செய்திகள்

செய்திகள்

செய்திகள்

மணிரத்தினம் வரமாட்டார்

indian-film.jpgபிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்தினம் கொழும்பில் ஜூன் மாதம் இடம்பெறவுள்ள சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் வைபவத்தில் கலந்துகொள்ளமாட்டார். சென்னையில் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்ட போது அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார். ராவணன் படத்தின் விசேட காட்சி ஒன்று அந்த நிகழ்வில் காண்பிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதை யாவரும் அறிவர். ஆயினும் தயாரிப்புக்குப் பின்னரான வேலைகள் பூர்த்தியடையும் வரை அந்தத் திரைப்படம் திரையிடப்படாது.

ராவணன் படம் ஜூனிலேயே தயாரித்து முடிக்கப்படும். நான் திரைப்பட விழாவில் கலந்துகொள்ளமாட்டேன் என்று மணிரத்தினம் கூறியதாக இந்தியா கிலிட்ஸ் தெரிவித்திருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் கலந்தகொள்வாரா என்று கேட்கப்பட்டபோது, அவரின் தீர்மானத்தில் தான் தலையிட முடியாது எனவும் அது அவரின் விருப்பம் என்றும் அதாவது பங்குபற்றுவதா இல்லையா என்பது அவரின் விருப்பம் எனவும் மணிரத்தினம் கூறியுள்ளார்.

ஹஜ் கடமைகளுக்கான முன்னேற்பாடு; ஐவர் கொண்ட குழு ஜனாதிபதியால் நியமனம்

hajj.jpgஹஜ் கடமைகளுக்கான முன்னேற்பாடு களைக் கவனிப்பதற்கு ஐந்து பேர் கொண்ட குழு ஒன்றை ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி, மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா, பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா, கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அஸாத் ஸாலி முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களப் பணிப்பாளர் வை. எம். எம். நவவி ஆகியோரே இந்தக் குழுவின் உறுப்பினர்களாவர்.

ஹஜ் ஏற்பாடுகள் சம்பந்தமாக சவூதி அரேபிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் பெளஸி நேற்று (10) சவூதி அரேபியா பயணமானார். ஏனைய நால்வரும் இன்று (11) இலங்கையிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளனர்

கிளிநொச்சி நீதி மன்றம் திறந்துவைக்கப்பட்டது

lawyer.jpgதற்காலிக கட்டடம் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் இன்று காலை 9:00 மணிக்கு குடியியல் மேன்முறையீட்டு மேல்நீதிமன்ற நீதிபதி ஜே. விஸ்வநாதனினால் திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி நீதிமன்றுக்கு சாவகச்சேரி, யாழ்ப்பாணம் ஆகிய நீதிமன்றங்களில் கடமையாற்றிய அலுவலர்கள் கடந்த முதலாம் திகதி முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இப்பிரதேசத்தில் சுமார் 30 வருட காலத்தின் பின்னர் இந்த நீதிமன்றம் இயங்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

வடக்கில் வீடமைப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் – மாங்குளத்தில் விமல் வீரவன்ஸ

vimal.jpgவடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிரந்தர வீடுகள் அமைக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்றும் இலங்கை வீடமைப்புத்திட்ட செயற்பாட்டில் தேசிய திட்டமொன்று வகுக்கப்படவேண்டும் என்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ஸ கூறினார். முல்லைத்தீவு மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

மாங்குளத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட காணியில் நேற்றுக் காலை அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றது. இந்த அலுவலகம் 10 மில்லியன் ரூபாசெலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.  இதேவேளை, துணுக்காய் பகுதியில் மீள்குடியேறிய மக்களை நேரில் சென்று பார்வையிட்ட விமல் வீரவன்ஸ், அவர்களின் குறைநிறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

