உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

இரக்கம் கொண்ட ஒரு புதிய கலாசார இருப்பை உருவாக்க முன்வருமாறு அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். – தீபாவளி வாழ்த்தில் ஜனாதிபதி அனுர குமார!

அஞ்ஞானத்தின் இருளை போக்க மெய்ஞ்ஞானத்தின் ஒளியினால் மட்டுமே முடியும் என்ற தொனியில் தீபங்களை ஏற்றி இலங்கையர்களாக புதிய புரட்சிக்கு வழிவகுப்பதாக இம்முறை தீபாவளி பண்டிகையை கொண்டாடுவோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

உலகளாவிய ரீதியில் இன்றைய தினம் (31.10.2024) கொண்டாடப்பட்டு வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக உலகவாழ் இந்து பக்தர்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

சுதந்திரத்திற்கு பின்னர் இருளிலிருந்து வெளிச்சத்தை தேடிவந்த இலங்கை மக்கள் தற்போது புதிய எதிர்பார்ப்புக்களை சுமந்து கொண்டிருக்கின்றனர்.

இது மக்களின் பல வருட எதிர்பார்ப்பாகும். இத்தனை நாட்களாக இலங்கையை ஆட்சி செய்தவர்களால் முடக்கி வைக்கப்பட்டிருந்த பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களை மலரச் செய்யும் மாற்றத்துக்கான யுகத்தை நாம் ஆரம்பித்துள்ளோம்.

தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு பல காரணங்கள் உள்ளன. 14 வருட வனவாசத்தின் பின்னர் இராமர், இலட்சுமணர், சீதை பிராட்டி மீண்டும் அயோத்திக்கு வருகை தந்தமை மற்றும் கிருஷ்ண பகவான் நரகாசுரனை அழித்தமையை நினைவுகூறும் விதமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அஞ்ஞானத்தின் இருளை போக்க மெய்ஞானத்தின் ஒளியினால் மட்டுமே முடியும் என்ற தொனியில் தீபங்களை ஏற்றி இலங்கையர்களாக புதிய புரட்சிக்கு வழிவகுப்பதாக இம்முறை தீபாவளி பண்டிகையை கொண்டாடுவோம் என மக்களிடம் கேட்டுகொள்கிறேன்.

கலாசார பல்வகைத்தன்மையின் அழகை மெருகூட்டும் வகையில், ஒருவருக்கொருவர் கௌரவம், ஏற்றுக்கொள்ளல் மற்றும் சகோதரத்துவம் என்பவற்றுக்காக கரங்களை நீட்டுவோம்.

பிரித்து வலுவிழக்கச் செய்யப்பட்ட இலங்கை தேசத்தை பிளவுபடாமல் வலுவாக முன்னோக்கிக் கொண்டுச் செல்ல வேண்டிய காலம் உதயமாகியுள்ளது.

அநீதி, வேறுபாடுகள், பிளவுபடுத்தல், வெறுப்புப் பேச்சுகள், வன்முறைகள் என்பதை முழுமையாக துடைத்தெறிந்து சமூகத்தில் வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்வோர் மற்றும் வரப்பிரசாதங்கள் கிடைக்காதவர்கள் என்ற வேறுபாடுகளை முழுமையாக இல்லாது செய்ய முன்வருவோம்.

 

அவ்வாறான, இரக்கம் கொண்ட ஒரு புதிய கலாசார இருப்பை உருவாக்க முன்வருமாறு அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். இந்தத் தீபாவளியில், வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கை என்ற நமது எதிர்பார்ப்பு நனவாக வேண்டுமானால், அதற்கான கலாசார, அரசியல் ரீதியான மனப்பாங்கு மாற்றமும் அவசியமாகும்.

 

தீபாவளி தினத்தில் அனைத்து வீடுகளிலும், நகரங்களிலும் ஏற்றப்படும் ஆயிரக்கணக்கிலான விளக்கின் ஒளிகள் அனைவரினதும் மனங்களில் நட்புறவு மற்றும் ஞானத்தின் ஒளியை பரவச் செய்வதாக அமையட்டும் என பிரார்த்திப்பதோடு இலங்கைவாழ் இந்து பக்தர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்” என வாழ்த்தியுள்ளார்.

