செய்திகள்

செய்திகள்

செய்திகள்

முல்லைத்தீவில் இதுவரை 20,200 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளன.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த 28,473 குடும்பங்களில் 20,200 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 18ம் திகதி வரை இவர்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிபொருட்கள் அகற்றும் பணிகள் நிறைவடைந்ததும் ஏனையவர்களும் விரைவில் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர் எனவும் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னியில் சட்டவிரோத மதுபான விற்பனை.

வன்னியில் மீள் குடியேற்றப்பட்ட பகுதிகளில் கசிப்பு எனப்படும் கள்ளச் சாராயம் காய்ச்சும் தொழில்கள் நடைபெற்று வருகின்றமை பொலிஸாரினால் கண்பிடிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்பவர்களும் பிடிக்கப்பட்டு வருகின்றனர்.

வன்னியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்கள் மிள்குடியேற்றப்பட்டுள்ளதோடு அவர்களுக்கான உதவிப்பணம். மற்றும் வீடமைப்புப்பணிகள் என்பனவும் நடைபெற்று வரும் நிலையில் இச்சட்ட விரோத சாராயம் காச்சும் தொழிலினாலும், சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்பவர்களாலும் சமூகச் சீர்கேடுகள் ஏற்படத் தொடங்கியுள்ளமை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மதுபானங்களை சட்டபூர்வமாக விற்பனை செய்யும் வியாபார நிலையங்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வடமாகாண சபையை யாழ்ப்பாணத்தில் இயங்க வைக்க ஏற்பாடு

lanka.jpgவடக்கு மாகாண சபையை யாழ்ப்பாணத்தில் இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 தற்போது திருகோணமலையில் இயங்கும் மாகாண சபையைக் கிளிநொச்சிக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்கமைய மாகாண சபையின் சில திணைக்களங்கள் கிளிநொச்சிக்கு மாற்றப்பட்டிருந்த போதும் அனைத்து திணைக்களங்களையும் அவற்றின் அலுவலகங்களையும் கிளிநொச்சியில் இயங்கச் செய்வதற்குரிய போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் வடக்கு மாகாண சபையைக் கிளிநொச்சியில் இயங்க வைப்பதில் சிக்கலான நிலை தோன்றியது.

வடக்கின் தலைநகராக மாங்குளம் தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும் அங்கு மாகாண சபையை இயங்க வைப்பதற்குரிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நீண்டகாலம் செல்லுமென்பதாலும் வடக்கு மாகாண சபைக்கு அடுத்த வருட முற்பகுதியில் தேர்தலை நடத்த அரசு உத்தேசித்துள்ளதால் தேர்தலின் பின் தொடர்ந்தும் மாகாண சபையைத் திருகோணமலையில் இயங்கவைக்க முடியாதென்பதாலும் தற்போதைக்கு மாகாண சபையை யாழ்ப்பாணத்தில் இயங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சபை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ்க்கட்சிகளின் அரங்கத்தில் மலையக மக்கள் முன்னணி இணையும்

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் எதிர்வரும் புதன்கிழமை கூடவுள்ள நிலையில் இந்த அமைப்பில் மலையக மக்கள் முன்னணியை இணைத்துக் கொள்வது பற்றி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறியவருகிறது.

மலையக மக்கள் முன்னணி தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இணைந்து செயற்படுவது தொடர்பில் முன்னணியின் தலைவி சாந்தினி சந்திரசேகரனுக்கும் அரங்கத்திலுள்ள தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டணியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கத்துக்குமிடையில் பேச்சுவார்த்தை கடந்த வாரம் இடம்பெற்றது. இதன்போது மலையக மக்கள் முன்னணியை இணைத்துக் கொள்வது குறித்து அடுத்த தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் கூட்டத்தின்போது அரங்கத்தில் அங்கம் வகிக்கின்ற ஏனைய கட்சிகளுடன் பேசி தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாக எம்.கே.சிவாஜிலிங்கம் சாந்தினி சந்திரசேகரனிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று சனிக்கிழமை தமிழ்க் கட்சிகளின் அரங்கம் கூடவிருந்தது. எனினும் இக்கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் ஜனநாயக மக்கள் முன்னணியுடன் வடக்கு, கிழக்கை சேர்ந்த கட்சிகள் அமைப்பு என பத்து நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன.இதில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை இணைந்து செயற்படுமாறு அரங்கத்தினர் அழைப்பு விடுத்து வருகின்றனர். அரங்கத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகிப்பதன் மூலம் அது வலுவுள்ளதாக அமையுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரன் தெரிவித்தார்.

