செய்திகள்

செய்திகள்

செய்திகள்

முன்பள்ளி ஆசிரியர் கழுத்து நெரித்துக் கொலை

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம கொலனியில் தனிமையில் வாழ்ந்த பெண்ணொருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். டயகம பிரதேசத்தில் முன்பள்ளி ஒன்றில் ஆசிரியையாக சேவையாற்றி வந்த 65 வயது மதிக்கத்தக்க பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை முற்பகல் வேளை வரை ஆசிரியை முன்பள்ளிக்கு வருகைதராததால் பெற்றோர்கள், ஆசிரியையின் வீட்டுக்குச் சென்று பார்த்த போது ஆசிரியை கொலை செய்யப்பட்டுள்ளமையை அறிந்து அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு வருகைதந்த பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டனர். இந்தக் கொலைச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. கணவனை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்த இந்த முன்பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டமையானது டயகம பிரதேச மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெடரர் வரலாறு படைத்தார்

padaral.jpg
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் போராட்டத்திற்கு பின்னர் மகுடம் சூடிய பெடரர், பீட் சாம்ப்ராஸின் அதிக கிராண்ட்ஸ்லாம் சாதனையையும் முறியடித்தார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிகவும் கௌரவமிக்க பந்தயமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி கடந்த இரண்டு வார காலமாக இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வந்தது. கடைசி நாள ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டி அரங்கேறியது.

கிண்ணத்திற்காக இறுதிப் போட்டியில் உலகின் 2ஆம் நிலை வீரராக இருந்த சுவிட்ஸர்லாந்தின் ரொஜர் பெடரரும், 6ஆம் நிலை வீரர் அமெரிக்காவின் அன்டி ரொடிக்கும் சந்தித்தனர்.  இறுதிப் போட்டிக்கே உரிய விறுவிறுப்புடன் இருவரும் விட்டுக்கொடுக்காமல் கடைசிவரை போராடினர். இதனால் ஆட்டம் 5 செட்கள் வரை நீடித்தது. இதில் 4 மணி 16 நிமிடங்கள் போராடிய பெடரர் முடிவில் 5-7, 7-6, (86), 7-6, (75), 3-6, 1-614 என்ற செட் கணக்கில் வெற்றியை ருசித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். கடைசி செட் மட்டும் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்தமை குறிப்பிடத்தக்கது. இந்த மோதலில் பெடரர் 50 ஏஸ்களும், ரொடிக் 27 ஏஸ்களும் வீசியிருந்தனர்.   27 வயதான பெடரர் 6ஆவது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார்.

அது மட்டுமின்றி இந்த விம்பிள்டனை வென்றதன் மூலம் பெடரரின் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்தது. இதையடுத்து அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெருமையை இதுவரை தக்க வைத்திருந்த அமெரிக்க  பீட் சாம்ப்ராஸின் (14 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை பெடரர் முறியடித்து சரித்திரத்தில் இடம்பெற்றார்.

ஓய்வு பெற்ற பீட் சாம்ப்ராஸ் விம்பிள்டனை 7 முறையும் அமெரிக்க ஓபனை 5 முறையும், அவுஸ்திரேலிய ஓபனை 2 முறையும் வென்றுள்ளார். ஆனால், பிரெஞ்ச் ஓபனை மட்டும் அவரால் கடைசி வரை வெல்ல முடியாமல் போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வைத்தியர்களின் அடையாள வேலை நிறுத்தம்: வைத்திய சேவைகள் பாதிப்பு

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளிலும் மருத்துவர்கள் இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டமையினால் வைத்திய சேவைகளின் வழமை நிலை பாதிக்கப்பட்டிருந்தது. உள்ளக மருத்துவர்கள் நியமனம் தொடர்பாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இரண்டு சுற்றிக்கைகளிலும் முரண்பாடுகள் இருப்பதால் அதனை ரத்து செய்யக் கோரி அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடெங்கிலும் இந்த வேலை நிறுத்தத்திற்கான அழைப்பை விடுத்திருந்தது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகள் மட்டுமே இன்று இடம்பெற்றதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம் கூறினார். அதேவேளை, உள்ளக மருத்துவர்கள் நியமனம் தொடர்பான முரண்பாடு உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜாக்சன் இன்றுடன் இந்த உலகுக்கு பிரியா விடை கொடுக்கிறார்

maical-jak.jpgபாப் உலகின் முடி சூடா மன்னன் மைக்கேல் ஜாக்சன் இன்றுடன் இந்த உலகுக்கு பிரியா விடை கொடுக்கிறார். அவரது உடல் இன்று லாஸ் ஏஞ்சலெஸில் அடக்கம் செய்யப்படுகிறது.

