செய்திகள்

செய்திகள்

செய்திகள்

நாவற்குழியில் சிங்கள மக்கள் அத்துமீறிக் குடியேறியுள்ளமை தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க ஆராய்வதாக சிவாஜிலிங்கம் தெரிவிப்பு.

Sivajilingam M K Presidential Candidateதென் னிலங்கைப் பகுதிகளிலிருந்த வந்து யாழ் புகையிரத நிலையத்தில் தங்கியிருந்த சிங்களக் குடும்பங்கள் திடீரென நாவற்குழியிலுள்ள தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் அத்துமீறிக் குடியேறியுள்ளமை தொடர்பாக யாழ். அரச அதிபரோ, தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் யாழ். முகாமையாளரோ எதுவித நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை எனவும், இந்த அத்துமீறிய குடியேற்றத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தமிழ் தரப்பு ஆராய்ந்து வருவதாவும் தமிழ்தேசிய விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

படையினரின் ஆதரவுடனேயே இக்குடியேற்றம் நடைபெற்றுள்ளது எனவும், தமிழரின் பாரம்பரிய பூமியில் அவர்களைச் சிறுபான்மையினராக மாற்றும் அப்பட்டமான இனவாதமே இது எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலஸ்தீன மண்ணில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் யூதக் குடியேற்றத்திற்கு ஒப்பானது இது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் கண்டல்காடு என்னுமிடத்தில் மீள்குடியேறுவதற்காக முஸ்லிம்கள் குடிசைகளை அமைக்க முற்பட்டபோது அரசஅதிபரின் உத்தரவின் பேரில் பொலிஸாரினால் முஸ்லிம் மக்களின் குடிசைகள் தீக்கிரையாக்கபட்டன எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் பலர் இன்னமும் மீளக்குடியமர முடியாத நிலையிலுள்ளனர். அவர்கள் அத்துமீறி அரசகாணிகளில் குடியேறுவதுதான் ஒரே வழி என்பதை இவ்வாறான நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன எனவும் சிவாஜிலிங்கம் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குறிக்காட்டுவான் – நெடுந்தீவு பயணத்திற்கு புதிய படகு தயாராகிறது.

New_Boat_for_Islandsகுறிக் காட்டுவான் – நெடுந்தீவு மக்களுக்கான புதிய படகுச் சேவை ஒன்றை ஈடுபடுத்துவதற்காக கொழும்புத் துறைமுக டொக்யாட்டில் படகு ஒன்று நிர்மாணிக்கப்படம்டு வருவதாகவும், சுமார் எட்டு இலட்சம் ரூபா செலவில் இது நிர்மாணிக்கப்படுவதாகவும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும், சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Colombo_Dockyard_DDபொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளையடுத்தே இப்படகு உருவாக்கப்பட்டு வருவதாகவும் வெகு விரைவில் இப்படகு சேவையிலீடுபடுத்தப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

சிங்கள மக்களின் அத்துமீறிய குடியேற்றம் குறித்து நல்லிணக்க ஆணைக்குழுவில் சாட்சியம்.

யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெற்றுவரும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகளில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் பலர், முன்னாள் போராளிகனின் குடும்பத்தினர் முதலானோர் சாட்சியங்களை அளித்து வருகின்ற நிலையில் நேற்று வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வில் யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் அத்துமீறி குடியேறியுள்ளமை தொடர்பாக ஒருவர் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இ.தாமோதரராஜா என்பவரே சாட்சியத்தில் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

எல்லோரும் ஒருதாய் மக்கள் எனச் சொல்லிக் கொள்கின்றோம். ஆனால், அரசாங்கம் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. சொந்தக்காணிகளுள்ள வலிகாமம் வடக்கு மக்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யாது, அவசர அவசரமாக மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்களை திட்டமிட்டு யாழ்ப்பாணத்தில் மேற்கொள்வதை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும். அத்துடன் யாழப்பாணத்தில் பல கொலைகள் நடைபெற்றிருக்கின்றன. அவை எவற்றிற்கும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

ஊர்காவற்றுறைப் பிரதேசத்தில் பனை மரங்கள் வெட்டத் தடை.

Panai_Marangalஊர்காவற்றுறைப் பிரதேசத்தில் பனை மரங்கள் வெட்டப்படுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பனை மரங்கள் வெட்டப்படுவதற்கும் அவற்றை வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கும் பனை அபிவிருத்திச் சங்கத்திடம் அனுமதி பெற்றுக்கொள்வது அவசியமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஊர்காவற்றுறை உதவி அரசாங்க அதிபர் பணிமனையில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடைபெற்போது இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்தில் 50 ஆயிரம் பனம் விதைகளை நடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராமாவில் முகாம் மக்களை வடமாகாண ஆளுநர் பார்வையிட்டார்.

