உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

இலங்கையில் பொலிஸாரின் செயற்பாடுகளை காணொளிப் பதிவு செய்வதில் எந்த தடையும் இல்லை – பொலிஸ் மா அதிபர்

பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளையோ அல்லது ஏனைய செயற்பாடுகளையோ பொதுமக்கள் காணொளிப் பதிவு செய்வதைத் தடுக்கும் சட்டம் எதுவுமில்லை என, அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் தனக்கு கீழ் உள்ள அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவிக்குமாறு, பொலிஸ் மா அதிபர் பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகள் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

 

பொலிஸ் உத்தியோகத்தர்களின் பல்வேறு செயற்பாடுகளை காணொளிப் பதிவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த காணொளி காட்சிகளை எடுத்தவர்களை கைது செய்துள்ளதாகவும்,இது அலைபேசிகளில் பதிவாகியுள்ளதாகவும் இந்த கடிதத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் தேர்தல் முறைக்கேடுகள் – 06 வேட்பாளர்கள் உட்பட 191 பேர் கைது !

பாராளுமன்ற தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளுக்காக 191 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 6 வேட்பாளர்கள் அடங்குவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாராளுமன்ற தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளுக்காக பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 45 ஆகும்.
இதேவேளை, தேர்தல் தொடர்பாக 168 முறைபாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன. இதில் 30 குற்றப் புகார்களும், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பாக 138 முறைப்பாடுகளும் அடங்கும்.

சமஷ்டியாட்சி முறைமையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் ஜனாதிபதி தமிழ் தரப்புக்கு உத்தரவாதமளித்துள்ளார். – உதயகம்பன்பில காட்டம் !

இலங்கை தமிழரசுக் கட்சி பொதுத்தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தியுடன் இணையும். எம். ஏ. சுமந்திரனுக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு பதவியை வழங்கவும், சமஷ்டியாட்சி முறைமையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் ஜனாதிபதி தமிழ் தரப்புக்கு உத்தரவாதமளித்துள்ளார். நாட்டுக்கு எதிராக இச்செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியுமா? என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்ற சர்வஜன சக்தியின் தொகுதி அமைப்பாளர்களுடனான கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
பொதுத்தேர்தலின் பின்னர் இலங்கை தமிழரசுக் கட்சி தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்துடன் ஒன்றிணையும். தமிழ் தரப்புக்களை இணைத்துக் கொண்டு பயணிக்குமாறு மேற்குலக நாடுகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளதை அவதானிக்க முடிகிறது.

இலங்கை தமிழரசுக் கட்சி அரசாங்கத்துடன் ஒன்றிணைவது அவர்களின் அரசியல் உரிமை. அதனை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்னவென்பதை ஆராய வேண்டும்.

ஒற்றையாட்சி முறைமையிலான அரசியலமைப்பை நீக்கி, சமஷ்டியாட்சி முறைமையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக் கொண்ட 30 .1 தீர்மானத்தை மீளமுல்படுத்த வேண்டும் என்ற இரண்டு பிரதான நிபந்தனைகளை இலங்கை தமிழரசுக் கட்சி விதித்துள்ளது. இவ்விரு நிபந்தனைகளையும் ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரனுக்கு தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் வெளிவிவகாரத்துறை அமைச்சு பதவியை வழங்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சு பதவியை வழங்குவதில் தனிப்பட்ட ரீதியில் எனக்கு எவ்வித எதிர்ப்பும் கிடையாது. ஆனால் அது நாட்டின் ஒற்றையாட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30.1 தீர்மானத்தை நிராகரித்தது. இந்த தீர்மானத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. 2020 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இந்த பிரேரணையில் இருந்து விலகியது.

30.1 தீர்மானத்தை மீண்டும் அமுல்படுத்த இலங்கை தமிழரசுக் கட்சி நிபந்தனை விதித்துள்ள நிலையில் இராணுவத்தினருக்கும், பொலிஸ் அதிகாரிகளுக்கும் எதிராக சாட்சியம் திரட்டுவதற்காகவே குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் குற்றவாளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்ன மற்றும் சானி அபேசேகர ஆகியோரை பாதுகாப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. நாட்டுக்கு எதிரான இச்செயற்பாடுகளுக்கு எவ்வாறு இடமளிப்பது என்றார்.

