செய்திகள்

செய்திகள்

செய்திகள்

இடம்பெயர்ந்தோரை பலாத்காரமாக தடுத்து வைக்க முடியாது – மங்கள சமரவீர

mangala2222.jpgவவுனியா நலன்புரி முகாம்களில் தங்கியிருந்த இடம்பெயர்ந்தோரை பலாத்காரமாக தடுத்து வைக்க முடியாது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு ஏற்பாட்டாளர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில், இடம்பெற்ற சுதந்திர மேடை செய்தியாளர் மாநாட்டில், உரையாற்றிய அவர் இடம்பெயர்ந்தோருக்கு தேவையான இடங்களுக்கு சென்று வர உரிமை இருக்கிறது. ஏனைய இடங்களில் உள்ள தமது உறவினர்களிடம் செல்வதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது.
 
இந்த நிலையில் அவர்களை பலாத்காரமாக தடுத்து வைக்க முடியாது என மங்கள சமரவீர குறிப்பிட்டார். தெளிவான ரீதியில் அவர்கள் பதிவு செய்யப்பட்டு, பொது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். எனினும், இந்த நலன்புரி முகாம்களில் அனைத்துப் பணிகளையும் இராணுவமே மேற்கொண்டு வருகின்றது.
 
வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி முகாம்கள் சிறைக்கூடமோ அல்லது வதைக்கூடமோ இல்லை என கூறவேண்டுமானால் அங்கு இடம்பெறும் அனைத்து நிர்வாகப் பணிகளும் சதாரண சிவில் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
 
இதேவேளை, இந்த முகாம்களை வந்து பார்வையிட சர்வதேச நிறுவனங்களுக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டும். இல்லையெனில், அரசாங்கம் கூறும் பொய்களுக்கு சர்வதேசம் ஏமாற்றப்படுமானால், சர்வதேசத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய நிலை இந்த நாட்டிற்கு ஏற்படும் என்றும் மங்கள சமரவீர தெரிவித்தார்.

இந்தோனீசிய நில நடுக்கப் பகுதிகளுக்கு நிவாரணங்கள் செல்கின்றன

indonesia.jpgபலமான நிலநடுக்கத்தால் நேற்று புதன்கிழமையன்று மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தோனீசிய கிராமங்களுக்கான நிவாரணங்கள் வந்து சேரத் தொடங்கியுள்ளன.

மேற்கு ஜாவாப் பகுதியில் இருக்கும் சில மாவட்டங்களுக்கு உணவும் குடிநீரும் சென்றடைந்துள்ள போதிலும், அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள தொலைதூர கிராமங்கள் இன்னமும் தொடர்புகள் இல்லாமல் துணடிக்கப்பட்டுள்ள நிலையிலேயே உள்ளன.

மழையும், பாதிக்கப்பட்டுள்ள சாலைகளும் அந்தப் பகுதிகளுக்கு நிவாரண உதவிகளை எடுத்துச் செல்லும் முயற்சிகளுக்கு தடைகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவுகளால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஐம்பத்தியேழாக உயர்ந்துள்ளது.

நிலநடுக்கத்தின் காரணமாக புதையுண்ட மனிதர்களை தோண்டியெடுக்கும் பணிகளை வெறும் கைகளை கொண்டே போலீசாரும் இராணுவத்தினரும் மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வலைகள் எழுநூறு கிலோமீட்டர்களுக்கு உணரப்பட்டன.

இந்தியாவில் 39 லட்சம் பேர் எய்ட்ஸால் பாதிப்பு – அமைச்சர் தமிழரசி

03-aids.jpgஇந்தியாவில் 39 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி கூறியுள்ளார். எச்.ஐ.வி -யால் பாதிக்கப்பட்டோரின் நல வாழ்விழா மதுரை  பல்நோக்கு சமூக சேவா சங்கத்தில், தொண்டு நிறுவனங்களின் சார்பில் நடைபெற்றது.

இந்த விழாவை தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர்  தமிழரசி துவக்கி வைத்து பேசுகையில், ஒரு காலத்தில் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோர் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டனர். ஆனால், தற்போது நிலைமை மாறி, அவர்களின் மரணத்தை தள்ளிப் போடும் அளவிற்கு மருத்துவம் நவீன மயமாக வளர்ந்துள்ளது.