500 முன்னாள் புலி உறுப்பினர்கள் விடுதலை

ltte_child_soldiers.jpgபுனர் வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 500 பேர் இவ்வாரம் விடுதலை செய்யப்பட்டு அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளத் தகுதி பெற்றவர்களே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளனர். புலிகள் வெற்றிகொள்ளப்பட்டு ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு கொண்டாடப்படவுள்ள படைவீரர் வாரத்தை முன்னிட்டே புனர்வாழ்வழிக்கப்பட்ட ஐனூறு பேர் விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

‘அரந்தலாவ கொலைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை’ – பிரதியமைச்சர் முரளிதரன்

karuna.jpgஅரந்தலா வையில் பெளத்த பிக்குகளும் சிவிலியன்களும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் தனக்கும் தொடர்பில்லையென பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

கண்டிக்கு நேற்று விஜயம் செய்த பிரதியமைச்சர் முரளிதரன், அஸ்கிரிய, மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துப் பேசும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

‘அரந்தலாவ பெளத்த குருக்கள் மற்றும் அப்பிரதேச சிவிலியன்கள் ஆகியோர்களினது கொலைச் சம்பவத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்புமில்லை. நான் அப்போது யாழ்ப்பாணத்தில் பிரபாகரனோடு செயலாற்றி வந்தேன்.’ ‘பொட்டு அம்மான், நியூட்டன், குமாரப்பா போன்றோரே இதனைச் செய்தனர்.

இந்த விடயம் இராணுவத்தினருக்கும் நன்கு தெரியும். வீணாக என்மீது பழி சுமத்தப்படுகிறது’ என்றும் அவர் தெரிவித்தார். பிரதி அமைச்சர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில் :-

1,63,000 பேர் அகதிகள் தற்போது அவர்களினது சொந்த இடங்களுக்கு மீள்குடியமர்த்தப் பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் ஏனைய வசதிகள் செய்யப் பட்டுள்ளன. எனினும் இவர்கள் நிரந்தரமான இயல்பு வாழ்க்கை யைப் பெறுவதற்கு அவர்களுக்கான அடிப்படை வசதிகளான குடியிருப்பு கள், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்தும் செய்துதர வேண்டும். ஆகவே இதற்காக சகல அமைச்சர்களிடமும் கலந்தாலோசித்து துரித நடவடிக்கை களை மேற்கொள்ளவுள்ளேன்.

அகதிகளாகவும் அநாதை களாகவும் உள்ள மக்களின் வாழ்வாதார சுபீட்சத்திற்காக தமிழ், முஸ்லிம், சிங்களமென்ற வேறு பாடின்றி பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நான் சமமான சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதியினதும் அரசாங்கத் தினதும் அமைச்சுகளினதும் உதவி கள் கிட்டும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமுமில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

“இந்திய திரைப்பட விழாவில் அமிதாப்பச்சன் ஒருநாள் மட்டும் என்றாலும் பங்கேற்பார்”

indian-film.jpgகொழும்பில் எதிர்வரும் ஜூன் மாதம் இடம்பெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவிற்கு பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கலந்துகொள்வாரெனவும் ஒருநாள் மட்டும் என்றாலும் அவர் பங்கேற்பார் எனவும் இலங்கை சுற்றுலா சபையின் உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார். சாருக்கானும் ஐஸ்வர்யாராயும் நிச்சயமாக கலந்துகொள்வார்கள். அமிதாப்பச்சனும் வருவார். ஒரு தினத்திற்கு என்றாலும் அவர் வருவார் என்று தன்னை இனம் காட்டவிரும்பாத அதிகாரி “எக்ஸ்பிரஸ்” செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார்.

