உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

நாட்டை மீட்டெடுக்கும் வரை எம்மை வீழ்த்த முடியாது – ஜனாதிபதி அனுர குமார

“அறுகம்பே சம்பவத்தை அடிப்படையாக வைத்தேனும் இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியுமா என எதிரணிகள் சிந்தித்துக்கொண்டுள்ளன. அவ்வளவு எளிதில் இந்த ஆட்சியைக் கவிழ்த்துவிட முடியாது. நாட்டை மீட்டெடுக்கும் வரை எம்மை வீழ்த்த முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

 

களுத்துறையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

 

“ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் டொலரின் பெறுமதி 400 ரூபா வரை செல்லும் என பிரச்சாரம் செய்தனர். இன்று அவ்வாறு நடந்துள்ளதா? இல்லை.

 

எமது பிரதிநிதிகள் சர்வதேச நாணய நிதித்துடன் பேச்சு நடத்தி வருகின்றனர். சாதகமான பிரதிபலன் கிட்டியுள்ளது. மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

 

எமது ஆட்சியில் அஸ்வெசும இல்லாமல் செய்யப்படும் என்றனர். அதுவும் நடக்கவில்லை. அன்று கூறிய அனைத்தும் பொய்யென உறுதியாகியுள்ளது.

 

எனவே, பொய்களை நம்பி எவரேனும் ஏமாந்திருந்தால் அவர்களும் இன்று உண்மையை உணர்ந்திருப்பார்கள்.

 

எனவே, எமக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை மக்கள் வழங்குவார்கள். இதனால் சிலர் குழம்பிப் போயுள்ளனர். ஏதேனும் சிறு சம்பவம் நடந்தால்கூட ஆட்சி கவிழுமா என எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

 

அறுகம்பே சம்பவம் தொடர்பில் அனைவரும் ஊடக சந்திப்புகளை நடத்துகின்றனர். அதன் மூலமாகவேனும் ஆட்சி கவிழுமா என்ற சந்தோசத்தில் அவர்கள் உள்ளனர்.

 

மூன்று வாரங்களுக்கு முன்னரே எமக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து சுற்றுலாத்துறையும் பாதிக்காத வகையில் திட்டமிட்ட அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

 

சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்கும் அதேவேளை திட்டமிட்டவர்களையும் கைது செய்வதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

கடவுச்சீட்டில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட சிங்களம் – அமைச்சர் விஜித ஹேரத் விளக்கம்!

புதிய கடவுச்சீட்டில் அரச கரும மொழிகளான சிங்களம், தமிழ் மொழிகள் முன்னிலையில் இருந்து பின்னிலைக்கு கொண்டு செல்லப்பட்டமை தொடர்பிலான முடிவு சமகால அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. அது கடந்த அரசாங்கத்தின் முடிவு என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில், கடவுச்சீட்டு நெருக்கடி நிலைமை தொடர்பிலும், புதிதாக விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டில் பழைய கடவுச்சீட்டில் முதல் இரண்டு இடங்களில் இருந்த சிங்களம் மற்றும் தமிழ் மொழிகள் இரண்டாம், மூன்றாம் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை தொடர்பிலும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

 

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

 

கடவுச்சீட்டு பிரச்சினை நாம் வந்து ஏற்படுத்தியது அல்ல. கடந்த அரசாங்கம் முறையாக கடவுச்சீட்டுகளை கொண்டுவர நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நெருக்கடி ஏற்பட்டிருக்காது. இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த புதிய நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் அவற்றை உரிய காலத்தில் அனுப்ப தவறியுள்ளனர். இந்த நேரத்தில் பழைய கடவுச்சீட்டும் போதுமான அளவு கையிருப்பில் இருக்கவில்லை. நாம் வரும் போது இதுவே நிலைமையாக இருந்தது.