உலகில் எட்டு கோடி பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் புதிதாக 16 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் சுமார் 39 லட்சம் பேரும், தமிழகத்தில் எட்டு லட்சம் முதல் 10 லட்சம் பேருக்கு இந்த நோய் தாக்கியுள்ளது. இதில், 18 முதல் 49 வயதுடையோர் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

ஈ.பி.டி.பி. – அ.இ.மு.கா. ஒப்பந்தம் கைச்சாத்து

யாழ். மாவட்டத்தில் கணிசமான அளவில் முஸ்லிம் மக்கள் குடியேறியதும் யாழ். மாநகர சபை பிரதி மேயராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். அது தொடர்பான இணக்கப்பாட்டில் ஒப்பந்தக் கைச்சாத்தொன்று நேற்று இடம்பெற்றது.

இந்நிகழ்வு கல்வியமைச்சில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த் முன்னிலையில் இடம்பெற்றது. மேற்படி ஒப்பந்தத்தில் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை. எல். எஸ். ஹமீத் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.

நேற்றுக் காலை சமூக சேவைகள் அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது பற்றி குறிப்பிட்ட போது, இவ்விடயம் சம்பந்தமாக அமைச்சர்கள் அமீர் அலி, ரிசாட் பதியுதீன் ஆகியோர் பி. பி. சி. மூலம் கருத்து வெளியிடும் வரை இது பற்றி தமக்குத் தெரியாதெனவும் அதன் பின்னர் இதற்கான சிபாரிசை வழங்கியதாகவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் தற்போது 65 முஸ்லிம் குடும்பங்களே உள்ளன. மேலும் இரண்டு வருடத்தில் கணிசமானளவு முஸ்லிம்கள் அங்கு குடியேறும்போது அம்மக்கள் பெயரால் சேவை செய்ய பிரதி மேயராக முஸ்லிம் ஒருவரை நியமிக்கலாம் என்றார்.

கடந்த யாழ். மாநகர சபைத் தேர்தலில் ஒன்பது வேட்பாளர்களை ஈ.பி.டி.பி. கட்சியும் நான்கு வேட்பாளர்களை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ¤ம் பெற்றன. இதன்படி ஈ.பி.டி.பி. கட்சியினர் முதல்வர், பிரதி முதல்வர் ஆகியோர்களின் பெயர்களை அறிவித்திருந்தனர்.

இதேவேளை, பிரதி மேயர் பதவியை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ¤க்கு வழங்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த வேண்டுகோளை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருக்கு விடுத்திருந்தார்.

அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் இரு பிரிவினரையும் அழைத்து பேச்சு நடத்தியதன் பயனாக ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர். இதன்படி முதல்வர், பிரதி முதல்வர் பதவிகளை ஈ.பி.டி.பி.யினர் வகிப்பதெனவும் ஒரு வருடத்தின் பின் பிரதி மேயர் பதவியை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸில் வெற்றி பெற்ற பிரேரிக்கப்பட்ட பிரதிநிதிக்கு வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டது.

இதனடிப்படையில் 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட யாழ். முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்தி அவர்களுக்கு தேவையான உதவிகளை இரு தரப்பும் இணைந்து மேற்கொள்வதற்கும் இணக்கம் காணப்பட்டது. நேற்றைய ஒப்பந்த கைச்சாத்து நிகழ்வில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஈ. பி. டி. பி. கட்சியைச் சேர்ந்த யாழ். மாநகர சபைக்கு தெரிவான வேட்பாளர்கள் உட்பட முக்கியஸ்தர்களும் கிழக்கு மாகாண அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாவும் கலந்து கொண்டனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவி

bandula_gunawardena222.jpgகிழக்கிலும் வடமத்திய பிரதேசத்திலும் வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இதற்கான பிரேரனையை நிதி,  திட்டமிடல் பதில் அமைச்சர் அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்திருந்தார். இத்திட்டத்தின்படி 70 மில்லியன் அமெரிக்க டொலர் ஆசிய அபிவிருத்தியிடமிருந்து கடனாகப் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இந்த நிதியின் மூலம் கிழக்கில் 150 கிலோ மீற்றர் தூரமான வீதியும் வடமத்திய பிரதேசத்தில் 220 கிலோ மீற்றர் தூரமான வீதியும் புனரமைக்கப்படவுள்ளது. இப்பிரதேசங்களை உள்ளடக்கிய பாலங்கள் மற்றும் மதகுகள் என்பவையும் மறுசீரமைக்கப்படவுள்ளன.

