உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

எமது புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் எவரும் நியமிக்கப்பட மாட்டார்கள் – அமைச்சர் விஜித ஹேரத்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் புதிய அரசாங்கத்தை தேசிய மக்கள் சக்தியே அமைக்கும். அந்த அமைச்சரவையில் 25 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இடம்பெறுவர் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அந்த புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் எவரும் நியமிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்த அமைச்சர், அந்தந்த துறைக்கான நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுக்கும் வகையில் 25 பிரதியமைச்சர்களும் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களே தமது கட்சியில் உள்ளனர்.இதனால் தற்போதைய அரசாங்கத்தில் ஜனாதிபதி பிரதமர் மற்றும் ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரே இடம்பெறுகிறார்.இதனால், அமைச்சின் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு மக்களுக்கான சேவைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எமது உறுப்பினரான நிபுண ஆரச்சியை மற்றும் ஒரு அமைச்சராக நியமிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் சட்டப் பிரச்சினை காணப்பட்டதால் அதனை மேற்கொள்ள முடியவில்லை.

அடுத்து அமைக்கப்படும் அரசாங்கத்தில் குறைந்தளவு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு மக்களுக்கான நிறைவான சேவை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ராஜபக்ஷ குடும்பத்தினர் மீது முன்வைத்த குற்றச்சாட்டுகளை அனுர குமார திசாநாயக்க நிரூபிக்க வேண்டும் – நாமல் ராஜபக்ச

ராஜபக்ச குடும்பத்தினர் உகன்டாவிலும் வேறு பல நாடுகளிலும் மில்லியன் கணக்கான டொலர்களை மறைத்துவைத்திருக்கின்றனர் என்ற தனது குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி நிரூபிக்கவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் நிதி களவாடப்பட்டுள்ளது என ஜனாதிபதியும் அவரது குழுவினரும் பல ஆண்டுகளாக தெரிவித்துவருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தனது குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான தருணம் இது என அவர் தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக சீன அறிவிப்பு!

சீன மக்கள் குடியரசின் தூதுவர் கீ ஷென்ஹொங் (Qi Zhenhong) இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தேர்தல் வெற்றிக்கு மனப்பூர்வமான வாழ்த்து தெரிவித்த தூதுவர், இலங்கையின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு சீனா முழுமையான ஒத்துழைப்பை வழங்குமெனவும், சீனா அரசாங்கத்துடனான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்த அர்ப்பணிப்பதாகவும் உறுதியளித்தார்.

இலங்கைக்குள் தற்போது ஒத்துழைப்பு அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் முக்கியத்துவம் மற்றும் இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பதற்காக சீன அபிவிருத்தி வங்கி (CDB) மற்றும் EXIM வங்கியின் செயற்திறனான தலையீடுகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் அபிவிருத்திக்கு ஒத்துழைக்கும் வகையில் பிரதான வர்த்தக கடன் வழங்குநர் மற்றும் இரு தரப்பு கடன் வழங்குநர் என்ற வகையில், கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் சீன தூதுவர் ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.

போர்க்காலத்தில் ஓடி மறைந்து திரிந்தவர்கள் தான் பாராளுமன்றத்தில் வாய்ப்பேச்சில் தமிழ்தேசியம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் – தமிழ்க்கவி அம்மா காட்டம் !

போர்க்காலத்தில் ஓடி மறைந்து திரிந்தவர்கள் தான் பாராளுமன்றத்தில் வாய்ப்பேச்சில் தமிழ்தேசியம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் – தமிழ்க்கவி அம்மா காட்டம் !

 

சமகால அரசியல்- பொருளாதார நிலமைகள் தொடர்பில் எழுத்தாளர் தமிழ்க்கவி அவர்களுடனான தேசம் ஜெயபாலனின் கலந்துரையாடல்..!