 

இன்னுமொரு நிறுவனம் குறித்த டென்டருக்கு எதிராக நீதிமன்றத்திற்கும் போயிருந்தது. இந்நிலையில் முன்னாள் அரசாங்கம் சென்ற பாதையில் சென்றிருந்தால் ஒரு கடவுச்சீட்டும் இருந்திருக்காது. நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கமைய முன்னர் கடவுச்சீட்டை பெற்ற நிறுவனத்திடம் இருந்து அவற்றை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

பல மாதங்களா கடவுச்சீட்டு இல்லாமல் இருந்தமையினால் இப்போது கேள்விகள் அதிகரித்துள்ளதால் அதிகமானவர்கள் கடவுச்சீட்டு பெற செல்கின்றனர். இதனால் மக்களிடம் அத்தியாவசிய தேவையாக இருந்தால் மாத்திரம் கடவுச்சீட்டு அலுவலகம் செல்லுமாறு கோருகின்றோம்.

 

இதேவேளை, புதிய கடவுச்சீட்டுகளை வடிவமைத்தது நாம் அல்ல. அதனை நாங்கள் மாற்றம் செய்ய போகவில்லை. அதற்குள் புகைப்படங்கள் பல உள்ளன. அவை ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்தமையாகும். அனைத்தையும் மாற்றினால் நெருக்கடிகளே ஏற்படும். இப்போதுள்ள தொகை 6 மாதங்களுக்கு போதுமானது. அடுத்தக் கட்டமாக புதிய கடவுச்சீட்டுகளை கொண்டுவர புதிய நிறுவனத்திற்கு விலைமனு கோரல் வழங்கப்பட வேண்டும்.” என்றார்.

சாவகச்சேரி நீதிமன்றத்தின் மீது தாக்குதல் எச்சரிக்கை !

யாழ் – சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்துக்கு தாக்குதல் நடத்தப்படப்போவதாக பொலிஸாரின் தொலைபேசிக்கு வழங்கப்பட்ட மர்ம நபரின் தகவலுக்கமைய குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதனையடுத்து கடும் சோதனைகளுக்கு பின்னரே நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.

அனுர குமார திசாநாயக்கவிற்கு எதிராக குற்றப் பிரேரணையை தயாரிக்க என்னை பாராளுமன்றம் அனுப்புங்கள்- உதய கம்மன்பில

எதிர்கால பாராளுமன்றத்திற்கு மக்கள் தம்மை தெரிவு செய்தால் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு எதிரான குற்றப் பிரேரணையை தயாரித்தல் மற்றும் முன்வைத்தல் ஆகிய இரண்டு பணிகளையும் தாம் மேற்கொள்வேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பான குழு அறிக்கைகள் தொடர்பான உண்மைகளை முன்வைப்பதற்காக கொழும்பில் திங்கட்கிழமை 28) காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

தேசத்திடம் மன்னிப்பு கோருவதற்கும், ரவி செனவிரத்னவை பதவியில் இருந்து நீக்குவதற்கும் ஜனாதிபதிக்கு இன்னும் சந்தர்ப்பம் இருப்பதாகவும், அவ்வாறு செய்யாவிட்டால் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

ரணில் விக்ரமசிங்க, ரிஷாத் பதுர்தீன் மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை உருவாக்கி அந்தத் திறமையை தான் வெளிப்படுத்தியுள்ளதாக உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.

 

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு மிகப்பெரும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் பொறுப்பேற்றுள்ளதாகத் தெரிவித்த கம்மன்பில, அனுர ஜனாதிபதி என்பதாலேயே அவர் கோமாவில் இருந்து விழித்துக்கொண்டார் என்றார்.

தமிழரசுக் கட்சியில் யாருமே மதுபானக்கடைக்கான அனுமதியை பெறவில்லை என்பதை சுமந்திரனால் உறுதிப்படுத்த முடியுமா..? – கீதநாத் காசிலிங்கம் சவால்.!

இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் எவரும் பார் லைசன்சை பெறவில்லை என்பதை சத்தியக் கடதாசியின் ஊடாக வெளிப்படுத்த முடியுமா என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் கீதநாத் காசிலிங்கம் எம்.ஏ.சுமந்திரனிடம் சவால் விடுத்துள்ளார்.

 

கட்சியில் சிலர் பார் லைசனை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு உடனடியாக பதில்கள் அளிக்கப்பட வேண்டும் என்றும் பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

 

யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த சவாலை விடுத்துள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

 

“பார் லைசன்ஸ்சோ – சாராயக் கடைகளோ யாருக்கும் இதுவரையில் பெற்றுக்கொடுக்கவில்லை எனச் சத்தியக் கடதாசி ஒன்றை அண்மையில் கொடுத்திருந்தேன். அதேபோல் என்னுடைய சக வேட்பாளர்கள் முக்கியமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இத்தகைய சத்தியக் கடதாசியை கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன்.

 

ஏனென்றால் தற்போது பரவலாகப் பேசப்படுகின்ற பார் லைசன்ஸ் விவகாரத்தில் யார், யார் இந்த பார் லைசன்ஸ்சை பெற்றுள்ளார்கள் என்று மக்களுக்குத் தெரிய வேண்டும்.

 

மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இவர்களை நாடாளுமன்றம் அனுப்பியது சாராயக் கடைகளை வாங்குவதற்காக அல்ல.

 

ஆகவே, யார் யார் வாங்கினார்கள் என்பது வாக்களித்த மக்களுக்கு கட்டாயம் தெரிய வேண்டும். ஆனால், இந்த உண்மையை வெளிப்படுத்த வேண்டிய புதிய ஆட்சியாளர்கள் கூட அதனை வெளிப்படுத்தத் தயங்குகின்ற நிலைமைதான் உள்ளது.

 

இவர்கள் ஏன் தயங்குகின்றார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் முக்கியமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து வேட்பாளர்களும் பார் லைசன்ஸ் வாங்கவில்லை என சத்தியக் கடதாசியைக் கொடுக்க வேண்டும்.

 

ஆனால், இதுவரைக்கும் எவரும் அப்படியான சத்தியக் கடதாசியை கொடுக்கவில்லை. ஒவ்வொரு நாளும் சாராயக் கடை தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகங்களில் கதைத்துக் கொண்டிருக்கின்றார்.

 

எங்களுக்கு அவர் ஒரு முன்மாதிரியான அரசியல்வாதி. அவரைப் பார்த்துத்தான் நாங்களும் சில விடயங்களை அதிலும் அவருடைய உரைகளில்தான் படித்துக் கொள்கின்றோம்.

 

எனவே, நாம் கேட்டது போல அவர் முன்மாதிரியாக ஒரு சத்தியக் கடதாசியைக் கொடுக்க வேண்டும். சாராயக் கடை சம்பந்தமாக உண்மை தெரிய வேண்டும் என்று ஜனாதிபதியிடமும் சென்று கதைத்திருந்தவர் அவர்.

 

அவ்வாறு முதலில் அவரே ஒரு சத்தியக் கடதாசியைக் கொடுத்து அவரது கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் சத்தியக் கடதாசியைக் கொடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டும். இதனை முன்மாதிரியாகச் செய்யுங்கள் என சுமந்திரனை மரியாதையுடன் கேட்கின்றோம்.

தொடரும் கடவுச்சீட்டு வரிசை – அமைச்சர் விஜித ஹேரத் முன்வைத்துள்ள கோரிக்கை!

அத்தியாவசிய தேவைகள் இல்லாத எவரும் கடவுச்சீட்டை பெற வரவேண்டாம் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

கடந்த வாரம் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் 40 ஆயிரம் கடவுச்சீட்டுகளை அரசாங்கம் இரண்டு கட்டங்களாக இறக்குமதி செய்துள்ளது.

 

அதன் பிரகாரம் ஏற்கனவே, பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளவர்களுக்கு கடவுச்சீட்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.

