செய்திகள்

செய்திகள்

செய்திகள்

மீள முயற்சிக்கும் யாழ் பொருளாதாரம்

Jaffna_Grapesயாழ் நகரிலிருந்து கொழும்புக்கு எடுத்துச் செல்லப்படக் கூடிய முந்திரிகை உட்பட்ட விவசாய விளைபொருட்களின் விலைகள் உயர்ந்தள்ளது. ஏ9 பாதை திறக்கப்பட்டதால் கொழும்புச் சந்தைக்கான வாய்ப்பினை யாழ் விவசாயிகள் பெற்றுள்ளனர். இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் விளையும் பொருட்களுக்கான சந்தை யாழ்ப்பாணத்திலேயே முடக்கப்பட்டதால் அவற்றின் விலை மிகுந்த வீழ்ச்சியைக் கண்டிருந்தது.

யுத்த காலத்தில் முந்திரிகை கிலோ 30 ரூபாவுக்கும் விற்கப்பட்டதாகவும் ஆனால் தற்போது கொழும்பிற்கு கொண்டு செல்லக் கூடியதாக இருப்பதால் முந்திரிகை கிலோ 200 ரூபாவிற்கு விற்கப்படுவதாகவும் யாழ் வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார். அதே போல் கொழும்பில் இருந்து பொருட்கள் ஏ9 பாதையூடாக வர ஆரம்பித்துள்ளதால் யாழ்ப்பாணத்தில் பொருட்கள் தாராளமாகக் கிடைப்பதாகவும் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளதாகவும் அவ்வர்த்தகர் தெரிவித்தார்.

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு வீதித் தடைகள் நீக்கப்பட்டு ஏ9 பாதை ழுழுமையாகத் திறக்கப்பட்டாலேயே முழுவீச்சான பொருளாதாரப் பயனை யாழ் மக்கள் பெற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

”மடுமாதா அந்த அன்புக்குரிய மண்ணை காண்காணிக்க வேண்டும் என்று கேட்டு வணங்குகிறேன்” போப் பெனடிக்ற்

Pope_Benedict_XVI ”மடுமாதா அந்த அன்புக்குரிய மண்ணை காண்காணிக்க வேண்டும் என்று கேட்டு வணங்குகிறேன்” என போப் பெனடிக்ற் தனது பொது வழிபாட்டு தின முடிவில் தெரிவித்துள்ளார். இலங்கை நிலவரம் தொடர்பாக நவம்பர் 11ல் போப் பெயடிக்ற் குறிப்பிடுகையில் யுத்தம் முடிவடைந்து ஆறு மாதத்திற்குப் பின் இலங்கை வழமைநிலைக்குத் திரும்புவதாகவும் ஆனாலும் அங்கு செய்யப்படுவதற்கு நிறைய வேலைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முழுமையாக மனித உரிமைகளை மதித்து அரசியல் தீர்வை எட்டுவதை நோக்கி அனைத்துப் பிரஜைகளும் செயற்பட வேண்டும் என்றும் போப்பாண்டவர் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கைக்கான மனிதத்துவ பொருளாதார தேவைகளை சர்வதேச சமூகம் வழங்கும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்துள்ள போப்பாண்டவர் அந்த மண்ணில் உள்ள அன்புக்குரிய மக்களை காக்கும் மடுமாதாவை தான் வணங்குவதாகத் தெரிவித்தார். http://www.catholicnewsagency.com/new.php?n=17663

வரும் ஜனவரிக்குள் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்ற உறுதியை இலங்கை அரசு வழங்கிய போதும் இன்னமும் இரண்டு லட்சம் மக்கள் வரை முகாம்களிலேயே தடுத்த வைக்கப்பட்டுள்ளனர். வெளியேற அனுமதிக்கப்பட்டவர்களும் அவர்களது சொந்த இடங்களில் குடியமர அனுமதிக்கப்படவில்லை. அரசாங்கம் தனது வாக்குறுதியைக் காப்பாற்றிக் கொள்வதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

யாழ், வவுனியா நகர வீட்டு வாடகை சடுதியாக உயர்ந்துள்ளது.

யாழ் மற்றும் வவுனியா நகரங்களை அண்மித்துள்ள பகுதிகளில் வீட்டு வாடகை சடுதியாக உயர்ந்துள்ளது. அண்மைக் காலமாக வன்னி முகாம்களில் உள்ள மக்கள் விடுவிக்கப்பட்டு வருவதால் இருப்பிடங்களுக்கான தேவை சடுதியாக அதிகரித்துள்ளது. தேவை அதிகரித்துள்ளதால் வீட்டு வாடகைகளும் உயர்ந்துள்ளது. யாழ், வவுனியா நகரங்களில் ஒரு வீட்டை வாடகைக்குப் பெறுவதற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை முன்கட்டணம் கேட்கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ் நகரில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் நிலையில் அங்குள்ள வீடுகள் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் உறவினர்களின் கவனிப்பில் விடப்பட்டு உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள இருப்பிட நெருக்கடிக்கு இதுவும் காரணமாக அமைந்துள்ளது.

