உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

அறுகம்பை பகுதிக்கு விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாட்டை நீக்கியது அமெரிக்கா!

அறுகம்பை பகுதிக்கு விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

அப்பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து சந்தேகத்திற்கிடமான செயல்பாடு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த ஒக்டோபர் மாதம் 23 திகதி அமெரிக்க தூதரகம் குறித்த பயணக் கட்டுப்பாட்டை விதித்திருந்தது.

இந்நிலையில், தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால், இலங்கைக்கான பயண ஆலோசனைகளை புதுப்பிக்கவுள்ளதாக அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்கள் வழியிலான தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான மொத்தம் 490 முறைப்பாடுகள் !

ஒக்டோபர் 11, 2024 முதல் நவம்பர் 11, 2024 வரையிலான காலத்திற்குள் சமூக ஊடகங்கள் வழியிலான தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான மொத்தம் 490 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது.

 

குறித்த பதிவுகள் பற்றி தகவல்கள் அறிவிக்கப்பட்டவுடன் உரிய சமூக ஊடக நிறுவனங்கள் அவ்வாறான 184 முறைப்பாடுகளின் இணைப்புகள் மற்றும் உள்ளடக்கங்களை நீக்கியதாக தேர்தல் ஆணைக்குழு ஒரு அறிக்கையை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

 

இருப்பினும், 87 முறைப்பாடுகள் தொடர்பான இணைப்புகள் அல்லது உள்ளடக்கத்தை அகற்ற சமூக ஊடக நிறுவனங்கள் மறுத்துள்ளன.

 

219 முறைப்பாடுகள் தொடர்பான உள்ளடக்கத்தை சமூக ஊடக நிறுவனங்கள் இன்னும் மதிப்பாய்வு செய்யவில்லை என்று தேர்தல் ஆணைக்கழு தெரிவித்துள்ளது.

 

வெறுப்புப் பேச்சு, இனம் மற்றும் மதத்திற்கு எதிரான அவதூறு அறிக்கைகள், தேர்தல் பிரச்சாரத்திற்கு குழந்தைகளைப் பயன்படுத்துதல் மற்றும் தவறான அல்லது போலியான தகவல் பரிமாற்றம் தொடர்பான பதிவுகள் மீது முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வாக்காளர் அட்டைகளை பெறாத மூன்று லட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள்!

பொதுத் தேர்தலுக்கான 350,000ற்கும் அதிகமான வாக்காளர் அட்டைகள் தற்போது வரை தபால் நிலையங்களில் தேங்கியுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

 

தபால் திணைக்களத்துக்கு வழங்கப்பட்ட வாக்காளர் அட்டைகளில் 98 சதவீதமானவை தற்போது வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

 

எனவே இதுவரை வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் இன்றைய தினமும் தபால் நிலையத்துக்கு சென்று அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துமீறும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்றுகூறிய அனுர குமாரவை சாடும் நா.த.க சீமான் !

இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும் என இந்தியாவின் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார்.

எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுர கூறியுள்ளமை தொடர்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் சீமான் செய்தியாளர்களிடம் கூறியது,

இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன் பிடிக்கின்றனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க கூறியுள்ளார்.

இலங்கையில் தமிழர்களை சுட்டு கொன்றார்கள், வலைகளை கிழித்து எறிந்தார்கள், இதற்கு மேல் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள். இதற்கு மேல் என்ன நடவடிக்கை உள்ளது.

இந்திய பெருங்கடல் என்றால் போதுமா? மீன் பிடிப்பதற்கு உரிமை இல்லையா?. இலங்கையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும் என சீமான் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக பிள்ளையானுக்கு அழைப்பு!

முன்னாள் அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வருமாறு தனக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதிக்குள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வரமுடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பிரித்தானியாவின் சனல் 4 ஊடகத்திற்கு அவரது முன்னாள் செயலாளரான ஆசாத் மௌலானா உண்மைகளை முன்வைத்தமை தொடர்பான வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காகவே இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டது.

