உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

தமிழரசு கட்சியால் தமிழ் மக்களுக்கு எவ்வித பிரயோசனமும் கிடைக்கப் போவதில்லை – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் மக்கள் தமிழரசு கட்சிக்கு வழங்கிய ஆணையை மீறி செயல்பட்டு வரும் நிலையில் எதிர்காலத்தில் தமிழரசு கட்சியால் தமிழ் மக்களுக்கு எவ்வித பிரயோசனமும் கிடைக்கப் போவதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

 

தமிழரசு கட்சியை மற்றும் சுமந்திரன் செயல்பாடு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதில் வழங்கினார்.

 

தேர்தல் காலங்களில் தமிழரசு கட்சி சமஸ்டி, இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை, ஒற்றை ஆட்சியை எதிர்க்கிறோம் என்ற கோரிக்கைகளை தமிழ் மக்கள் முன்வைத்து வாக்குகளை பெறுகிறார்கள்.

 

தேர்தலில் வென்ற பின்னர் தமிழ் மக்களுக்கு வழங்கிய ஆணைகளை மறந்து தமது இருப்புக்களையும் சுயலாப அரசியலையும் மேற்கொள்வதற்கான செயற்பாடுகளில் தமிழரசு கட்சியை ஈடுபட்டு வருகிறது.

 

அண்மையில் தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன், ஜனாதிபதி அனுரவை சந்தித்து மதுபான அனுமதி பத்திரங்களை பெற்றவர்களின் பெயர் பட்டியலை வெளியிடுமாறு கோருகிறார்.

 

இதில் வேடிக்கை என்னவென்றால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரவை முதன் முதலில் சந்திக்க சென்ற சுமந்திரன், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் அனுரவுடன் பேசாமல் மதுபான அனுமதிப்பத்திர பெயர்களை வெளியிடுமாறு கேட்கிறார்.

 

பெயர் பட்டியல் வெளியிடுவதை வேண்டாம் என நாங்கள் கூறவில்லை சுமந்திரன் தமிழரசு கட்சிக்குள் தனக்கு வேண்டாதவர்களை அப்புறப்படுத்துவதற்கும் தனது இருப்பை தக்க வைப்பதற்கும் மதுபான அனுமதி பத்திரங்களை வெளியிடுமாறு கேட்பதாக நான் கருதுகிறேன்.

 

ஏனெனில் தமிழ் மக்களுக்கு வரலாற்று துரோகங்களை செய்த ஜே.வி.பி தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற பெயருடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு அனுர ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

மஹிந்த ராஜபக்ச காலத்தில் தமிழ் மக்களின் இனப் படுகொலைக்கு அரசியல் நீதியாக ஆதரவு வழங்கிய கட்சிகளில் பிரதானமான கட்சியாக ஜே.வி.பி விளங்கியது.

சமாதான ஒப்பந்த காலத்தில் வடக்கு கிழக்கு இணைப்பை நீதிமன்றம் சென்று பிரித்தவர்களும் ஜே.வி.பியினர் தான்.

 

அதுமட்டுமல்லாது அரசியல் அமைப்புத் தான் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு இராணுவத்தை தண்டிக்க விடமாட்டேன் என கூறும் ஜனாதிபதியாக அனுர காணப்படுகிறார்

 

இவ்வாறு தமிழ் மக்களுக்கு துரோகங்களை இழைத்த கட்சியைச் சார்ந்தவரிடம் தமிழரசு கட்சி சுமந்திரன் சந்திக்க சென்ற போது தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் பேசி இருக்க வேண்டும் அதுவே வாக்களித்த மக்களுக்கு தமிழரசு கட்சி செய்ய வேண்டிய கடமை அதை சுமந்திரன் செய்யவில்லை.

 

அது மட்டும் அல்ல. தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் ஜனாதிபதி அனுரவை சந்தித்தமை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் பொது வழியில் பேசப்படுவருகிறது.

 

ஆகவே தமிழரசு கட்சியும் சுமந்திரனும் தமிழ் மக்களுக்கு வழங்கிய ஆணையிலிருந்து விலகி தமது சொந்த சுயநல அரசியலுக்காக செயற்பாட்டுவரும் நிலையில் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு எந்த விதத்திலும் பிரயோசனப்பட மாட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் சதொச மனித புதைகுழி அகழ்வு பணி இவ்வாரம் மீண்டும் ஆரம்பம்!

நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மன்னார் சதொச மனித புதைகுழி அகழ்வு பணி இவ்வாரம் மீண்டும் இடம் பெறவுள்ள நிலையில் தடய பொருட்களை பிரித்தெடுத்தல், புதைகுழியை சூழ உள்ள பகுதியை ஸ்கேன் செய்தல், அகழ்வு செய்யும் பணிகள் முதற்கட்டமாக இடம்பெற்று வருகின்றது.

