செய்திகள்

செய்திகள்

செய்திகள்

பதிவுச்சான்று கோரவேண்டாமென பொலிஸாருக்கு கண்டிப்பான உத்தரவு – மீண்டும் அறிவுறுத்துகிறார் பிரதிப் பொலிஸ் மா அதிபர்

அவசர அலுவல்களின் நிமித்தம் கொழும்புக்கு வருபவர்கள் பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்துகொள்ள வேண்டுமென்ற கட்டுப்பாடு முற்றாக நீக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் மீண்டும் அறிவுறுத்தல்களை அனுப்புவதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிமல் மெதிவக தெரிவித்தார்.

பதிவுநீக்கம் தொடர்பில் ஏற்கனவே பொலிஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய பிரதிப் பொலிஸ் மா அதிபர், ஒரு மாதம் வரையிலான குறுகிய காலம் கொழும்பில் தங்கியிருப்பதற்குப் பொலிஸில் பதிய வேண்டுமென்ற நடைமுறை நீக்கப்பட்டுள்ளதாகத் திட்டவட்டமாகக் கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைகளுக்கு அமைய அவரின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

முன்பு, மலையக இளைஞர், யுவதிகள் கொழும்புக்கு வருவதற்குப் பொலிஸ் பதிவு நீக்கப்பட வேண்டுமென மலையகக் கட்சிகள் பசில் ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தன. அதன் பின்னர், அவசர அலுவல்கள் காரணமாகவோ, உறவினர், நண்பர்களைப் பார்ப்பதற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ கொழும்பில் வந்து தங்குபவர்கள் பொலிஸில் பதிய வேண்டிய அவசியம் இல்லையென அரசாங்கம் அறிவித்தது.

ஆனால் சில பொலிஸ் நிலையங்களில் முறையான அறிவித்தல்கள் கிடைக்கப்பெறவில்லை எனக் கூறி பொலிஸ் பதிவு கோரப்பட்டதாகத் தகவல்கள் பத்திரிகைகளில் வெளியாகின. எனினும், இவை உண்மைக்குப் புறம்பான தகவல்கள் எனப் பொலிஸ் மா அதிபர் மெதிவக தெரிவித்தார்.

நந்திக் கடல் பகுதியில் நிலத்துக்கு அடியில் நவீன ஆயுதங்கள் மீட்பு

புதுக்குடியிருப்பு சிவந்தபுரம் மற்றும் நந்திக் கடல் பிரதேசங்களில் நிலத்துக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நவீன ரக ஆயுதங்கள் பலவற்றை மத்திய பிரதேச புலனாய்வு மற்றும் தகவல் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 29ஆம் திகதி இவ்வாறு மீட்கப்பட்ட ஆயுதங்களில் ஸ்னைப்பரில் பொருத்தும் இரு ஆயுதங்களும் மற்றும் 75 கிலோ கிராம் நிறையுடைய வெடிபொரு ட்களும் இவ்வாறு மீட்கப்பட்டதாக மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்தார்.

புலிகள் அமைப்பைச் சேர்ந்த உயர்மட்ட தலைவர் ஒருவரிடம் இருந்து பெற்ற தகவலை அடுத்தே இந்த உபகரணங்கள் கைப்பற்றப்பட்டது. ‘சி.4’ ரகத்தைச் சேர்ந்த 35 கிலோ வெடிபொருட்களும், ரீ. என். ரீ. வெடிபொருட்கள் 15 கிலோ கிராமும் 10 கிலோ கிராம் நிறைகொண்ட 15 குண்டுகளும் டெட்டனேட்டர் 21 ஆகியனவற்றையும் புலனாய்வுப் பிரிவினர் மீட்டிருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

‘டில்கோ ஜஃப்னா சிட்டி ஹோட்டல்’ – 80 மில்லியன் ரூபா செலவில் யாழ். நகரில் சுற்றுலா ஹோட்டல்

Tilko_Property_Servicesவடக்கில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் திட்டத்திற்கமைய யாழ். நகரில் 33 அறைகளைக் கொண்ட ‘டில்கோ ஜஃப்னா சிட்டி ஹொட்டேல்’ என்ற சுற்றுலா ஹோட்டல் 2010 ஆம் ஆண்டு திறக்கப்படவுள்ளதாக முதலீட்டுச் சபையின் தலைவர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார். கிழக்கு லண்டன் வர்த்தகப் பிரமுகர் திலக் யாழில் ஹொட்டல் கட்ட ஒப்பந்தம்

சுமார் 80 மில்லியன் ரூபா முதலீட்டுடன் கட்டப்பட்டு வரும் இந்த ஹோட்டல் 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் திறக்கப்படவுள்ளதாக டில்கோ நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தவராஜா திலகராஜா தெரிவித்துள்ளதாகவும் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.

