உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

சிறுவர்களிடையேயான சமூக வலைத்தள பாவனையால் அதிகரிக்கும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் !

நாட்டில் பாடசாலை மாணவர்களிடையே சமூக வலைத்தளங்களின் பாவனை அதிகரித்துள்ள நிலையில், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குடும்ப சுகாதாரப் பணியகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சிறுவர்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் பாலியல் கொடுமைகள் அதிகரிப்பதற்கு பெற்றோரின் பொறுப்பற்ற நடத்தையும் காரணமாகவுள்ளதாகவும் குறித்த பணியகம் தெரிவித்துள்ளது.

எனவே, சமூக வலைத்தளங்களால் தங்களுடைய பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை பெற்றோர்கள் புரிந்துக்கொள்வது மிகவும் அவசியம் என குடும்ப சுகாதாரப் பணியகம் வலியுறுத்தியுள்ளது.

குழந்தைகள் தற்செயலாக ஆபாசமான மற்றும் வன்முறையான சம்பவங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்பதால், பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் இவ்விடயத்தில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் குடும்ப சுகாதாரப் பணியகம் வலியுறுத்தியுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் புதிய நாட்டின் அனைத்து துறைகளும் பலப்படுத்தப்படும். – சுனில் ஹந்துனெத்தி

“பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நடவடிக்கைகள் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் முன்னெடுக்கப்படமாட்டாது” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

காலியில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அரசாங்கம் கடமையை சரிவர செய்யாமையினாலேயே இன்று நாட்டில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

கடந்த 75 வருட ஆட்சி தொடர்பில் மக்கள் அதிருப்தியிலேயே உள்ளனர்.விரைவில் இந்த நாட்டில் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான பொருளாதார கொள்கை திட்டம் எம்மிடம் உள்ளது. இன்று நாட்டில் மக்கள் பல நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர்.

திறந்த பொருளாதாரத்தின் பிரதிபலன்களையே இந்த நாட்டு மக்கள் இன்று அனுபவிக்கின்றனர்.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் புதிய நாட்டின் அனைத்து துறைகளும் பலப்படுத்தப்படும். மக்களுக்கு இடையூறான செயற்பாடுகள் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் முன்னெடுக்கப்படமாட்டாது” இவ்வாறு சுனில்ஹந்தனெத்தி தெரிவித்துள்ளார்.

தமிழர் தரப்பிற்கு நேரம் பேசும் சக்தி இந்த தேர்தலில் அதிகமாக உள்ளது – நாடாளுமன்ற உறுப்பினர் M.Aசுமந்திரன்

தமிழர் தரப்பில் பேரம் பேசும் சக்தி அதிகமாக இருக்கும் இச் சந்தர்ப்பத்தில் எண்ணிக்கையில் குறைவாக இருக்கின்ற எமது வாக்குகளே முடிவைத் தீர்மானிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் M.Aசுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்றைய தினம் இடம்பெற்ற ‘மக்கள் கருத்துக் களம்‘ என்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

புத்திசாலித்தனமாகச் சிந்தித்து பிரதான மூன்று வேட்பாளர்களையும் குறைந்தபட்சம் ஒரு தீர்வுக்காவது இணங்கச் செய்ய வேண்டும்.

ஆயுதப் போராட்ட காலத்தில் இருந்த சூழல் தற்போது இல்லை என்பதால் தற்போதைய நிலைமைகளுக்கேற்ப அதனை ஜனநாயக சூழலாக மாற்றியமைத்துப் பயணிக்க வேண்டும். மூலோபாயத் திட்டங்களுடன், மிகக் கடினமான முறையில் தென்னிலங்கைத் தரப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதுடன், எமது வாக்குப்பலத்தினைத் தீர்மானிக்கும் சக்தியாக மாற்றி இந்தத் தேர்தலைச் சந்திக்க வேண்டும்.