 

மன்னார் சதொச வளாகத்திற்கு அருகில் இராணுவ முகாம் அமைந்திருந்த பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டிடம் அமைந்துள்ள பகுதியிலும் அகழ்வு பணிகள் புதன்கிழமை (9) இடம்பெற்றன.

 

இருப்பினும் குறித்த அகழ்வு பணி தொடர்பான செயற்பாடுகளையோ, ஸ்கேன் செயற்பாடுகளையோ புகைப்படம் எடுக்க, காணொளியாக பதிவு செய்யவோ மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 

முன்னதாகவே சதொச மனித புதைகுழி அகழ்வு பணியை செய்தி சேகரிக்க பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக குறித்த அகழ்வு பணி தொடர்பான உண்மையான விடையங்களை அறிக்கையிடவும் அகழ்வு செயற்பாடுகளை ஆவணப் படுத்தவும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

 

என்ற போதிலும் புதிய நீதிபதியினால் தற்போது அகழ்வு பணியையோ அல்லது புதைகுழி தொடர்பிலான ஏனைய செயற்பாடுகளையோ கணொளியோ புகைப்படமே எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 

மேலும் குறித்த அகழ்வு தொடர்பிலும், புதைகுழி வழக்கு தொடர்பிலான செயற்பாடுகள் தொடர்பிலும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஆஜராகும் சட்டத்தரணிகள் குரல் பதிவுகளை வழங்க மறுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்கள் கூட்டணியில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் தாக்கல் !

நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் இன்று புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்யப்பட்டன .

 

இந்த பட்டியலில் யாழ் மாநகர சபை முன்னாள் மேயர் வி. மணிவண்ணன், தவச்செல்வம் சிற்பரன் ( கட்டிடக் ட கலைஞர், தமிழ் மக்கள் கூட்டணி சிரேஷ்ட உறுப்பினர்), மிதிலைச்செல்வி ஶ்ரீ பத்மநாதன் (தமிழரசுக் கட்சி கொழும்பு மாவட்ட கிளையின் முன்னாள் உப தலைவர் மற்றும் மகளிர் அணி உறுப்பினர், யாழ் பல்கலைக்கழக பட்டதாரி), வரதராஜா பார்த்தீபன் (யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மற்றும் யாழ் எயிட் தொண்டுநிறுவன சிரேஷ்ட தலைவர்), நாவலன் கோகிலவாணி ( முன்னாள் போராளி, நிர்வாக இயக்குநர் , தொழில்முனைஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்), அருள்பரன் உமாகரன் ( சட்டத்தரணி, கவிஞர் மற்றும் தமிழரசு கட்சி உறுப்பினர்), பிரான்சிஸ் குலேந்திரன் செல்ரன்( யாழ் மத்திய கல்லூரி கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர், யாழ் பல்கலைக்கழக பட்டதாரி ), முருகானந்தம் யசிந்தன் (பிராந்திய இயக்குநர் , ஆர். பி. கொ நிறுவனம்), கதிரேசன் சஜீதரன் (யாழ் பல்கலைக்கழக பட்டதாரி, கோண்டாவில் இந்துக்கல்லூரி ஆசிரியர்) ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

 

தமிழ் மக்கள் கூட்டணியின் பதிவுசெய்யப்பட்ட மான் சின்னத்தில் இவர்கள் போட்டியிடுகின்றனர். வேட்புமனு தாக்கலுக்கு முன்னர் வேட்பாளர்கள் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தினர்.

 

அரசியலில் இளையோருக்கு இடமளிக்கும் வகையில் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் ஆனால் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து தங்கியிருந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவிருப்பதாகவும் கட்சித் தலைவர் சி. வி. விக்னேஸ்வரன் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு நிபந்தனையின் அடிப்படையில் பிணை !

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் விடுவிக்க சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் கடந்த 26ஆம் திகதி உத்தரவிட்டது.

 

இன்றையதினம் நகர்த்தல் பத்திரம் மூலம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றம் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது.

 

வைத்தியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தியமை,பேசித் தொந்தரவு செய்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக வைத்தியர் அர்ச்சுனா மீது ஏனைய வைத்தியர்கள் வழக்கு தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கட்சியில் அங்கத்துவம் இல்லாத பெண்கள் இருவரை சுமந்திரன் திட்டமிட்டு களமிறக்கியுள்ளார் – தமிழரசுக்கட்சி மகளிர் அணி குற்றச்சாட்டு!

நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெண் வேட்பாளர் தெரிவில் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ள கட்சியின் மகளிர் அணியினர், கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளார்கள்.

தமிழரசுக் கட்சியின்மகளிர் அணியின் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை நடத்தினர்.

இதன்போது கட்சியின் யாழ். மாவட்ட மகளிர் அணித் தலைவி மதனி நெல்சன் தெரிவித்ததாவது:-

“நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பிரேரிக்கப்பட்டுள்ள பெண் வேட்பாளர் தெரிவில் கட்சியின் மகளிர் அணிக்குக் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

உண்மையில் எதற்காக இவ்வாறான தெரிவுகளைச் செய்தார்கள் என்ற சந்தேகமும் கேள்வியும் இருக்கின்றது. இந்தப் பெண் வேட்பாளர் தெரிவு சர்வாதிகாரமான முறையிலே நடைபெற்றிருக்கின்றது. இதனால் கட்சியில் உள்ள பெண்கள் அவமானப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் யாழில் போட்டியிடுவதற்காக மகளிர் அணியில் இருக்கின்ற ஐந்து பேர் இரண்டு கிழமைக்கு முன்னதாகவே விண்ணப்பித்து இருந்தனர்.

ஆனால், வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட சுமந்திரன் பெண்கள் விண்ணப்பிக்கவில்லை என்றும், காடுகள், மலைகள், மேடுகள், பள்ளங்கள் எனப் பல இடங்களிலும் பெண்களைத் தேடுவதாகவும் தனது பாணியில் கிண்டலாகச் சொல்லியிருந்தார்.

ஆனால், 5 ஆம் திகதி பெண்கள் விண்ணப்பிக்கவில்லை என்றவர் மறுநாள் 6 ஆம் திகதி இரண்டு பெண்கள் விண்ணப்பித்து அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்று கூறுகின்றார். உண்மையில் ஓரிரு வாரங்களுக்கு முன்னர் விண்ணப்பித்தவர்களை மறைத்து யாரும் விண்ணப்பிக்கவில்லை எனச் சொன்னவர் திடீரென இருவர் விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களைத் தெரிவு செய்துள்ளதாகவும் கூறுகின்றார்.

ஆகவே, எதற்காக அவர் உண்மையைச் சொல்லாமல் பொய் சொல்லுகின்றார். இவ்வாறாக அவரின் பொய்களைக் கேட்கவோ, சர்வாதிகாரத்துடன் அவர் செயற்பட்டு வருவதையோ அனுமதிக்க நாங்கள் தயாராக இல்லை.

எங்களில் பல பேர் போட்டியிட விண்ணப்பித்து இருக்கையில் அதனை மறைத்துவிட்டு தனக்குத் துதிபாடுபவர்களை வேட்பாளர்களாகச் சுமந்திரன் நிறுத்தியுள்ளார். ஆக முதலில் விண்ணப்பித்த நாங்கள் யார்? இப்போது சுமந்திரன் தெரிவு செய்த இருவரும் யார்? எந்த அடிப்படையில் அவர்களைச் சுமந்திரன் தெரிவு செய்தார்..?

ஆக மொத்தத்தில் தனக்குத் துதி பாடுபவர்களைத் தானே நிறுத்திவிட்டு இப்போது ஆளுமை மிக்க பெண்கள் என அவர் பொய் கூறுகிறார்.

வெறுமனே அடாவடித்தனமாகச் சர்வாதிகாரத்துடன் தான் செயற்படுவதால் மற்றவர்களை முட்டாள்கள், மடையர்கள் எனச் சுமந்திரன் நினைக்கக்கூடாது. எல்லாத்துக்கும் தனித்து ஒற்றையாளாக முடிவெடுகின்ற அவரது ஆட்டம் இனி முடிவுக்கு வரும்.

 

இந்த இரு பெண் வேட்பாளர்களின் தெரிவு என்பது தன்னிச்சையாக சுமந்திரனால் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இதற்கு யாருடைய ஒப்புதலும் இன்றி தனக்குத் துதிபாடுபவர்களைத் தனது வாக்கு வங்கிக்காக அவர் தெரிவு செய்துள்ளார்.

 

எங்கள் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக இந்த இருவரையும் சுமந்திரன் நியமித்துள்ளார். முன்னர் விண்ணப்பித்தவர்களைப் புறந்தள்ளி தனக்குத் துதிபாடிக்கொண்டு தன்னோடு பயணிக்கக்கூடிய இரண்டு கொத்தடிமைகளை வேட்பாளர்களாகச் சுமந்திரன் நியமித்துள்ளார்.” – என்றார்.

