உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

இருபத்தி இரண்டிலிருந்து நான்காக பிரிக்கப்பட்ட அனுரவின் அமைச்சரவை !

இலங்கை நாட்டின் புதிய ஜனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்ட நிலையில் இதுவரை காணப்பட்ட 22 அமைச்சுக்கள் நான்கு அமைச்சுக்களாக பிரிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்கவின் புதிய அமைச்சரவை வருமாறு:

1.ஜனாதிபதியிடம்
பாதுகாப்பு, பொருளாதாரம், தேசிய
கொள்கை திட்டமிடல்.

2.பிரதமரிடம்
நல்லாட்சி, நிருவாகம்.

3.அமைச்சர் -1
சமூக, மனிதவள அபிவிருத்தி

4.அமைச்சர் – 2
உட்கட்டமைப்பு, கைத்தொழில் அபிவிருத்தி.

தற்போதைய 22 அமைச்சுக்கள் மேற்குறிப்பிட்ட 04 அமைச்சுக்களின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

அனுர குழுவினரை எதிர்கொள்ளஅனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய பொதுக் கூட்டமைப்பை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானம்!

எதிர்வரும் தேர்தல்கள் மற்றும் அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய பொதுக் கூட்டமைப்பை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபைக் கூட்டத்திலேயே ஐக்கிய தேசியக் கட்சி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பான பிரேரணையை முன்வைத்துள்ளார்.

 

இதன்படி எதிர்வரும் தேர்தல்கள் மற்றும் அரசியல் சூழ்நிலைகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய பொதுக் கூட்டமைப்பை உருவாக்குவதற்கு அனைத்து கட்சிகளையும் அழைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமக்கு ஒத்துழைப்பு நல்காத, எம்மை நம்பாத பிரஜைகளின் நம்பிக்கையை வென்றெடுப்பது எனது பாரிய பொறுப்பாகும் – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

நாட்டில் ஜனநாயகத்தைப் பலப்படுத்த தீர்க்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.

 

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்ட அநுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்காக ஆற்றிய விசேட உரையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனநாயக ரீதியாக மக்கள் என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளார்கள். எமது நாட்டின் ஜனநாயகத்தை மேலும் பலப்படுத்த எனது ஆட்சிக்காலத்தில் தீர்க்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

 

நாம் மிகவும் சவாலானதொரு கட்டத்தில் தான் உள்ளோம். நான் மெஜிக் காரனோ மாயாஜால வித்தைக் காரனோ கிடையாது. நானும் இந்த நாட்டில் பிறந்த ஒரு சாதாரண பிரஜை.

எனக்கும் ஆற்றல்கள் இருக்கின்றன. ஆற்றாமைகளும் இருக்கின்றன. நாம் அறிந்த விடயங்களும் இருக்கின்றன. அறியாத விடயங்களும் இருக்கின்றன.

 

ஆனால் என்னுடைய முதன்மைப்பணி ஆற்றல்களை உறிஞ்சி எடுத்து அறிந்தவற்றை ஒன்று திரட்டி மிகச் சிறந்த தீர்மானங்களை மேற்கொண்டு இந்த நாட்டை நெறிப்படுத்துவதாகும்.

அதனால் அந்த கூட்டான இடையீட்டின் பங்காளியாவதே என்னுடைய பொறுப்பாகும்.

நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் என்னிடம் ஒரு தலையாய பொறுப்பு இருப்பதாக நான் நம்புகிறேன்.

 

இந்த சவாலை வென்றெடுப்பதற்காக எல்லாச் சந்தர்ப்பங்களிலும் செயலாற்றுவதற்காக என்னிடம் கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பினை நான் முறைப்படி ஈடேற்றுவேன்.

எமது நாட்டுக்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியமாகும்.