லாஸ் ஏஞ்சலெஸில் உள்ள ஸ்டேபிள்ஸ் மையத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. இதையொட்டி ரசிகர்கள் பெருமளவில் குவிந்துள்ளனர். இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்காக டிக்கெட்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுடன் வருவோர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர். டிக்கெட் இல்லாமல் வர முயல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.

இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்கான டிக்கெட் கோரி ஆன்லைன் மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் விண்ணப்பித்தனர். ஆனால் 17 ஆயிரத்து 500 பேருக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்பபட்டுள்ளது. டிக்கெட் கிடைக்காதவர்கள் தொலைக்காட்சிகள் மூலம் நேரடி ஒளிபரப்பில் இறுதிச் சடங்குகளைக் காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ரசிகர்கள் பெருமளவில் கூடி வருவதால் பாதுகாப்புக்காக ஏகப்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரம் ஏற்பட்டால் தடுக்கவும் போலீஸார் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.  ஜூன் 25ம் தேதி ஜாக்சன் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவருக்கு வயது 50. அவரது மரணத்தில் ஏகப்பட்ட சர்ச்சைகள் நிலவுகின்றன.

அவரது பிரதேப் பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் இன்னும் கூட வெளியாகவில்லை. இரண்டு முறை அவருக்குப் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதையும் தனது இசையாலும்இ நடனத்தாலும் கட்டிப் போட்ட ஜாக்சன் இன்று நிரந்தரமாக இந்த உலகத்தை விட்டு பிரிகிறார். இதனால் அவரது கோடானு கோடி ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

அமைச்சர்கள், முக்கியஸ்தர்களின் பெயரைப் பயன்படுத்தி நிதி சேகரிப்பு சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது

அமைச்சர்கள் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்களின் பெயரை பயன்படுத்தி சட்ட விரோதமாக நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த குழு ஒன்றை பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.

கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இந்தக் குழுவில் ஐவர் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர நேற்று தெரிவித்தார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐவரில் தொழில் அமைச்சில் கடமை புரியும் இருவர், தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் ஊழியர்கள் இருவர் மற்றும் ஊழியர் சேமலாப நிதியத்தின் ஊழியர் ஒருவரும் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.

முக்கிய அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர்கள் ஆகியவர்களின் பெயர்களை பயன்படுத்தியே இவர்கள் நிதிச் சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அமைச்சர்களிடம் பல்வேறு வேலைகளை செய்து தருவதாக பொய் வாக்குறுதிகளை கூறியே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்களின் பெயரை பயன்படுத்தி பல்வேறு மோசடி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக சில அமைச்சுக்கள் பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய பொலிஸ் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்ததோடு இது தொடர்பான தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் பொலிஸ் தலைமையகத்திற்கு அறியத் தருமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தது.

இது தொடர்பான முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளும் அனுமதியை கொழும்பு குற்றப் புலனாய்வு பொலிஸாருக்கு ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றும் முன்தினம் ஐந்து சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை அணி

cricket_sl_won_itest_pakistan.jpgபாகிஸ் தான் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 50 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.  நான்கு நாட்களில் முடிவடைந்த இந்த டெஸ்ட் போட்டியில் 168 ஓட்டங்கள் எனும் இலகுவான வெற்றி இலக்கை நோக்கி தனது 2ஆவது இன்னிங்ஸக்காகத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி இலங்கை வீரர்களின் துல்லியமான பந்துவீச்சில் 117 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து வெற்றியைப் பறிகொடுத்தது.

கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான இந்த முதலாவது டெஸ்ட் போட்டி காலி, சர்வதேச விளையாட்டரங்கில் கடந்த 4ஆம் திகதி ஆரம்பமானது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணிக்கப்பட்ட இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 292 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய தரங்க பரணவிதான 72 ஓட்டங்களைப் பெற்றார். தனது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய பரணவிதான இப்போட்டியில் தனது முதலாவது அரைச் சதத்தைப் பெற்றதோடு அதிகூடிய ஓட்டத்தையும் பதிவு செய்துகொண்டார்.

தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 342 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்தது. பாகிஸ்தான் அணிக்காக யூசுப் யொஹானா 112 ஓட்டங்களையும் மிஸ்பாஉல் ஹக் 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் நுவன் குலசேகர 71 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சுக்காக ஆடிய இலங்கை அணி 217 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. இலங்கை அணி சார்பாக முதலாவது இன்னிங்ஸில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றிருந்த பரணவிதானவே இரண்டாவது இன்னிங்ஸிலும் கூடிய எண்ணிக்கையாக 49 ஓட்டங்களைப் பெற்றார்.

