::விளையாட்டு
::விளையாட்டு
இலங்கை மற்றும் சர்வதேச விளையாட்டுச் செய்திகள்.
இந்நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், ஐதராபாத் அணி விர்த்திமான் சஹா, டெல்லி அணியின் அமித் மிஷ்ராவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நடப்பு ஐ.பி.எல் 20-20 தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
மே 30ந்தேதி வரை போட்டிகள் நடைபெறவிருந்த நிலையில் கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் போட்டிகளுக்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில் அதிக தொகைக்கு விலை போனவர் கிறிஸ்மோரிஸ். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஆல்ரவுண்டரான அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.16.25(இந்திய ரூபாய்) கோடிக்கு ஏலம் எடுத்தது.
எந்தவொரு வெளிநாட்டு வீரரும் இவ்வளவு அதிகமான தொகைக்கு ஏலம் போனது கிடையாது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 ஆட்டத்தில் விளையாடி ஒரே ஒரு வெற்றியை மட்டும் பெற்றது. 3 ஆட்டத்தில் தோற்றுள்ளது. டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றிபெற்றது.
இந்த வெற்றிக்கு கிறிஸ் மோரிஸ் முக்கிய காரணமாக இருந்தார். அவரது அதிரடியான ஆட்டத்தால் வெற்றி கிடைத்தது. மற்ற ஆட்டங்களில் அவர் திறமையை வெளிப்படுத்தவில்லை. இதேபோல பந்து வீச்சிலும் எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இந்த நிலையில் கிறிஸ் மோரிஸ் ரூ.16 கோடிக்கு தகுதியானவர் இல்லை என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் கிறிஸ் மோரிசுக்கு வழங்கிய ரூ.16 கோடி அதிகம் என நினைக்கிறேன். அந்த தொகைக்கு அவர் தகுதியான வீரர் இல்லை. தனக்கு அதிகமான விலை கொடுக்கப்பட்டதன் அழுத்ததை மோரிஸ் தற்போது உணர்ந்து வருகிறார். அடுத்த சில போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும் கூட, கிறிஸ் மோரிஸ் நிலையான ஆட்டத்தை அதாவது பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் அளிக்க மாட்டார்.
நாம் அவரைப் பற்றி அதிகமாக பேசுகிறோம் என நினைக்கிறேன். 2 போட்டிகளில் ரன் அடிப்பார். சில போட்டிகளில் காணாமல் போய் விடுவார். இவ்வாறு பீட்டர்சன் கூறியுள்ளார்.
34 வயதான கிறிஸ் மோரிஸ் 4 ஆட்டத்தில் 48 ரன்களே எடுத்துள்ளார். 5 விக்கெட் கைப்பற்றி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது கன்னி இரட்டைச் சதத்தை இலங்கை அணித்தலைவரான திமுத் கருணாரட்ண பதிவு செய்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடித்த 11 ஆவது இலங்கையர் என்ற சிறப்பை திமுத் கருணாரட்ண பெற்றுக்கொண்டார். இதற்கு முன்னதாக பிரெண்டன் குருப்பு, அரவிந்த டி சில்வா, சனத் ஜயசூரிய, ரொஷான் மஹாநாம, மார்வன் அத்தபத்து, மஹேல ஜயவர்தன, ஹஷான் திலகரட்ண, குமார் சங்கக்கார, திலான் சமரவீர, அஞ்சலோ மெத்தியூஸ் ஆகிய 10 வீரர்கள் இலங்கைக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் விளாசியவர்களாவர்.
இலங்கை சார்பாக குவிக்கப்பட்ட இரட்டைச் சதங்களில் குமார் சங்கக்கார 12 இரட்டைச் சதங்களையும் மஹேல ஜயவர்தன 7 இரட்டைச் சதங்களையும் மார்வன் அத்தப்பத்து 6 இரட்டைச் சதங்களையும் சனத் ஜயசூரிய 3 இரட்டைச் சதங்களையும் பெற்றுள்ளனர்.
மேலும், அரவிந்த டி சில்வா, திலான் சமரவீர இருவரும் தலா 2 இரட்டைச் சதங்களை பெற்றுள்ளனர்.
ஏனையோரில் பிரெண்டன் குருப்பு, ரொஷான் மஹாநாம, அஞ்சலோ மெத்தியூஸ், திமுத் கருணாரட்ண ஆகியோர் தலா ஒரு முறை இரட்டைச் சதங்களை விளாசியுள்ளனர்.