 

உலக நாடுகள் மத்தியில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும் நாங்கள் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நாடாக அமந்துவிட முடியாது. உலகத்துடன் கூட்டாக ஒருங்கிணைந்து பயணிக்கவேண்டும். அதற்கு அவசியமான தீர்மானங்களை மேற்கொள்வதில் நாங்கள் ஒருபோதுமே தயங்கமாட்டோம்.

 

அதைப்போலவே எமது நாட்டை கட்டியெழுப்புகையில் கைத்தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர் முக்கியமானவர்களாக கருதப்படுவார்கள். எனவே அவர்களை பலம்பொருந்தியவர்களாக கட்டியெழுப்ப அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி உதவுவார்களென நாங்கள் நம்புகிறோம்.

எமது நாட்டின் ஜனநாயகத்தினால் நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறேன்.

அவ்வாறு தெரிவு செய்துகொள்வதற்காக மக்கள் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

எனக்கு அளிக்கப்படாத வாக்குகளும் இருக்கின்றன. எனவே எமது வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு பற்றி எமக்கு சிறந்த புரிந்துணர்வு இருக்கின்றது.

 

எமக்கு ஒத்துழைப்பு நல்காத, எம்மை நம்பாத பிரஜைகளின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வதும் அவர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதும் எனது ஆட்சிக்காலத்தில் எனக்கு கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பாக அமைகின்றது. அந்த பணியை சரிவர ஈடேற்ற முடியுமென்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது ” இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் 3520,438 பேர் வாக்களிக்கவில்லை – நிராகரிக்கப்பட்ட 3 லட்சம் வாக்குகள்!

9 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக சனிக்கிழமை நடந்த தேர்தலில் 3520,438 பேர் வாக்களிக்காத அதேவேளை 300300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

 

9 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக தேர்தலில் வாக்களிக்க இம்முறை 1,71,40354 வாக்காளர்கள் வாக்களிக்கத்தகுதி பெற்றிருந்தனர்.இவர்களில் 1,36,19916 வாக்காளர்களே வாக்களித்த நிலையில் 35.20,438 வாக்காளர்கள் வாக்களிக்க வில்லை.

 

அதுமட்டுமன்றி வாக்களித்த 1,36,19916 வாக்காளர்களின் வாக்குகளில் 300.300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதால் 1,33,19616 வாக்குகளே இந்த ஜனாதிபதி தேர்தலில் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன.

மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்களின் மனவிருப்பங்களிற்கு நாம் மதிப்பளிக்கின்றோம். – ஜனாதிபதி அனுர குமாரவுக்கான வாழ்த்து செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!

புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  அனைத்து மக்களினதும் கனவுகளை ஈடேற்றுவார் என்பதை எதிர்பார்க்கின்றோம் என ஈழமக்கள் ஜனாநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டதையடுத்து ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளையும் நாட்டின் பொருளாதார நிலைமைகளையும் மனதில் நிறுத்தி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் தீர்க்கமான முடிவொன்றை எடுத்து செயலாற்றி இருந்தோம்.

ஆனாலும் எமது நம்பிக்கைகளுக்கு மாற்றாக இலங்கைத் தீவில் வாழுகின்ற மக்களில் கணிசமானவர்கள் ஆட்சி மாற்றம் ஒன்றையே தமது விருப்பமாக வெளிப்படுத்தியுள்ளனர். மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்களின் மனவிருப்பங்களிற்கு நாம் மதிப்பளிக்கின்றோம்.

அதேவேளை சமத்துவமான தேசத்தை உருவாக்கும் கனவோடு ஆட்சி அமைத்திருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ஜனாதிபதி தோழர் அநுரகுமார திசாநாயக்க அனைத்து மக்களினதும் கனவுகளை ஈடேற்றுவார் என்பதையும் எதிர்பார்க்கிறோம்.

