செய்திகள்

செய்திகள்

செய்திகள்

மரத்தில் தொங்கிய நிலையில் இரு எலும்புக் கூடுகள் மீட்பு – துன்ஹிந்த நீர் வீழ்ச்சி காட்டுப் பகுதியில் பரபரப்பு…

rope-0000.jpgதுன்ஹிந்த நீர் வீழ்ச்சிக்கு மேல் காட்டுப் பகுதியில் மரமொன்றில் தொங்கிக் கொண்டிருந்த இரண்டு எலும்புக் கூடுகளை பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர்.

இவை கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இருவரது சடலங்கள் என பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். துன்கிந்த காட்டிற்குச் சென்ற இளைஞர் ஒருவரினால் பதுளை பொலிஸாருக்கு வழங்கிய தகவலொன்றின் அடிப்படையிலேயே பொலிஸார் விரைந்து இவ்விரு எலும்புக்கூடுகளையும் மீட்டுள்ளனர்.

பதுளை-சிரிமல்கொட கிராமத்தில் வசித்து வந்த இருபத்தொன்பது வயது நிரம்பிய டி. எம். சமந்த கெலும் என்ற இராணுவ சிப்பாயினதும் ஆலி-எலைப் பகுதியில் ரோக்கத்தன்னை தோட்டத்தில் வசித்து வந்த இருபத்தி நாலு வயதினையுடைய முத்துக்குமார் கீதா என்ற தமிழ் யுவதியுமே கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர்களென இனம் காணப்பட்டுள்ளது. இத் தற்கொலைகள் ஒரு மாதத்திற்கு முன் இடம்பெற்றிருக்கலாமென்று பொலிஸார் தெரிவித்தனர்.

நைலோன் நூலினால் கழுத்துக்கள் சுருக்கிடப்பட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்ப பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. சடலங்கள் அருகே இருந்த உடைப்பைகள் இரண்டையும் பொலிஸார் மீட்டுள்ளனர். இவ்விருவரின் தற்கொலைகள் என்ன காரணத்தினால் ஏற்பட்டதென்பது குறித்து பதுளைப் பொலிஸார் தீவிரப் புலன் விசா ரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தோட்டங்கள் வழமைக்குத் திரும்பின – 90வீதம் வரவு

080909teawomen.jpgமலையகப் பெருந்தோட்டங்களில் கடந்த இரு வார காலமாக இடம்பெற்று வந்த பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டங்கள் நிறைவடைந்து நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளது. தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் பிரச்சினை முற்றுப் பெற்றுள்ளதையடுத்து தோட்டங்களில் 90% மக்கள் வழமையான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

நுவரெலியா மாவட்டத்தின் அனைத்துத் தோட்டங்களிலும் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பியுள்ளனர். தீபாவளிப் பண்டிகை வருவதனாலும், சம்பள நிலுவையைப் பெறவிருப்பதனாலும் தொழிலாளர்கள் மும்முரமாகத் தொழிலுக்குச் செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. வேலை நாட்கள் குறையுமானால் தீபாவளிப் பண்டிகை காலத்தில் தொழிலாளர்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும். இதனால் தோட்ட நிர்வாகத்துடன் ஒத்துழைத்து நன்மைகளைப் பெறும் நோக்கில் தொழிலாளர்கள் செயற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹட்டன், பொகவந்தலாவை, புளியாவத்தை பகுதிகளில் சில தோட்டங்களில் இன்னமும் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத சில தொழிற்சங்கங்களைச் சார்ந்த தொழிலாளர்கள், பொகவந்தலாவை, பொகவான, செல்வகந்தை உள்ளிட்ட தோட்டங்களில் தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பு, ஒத்துழையாமை போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்

சூரிய மண்டலத்துக்கு வெளியே பாறையிலான முதல் கிரகம் கண்டுபிடிப்பு

சூரிய மண்டலத்துக்கு வெளியே பாறையிலான முதல் கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சூரிய மண்டலத்தில் பூமியில் மட்டும் தான் மனிதர்கள் வாழ்கிறார்கள். ஆனால் மற்ற கிரகங்களிலும் உயிரினங்கள் இருக்கலாம் என்ற எண்ணம் விஞ்ஞானி களுக்கு இருக்கிறது- இதனால் வேறு கிரகங்களில் உயிரினம் இருக்கிறதா என்பதை கண்டு பிடிப்பதற்கான தேடும் படலத்தை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.