பதுளையில் சுற்றுலா பேருந்து விபத்து – 03 மாணவிகள் உயிரிழப்பு !

பதுளை – மஹியங்கனை வீதி 4 ஆவது மைல் கல் பகுதியில் பஸ் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 மாணவிகள் உயிரிழந்துள்ளதாகவும் 35 பேர் காயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

 

இதேவேளை, காயமடைந்தவர்களில் 6 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் மஹியங்கனை பக்கமாக சுற்றுலா சென்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

 

குறித்த விபத்து இடம்பெறும் போது பஸ்ஸில் 36 மாணவர்களும் விரிவுரையாளர்கள் இருவரும், இராணுவ அதிகாரிகள் இருவரும் சாரதி உட்பட 41பேர் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

இதில் காயமடைந்த 39 பேர் வரை பதுளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்தால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என்பதை நான் உறுதியாகக் கூறுகின்றேன் – இராமலிங்கம் சந்திரசேகரன்

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நிச்சயம் நீக்கப்படும் என்று அந்த்க கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால், பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படாது என்று தொடர்ச்சியாகச் சிலர் தெரிவித்து வருகின்றனர்.

அவர்கள் ஒரு பதற்றநிலையை ஏற்படுத்துவதுடன், எமக்கு எதிராக அவதூறையும் சுமத்தி வருகின்றனர். குறிப்பாக சுமந்திரன் இவ்வாறான கருத்துக்களை போலியாகவும், திரிவுபடுத்தியும் கூறி வருகின்றார். இது ஆரோக்கியமானது அல்ல. நாம் ஆட்சிக்கு வந்தால் (தேசிய மக்கள் சக்தி) பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என்பதை நான் உறுதியாகக் கூறுகின்றேன்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் அதிகளவான பாதிப்புக்களை எதிர்கொண்டவர்கள் தமிழர்கள். இந்தச் சட்டத்தின் கொடுமையை, இந்தச் சட்டம் தரும் வலியை நாம் அறிந்து வைத்துள்ளோம். ஆதலால், அதை நிச்சயம் நீக்கியே தீருவோம்.

இது எமது கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன், மாகாணசபைத் தேர்தல்கள் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் நடத்தப்படாது என்றும், மாகாணசபைத் தேர்தல்களை தேசிய மக்கள் இல்லாமல் செய்யும் என்றும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

உண்மையில் இந்தக் கருத்துக்கள் அனைத்தும் திரிவுபடுத்தப்படுகின்றன. மாகாணசபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்படும். முடியுமான விரைவில் நாம் அவற்றை நடத்துவோம். அத்துடன், தமிழ் அதிகாரிகளின் நியமனங்களை நாம் மேற்கொள்வோம். தமிழர்கள் தமது தேவைகளுக்கு கொழும்புக்கு ஓடிச்செல்லாமல், யாழ்ப்பாணத்தில் தம் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளக் கூடிய நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம்.- என்றார்.

இப்போதுள்ள தேர்தல் முறை பொருத்தமானதா? மாற்றம் வேண்டுமா? –

இப்போதுள்ள தேர்தல் முறை பொருத்தமானதா? மாற்றம் வேண்டுமா? – ஆய்வாளர்கள் வி சிவலிங்கம் மற்றும் ஏ ஆர் சிறிதரன்

 

இலங்கையில் நடைமுறையில் உள்ள ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் தொடர்பிலும் வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான வேட்பாளர்களும் பல சுயேட்சை குழுக்களும் களமிறங்கியுள்ள நிலையில் மக்களின் தெரிவு எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்பது தொடர்பில் ஆய்வாளர்கள் வி.சிவலிங்கம் மற்றும் ஏ.ஆர்.சிறிதரன் ஆகியோர் கலந்து கொண்ட தேசம் திரை நேர்காணல்..!

நாம் முன்வைத்த சமஷ்டி தீர்வையே அனைத்து தமிழ் கட்சிகளும் இன்றைக்கு ஏற்றுக்கொண்டுள்ளன – சுமந்திரன்

நாம் முன்வைத்த சமஷ்டி தீர்வையே அனைத்து தமிழ் கட்சிகளும் இன்றைக்கு ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

 

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

 

“மாற்றத்துக்கான தேர்தல் எனச் சொல்லப்படுகின்றது. மாற்றத்தின் ஆரம்பம் என ஜனாதிபதித் தேர்தலைச் சொல்கின்றனர். ஒருவகையில் அது சரிதான். காலம் காலமாக இரண்டு கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சி செய்த காலத்தில் இருந்து, தற்போது பாரிய மாற்றமாக மூன்றாவது தரப்பு ஆட்சியைப் பிடித்துள்ளது.