எமது வேண்டுகோளை ஏற்று எமது அரசியல் வழி நின்று வாக்களித்த மக்களுக்கும் தமது ஜனநாயக கடமைகளை நிறைவேற்றும் வகையில் வாக்களிப்பில் கலந்து கொண்ட அனைத்து மக்களிற்கும் நாம் நன்றி கூறுகின்றோம்.

இதுவரை காலமும் எமது நாடாளுமன்ற அரசியலில், தேசிய நல்லிணக்க வழிமுறை வரலாற்றில் அரசுகளுக்கு உள்ளிருந்தும் வெளியே இருந்தும் மக்கள் நலன் சார்ந்து நாம் உறுதியுடன் செயலாற்றி வருகின்றோம். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதே என்றும் மாறாத எமது அரசியல் இலக்கு” என்பதையும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அனைத்து நாடுகளுடன் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன் – பதவியேற்றார் இலங்கையின் 10ஆவது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க!

அனைத்து நாடுகளுடன் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இன்று காலை(23) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இதன் பின்னர் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
தேர்தலை நடத்துவதும் , அரச தலைவரை தெரிவு செய்வது மாத்திரம் ஜனநாயகமல்ல, எனது ஆட்சியில் ஜனநாயகத்தை முறையாக பாதுகாப்பேன்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அர்ப்பணிப்பையும், அவரது அரசியல் வகிபாகத்தையும் மதிக்கிறேன்.
சவால்மிக்க பொருளாதார சூழலில் ஆட்சியை பொறுப்பேற்றுள்ளேன். அனைவருடனும் ஒன்றிணைந்து பயணிப்போம்.
நாடு என்ற ரீதியில் தனித்து செயற்பட முடியாது. அனைத்து நாடுகளுடன் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து இலங்கை நாட்டின் வரலாற்றினை புதிதாக எழுத வேண்டும் – முதலாவது உரையில் அனுர குமார திசாநாயக்க!

இலங்கையின் வரலாற்றினை புதிதாக எழுதவேண்டுமென எமக்கு அழைப்பு விடுக்கின்றது என புதிதாக ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பல நூற்றாண்டு காலமாக நாங்கள் கண்ட கனவே இறுதியில் நனவாகி உள்ளதாக அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல சிரமங்களுக்கு மத்தியில் இலட்சக்கணக்கான நீங்கள் அனைவரும் கடந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சி பலனளித்துள்ளது.

அதற்காக என்னால் உங்களுக்கு நன்றி கூற முடியாது. அதற்கான காரணம் அது என்னுடையதல்ல, எமது கூட்டுமுயற்சியின் பெறுபேறாகும்.

 

இது எம்மனைவரதும் வெற்றியாகும். நாங்கள் மாத்திரமல்ல இந்த வெற்றிக்காக பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் தமது இரத்தம், கண்ணீர், வியர்வையை மாத்திரமன்றி உயிர்களைக்கூட தியாகம் செய்துள்ளார்கள்.

 

எமக்கு முந்திய தலைமுறையினர் எம்மிடம் கையளித்த குறுந்தடியில் வீணாகிப்போய்விடாத அவர்களின் முடிவிலா அர்ப்பணிப்பே பொதிந்துள்ளது. அதன் சுமையை நாங்கள் நன்றாகவே அறிவோம்.

எதிர்பார்ப்புகள் நிறைந்த உங்களின் இலட்சக்கணக்கான விழிகள் எமக்கு தெம்பூட்டுகின்றன.

இலங்கையின் வரலாற்றினை புதிதாக எழுத வேண்டுமென எமக்கு அழைப்பு விடுக்கின்றன. கனவை முழுமையாகவே யதார்த்தபூர்வமானதாக அமைத்துக்கொள்வதற்காக இந்த மண்ணுக்கு புத்தம் புதிய ஆரம்பமொன்று அவசியமாகும்.

