உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

தலைநகர் கோட்டையில் சரிந்தது சஜித்பிரேமதாசவின் பலம் !

இம்முறை பாராளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கடந்த பாராளுமன்ற தேர்தலை விட கணிசமாக குறைந்துள்ளது.

 

2020 பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் சஜித் பிரேமதாச 305,744 வாக்குகளை பெற்றிருந்தார்.

 

எனினும், இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் அவரால் 145,611 வாக்குகளையே பெற முடிந்தது.

 

அதன்படி, 2020 பாராளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில், இந்தத் தேர்தலில் அவர் 160,133 வாக்குகளை இழந்துள்ளார்.

 

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பலமான பல கோட்டைகளின் பலத்தை முறியடித்து இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

 

கொழும்பு வடக்கு, மத்திய, கிழக்கு, மேற்கு போன்ற பல தொகுதிகள் நீண்ட தேர்தல் வரலாற்றில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பல வெற்றிகளைப் பெற்றுத்தந்த சிறப்பு கோட்டைகளாக இருந்தன.

 

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி அந்த கோட்டைகளில் வெற்றிப் பெற்றிருந்த போதும், இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தியி குறித்த கோட்டைகளை தம்வசம் படுத்தி வெற்றிப் பெற்றுள்ளது.

 

அதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் இதயமாக இருந்த கொழும்பில் உள்ள பல தொகுதிகளின் அதிகாரமும் இம்முறை சஜித் பிரேமதாசவிடம் இருந்து பறிபோயுள்ளது.

அனைவரையும் இணைத்து செயற்பட அழைக்கிறார் செல்வம் அடைக்கலநாதன்!

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில்,ஒரே அணியாக பொது பிரச்சனைகளை நாங்கள் கையாளுகின்ற வகையிலே செயல்பட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

 

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

இனப்பிரச்சினை குறித்தும், அபிவிருத்தி தொடர்பாகவும் கூடிய கவனம் செலுத்துவதாக கோரி மக்களிடம் நாங்கள் வாக்கு சேகரித்தோம். குறித்த இரு விடையங்கள் குறித்து அரசாங்கத்துடன் சேர்ந்து செயல்படுகின்ற ஒரு சாத்தியப்பாட்டை மேற்கொள்கின்ற சூழலை உருவாக்குவதாகவும் நாங்கள் கூறியிருந்தோம்.

 

குறித்த இரு விடயங்களிலும் நாங்கள் கவனம் செலுத்துவோம். கிராமிய ரீதியாக மக்களின் குறைகளை கேட்டறிந்து கிராமங்களை முன்னேற்றுவதே நோக்கமாக இருக்கும்.

 

மேலும் இனப்பிரச்சினை தொடர்பான விடையங்களை நாங்கள் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுவதற்கான ஒரு சூழலை நாங்கள் உருவாக்குவோம்.

மேலும் இம்முறை பாராளுமன்ற தேர்தலின் போது தெரிவு செய்யப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து பாராளுமன்றத்தில் ஒரே அணியாக பொது பிரச்சனைகளை நாங்கள் கையாளுகின்ற வகையிலே செயல்பட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளேன்.

ஜனாதிபதி கூறியது போல் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்து,காணாமல் போனவர்கள் குறித்து அவர்களின் உறவுகள் போராட்டத்தின் ஊடாக நீதியை கோரி வருகின்றனர்.

அவர்களுக்கு நியாயம் கிடைக்கின்ற வகையில் ஒரு வழி முறையை நாங்கள் கையாளுகின்ற ஒரு சூழலை உருவாக்குதல்,எமது நிலங்கள் பரிபோகாத ஒரு சூழலை ஏற்படுத்துதல்,எமது மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம்.

எனவே இம்முறை சங்கு சின்னத்துக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்.மக்கள் சார்ந்த பிரச்சினைகளை கவனத்தில் எடுத்து, மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முறையை நாங்கள் கையாளுவோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.

தேசியப்பட்டியலில் நாடாளுமன்றம் செல்கிறார் நாமல்ராஜபக்ச !

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக நாமல் ராஜபக்ஷவை முன்மொழிய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கல்களுக்கு சந்தர்ப்பம் இல்லை – மகிந்த ராஜபக்ச நம்பிக்கை!

பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், அரசியலில் இருந்து ஒருபோதும் ஓய்வுப் பெறப் போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இதனை குறிப்பிட்டார்.

 

இது தொடர்பாக மேலும் கருத்துரைத்த அவர், தேர்தலில் நாம் எதிர்ப்பார்த்த வெற்றி எமக்கு கிடைத்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததில் எமக்கு எதுவும் பிரச்சினையில்லை. புதியவர்களுக்கும் இடமளிக்க வேண்டும்.

 

தேசிய மக்கள் சக்தியை தேர்தலில் வெற்றிபெற செய்தவர்கள் இந்த நாட்டு மக்கள். நாங்கள் மக்களின் தீர்மானத்திற்கு மதிப்பளிக்கின்றோம்.

 

புதிய அரசாங்கம் ஆட்சி அமைத்தாலும் எமது ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லப்படும் என நம்புகின்றோம்.