யாழ். வாக்காளர்களுக்கு மற்றொரு சந்தர்ப்பம்

யாழ். மாவட்ட, வாக்காளர் இடாப்பு மீளாய்வின்போது தமது பெயரை வாக்காளர் இடாப்பில் பதிவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்காமல் இருந்தால் அவர்களைப் பதிவு செய்ய மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

இதற்கான விண்ணப்பப்படிவங்கள் டிசம்பர் மாதம் விநியோகிக்கப்பட்டு ஜனவரி மாதம் வாக்காளர் இடாப்பில் சேர்க்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.இப்பணி யாழ்.மாவட்டத்தில், 435 கிராம சேவையாளர் பிரிவிலும் கிளிநொச்சிமாவட்டத்தில் 96 கிராம சேவையாளர் பிரிவிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஏற்கனவே பெறப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் மூலமான வாக்காளர் இடாப்பு மீளாய்வுப்பணி முடியும் தருவாயில் உள்ளது

ஒலுவில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் நேரடியாக தலையிடும்படி ஜனாதிபதிபதியிடம் உலமா கட்சி கோரிக்கை

சமீப காலமாக அம்பாரை மாவட்டத்தின் ஒலுவில் பிரதேச ஆலிம் நகர் முஸ்லிம்களின் வயற்காணிகளை அபகரிக்கும் முயற்சியில் சில அதிகாரிகள் ஈடுபடுவதாக அம்மக்கள் முறைப்பாடு செய்கின்றனர். இது சம்பந்தமாக அண்மையில் அவர்கள் ஆர்ப்பாட்டமும் செய்தார்கள்.
 
யானைக்கான வேலிகளை அமைத்தல் என்ற பெயரில் காணிகளையும்ää மக்கள் நடமாட்டத்துக்கெனவுள்ள பாதைகளையும் மறைக்கும் முயற்சிகள் நடைபெறுவதாக மக்கள் குற்றம் சொல்கின்றனர்.  யானைகள் வயல் நிலங்களுள் புகாமல் இருக்கவே வேலி தேவை. ஆனால்  வயற்காணிகளுள் அவற்றின் சொந்தக்காரர்கள் செல்கின்ற வழியை மறைத்து வேலியை அமைப்பது  அரசாங்கத்தின் மீது களங்கம் கற்பிப்பதற்காக எதிர்க்கட்சிகளுக்கு மறைமுக ஆதரவான சில அதிகாரிகளின் நடவடிக்கையாகவே நாம்  நினைக்கிறோம்.

கடந்த 2005 ஜனாதிபதி தேர்தல் தொடக்கம் தங்களுக்கு பகிரங்கமாகவே ஆதரவு தெரிவித்து வரும் நாம் கடந்த காலங்களில் முஸ்லிம்களின் காணிகள் பறிக்கப்படுவதாக அரசின் மீது சில கட்சிகள் குற்றம் சாட்டியபோது அது தவறானது என்பதை பகிரங்கமாக மறுத்தவர்கள் நாம். ஆனால் தற்போது சில மாதங்களாக நடைபெறும் இத்தகைய நிகழ்வுகள் எம்மை கவலைக்குள்ளாக்குகின்றன. எம்மை பொறுத்தவரை எமது அரசியல் பணி மூலம் எமது சுய தேவைகளை கருத்திற்கொள்ளாது நாட்டினதும், மக்களினதும் நலன்களையே கருத்திற்கொள்பவர்கள். இதன்காரணமாகவே பயங்கரவாதத்துக்கெதிரான தங்களின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு வழங்கினோம்.
 
ஆகவே இக்காணிகள் விடயத்தில் நல்லதோர் தீர்வு கடைப்பதற்காக தாங்கள் நேரடியாக இது விடயத்தில் அவதானம் செலுத்தி 1990ம் ஆண்டுக்கு முன் வடக்கு கிழக்கு மற்றும் நாடு முழுவதிலும் எவர் எந்தக்காணிக்கு உரிமையாளரோ அவருக்கு அக்காணியை அனுபவிக்க எவரும் எந்த வழியிலும் தடைபோடாதிருப்பதற்கான தங்களின் நேரடி தலையீட்டை வேண்டுகிறோம். என்று உலமா கட்சி தலைவர், மௌலவி முபாறக் அப்துல் மஜீத் ஜனாதிபதிபதியிடம் 30.10.2010   ம் திகதி கோரிக்கை விடுத்துள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழு முன் யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழு முன்னிலையில் அடுத்த வாரம் சாட்சியமளிக்கிறார்.