சூரிய மண்டலத்துக்கு வெளியே 300க்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். ஆனால் அவை உறுதியில்லாதவை. உயிரினம் உயிர் வாழ வேண்டுமானால் உறுதியான தரைப்பகுதி இருந்தால்தான் முடியும். 300க்கும் மேற்பட்ட கிரகங்களும் வெறும் வாயுவால் ஆனவை.

சமீபத்தில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் உறுதியான பாறை வடிவிலான ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது. இது சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள முதல் பாறை கிரகம் ஆகும். பாறை வடிவிலான கிரகம் கண்டுபிடித்து இருப்பது முக்கியமானதாக கருதப்படுகிறது.

இதற்கு கோரோட் – 7 டி என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. நாம் கண்டுபிடித்த கிரகங்களிலேயே பூமி மாதிரி இருப்பது இந்த கிரகம் தான் என்று ஜெர்மனியில் உள்ள துரிங்கர் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் டைரக்டர் ஆர்ட்டி ஹார்ட்செஸ் தெரிவித்தார்.

மஸ்கெலிய யுவதிகளின் தாயாரை நீதிமன்றில் சாட்சியமளிக்க உத்தரவு

கொழும்பு பெளத்தாலோக மாவத்தையில் சடலமாக மீட்கப்பட்ட இரு யுவதிகளின் தாயாரை கொழும்பு மஜிஸ்திரேட் முன்னிலையில் அஜர்செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக மஜிஸ்திரேட் ஆயிஷா ஆப்தீன், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு இதற்கான உத்தரவை விடுத்துள்ளார். ஒக்டோபர் 29ம் திகதிக்கு முன் தாயாரை ஆஜர் செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.

மஸ்கெலியாவைச் சேர்ந்த இரு தமிழ் யுவதிகள், கொழும்பு பெளத்தாலோக மாவத்தையிலுள்ள கால்வாயொன்றினுள் சடலமாக மீட்கப்பட்டனர். இருவரும் வீடொன்றில் பணியாளர்களாகப் பணியாற்றினர். பணிபுரிந்த வீட்டுக்காரரால் இரு யுவதிகளும் துன்புறுத்தப்பட்டனரா என்பது பற்றி நீதிமன்றம் மேற்படி தாயாரிடம் விசாரணைகளை நடத்தும்.

உலகின் மிக நீள தொலைக்காட்சி நெடுந்தொடர் முடிவுக்கு வருகிறது

guidinglightsoapopera.jpgஉலகி லேயே மிக நீளமான தொலைக்காட்சித் தொடரான ‘கைடிங் லைட்’ எனும் அமெரிக்க நெடுந்தொடர் 72 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது முடிவுக்கு வருகிறது.

1937ஆம் ஆண்டு என்.பி.சி. வானொலியில் தினந்தோறும் 15 நிமிடங்கள் என்று ஆரம்பித்த இத்தொடர் மக்களின் பேராதரவுடன் 1952ஆம் வருடம் தொலைக்காட்சித் தொடராக உருமாற்றம் பெற்றிருந்தது.

ஸ்பிரிங்ஃபீல்ட் என்ற கற்பனையான நகரத்தில் நடக்கும் காதல், கல்யாணம், கள்ளக் காதல், விவாகரத்து, அவ்வப்போதைய மர்மக் கொலை என்பதாக இந்த தொடர் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல் சென்றது.  ஆனால் பலவித தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெருகிவிட்ட தற்போதைய சூழலில் இந்நிகழ்ச்சியின் பார்வையாளர் எண்ணிக்கை குறைந்துவந்தது.

நவராத்திரி விழா இன்று ஆரம்பம்

amman.jpgஅலைமகள், மலைமகள், கலைமகள் என முப்பெரும் தேவியரையும் துதித்து வழிபடும் உலக வாழ் இந்துக்களின் புனித நவராத்திரி விழா இன்று ஆரம்பமாகின்றது.

இந் நவராத்திரி விழாவையொட்டி ஆலயங்களிலும் இல்லங்களிலும் கொலு வைத்து வழிபாடு செய்யப்படும். இன்று நவராத்திரியின் ஆரம்ப நாள் என்பதால் ஸ்ரீ துர்க்கை அம்பாளுக்கு விசேட அபிஷேகங்களும் பூஜைகளும் நடத்தப்படும்.