 

என்றாலும், குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தில் தொடர்ந்து அதிகளவான மக்கள் வருவதால் வரிசைகள் இன்னமும் முடிவடையவில்லை.

 

இதுதொடர்பில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ள அமைச்சர் விஜித ஹேரத், ”கடந்த காலங்களில் கடவுச்சீட்டு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக கடவுச்சீட்டுக்கான தேவை அதிகரித்துள்ளது. புதிய முறையின் கீழ் அத்தியாவசியமான அனைத்து நபர்களுக்கும் கடவுச்சீட்டு வழங்கப்படும்.

 

குறிப்பிட்ட அளவான கடவுச்சீட்டுகள் கையிருப்பில் உள்ளன. எதிர்காலத்தில் சில இலட்சம் கடவுச்சீட்டுகள் பெறப்படும். இதனால் அத்தியாவசிய தேவையுடையவர்கள் மாத்திரம் இக்காலப்பகுதியில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள வேண்டும். வெளிநாடு செல்லாதவர்கள் பெற வேண்டாம்.” எனவும் விஜித ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு கிழக்கு மக்களின் கஷ்டத்தில் ஒருமுறை கூட ஜே.வி.பி கலந்து கொண்டது கிடையாது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

ஒற்றையாட்சி அரசியலமைப்பை நாங்கள் நிராகரிப்பதாக இருந்தால் அதை நிராகரிக்கக் கூடிய, செயல்படுத்தக்கூடிய ஒரு அணியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளது என அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(27) மாலை 4.30 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

 

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடக்கின்றது.இந்த 15 வருடங்களில் எமது மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் நாளாந்தம் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

 

இவர்களின் ஒரு போராட்டத்திலாவது ஜே.வி.பி கலந்து கொண்டுள்ளதா?.வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.அரசியல் கைதிகளின் விடுதலைக்காக போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

 

தனியார் காணிகள் அபகரிப்பு எதிராக பாதிக்கப்பட்ட எமது மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.இவற்றில் ஏதாவது ஒன்றிலாவது இந்த ஜே.வி.பி தரப்பினர் அல்லது தேசிய மக்கள் சக்தி என கூற படுகிறவர்கள் கலந்து கொண்டுள்ளார்களா?இல்லை.இடைக்கால அறிக்கையை பாராளுமன்ற பொதுத் தேர்தல் நிறைவடைந்த பின்னர் நிறைவேற்றுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

 

இலங்கையின் பிரதான அமைப்பாக அரசியல் அமைப்பு காணப்படுகிறது.அந்த அரசியல் அமைப்பை மூன்று தடவை கொண்டு வந்து நிறைவேற்றிப்படுள்ளது.மூன்று அரசியல் அமைப்பையும் எமது மக்கள் நிராகரித்தனர்.

 

நாட்டின் பிரதான சட்டத்தை இரண்டாவது இனம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகிறது என்றால் அதற்கான அர்த்தம் அந்த இனத்திற்கு ஓர் இனப் பிரச்சினை உள்ளது என்பதேயாகும்.

 

சர்வதேச சமூகம் 2012 ஆம் ஆண்டில் இருந்து ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப் படுகின்ற ஒவ்வொரு தீர்மானங்களையும் தெளிவாக வலியுறுத்துகின்றது இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் என்று.

 

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியலமைப்பை நிறைவேற்ற வேண்டும்.அப்படி கூறுகின்ற படியால் போருக்கு பின்னர் ஒரு தீர்வு காண்பதற்கான நாடகமாவது இங்கு நடிக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டது.

 

ஒரு தீர்வில்லாத யோசனை கொண்டு வந்தால் அதை தமிழ் மக்கள் நிராகரிப்பார்கள்.நிராகரித்தால் இனப்பிரச்சினை தொடர்ந்து இருக்கும்,அப்படி தொடர்வதாக இருந்தால் சர்வதேச மட்டத்தில் தமக்கு தேவையற்ற அழுத்தங்கள் வரும் என்கிற ஒரு பிடியாவது நாங்கள் இன்று வைத்துள்ளோம்.

