பட்டுள்ளன. இதேவேளை நேற்று (5) கப்பல் மூலம் புதுமாத்தளன் பகுதிக்கு மருந்து வகைகள் அனுப்பப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியது.

இலங்கை அகதிகளுக்கான அவசர உதவிகளுக்காக ஐ.நா கோரிக்கை

fily-ap.jpg இலங்கையின் வடக்கே மோதல் நடக்கும் பகுதிகளில் இருந்து தப்பியோடி வரும் மக்களின் உடனடி மனித நேயத் தேவைகளுக்காக ஐக்கிய நாடுகள் சபை 5 கோடி டாலர்கள் அவசர உதவி கோரியுள்ளது.

இலங்கை அரசும், உதவி நிறுவனங்களும் பெருமளவில் இடம்பெயர்ந்தோர்களின் தேவைகளை சமாளிக்க முடியாமல் திணறுவதாக கொழும்பில் உள்ள ஐ நா அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

கடந்த மாதம் ஏராளமானோர் சண்டை நடக்கும் பகுதிகளில் இருந்து வந்ததன் காரணமாக, முகாம்களில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்து தற்போது ஒரு லட்சத்து தொண்ணூறாயிரமாக உயர்ந்திருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

சோனியாகாந்திக்கு எதிரான கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்துக்கு தடை

india-election.jpgஅகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி சென்னை தீவுத்திடலில் இன்று(புதன்கிழமை) நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

சோனியாகாந்திக்கு கறுப்புக்கொடி காட்டப்போவதாக தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது. இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் இந்த போராட்டத்துக்கு தலைமை தாங்குகிறார். சினிமா டைரக்டர் பாரதிராஜா உள்பட ஏராளமான பேர் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணி அளவில் சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகே நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும் – அமைச்சர் அநுர பிரிதர்ஷன யாப்பா

20090424063601srilanka4.jpgஇடம் பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள தமிழ் மக்களும் இந்நாட்டுப் பிரஜைகள். அவர்களுக்கு உதவுவது தங்கள் கடமை என்றும் இதில் அனைவரும் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஊடக தகவல்துறை,  முதலீட்டு அபிவிருத்தி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

இடம்பெயர்ந்தவர்களுக்கு விநியோகிப்பதற்காக கட்டுகம்பளை தேர்தல் தொகுதி மக்களால் சேகரிக்கப்பட்ட பொருட்களை அப்பிரதேச மக்கள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா ஊடாக அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று முற்பகல் தகவல் ஊடகத்துறை அமைச்சில் இடம்பெற்றது.

குறிப்பிட்ட பொருட்களைக் கையேற்று உரை நிகழ்த்திய போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பத்து இலட்சம் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான  குடிநீர் போத்தல்கள், பிஸ்கட், பால்மா,  அரிசி, பருப்பு, சீனி மற்றும் துணிவகைகள் போன்றவை இந்நிகழ்வின் போது கையளிக்கப்பட்டன.

புதிய திட்டங்களை விரிவுபடுத்த கூடாது: நவீன் சாவ்லா

iindias-election.jpg தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான விரிவான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா மற்றும் தேர்தல் கமிஷனர்கள் குரேஷி, சம்பத் ஆகியோர் சென்னை வந்தனர்.

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் நரேஷ் குப்தா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நவீன் சாவ்லா,

தேர்தலையொட்டி புதிய திட்டங்கள் எதுவும் கொண்டு வரவோ அல்லது விரிவுபடுத்தவோ கூடாது என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் அரசியல் நோக்கத்துடன் யாரையும் கைதுசெய்ய கூடாது என்றும் வலியுறுத்தினார். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் பொருட்டு இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார் என்று கூறினார்.