முதல் மூன்று நாட்களும் வீரத்தை உணர்த்தும் விதத்தில் துர்க்கை அம்மனுக்கும், இரண்டாவது மூன்று நாட்களும் செல்வத்தை உணர்த்தும் விதத்தில் லக்ஷ்மி தேவிக்கும், இறுதி மூன்று தினங்களும் கல்வியை உணர்த்தும் விதத்தில் சரஸ்வதி தேவிக்கும் பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படும். 10வது தினமான 28ம் திகதி விஜயதசமி தினம். அன்றைய தினம் ஆலயங்களில் வித்யாரம். நிகழ்வுகளும் நடைபெறும்.

குறிப்பாக அம்மன் ஆலயங்களில் தேவியின் மஹிமையை உணர்த்தும் நவராத்திரி உற்சவம் வெகுசிறப்பாக கொண்டாடப்படும்.

அனார்கலிக்கு கொலை அச்சுறுத்தல் – வேட்பாளர் பிணையில்

150909anarkali.jpgதனக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி சுதந்திர ஐக்கிய முன்னணி சார்பில் தென் மாகாண சபை தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நடிகை அனார்கலி காலி மஜிஸ்திரேட் நீதிமன்றில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இதன் அடிப்படையில், அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தபடி, தென் மாகாணா சபைத் தேர்தலில் போட்டியிடும் மற்றொரு சுதந்திர ஐக்கிய முன்னணி வேட்பாளரான நிஷாந்த முத்துஹேட்டிகமவைக் கைது செய்யுமாறு காலி பிரதம மாஜிஸ்திரேட் நீதவான் உத்தரவிட்டிருந்தார். இன்று நிஷந்த காலி பிரதம மாஜிஸ்திரேட் நீதிமன்றில் சரணடைந்தார். இனிமேல் இது போன்ற அச்சுறுத்தல்களில் ஈடுபடக் கூடாது என அவரைக் கடுமையாக எச்சரித்த பிரதம மாஜிஸ்திரேட் நீதவான் 2 லட்சம் ரூபா பிணையில் செல்ல அனுமதித்தார். 

லின் பஸ்கோ இன்று ஜனாதிபதியை சந்தித்தார்

170909-pascoe.jpgஇலங் கைக்கான் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐ. நா. சபையின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி பொதுச்செயலாளர் லின் பஸ்கோ இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அலரி மளிகையில் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, இடர் முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க, நீதித்துறை அமைச்சர் மிலிந்த மொரகொட ஆகியோர் உட்பட மற்றும் சிலர் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பின் போது, குறிப்பாக வவுனியா நலன்புரி நிலையங்களில் உள்ள இடம்பெயர் மக்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைத் திட்டம்- கைவிட்டார் ஒபாமா

ஈரானை சமாளிப்பதற்காக என்று கூறி ரஷ்யாவை எரிச்சல்படுத்தும் வகையில் கடந்த புஷ் ஆட்சியின்போது கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்கா அமல்படுத்த முனைந்த ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைத் திட்டத்தை பாரக் ஒபாமா ரத்து செய்து விட்டார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் வரவேற்றுள்ளார்.

பிலிப்பைன்சில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம்

மத்திய பிலிப்பைன்ஸ் பகுதியில் உள்ள மின்டோரோ தீவில் இன்று 6.1 ரிக்டர் அளவுக்கு பயங்கரநிலநடுக்கம்ஏற்பட்டது.  மதியம் சுமார் 2.23 மணிக்கு ஏற்பட்ட இந்தநிலநடுக்கம்தென் சீன கடல் பகுதியில் கலின்டான் நகரில் இருந்து சுமார் 30 கிமீ தூரத்தில் 50 கிமீ ஆழத்தில் மையமிட்டது.

இது குறித்து பிலிப்பைன்ஸ் புவியியல் ஆராய்ச்சியாளர் இஸ்மாயில் நாரக் கூறுகையில், இந்த நிலநடுக்கத்தால் மிகப்பெரும் அலைகள் ஏற்பட்டது. ஆனால், சுனாமி ஏற்படவில்லை. சுமார் 6.5 ரிக்டர் அளவுக்கு மேல் நிலநடுக்கம்  ஏற்பட்டால் தான் சுனாமி உருவாகும் என்பதால் அதற்கான எச்சரிக்கையும் விடப்படவில்லை