 

அவர்கள் ஆட்சியைப் பிடிக்க ஒரு தடவை அல்ல இரண்டு தடவைகள் ஆயுதம் ஏந்திப் போராடியவர்கள். ஊழல் கேடான அரசியலில் இருந்து மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்பினார்கள். அதனால்தான் 69 இலட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக இருந்த வரை நாட்டை விட்டுத் துரத்தினர்

 

அப்படிச் செய்தும் மக்கள் எதிபார்த்த மாற்றம் வராததால் இரண்டரை வருடங்கள் காத்திருந்து, தேர்தல் ஊடாக மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

 

மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்பினார்கள். அவர்கள் முன் தேசிய மக்கள் சக்தியினர் மட்டுமே இருந்தனர். அதனால் மக்கள் அவர்களுக்கு வாக்களித்தனர்.

 

ஆனால், தமிழ் மக்கள் வாழ்க்கையில் அரசியலில் 75 வருடங்களுக்கு மேலாக நாங்கள் மாற்றத்தைத் தேடுகின்றோம். அதற்காகப் பல வழிகளில் போராடி, பல உயிர்களை இழந்துள்ளோம்.

 

எங்களுடைய மக்கள் 75 வருட காலமாக நியாயமான அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தமிழ் மக்கள் விரும்பிய இந்த அரசியல் மாற்றத்துக்குத் தெற்கு மக்கள் பங்குதாரர்களாக வரவில்லை.

 

ஜனாதிபதித் தேர்தல் முடிவின் வரைபடத்தில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் கிடைத்த வாக்குகளில் பெரிய வித்தியாசம் இல்லை என்பது தெளிவாகத் தெரியும். அதாவது சிங்கவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளைத்த தவிர ஏனைய பகுதியில் அநுரவுக்கு வாக்குகள் கிடைக்கவில்லை.

வடக்கு, கிழக்கு மக்கள் 75 வருட காலமாக ஒரே நிலைப்பாட்டில்தான் உள்ளனர். அதிகாரங்கள் சரியாகப் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் வடக்கு, கிழக்கு மக்கள் உள்ளனர்.

 

சமஷ்டி கட்டமைப்பாக அது மாற வேண்டும். அந்த நிலைப்பாட்டை நாங்கள் முன்கொண்டு செல்ல நாடாளுமன்றத்துக்கு மிகப் பெரும் பலத்துடன் செல்ல வேண்டும்.

 

சமஷ்டி என்ற எண்ணத்தையே இழிவாகப் பேசி அதனைப் பழித்து உரைத்துக்கொண்டிருந்த அகில

 

இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கூட சமஷ்டிதான் தீர்வு என ஏற்றுக்கொண்டுள்ளனர்

 

எனவே, நாம் முன்வைத்த சமஷ்டி தீர்வையே அனைத்து தமிழ் கட்சிகளும் இன்றைக்கு ஏற்றுக்கொண்டுள்ளனர்.

 

எனவே, அசல் நாங்கள் இருக்கும்போது நிழலுக்கு வாக்களிக்க வேண்டிய தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

மூன்றில் ஒன்றாக குறைக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் – அனுர தரப்பு மீது பலரும் காட்டம் !

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பில் மூன்றில் இரண்டு பங்கு நீக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ளமுடியாத செயற்பாடு என சட்டத்தரணி மனோஜ் கமகே கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(31.10.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவுக்கு  ஏதேனும் ஏற்பட்டால் அதற்கு இந்த அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என கமகே தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக 2 ஜீப் வண்டிகள், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டி என்பன வழங்கப்பட்டுள்ளன.

சிலரது விருப்பத்தினால் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக மனோஜ் கமகே கூறியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சரவை முடிவுகளை மாற்றுவது சட்டவிரோதமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி முறையான பாதுகாப்பு மதிப்பீட்டின் ஊடாக 2020 மார்ச் 19 ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும் எனவும் கமகே தெரிவித்துள்ளார்.