யாழ். மிருசுவிலிலுள்ள இராமாவில் இடம்பெயர்ந்தோர் முகாமில் தங்கியுள்ள மக்களை நேற்று வெள்ளிக்கழமை வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி பார்வையிட்டதோடு, அங்குள்ள சுமார் 100 பாடசாலை மாணவர்களுக்கு காலணிகளையும் வழங்கினார். முகாமிலிருந்து வெளிப்பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு விரைவில் சைக்கிள்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இராமாவில் முகாமில் தங்கியுள்ள மக்களின் பிரச்சினைகளயும் கேட்டறிந்த அவர் அவற்றைத் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அம்மக்களிடம் உறுதியளித்தார்.

ஆசிய விளையாட்டுப் போட்டி நேற்று கோலாகல ஆரம்பம்

asia.jpg16ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப விழா நேற்று 12ம் திகதி வெள்ளிக்கிழமை மிகவும் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. எனினும் உதைபந்து போட்டிகள் கடந்த 07ஆம் திகதியே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. விளையாட்டுப் போட்டிகளில் நீர் விளையாட்டுகள், வீதி சைக்கிள் ஓட்டப் போட்டிகள், டன்ஸி ஸ்போட்ஸ், ஜிம்நாஸ்டிக், ஜூடோ, குறி பார்த்து சுடல், பாரம் தூக்கும் போட்டிகள் மற்றும் வூஷ¤ போட்டிகள் என்பன இன்று ஆரம்பமாகின்றன.

15 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி 2006 ஆம் ஆண்டிலே கட்டார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டிகளில் வழமைபோல் சீனா 124 தங்கம், 70 வெள்ளி மற்றும் 49 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடம் பெற்றதுடன், தென் கொரியா 44 தங்கம், 39 வெள்ளியும், 70 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தினையும், யப்பான் 43 தங்கம், 51 வெள்ளி மற்றும் 57 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

இலங்கைக்கு ஒரு வெள்ளிப் பதக்கமும், வெண்கலப் பதக்கங்கள் இரண்டும் கிடைத்தன. 36 நாடுகள் பங்குபற்றிய இந்த போட்டியில் இலங்கைக்கு 32 ஆவது இடம் கிடைத்தது.

ஆசிய நாடுகளிடையே நடைபெறும் பிரதான விளையாட்டுப் போட்டியான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 16 ஆவது முறையாக இம்மாதம் 12ம் திகதி முதல் 27ம் திகதி வரையில் சீனாவின் குவென்ஷ¤ நகரில் நடைபெறுகின்றது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் 47 நாடுகளைச் சேர்ந்த 42 விளையாட்டுப் போட்டிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொள்ள உள்ளதாக சீனாவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இலங்கை சார்பாக இம்முறை 22 நிகழ்ச்சிகளில் 138 வீரர்கள் கலந்துகொள்வதுடன், 29 அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.

விளையாட்டுப் போட்டிக்காக குவென்ஷ¤ நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விளையாட்டு கிராமமானது, 2.73 சதுர கிலோ மீட்டர் பரப்பினைக் கொண்டுள்ளது. விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் அடங்கலாக 14000 பேருக்கு அதில் தங்குமிட வசதியுண்டென ஏற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஊடகவியலாளர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களுக்கு மேலதிகமாக 14000 பேர் அன்றாட கடமையில் ஈடுபடுவார்களென ஏற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஜனாதிபதியின் பதவியேற்பு – கொழும்பு 01, 02, 03, 04 இல் விசேட விடுமுறை தினம்

