செய்திகள்

செய்திகள்

செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் பூரண சூரிய கிரகணம்

n7.jpgஇந்த நூற்றாண்டின் மிக நீண்ட முழு சூரிய கிரகணமான ‘கங்கண சூரியகிரகணம்’ நேற்று யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் பல பாகங்களில் பார்க்கக் கூடியதாக இருந்தது. கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, அம்பாந்தோட்டை, காலி, கிழக்கு மாகாணத்தின் சில பிரதேசங்கள், பதுளை உட்பட மலையகப் பகுதிகளில் சூரிய கிரகணத்தை முழுமையாகப் பார்க்க முடிந்ததென பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

n7.jpgழுமையான சூரிய கிரகணம் வட்டவடிவமான ஒளிர்கீற்றுக்களால் அழகாகக் காட்சியளித்தது. நண்பகல் 12.20க்குப் பின்னர் சூரிய கிரகணம் படிப்படியாக ஏற்படத் தொடங்கியதும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மப்பும் மந்தாரமுமான நிலை காணப்பட்டது. நண்பகல் ஒரு மணியளவில் சூரியன் முழுமையாக மறைக்கப்பட்டதோடு, வட்டவடிவமான ஒளிக்கீற்றுக்களைக் காண முடிந்தது. கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் பல் வேறு சாதனங்கள் மூலம் சூரிய கிரகணத்தைப் பார்த்து ரசித்தனர்.

பலர் கண்களுக்கு விசேட கண்ணாடிகளைப் பயன்படுத்தியதோடு வீடியோ படம் எடுத்ததைக் காணக் கூடியதாக இருந்தது. சூரிய கிரகணத்தையிட்டு கோயில்களில் விசேட பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பள்ளிவாசல்களில் நேற்று சூரிய கிரகணத் தொழுகைகளும் விசேட மார்க்கச் சொற்பொழிவுகளும் இடம்பெற்றன. பாடசாலைகளில் மாணவர் வரவு மிகவும் குறைவாகவே இருந்தது.

இந்த சூரிய கிரகணம் தமிழகத்தில் 1.11 மணிக்கு உச்சத்தை அடைந்தது. அந்த நேரத்தில் கன்னியாகுமரி பகுதியில் சில வினாடிகள் சூரியன் முழுமையாக மறைந்து காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பின்னர் சூரியனை மறைத்த நிலவு மெல்ல விலக ‘ரிங் ஆப் பயர்’ என்று அழைக்கப்படும் அரிய நிகழ்வு ஏற்பட்டது.

ராமேஸ்வரம் மற்றும் தனுஷ் கோடியிலும் கிரகணம் நன்கு தெரிந்தது. திருவனந்தபுரம், நெல்லை, நாகர்கோவில், மதுரை, தஞ்சை, நாகபட்டனம் ஆகிய பகுதிகளில் பத்து நிமிடங்கள் வரை காண முடிந்தது. சூரியனை, சந்திரன் மறைக்கும் இந்த வானியல் நிகழ்வு தமிழகத்தில் 11.05க்கு துவங்கி பிற்பகல் 3.15க்கு முடிவடைந்தது.

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணமான இது வானில் நடக்கும் மிக அரிய நிகழ்வான வளைய சூரிய கிரகணம். காலை 10.44 மணிக்கு மத்திய ஆபிரிக்காவில் இருக்கும் கென்யாவில் கிரகணம் தொடங்கியது. மாலையில் சீனாவில் உள்ள மஞ்சள் கடலில் கிரகணம் முடிவடைகிறது.

இந்தியாவில் முதலில் திருவனந்தபுரத்தில் கிரகணம் தெரிய ஆரம்பித்து மதுரை போன்ற தென் மாட்டங்களிலும் கிரகணத் தினை நன்றாக காண முடிந்தது. கன்னி யாகுமரி, தனுஷ்கோடி, கடற்கரை பகுதிகளில் இந்த நிகழ்வை 90 சதவிகிதத்திற்கும் அதிகமாக பார்த்தனர். மாலைதீவில் சுமார் 11 நிமிடங்களுக்கு கிரகணம் தெரிந்தது. இதனால் ஆராய்ச்சியின் நிமித்தம் அங்கு விஞ்ஞானிகள் குவிந்திருந்தனர்.

முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சரும், ஜனாதிபதி வேட்பாளருமான முஸ்தபா,சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு

ballot-muthaffa.jpgமுன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சரும், ஜனாதிபதி வேட்பாளருமான, மயோன் முஸ்தபா, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிக்க முன்வந்துள்ளார். இந்த ஆதரவு தொடர்பில் அவர் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் அறிவித்தார்.

இதேவேளை, அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் சேகு இஸ்ஸதீன் நேற்று காலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன் போது அவர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஜனாதிபதியின் ஆலோசகராக கடமையாற்றிய நசீர்; அகமட்; ஜெனரல் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
 

தேர்தலில் போட்டியிடும் பிக்கு வேட்பாளர் ஜனாதிபதியை ஆதரிக்க முடிவு

himi.jpgஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ட்டிரக்டர் சின்னதில் போட்டியிடும் ‘ஜனசெத பெரமுன’ கட்சியின் வேட்பாளர் வண. வத்தறமுல்ல சீலரத்ன தேரர் ஜனாதிபதியை ஆதரிக்க முன்வந்துள்ளார். பத்தரமுல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுத்த ஜனாதிபதிக்கு எதிர்வரும் 26ம் திகதி நன்றிக்கடன் செலுத்த வேண்டும்.

ஜனசெதபெரமுன ஜனாதிபதிக்கு தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் மனோகணேசன், ரவூப் ஹக்கீம் போன்றோர் நாட்டை துண்டாட முனைபவர்களுடன் சில பிக்குகள் ஆதரவு வழங்குவது துரதிர்ஷ்ட வசமானதெனக் கூறினார்.

ஜனாதிபதியின் தலைமையின் கீழ் முப்படைகள், பொலிஸ், சிவில் பாதுகாப்பு படையினரது வீரமிக்க செயற்பாடுதான் பயங்கரவாதத்தை முறியடிக்க உதவியது.

அதேநேரம் ராஜபக்ஷ சகோதரர்க ளின் அயராத உழைப்பும் பயங்கரவாதத்தை ஒழிக்க பேருதவி புரிந்துள்ளது. உள்ளூர், வெளிநாட்டுச் சக்திகள் இன்னும் நாட்டை அழிக்கவே முயன்று கொண்டிருக்கின்றன வென்றும் சீலாரெட்ன தேரர் சுட்டிக் காட்டினார்.

கங்கண சூரிய கிரகணம் இன்று யாழ்ப்பாணத்தில் பார்க்கமுடியும்

sun.jpgஇவ்வாண் டிற்கான முதலாவது கங்கண சூரிய கிரகணத்தை இன்று பார்க்கக் கூடியதாக இருக்கும். வடபகுதி மக்கள் இதனை தெளிவாக பார்க்கக் கூடியதாக இருக்குமென ஆதர் சி கிளார்க் நிலையம் அறிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 1.20 மணி தொடக்கம் 1.30 மணிவரை 10 நிமிடங்களும் 09 செக்கன்கள் தோன்றவுள்ள இக்கிரகணத்தை பொது மக்கள் வெற்றுக்கண்களால் பார்க்கக்கூடாது என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். யாழ்ப்பாணம், தலை மன்னார், அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் சூரிய கிரகணம் தெளிவாத தோன்றவுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் கிரகணத்தை பார்ப்பதற்கான ஏற்பாடுகளை ஆதர் சி. கிளாக் ஆய்வு நிலையம் செய்துள்ளது.

கிரகணத்தை பார்க்கக் கூடியவர்கள் வெற்றுக்கண்களால் பார்ப்பதை தவிர்க்குமாறும் பாதுகாப்பான உரிய முறையை பயன்படுத்துமாறும் விஞ்ஞானிகள் அறிவுறித்தியுள்ளனர். இந்த ஆண்டின் சூரிய கிரகணம் மத்திய ஆபிரிக்கப் பகுதியில் ஆரம்பித்து உகண்டா, கென்யா, சோமாலியா வழியாக இந்து சமுத்திரப் பகுதியின் ஊடாக பயணிக்கவுள்ளது.

மாலைதீவு, தென் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், மியன்மார், சீனா ஆகிய நாடுகளிலும் தென்படும் என்று கூறப்பட்டுள்ளது. இலங்கையில் பூரண சூரிய கிரகணம் 20-06.1955 அதாவது 55 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்படவுள்ளது. இதேவேளை மேல்மாகாணம் போன்ற பிரதேசங்களில் தென்பட வாய்ப்பே இல்லையெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்க் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் நேற்று முடிவு

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் கைதிகளில் பெரும்பாலானவர்கள் தமது உண்ணாவிரதப் போராட்டதைக் கைவிட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் டி. ஆர். டி. சில்வா தெரிவித்தார். மெகசின் சிறைச்சாலையில் உள்ள சுமார் 74 கைதிகள் மாத்திரம் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்களும் தமது போராட்டத்தைக் கைவிடத் தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை மேற்படி கைதிகளில் உரிய சாட்சியம் எதுவுமின்றி உள்ள சுமார் 600 பேர் அடுத்த வாரம் விடுவிக்கப்படுவர் என சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் ஏற்கெனவே அறிவித்துள்ளார். ஆனால், சில அரசியல்வாதிகளின் தூண்டுதலால் திடீரென இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்தார். அவர்களை விடுதலை செய்யவோ வழக்குத் தொடரவோ தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த பிரதி நீதி, மறுசீரமைப்பு அமைச்சர் வி. புத்திரசிகாமணி; நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு சட்ட மா அதிபர் திணைக்களத்தினூடாக துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கைதிகள் திடீரென உண்ணாவிரதம் நடத்தியதால் அந்த நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாக கூறினார்.

சந்தேகத்தின் பேரில் கைதான ஒரு பகுதியினர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தச் செயற்பாட்டை குழப்பாதிருந்தால் விரைவில் தமிழ்க் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டுவிடும் என்றும் கூறினார்.

தங்களை விடுதலை செய்யவோ தங்களுக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்குமாறு கோரி கொழும்பு மெகசின், சீ. ஆர். பி., வெலிக்கடை, யாழ்ப்பாணம், அநுராதபுரம், கண்டி, மட்டக்களப்பு அடங்கலாக நாட்டின் பல்வேறு சிறைகளில் உள்ள சுமார் 577 தமிழ்க் கைதிகள் கடந்த 5ஆந் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.  இவர்களுடன் தொடர்ச்சியாக நடத்திய பேச்சுவார்த்தைகளையடுத்து உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்தார். நாடுபூராவும் 750 தமிழ்க் கைதிகள் அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 670 பேர் சந்தேகத்தின் பேரில் கைதானவர்களாகும். இவர்களுக்கு எதிரான வழக்குகளை துரிதப்படுத்தவோ விடுவிக்கவோ சட்ட மா அதிபர் நடவடிக்கை எடுத்து வருகிறார். எனவே, ஒரு சில அரசியல் கட்சிகளின் தூண்டுதல்களுக்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பதில் எதுவித பயனும் ஏற்படாது எனவும் ஆணையாளர் நாயகம் கூறினார்.

திஸநாயகம் விடுதலை செய்யப்பட்டதற்கு ஊடகவியலாளர் பாதுகாப்பு சமூகம் வரவேற்பு

tissanayagam.jpgசிறையி லிருந்து சிரேஷ்ட ஊடகவியலாளர் திஸநாயகம் பிணையில் விடுதலை செய்யப்பட்டதற்கு ஊடகவியலாளர் பாதுகாப்பு சமூகம் வரவேற்றுள்ளது.எனினும் அவர் நாட்டை விட்டு வெளியேறக் கூடாதென்பது உட்பட கடும் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளமையை இட்டு தாங்கள் வருத்தமடைவதாகவும் பாதுகாப்பு சமூகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையில் திஸநாயகம் விடுவிக்கப்பட்டது மட்டுமல்லாமல், விசாரணையின்றி தேங்கிக்கிடக்கின்ற இதுபோன்ற ஏனைய வழக்குகளையும் விசாரிக்க உத்தரவிடுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அந்த அமைப்பு கோரியுள்ளது.

கடந்த வருடம் கொலை செய்யப்பட்ட “சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் வழக்கு விசாரணை இன்னும் கிடப்பில் கிடக்கிறது. ஒரு வருட காலமாகியும் இதுவரை எவ்விதமான முன்னேற்றமும் அந்த வழக்கில் காணப்படவில்லை. எனவே இலங்கை அரசாங்கம் இது தொடர்பில் கண்காணிக்க வேண்டுமென்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

திருமணத்துக்குப் பின் டென்னிஸிலிருந்து விலகல்: சானியா

sania-mirza.jpgதிருமணத் துக்குப் பின் டென்னிஸிலிருந்து விலகவிருப்பதாக பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

சானியாவுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவரது இளவயது நண்பரான சோஹப் மிர்சாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. எனினும் திருமணம் எப்போது நடைபெறும் என அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், திருமணத்துக்குப் பின் டென்னிஸ் விளையாடும் எண்ணமில்லை என சானியா தெரிவித்தார். எனினும் திருமணத்துக்கு சிறிது காலம் ஆகலாம் என்றார் அவர். விளையாடுவதா, வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க சானியாவுக்கு முழு சுதந்திரம் உண்டு என அவரை மணக்கவிருக்கும் சோரப் முன்னதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த மாத முற்பகுதியில் முதற்கட்டமாக 99 பேருக்கு மெளலவி ஆசிரியர் நியமனம்

நாடு பூராவும் உள்ள பாடசாலைகளில் நிலவும் மெளலவி ஆசிரியர் வெற்றிடங்களுக்கு 615 பேரைப் புதிதாக நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. முதற் கட்டமாக அடுத்த மாத முதற்பகுதியில் 99 பேருக்கு மெளலவி ஆசிரியர் நியமனம் வழங்க உள்ளதாகக் கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் மொஹம்மட் தம்பி தெரிவித்தார்.

இவர்களுக்கான கடிதங்கள் கல்வி வலயங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதோடு நேர்முகப் பரீட்சையில் தெரிவான ஏனைய விண்ணப்பதாரிகளுக்கு இரண்டாம் கட்டத்தின் போது நியமனம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங் களுக்கு ஏற்ப இவர்கள் நியமிக்கப்பட உள்ளதாகக் கூறிய அவர், சிங்களமொழி மூலம் 11 பேருக்கான வெற்றிடம் காணப்படுவதாகக் கூறினார். ஆனால் இந்த வெற்றிடங்களை நிரப்பத் தகுதியானவர்கள் இல்லை எனவும் அறியவருகிறது. மெளலவி ஆசிரியர் வெற்றிடங்களுக்குப் புதிதாக ஆசிரியர்களை நியமிப்பதற்காக 194 விண்ணப்பதாரிகள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டனர். அதிலே முதற்கட்டமாக 99 பேர் தெரிவானதோடு ஏனையவர்கள் அடுத்த கட்டத்தின் போது மெளலவி ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

ததேகூ உறுப்பினர்கள் நாடு திரும்பியதும் அறிக்கை சமர்ப்பிப்பு

tna-article-5.pngதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்கள் நால்வர் இன்று புதுடில்லியில் இந்திய அரசுத் தலைவர்களையும் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசுகின்றனர். நாளை சென்னை திரும்புவர். மறுநாள் கொழும்பு திரும்பிய பின்னர் இந்திய பேச்சுக்கள் தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை வெளியிடுவர் என இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று முன்தினம் மாலையும்,ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் நேற்று விடியற்காலையிலும் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றனர். நேற்று புதன்கிழமை முன்னிரவு சென்னையிலிருந்து அவர்கள் நால்வரும் புதுடில்லி சென்றனர்.

இன்று புதுடில்லியில் இந்திய அரசுத் தலைவர்களையும் மூத்த அதிகாரிகளையும் அவர்கள் சந்தித்து இலங்கைத் தமிழர் நிலைமை, தற்போதைய இலங்கையின் அரசியல் போக்கு ஆகியவை குறித்துப் பேசுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று புதுடில்லி வெளிவிவகார அமைச்சின் ‘சவுத் புளொக்’ கில் பல தரப்பினரையும் சந்தித்துப் பேச்சு நடத்திய பின்னர் நாளை காலையில் அவர்கள் சென்னை திரும்புவார்கள் என்றும் அதன் பின்னர் அடுத்த நாள் சனிக்கிழமை அவர்கள் கொழும்பு வருவார்கள் என்றும் கூறப்பட்டது.

தாம் கொழும்பு திரும்பிய பின்னர் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக இலங்கைத் தமிழ் மக்களுக்கு சில விடயங்களைத் தெளிவுபடுத்தி விளக்கும் வகையில் விரிவான அறிக்கை ஒன்று வெளியிடப்படும் எனக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

 வீரகேசரி 1/14/2010

ஹைட்டி பூகம்பத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தையும் தாண்டுகிறது

haiti-earthquake.jpgகரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைட்டி தீவுகளில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சம் பேர்களையும் கடந்துள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து இடிபாடுகளில் இறந்த உடல்கள் சிக்கியுள்ளன. மேலும் இடிபாடுகளில் எவ்வள்வு பேர் உயிருடன் சிக்கியுள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை.

சேதமும், உயிர்ழப்பும் கற்பனைக்கு எட்ட முடியாத அளவில் உள்ளதால் ஏழை நாடான ஹைட்டியிற்கு ஐ.நா. ரூ. 500 கோடி நிவாரணம் அளித்துள்ளது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குவியல் குவியலாக பிணங்கள் சாலைகள் எங்கும் குவிக்கப்பட்டுள்ளன.

ரிக்டர் அளவு கோலில் 7.3 என்று பதிவான இந்த நில நடுக்கத்தில் நாடாளுமன்ற கட்டிடம் பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டிடங்கள் தரைமட்டமாயின. பல நாடுகளிலிருந்தும் மீட்புப் பணிகளும், உதவிகளும் ஹைட்டி நோக்கி வந்தவண்ணம் இருக்கின்றன.