புதிய அரசமைப்பை உருவாக்குவதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும் – அமைச்சர் விஜித ஹேரத்

புதிய நாடாளுமன்றத்தில் புதிய அரசமைப்பை உருவாக்குவதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதன்போது, செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மூலம் புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அரசை அமைப்பதற்காக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாகவே அரசு அமைக்கப்படும்.

எம்முடைய விஞ்ஞாபனத்துக்கு அமைய இனப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்க புதிய அரசமைப்பு உருவாக்கப்படும்.

அவ்வாறு உருவாக்கப்படும் அரசமைப்பு நாட்டு மக்களிடம் வழங்கப்பட்டு அவர்களின் கருத்துக்களுடன் கூடிய கொள்கை மற்றும் வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.

புதிய அரசு ஆட்சி அமைத்தமையைத் தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். – என்றார்.

இலங்கைக்கான கியூபா தூதுவருடன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் அண்ட்ரஸ் மார்ஷலோ கொன்ஷாலேஸ் கொரிடோ (Andres Marcelo Gonzales Gorrido) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால இராஜதந்திர தொடர்புகள் மற்றும் நட்புறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்துத் தெரிவித்த கியூபா தூதுவர், ஜனாதிபதியின் தலைமைத்துவத்திற்கு பாராட்டு தெரிவித்ததோடு, இலங்கையுடனான ஒத்துழைப்புக்களை பலப்படுத்த கியூபா எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேபோல் டெங்கு ஒழிப்புக்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு கியூபா அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு வழங்கப்படுமென இதன்போது உறுதியளிக்கப்பட்டது.

டெங்கு ஒழிப்புச் செயற்பாடுகளில் கியூபா பெற்றுள்ள வெற்றிகள் தொடர்பில் சுட்டிக்காட்டிய கியூபா தூதுவர், இலங்கைக்கு டெங்கு ஒழிப்புக்கு அவசியமாக பொதுச் சுகாதார வேலைத்திட்டங்கள் தொடர்பிலான நிபுணத்துவ அறிவைப் பகிர்ந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் தீர்மானங்களை மீறியோருக்கு கட்சியில் இடமில்லை – எம்.ஏ.சுமந்திரன்

தமிழரசுக் கட்சியின் தீர்மானங்களை மீறிய கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இவர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் நியமனங்கள் வழங்கப்படக் கூடாதெனவும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார். எதிர்வரும் தேர்தல்களில் நியமனங்கள் வழங்கப்படும் விதம் குறித்து தினகரனுக்கு அவர் கருத்துத் தெரிவித்தார்.

அவர் மேலும் இது பற்றி விளக்குகையில்,

தமிழரசுக் கட்சியிலிருந்து அதன் தீர்மானங்களுக்கு மாறாகச் செயற்பட்டவர்கள் இதற்கு முன்னரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகக் குறைந்தது அவர்களுக்கு என்றுமே தேர்தல் நியமனம் கொடுக்கப்பட்டதில்லை.

முன்னர் 2019ஆம் ஆண்டு தேர்தல்களில் எங்களுடைய கட்சி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானம் எடுத்த சில நாட்களில், மன்னாரைச் சேர்ந்த சிவகரனும், அனந்தி சசிதரனும் அதற்கு மாறாக ஒரு பத்திரிகையாளர் மாநாடு நடத்தியதன் காரணமாவே கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார்கள்.

அவ்வாறிருக்க இந்தத் தடவை கட்சி எடுத்த தீர்மானத்தை மீறி, பலர் செயற்பட்டிருக்கிறார்கள். ஒரு தீர்மானமல்ல பல தீர்மானங்ளை மீறியிருக்கிறார்கள். சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதென்பது இறுதியாக எடுத்த தீர்மானம். அதற்கு முன்பாகவே பொதுவேட்பாளருக்கு ஆதரவளிப்பதில்லை என்றும் ஒரு தீர்மானம் தெளிவாக நிறைவேற்றப்பட்டது. அது மாத்திரமல்ல பொதுவேட்பாளரை போட்டியிலிருந்து விலகுமாறும் கூட தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. அதற்கு பொது வேட்பாளரிடம் விளக்கமும் கோரப்பட்டது. பொதுவேட்பாளருக்கு ஆதாரவாக பிரசாரம் செய்வதற்கும் நாங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தோம். தீர்மானங்களுக்கு மாறாகச் செயற்பட்டவர்களிடம் விளக்கமும் கோரியிருந்தோம்.