 

சிங்கள, தமிழ், முஸ்லீம்களாகிய எம்மனைவரதும் ஒன்று சேர்ந்த வலிமை ஆரம்பிக்கின்ற யுகத்தின் அடிக்கல்லாக அமையும். அதன் மீது தான் புதிய மறுமலர்ச்சி யுகம் கட்டியெழுப்பப்படும். வாருங்கள் நாங்கள் அதற்காக கைகோர்த்துக்கொள்வோம் என புதிய ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இனமத பேதத்தை தூண்டாமல் பெற்ற வெற்றிக்காக அனுரகுமாரதிசநாயக்கவிற்கு நன்றி – நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்

இனமத பேதத்தை தூண்டாமல் பெற்ற வெற்றிக்காக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்கவிற்கு நன்றி என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சமூக ஊடகபதிவில் தெரிவித்துள்ளார் .

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
இன, மத வெறிகளைத் தூண்டாமல் சிறப்பாக வெற்றி பெற்ற #அனுரவிற்கு எமது வாழ்த்துக்கள். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆலோசனையை ஏற்று, மற்றைய வேட்பாளர்களை நிராகரித்து #சஜித்துக்கு வாக்களித்து தேர்தல் வரைபடத்தில் ஒரு வித்தியாசத்தைக் காண்பித்த வட கிழக்கு தமிழ் மக்களுக்கும் எமது நன்றிகள்.

இலங்கை எனும் அன்புக்குரிய குழந்தையினை அனுரவிடம் கையளிக்கிறேன் – முன்னாள் ஜனாதிபதி ரணில் நெகிழ்ச்சி உரை !

கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட ஊடக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை எனும் அன்புக்குரிய குழந்தையினை சவால்மிகு தொங்குபாலத்தின் ஊடாக தான் இதுவரை பாதுகாப்பாகக் கொண்டுவந்துள்ளதாகவும், தற்போதைய ஜனாதிபதி அந்தக் குழந்தையை இன்னும் பாதுகாப்பாக தொங்குபாலத்தின் ஊடாகக் கொண்டுவர முடியும் என நம்புவதாகவும் ஜனாதிபதி தமது அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முழு உரையும் வருமாறு,

 

வணக்கம்

அன்புள்ள பிரஜைகளே,

செப்டம்பர் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டின் பெரும்பாலான மக்கள் தீர்மானமொன்றை வழங்கியுள்ளனர். நாம் அந்தத் தீர்மானத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். அந்தத் தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை அரசின் நல்லிருப்பினை உறுதிப்படுத்த வேண்டும்.

இற்றைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வங்குரோத்து அடைந்து, பொருளாதார நெருக்கடி காரணமாக கடுமையாக வீழ்ச்சிடைந்திருந்த, மிகவும் கடினமானதொரு சூழ்நிலையில் நான் இந்த நாட்டைப் பொறுப்பேற்றேன்.

அந்த சவாலுக்கு முகங்கொடுக்கின்ற அளவிலான ஆத்ம சக்தி பெரும்பாலானோருக்கு இல்லாதிருந்த சந்தர்ப்பத்திலேயே நான் அந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டேன்.

வரலாறு எனக்கு வழங்கிய அந்தப் பொறுப்பினை நான் சிறப்பாக நிறைவேற்றினேன்.

இரண்டு வருட குறுகிய காலப்பகுதியினுள் என்னால் இந்த நாட்டினை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டெடுக்க முடிந்தது.

எனது அரசியல் வாழ்வில் எனது நாட்டுக்காக செய்யக் கிடைத்த பெறுமதியான கடமைப் பொறுப்பு அதுவாகும் என நான் நம்புகிறேன்.

நான் நாட்டைப் பொறுப்பேற்கும் சந்தர்ப்பத்தில் நூற்றுக்கு எழுபது வீதமாகக் காணப்பட்ட பணவீக்கத்தினை பூச்சியம் தசம் ஐந்து (0.5%) வரை என்னால் குறைக்க முடிந்தது.

இருபது மில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்ட இந்நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பினை ஐந்து தசம் ஏழு பில்லியன் அமெரிக்க டொலராக என்னால் அதிகரிக்க முடிந்தது.