வாக்குகளைப் பிரயோசனமான முறையில், அதுவும் பெரும்பான்மையினர் மூன்றாகப் பிரிந்து இருக்கும் போது நாங்கள் தீர்மானிக்கிற சக்தியாக எங்களுடைய வாக்குகளைத் திரட்ட முடியும் என்றால் அது எங்களுக்கு மிகவும் பலமானதாக இருக்கும்” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

 

கிழக்கில் தமிழர் அரசியல் கட்டமைப்பு செயலிழந்துள்ளது – இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரக்காந்தன்

“அம்பாறையில் ஒரு கணக்காளரைக் கூட நியமிக்க முடியாத அளவிற்கு அரசியல் கட்டமைப்பு செயலிழந்துள்ளதாக” கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரக்காந்தன் தெரிவித்துள்ளார்.

காரைதீவு மத்திய கல்லூரியில் இடம்பெற்ற ஈஸ்டர் படுகொலை தொடர்பிலான நூல் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சமூகத்தின் பொருளாதார அரசியல் அதிகரித்துள்ள நிலையில் அம்பாறை மாவட்ட மக்களின் ஆணையை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்ற கேள்வி எழுந்துள்ளது.

எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அம்பாறையில் ஒரு கணக்காளரைக் கூட நியமிக்க முடியாத அளவிற்கு, அரசியல் கட்டமைப்பு அம்பாறை மாவட்டத்தில் காணப்படுகின்றது.

இவ்வாறான பிரச்சினைகள் தமிழரசுக் கட்சியின் தனிப்பட்ட பிரச்சினை கிடையாது. மாவட்ட மக்களினது தேவைகளை அறிந்து செயற்படுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்” இவ்வாறு அமைச்சர் சிவநேசத்துரை சந்திரக்காந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

கசிப்பு விற்பனை செய்த உள்ளூராட்சி சபையின் உறுப்பினர் கைது !

கண்டி மவட்டத்தில் ஹதரலியத்த துன்பனே பிரதேச உள்ளூராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் இரண்டு கசிப்பு போத்தல்களுடன் ஹதரலியத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஹதரலியத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்வத்த பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் உள்ள இடத்தில் சட்டவிரோதமாக கசிப்பு விற்பனை செய்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக கசிப்பு விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கசிப்பு விற்பனையினை நிறுத்துமாறு சந்தேக நபருக்கு பொலிஸாரினால் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸாரினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கையினை மீறியும் சந்தேக நபர் கசிப்பு விற்பனை செய்தமையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு, சந்தேகநபர் இன்று திங்கட்கிழமை (10) கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

தரமற்ற சவர்க்காரங்கள் பயன்பாட்டில் – சிசுக்களின் தோலில் பல்வேறு உபாதைகள் !

தரமற்ற சோப்புகளை பயன்படுத்துவதால் சிசுக்களின் தோலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார சூழ்நிலை காரணமாக சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தரமற்ற குழந்தை சோப்பை பயன்படுத்துவதாகவும், அதன் விளைவு எதிர்காலத்தில் ஏற்படும் எனவும் அதன் பொருளாளர் திருமதி பிரியங்கனி சுசங்கிகா தெரிவித்தார்.

“இந்த நாட்களில் நாங்கள் குழந்தைகளுக்கு சில ஒவ்வாமைகளைப் புகாரளித்துள்ளோம். இதை ஆராய்ந்தபோது ஒரு விஷயம் புரிந்தது, தரமற்ற குழந்தை சோப்பை பயன்படுத்துவதால் இந்த நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, தாய்மார்கள் குழந்தைகளுக்கான சோப்பைப் பயன்படுத்தும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய விடயம் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினால் வழங்கப்பட்ட சான்றிதழுடன் கூடிய குழந்தை சோப்பைப் பயன்படுத்துவதேயாகும். குழந்தையின் தோல் மிகவும் மென்மையானது. எனவே இன்றல்ல பல வருடங்களில் இதன் பலன் தெரியும். எனவே, குறிப்பாக பொருளாதார சூழ்நிலையில், இதில் கவனமாக இருங்கள்” எனவும் பிரியங்கனி சுசங்கிகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 167 நாட்களில் 200 கிலோகிராம் ஹெரோயினை கைப்பற்றிய பொலிஸார்,!