கடற்கரையையும், கடலேரியையும் அண்டியுள்ள பகுதியில் சுமார் 340 பேர்ச்சஸ் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் டில்கோ ஜப்னா சிட்டி ஹோடேல் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர், வர்த்தக சமூகத்தினர் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் சகல வசதிகளையும் கொண்டதாக அமையவிருப்பதாகவும் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.

இலங்கை முதலீட்டு சபையில் இதற்கான ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்தானது. முதலீட்டுச் சபையின் தலைவர் தம்மிக்க பெரேராவும், டில்கோ நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தவராஜா திலகராஜாவும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

வீரசிங்கம் மண்டபத்தை அண்மித்ததாக கட்டப்பட்டு வரும் ‘டில்கோ ஜப்னா சிட்டி ஹோட்டேல்’ திறக்கப்பட்டதும் மேலும் உல்லாசப் பயணத்துறை சார்ந்த ஹோட்டல்களுக்கான முதலீடுகள் செய்யப்படவுள்ளன என்றும் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.

நாளை நள்ளிரவு முதல் யாழ். ஊரடங்கு முற்றாக நீக்கம்! உதய நாணயக்கார தகவல்

udaya_nanayakkara_brigediars.jpgயாழ். குடா நாட்டில் நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு முற்றாக நீக்கப்படும் என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார  தெரிவித்தார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இத்தகவலை வெளியிட்டார்.

இதுவரை காலமும் நள்ளிரவு 12.00 மணிமுதல் அதிகாலை 4.00 மணிவரை யாழ். குடாநாட்டில் ஊரடங்கு அமுலில் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐ. நா. தொழிற்பாட்டு குழுவின் இணைத்தலைவராக பாலித கொஹொன

khona.jpgதேசிய நியாயாதிக்கத்திற்கு அப்பாற்பட்ட கடல் சார்ந்த உயிரியல் வேறுபாடுகளின் பாதுகாப்பு மற்றும் தொடர்ச்சியான பாவிப்பு என்பது சம்பந்தப்பட்ட விடயங்களை ஆய்வதற்கான ஐ.நா. தொழில்பாட்டு குழுவின் இணைத் தலைவராக நியூயோர்க்கில் ஐ.நா.விற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாகிய தூதுவர் பாலித கொஹொன ஐ.நா. பொதுச் சபையின் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மற்றைய இணைத் தலைவர் நெதர்லாந்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சட்டமதியுரைஞரான கலாநிதி லைஸ்டெத் லிஜின்சாட் ஆவார்.

இவர் நியமனமானது 2010 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஐ.நா. தொழிற்பாட்டு குழுவினது மூன்றாவது கூட்டத்திற்காகவாகும். தேசிய நியாயாதிக்கத் திற்கு அப்பாற்பட்ட கடல் சார்ந்த உயிரியல் வேறுபாடுகளின் பாதுகாப்பு மற்றும் தொடர்ச்சியான பாவிப்பு என்பது சம்பந்தப்பட்ட விடயங்களை ஆய்வதற்கான ஐ.நா. தொழில்பாட்டு குழுவானது கடல்கள் மற்றும் கடல்சார் சட்டம் என்பதான ஐ.நா.வின் தீர்மானத்தைத் தொடர்ந்து ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் தாபிக்கப்பட்டது.

இத்தொழிற்பாட்டுக் குழுவானது உலகளாவிய ரீதியில் கடல் சார்ந்த உயிரியல் வேறுபாடுகளின் பாதுகாப்பு மற்றும் தொடர்ச்சியான பாவிப்பு என்பது சம்பந்தப்பட்ட விடயங்களை ஆய்வு செய்து அதன் சிபார்சுகளை ஐ.நா. பொதுச் சபைக்குச் சமர்ப்பிப்பதற்கு ஆணைப்படுத்தப்பட்டுள்ளது.

கல்முனையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பஸ் சேவை

lax-bas.jpgகல்முனை – யாழ்ப்பாணம் பஸ் சேவை நேற்று முதல் கல்முனை இ. போ. ச. டிப்போவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பிரதான பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து தினமும் அதிகாலை 5.30 மணிக்கு யாழ்ப்பாணத்துக்கு புறப்படும் பஸ் வண்டி காத்தான்குடி, மட்டக்களப்பு, பொலன்னறுவை, வவுனியா வீதி வழியாக யாழ்ப்பாணத்தை சென்றடைந்து மறுநாள் காலை 5.30 மணிக்கு கல்முனைக்கு புறப்படும். இப்புதிய பஸ் சேலை இன்டர் சிட்டி பஸ் சேவையாக இடம்பெறவுள்ளது.