யாழ் மற்றும் வவுனியாவில் உறவினர்கள் உள்ளவர்கள் குறுகிய காலத்திற்கு தங்கள் உறவுகளுடன் தங்கியிருக்க முடியுமாயினும் ‘எவ்வளவு நாட்களுக்கு இப்படி மற்றயவர்களின் வீட்டில் இருக்க முடியும்’ என்கின்றனர். தற்போது பிறந்துள்ள கைக் குழந்தையுடன் யாழ் வந்துள்ள ரவி குடும்பத்தினர் தாங்கள் தனது சகோதரியுடன் இருப்பதாகவும் ஆனால் ஒரு வீடு பார்த்துச் செல்லவே விரும்புவதாகவும் கூறினார். கிளிநொச்சி வட்டக்கச்சியில் வாழ்ந்த இவர் அங்கு மக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டதும் அங்கு சென்றுவிடுவோம் எனத் தெரிவித்தார். அரசாங்கம் உதவிப் பணமாக வழங்குவது வீட்டு வாடகைக்கே போதாத நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

வவுனியாவில் தன்னுடைய உறவினர் வீட்டுக்குச் சென்று வாழும் மற்றுமொருவர் தெரிவிக்கையில் வாடகைக்கு வீடு எடுத்துச் செல்ல தங்களால் முடியாததால் தனது உறவினர் வீட்டு முற்றத்தில் ஒரு கொட்டிலைப் போட்டு இருக்கப் போவதாகத் தெரிவித்தார்.

நடிகர் ஹென்றி ஜயசேன காலமானார்

henre-jayasana.jpgபிரபல நாடகாசிரியரும், மேடை மற்றும் சினிமா நடிகருமான ஹென்றி ஜயசேன நேற்று காலமானார். அவருக்கு வயது 79. களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று மாலை உயிரிழந்தார்.

பிரபல திரைப்பட இயக்குநர் லெண்டர் ஜேம்ஸ் பீரிஸின் ‘கம்பெரலிய’ திரைப்படத்தில் பியல் என்ற பிரதான பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தமை இவருக்கு மிகுந்த புகழை பெற்றுத்தந்தது.

அரச துறையில் மேலும் 17,174 பட்டதாரிகளை இணைக்க தீர்மானம் – வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம்

17 ஆயிரத்து 174 பட்டதாரிகள் அரசாங்க சேவையில் இணைத்துக் கொள்ளப்பட விருப்பதாக அரசாங்கம் நேற்று அறிவித்தது. இதில் 14 ஆயிரம் பேர் ‘ஜன சபா’ செயலாளர்களாகவும் 3 ஆயிரத்து 174 பேர் கலைப்பட்டதாரி ஆசிரியர்களாகவும் நியமனம் பெறவிருப்பதாக நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

நிதியமைச்சில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். மூவாயிரத்து 174 கலைப்பட்டதாரி ஆசிரியர்களும் எதிர்வரும் ஜனவரி முதல் ஆசிரிய சேவையில் நியமனம் பெறவுள்ளனர். இதே வேளை ‘ஜன சபா’ செயலாளர்களை விரைவில் பிரதேச செயலகப் பிரிவுகள் தோறும் நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாகவும் அமைச்சர் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார்.

‘ஜன சபா’ செயலாளர் பதவி குறித்து அமைச்சின் முகாமைச் சேவையாளர் எல். பி. ஜயம்பதி விளக்கமளிக்கையில், வேலையில்லா பட்டதாரிகளில் மிகவும் திறமைசாலிகளையே நாம் இந்தப் பதவியில் சேர்த்துக் கொள்ளவுள்ளோம். இவர்கள் செயலாளர்களாக மட்டுமின்றி அந்த பிரதேசத்துக்குரிய தலைவரைப் போன்றும் செயற்பட வேண்டும்.

பிரதேச செயலாளர் பிரிவின் உட்கடமைப்பு வசதிகள், பொருளாதாரம், விவசாயம், கலாசாரம், விளையாட்டு ஆகிய துறை களையும் மட்டுமின்றி போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதுடன் சுகாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட சகல அம்சங்களையும் கையாளக் கூடியவராக இருக்க வேண்டும்.

‘ஜன சபா’ செயலாளர்களாக நியமிக் கப்படுவோருக்கு 15,250 ரூபா தொடக்கம் 25,965 ரூபா வரையிலான தொகை அடிப்படைச் சம்பளமாக வழங்கப்படும். இவர்களது பதவி நிரந்தரமானது.