அத்துடன் டொலருடன் ஒப்பிடுகையில் முன்னூற்று எண்பதாகக் காணப்பட்ட ரூபாயின் பெறுமதியை முன்னூறு ரூபாய் வரை குறைத்து, பலமான நிலையான பெறுமதிக்கு என்னால் அதனைக் கொண்டு வர முடிந்தது.

அத்துடன் மறை ஏழு தசம் மூன்றாக (-7.3%) காணப்பட்ட பொருளாதார வளர்ச்சியை நேர் இரண்டு தசம் மூன்று (2.3%) வரை அதிகரிப்பதற்கு நான் நடவடிக்கை மேற்கொண்டேன். அதுபற்றியும், எனது அந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க அரசியல் கடமைப் பொறுப்பு பற்றியும் இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினர் உரிய மதிப்பீடொன்றை வழங்குவார்கள் என நம்புகிறேன்.

இந்த நாட்டின் ஆட்சியாளர் என்ற வகையில் வரலாற்றில் எனக்கு உரித்தான இடம் இன்று அல்லாமல் எதிர்காலத்திலேயே தீர்மானிக்கப்படும் என்பதை நான் அறிவேன்.

நான் சரியான பாதையில் சென்று மக்களின் துயரங்களை முடிந்தளவு நீக்கினேன். புதிய ஜனாதிபதி அவர்களும் அவருக்குக் கிடைத்த மக்கள் ஆணையின் பிரகாரம் சரியான பாதையினைத் தெரிவு செய்து மக்களின் துயரங்களை நீக்குவார் என நான் எதிர்பார்க்கிறேன்.

மிகவும் சவால் மிகுந்த தொங்குபாலத்தில் இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை நான் முடிந்தளவு அதிகபட்ச தூரம் பாதுகாப்பாகக் கொண்டு வந்தேன்.

தொங்குபாலத்தின் முடிவிடம் கண்களுக்கு மிகவும் எட்டும் தூரத்தில் இருக்கும் சந்தர்ப்பத்தில் அந்த பாசம் மிகுந்த குழந்தையினை அனுர குமார திஸாநாயக்க அவர்களிடம் ஒப்படைப்பதற்கு நாட்டு மக்கள் தீர்மானித்துள்ளனர்.

அனுர ஜனாதிபதி அவர்களே, நீங்களும் நானும் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையை நான் மிகவும் கருணையுடன் உங்களிடம் ஒப்படைக்கிறேன். இந்தக் குழந்தையை நான் கொண்டு வந்தததை விடவும் பாதுகாப்பாக தொங்குபாலத்தின் முடிவிடத்திற்கு கொண்டு செல்லும் ஆற்றல் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், பதவிகளை வகித்தாலும் வகிக்காவிட்டாலும் இந்த நாட்டு மக்களுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளை ஏற்புடைய சந்தர்ப்பங்களில் எந்தவிதமான தயக்கமும் இன்றி நான் நிறைவேற்றுவேன்.

அத்துடன், எனது ஆட்சிக் காலத்தினுள் அதற்காக ஒத்துழைப்பு வழங்கிய, வழங்காத அனைவருக்கும், இந்த நாட்டின் சகல பிரஜைகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியானார் அனுரகுமார திஸாநாயக்க – சங்கை ஊதிக்கெடுத்தார் தமிழ் பொதுவேட்பாளர் !

சர்வதேசம் மிக உன்னிப்பாக அவதானித்த இலங்கையின் 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் முழுமையாக வெளியாகியுள்ள நிலையில் அனுரகுமாரதிஸாநாயக்க இலங்கையின் 10ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். முதலாவது சுற்று வாக்கெடுப்பில் 2024 ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 22 மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் அநுரகுமார திசாநாயக்க முன்னிலை பெற்று 5,634,915 வாக்குகளை பெற்றுக்கொண்ட அனுரகுமார திஸாநாயக்க விருப்பு வாக்கு அடிப்படையிலும் அதிக வாக்குகளை பெற்று தனது வெற்றியை உறுதி செய்துள்ளார்.