இதேவேளை, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான காணொளி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் மீது அராஜக நடவடிக்கை – நான்கு பொலிஸார் பணி இடைநிறுத்தம்!

பொதுமக்கள் மீது அராஜக நடவடிக்கையை மேற்கொண்ட யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸாரான உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் என நால்வர் பணி இடைநிறுத்தத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதோடு சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்திற்கு விசேட இடமாற்றம் செய்வததாகவும் பொலிஸ் தரப்பு தகவல் தெரிவிக்கின்றன.

சுன்னாகம் பொலிசார் விபத்து ஒன்று இடம்பெற்ற பகுதிக்கு சென்று அங்கிருந்த பெண்கள் உட்பட பலர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.

இவ்வாறான பின்னணியிலேயே சம்பவம் தொடர்பில் மேற்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைப்பதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய வருகை தந்து சென்ற சில மணி நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

மேலும் குறித்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது காண்டினங்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மஸ்தான் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலவரம் – அடித்து நொறுக்கப்பட்ட ரிசாத் பதியூதீனின் வாகனம் !

வவுனியாவில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் பொதுக்கூட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏற்பட்ட குழப்ப நிலையில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் ரிசாத் பதியூதீன் பயணித்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பம் வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் பிரதான வீதிக்கு அருகில் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த கூட்டத்தின்போது அந்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் பொதுக்கூட்டத்தை பார்த்து கூச்சலிட்டுச் சென்றிருந்தனர்.

சற்றுநேரத்தில் குறித்த மோட்டார் சைக்கிள்களுக்கு பின்னால் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனும் அவரது ஆதரவாளர்களும் பயணித்த வாகனத் தொடரணிகள், கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த பகுதிக்கு அருகே உள்ள பிரதான வீதிக்கு வந்தது.

இதனால் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் குழப்பநிலை ஏற்ப்பட்டதுடன் சற்றுநேரத்தில் அது கலவரமாகியது.

குறித்த கலவரத்தில் ரிசாத் பதியூதீனின் வாகனத் தொடரணி அடித்து நொறுக்கப்பட்டது.

அவர் வாகனத்திற்குள் இருந்த நிலையில் அவரது வாகனம் முற்றுமுழுதாக அடித்து நொறுக்கப்பட்டதுடன் அவரது ஆதரவாளர்களின் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டது.

குறித்த தாக்குதலையடுத்து அந்த வாகனத்தொடரணி அந்த பகுதியில் நிறுத்தாமல் வேகமாக சென்றது.

 

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் நிலமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை எடுத்திருந்தனர்.

 

சம்பவத்தில் காயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை இவ்சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் சூடுவெந்த புலவு பகுதியில் இடம்பெற்ற மஸ்தானின் பொதுக்கூட்டத்தில் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கலவர நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்த பின்னர் காதர் மஸ்தானின் பிரச்சாரக்கூட்டம் பொலிசாரின் பாதுகாப்புடன் தொடர்ந்து இடம்பெற்றிருந்தது.

அனுர ஆட்சியில் பயங்கரவாதம் தலைதூக்குமா..?

அனுர ஆட்சியில் பயங்கரவாதம் தலைதூக்குமா..? என்.பி.பி கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தகுதி என்ன..? திறமை என்ன..? – அருள் கோகிலன் உடனான நேர்காணல்!

 

 

BRICS உறுப்புரிமைக்கான இலங்கை முன்வைத்த விண்ணப்பம் நிராகரிப்பு..?

BRICS உறுப்புரிமைக்கான இலங்கை முன்வைத்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை இலங்கையின் வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது.

 

இது தொடர்பில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட BRICS மற்றும் புதிய அபிவிருத்தி வங்கியின் உறுப்புரிமைக்கு இலங்கை விண்ணப்பித்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது.