 

அந்த பிடியை இல்லாமல் செய்வதற்கு தான் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு கொண்டு வரப்பட்டு,வடக்கு கிழக்கில் சரித்திரத்தில் முதல் தடவையாக எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்களுடைய பெரும்பான்மை ஆதரவோடு,அதை நிறைவேற்றி உலகத்திற்கே தமிழ் மக்கள் இந்த அரசியல் அமைப்பை ஆதரித்து விட்டார்கள் என்ற ஒரு செய்தியை காட்டுவதற்கு முயல்கின்றார்கள்.

 

இதுதான் எமக்கு இருக்கின்ற ஒரு மிகப்பெரிய சவால்.ஒற்றையாட்சி அரசியலமைப்பை நாங்கள் நிராகரிப்பதாக இருந்தால் அதனை நிராகரிக்கக்கூடிய,செயல்படுத்தக்கூடிய ஒரு அணியாக இந்த தமிழ் தேசிய மக்கள் முன்னனி உள்ளது.

 

சைக்கிள் சின்னம் இந்த தேர்தலில் வடக்கு கிழக்கில் குறைந்தது 10 ஆசனங்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.வன்னியில் நாங்கள் 2 ஆசனங்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டில் மாகாண சபை தேர்தல்- அநுர குமார திஸாநாயக்க

இலங்கை மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி – கஹவத்தையில் நேற்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவர் மேலும் தெரிவிக்கையில் “.. உள்ளுராட்சி மன்ற தேர்தலையும் நடத்துவதற்கும் எதிர்பார்த்துள்ளோம்.

உள்ளுராட்சி மன்றத்திலிருந்து அமைச்சரவை வரை முழு அரச கட்டமைப்பும் பலப்படுத்தப்பட வேண்டும். அதனுடாகவே, நாட்டை கட்டியெழுப்ப முடியும்.

மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் வகையில் எதிர்கால செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்பதை உறுதியளிக்கிறேன்.

அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குப் பலமான நாடாளுமன்ற அதிகாரமும் அவசியமாகும். கடந்த காலங்களில் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மக்கள் மிகுந்த ஆத்திரத்துடன் இருந்தனர்.

குறித்த உறுப்பினர்களின் முறையற்ற செயற்பாடுகள் காரணமாக மக்கள் மத்தியில் அவ்வாறான கோபம் இருந்தது. எனவே, இருந்ததை விட மோசமான நாடாளுமன்றத்தையா அல்லது சிறந்த நாடாளுமன்றத்தையா உருவாக்க வேண்டும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் 25 பேருக்குக் குறைந்த உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவை ஸ்தாபிக்கப்படும்.

எனவே, ஊழலற்றவர்களைக் கொண்டு பலமிக்கதொரு நாடாளுமன்றத்தை உருவாக்குவதற்கு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்..” என்றார்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 12 பேர் கைது !

தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் சம்பவம் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்.

இந்நிலையில், தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தமிழக மீனவர்கள் சென்ற ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல் – மூவர் வைத்தியசாலையில் அனுமதி !

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தன் பகுதியில் நேற்று (26) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

குறித்த பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் இன்று மாலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதன் போது முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் அடங்கிய குழு ஒன்று அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் அவர்கள் அந்த தாக்குதலை எதிர்த்தனர்.

இந்நிலையில் திரும்பிச் சென்ற குழு சுமார் 30 பேர் அடங்கிய குழுவினரை அழைத்து வந்து அங்கு பிரசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் மீது மீண்டும் கொலை வெறி தாக்குதலை மேற்கொண்டனர்.

இந்நிலையில் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த ஒரு பெண் உட்பட மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பெண் அதிதீவிர சிகிச்சை பிரிவிலும் ஏனைய இருவரும் 24 ஆம் இலக்க விடுதியிலும் சிகிச்சை பெற்று வருவதாக அறிய முடிகிறது.

இச்சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.