50 ஓட்டங்கள் மேலதிகமாகப் பெற்ற நிலையில் 168 ஓட்டங்கள் எனும் இலகுவான வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி இன்றைய நான்காவது நாளின் பகற்போசன இடைவேளைக்கு முன்னதாகவே சகல விக்கட்டுக்களையும் இழந்து 117 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இலங்கை அணி சார்பாக அபாரமாகப் பந்துவீசிய சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் 15 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை வீழ்த்தி இலங்கையின் வெற்றியை உறுதி செய்தார்.

இலங்கை அணி அதன் புதிய தலைவரான குமார் சங்கக்கார தலைமையில் தனது முதலாவது டெஸ்ட் வெற்றியைப் பெற்றுக்கொண்டதோடு இன்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராக இலங்கை அணியின் ரங்கன ஹேரத் தெரிவானார்.
இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகளைக்கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் 12ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

வவுனியா முகாம்களிலுள்ள உண்மை நிலையினை மூடிமறைக்கவே எமக்கு அனுமதி மறுக்கப்படுகிறது -ரோசி

rosy.jpg“பயங்கர வாதிகளை முறியடித்து யுத்த நிறுத்தத்தை மேற்கொண்டுள்ள இன்றைய சமகாலத்தில் வடக்கில் பாதிக்கப்பட்டு வவுனியா முகாம்களில் தங்கியுள்ள அப்பாவித் தமிழ் மக்களைச் சென்று பார்வையிட எமக்கு அனுமதி தர மறுப்பதானது அரசாங்கத்தின் சூழ்ச்சியையே எடுத்துக் காட்டுகின்றது. அத்துடன் அங்குள்ள யதார்த்தபூர்வ உண்மை நிலவரத்தை அரசு மூடிமறைப்பதாகவே எமக்கு எண்ணத் தோன்றுகிறது” என்று மேல் மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவி ரோசி சேனநாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை முற்பகல் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு இவர் தொடர்ந்தும் கூறியதாவது:

“இலங்கையில் மேல் மாகாணத்திலேயே அதிகமாக பல்லின மக்கள் வாழ்கின்றனர். அதுபோலவே மேல் மாகாணத்திலேயே அரச தரப்பில் பல்வேறு வகையிலான துஷ்பிரயோக செயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அரச வளங்கள், சொத்துக்கள் என இன்னோரன்ன அம்சங்களில் அரசாங்கம் துஷ்பிரயோகம் செய்து வருகின்றது. டாக்டர் ராஜித சேனாரட்ன துஷ்பிரயோக நடவடிக்கைகளை நிறுத்துவதாக ஊடகங்களுக்கு அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார். எனினும், அரச தரப்பே அதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. வாசுதேவ நாணயக்காரவும் இது விடயமாக அண்மையில் ஜனாதிபதியிடம் இதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார்.

அரச வளங்களையும், உடைமைகளையும் துஷ்பிரயோகம் செய்பவர்களைக் கைது செய்வதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் அரசாங்கம் இதுவரை மேற்கொள்ளவில்லை. இன்றைய ஆட்சியாளர்கள் தமது குடும்ப நலன்களுக்காகவும் சுயதேவைகளுக்காகவுமே அரசாட்சி புரிகின்றனர். மக்கள் குறித்து எவ்வித அக்கறையும் இவர்களுக்குக் கிடையாது. மக்களிடமிருந்து வரிகளை பெற்று இன்றைய அரசாங்கத்தின் அமைச்சர் களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பொக்கட்டுக்களை நிரப்புகின்றனர்.

அதேநேரம் எண்ணெய், காஸ் உட்பட அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளையும் காலவரையறையின்றி தமக்கேற்றாற்போல் அடிக்கடி அதிகரிக்கின்றனர். இதன் மூலம் மக்களது பணமே சூறையாடப்படுகின்றது.

மூன்று தசாப்த காலத்திற்கு பின்னர் நாட்டை அபிவிருத்தியின் பால் இட்டுச் செல்ல நல்ல சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இந்த அரிய சந்தர்ப்பத்தை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுவே எமது வேண்டுகோள். காலத்தை இழுத்தடிக்காது உடனடியாகவே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அரசு பெற்றுக் கொடுப்பதோடு நாட்டில் இடம்பெறும் லஞ்ச ஊழல் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும். அவற்றில் ஈடுபடுவோரை அரசு சட்டத்தின் முன் கொண்டு வந்து உரிய தண்டனையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

ஊடக செயற்பாட்டுக்கு இடையூறினை ஏற்படுத்தாது சுதந்திரமான முறையில் ஊடகவியலாளர்கள் தமது ஊடகப் பணியினை மேற்கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும். நாட்டில் இடம்பெறும் மிக மோசமான செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதியும் அவரது சகபாடிகளும் தமது இதயங்களை ஒருகணம் தொட்டுப் பார்த்துச் சிந்திக்க வேண்டும். மக்களுக்கான வாழும் உரிமையை அரசு வழங்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.