 

பிரிக்ஸ் அமைப்பில் இணைந்துகொள்ளும் இலங்கையின் விருப்பத்தை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், BRICS உறுப்பு நாடுகளில் உள்ள தரப்பினரிடம் எழுத்து மூலம் தெரிவித்துள்ளதாகவும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் ரஷ்ய ஜனாதிபதிக்கு இது தொடர்பில் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

2024ஆம் ஆண்டு ஒக்டோபர் 22, 24ஆம் திகதிகளில் ரஷ்யாவின் கசான் நகரில் BRICS உறுப்பு நாடுகளுடன் நடைபெற்ற மாநாட்டில் இலங்கைத் தூதுக்குழுவின் தலைவராக இருந்த வெளி விவகாரச் செயலர் அருணி விஜேவர்தன, இது தொடர்பில் இலங்கையின் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

 

புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ள நாடுகளின் கோரிக்கைகளுக்கு BRICS உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

இலங்கை உட்பட பல நாடுகளின் BRICS உறுப்புரிமைக்கான எதிர்பார்க்கப்படும் கோரிக்கைகள், எதிர்காலத்தில் BRICS உறுப்பு நாடுகளால் பரிசீலிக்கப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அத்துடன், புதிய அபிவிருத்தி வங்கியில் (NDB) இணையும் இலங்கையின் எதிர்பார்ப்பு அதன் தலைவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

இதேவேளை, BRICS அமைப்பில் இணைவதற்கான இலங்கையின் ஆர்வத்தை வரவேற்பதாக இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகமும் X வலைத்தளத்தின் ஊடாக தெரிவித்துள்ளது.

 

இலங்கை உட்பட விண்ணப்பித்த பிற நாடுகளை உரிய காலத்தில் முழுமையான ஆலோசனை மற்றும் உடன்பாட்டுடன் BRICS பரிசீலிக்கும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மதுபானசாலைளுக்கு ஆதரவு வழங்கியதை நான் உறுதி செய்தால் அரசியலில் இருந்து விலகுவேன் – சிறீதரன்

மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன். போலிப் பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

 

கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சியின் முதன்மை வேட்பாளராக களம் இறங்கியுள்ள நிலையில் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் அது பலருக்கு குடைச்சலை ஏற்டுத்தியுள்ளது.

 

தமிரசுக்கட்சி தலைவராக ஜனநாயக ரீதியில் போட்டியில் வெற்றி பெற்றிருந்தேன். தலைவராக தெரிவு செய்த என்னை எமது கட்சிக்குள் வழக்குக்போட்டு செயற்படாது தடுத்தனர். மக்கள் இது தொடர்பாக செய்தி சொல்ல முற்படுகின்றனர்.

 

நாங்கள் செல்லும் இடங்களிலும் சொல்கின்றனர். எமது கட்சிக்குள் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சேறு பூசும் முயற்சியில் இங்குள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருடன் சேர்ந்து இன்னொருவரும் சேர்ந்து எனக்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இது தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்ட வேண்டிய நிலையுள்ளது. மக்களுக்கு சொல்லி வருகின்றேன் நான் கிளிநொச்சியிலிருந்து யாருக்காவது பார் அனுமதிப்பத்திரத்திற்கு சிபார்சு செய்திருந்தால் அதனை உறுதிப்படுத்தினால் அரசியலிருந்து என்னை விலக்கி விடுங்கள்.

 

அதை எல்லாம் செய்ய முடியாதவர் ஏற்கனவே கிளிநொச்சியிலிருந்து பார் தொடர்பான விபரங்களை யாரோ ஒருவர் தேடி எடுத்திருக்கிறார். அதனை ஒருவர் என்னுடைய கடிதத்தலைப்பை பயன்படுத்தி போலியாக நான் அனுமதி கோரியதாக தெரிவித்து காட்டியிருக்கிறார்.

 

அதிலே சித்தார்த்தனுடைய பெயரும் குறிப்பிட்டிருக்கிறது. என்னுடைய கடித தலைப்பில் நான் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்து சித்தார்த்தனுடைய பெயர் எப்படி வரும் இதன் மூலம் மக்கள் விளங்கிக்கொள்வார்கள். பொலிஸ் நிலையத்தில் உரியவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளேன்.

 

மக்களிடம் ஒன்றை சொல்கிறேன் மக்கள் என்னை நம்புங்கள் மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன் என தெரிவித்தார்.