அவர்களுக்கு நியமனம் கொடுக்கப்படுமா இல்லையா என்பது குறித்து நியமனக் குழுவே இறுதி முடிவெடுக்கும். நான் தனியாக முடிவெடுக்க முடியாது ஆனால் கட்சி கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டுமானால், கட்சியின் தீர்மானங்ளை மீறும் எல்லார் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்து போட்டியிடவுள்ளது – நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்து போட்டியிடவுள்ளதாகவும் முதன்மை வேட்பாளராக க.அருந்தவபாலனை நிறுத்த தீர்மானித்துள்ளதாக அக் கட்சியின் தலைவர் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இந்த தகவலை தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

தமிழ் தேசிய கட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிட விரும்பினோம். ஆனால் அவர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை என ஊடகங்களுக்கு அறிவித்துள்ளனர். அதனால் நாங்கள் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளோம்.

வடக்கு தவிர்ந்து கிழக்கிலும் போட்டியிட தீர்மானித்துள்ளோம். சிறிய கட்சிகள் சிலவற்றை இணைந்து போட்டியிடுவது தொடர்பில் பேச்சுக்களை நடத்துகிறோம்.

 

நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். ஆனாலும், கட்சியின் வளர்ச்சிக்காக நான் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட்டு இருப்பேன்.

 

எமது கட்சியின் முதன்மை வேட்பாளராக அருந்தவபாலனை நிறுத்த தீர்மானித்துள்ளோம். அவர் தென்மராட்சி மக்களுக்கு சேவை செய்ய கூடியவர்.

 

அவரை நிறுத்தவது தொடர்பில் மத்திய குழுவில் பேசி முடிவெடுத்துள்ளோம். அவர் என்னை சந்திக்க வரும் போது , அவருடன் நேரில் பேசி அது தொடர்பில் அறிவிப்போம்.

 

அதேவேளை, சட்டத்தரணி மணிவண்ணனும் எமது கட்சியில் போட்டியிடுவார். எமது கட்சி வேட்பாளர்களின் பின்னணிகள் மற்றும் கல்வி தகமை தொடர்பில் ஆராய்ந்து, தகமை உடையவர்களையே வேட்பாளராக நிறுத்துவோம்.

 

தமிழரசு கட்சியில் சுமந்திரன் கேட்கிறார் என்பதற்காக அவருடன் சேர்ந்து செல்ல முடியாது. தமிழ் தேசியத்தை ஒட்டி நாங்கள் பொது வேட்பாளரை நிறுத்திய போது அதற்கு எதிராக செயற்பட்டவர். அப்படி தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்பட்டவருடன் இணைந்து பயணிக்க முடியாது.

 

அவருடைய கோரிக்கை அவரின் தனிப்பட்ட நன்மைக்காக தான் என நினைக்கிறேன் என்றார்.

குழந்தைகளுக்கே உரித்தான சிறுவர் உலகை மீண்டும் வெல்வதே எமது மறுமலர்ச்சிப் பணிகளின் இறுதி இலக்கு – சிறுவர் தின வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க!

குழந்தைகளுக்கே உரித்தான சிறுவர் உலகை மீண்டும் வெல்வதே எமது மறுமலர்ச்சிப் பணிகளின் இறுதி இலக்கு என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க  சர்வதேச சிறுவர் தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

உலகம் சிறுவர்களுக்கானது, அவர்களின் உலகத்தை நம் கரங்களினால் உருவாக்குவோம் என்றும் ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட சிறுவர் தினச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கையில், ஏழ்மை, போசாக்குக் குறைபாடு, சுகாதாரம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, சமூக வாய்ப்புகளில் ஏற்றத்தாழ்வு, போதைப்பொருள், அத்துடன் தொழில் நுட்பத்தின் தவறான பயன்பாட்டிற்கு பலியாவது போன்றன இந்த மிலேனியத்தில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் சவால்களாக நாம் அடையாளம் கண்டுள்ளோம்.