அனுர ஆட்சியில் மக்கள் எதிர்பார்த்த மாற்றம் நிகழுமா என்பதில் பாரிய சந்தேகம் – ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்

மக்கள் எதிர்பார்த்த மாற்றம் நிகழுமா என்பதில் பாரிய சந்தேகம் இருக்கிறது என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று (31) யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு தேர்தல் வருகிறது, ஒரு மாற்றத்திற்கான தேர்தல் என்று சொல்லப்படுகிறது. அந்த மாற்றத்தின் ஆரம்பம் ஜனாதிபதி தேர்தல் என்று ஜனாதிபதி தேர்தலை கூறுகிறார்கள்.

அது ஒரு வகையிலும் சரியானது தான் எமது நாட்டில் இரு கட்சி ஆட்சி என்று சொல்லப்படும் நிலையில் அந்த இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்த காலத்தில் ஒரு பாரிய மாற்றமாக மூன்றாம் தரப்பு இப்பொழுது ஆட்சியை பிடித்து இருக்கிறது.

அந்த மூன்றாம் தரப்பு யார் என்று நாங்கள் பார்த்தால் ஒரு தடவை அல்ல இரண்டு தடவைகள் ஆட்சியை பிடிப்பதற்காக ஆயுதம் எடுத்து போராடிய தரப்பினர்.

ஒரு மாற்றம் வேண்டும் என்ற நிலையில் யாரிடம் இந்த பொறுப்பை ஒப்படைக்க மக்களுக்கு கிடைத்தது தேசிய மக்கள் சக்தி தான். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த மாற்றம் நிகழுமா என்பதில் பாரிய சந்தேகம் இருக்கிறது என தெரிவித்தார்.

17 தடவைகள் மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைகளை நான் கேட்க மாட்டேன் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

17 தடவைகள் மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போன்ற ஒருவரின் ஆலோசனையை நான் ஒருபோதும் பெறமாட்டேன் என பிரதமர் ஹரிணி அமரசூரிய  தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் அடிப்படையான “மக்கள் ஆணையை” புரிந்து கொள்ளாத ரணில் விக்ரமசிங்க, அரசியலமைப்பை கற்பிக்க முன்வருவது பெரிய நகைச்சுவை என பிரதமர் கூட்டமொன்றில் விமர்சித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், ரணிலிடம் நான் ஒருபோதும் அறிவுறை பெற மாட்டேன், 17 முறை மக்களால் நிராகரிக்கப்பட்டவர், விடாமல் இன்னும் தொங்கிக் கொண்டிருக்கிறார்.

மக்கள் மாறிவிட்டார்கள் என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அரசியலமைப்பை கற்பிக்க முடியும் என்று ரணில் சொல்வது மிகப்பெரிய நகைச்சுவை. அரசியலமைப்பின் அடிப்படையானது மக்களின் ஆணையாகும். இதையும் புரிந்து கொள்ளத் தவறிய ரணிலுக்கு அரசியலமைப்புச் சட்டம் பற்றித் தெரியுமா என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

 

முடிவுகளை எடுக்கும்போது சரியான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், அத்தகைய நடைமுறைகள் ஏற்றுக்கொள்ளப்படாததால் நாடு பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது என்றும் நான் கூறியிருந்தேன்.

மக்களின் கருத்துக்களை கேட்டு, அதிகாரிகளின் கருத்துக்களை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்கிறோம்.அவர்கள் ஆட்சி செய்ததைப் போன்று நாமும் நாட்டை ஆள வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கவே இல்லை.

மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்தது அமைப்பை மாற்றுவதற்காகவே தவிர, அவர்களிடமிருந்து பாடம் கற்று அதையே செய்ய அல்ல.அப்படிச் செய்தால் நாளை எங்களை வெளியேற்றுவீர்கள்.

நாங்கள் ரணிலுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் அல்ல. நாங்கள் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்,” என்றார்.

அண்மையில் அரசியலமைப்பு குறித்து பிரதமர் ஹரிணி கற்றுக் கொள்ள விரும்பினால் அதனை கற்றுக்கொடுக்க முடியும் என ரணில் தெரிவித்திருந்தமையை அடுத்து பிரதமர் மேற்கண்டவாறு கருத்துக்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.