செய்திகள்

செய்திகள்

செய்திகள்

மட்டக்களப்பில் பெரும்போக நெல் அறுவடை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக அறுவடை இடம்பெற்று வருகையில் நாளுக்கு நாள் நெல்லின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரசு உத்தரவாத விலையினை வெளியிட்டு நெல்லினைக் கொள்வனவு செய்ய வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போகச் செய்கை சிறிதுகாலம் மழை இல்லாது பாதிக்கப்பட்டதுடன், பின்னர் அதிக மழை பெய்ததாலும் பாதிக்கப்பட்டது. இறுதி நேரத்தில் கபில நிறத்தத்தி, இலைச்சுருட்டி புழு போன்ற பூச்சித் தாக்கத்தினால் பாரிய பாதிப்பு ஏற்பட்ட நிலையில் கூடுதலாகச் செலவு செய்து கிருமி நாசினிகளைப் பயன்படுத்தினர்.

இரண்டாயிரத்து முந்நூறு ரூபாவிற்குக் கொள்வனவு செய்யப்பட்ட நீட்டு வெள்ளை இன நெல் தற்போது ஆயிரத்து அறுநூறு ரூபாவிற்குக் கொள்வனவு செய்யப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல்லின் விலையை வியாபாரிகளே தீர்மானிக்கும் நிலை இன்று உள்ளதால் வியாபாரிகள் தங்களது தேவைக்கேற்ப நாளுக்கு நாள் குறைத்துகொண்டு செல்கின்றனர்.  இதனைத் தடுத்து நிறுத்தி விவசாயிகளைப் பாதுகாக்க அரசு தலையிட்டு உத்தரவாத விலையினை வெளியிட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீள்குடியேற்றப்பட்ட பகுதி பாடசாலைகளுக்கென தளபாடங்கள் சீருடைகள் அனுப்பி வைப்பு

வடக்கில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படும் பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கென 34 லட்சம் ரூபா பெறுமதியான தளபாடங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.

மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் சுமார் 50,000 மாணவர்களுக்குத் தேவையான 14 மில்லியன் ரூபா பெறுமதியான சீருடைத் துணிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

1000 வாங்குகளும் 1000 கதிரைகளும் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் 1000 வாங்குகளும் 1000 கதிரைகளும் எதிர்வரும் 15 ஆம் திகதி அனுப்பி வைக் கப்படவுள்ளன. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்கள் மீளக்குடியமர்த் தப்பட்டுவரும் இவ்வேளையில் பாடசாலைகளும் உடனடியாக இயங்க வைக்க நடவடிக்கை எடுக்க ப்பட்டுள்ளது.

பாடசாலை உடனடியாக இயங்க வைக்க தளபாடப் பற்றாக்குறை பெரும் குறையாக இருப்பதை வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி கல்வி அமைச்சிடம் சுட்டிக்காட்டியிருந்தார். மேற்படி பாடசாலைகளுக்குரிய தளபாடங்களை உடனடியாக அனு ப்பி வைக்க நடவடிக்கை எடுக்கு மாறும் அவர் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவை கேட்டிருந் தார். இதற்கமைய தளபாடங்கள் சீருடைத் துணிகள் போன்றவற்றை கல்வி அமைச்சு அனுப்பிவைத் துள்ளது.

சரத் பொன்சேகா கைது விவகாரம்; சர்வதேச நாடுகள் தலையிட முடியாது

rohitha.jpgசரத் போன்சேகாவின் கைது விவகாரம் தொடர்பாக சர்வதேச நாடுகள் தலையிட முடியாதென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். உள்நாட்டு சட்ட விதிமுறைகளுக்கு அமையவே இக்கைது இடம்பெற்றிருப்பதனால் சர்வதேச சக்திகள் இது குறித்து அழுத்தம் கொடுக்க முடியாதெனவும் அமைச்சர் போகொல்லாகம சுட்டிக் காட்டினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ள அமைச்சர் அமைச்சில் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். எமது நாட்டைப் பொறுத்தவரை அனைவரும் சமமானவர்கள்.

ஒருவர் பிழை செய்தால் நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கமைய அவரை விசாரிப்பதற்கு முறையுண்டு. அந்தவகையில் சரத் பொன்சேகாவை கைது செய்திருப்பதற்கான காரணத்தை இராணுவத்தினர் தெளிவாக கூறியுள்ளனர். தான் கைது செய்யப்பட்டிருப்பதற்கான காரணத்தை சரத் பொன்சேகாவே நன்கு புரிந்து வைத்துள்ளார். இதுவரை எந்தவொரு நாட்டிடமிருந்தும் பொன்சேகாவின் கைது குறித்து ஒரு தொலைபேசி அழைப்பு கூட வரவில்லை.

சரத் பொன்சேகா என்பதற்காக இல்லை; நாட்டில் எவரும் சட்ட விதி முறைகளை மீறி நடந்தாலும் அவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது வழமையானதாகும். அதன்படியே, இக்கைது இடம்பெற்றிருப்பதாக அமைச்சர் போகொல்லாகம சுட்டிக்காட்டினார்.