 

தமிழரசுக் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் ரஜனி ஜெகப்பிரகாஷ், தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த முன்னாள் பிரதேச சபை தவிசாளர் நாகரஞ்சினி ஜங்கரன், தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த விமலேஸ்வரி ஆகியோரும் பெண் வேட்பாளர் நியமனத்துக்கு எதிராகக் கருத்து வெளியிட்டனர்.

 

தமிழரசுக் கட்சிக்குள் தற்போது சுமந்திரனின் சர்வாதிகார ஆட்சிதான் நடக்கின்றது என்றும் அவர்கள் கடும் விசனம் தெரிவித்தனர்.

கடந்த அரசாங்கங்களில் இடம்பெற்ற ஊழல் – மோசடிகள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள் – தேசிய மக்கள் சக்தி மக்களிடம் கோரிக்கை!

நாட்டில் கடந்த அரசாங்கங்களில் இடம்பெற்ற ஊழல் – மோசடிகள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைக்கப்பெறுமாயின் ஊழலுக்கு எதிரான அமைப்பிற்கு வழங்குமாறு குறித்த அமைப்பின் அமைப்பாளர் வசந்த சமரசிங்க பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி கொள்ளையர்களுடன் எவ்வித உறவையும் பேணாது என்றும் அவர் கூறியுள்ளார்.

 

கடந்த மாதம் 23ஆம் திகதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து 24ஆம் திகதி மிகச்சிறிய அமைச்சரவையை நியமித்து மக்கள் எதிர்பார்த்தவாறு நிதி முறைகேடுகள் செய்தவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த ஆரம்பித்துள்ளார்.

 

புதிய அரசாங்கம் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பொதுமக்கள் வழங்கும் தகவல்களும் மிகவும் முக்கியமானவையாகும். அந்தத் தகவல்களின் மூலம் நிதி முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத வேலைகளைச் செய்த நபர்களுக்கு நீதிமன்றத்தின் ஊடாக எவ்வாறு சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது என்பதை பொதுமக்கள் அவதானிக்க முடியும்.

 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தமக்கு எதிராக சட்டத்தை விரைவில் அமுல்படுத்துமாறு கோரி வருவதாகவும், அவசரப்படாமல் ஆதாரங்களுடன் தகவல்களைப் பெற்ற பின்னரே இதனைச் செய்ய வேண்டுமென்பதனால் முறையாகச் செய்வதற்கு சிறிது காலம் பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பணத்தை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நடத்துநரை தனியார் பேருந்து உரிமையாளர் தென்னை மரத்தில் கட்டிவைத்து அடித்து சித்திரவதை !

தனியார் பேருந்தொன்றில் பணத்தை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நடத்துநரை தனியார் பேருந்து உரிமையாளர் தென்னை மரத்தில் கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (7) களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஓந்தாச்சிமடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

 

இது தொடர்பாக தெரியவருவதாவது

களுவாஞ்சிக்குடி மகிளுர் பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளரின் கல்முனை – மட்டக்களப்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் பேருந்தில் நடத்துனராக அம்பாறை மத்திய முகாம் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் கடமையாற்றி வந்துள்ளார்.

 

இந்நிலையில், அந்த பேருந்தில் இருந்து பணத்தை திருடியதாக நடத்துநர் மீது தனியார் பேருந்து உரிமையாளர் குற்றஞ்சாட்டி கடமையிலிருந்த இளைஞரை இன்று பகல் ஓந்தாச்சிமடம் பிரதான வீதியிலுள்ள பாழடைந்த காணியொன்றுக்குள் இழுத்துச் சென்று அங்கிருந்த தென்னை மரத்தில் கட்டிவைத்து கட்டையால் தாக்கி சித்திரவதை செய்துள்ளார்.

 

இதனை கண்ட பொதுமக்கள் கடும் கவலை தெரிவித்து, பொலிஸாருக்கு அறிவித்த நிலையில், சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்றுள்ளனர்.

 

அதன் பின்னர், மரத்தில் கட்டிவைத்து அடித்தவரை அங்கிருந்து பொலிஸார் அப்புறப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஜே.வி.பி.தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்கின்ற, அல்லது தீர்த்து விடும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை. – செல்வம் அடைக்கலநாதன்

ஜே.வி.பி.தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்கின்ற, அல்லது தீர்த்து விடும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை.அவர்கள் தற்போது தேர்தல் ஆசனங்களை கூடுதலாக கைப்பற்ற வேண்டும் என்று சில நடவடிக்கைகளை எடுக்கின்றனர் என ரெலோ தலைவரும், வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று (07) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கட்டமைப்பு சார்பாக சங்குச் சின்னத்தில் நாங்கள் போட்டியிடுகின்றோம். வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், வேட்பாளர்களை நாங்கள் தெரிவு செய்துள்ளோம்.