புதிய அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கல்களுக்கு சந்தர்ப்பம் இல்லை என்றே நினைக்கின்றேன்.

கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடிவருகின்றோம்.

அதேபோல் அரசியலில் இருந்து விலகுவதற்கு இதுவரை எந்த தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டார்.

வடக்கு – கிழக்கில் நிராகரிக்கப்பட்ட ஒரு லட்சம் வரையிலான வாக்குகள்!

நடந்து முடிந்த பாராளுமன்றத்தேர்தலில் 22,20,311 வாக்காளர்களைக் கொண்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 14,70,549 பேர் வாக்களித்த நிலையில் 7,49,762 பேர் வாக்களிக்காததுடன் 94,489 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன

 

வடக்கு மாகாணத்தில் யாழ்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டம் 5,93,187 வாக்காளர்களை கொண்டுள்ள நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் 3,58,079 பேர் வாக்களித்த நிலையில் 2,35,108 பேர் வாக்களிக்கவில்லை. அதேநேரம் வாக்களித்த 3,58,079 பேரில் 32,767 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன இதற்கமைய 3,25,312 பேரின் வாக்குகளே செல்லுபடியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது

 

அதேபோன்று வன்னி மாவட்டம் 3,06,081 வாக்காளர்களை கொண்டுள்ள நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் 2,11,140 பேர் வாக்களித்த அதேநேரம் 94,941 பேர் வாக்களிக்கவில்லை. வாக்களித்த 2,11,140 பேரில் 15,254 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன .இதற்கமைய 1,95,886பேரின் வாக்குகளே செல்லுபடியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கமைய நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் 3,30,049 பேர் வாக்களிக்காத நிலையில் 48,021 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன

 

அதேபோன்று கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் 4,49,686வாக்காளர்களை கொண்டுள்ள நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் 3,02,382 பேர் வாக்களித்த நிலையில் 1,47,304 பேர் வாக்களிக்கவில்லை. அதேநேரம் வாக்களித்த 3,02,382 பேரில் 15,329பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன இதற்கமைய 2,87,053 பேரின் வாக்குகளே செல்லுபடியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது

 

அதேபோன்று திருகோணமலை மாவட்டம் 3,15,925 வாக்காளர்களை கொண்டுள்ள நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் 2,18,425பேர் வாக்களித்த அதேநேரம் 97,500 பேர் வாக்களிக்கவில்லை. வாக்களித்த 2,18,425 பேரில் 13,537 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன .இதற்கமைய 2,04,888பேரின் வாக்குகளே செல்லுபடியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது

 

அதேபோன்று திகாமடுல்ல மாவட்டம் (அம்பாறை )5,55,432வாக்காளர்களை கொண்டுள்ள நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் 3,80,523பேர் வாக்களித்த அதேநேரம் 1,74909 பேர் வாக்களிக்கவில்லை. வாக்களித்த 3,80,523 பேரில் 17,599 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன .இதற்கமைய 3,62,924பேரின் வாக்குகளே செல்லுபடியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

 

இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் 4,19,713 பேர் வாக்களிக்காத நிலையில் 46,465 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன .

தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்ல மாட்டேன் – சுமந்திரன்

தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்ல மாட்டேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் .ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

கட்சி என்ன தீர்மானம் எடுக்கும் என நான் முன்கூட்டியே தெரிவிக்க முடியாது,கட்சியினது முடிவு இறுதியானதாகயிருக்கும்,நான் கட்சியின் சகல முடிவுகளிற்கும் கட்;டுப்பட்டவனாகாயிருக்கின்றேன் இந்த விடயத்தில் நான் எனது நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவாக சொல்லியிருக்கின்றேன்,

மக்கள் முன்வந்து தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தெரிவு செய்யப்படாத நிலையில் தேசியபட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்வதை நான் விரும்பவில்லை என்பதை நான் தெளிவாக தெரிவித்திருக்கின்றேன்.

10க்கும் அதிகமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டுகொள்ளாமல் கைவிட்ட தமிழ்மக்கள்!

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் முன்னாள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களுடைய ஆசனங்களை இழந்துள்ளனர்.

 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் தோல்வியடைந்துள்ளார்.

அதேபோல்,ப்ளொட் இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் யாழ்.மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார்.

 

அதேபோல், கடந்த பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற அங்கஜன் ராமநாதன் தோல்வியடைந்தார்.

 

கடந்த முறை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவாகி இருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தோல்வியடைந்துள்ளார்.

 

ஈபிடிபியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா இம்முறை பொதுத் தேர்தலில் தோல்வியுற்றதுடன், முதன்முறையாக அவர் தோல்வியை தழுவியுள்ளார்.

 

அதேபோல்,வன்னி மாவட்டத்தில் கடந்த தடவை ஈபிடிபி சார்பாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவான குலசிங்கம் திலீபன் இம்முறை தேர்தலில் தோல்வியுற்றார்.

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பாகக் கடந்த தடவை நாடாளுமன்றத்துக்குத் தெரிவான பிள்ளையான் என அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் இம்முறை தேர்தலில் தோல்வியுற்றார்.