ரணிலின் கோரிக்கை வேடிக்கையானது – அமைச்சரவைப் பேச்சாளர் கருத்து

anurapriyadarsanayapa.jpgஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தின்போது விசேட சுற்று நிருபம் மூலம் அரச நியமனங்கள் அனைத்தையும் மறு அறிவித்தல் வரும்வரை உடன் நிறுத்திய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அரச ஊழியர்களின் சம்பளத்தைக் கூட்டுமாறு இன்று கூக்குரலிடுவது வேடிக்கையானது என தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா கேள்வி எழுப்பினார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற  அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். அரச ஊழியர்களின் சம்பளத்தைக் கூட்டாவிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தேசிய ஊழியர் சங்கக் கூட்டத்தில் உரையாற்றியபோது கூறியதைச் சுட்டிகாட்டியே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்.

ஐ.தே.க. ஆட்சிக் காலத்தின்போது 7 இலட்சமாக இருந்த அரச ஊழியர்களின் எண்ணிக்கையை  வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் 3 இலட்சத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. புதிய நியமனங்களுக்கான ஓய்வூதியங்கள் நிறுத்தப்பட்டன. தொழில் கேட்டுப் போராடிய பட்டதாரிகள் தாக்கப்பட்டனர். கூட்டுத்தாபனங்களில் இருந்தும் பலர் நீக்கப்பட்டார்கள்.

எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கம் தொழிலாளர்களின் நலனுக்காக பல ஆக்கபூர்வமான திட்டங்களை அமுல்படுத்தியுள்ளது. தற்போது அரச ஊழியர்களின் எண்ணிக்கை 11 முதல் 11.5 இலட்சமாக அதிகரித்துள்ளது. 45 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாக ஆயிரம் ரூபா வழங்கப்பட்டு வருகிறது. இதேவேளை,  இதுவரை அரச ஊழியர்களுக்கு 40 வீத சம்பள அதிகரிப்பும் வழங்கியுள்ளது.

இவ்வாறான நிலையில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரால் எவ்வாறு கோர முடியும்? பதவியில் இருக்கும்போது இவைகள் எவற்றையும் பற்றி கவனம் செலுத்தாதவர்கள் பதவிக்கு வருவதற்காக போலியாக குரல் கொடுப்பதை நாம் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர்கள் புலிகளின் கருத்தையே பிரதிபலித்தார்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து

sg-conference.jpgதமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இனப்பிரச்சினை தீர்விற்கும் மக்கள் நலன்சார்ந்த விடயங்களுக்கும் காட்டிய எதிர்ப்பு அவர்களின் சொந்த நிலைப்பாடல்ல. புலிகளின் கருத்தையே அவர்கள் பிரதிபலித்தார்கள். புலிகளின் பேச்சாளர்களாகவே அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள் என சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார். கொழும்பிலுள்ள தமது அமைச்சுப் பணிமனையில் இன்று முற்பகல் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

இலங்கையில் தற்போது யுத்தம் வன்முறை என்பன முடிவிற்கு வந்துள்ள நிலையில் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தமது கடமைகளை மேற்கொள்ளக்கூடிய சுழ்நிலை உருவாகியுள்ளது. எனவே ஊடகவியலாளர்கள் தமக்கு தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை யாருக்கும் தாரைவார்த்துவிடக்கூடாது.

கடந்த காலங்களில் பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் ஊடகவியலாளர்கள் பணிபுரியவேண்டிய நிலையில் காணப்பட்டனர். தற்போது நிலைமை அவ்வாறாக இல்லை. எனவே கடந்த கால தவறுகளைத்திருந்தி ஊடகவியலாளர்கள் தமது கடமைகளை நியாயமாக மேற்கொள்ள வேண்டும். ஈபிடிபி குறித்த ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஊடகங்கள் தாராளமாக முன்வைக்கலாம். அதனை ஏற்றுக்கொள்ள அன்றும் இன்றும் என்றும் நாம் தயாராகவே இருந்திருக்கிறோம். இருப்போம்.

யாழ்ப்பாணம் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது தெரிந்ததே. யாழ்ப்பாண மாவட்டத்தில்; இன்னும் மூன்று நகர சபைகளும் பதினான்கு பிரதேச சபைகளும் தேர்தல் நடைபெற வேண்டியனவையாக உள்ளன. இச்சபைகளில் மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாத நிர்வாகமே நடைபெறுகின்றது. இச்சபைகளுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும்.

இலங்கையின் ஏனைய பகுதிகளிலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் நிர்வாகத்தில் இயங்கும் போது வடபகுதி உள்ளூராட்சி மன்றங்கள் மாத்திரம் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாதிருப்பது இம் மன்றங்களின் அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை மறுதலிப்பதாகும்.