மேற்குலக தலையீடு குறித்து கமெனெய் எச்சரிக்கை

தமது நாட்டின் உள்விவகாரங்களில் மேற்குலக நாடுகள் தலையிடுவது குறித்து இரானின் அதியுயர் மதத்தலைவர் அயோத்துல்லா கமெனெய் கடுமையாக எச்சரித்துள்ளார்.

அப்படியான தலையீடுகளுக்கு எதிராக தமது நாடு பதிலடி கொடுக்கும் என்று அவர் கூறியுள்ளதாக இரானின் அரச தொலைக்காட்சி தெரிவிக்கிறது. நாட்டின் அண்மையில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலுக்கு பிறகு இடம்பெற்ற அமைதியின்மைக்கு மேற்குலக நாடுகளே காரணம் என்று இரான் அரசு குற்றம் சுமத்துகிறது.

அதிலும் குறிப்பாக பிரிட்டனையும், அமெரிக்காவையும் இது தொடர்பில் இரான் விமர்சித்திருந்தது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற வீதி போராட்டங்களை இரானிய அதிகாரிகள் அடக்கினர்.

கரையோர பாதுகாப்பு திணைக்களம்

மீன்பிடி நீரியல் வள அமைச்சின் கீழ் இயங்கிவரும் கரையோர பாதுகாப்பு பிரிவை தனியாக கரையோர திணைக்களமாக மாற்றி செயற்பட வைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இத்திணைக்களம் பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் இயங்கவுள்ளது.

இது தொடர்பான சட்டமூலம் இவ்வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்படுமென மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது.  சட்டவிரோத மீன்பிடி, கள்ளக்கடத்தல், போதைப்பொருள் கடத்தல், ஆட்களை கடத்தல் போன்ற குற்றங்களை தடுப்பதற்கும், கடலில் சந்தேகத்துக்குரியவாறு நடமாடுபவர்களை கைது செய்வதற்கும் இத்திணைக்களத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தேகத்துக்கிடமான படகுகளை சோதனையிடுவதற்கும் இத்திணைக்களத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்குள் கடல்வழியாக போதைப்பொருட்கள், கடத்தல் பொருட்கள் கடத்திவரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இத்திணைக்களம் அவசியம் செயற்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை மீனவர்கள் இந்தியக்கடல் எல்லைக்குள் செல்லும் சம்பவங்கள் அதிகரிப்பதாலும் வெளிநாட்டு மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி வருவதாலும் இந்தப்பிரிவை திணைக்களமாக மாற்ற வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சட்டவிரோத ஆயுதங்களை கையளித்த இளைஞர்களுக்கு பிரதிபொலிஸ் மா அதிபர் பாராட்டு

kattankudy_arms.gifகிழக்கு மாகாணத்தில் சட்ட விரோத ஆயுதங்களை களையும் நடவடிக்கையில் முதற் கட்டமாக காத்தான்குடி பிரதேசத்தில் ஆயுதங்களை எம்மிடம் ஒப்படைத்தது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். இதனை முன்னுதாரணமாக எடுத்து ஏனைய பிரதேசங்களிலுமுள்ள சட்டவிரோத ஆயுதங்களைகளையும் பணி படையினரால் தீவிரப்படுத்தப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் எரிசன்குணதிலக தெரிவித்தார்.

காத்தான்குடியில் நடைபெற்ற ஆயுதம் கையளிப்பு வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதி பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் கடந்த 3 வருடங்களாக இடம்பெற்ற கொடூர யுத்தத்தை ஜனாதிபதி முடிவுக்கு கொண்டுவந்துள்ளார். இதன் மூலம் பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் அச்சமின்றி வாழும் சூழல் உருவாக்கியுள்ளது.

இதன் அடிப்படையில் முப்படையினரைத் தவிர எந்த ஒரு தனிநபரிடமும் சட்டவிரோத ஆயுதம் வைத்திருக்க அனுமதிக்கப்போவதில்லை. இந்த சட்டவிரோத ஆயுதங்களையே நாம் களைந்து வருகின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டத்தையும், அமைதியையும், ஒழுங்கையும் நிலை நாட்டுவதில் பொலிஸார் தீவிரமான முறையில் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு அங்கமாக காத்தான்குடியில் சட்ட விரோத ஆயுதங்களை ஒப்படைத்த இளைஞர்களையும், இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய பள்ளிவாசல் சம்மேளனத்தினரையும், அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வையும் பாராட்டுகின்றேன்.

நாம் அனைவரும் ஒருதாய் பிள்ளைகள். எமக்கிடையே எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாடு. இனிவரும் காலங்களில் இந்தப் பிரதேசங்களில் எவ்விதமான கொலைகளோ, கொள்ளைகளோ, கப்பம் பெறும் நடவடிக்கைகளோ இடம்பெற ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் இதற்கான சகல நடவடிக்கைகளும் படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.