எண்ணெய் எரிவாயு அகழ்வுக்கு ரஷ்யா ஒத்துழைப்பு

இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்குவதாக ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதியின் ரஷ்ய விஜயம் இலங்கைக்கு பல சாதகமான பிரதிபலன்களைப் பெற்றுத்தந்துள்ளதுடன் இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவையும் பலப்படுத்தியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவின் விசேட அழைப்பினை ஏற்று மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு ரஷ்யா சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று நாடு திரும்பினார்.

ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் இதுவாகும். பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதையடுத்து வேகமாக கட்டியெழுப்பப்பட்டு வரும் இலங்கையின் எதிர்கால அபிவிருத்திக்கு 300 மில்லியன் டொலர் நிதியை இவ்விஜயத்தின் போது ரஷ்யா கடனுதவியாக வழங்க இணங்கியுள்ளது.

அத்துடன் இலங்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்ச்சிக்கு ரஷ்யா ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ள மையும் இவ்விஜயத்தின் பாரிய வெற்றியாகும். இவ்வகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கு வதற்கு உலகின் பிரசித்திபெற்ற ரஷ்ய எரிவாயு நிறுவனமான ரஷ்ய கேஸ் ப்ரோம் நிறுவனம் முன்வந்துள்ளது.

இரண்டு நாடுகளுக்குமிடையில் ஊடகத்துறை சார் நவீன தொழில்நுட்பங்க ளைப் பரிமாறிக்கொள்வது தொடர்பில் விசேட ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள முடிந்துள்ளமையும் ஜனாதிபதியின் இவ் விஜயத்தின் போது பெற்றுக்கொள்ளப்பட்ட பிரதிபலனாகும்.

இலங்கையின் நற்பெயரை சர்வதேச மெங்கும் தெரிவிக்கும் மற்றுமொரு நிகழ்வும் இவ்விஜயத்தின்போது இடம்பெற்றுள்ளது. ரஷ்ய நட்புறவுப் பல்கலைக்கழகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கலாநிதிப் பட்டம் வழங்கி கெளரவித்தமையே அந்நிகழ்வாகும்.

உலக சமாதானத்திற்காக மேற்கொண்ட சேவைகள், பயங்கரவாதத்தை ஒழித்து கல்வி, கலாசாரம் உட்பட பல்வேறு துறைகளின் மேம்பாட்டிற்காக முன்னெடுத்த பாரிய சேவைகளுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் மேற்படி கெளரவ பட்டத்தை வழங்கியுள்ளது. இப்பட்டத்தைச் சுவீகரித்துக்கொண்ட உலகின் ஆறாவது அரச தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்பது குறிப்பிடத்தக்கது. இது இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் கிடைத்த கெளரவமாகும்.

அதேவேளை, உலகிற்கு சமாதானத்தைப் பெற்றுக்கொடுத்த ரஷ்ய அரச பரம்பரையை நினைவுகூரும் வகையில் அதன் ஞாபகார்த்தமாக தங்கத்தினாலான மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட கிரீடமொன்றை ரஷ்ய நட்புறவுப் பல்கலைக்கழகம் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

ரஷ்ய – இலங்கை நாடுகளுக்கிடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நிகழ்வாக இருநாட்டுத் தலைவர்களினதும் சந்திப்பைக் குறிப்பிட முடியும். இச்சந்திப்பின் போது இலங்கை ஜனாதிபதிக்குத் தம் மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி; இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகளுக்குப் பூரண ஒத்துழைப்பினை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரஷ்யாவுடனான நல்லுறவை மேலும் பலப்படுத்துவதே தமது எதிர்பார்ப்பாகுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விஜயத்தின் போது ரஷ்யாவின் வரலாற்று முக்கியத்துவமிக்க பல இடங்களை ஜனாதிபதி தலைமையிலான தூதுக் குழுவினர் பார்வையிட்டதுடன் ரஷ்யாவின் தேசபிதா லெனினின் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இராணுவ அதிகாரியொருவர் ஓய்வுபெற்ற ஆறு மாத காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க இராணுவ சட்டத்தில் இடம் – கெஹெலிய

sarath.jpgசரத் பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் விசாரிப்பதா அல்லது சாதாரண நீதிமன்றத்தில் விசாரிப்பதா என்பது குறித்து இராணுவ சட்டப் பிரிவு சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெற்ற பின்னரே தீர்மானம் எடுக்கும் என்று இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

பொன்சேகாவிடமிருந்து பெறப்படும் வாக்குமூலத்தை இராணுவ சட்டப் பிரிவினர் பரிசீலித்து அதனை சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அனுப்பி அது பெறப்பட்ட பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இராணுவத்தின் சட்ட விதிமுறைகளுக்கு அமையவே சரத் பொன்சேகா இராணுவப் பொலிஸாரால் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் கைது செய்யப்பட்டார் என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். எந்த ஒரு இராணுவ அதிகாரியோ அல்லது வீரரோ சேவையின் போது இராணுவ சட்டங்களை மீறினால் அவர் ஓய்வு பெற்று ஆறு மாத காலத்திற்குள் அவர் மீது இராணுவம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

இராணுவ சட்டத்தின் 57 பிரிவு தெளிவாக கூறுவதாக தெரிவித்த அமைச்சர், அந்த சட்டவிதி விதிமுறைகளுக்கு அமைவாகவே பொன்சேகா இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமை மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று பிற்பகல் நடைபெற்றது.