ஜூன் 3-5 வரை இடம்பெறும் இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முழு அளவில் இடம்பெறுகின்றன. இந்த வைபவத்தை ஏற்பாடு செய்திருக்கும் “விஸ் கீராவ்ட் இன்ரர் நஷனல் என்ரர் ரெய்ன்மன்ட் பிரைவேட் லிமிட்டெட்டின்’ சுமார் 50அதிகாரிகள் ஏற்கனவே இங்கு பணியாற்றுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் நாட்டிலிருந்து மட்டுமே எதிர்ப்பு என்றும் ஏனைய மாநிலங்களிலிருந்து இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ் நாட்டில் வைகோ போன்ற அரசியல்வாதிகளிடமிருந்தே இந்த விழா தொடர்பாக எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்படுவதாகவும் ஆயினும் அவற்றைப் பொருட்படுத்தாமல் விடயங்கள் இடம்பெற்று வருவதாகவும் ஏனைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சவர்தேச இந்திய திரைப்பட விருது வைபவத்தை இங்கு நடத்துவதால் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறையை நாட்டில் அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்பாக அமையும் என்ற கருத்தை இலங்கை உல்லாசப் பயணசபை, இலங்கை மத்திய வங்கி மற்றும் ஏனைய நிறுவனங்கள் கொண்டுள்ளன. ஆனால், இந்த விழாவில் பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்பதை தமிழ்நாட்டிலுள்ள தமிழ்த் தேசியவாத சக்திகள் எதிர்க்கின்றன. 2007,2009 காலப்பகுதியில் வடக்கில் இடம்பெற்ற போரை நியாயப்படுத்துவதாக அமையும் என்று தமிழ்நாட்டின் தமிழ்த் தேசியவாத சக்திகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

மும்பையிலுள்ள அமிதாப் பச்சனின் இல்லத்தின் முன் தமிழர்கள் குழு ஆர்ப்பாட்டம் செய்ததையடுத்து எவரின் உணர்வுகளையும் தான் புண்படுத்தப் போவதில்லையெனவும் ஏற்பாட்டாளர்களுடன் கலந்தாராய்ந்த பின்னர் சகலராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்மானத்தை எடுக்கப்போவதாகவும் அமிதாப்பச்சன் கூறியிருந்தார். இதனையடுத்து திரைப்பட விருது விழாவில் அமிதாப் பச்சன் கலந்துகொள்ளமாட்டார் என்ற விதத்திலான ஊகங்களும் வெளிவந்தன.

அரச ஆஸ்பத்திரிகளில் 319 வகை மருந்துகளுக்கு தட்டுப்பாடு – விமானப்படை விமானங்கள் மூலம் மருந்து இறக்குமதி

drage.jpgஅரச வைத்தியசாலைகளில் தற்போது நிலவி வரும் மருந்து தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் வெளிநாட்டிலிருந்து மருந்துகளை இறக்குமதி செய்ய இலங்கை விமானப் படையினரின் விமானங்கள் பயன்படுத்தப்பட விருப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உடனடியாக மருந்துகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்டு இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான சரக்கு விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளனவெனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கடந்த காலங்களில் அரச வைத்திய சாலைகளில் மருந்துகளுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு தொடர்பாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும் பாதுகாப்புச் செயலாளரினதும் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து, இலங்கை விமானப் படையினரின் விமானங்களை பயன்படுத்தி தேவை யான மருந்துகளை உடனடியாக இறக்குமதி செய்யும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் இரண்டு வாரங்களினுள் அரச வைத்திய சாலைகளில் நிலவும் மருந்துகளுக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய முடியுமெனவும் சுகாதார அமைச்சு நம்பிடிக்கை தெரிவித்து ள்ளது.

அரச வைத்தியசாலைகளில் 319 வகையான மருந்துகளுக்கு தற்போது தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதில் 44 வகையான மருந்துகள் கப்பல் மூலம் இலங்கை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.  ஏனைய 27 வகை மருந்துகள் இலங்கை மருந்தக கவுன்சிலிலிருந்து விலைக்கு வாங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவற்றைத் தவிர்த்த ஏனைய மருந்துகள் இந்தியாவிலிருந்து உடனடியாக கொண்டுவரப்படவுள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானங்கள் மூலம் மருந்துகள் கொண்டு வரப்படவுள்ளமை இதுவே முதற்தடவை யென்பது குறிப்பிடத்தக்கது.