இதேவேளை இலங்கை வரலாற்றில் ஜனாதிபதியாகும் முதல் இடதுசாரி ஜனாதிபதியாகவும் – 50வீதங்களை கடக்காது ஜனாதிபதியாகும் முதல் ஜனாதிபதி வேட்பாளராகவும் அனுரகுமார திஸாநாயக்க காணப்படுகின்றார்.

2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்

இதேவேளை சஜித் பிரேமதாச 4,363,035 (32.76%) வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்க 2,299,767 வாக்குகளுடன் (17.27%) மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நான்காவது இடத்தில் நாமல் ராஜபக்ச 342,781 (2.57%) வாக்குகளுடனும் உள்ளார். இந்த நிலையில் தாங்கள் 05 லட்சம் வாக்குகள் பெற்றால் அது தமிழரின் தனித்தேசிய அவாவை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்துவதாக அமையும் என கூறி தமிழ் பொதுக்கட்டமைப்பினரால் சங்கு சின்னத்தில் களமிறக்கப்பட்ட  பா.அரியநேத்திரன் 226,343 (1.7%) வாக்குகளையே பெற்று கொண்டதுடன் தமிழர்கள் பெருந்திரளாக வாழும் எந்த பகுதிகளிலுமே  தமிழ் பொதுவேட்பாளரால் அதிக வாக்குகளை பெற முடியவில்லை. இந்த நிலை யாழ்ப்பாணம் தொடங்கி மட்டக்களப்பு வரை காணப்பட்டது.

தபால் மூல வாக்குக்கெடுப்புக்கு முதல் நாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்து இருந்தார். இந்த அறிவிப்பு வடக்கில் குறிப்பாக யாழில் ரணிலுக்கு சற்று அதிக வாக்குகளைப் பெற்றுக்கொடுத்தாலும் தெற்கில் பெரும்பாலான மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தி பெரும்பான்மையை பெற்று வருகின்றது. தெற்கில் அனுராதபுரத்தில் மட்டுமே ரணில் விக்கிரமசிங்க தற்சமயம் தபால் வாக்குகளில் முன்னணியில் நிற்கின்றார். ஏனைய மாவட்டங்களான குருநாகல், இரத்தினபுரி, கேகலை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அனுரகுமார திஸ்ஸநாயக்கா ஐம்பது வீதத்திலும் அதிகமான தாபால் வாக்குகளைப் பெற்று வருகின்றார்.

வடக்கு கிழக்கில் தமிழ், முஸ்லீம் மக்கள் மத்தியில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் பெற்று வருகின்றனர். தமிழ் பகுதிகளில் ரணில் விக்கிரமசிங்கவும் அவரைத் தொடர்ந்து சஜித் பிரேமதாஸவும் வாக்குகளைப் பெற அரியநேத்திரன் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். வாக்களிக்கப்பட்ட வீத்த்தை ஒப்பிடுகையிலும் சிங்களப் பகுதிகளுக்கு ஈடாக தமிழ் மக்களும் வாக்களிப்பில் கலந்துகொண்டுள்ளனர். இதன் மூலம் தமிழ் தேசியத்தை முன்னெடுத்த கஜா அணியான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தலைப் பகிஸ்கரிக்கும் அறிவிப்பை தமிழ் மக்கள் முற்றாக நிராகரித்து, அவர்களை ஓரம் கட்டியுள்ளனர் என அனந்தி சசிதரன் குறுஞ்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் தேசியம் பேசி தமிழ் பொதுவேட்பாளரை அறிவித்தவர்களையும் தமிழ் மக்கள் தோற்கடித்து மூன்றாம் நிலைக்குத் தள்ளி மண் கவ்வச் செய்துள்ளனர்.