 

அத்துடன் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டுக் கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி இம்முறை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் மட்டக்களப்பில் போட்டியிட்ட கோவிந்தம் கருணாகரன் தோல்வியுற்றார்.

 

பதுளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கடந்த முறை பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அருணாச்சலம் அரவிந்த்குமார் மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோர் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்தனர்.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக மலையகத்தில் இருந்து பாராளுமன்றத்தில் தமிழ்ப்பெண்கள்!

நடந்துமுடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் முன்னொருபோதும் இல்லாத வகையில் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி மாபெரும் வெற்றிய பதிவு செய்துள்ளது.

12 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூவர் தமிழ் பெண்கள் அதிலும் குறிப்பாக இரண்டு மலையக பெண்களும் தெரிவாகியுள்ளனர்.

அந்தவகையில் பதுளை மாவட்டத்தில் இருந்து அம்பிகா சாமுவேல், மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து கிருஸ்ணன் கலைச்செல்வியும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள மலைய பெண்கள் ஆவார்கள்.

இந்நிலையில் இலங்கை வரலாற்றில் 12 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை பெரும் திருப்புமுனையாக உள்ளது .

அதிலும் மலையக பெண்கள் நாடாளுமன்றம் செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வெற்றி வேட்பாளர் விபரங்கள்!

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் தனிப்பட்ட விருப்பு வாக்குகளின் தொகை தொடர்பான விடயங்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டம் மக்கள் தெரிவு.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 15135

சிவஞானம் சிறீதரன் 32833

கருணானந்தன் இளங்குமரன் 32102

சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா 20130

ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் 1757

இராமநாதன் அர்ச்சுனா 20487

1994ஆம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்க இலங்கை முழுதும் சமாந்தரமாக பெற்ற வெற்றியை மீள அனுர தலையிலான என்.பி.பி பெற்றுள்ளது – இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர்

இதுவரையிலான தேர்தல் முடிவுகளில் இருந்து, தேசிய மக்கள் சக்தி, நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும் அல்லது அதனை விட சிறிய எண்ணிக்கை குறைவான ஆசனங்களை பெறும் என்று எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் இந்த எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி, மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றால், விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் ஒரு கட்சி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவது இதுவே முதல் முறையாக இருக்கும்.

 

2010 இல் மக்கள் கூட்டணியும் 2020 இல் பொதுஜன பெரமுனவும், மூன்றில் இரண்டு பங்குக்கு குறைவாக ஆசனங்களை பெற்றதால்,மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற சில எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டியிருந்தது.1994 ஆம் ஆண்டு பிரதமர் சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் இந்த வெற்றிக்கான ஒரே சமாந்தரமாகும்.

வடக்கிலும் கிழக்கிலும் தேசிய மக்கள் சக்தி, கணிசமான வெற்றிகளைப் பெற்றுள்ளது, இதன் மூலம் இலங்கையில் உள்ள பலதரப்பட்ட சமூகங்களை ஒன்றிணைக்கக்கூடிய தலைவராக தற்போதைய ஜனாதிபதி செயற்படமுடியும்.

அத்துடன், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் வாக்குறுதியை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விரைவாக நிறைவேற்றுவதற்கு இந்த தேர்தல் முடிவு வழி வகுக்கும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நாட்டின் திசையில், குறிப்பாக அரசியல் கலாசாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.என்பதற்கு இந்த மாபெரும் வெற்றி ஒரு சான்றாகும்.எவ்வாறாயினும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், வரும் ஆபத்துக்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தற்போதைய ஜனாதிபதி கூறியது போல் கடந்த காலங்களில் அரசியல் சக்திகள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறும் சட்டங்களை இயற்றினர்.எனவே ஜனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை சிதைக்கும் சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை இயற்றுவதற்கான செயற்பாடுகளை தேசிய மக்கள் சக்தி எதிர்க்க வேண்டும்.

பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் வாழ்க்கையை உயர்த்தவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், ஊழலைச் சமாளிக்கவும், தேசிய நல்லிணக்கப் பிரச்சினைகளைத் தீர்க்கவும், அரசியலமைப்பு சீர்திருத்தத்தை இயற்றவும், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும் எதிர்பார்க்கும் வாக்காளர்களின் அசாதாரண எதிர்பார்ப்புகளை புதிய ஆட்சி நிர்வகிக்க வேண்டும்.

 

தேசிய மக்கள் சக்தியின் தலைமையானது, அதன் புதிய மற்றும் ஒப்பீட்டளவில் அனுபவமற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்; மற்றும் அமைச்சர்கள் கட்சி இதுவரை கடைப்பிடித்து வந்த கொள்கை நிலைகளில் இருந்து விலகிச் செல்லாமல் இருப்பதையும், அவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் மக்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை மீறாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

 

மக்களால் அதிக பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட கடந்த கால அரசாங்கங்களின் தலைவிதியை தேசிய மக்கள் சக்தி தலைவர்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே புதிய அரசாங்கம் வெற்றியடையும் என்று நாம் நம்புவோம்;. இலங்கை அரசாங்கம் மீண்டும் தோல்வியடைவதை தாங்கிக்கொள்ள முடியாது என்றும் சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.