அம்பாறை மற்றும் திருகோணமலை பிரதேசங்களில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளோம்.

தென்பகுதி மக்கள் அங்குள்ள அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊழலுக்கு எதிராக ஜே.வி.பி கட்சிக்கு வாக்களித்துள்ளனர். தற்போது அது எங்களிடமும் பரவியுள்ளது.

ஜே.வி.பி உடன் இணைந்து போட்டியிடுவதில் எமது இளைஞர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். ஜே.வி.பி. தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்கின்ற, அல்லது தீர்த்து விடும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை.

அவர்கள் தற்போது தேர்தல் ஆசனங்களை கூடுதலாக கைப்பற்ற வேண்டும் என்று சில நடவடிக்கைகளை எடுக்கின்றனர்.

அந்த வகையில் எமது இன பிரச்சினையாக இருக்கலாம்,எமது நிலங்கள் அபகரிக்க படுகின்ற விடையங்களாக இருக்கலாம். கடந்த காலங்களில் அனுபவித்த துப்பாக்கிச் சத்தங்கள் இல்லாத எமது தேசத்தை அனுபவிக்கின்ற நிலைப்பாடுகளை இந்த ஜே.வி.பி அரசாங்கம் நிறுத்துமா? என்கிற கேள்வி இருக்கிறது என தெரிவித்தார்.

2024 பொதுத் தேர்தல் – வேட்பாளர்களின் சொத்து மதிப்புக்களை கோரும் தேர்தல் ஆணைக்குழு !

2024 பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல்செய்யும் அனைத்து வேட்பாளர்களும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களைக் கையளிக்க வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

இதற்கமைய ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்களின் அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினம் வரையிலான தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களைக் கையளிக்க வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

தேசியப்பட்டியல் வேட்பாளர்களும் தமது வேட்புமனுக்களுடன் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களைக் கையளிக்க வேண்டுமென ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

 

தமது வேட்புமனுக்களுடன் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களைக் கையளிக்கத் தவறுகின்றமை தண்டனைக்குரிய குற்றமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தலில் தோல்வியடைந்தால் இரண்டு அணி தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் ஒரு அணி என செயற்படுபவர் தான் சுமந்திரன். – கே.வி. தவராசா குற்றச்சாட்டு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகுவதாக அதன் கொழும்பு கிளைத் தலைவர் கே.வி. தவராசா தெரிவித்துள்ளார்.

கட்சியில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து தாம் பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனிநபர்களின் தன்னிச்சையான போக்குக்குள் சிக்குண்டுள்ள தமிழரசு கட்சியுடன் தொடர்ந்தும் பயணிக்க முடியாது.

தமிழ்த் தேசியத்தை உரிய பலத்துடன் நிலைநாட்டுவதற்கான வழிவகைகள் குறித்து எதிர்காலத்தில் சிந்திப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு கிளைத் தலைவர் கே.வி.தவராசா குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய மேலதிக பேட்டி ஒன்றில் இரா.சம்பந்தன்  மற்றும் மாவை சேனாதிராஜா  ஆகியோரின் ஆளுமையின்மையின் வெளிப்பாடு தான் இன்றைய சுமந்திரனுடைய ஆட்டத்திற்கு காரணம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா  தெரிவித்தார்.

தலைமைத்துவத்தை சரியாக கையாளாமல் விட்டமையினால் இன்று தமிழரசுக்கட்சி தனியொருவரினுடைய கம்பனியாக மாறிவிட்டது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

சுமந்திரனுக்கும் எனக்கும் எந்த முரண்பாடு இல்லை. ஆனால் நான் தமிழரசுக் கட்சியினுள் வந்துவிடக் கூடாது என்பதிலும் நாடாளுமன்றத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதிலும் சுமந்திரன் விசேடமாக அக்கறையாக உள்ளார்.

தேர்தலில் தோல்வியடைந்தால் இரண்டு அணி தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் ஒரு அணி என செயற்படுபவர் தான் சுமந்திரன். அவருக்கு என்ன தேவையோ அந்த நேரத்திற்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றிக்கொள்வார் என்பது உலகமே அறிந்ததாகும்.

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளருக்கு வாக்களித்த மக்களுக்கு நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழரசுக் கட்சி இவ்வாறு செயற்படுமாக இருந்தால் அதற்கு எவ்வாறு பதிலடி கொடுக்க வேணடுமென தெரியும்.“ என தெரிவித்தார்.