மேலும் இதுவரை நடந்த இலங்கைத் தேர்தல் முடிவுகளில் பின்பற்றப்பட்ட போக்கு இத்தேர்தல் முடிவிலும் வெளிப்பட்டு இருப்பது கண்கூடு. 1994இல் சந்திரிகா பண்டாரநாயக்காவும் அதன் பின் மைத்திரிபால சிறிசேனவும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட இரு தேர்தலைத் தவிர ஏனைய தேர்தல்களில் தமிழ் மக்களின் தெரிவுக்கு மாறாகவே சிங்கள மக்களின் ஜனாதிபதித் தெரிவு அமைந்துள்ளது. இந்தத் தேர்தலிலும் இது இவ்வாறே அமையும் என்பதை தேசம்நெற் ஆரம்பம் முதலே சுட்டிக்காட்டி வந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை ஆட்சி செய்து வந்த ஆட்சிக்குழுமத்திற்கு எதிரான போக்கு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஏற்பட்டு வருகின்றது. அதன் வெளிப்பாட்டை இலங்கையிலும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்த நகர்வை, மக்களை அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் கவனிக்கத் தவறியிருந்தன. இளையோர் சமூகம் ஊழலற்ற ஒரு ஆட்சியை, மாற்றமொன்றுக்காக வாக்களித்துள்ளனர். சுதந்திர இலங்கையில் இதுவரை நடந்த தேர்தலைக்காட்டிலும் இத்தேர்தலில் இனவாதம் மதவாதம் பின் தள்ளப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் தேசிய மக்கள் சக்தி. அதனால் அவர்கள் முதற்தடவையாக சிறுபான்மை மக்கள் மத்தியில் தங்கள் வாக்கு வங்கியை பல மடங்காக அதிகரித்துள்ளனர்.

தமிழ் முஸ்லீம் கட்சிகள், தேசியம் பேசிய தமிழ் கட்சிகளும் கூட மக்களைப் புரிந்துகொள்ளவில்லை. இவர்கள் கடந்த தேர்தலில் கோட்டாபாய ராஜபக்சவுக்கு எதிராக சஜித் பிரேமதாச கணிசமான வாக்குகளைப் பெற்றதால் தங்களுடைய வழமையான புளித்துப்போன போர்மிளாவின் அடிப்படையில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்தனர். தற்போது மண் கவ்வி வருகின்றனர். இவர்களுக்கு இனிமேல் தமிழர்களுக்கு தலைமை தாங்கும் எவ்வித தகுதியும் கிடையாது. தமிழ், முஸ்லீம் மக்கள் மத்தியிலிருந்து அரசியல் புத்துணர்ச்சி கொண்ட இளைய தலைமுறை அரசியலுக்கு வந்து காலாவதியாகிப் போன இப்போதுள்ள தமிழ் தலைமைகளை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவது அவசியம்.

இலங்கையில் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மாற்றத்தை நோக்கி நாட்டை நகர்த்த தயாராகி விட்டனர். ஏனைய சமூகங்களும் அந்தப் பாதையில் பயணிப்பது மிக அவசியமானதும் அவசரமானதுமான தேவை. ஜனாதிபதியாக அனுரகுமார திஸ்ஸநாயக்க தெரிவு செய்யப்பட்டாலும் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடப்போவதில்லை. மாற்றங்கள் அவ்வளவு இலகுவில் வந்துவிடப் போவதுமில்லை. இதுவரை நாட்டை சூறையாடியவர்கள் இலகுவில் இந்த வெற்றியை ஏற்றுக்கொள்ளவதும் கடினமானதாகவே இருக்கும். தேசிய மக்கள் சக்தியின் அடுத்துவரும் காலங்கள் கடுமையானதாகவும் சவாலானதாகவும் அமையும். அதற்கு மக்கள் தயாராக வேண்டும்.