மின்னல் தாக்கி நால்வர் பலி

rain.jpgமின்னல் தாக்குதல் காரணமாக சனிக்கிழமை மட்டும் பெண் ஒருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

பொலநறுவை மெதிரிகிரிய பகுதியில் வயலில் வேலைசெய்து கொண்டிருந்த மூவரும் அநுராதபுரம் பகுதியில் வீதியில் சென்ற பெண் ஒருவருமே இந்த மின்னல் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்னரும் புசல்லாவை நயபனை பகுதியில் மின்னல் தாக்கி ஏழு பேர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நாட்டில் இடிமின்னல் தாக்குதல் தொடருமென்றும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் வானிலை அவதான நிலையம் மீண்டும் எச்சரித்துள்ளது.

இவ்வாண்டு இதுவரை 17 பேர் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

படையினர் நிலைகொண்டிருந்த இடங்களில் மக்களை மீளக் குடியமர்த்த படையினர் ஒத்துழைப்பு

srilanka-war.jpgவவுனியா வடக்கில் இன்று திங்கட்கிழமை 500 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்படவிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் படையினர் நிலைகொண்டிருந்த அரச கட்டடங்கள், தனியார் காணிகள் என்பவற்றில் பொது மக்களை மீளக்குடியமர்த்த படையினர் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அரச அதிபர் மேலும் கூறினார்.

அந்த வகையில் முதற் கட்டமாக பேயாடிகூழான்குளம் முகாம் அமைந்த பகுதியில் 65 குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர். இவர்களுள் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் தலா ஒருவர் இன்று திங்கட்கிழமை தமது சொந்த இடத்தை பார்வையிடுவதற்காக முகாம் அமைந்துள்ள பகுதிக்கு அழைத்துச் செல்லப்படவிருப்பதாகவும் அரச அதிபர் குறிப்பிட்டார்.

வவுனியா மாவட்டத்தின் சகல பிரிவுகளுக்கும் பொறுப்பான படையதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்ட விசேட கூட்டமொன்று கடந்த சனிக்கிழமை வவுனியா அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தின் போதே பாலமோட்டை, சேமமடு ஆகிய பகுதிகளில் இன்று திங்கட்கிழமை 500 குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதென தீர்மானிக்கப் பட்டதாகவும் அதனடிப்படையிலேயே, அவர்கள் தமது சொந்த இருப்பிடத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் அரச அதிபர் சார்ள்ஸ் கூறினார்.

அத்துடன் பெரியதம்பாணை, பரையநாளன்குளம், பிரம்மநாளன்குளம், கண்ணாட்டி, கணேசபுரம் ஆகிய இடங்களிலும் 500 குடும்பங்கள் விரைவில் குடியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இக் குடும்பங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இன்று திங்கட்கிழமை அவர்களது சொந்த இடங்களைப் பார்வையிடுவதற்காக அழைத்துச் செல்லப்படவிருப்பதாக அரச அதிபர் சார்ள்ஸ் மேலும் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ. எம். எஸ். சார்ள்ஸ் பாதுகாப்பு பிரிவினருடன் நடத்திய பேச்சுக்களின் பயனாக வவுனியா பூவரசன்குளம் விமானப் படை முகாம் அகற்றப்படுவதற்கான நடவடிக்கைகளை படையினர் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக் காட்டினார். மேலும் பிரப்பன்மடு பகுதியில் 25 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன. ரத்கத்தேகம பகுதிக்கும் பிறப்பன்மடு பகுதிக்கும் மின்சாரம் முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் மேலும் தெரிவித்தார்.

வவுனியா நிவாரணக் கிராமங்களில் தற்போது முல்லைத்தீவை சொந்த இடமாக கொண்ட 34 ஆயிரம் பேரும் கிளிநொச்சியை சொந்த இடமாக கொண்ட 34 ஆயிரம் பேரும் உள்ளனர். இவர்களுள் 17 ஆயிரம் பேர் எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவரெனவும் அரச அதிபர் குறிப்பிட்டார்.