குறைக்கப்படும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள்- ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ள கோரிக்கை!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

தனக்கு எந்தவித சலுகைகளும் தேவையில்லை எனவும் ஏனைய ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

“ஜனாதிபதிகளின் வீடுகள் அகற்றப்படுகின்றன, எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

நான் அந்த வீட்டில் இல்லை. இது எனக்கு ஒரு பிரச்சனை அல்ல. சந்திரிகா மேடம் வெளியேற்றப்படுவது ஏன்? அந்த வீட்டை அவருக்குக் கொடுங்கள். மனிதாபிமான ரீதியாக இதனை கூறுகிறேன்.

மகிந்த ராஜபக்சவின் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும். போரை முடிவுக்கு கொண்டு வந்தவரை நினைத்து பாருங்கள்.

இன்று எல்லாரும் ஒரே மாதிரி கூக்குரலிடுகிறார்கள். அது இன்னொன்று. இன்று மக்கள் மத்தியில் யாரும் பிரபலமாக இல்லை. பாதுகாப்பு பிரச்சினை இருந்தால், யாருக்கேனும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அதை நிறுத்த வேண்டாம்.

என்னுடைய அனைத்தையும் அகற்றிவிட்டு மற்றவர்களுக்கு வழங்குங்கள்.

தற்போது சம்பளம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சொன்னதைச் செய்யுங்கள், அனைவரின் ஆதரவும் உண்டு. நான் இந்த பாராளுமன்றத்தை பாதுகாக்க வேண்டும் என்றே நினைத்தேன்” என்றார்.

இலங்கைக்கு சீனாவிடமிருந்து 400 மில்லியன் ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகள் !

இலங்கைக்கு 400 மில்லியன் ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகளை வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அண்மைய நாட்களில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி இந்த உதவி வழங்கப்படவுள்ளது.

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் கடந்த 22ஆம் திகதி இலங்கைக்கு 30 மில்லியன் ரூபாவை (100,000 அமெரிக்க டொலர்) நன்கொடையாக வழங்கியது.

அந்த நிதி உதவிக்கு மேலதிகமாக இந்த உதவியும் வழங்கப்படவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் குறிப்பிடுகிறது.

இனிமேல் எந்தவொரு அமைச்சருக்கும் கொழும்பில் வீடுகள் வழங்கப்படமாட்டாது – ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க

எதிர்வரும் பாராளுமன்றத்தில் எந்தவொரு அமைச்சருக்கும் அரசாங்கம் கொழும்பில் வீடுகளை வழங்காது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்கு அவர்களுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி, மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்

இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான இணைப்பாக தனது பங்கை மாற்றியமைக்கும் அமைச்சரவையும் அரசாங்கமும் நவம்பர் 14ஆம் திகதிக்கு பின்னர் உருவாக்கப்படும்.

மாவட்டத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு அன்றாடம் தீர்வுகளை வழங்குவதற்கு மக்களுக்கு நெருக்கமான மக்கள் தலைவர்களை கட்டியெழுப்புவது அவசியமாகும்.

மக்களிடம் இருந்து தொலைவில் உள்ள தலைவர்கள் அல்ல. வாக்குகளை பெற்று கொழும்பில் இருக்கும் தலைவர்கள் அல்ல.

அதனால்தான் எந்த அமைச்சருக்கும் கொழும்பில் வீடுகள் இல்லை. அரசாங்கம் தரப்போவதும் இல்லை.

கிராமத்திற்கு வாருங்கள், கிராமத்தின் பிரச்சனைகளைப் பாருங்கள். மக்களைத் திரட்டி இந்தப் பணியைச் செய்யுங்கள்.