கொழும்பிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் :-

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாக இருந்தபோது இராணுவ விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரிலேயே பொன்சேகா கைதுசெய்யப்பட்டார். பாதுகாப்பு சபையானது ஒரு நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதில் உச்சமட்ட சபையாகும். முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி தலைமை வகிக்கும் இந்த பாதுகாப்பு சபையில் இராணுவ தளபதியாக இருந்தபோது பொன்சேகா பாதுகாப்பு சபையின் முன்னணி அங்கத்தவராக இருந்தவர். பாதுகாப்பு சபையின் உறுப்பினராக இருந்தபோது அரசுக்கு எதிரான அரசியல் கட்சிகளுடனும் அவர் தொடர்பு வைத்ததுடன் முக்கிய இரகசிய விடயங்களை பரிமாறிக்கொண்டிருந்திருக்கலாம்.

பாதுகாப்பு சபை உறுப்பினர் என்ற ரீதியில் இது அவர் செய்யக் கூடாத ஒன்றாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். சரத் பொன்சேகாவுக்கு வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்புகள் உள்ளனவா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில் :-சரத் பொன்சேகா சேவையில் இருந்தபோது அரசியல் கட்சிகளுடன் தொடர்பு வைத்துள்ளமை தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதுதவிர மேலும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த விசாரணைகள் முடிவுற்ற பின்னர் அது தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வெளிநாடுகளுடனான தொடர்புகள் தொடர்பில் விசாரணைகளுக்குப் பின்னரே எதுவும் கூறமுடியும் என்றும் குறிப்பிட்டார். சரத் பொன்சேகாவுடன் மேலும் பல இராணுவ மற்றும் சிவிலியன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் கைது செய்யப்படவுள்ளனர். இரகசிய பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுத் தேர்தல் ஏப்ரல் 8ஆம் திகதி

parliament.jpgபாராளு மன்றம் நேற்று நள்ளிரவு முதல் கலைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது.

இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும். வேட்புமனு தாக்கல் இம்மாதம் 19ம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை இடம்பெறும்.

அடுத்த பாராளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் 22ம் திகதி கூடுகிறது.

ஒட்டிசுட்டான் பிரதேச செயலகம் இன்று முதல் பழைய இடத்தில்

ஒட்டிசுட்டான், பிரதேச செயலகம் இன்று முதல் பழைய இடத்தில் இயங்குமென முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் திருமதி இமல்டா சுகுமார் தெரிவித்தார்.

இதுவரைகாலமும் திருமுருகண்டியில் இந்த அலுவலகம் இயங்கி வந்தது.  ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் இடம் பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரதேச செயலகத்தை பழைய இடத்தில் திறக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

96 தமிழ் கைதிகள் விடுதலை

புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 96 தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு 115 பேர் புனர்வாழ்வு அளிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக பிரதி நீதி அமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த பல தமிழ் கைதிகள் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

இதுவரை 431 தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதி அமைச்சர் சுமார் 200 கைதிகளே எஞ்சியிருப்பதாகத் தெரிவித்தார்.

‘தேசத்திற்கு மகுடம்’ இன்று நள்ளிரவுடன் முடிவு

deyatakirula_logo.jpgகண்டி பள்ளேகலவில் 04 ஆம் திகதி முதல் நடைபெற்றுவந்த ‘தெயடகிருள’ தேசத்திற்கு மகுடம் கண்காட்சி இன்று நள்ளிரவுடன் முடிவடைகின்றது.

கொழும்பு நகருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த தேசத்திற்கு மகுடம் கண்காட்சி 60 ஏக்கர் காணிப் பரப்பில் அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த 1000 கண்காட்சிக் கூடங்களை கொண்டுள்ளது.

இ.தொ.கா சார்பில் 9 வேட்பாளர்கள்

பொதுத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் ஒன்பது வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளதாக காங்கிரஸின் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் காங்கிரஸ் போட்டியிடவுள்ள நிலையில் ஒன்பது இடங்கள் தமக்காக ஒதுக்கப்பட்டிருப்பதாக பிரதியமைச்சர் கூறினார். இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதியமைச்சர்கள் முத்து சிவலிங்கம், எஸ். ஜெகதீஸ்வரன் ஆகியோர் போட்டி யிடுகின்றனர்.

இதன்படி காங்கிரஸ¤க்கு நுவரெலியா மாவட்டத்தில் மூன்று இடங்களும் பதுளையில் இரண்டு இடங்களும் மாத்தளை, இரத்தினபுரி, கண்டி, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் தலா ஓர் இடமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் சிவலிங்கம் கூறினார்.