மேலும், சிறுவர்களின் உளவியல் சமூக வளர்ச்சியைத் தடுக்கும் சமூக விளைவுகள் மற்றும் மன அழுத்தம் நிறைந்த பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வி முறைகள் போன்ற தாக்கங்களில் இருந்து தற்போதைய தலைமுறைச் சிறுவர் சமூகத்தை விடுவித்து பிள்ளைகளுக்கே உரித்தான சிறுவர் உலகை மீண்டும் அவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதே நமது மறுமலர்ச்சிக் காலப் பணியின் முக்கிய குறிக்கோளாகும்.

உடலாலும், உள்ளத்தாலும் ஆரோக்கியமான சிறுவர்களின் தலைமுறையை உருவாக்குவதன் மூலம், எதிர்கால உலகை வெல்லும் சுதந்திரமான கற்பனைத்திறன் கொண்ட கனிவான மற்றும் உன்னதமான மனிதர்கள் உருவாக்கப்படுவதாக நாம் நம்புகிறோம்.

அதற்கு அவசியமான பொருளாதார சுதந்திரம் மற்றும் மனித நேயம், பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றைக் கொண்ட சமூகத்தை உருவாக்குதல் மற்றும் இயற்கை வளங்கள் நிறைந்த சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் தேவையான அரசியல் மாற்றத்தை நமது முன்னுரிமைப் பணியாகக் கருதி செயற்படுத்த அர்ப்பணிப்போம்.

அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு நாம் அனைவரும் பொறுப்புடன் செயற்படுவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் 2024இல் இருந்து விலகுகிறேன் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என வன்னி தேர்தல் மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். தன்னுடைய முகநூல் பக்கத்தில் இது தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ள பதிவு வருமாறு..,

தாயக உறவுகளுக்கு இனிய வணக்கம்!

 

கடந்த 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் அதிகூடிய வாக்குடன் மக்களின் விருப்பத்துக்கு அமைய பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டு இருந்தேன்.

அன்று தொடக்கம் இன்றுவரை என்னால் முடிந்த அளவு தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வந்திருக்கின்றேன்.

அத்துடன் எனது பிரதேசங்களில் தமிழ் மக்கள் எதிர் நோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வுகளையும் என்னால் இயன்றவரை வழங்கியும் மக்களின் போராட்டங்களிலும் பங்கு பற்றி இருக்கின்றேன்.

வன்னி மாவட்டத்தில் தேவையான என்னால் முடிந்த பல அபிவிருத்தி திட்டங்களையும் நான் முன்னெடுத்து இருக்கின்றேன்.

தமிழ் மக்கள் எனக்கு இவ்வளவு காலமும் வழங்கிய ஆதரவிற்கும் கௌரவத்திற்கும் நான் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்கின்ற நோக்கத்திற்காக இம்முறை நடைபெறுகின்ற பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்பதை அனைத்து தமிழ் மக்களுக்கும் அறியத்தருகிறேன். அதே நேரம் தமிழர்களின் உரிமைக்காக தொடர்சியாக நான் உழைத்துக் கொண்டிருப்பேன் என்பதை உறுதியாக கூறுகின்றேன்.

எனக்கு தொடர்ச்சியான ஆதரவை இவ்வளவு காலமும் நல்கிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகளை தெரிவிப்பதுடன் தொடர்ந்தும் உங்களோடு நான் பயணிப்பேன் என்பதையும் கூறிக் கொள்கின்றேன்.

நன்றி

இ.சாள்ஸ் நிர்மலநாதன்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

என குறித்த பதிவில் தெரிவித்துள்ளார். இதேவேளை முன்னதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் இளைஞர்களுக்கு வாய்ப்பளித்து தான் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.