அத்துடன் ஓய்வூதியமும் கிடைக்கும் அரச ஊழியர்களுக்கான அனைத்து சலுகைகளையும் இவர்கள் பெறமுடியும். சாதாரணமாக எட்டு மணித்தியாலங்கள் மட்டும சேவை புரிபவராகவன்றி 24 மணித் தியாலங்களும் பொதுமக்களின் தேவையை கருத்திற் கொண்டு செயற்படுபவர்களையே நாம் இப்பதவிக்காக எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்தார்.

நாட்டை அபிவிருத்தி செய்வதானால் அபிவிருத்தியை ஆரம்பிக்க வேண்டுமென மஹிந்த சிந்தனையில் குறிப்பிட்டதற்கமைய கிராமங்களை கட்டியெழுப்புவதற்கு விசேடமாக இப்பதவியை பட்டதாரிகளுக்கு வழங்க தீர்மானித்திருப்பதாக அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு அரசாங்க பல்கலைக் கழகங்களில் இருந்தும் பட்டம் பெற்ற 22 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இரு பாலாரும் இப்பதவிக்காக விண்ணப் பிக்கலாம். தெரிவு செய்யப்படுவோருக்கு தாம் வசிக்கும் பிரதேச செயலாளர் பிரிவிலேயே நியமனம் வழங்கப்படுமென அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இயல்பு நிலை பாதிக்கப்பட்டால் சேவையில் ஈடுபட படையினர் தயார் இராணுவப் பேச்சாளர்

தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வரும் சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுமாயின் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் சேவையில் ஈடுபட படைவீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

அவசரகால சட்டத்தின் கீழ், நாட்டின் இயல்பு நிலையை சீராக பேணுவதற்கு அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் படை வீரர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும்.  அந்த வகையிலேயே முப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பிரிகேடியர் நாணயக்கார கூறினார்.

தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே பிரிகேடியர் மேற் கண்டவாறு கூறினார்.

இலங்கை மின்சார சபையின் இயந்திரங்களை இயக்குதல், பெட்ரோல் பெளசர்களை ஓட்டுதல் போன்ற சேவைகளை படையினர் முன்னெடுப்பர்.  இதற்கு முன்னரும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் படையினர் மேற்படி சேவைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். துறைமுக அதிகார சபை, பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை, நீர் வழங்கல் சபை ஆகியவற்றின் தொழிற் சங்கங்கள் சில ஒன்றிணைந்து சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை நேற்று முதல் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாணவ குழுக்கள் மோதல்; ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் நேற்று மூடப்பட்டது

arest.jpgஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர் குழுக்களிடையே இடம்பெற்ற மோதல் தீவிரமடைந்ததையடுத்து நேற்று முதல் பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

நேற்றுக் காலை இடம்பெற்ற மோதல்களில் ஐவர் காயமுற்றுள்ளதுடன் இவர்களில் மூவர் ஜயவர்தனபுர வைத்தியசாலையிலும் மேலும் இருவர் களுபோவில வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களாக மாணவர் களுக்கிடையில் இடம்பெற்ற சச்சரவுகள் நேற்றுக் காலை உக்கிரமடைந்ததையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் பல்கலைக்கழகத்தை மூடிவிடத் தீர்மானித்துள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

ஆஸி. தென் ஆபிரிக்கா, மலேஷியா நாடுகளின் பிரதிநிதிகள் நிவாரண கிராமங்களுக்கு விஜயம்

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள செட்டிகுளம் மெனிக்பாம் நிவாரண கிரா மங்களுக்கு அவுஸ்திரேலியா, தென்னா பிரிக்கா, மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட குழுவினர் நேற்றுக் காலை தனித்தனியாக விஜயம் செய்தனர்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து நிவாரண கிராமங்களில் தங்கவைக்கப் பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள், மீள்குடியேற்றம் பற்றி நேரில் அவதானிக்கும் பொருட்டு இவர்களுடைய விஜயம் அமைந்திருந்ததென செட்டிகுளம் பிரதேச செயலக சிரேஷ்ட உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாதுகாப்புபடை உயர் அதிகாரிகளும் சிவில் அதிகாரிகளும் நிலைமைகளை விளக்கினார்கள்.

மார்ச் மாதமளவில் மீள்குடியேற்றம் பூர்த்தி; நாணய நிதியம் பாராட்டு

எதிர்வரும் மார்ச் மாதமளவில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

எதிர்பார்த்ததைவிட துரிதமாக மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன் னெடுக்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளதென ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா தெரிவித்தார். தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரி வித்த அமைச்சர் மேலும் கூறியதாவது :-

ஜனவரி மாதமாகும் போது பெருமளவு மக்கள் மீள்குடியேற்றப்பட்டு விடுவர். மார்ச் மாதமளவில் மீள்குடி யேற்றப் பணிகள் பூர்த்தி செய்யப் படும்.