இப்போது நிலைமை மாறிவிட்டது. கிழக்கு மாகாண மக்களைப் போல வட மாகாண மக்களும் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள். புலிகளால் மறுக்கப்பட்டிருந்த ஜனநாயக உரிமைகளை இம்மக்கள் அனுபவிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் கடப்பாடு அரசாங்கத்துக்கு உண்டு. இதற்கான ஆரம்பம் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலாக இருக்கட்டும்.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டும் என்ற கோரிக்கையை ஆரம்பம் முதல் நாமே முன்வைத்து வந்தோம். இதற்கு நடைமுறைச்சாத்தியமான மூன்று கட்ட தீர்வுத்திட்டத்தையும் முன்வைத்துள்ளோம். எனவே இதுவரை எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் இனிமேலாவது மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து பதின்மூன்றாவது திருத்தச்சட்டமும் அதற்கு மேலதிகமானதும் என்ற அடிப்டையிலிருந்து ஆரம்பமாகும் தீர்வுத்திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்.

இத்திட்டம் அரசியல் சாசனத்திற்கு அமைவானது. ஏற்கனவே நாட்டின் தென்பகுதியில் அமுலில் உள்ளது. இந்தியாவின் அனுசரனையினைப் பெற்றுள்ளது. பிரபாகரன் விரும்பிய தீர்வு அவருக்கு கிடைத்தவிட்டது. தனிமனிதனின் மரணத்தில் நாம் மகிழ்வடையவில்லை. ஆயினும் புலி உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படவேண்டும். இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஆடை உற்பத்தித் துறைக்கு பாதிப்பு இல்லை – அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா

anurapriyadarsanayapa.jpgஇலங் கையின் ஆடை உற்பத்தித் துறைக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை என தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற  அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

சுனாமியின் பின்னர் ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கான ஜீ.எஸ்.பி. வரிச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் அடிக்கடி நீடித்துக்கொண்டே வந்தது. அவ்வாறே அந்தச் சலுகை தொடர்ந்தும் கிடைத்துக்கொண்டு வருகிறது. இலங்கையின் நிலைப்பாடு குறித்து சர்வதேச சமூகத்துக்கு நன்கு தெளிவுபடுத்தியுள்ளோம். இலங்கை தொடர்பாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து இரண்டு இடங்களுக்கே விளக்கம் அளிக்க முடியும். அதில் ஒன்று ஐக்கிய நாடுகள் சபை. மற்றது சர்வதேச மனித உரிமைகள் சபை.

சர்வதேச மனித உரிமைகள் சபையில் எமது அமைச்சர் இலங்கையின் நிலைப்பாடு குறித்து பூரண விளக்கமொன்றை அளித்து பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றியும் பெற்றார். ஐக்கிய நாடுகள் சபையில் எமது பிரதிநிதி சிறந்த முறையில் விளக்கமளித்தார். அங்கும் எவ்வித எதிர்ப்புக்களும் தெரிவிக்கப்படவில்லை. இனியும் நாம் வேறு யாருடன் இதுபற்றி பேச வேண்டும்?

நாட்டின் ஆடைக் கைத்தொழில் துறைக்கு இதுவரை எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர்ந்தும் முதலீடுகள் கிடைத்து வருவதுடன் புதிய தொழிற்சாலைகளும் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. கடந்த சனிக்கிழமை திருகோணமலையிலும் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையொன்று திறந்து வைக்கப்பட்டது என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 

கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் -தகவல் திணைக்களப் பணிப்பாளர் உறுதி

anusha.jpgதெனியாய பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூன்று ஊடகவியலாளர்களினதும் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அநுஷ பெல்பிட்ட தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற  அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

தெனியாய பகுதியில் வைத்து ஊடகவியலாளர்கள் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து இன்று காலை தமக்கு தகவல் கிடைத்தாகவும் அதுமுதல் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு இச்சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.  இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ்மா அதிபருடன் தொடர்புகொண்டு கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: பலி 44 ஆக உயர்வு

tunami.jpgஇந்தோனே ஷியாவின் ஜாவா தீவுப் பகுதியில் நேற்று ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

ரிக்டர் அளவில் 7.0 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஜாவா மாகாணத்தின் வடக்குப் பகுதியில் 700க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக இந்தோனேஷிய பேரிடர் மேலாண்மை மையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

இதற்கிடையில் அந்நாட்டின் சியன்ஜூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் நிலச்சரிவால் மண்ணில் புதைந்ததாகவும், இதுவரை 10 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மாயமான 40க்கும் அதிகமானவர்களை தேடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது.