செய்திகள்

செய்திகள்

செய்திகள்

பொன்சேகாவின் குற்றச்சாட்டு குறித்து நவநீதம்பிள்ளைக்கு இன்று விளக்கம்

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு தெளிவுபடுத்துவதற்காக மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ சேவை அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அடங்கலான குழு நேற்று (08) ஜெனீவா பயணமானதாக மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ சேவை அமைச்சு தெரிவித்தது. சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று ஐ. நா. மனித உரிமை பேரவை ஆணையாளர் நவநீதம் பிள்ளையை சந்தித்து உண்மை நிலைமையை தெளிவுபடுத்த உள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைய வந்த புலிகள் இயக்கத் தலைவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோடாபய ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஆங்கில வாராந்தப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டு காரணமாக சர்வதேச மட்டத்தில் இலங்கைக்குப் பல்வேறு அழுத்தங்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்தது.

இந்த நிலையில் மேற்படி குற்றச்சாட்டு தொடர்பில் ஐ. நா. மனித உரிமைப் பேரவை ஆணையாளருக்கும் அகதிகளுக்கான ஐ. நா. உயர் ஸ்தானிகர் நெதோனியோ குட்டரயையும் சந்தித்து உரையாட உள்ளார். தனது விஜயத்தின்போது அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அடுத்த மாத முதல் வாரத்தில் நடைபெற உள்ள ஐ. நா. மனித உரிமை விசேட செயலமர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் கலந்துரையாட உள்ளார். ஐ. நா. மனித உரிமை பேரவை விசேட செயலமர்வில் பொன்சேகாவின் குற்றச்சாட்டு தொடர்பில் விவாதிக்கப் படலாம் என அறியவருகிறது. இந்த அமர்வில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கலந்துகொண்டு இலங்கை அரசாங்கம் சார்பாக உத்தியோக பூர்வ அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.

ஜெனீவாவில் இரு நாட்கள் தங்கியிருக்கும் அமைச்சர் அகதிகளுக்கான ஐ. நா. உயர் ஸ்தானிகரை சந்தித்து இடம்பெயர்ந்த மக்கள் வெற்றிகரமாக மீள்குடியேற்றப்படுவது குறித்தும் தெளிவுபடுத்த உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது-

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரத் பொன்சேகா தெரிவித்தது போன்ற எதுவித சம்பவமும் இடம்பெறவில்லை என இலங்கை அரசாங்கம் ஏற்கனவே மறுத்திருந்தது தெரிந்ததே.

சரத் பொன்சேகா கைது

sarath.jpgஇலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா சற்று நேரத்திற்கு முன்னர் ராஜகிரிய மாவத்தையில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொன்சேகா இராணுவ காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்திற்கு எதிராக செயற்பட்டார் என்ற குற்றத்திற்காகவே ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசத்திற்கு மகுடம் கண்காட்சி: 12ம் திகதி வரை

deyatakirula_logo.jpgகண்டி பள்ளேகலவில் தற்போது நடைபெற்றுவரும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை பார்வையிடும் இறுதி திகதி எதிர்வரும் 12ம் திகதி வரை நீடிக்கப்பட்டிருப்பதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க நேற்று (7) மாலை அறிவித்துள்ளார்.

கடந்த 4ம் திகதி முதல் 10ம் திகதி வரையும் மேற்படி கண்காட்சி இடம்பெறுவதாக அறிவித்திருந்த போதி லும் பொதுமக்களின் வேண்டு கோளுக்கி ணங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டியவினது ஆலோசனையின் பேரில் இந்த திகதியில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

வடக்கு அரச நிறுவனங்களில் மும்மொழி பெயர்ப் பலகை – ரூ. 75 இலட்சம் அமைச்சு ஒதுக்கீடு

வடக்கிலுள்ள சகல அரசாங்க நிறுவனங்களிலும் மும்மொழிகளிலும் பெயர்ப் பலகைகளை தொங்க விடுவதற்காக நிதி ஒதுக்கியுள்ளதாக அரசியல் விவகார தேசிய நல்லிணக்க அமைச்சர் நேற்று தெரிவித்தது.

இதன்படி வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகள் பொருத்தப்பட்டு வருவதாக அமைச்சு செயலாளர் திருமதி எம். எஸ். விக்ரமசிங்க தெரிவித்தார்.

மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகளை பொருத்த 75 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சகல அரச நிறுவனங்களிலும் மும் மொழிகளிலும் பெயர்ப் பலகைகளை பொருத்துவதில் வட மாகாணத்திலுள்ள மாவட்ட செயலாளர்கள் மிகவும் கரிசனை யாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை வட மாகாணத்தில் உள்ள அரச ஊழியர்களுக்கு இரண்டாம் மொழியான சிங்களம் மொழியை கற்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளதாக செயலாளர் தெரிவித்தார். நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள அரச நிறுவனங்களிலும் மும்மொழிகளிலும் பெயர்ப் பலகைகளை தொங்கவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவில் ஜனாதிபதிக்கு கலாநிதி பட்டம்

mr-rusya.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று (06) ரஷ்யா போய்ச் சேர்ந்தார். ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர் முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக ரஷ்யா செல்லும் ஜனாதிபதி இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் நாளை (08) ரஷ்ய ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இதேநேரம், 300 மில்லியன் அமெரிக்க டொலருக்கான இருதரப்புக் கடன் உடன்படிக்கையொன்றிலும் ஜனாதிபதி கைச்சாத்திடுகின்றார். இரு நாடுகளுக்கு மிடையிலான இரு தரப்பு உடன்படிக்கைகள் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காகக் கைச்சாத்திடப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ரஷ்ய விஜயம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஜனாதிபதிக்கு ரஷ்ய மக்கள் நட்புறவு பல்கலைக்கழகத்தினால் நேற்று மாலை கெளரவ டொக்டர் பட்டம் வழங்குவதற்கு ஏற்பாடாகியிருந்தது. உலக சமாதானத்தைப் பேணி வருவதற்காகவும், பயங்கரவாதத்திற்கெதிரான வெற்றிகரமான செயற்பாட்டுக்காகவும் ஜனாதிபதிக்குக் கெளரவ டொக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி வீ. லெவ்றோவ் விடுத்திருந்த அழைப்பினை ஏற்றே ஜனாதிபதி ராஜபக்ஷ ரஷ்யா சென்றிருக்கிறார். மக்கள் நட்புறவு பல்கலைக்கழகத்தின் ஐம்பதாவது ஆண்டு விழாவில் பங்குபற்றுமாறு ஜனாதிபதி திமித்றி மெத்வதேவின் சார்பிலேயே ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

1995 ஆம் ஆண்டிலிருந்து சிறப்பு டொக்டர் பட்டங்களை வழங்கி வரும் இந்தப் பல்கலைக்கழகம் கல்வி, விஞ்ஞான துறைகளில் சிறந்த இலக்குகளை எய்தியோருக்கும் உலக சமாதானத்தைப் பேணி வரும் உலகத் தலைவர்களுக்கும் இதுவரை பட்டங்களை வழங்கியுள்ளது. இதுவரை உலகளாவிய ரீதியில் ஐந்து ஜனாதிபதிகளும் இரண்டு பிரதமர்களும் இந்தப் பட்டங்களைப் பெற்றுள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் ஐம்பதாவது ஆண்டு விழாவில் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு சிறப்பு டொக்டர் பட்டம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பங்குபற்றவென சுமார் 100 இற்கும் அதிகமான நாடுகளிலிருந்து 6000 இற்கும் அதிகமானோர் அழைக்கப்பட்டுள்ளார்கள்.

இன்று (07) பிற்பகல் மூன்று மணிக்கு பல்கலைக்கழகத்தின் தலைவரைச் சந்திக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ, மாலை 3.30 இற்கு மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெறும் சுதந்திரதினக் கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்வார்.

நாளை (08) பிற்பகல் 2 மணிக்கு ரஷ்ய ஜனாதிபதி திமித்றி மெத்வதேவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பார். அதேவேளை 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கான உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த், சர்வதேச வர்த்தக, ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், கைத்தொழில் அபிவிருத்தி, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரும் ஜனாதிபதியுடன் ரஷ்யா சென்றுள்ளனர்.

ரி.எம்.வி.பி கட்சி தனித்துப் போட்டி?

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்துப் போட்டியிடுவதென நேற்று கொள்கையளவில் தீர்மானித்துள்ளது. கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நேற்று மாலை கூடிய கட்சியின் உயர்பீடம் இந்த முடிவை எடுத்துள்ளது.

எதிர்வரும் 10ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை முதலைச்சர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்பே இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென கட்சியின் பேச்சாளர் அஸாத் மெளலானா தெரிவித்தார்.

தேசத்திற்கு மகுடம் கண்காட்சி: 3வது நாளான நேற்று வரை 20 இலட்சம் பேர் கண்டுகளிப்பு

deyatakirula_logo.jpgகண்டி பள்ளேகலயில் நடைபெறும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின் மூன்றாவது நாளான நேற்று வரை சுமார் 20 இலட்சம் பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனரென நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

தேசத்திற்கு மகுடம் கண்காட்சி சுதந்திர தினத்தன்று (4 ஆம் திகதி) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

60 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியில் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை விளக்கும் சுமார் 1000 காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் முண்டியடித்து கண்காட்சியைப் பார்வையிடுகின்றனர். பாதுகாப்பு தொடர்பான காட்சிக் கூடங்களில் மக்களின் ஆர்வம் கூடுதலாக இருப்பதைக் காண முடிகிறது.

இதனையிட்டு கண்டி நகரிலிருந்து விசேட பஸ் சேவைகள் (24 மணி நேரமும்) நடத்தப்பட்டு வருகின்றன. இக் கண்காட்சி காலை 9 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரை திறந்திருக்கும்.

வவுனியா நலன்புரி முகாம் முன்பள்ளி சிறுவர்களுக்கு 18 நடமாடும் நூலகம்

ஜப்பானிய பிரஜைகளும் கொழும்பில் இயங்கும் ஜப்பானிய நிறுவனத்தினரும் இணைந்து வவுனியா நலன்புரி முகாம்களிலுள்ள முன்பள்ளிச் சிறுவர்களுக்கென 18 நடமாடும் நூலகங்களை வழங்குகிறார்கள்.

சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் உதவியுடன் இந்த நடமாடும் நூலகங்கள் வழங்கப்படுகின்றன. நாளை (08) திங்கட்கிழமை இந்த நூலகங்கள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படுவதாக ஜப்பானிய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறியிடம் இந்த நூலகங்கள் கையளிக்கப்படும். ஜப்பானிய மக்களின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இந்த நூலகங்கள் கையளிக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பதைப் பற்றி ஜப்பானிய மக்கள் மத்தியில் கலந்துரையாடியதில் நடமாடும் நூலகம் வழங்கும் திட்டம் சிறப்பானதெனத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் பிரசாத் – பிரி. உதயா பிரதம களப்பொறியியலாளர்

prasard.jpgபிரிகேடியர் பிரசாத் சமரசிங்க இராணுவப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நாளை திங்கட்கிழமை முதல் இராணுவப் பேச்சாளருக்கான கடமையை அவர் பொறுப்பேற்கவுள்ளார்.

இராணுவப் பேச்சாளராக இருந்த பிரிகேடியர் உதய நாணயக்கார இராணுவத்தின் பிரதம களப் பொறியியலாளராக (Chief Field Engineer) நியமிக்கப்பட்டுள்ளதுடன் திங்கட் கிழமை முதல் அவரும் கடமையை பொறுப்பேற்கவுள்ளார்.

முன்னர் இராணுவப் பேச்சாளராக இருந்த பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க, லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் இராணுவ ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தார். லண்டனில் அவருக்கு வழங்கப்பட்ட நியமனத்தில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே பிரிகேடியர் உதய நாணயக்கார இராணுவப் பேச்சாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

லண்டனிலிருந்து இலங்கை வந்துள்ள பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க இராணுவத்தின் பிரதான தொலைத் தொடர்பு அதிகாரியாகவும் சமிக்ஞை அதிகாரியாகவும் நியமனம் பெற்றிருந்தார். தற்போது அவர் வகிக்கும் பதவிக்கு மேலதிகமாக இராணுவப் பேச்சாளர் நியமனமும் வழங்கப்ப ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐ.ம.சு முவுடன் இணைந்து போட்டியிட இ.தொ.கா முடிவு

பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. மலையக மக்களின் எதிர்கால நலன்கருதியும் அபிவிருத்தியைக் கருத்திற் கொண்டும் அரச தரப்புடன் இணைந்து போட்டியிடுவதெனத் தீர்மானித்துள்ளதாக காங்கிரஸின் தலைவரும் தேச நிர்மாண, தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் இருந்தபோதிலும், மக்களின் எதிர்கால நன்மை கருதி அரசாங்கத்துடன் இணைந்து களமிறங்குவதாகப் பிரதி அமைச்சர் கூறினார். இந்தத் தேர்தலில் பழையவர்களுடன் பல புதிய முகங்களும் அறிமுகமாகவுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்பே போட்டியிடுவது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் எஸ். விஜேகுமாரன் தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கட்சி முக்கியஸ்தர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருவதால் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக விஜேகுமாரன் குறிப்பிட்டார். மேலும், மலையகத்தில் கட்சி தாவியவர்கள் போட்டியிட்டு வெல்வதா, தேசியப் பட்டியலில் இடம் கோருவதா என்பதைச் சிந்தித்து வருவதாகத் தெரியவருகிறது.