கிழக்கு மாகாண மக்கள் மீள்குடி யேற்றப்படும் போது வாய்திறக்காத எதிர்க் கட்சிகளும் சர்வதேச அமைப் புகளும் வட மாகாண மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்துகின்றன. உலகில் எந்த நாடும் முன்னெடுக்காத அளவு மிக துரிதமாக வடபகுதி மக்கள் மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்தப் பணிகள் குறித்து பல்வேறு நாடுகளும் பாராட்டுத் தெரிவித்துள்ளன.

இலங்கை பொருளாதார முகாமைத்துவத்தை சிறப்பாக மேற்கொள்வதாகவும் துரித பொருளாதார அபிவிருத்தி கண்டு வருவதோடு மக்கள் நலபணிகளை முன்னெடுப்பதாகவும் சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. மீள்குடியேற்ற நடவடிக்கை தொடர்பிலும் அது திருப்தி தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு 2ம் கட்ட கடனுதவி கிடைப்பதை தடுப்பதற்காக ‘ஹியுமன் வோட்ச்’ அமைப்பு சர்வதேச நாணய நிதியத்துக்கு கடிதம் எழுதியிருந்தது. இந்தக் கடிதத்திற்கு சர்வதேச நாணய நிதியம் அனுப்பியுள்ள பதிலில் இலங்கை குறித்து திருப்தி அடைவதாக கூறியுள்ளது என்றார்.

லண்டனில்? சூரிச்சில்? இரகசிய மாநாடு??

20க்கும் மேற்பட்ட தமிழ் பேசும் கட்சிகளை ஒன்றாக இணைத்து மாநாடு ஒன்றைக் கூட்டுவதற்கு திரைமறைவில் செயற்பாடுகள் முடக்கிவிடப்பட்டு உள்ளது. இம்மாநாட்டு பற்றிய விடயங்கள் அனைத்தும் இரகசியமாகப் பேணப்பட்டு வருகின்றது. நவம்பர் 12ல் லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இம்மாநாடு இறுதி நேரத்தில் சுவிஸ்லாந்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக இம்மாநாட்டில் கலந்துகொள்ள அழைக்கப்பட்ட கட்சிகளில் ஒன்றின் பிரதிநிதி லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். இம்மாநாடு பற்றிய பின்னணிகளை அறிந்திராத நிலையில் தங்கள் கட்சித் தலைவர் அதில் பங்கெடுப்பது ஐயத்திற்குரியது என்றும் தெரிவித்தார்.

இம்மாநாட்டை சட்டத்தரணி மனோகரன் என்பவரே ஏற்பாடு செய்வதாக சொல்லப்பட்டு வருகின்றது. ஈஎன்டிஎல்எப் அமைப்பைச் சேர்ந்த இவர் பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ரிஎம்விபி அமைப்புடன் இணைந்து செய்ற்பட்டவர் எனத் தெரியவருகின்றது. பெரும்பாலும் அழைப்புகள் சட்டத்தரணி மனோகரனூடாகவே விடுக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணி மனோகரனுக்குப் பின்னணியில் மற்றுமொரு ரிஎம்விபி முக்கியஸ்தரான கிருஸ்ணன் பின்னணியிலுள்ளர்.

ஒரு சாதாரண சட்டத்தரணி 20க்கும் மேற்பட்ட தமிழ் அரசியற் கட்சிகளுக்குமான விமானச்செலவு, ஒரு வாரத்திற்கான ஹொட்டல் செலவு என்பவற்றை பொறுப்பேற்பது என்பது அதன் பின்னணி பற்றிய சந்தேகத்தை எழுப்பி உள்ளது. இம்மாநாடுக்குப் பின்னணியில் இந்திய, இலங்கை அரசுகளோ அல்லது புலிகளின் பினாமிகளோ பின்நிற்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகின்றது. ரிஎம்விபி உறுப்பினர்களான மனோகரனும் கிருஸ்ணனும் பின்நிற்பதால் இம்மாநாட்டின் பின்னணியில் இலங்கை அரசு உள்ளது என்ற சந்தேகத்தை வலுப்படுத்துவதாக உள்ளது.

மாநாட்டின் நோக்கம் மாநாடு யாரால் ஒழுங்குபடுத்தப்படுகின்றது போன்ற அடிப்படைத் தகவல்கள் இன்றி கட்சிகள் இம்மாநாட்டில் கலந்தகொள்ளுமா என்ற சந்தேகங்களும் உள்ளது.
இதற்கிடையே நவம்பர் நடுப்பகுதி வார விடுமுறையில் இலங்கையரசு புலம்பெயர் தமிழர்களுக்கான மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. இதில் உலகெங்கும் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.