செட்டிக் குளம் நிவாரண கிராமங்களில் மழையின் காரணமாகப் பாதிக்கப்படும் மக்களைத் தற்காலிகமாக வேறு இடங்களில் தங்கவைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென்று பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்படுமென்றும் பிரதமர் கூறினார்.
செட்டிக்குளம் நிவாரண கிராமங்களில் மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சர் டியூ குணசேகர நேற்று அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். இதற்குப் பதில் அளிக்கும் வகையிலேயே பிரதமர் இந்த அறிவிப்பைச் செய்தார். நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்களை அவசரப்பட்டு அரசாங்கம் குடியமர்த்தி அவர்களைக் கண்ணிவெடிகளுக்கு இரையாக்கப்போவதில்லை.
அவை நிதானமாக முற்றாக அகற்றப்பட்டதன் பின்னரே மக்களை மீளக்குடியமர்த்த முடியும். எனினும் மழையினால் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக மக்களைத் தற்காலிகமாக வேறு இடத்தில் தங்க வைப்பதுபற்றி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் பிரதமர் கூறினார்.
பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார தலைமையில் கூடியபோது, வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்திற்குப் பின்னர் விசேட அறிக்கையொன்றைச் சமர்ப்பித்த அரசியலமைப்பு விவகார, தேசிய நல்லிணக்க அமைச்சர் டியூ குணசேகர, கடந்த 16 ஆம் திகதி வவுனியா சென்ற போது செட்டிக்குளம் நிவாரண கிராமங்களில் உள்ள மக்களுக்கு மழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்துக் கட்சித் தலைவர்கள் பலர் தமது கவனத்திற்குக் கொண்டு வந்ததாகக் கூறினார்.
இடைப் பருவப் பெயர்ச்சி மழையின் காரணமாக மக்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளதாகக் கட்சித் தலைவர்கள் முறையிட்டதாகக் கூறிய அமைச்சர் டியூ, அருணாச்சலம் முகாமுக்குச் சென்று நிலைமைகளை நேரில் அவதானித்ததாகவும், அதுபற்றி ஒரு கட்சித் தலைவர் என்ற வகையில் சபையில் அரசின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகவும் கூறினார்.
நாட்டின் வேறு பகுதிகளில் குறிப்பாக கலவானை, கிரியெல்லை, இரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டியூ சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் தமது பதிலில் குறிப்பிட்டார்.