தேசிய நிகழ்வாக நடத்தப்படும் ஜனாதிபதியின் பதவியேற்பு ஆரம்ப வைபவம் நடைபெறும் நவம்பர் 19 ஆம் திகதியன்று கொழும்பு 01, 02, 03, 04 ஆகிய பகுதிகளிலுள்ள தனியார் துறை அலுவலகங்களுக்கும் கொடுப்ப னவுடன் கூடிய விடுமுறை வழங்குமாறு தொழில் உறவுகள் அமைச்சர் காமினி லொக்குகே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வு தேசிய நிகழ்வாக கொழும்பு காலி முகத்திடலுக்கு முன்னாலுள்ள ஜனாதிபதியின் செயலக வளவில் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் கொழும்பு 01 கோட்டை, கொழும்பு 02, யூனியன் பிளேஸ், கொம்பனித்தெரு, கொழும்பு 03 கொள்ளுப்பிட்டி, கொழும்பு 04 பம்பலப்பிட்டி பகுதிகளிள் அமைந்துள்ள அனைத்து அரசாங்க அலுவலகங்கள், மற்றும் பாடசாலைகளை மூடுவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எனவே ஜனாதிபதியின் பதவியேற்பு ஆரம்ப வைபவம் தேசிய அலுவலக நிகழ்வாக இருப்பதனாலும், அன்றைய தினம் ஏற்படக்கூடிய போக்குவரத்துத் தடங்கலைக் கருத்தில் கொண்டு மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் அமைந்துள்ள தனியார் துறை தாபனங்களின் பணியாளர்களுக்கு 19 ஆம் திகதியன்று கொடுப்பனவுடன் கூடிய லீவினை வழங்குமாறு உரிய தொழில்தருநர்களை தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் அமைச்சர் காமினி லொக்குகே கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசுடன் இணைந்து செயற்பாடு – மு. காவின் தீர்மானத்திற்கு அதியுயர் பீடம் அங்கீகாரம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் முழுமையாக இணைந்து செயற்படவுள்ளதாக அக்கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் பசீர் சேகு தாவூத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையினை யடுத்து அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு எடுத்த தீர்மானத்தினை கட்சியின் அதியுயர் பீடம் அங்கீகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த 10 ஆம் திகதி ஜனாதிபதியுடன் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் தலைமையில் இது தொடர்பான பேச்சுவார்த்தை இடம் பெற்றது. இதையடுத்து 11 ஆம் திகதி கட்சியின் அதியுயர் பீடம் கூடியது. இதன் போது இவ் விடயம் விரிவாக ஆராயப்பட்டது. எதிர்வரும் 16 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தலைவர் றவூப் ஹக்கீம் தனது உரையின் போது இதனை அறிவிக்கவுள்ளார் என்றார்.

நிதி மோசடியுடன் தொடர்புபட்ட காரணத்தினால் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது

TNA_Logoநிதி மோசடி காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எந்நேரமும் பொலிஸாரினால் கைது செய்யப்படலாம் என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த யுத்தத்தின் போது காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் பெருந்தொகையான பணத்தை குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பெற்றுக் கொண்டதாகவும். மோசடிக் கும்பல் ஒன்றுடன் அவருக்குத் தொடர்புள்ளதெனவும் புலனாய்வு விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தில் மேஜர் ஜெனரல் பதவியிலுள்ள ஒருவரே இம்மோசடியின் பிரதான நபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது தொலைபேசி இலக்கங்களை காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு குறிப்பிட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கியுள்ளதாகவும், காணாமல் போனவர் ஒருவரின் உறவினர் இத்தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு மூன்று இலட்ச ரூபா வரை கொடுத்துள்ளார் எனவும், இன்னொருவர் 75 ஆயிரம் ரூபா கொடுத்துள்ளார் எனவும், இந்த மேஜர் ஜெனரலின் தொலைபேசி இலக்கம் பின்னர் செயலிழந்துவிட்டதாகவும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என வவுனியா மற்றும், மன்னாருக்கான பொலிஸ் மாஅதிபர் பிரசன்ன நாணயக்கார தெரிவித்தள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் இன்றைய ‘தினமுரசு’ நாளிதழ் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

கிளிநொச்சி வீடமைப்புத் திட்டங்களில் சிக்கல்களை எதிர்கொள்ளும் மக்கள்.

Rebuilding_Buildingsகிளிநொச்சி மாவட்டத்தில் பல நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டப் பணிகளை உரிய காலத்தில் நிறைவேற்றுவதில் சிக்கல்கள் தேன்றியுள்ளது. இதனால் வீட்டுத்திட்டங்களைப் பெற்ற பயனாளிகள் பெரும்
மனஉளைச்சல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்வீடமைப்பிற்காக கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வரும் பணம் சீரான முறையில் வழங்கப்படாமை, மேசன் வேலை, தச்சு வேலைகளுக்கான தொழிலாளர்கள் தட்டுப்பாடு, மணல் உட்பட்ட மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதிலுள்ள சிரமம் போன்றவற்றின் காரணமாக இந்நிலை தேன்றியுள்ளது. தற்போது பருவ மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில் உரிய காலத்தில் இவ்வீடமைப்பை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் சம்பந்தப்பட்ட மக்கள்
பாதிப்படைந்து ள்ளனர். இதேவேளை, சேதமுற்ற வீடுகளைத் திருத்தியமைக்கும் பணிகளும் அதில் தொடர்புபட்ட நிறுவனங்கள்,  அதிகாரிகளின் அசமந்தப் போக்குகளால் இழுபடும் நிலையும் தோன்றியுள்ளது.