இலங்கையில் இவ்வாறான அரசாங்கங்கள் உருவாகவில்லை. கிராமப்புற வறுமையை ஒழிப்பதே தேசிய மக்கள் சக்தி அரசின் தலையாய பணியாகும் என்றார்.

ஏன் தமிழர் விடுதலைக் கூட்டணியில் நிற்கின்றீர்கள்? சங்கரி ஐயாவுக்குப் பின் கட்சி யாருக்கு? கௌரி நித்தியானந்தன் உதயசூரியன் 4

ஏன் தமிழர் விடுதலைக் கூட்டணியில் நிற்கின்றீர்கள்? சங்கரி ஐயாவுக்குப் பின் கட்சி யாருக்கு?
கௌரி நித்தியானந்தன் உதயசூரியன் 4

12 முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை !

தமது உத்தியோகப்பூர்வ அரச இல்லங்களை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசு அலுவலகங்களை கையகப்படுத்துவதற்கான விதிமுறைகளின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, 12 முன்னாள் அமைச்சர்கள் தங்களுடைய குடியிருப்புகளை இதுவரை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவில்லை எனவும் பொது நிர்வாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், அரசாங்கத்தினால் முன்னாள் அமைச்சர்களுக்கு 28 உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அத்தோடு, குறித்த குடியிருப்புகளின் மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்கள் மீண்டும் கையளிக்கப்படும் போது அவற்றை செலுத்திவிட்டு கையளிக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது

இதேவேளை, அரசாங்கத்தின் அறிவிப்பிற்கு அமைய நான்கு முன்னாள் அமைச்சர்கள் தமது உத்தியோகபூர்வ இல்லங்களை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, முன்னாள் அமைச்சர்களான காமினி லொக்குகே, திலும் அமுனுகம, ரமேஷ் பத்திரன மற்றும் அஜித் ராஜபக்ச ஆகியோர் தமது இல்லங்களை ஒப்படைத்துள்ளனர்.

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை !

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட BMW சொகுசு கார் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக அவர் ஒக்டோபர் 23 ஆம் திகதி குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர், அவரை ஒக்டோபர் 30 வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதற்கமைய, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஆரம்பமானது 2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு!

2024 நாடாளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (30) ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள், பொலிஸ் மா அதிபர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தபால் மூல வாக்குகளை அளிக்கும் சந்தர்ப்பம் இன்று வழங்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை இன்றைய தினம் தவிர, எதிர்வரும் நவம்பர் 1 மற்றும் 4 ஆம் திகதிகளிலும் தபால் மூல வாக்களிப்புக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

 

மேலும், முப்படை முகாம்கள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களிலும் தபால் மூல வாக்குகளை நவம்பர் 1, மற்றும் 4 ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

மேற்கண்ட தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்காக நவம்பர் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

 

தபால் மூல வாக்குகளை அளிப்பதற்கு நிறுவன அடையாள அட்டையை பயன்படுத்த முடியாது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் மக்கள் போராட்டம்!

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துகொண்ட தமது உறவினர்களை மீள நாட்டுக்கு அழைத்து வருமாறுக்கோரி உறவினர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் நேற்றைய தினம் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது தங்களது உறவினர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடையாது எனவும், அவர்களின் சம்பளங்களும் தமக்கு கிடைக்கப்பெறுவதில்லை எனவும் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் குடும்ப செலவுகளை ஈடுசெய்ய முடியாத நிலைமை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுளள்னர்.

கடந்த அரசாங்கத்திடம் இந்த விடயம் தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் அவை வெற்றியளிக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய கடன்கள் எவற்றையும் நாம் பெறவில்லை -அமைச்சர் விஜித ஹேரத்

அரசாங்கத்தினால் எந்தவொரு விதத்திலும் புதிய கடன்கள், எந்தவொரு நாட்டில் இருந்து அல்லது நிறுவனத்தில் இருந்து பெற்றுக்கொள்ளப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அரசாங்கம் பணத்தை அச்சிட்டுள்ளதாக வௌியாகும் தகவல்கள் பொய்யானவை என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.