இலங்கையில் பாதாள உலகத்துடன் தொடர்புடைய செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் ‘யுக்திய’ விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து கடந்த 167 நாட்களில் 200 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

201 கிலோகிராம் எடையுள்ள ஹெரோயின் கையிருப்பின் பெறுமதி ரூ. 5.434 பில்லியன்.

இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக 2023 டிசம்பரில் நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

தமிழர்களால் மறக்கப்பட்ட தமிழர்கள்! அரசியல் வாதிகளினால் கண்டுகொள்ளப்படாதவர்கள்!

நம்மில் ஒருத்தராக இருந்தாலும் மாற்றுத்திறனாளிகளை நமது சமூகத்தில் ஏதோ வலுவிழந்தவர்களாகவே பார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. அவர்களுக்கான அங்கீகாரமும் இல்லை. அது போல அடிப்படையில் அவர்களுக்கு வழங்கவேண்டிய உரிமைகள் கூட வழங்கப்படுவதில்லை. தமிழ்தேசியம் பேசி தம் வாக்கு வங்கியை நிறைத்துக்கொள்ளும் தமிழ்தேசிய அரசியல்வாதிகள் தேர்தல் வாக்குறுதிகளில் கூட மாற்றுத்திறனாளிகள் பற்றி பேச தயாரில்லை. இந்த நிலையில் நமது சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் நிலை தொடர்பிலும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் தேசம் ஜெயபாலன் மேற்கொண்ட உரையாடல். இவ்வுரையாடலில் இரண்டு வயதில் நிகழ்ந்த விபத்தில் உடல் ஊனமுற்ற மகனை மூன்று தசாப்தங்களாக வளர்த்து வருகின்றி அனெஸ்லி ராஜரத்தினம்,  இவரால் மாற்றுத் திறனாளிகளுக்காக ஆரம்பிக்கப்பட்டு தற்போது 35 உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்வளிக்கும் ஒளிரும் வாழ்வு அமைப்பின் தலைவரும் மாற்றுத்திறனாளியான இராசலிங்கம் அம்பிகைபாலன்இ மற்றும் சமூக செயற்பாட்டாளரும் மாற்றுத் திறனாளியான குமாரவேலு அகிலன் ஆகியோருடன் மேற்கொண்ட கலந்துரையாடல்.

இது தொடர்பான முழுமையான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனம் ரத்து – கிளிநொச்சி பெண் பட்டதாரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு !

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட நியமனத்தை இரத்துச் செய்தமை தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் பட்டதாரி ஒருவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

கடந்த மாதம் யாழ்ப்பாணம் வருகைதந்த ரணிலினால் வடக்கில் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த வைபவத்தில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பட்டதாரி ஒருவருக்கு ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட நிலையில், குறித்த நியமனத்தில் தவறு இருப்பதாக மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு பரிந்துரை செய்ததையடுத்து சில நாட்களில் நியமனமானது மீளப் பெறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பட்டதாரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அலுவலகத்திற்கு எழுத்து மூலமான முறைப்பாட்டை வழங்கியுள்ளார்.

குறித்த முறைப்பாட்டில் “நான் ஆசிரியர் நியமனத்தை கேட்டு பெறவில்லை தனக்கு வழங்கிய நியமனத்தை மீளப் பெற்றதன் மூலம் உளநீதியான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளேன்.

சமூகத்தில் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதுடன் அதுமட்டுமில்லாத எனது நியமனத்தை மீளப் பெற்றதன் மூலம் நான் அரச சேவையை முறை தவறிப் பெற்றதாக சமூகத்தில் கருத்துக்கள் உருவாகின்ற நிலையில் தனக்குரிய பரிகார நீதியை வழங்குமாறு கோருகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சுமார் 28 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது !

யாழ்ப்பாணத்தில் சுமார் 28 மில்லியன் ரூபாய் பெறுமதியான 70 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் , அவர்களின் படகினையும் , மீட்கப்பட்ட கஞ்சாவையும் மருதங்கேணி பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.