யுத்த காலத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய அவர் எதிர்வரும் நவம்பர் நான்காந் திகதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பாரென்று அதன் இணைப்புச் செயலாளர் ஜீ. ஏ. குணவர்தன  தெரிவித்தார்.

இதேவேளை, கண்டி மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் இயக்குநர் பீ. முத்துலிங்கம் நாளை மறுதினம் (முதலாம் திகதி) ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கிறார். அதனைத் தொடர்ந்து 03ஆம், 04 ஆம் திகதிகளிலும் 8 ஆம் திகதி முதல் 10 ஆந் திகதி வரையிலும் கொழும்பில் விசாரணைகள் நடைபெறும்.

எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 15 ஆந் திகதி வரை யாழ்ப்பாணத்தில் பகிரங்க அமர்வு நடைபெறவுள்ளது. பொதுமக்களிடம் சாட்சியங்களைப் பெறுவதற்காக ஆணைக்குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா மற்றும் உறுப்பினர்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி மாலை யாழ்ப்பாணம் செல்கின்றனர்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 40 மில்லியன் ரூபாவில் அபிவிருத்தி

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை நாற்பது மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியை வட மாகாண சுகாதார அமைச்சும், சர்வதேச தொண்டர் நிறுவனங்களும் வழங்கியிருந்தன.

இந்நிதி மூலம் ஆறு, ஏழு, எட்டு ,ஒன்பது, பத்தாம் இலக்க நோயாளர் விடுதிகளின் நிலத்துக்கு தரை ஓடு பதிக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. வெளிநோயாளர் பிரிவும் அழகுபடுத்தப்பட்டு சகல விடுதிகளிலும் தொலைக்காட்சி பெட்டிகள் வைக்கப்பட்டிருப்பதுடன் உள்ளக தொலைபேசி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வடமராட்சிப் பிரதேசத்தில் வல்வெட்டித்துறை மாவட்ட வைத்தியசாலைதான் அதிக வசதி கொண்ட வைத்தியசாலையாக இருந்தது. இப்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையும் பூரணமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

அனைத்துப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அமைப்பாளர் உதுல் பிரேமரட்ன கைது

uthul.jpgஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் உதுல் பிரேமரட்னவை நேற்று பகல் பொலிஸார் கைது செய்தனர். இராஜகிரிய பகுதியில் வைத்தே இவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பதற்றத்தைத் தோற்றுவித்து அமைதியைச் சீர்குலைக்க அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டப்பட்டு வரும் நிலையில் அந்த அமைப்பின் முக்கியஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை உயர் கல்வி அமைச்சு வளாகத்தில் கலகம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 21 மாணவர்களுக்கும் பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. இவர்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சவூதி மன்னரின் அதிகாரிகளிடம் ஜனாதிபதியின் கடிதம் கையளிப்பு

இலங்கைப் பணிப்பெண் ரிஷானா நஃபீக்கிற்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி சவூதி அரேபிய மன்னருக்கு எழுதிய கருணை மனு மன்னரின் அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கையெழுத்திட்ட கருணை மனு சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக கருணை மனுவை ஏற்கும் மன்னரின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு விட்டதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தினகரனுக்குத் தெரிவித்தார். இது தொடர்பில் சவூதி அரசிடமிருந்து பதிலை எதிர்பார்த் திருப்பதாகவும் அவர் கூறினார்.

திருகோணமலை மூதூரைச் சேர்ந்த ரிஷானா நஃபீக் சவூதியில் பணிப் பெண்ணாகத் தொழில் புரிந்த வீட்டு எஜமானரின் கைக்குழந்தையைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டி அவருக்கு சவூதி நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து ரிஷானாவின் மரண தண்டனையை ரத்துச் செய்யுமாறு பல மனித உரிமை அமைப்புகள் மனுச் செய்திருந்தன.

இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது. எனினும், இவற்றை நிராகரித்த சவூதி உயர் நீதிமன்றம் ரிஷானாவுக்கான மரண தண்டனையை ஊர்ஜிதம் செய்துள்ளது. இந்நிலையில், ரிஷானா எந்தவேளையிலும் தூக்கிலிடப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

எனவே, இது விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு ரிஷானாவை மன்னிக்குமாறு சவூதி மன்னருக்கு கருணை மனுவொன்றைச் சமர்ப்பித்துள்ளார். இந்த மனு இலங்கையிலுள்ள சவூதி தூதரகத்திற்கும் சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறினார். சவூதியிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள், மன்னரின் அதிகாரிகளிடம் கையளித்து விட்டதாகவும் அவர் கூறினார்.