இந்நிலையில் பங்களாஷே் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் இன்று போதிய வெளிச்சமின்மை காரணமாக 4.50 மணியளவில் இடைநிறுத்தப்பட்டது.
பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 541 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 512 ஓட்டங்களை பெற்றுள்ளது.
ஆடுகளத்தில் திமுத்து கருணாரத்தன 234 ஓட்டங்களுடனும் தனஞ்சய டி சில்வா 154 ஓட்டங்களுடனும் களத்திலுள்ளனர்.
இந்நிலையில், நாளை 5 ஆவதும் இறுதியும் நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.சி.சி.யின் சர்வதேச ஒருநாள் போட்டியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான பாபர் அசாம் முதலிடம் பிடித்துள்ளார்.
ஐ.சி.சி.யின் சர்வதேச கிரிக்கெட் ஒருநாள் போட்டியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரப்படுத்தல் இன்று வெளியிடப்பட்டது.
இதன்படி சர்வதேச ஒருநாள் போட்டியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் 857 புள்ளிகளுடன் முதலிடத்திலிருந்த விராட் கோஹ்லியை பின்தள்ளிய பாபர் அசாம் 865 புள்ளிகளைப் பெற்று முதலிடத்துக்கு முன்னேறினார்.
முதலிடத்திலிருந்த விராட் கோஹ்லி 856 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டதுடன், ரோஹித் ஷர்மா 825 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இந்த தரப்படுத்தலின் முதல் 10 வீரர்களில் இலங்கையர் எவரும் இல்லை. இந்த தரப்படுத்தலில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அஞ்சலோ மெத்தியூஸ் 575 புள்ளிகளுடன் 39 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிப் பிரிவில் மாத்திரம் இலங்கையர்கள் மூவர் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கைக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கால் பதித்த பங்களாதேஷ், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அண்மையில் நுழைந்த ஆப்கானிஸ்தான் அணிகளின் வீரர்கள்கூட இலங்கையர்களைக் காட்டிலும் சிறப்பான தரவரிசைகளில் உள்ளனர்.
இதில் சர்வதேச இருபதுக்கு 20 தனிநபர் தரப்படுத்தல்களில் லக்சான் சந்தகன், வனிந்து ஹசரங்க மற்றும் சமரி அத்தபத்து ஆகிய மூவரைத் தவிர எவரும் முதல் 10 இடங்களில் இல்லை என்பது கவனிக்கத்தக்க விடயமாகும்.
இதில் சந்தகன் 639 புள்ளிகளுடனும் ஹசரங்க 625 புள்ளிகளுடனும் ஆண்களுக்கான சர்வதேச இருபதுக்கு 20 இன் பந்துவீச்சாளர்களுக்கான தனிநபர் தரப்படுத்தலில் முறையே 9 ஆம் மற்றும் 10 ஆம் இடங்களை வகிக்கின்றனர்.
இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணித்தலைவியான சமரி அத்தப்பத்து பெண்களுக்கான சர்வதேச இருபதுக்கு 20 இன் சகலதுறை தரப்படுத்தலில் 265 புள்ளிகளுடன் 6 ஆவது இடத்தை வகிக்கிறார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் சில வீரர்களின் திறமைகளை சரியான முறையில் பயன்படுத்தாமையே தற்போதைய கிரிக்கெட் வீழ்ச்சிக்கான முக்கிய காரணம் என முன்னாள் இலங்கை அணித்தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தங்களுக்கு எதாவது செய்வதற்கான வாய்ப்பு கிடைக்குமாயின் நூற்றுக்கு நூறு வீதம் தங்களது உழைப்பை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
14-வது ஐ.பி.எல் தொடரில் சென்னை அணி நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் டெல்லி அணியிடம் தோற்றது. 188 ரன் குவித்தும் சென்னை அணி அணியால் வெற்றி பெற முடியவில்லை. அந்த அளவுக்கு அணியின் பந்து வீச்சு பலவீனமாக இருந்தது.
இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மெதுவாக பந்துவீசினார்கள். குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் பந்துவீசாமல் கூடுதல் நேரத்தை எடுத்துக்கொண்டனர்.
இதற்காக ஐ.பி.எல். விதிமுறைப்படி சென்னை அணி தலைவர் டோனி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு ரூ.12 லட்சம் (இந்திய ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். விளையாட்டு விதிப்படி 20 ஓவரை 90 நிமிடங்களில் வீச வேண்டும். அதாவது ஒரு மணி நேரத்தில் 14.1 ஓவரை வீசி முடிக்க வேண்டும். சென்னை அணி பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்து கொண்டதால் டோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.