கட்டணம் 825 ரூபாவாகும்.

ஏ-9 ஊடாக 4 நாட்களுக்குள் 30, 000 பேர் பயணம்

kandy-jaffna.jpgஏ-9 வீதி ஊடாக கடந்த நான்கு நாட்களுக்குள் சுமார் முப்பதாயிரம் பேர் சென்று வந்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அதேபோன்று சுமார் இரண்டாயிரம் வாகனங்கள் சென்று வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஏ-9 வீதி ஊடாக பொதுமக்கள் சென்று வர தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காடினார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

நிரம்பி வழியும் நிலையில் 24 பாரிய குளங்கள் 10 வீடுகள் நாசம்; 41 வீடுகள் சேதம்

water-levels.jpgநாட்டிலுள்ள 24 பாரிய குளங்கள் நூறு சதவீதம் நிரம்பியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர் ஜானகி மீகஸ்தென்ன நேற்றுத் தெரிவித்தார்.

இதேநேரம், கடந்த சில தினங்களாகத் தொடராகப் பெய்த மழை காரணமாகப் பொலன்னறுவை மாவட்டத்தில் 51 குடும்பங்களைச் சேர்ந்த 183 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பொலன்னறுவை மாவட்ட இணைப்பாளர் பி. கே. யு. நாணயக்கார கூறினார்.

இம்மழை காரணமாக பத்து வீடுகள் முழுமையாகவும், நாற்பது வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொறியியலாளர் ஜானகி மீகஸ்தென்ன மேலும் குறிப்பிடுகையில், அனுராதபுரம் மாவட்டத்தில் ராஜாங்கனைகுளம், திஸாவெவகுளம், பதுளை மாவட்டத்தில் தம்பராவ குளம், சந்திஎல, சொரபொற குளம், மட்டு மாவட்டத்தில் வாகனேரி, குளம் உன்னிச்சை குளம், உறுகாமம் குளம், நவகிரி குளம், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பந்தகிரிய குளம், தெபராவெவ குளம், மெளஆற குளம், வேரகல குளம், வீரவில குளம், குருநாகல் மாவட்டத்தில் இம்புல்வான குளம், நாகல்லகுளம், பொலன்னறுவை மாவட்டத்தில் கிரித்தல குளம், கெளடுல்லகுளம், மின்னேரிய குளம், பராக்கிரம சமுத்திரம், திருமலை மாவட்டத்தில் மகாதிவுல்வெவ குளம், வான் எல குளம் ஆகியன நூறு சதவீதம் நிரம்பியுள்ளது.

இதன் காரணத்தினால் உடைப்பெடுக்கும் அச்சுறுத்தல் மிக்க ராஜாங்கனை குளத்தின் நான்கு வான் கதவுகளும், வாகனேரி, உறுகாமம் குளங்களின் இரண்டு வான் கதவுகள் படியும், வேரகல குளத்தில் இரு வான் கதவுகளும், இம்புல்வான குளத்தில் மூன்று வான் கதவுகளும் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுகின்றன. இதேவேளை பராக்கிரம சமுத்திரத்தின் சகல வான் கதவுகளும் நேற்று மூடப்பட்டன என்றார்.

பெற்றோலின் விலை 15 ரூபாவால் குறைப்பு

pump-patrol.jpgஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இந்தியன் ஒயில் கம்பனி (ஐ. ஓ. சி.) என்பன பெற்றோலின் விலையை நேற்று நள்ளிரவு முதல் 15 ரூபாவினால் குறைத்துள்ளது. இதன்படி 90 ஒக்டேன் கொண்ட பெற்றோல் ஒரு லீட்டர் 115 ரூபாவாகவும், 95 ஒக்டேன் கொண்ட பெற்றோல் ஒரு லீட்டர் 133 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனமும், இந்திய ஒயில் கம்பனியும் அறிவித்துள்ளன.

முன்னர் 90 ஒக்டேன் 130 ரூபாவு க்கும், 95 ஒக்டேன் 148 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

சரத் பொன்சேகாவிடம் 500 மில். ரூபா நஷ்டஈடு கோருகிறார் கரன்னாகொட

karannagoda.jpgஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவிடம் 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி முன்னாள் கடற்படை தளபதியும் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான வசந்த கரன்னாகொட தனது சட்டத்தரணி ஊடாக கோரிக்கை கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

தனக்கு அபத்தமாகவும், அபகீர்த்தி ஏற்படும் வகையில் பொதுமக்களின் பார்வையில் தனக்கு அவமதிப்பு ஏற்படும் வகையிலும் சரத் பொன்சேகா சிரச தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தமைக்காகவே அவர் இவ்வாறு கோரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளார். தனது சட்டத்தரணி அத்துல டி சில்வா மூலம் குறிப்பிட்ட பணம் 14 நாட்களுக்குள் செலுத்தப்பட தவறினால் 500 மில்லியன் ரூபாவை வசூலிக்க சட்ட நடவடிக்கையில் இறங்க நேரிடும் என்று அந்த கோரிக்கைக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் கடற் படைத் தளபதியின் அறிவித்தலின் பேரில் தனது கட்சிக்காரருக்கு மேற்படி பேட்டியில் கூறப்பட்ட பிதற்றல்கள் வேண்டுமென்றே செய்யப்பட்டதாகவும் தனது கட்சிக்காரரின் கண்ணியம் நற்பெயர் மற்றும் பொது மக்களிடையிலான மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்துவதுடன் மீளப்பெற முடியாத அளவுக்கான பாதிப்பையும் தோற்றுவித் துள்ளது என்று முன்னாள் கடற்படை தளபதியின் சட்டத்தரணி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவையாவன:

அ) எனது கட்சிக்காரர் தனது பதவியை 48 மணி நேரத்தில் துறக்குமாறு கேட்கப்பட்ட போது அவர் உண்மையிலேயே சிறுபிள்ளை போல அழுதார்.

ஆ) எனது கட்சிக்காரரை 48 மணி நேரத்தில் வெளியேறுமாறு கேட்கப்பட்ட போது அவர் அழுதார்.

இ) எனது கட்சிக்காரருக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அல்லது அது போன்ற ஏதோ ஒன்றைப் பற்றி குறிப்பிடும் பொய்யான கடிதமொன்றை ஜனாதிபதி வழங்கிய போது அவர் அதனை இரு கைகளையும் நீட்டாமல் கூட ஒரே கையை நீட்டி வாங்கிக் கொண்டார்.

ஈ) ஜனாதிபதி கோபமடைந்து எனது கட்சிக்காரருக்கு சத்தம் போட்டு திட்டினார். (ஜனாதிபதி தனக்கு அநீதி இழைத்து விட்டதாக அவர் கூறிய போது) எனது கட்சிக்காரர் அழுதபோது பாதுகாப்புச் செயலாளர் அவரை ஜனாதிபதி செயலகத்தில் உள்ள தனது அறைக்கு அழைத்துச் சென்று திட்டினார்.

உ) அதற்கு மாறாக தன்னை இராணுவத் தளபதி பதவியை துறக்குமாறு கேட்கப்பட்ட போது தான் அழவில்லை.  அத்துடன், அவ்வாறான கெளரவ குறைச்சல்களுக்கு தான் முகங்கொடுக்க நேர்ந்திருந்தால் அரச சேவையில் தொடர்ந்து இருந்திருக்கப் போவதில்லை.

கடற்படைத் தளபதிக்கு இவ்வாறு அதிகாரத்தின் முன்னிலையில் அழுது வடிவது ஏற்றதல்ல (அப்போது அவர் கடற்படை தளபதியாக இருந்தார்)

ஊ) தனது கட்சிக்காரர் எந்த சுயமரியாதையும் அற்ற கேவலமிக்க ஒருவர் என்பதை இந்த நாட்டு மக்களுக்கு காட்டுவதாகவும் பொது வாழ்க்கையில் உயர்ந்த பொறுப்பினை வகிக்க தகுதியில்லாதவர் என்ற வகையிலும் அமைகிறது.

எ) எனது கட்சிக்காரர் பொதுமக்களிடையே பெற்றுள்ள உயர் மதிப்பினை பாதிக்கும் வகையில் அந்த பிதற்றல்கள் அமைந்துள்ளன.

உம்மால் விடுவிக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட கூற்று தவறானதும் மற்றும் உங்கள் அறிவுக்கேற்ப தவறானதுமாகும். அது எனது கட்சிக்காரரின் பெயரைக் கெடுப்பதாக உள்ளது என்று கூறுமாறு தனது கட்சிக்காரரால் அறிவுறுத்தப்பட்டதாகவும் சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.

துரிதமாக மறைந்து வரும் உங்கள் பொதுமக்களிடையிலான மதிப்பினை தூக்கி நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட பொய்யான திட்டமிட்ட, பொறாமை மிகுந்த முயற்சி இது. உம்மையும் எனது கட்சிக்காரரையும் பொய்யாக ஒப்பிடுவதன் மூலம் எனது கட்சிக்காரர் மீதான தனிப்பட்ட விரோதத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. மேற்கூறிய குறிப்புகள் எனது கட்சிக்காரரின் பொதுமக்களி டையிலான மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்தும் விஷமமான பழிவாங்கும் முயற்சியாகும்.